-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

வெயிலோடு போய் - ச.தமிழ்ச்செல்வன்

February 6th, 2007 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பொன்ஸ

சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “வெயிலோடு போய்” புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (முதல் பதிப்பு 1985. நான் படித்தது மூன்றாவது பதிப்பு 1994) [ச.தமிழ்ச்செல்வனைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு பத்ரியின் மறுமொழியில் பார்க்கலாம்.]

ஏற்கனவே தமிழ்ச்செல்வனின் “அரசியல் எனக்குப் பிடிக்கும்” படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, ஓட்டு போடுவது மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்குமான தொடர்பு என்ற என் பழைய எண்ணங்களிலிருந்து, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா குடிமகனின் தினசரி வாழ்வு அரசுடன் எத்தனை பிணைத்திருக்கிறது என்று புரியவந்தது. நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறார் ஆசிரியர். கணினி மொழியில் சொல்லும் ஒன்றும் பூஜ்யமும் இல்லாத இடைப்பட்ட நிலையான fuzzy logic மாதிரியான நிலைகள் ஒரு மனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கவே முடியாது என்ற அந்தக் கருத்தும் எனக்குப் புதுமையான ஒன்று. மற்ற விமர்சனங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. கடைசி சில அத்தியாயங்கள் மட்டும் ஏதோ கம்யூனிச கட்சிப் பிரசாரம் போல் எனக்குத் தோன்றியது. மற்றபடி மிக அற்புதமான புத்தகம் அது.

அந்தப் புத்தகத்தைப் படித்த அதே உணர்வோடு வெயிலோடு போகத் தொடங்கினேன். “வெயிலோடு போய்”, பெரும்பாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளினால் மட்டுமே பிழைக்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்வைப் பற்றிய கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் படித்து முடித்தபின் குறைந்தது இரண்டு நிமிடமாவது ஒதுக்கிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. வாழ்வியலின் யதார்த்தம் அடங்கிய கதைகள்.

பெற்றோரும் குழந்தைகளும் எத்தனைதான் நாளெல்லாம் உழைத்தாலும், ஒரு இனிப்பு வாங்கிச் சாப்பிடக் கூட முடியாத அவலங்களைப் பேசுகிறது ‘பாவனை‘. குழந்தைகள், இனிப்பு வண்டிக்காரனின் வண்டியில் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிடுவதாக பாவனை செய்து மகிழ்வதைப் படிக்கும் போது எங்கள் வீட்டருகில் வந்த குல்பி வண்டிக்காரனிடமிருந்து உடல் நிலைக்காக “தினசரி ஐஸ்கிரீம் வாங்கித் தரமாட்டேன்” என்று அப்பா சொன்னபோது கோபப்பட்டு அழுத நாட்களின் நினைவு அவமானத்துடன் எழுகிறது.

வார்த்தை” என்ற கதையில் பள்ளிச் சுற்றுலாவுக்காக தயாராகும் சின்னப் பையனின் கண்ணினூடாக நகரும் சிறுகதையும் அடுத்த அழகான கதை. மிக மிக இயல்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சின்ன குடும்பத்தின் பாசம், அன்பு, கண்டிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் அற்புதமாக வடித்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை படிக்கத் தொடங்கும்போதே முடிவை ஒரு மாதிரி ஊகித்துவிட முடிகிறது என்றாலும் கதையின் அழகு ‘இன்னும் இன்னும்’ என்று திருப்ப வைப்பதுடன், கடைசியில் சிறுவன் சோலையின் சோகம் நமக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

சுப்புத்தாய்‘உம் ‘அசோகவனங்களும்‘ கொஞ்சம் வளர்ந்த தீப்பெட்டித் தொழிலாளிகளின் சோகம். வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களைத் தவறான கோணத்தில் பார்ப்பதென்பது அடிமட்ட துப்புரவுத் தொழிலாளர்களில் தொடங்கி, கால் சென்டர்களில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்கள் வரை எல்லா நிலையிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. பால் கொடுக்கும் தாயின் மார்பைப் பார்த்து மகிழும் சுப்பத்தாயின் தொழிற்சாலைக் கணக்கனையும், கட்டின கணவன் மாதிரி மரியாதை இல்லாமல் அழைக்கும் மாரியம்மாவின் கணக்கப் பிள்ளையும் இருக்கும் வரை எல்லா வேலையிடங்களும் அசோகவனங்கள் தான்.

அசோகவனங்களைப் பற்றிச் சொல்லி முடிக்கும் போதே தொகுப்புக்குப் பெயர் கொடுத்த ‘வெயிலோடு போய்’ மாரியம்மாவின் புருஷனைப் பற்றியும் எழுதவேண்டும். தன் முறை மச்சானுக்கு என்றே வளர்ந்து வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் என்பதையும் பாராமல் அவளுடன் அன்பாக இருப்பதும் அவள் கேட்கும் பொழுதெல்லாம் தாய்வீட்டுக்குப் போக அனுமதிப்பதும், என்ன ஏதென்று தெரியாமலே ஆறுதல் சொல்வதும் என்று அன்பானவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் அந்தக் கணவர். அதே போல் என்னை ரொம்பவும் கவர்ந்த மற்றொரு பாத்திரம் ‘கருப்பசாமியின் அய்யா’. சாகசங்கள் செய்வதிலும், ‘பெரிய சாதனைக்காரன்’ என்று பெயர் வாங்குவதிலும் மட்டுமே ஆசையுள்ள கருப்பசாமியின் தந்தையை அவள் தாய் காளியம்மா ‘திருத்தி’ அதாவது இன்றைய வர்த்தக உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, சாதாரண வாழ்க்கையை வாழவைக்கிறாள். ‘சாதாரண மனிதர்களால் செய்ய முடிந்தவற்றைச் செய்யக் கூடாது’ என்று நினைக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்வு பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே எப்படி மாறிப் போகிறது என்கிறது இந்தக் கதை.

அதிகாரத்துக்குப் பயந்து வேலை செய்வதன் கொடுமைகளைப் பேசுகிறது ‘பிரக்ஞை‘. ‘எப்போதும் எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும்’ என்று நினைக்கும் ஹெட்கிளார்க்கின் கொத்தடிமைக் கட்டுகளுக்குப் பணியாத ஒரு இளைஞனின் கதை. அப்படிப்பட்டவனைச் சமுதாயமும், அதிகார வர்க்கமும் எப்படிப் பார்க்கிறது என்பது வரை..

நெஞ்சைத் தொட்ட மற்றொரு கதை “வேறு ஊர்“. தன் காலமெல்லாம் உழைத்துச் சம்பாதித்துப் பெற்ற பிள்ளையைப் படிக்க வைத்தும், அந்தக் கல்வி மகனது வாழ்க்கையிலும் பொருளாதார உயர்வைத் தர இயலாமல் போனதை நினைத்து வாடும் முதியவரின் கதை. வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இன்றைய நாட்களில் ஏழ்மை என்ற ஒரே காரணத்துக்காகவே தன் பெற்றோரைக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு அழைத்துப் போகிற மகனின் கதையும் கூட.

‘அப்பாவின் பிள்ளைகள்’, பிடிக்காத வேலையைச் செய்யும் மனம் எப்படி அதிசீக்கிரம் சோர்ந்து துவண்டு போவதைச் சொல்கிறதென்றால், ‘குரல்கள்’, தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்தில் இறக்காமல் தப்பிப் பிழைத்த சிறுவனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதுமே கொடூரமான கனவுகளால் நிரம்பி இருக்கும் அவலத்தைப் படம்பிடிக்கிறது.

கவர்ந்த மற்றொரு கதை ‘மீடியம்’. ஒரு உள்ளாடையை வைத்து இத்தனை அற்புதமான கதையா?! நாகரிகக் காரணங்களுக்காக கோவணத்திலிருந்து ஜட்டிக்கு மாறி, அதுவே வருமானத்துக்கு மீறிய செலவாகக் கஷ்டப்படும் மனிதரின் கதை. ‘நம் ஊரில் ஒரு ஜட்டி கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களா!’ என்ற அதிர்ச்சி மட்டுமே மிச்சம்.

இவை தவிர ராணுவப் பின்னணியான ‘அந்நியம்’, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கதையான ‘26ம் பக்கத்து மடிப்பு’ என்று இந்தப் புத்தகம் முழுவதுமே பொக்கிஷம்.

தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வில் பெட்டியை ஒட்டுவதால் ஏற்படும் சிரங்கும், அழுக்கும், ஏழ்மையும் எப்போதும் கூட வருபவை என்று இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. அம்மா, அப்பா இருவருமே நாள் முழுவதும் வேலை செய்யும் குடும்பங்களில் கூட வறுமை இறுதிவரை தாண்டவமாடுவதைப் பார்க்கும் போது மனித உழைப்புக்கு இவ்வளவு தான் மதிப்பா? என்று மனம் வெறுத்துப் போகிறது.

-->

Posted in பொது, புனைவு | Comments Off

பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார

February 6th, 2007 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பொன்ஸ

போனவாரம் படித்து முடித்த புத்தகம் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?”. பெரியார் எழுத்துக்கள் படித்ததில்லை. இந்தக்கால எழுத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் கடினமான உரைநடையாக இருக்கிறது. “பார்த்தோமேயானால்” போன்ற சொற்களால் நீள நீளமாகும் வாக்கியங்கள்.”நான்” என்பதை ஒழித்து “நாம்” என்று அவர் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில் மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!) இருந்தது.

இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.

கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத் திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில் சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த ராமசாமிப் பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடிக் காட்டும் பெரியார், அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார். வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப் பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி இருப்பார் என்பது திண்ணம்.

வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

- பெரியார்

கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாக்கிவிடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ‘கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல் வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?’ என்று பெரியார் கேட்பது பதிலில்லாத கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார். இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை “வாழாவெட்டி”, போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்த பட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.

விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ‘அவள் விகடன்’ முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில் தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட அந்தப் பெண் நிச்சயமாக “இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு. என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்” என்ற சொற்களைச் சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள். கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?

சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள் அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம் செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத் திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!

விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும் மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும் காணலாம்.

இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின் மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்தக் கர்ப்பத்தடை பற்றியும் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். “நான் உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்”, “இந்தப் புள்ளைங்க இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்” என்பன போன்ற சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, “அவமானத்தை உண்டு பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?” என்று ஒரே போடாகப் போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும் சண்டை போட சாக்குதேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன் மனைவிக்கு நல்ல இடி தான்.

இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழ்ழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே. இன்றைக்குக் ‘கண்ணியத்துக்கும்’ ‘மரியாதைக்கும்’ கட்டுப்பட்டு மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன? குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, “ஏண்டீ தே…” என்று திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச் சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது! இன்று தொழிற்நுட்ப வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு வாங்குபவனின் தாயாரைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக ‘விபச்சாரன்’ என்று திட்டவேண்டியது தானே!

‘எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது’ என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம் விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல் செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும்!

-->

Posted in பொது, அ-புனைவு | Comments Off

காடு - ஜெயமோகன்

December 13th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சன்னாசி

காடு நாவலைப் படித்து முடித்தபின், புத்தகம் வந்து இரண்டு வருஷங்களானபின்னும் என்னத்தை எழுதுவது என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது; இருந்தாலும் சரி வழக்கம்போல இதுவும் யாரேனுமொரு வருங்கால ‘இழக்கியல்வாலி’க்கு உதவக்கூடிய (நன்றி பெயரிலி) ;-) அனுபவங்கள் என்ற ரீதியிலாவது தட்டிவைக்கலாமென்று ஒரு பதிவு. இதுவரை படித்திராமல், இனிமேல்தான் இப்புத்தகத்தைப் படிக்கப்போகிறவர்கள், அ ஆ இ ஈ உ என்று இருந்தும், அனைத்தும் அ வாகவோ ஆ வாகவோ இ யாகவோ தோன்றித் தொடக்கத்திலேயே வாசகனைக் காவுகேட்கும் ‘முன்னுரை’யைத் தயவுசெய்து தவிர்க்கவும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். காட்டுக்குள் போகாதவர்கள் (அல்லது குறைந்தபட்சக் காட்டனுபவமாவது உள்ளவர்கள்) கூடக் காட்டைப்பற்றிய புத்தகத்தைப்பற்றி எழுதலாமென்ற ஜனநாயகம் மீதான நம்பிக்கையில் நானும் குறைந்தபட்சம் தட்டிவைக்கிறேன். (சும்மாக் கலாய்த்தீர்களானால் ராஜேஷ்குமார் எத்தனை கொலைசெய்தார் என்ற கதாயுதத்தை எடுத்துவிடுவேன் ;-) )

கிரிதரன் நாயர் ஒரு காண்ட்ராக்டர். மலைப்பகுதியில் நடக்கும் தனது மாமாவின் காண்ட்ராக்டுகளில் பயிற்சி பெறுவதிலிருந்து, பின்னர் தானே அவற்றை நடத்தும்வரையிலான பதின்ம வயதிலிருந்து கிட்டத்தட்ட மத்திம நாற்பது வயது வரையிலான அவரது வாழ்க்கையைக் காலவரிசையின்றி முன்னும் பின்னுமாகச் சொல்கிறது காடு. மனச்சிக்கல்களின் காடு என்று கொள்ளலாமென்று நினைக்கிறேன். இக் காலகட்டங்களில் கிரிதரன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களது சித்திரங்கள் என்று நீள்கிறது கதை. வழக்கம்போல, அனைத்துச் சித்திரங்களும் கருத்துக் கூறும் திறமைவாய்ந்தனவாகவே இருக்கின்றன. நீளநீள வாக்கியங்களிலோ, அல்லது நறுக்குத் தெறித்தாற்போல சில சொற்கள் மூலமோ, அல்லது நுணுக்கமான சில அசைவுகள் மூலமாகவோ தங்களது வார்ப்பின் இயங்கியலை வெகு நளினமான முறையில் நமக்கு உணர்த்திவிடக்கூடிய பாத்திரங்களே. தன் மாமா வீட்டு அல்சேஷன் நாயைக் குறிப்பிடவிரும்பும்போதுகூட கிரி, “நாய் ஜாதியிலே அது பிராமணனாக்கும். புத்திண்ணா புத்தி,,, அதுக்க புத்தியிருக்கே,,, பூட்டிய கதவை தாக்கோல் போட்டு தொறந்துபோடும். பாத்துக்கிடுங்க” என்று எறும்புக்கண்ணன் லட்சுமணன் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறான் (பக்.34). La Maga, Tamina, Jose Arcadio Buendia, Lebaziatnikov, Molly Bloom, Dr.Watson, Roberto della Griva, Jean Baptise Grenouille, Meursault, Eugenie Grandet என்று ஒரு உதாரணத்துக்குக் உருவக்கூடிய பிற கலாச்சாரப் பாத்திரங்களை உணர்ந்துகொள்ளமுடிகையில் கண்டன் புலையன், ஸ்தாணுநாதய்யர், ரெசாலம், வலிய பொற்றயில், குன்றேறிய பெருமாள் நாடார், எறும்புக்கண்ணன் லட்சுமணன் போன்ற குமரிமாவட்ட-கேரளப் பெயர்களை பேச்சுவழக்குகளை பாத்திரங்களை கால, இடச் சட்டகங்களுக்குள் பொருத்திப் படிக்கமுடிவது அவ்வளவு சிரமமாக இருக்குமா என்ன? கலாச்சார அந்நியத்துவத்தின் படிநிலைகள் பூகோள ரீதியில் ஐம்பது அறுபது கிலோமீட்டர் தூரங்களுக்கப்பாற்கூட வெகு வேறுபட்டதாக இருக்கும் பிரதேசத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை வெகு தெள்ளியதாக உணர்ந்திருக்கும் அதே நேரத்தில், கிளைத்துவரும் படைப்புக்களின் கலாச்சார மண்த்துவத்தை, அதன் வேர்ப்பிடிப்பின் ஆழத்தைக்கொண்டே மதிப்பிடவேண்டும்/தவிர்த்துக் குப்பைத்தொட்டியில் எறியவேண்டுமென்று (குறைந்தபட்சம் தேவைக்கேற்றவாறாவது) வலியுறுத்திய முந்தைய ‘பாலபாடங்களையும்’ யுலிஸஸின் ஐரிஷ் கலாச்சார பூத்தொட்டியாழ்வேர்களின் “அந்நியத்துவம்” குறித்து இதேயிடத்திலிருந்து வந்த எலிமெண்டரி ஸ்கூல் பாடங்களையும் இவ்விடத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது.

சங்கப்பாடல்களில் மனதைப் பறிகொடுத்து ஆழ்ந்தலையும் கிரிதரனின் அழகியல் உச்சத்துவம் நிர்ணயிக்கும் வார்ப்புரு, அவன் காண்ட்ராக்ட் பணி புரியும் காட்டிலுள்ள மலையன் ஜாதிப் பெண்ணைக் கண்டதும் அவளில் பொருந்தி உயிர்பெற்று, அவனது வாழ்வை ஸ்தம்பிக்க வைக்கிறது. அப்பெண்ணில் பிரதிபலித்துத் ததும்பி வழியும் காட்டின் அழகு மொத்தத்தையும், மலைத்தேன் ஏராளமாகக் குடித்துத் தலைக்கேறும் அதே கிறக்கத்துடன் பருகுகிறான் கிரிதரன். அந்த அழகியல் உணர்ச்சியின் எதிர்நிர்ணய மனோநிலை, பின்பு தான் திருமணம் செய்துகொள்ளும் பெண் வேணியை புத்தகத்தில் முதல்முறை பார்க்கும்போது “உள்ளேயிருந்து வேணி வந்தது. அதைப்போல ஒரு அசிங்கமான மனித உயிரை நான் பார்த்ததே இல்லை” (பக்.39) என்றும், “கரிய மெலிந்த உடல். புடைப்புக்களே இல்லாத சப்பை உடல். கடைசிவரை அவளில் எங்குமே சதை பிடிக்கவில்லை. உந்திய பற்கள். கண்களில் எக்கணமும் தயாராகக் கண்ணீர் ஊற்றுக்கள். சாதாரணப் பார்வையே ஆங்காரமும் துவேஷமும் தெறிப்பதாக இருக்கும். எனக்குத் தெரிந்து அவளுடன் பத்து வருடமாக நெருக்கமாக இருப்பவள் கோலம்மை மட்டும்தான். இருவருக்கும் பற்கள் வாய்க்கு வெளியே இருக்கும். புழக்கடைத் திண்ணையில் அமர்ந்து அந்தரங்கமாக அவர்கள் பேசுவது இரு வினோத விலங்குகள் முகம் உரசிக்கொள்வது போலிருக்கும்” (பக்.172) என்றாகவும், தான் குழப்பத்துடன் வெறுக்கும் தனது தாயின் பார்வையை “மச்சுப்பானைக்குள் பெருச்சாளியின் பார்வைபோல″ (பக்.432) என்றும் விவரிக்கிறது. காட்டுக்குள் காண்ட்ராக்ட் வேலைகளைக் கவனித்துக்கொள்ளச் செல்லும் கிரிக்கு சுவாரஸ்யமான மனிதர்கள் பலர் பரிச்சயமாகின்றனர்: ஒரு தேவாங்கைத் தன் பிள்ளைபோல் வளர்க்கும் மேஸ்திரி ரெசாலம் (வெகு நுட்பமான பாத்திரப்படைப்பு என்று ஏக்கி கொடுக்கும் மன ஆவேசத்தில் முன்னுரை பலிபோட்டுவிடுவதினாலோ என்னவோ, ஒரு கேரிகேச்சர் அளவுகூட இப்பாத்திரம் மனதில் ஒட்டவில்லை), கிறிஸ்துவத்தைத் தன் மண்மணம் நிறைந்த பகடியால், தர்க்கத்தால் அவ்வப்போது இடறிப்பார்க்கும் குட்டப்பன் (கடைசியில் விஷக்காய்ச்சல் ஆஸ்பத்திரியில் குட்டப்பன் ‘வாயடைத்துப் போவது’ இதைச் சமன் செய்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம்! வாஜ்’பேயி’களின் மதச்சார்பின்மை மாதிரி), ஓரினச்சேர்க்கை இரட்டையர்கள் ஆபேல்-ராபி ;-) , எந்தவிதத்திலும் வாழ்க்கைத்தத்துவ ஞானம் குறைபடப் பெறாத சினேகம்மை, வந்துபோகும் ஏகப்பட்ட மாமிகள், பைபிளின் மற்றொரு பக்கமாகத் தானுமாகிப்போன மதமாற்றக் கிறிஸ்துவ ஸ்டீரியோடைப்பான குரிசு, எஞ்சினியர் மேனனின் ராட்சசக் காமுகி மனைவி, மற்றப்படி காட்டு தேவதை மலையத்தி என்று. இத்தனை பாத்திரங்களும் அவர்களது பேச்சிலும் புத்தகங்களினூடான நடமாட்டத்திலும் தங்களது ஊற்றுக்கண் ஒன்றே என்று திரும்பத்திரும்ப ஸ்தாபித்துக்கொண்டிருப்பதை வியந்து ரசிக்கமுடிந்தது. இத்தனை நேர்த்தியான, பிழையற்ற பாத்திரப்படைப்புக்களைக் காணும்போது நான்கு பக்கமும் உயர்ந்தெழும் அப்பழுக்கற்ற துல்லிய வெண்மைச் சுவர்களில் கண்கள் பிடுங்கி வெண்மையுடன் சேர்த்து அறையப்பட்டதுபோலத் தோன்றும் வாசக திகிலையும் மறுக்கமுடியவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு கிறிஸ்துவப் பாதிரியாரொருவர் பற்றிய தனது விளக்கத்தில் சினேகம்மை “கோதம்பு நீரு செண்ணு வாங்கும். கேட்டுதா கொச்சேமான், நான் பதினஞ்சு நாளும் அவிய வேதக்கோயிலுக்குச் செண்ணு செபமும் பாட்டும் ஒக்கெ செய்தேன். பாதிரியாரு நல்ல தங்கப் பட்ட மனியன். பின்ன ஒரு பேச்சு பேசினா மெள்ளமாட்டு ரப்பர் நீட்டினா மாதிரி பேசுவாரு. சங்கதி நாம அறிஞ்சு பதிலும் சிந்திச்ச பிறவும் அவரு பேசி முடிச்சிருக்க மாட்டாரு. பாட்டும் கொள்ளாம். பின்ன நமக்கு செரிப்படாது” (பக்.349) என்று நிதானமாகக் கூறு கூறாக வார்த்தைகள்வழி பாதிரியை அலசிக் காயப்போடுவதுபோல அனைத்துப் பாத்திரங்களும் அலசிவிட முடிவதன் மதிநுட்பப் பேரூழியில் சிக்கிக்கொண்டு இண்டெலெக்சுவல் ஆற்றோட்டத்தில் பரிதவித்து மூச்சுத்திணறி நுட்பச்சிலாகிப்புச் சுழலில் உழல்வதும் சற்றுக் கஷ்டமான அனுபவம்தான்.

புத்தகத்தின் மைய இழையான காட்டின் வடிவத்தின் சித்திரிப்பில் உள்ள ஆற்றொழுக்கைக் கூறுபோடுவதும் வழக்கம்போலத் தன்னழகைத் தானே சிலாகித்துக்கொள்ளும் சில வார்த்தைகளே. ப்ரையன் லாரா தனது முன்னே அடியெடுத்துப் போட்ட கட்டையின் அழகைச் சிலாகித்துக்கொண்டே காலை க்ரீஸுக்கு வெளியே இழுக்கையில் இங்கிலாந்து விக்கெட்கீப்பர் ஸ்டூவர்ட் பொறுத்திருந்து பட்டென்று பெயில்ஸைத் தட்டிவிட்டு லாராவுக்கு ஆப்பறைந்த மாதிரி (அபத்த ஆட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அறிவர் இது என்ன என்பதை). தனிப்பட்ட வாசக அனுபவத்தில், எனக்குத் தெரிந்து ருஷ்டீயின் The Moor’s last sigh புத்தகத்தில் interregnum என்னும் வார்த்தை மூன்று முறைகள் மட்டும் வரும் (நினைவிலிருந்து கூறுகிறேன்). இரண்டாவது தடவை அவ்வார்த்தை வரும்போதே, அவ்வார்த்தை முதல்முறை தந்த அந்நியத்தனத்தின் புதிரின் புதுப்பரிச்சயத்தின் அளவுகடந்த ஆனந்தம், வெகு ஏமாற்றத்துடன் அடிபட்டுப் போவதுபோலிருந்தது. இங்கே காட்டின் அழகை ‘மிளா’ ‘அயனி மரம்’ ‘காந்தாரி மிளகு’ ‘கீறக்காதன்’ ‘கேறி’ (ஏறி என்பதன் மலையாள மரூஉ) என்னும் வார்த்தைகள் காலதேசவர்த்தமானமின்றி மூக்கில், காதில், தொப்புளில், புருவத்தில் இன்னபிற இடங்களில் என்று ஒரே நேரத்தில் அடிக்கப்பட்ட வெள்ளி வளையங்களோடு குலுங்க நடந்துவரும் செயற்கையான அதிநவப் பிரக்ருதி போல, காட்டினோரங்களிலிருந்து ஊடுருவும் வாகனக் கரும்புகை போல ஊடுருவி, காட்டின் சித்திரத்தை நிலைநிறுத்த உதவும் முளைகள் என்றதையும் தாண்டி, இந்த வார்த்தைப்பெருக்கம் என்ற சின்ன விஷயம், காட்டின் உருவத்தைக் கலைத்துப்போடுவதைத் தவிர்ப்பது அவ்வளவாக ஒன்றும் சிரமமாயிருந்திராதென்றே நினைக்கிறேன். யானைச் சாணி காய்ந்து சிற்றோடைகளில் மிதப்பதும், குச்சியால் கிரி கிளறி அவற்றுள்ளிருந்து எறும்புகள் ஆற்றோட்டத்தின் எதிர்த்திசையில் போவதுமென, “எருமைக் கண்ணுக்கு ஸ்த்ரீ லட்சணம் உண்டு கேட்டுதா” (பக்.115), ஓரினச்சேர்க்கையாளர்கள் ராபி-ஆபேலைப்பற்றிக் கூறுகையில் அவர்களது நடை ஒரு கத்தரிக்கோல் நடந்து செல்வதுபோலிருந்தது (பக்.257) என்று, காட்டின் திசையின்மையைக் காட்டிலிடப்படும் சாலைகள் சிதறடிப்பது (பக்.294) என்று சில நுட்பமான பார்வைகள். யானையொன்று காலைத்தூக்கி மிதிக்கும்போது கீழிருந்து பார்ப்பதுபோன்பதை விவரிக்கும் ஒரு சங்கப்பாடல்வரி, ஆஹா அழகாக ஒரு படிமம் விரியப்போகிறதென்று ஆர்வமூட்டிக்கொண்டு தயாராகும் அதே நேரம், அவ்வரியின் அழகைப்பற்றி வசனங்களில் சிலாகித்துக்கொள்ளவும் போதாக்குறைக்கு உரக்கப் பிரசங்கிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள் இஞ்சினியர் அய்யரும் கிரியும். பட்டென்று அக்கணத்தை ஒரு புகைப்படமெடுத்து ஆல்பமொன்றுக்குள் சொருகிவைத்தாற்போலிருந்தது. புத்தகத்தில் மிச்சமிருக்கும் சங்கப்பாடல்களும் தாம் எங்கிருந்து வந்தோமென்பதையும், என்ன contextல் எழுந்தோமென்பதையும் எப்படி இங்கே பொருந்துகிறோமென்பதையும் விலாவாரியாக நிதானமாக விளக்குவதை ஒரு தேர்ந்த தணிக்கையாளர் இன்னும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். காட்டைப்பற்றிக் கூற ஆரம்பித்தபின் என்ன இண்ணும் காணோமிண்ணு பாத்தால் சற்றுக் காலம் கழித்து, எதிர்பார்த்தது கேறி வந்தே விடுகிறது: “காட்டைப்பற்றி யாரும் மலையாளத்தில் எழுதியதில்லை. ‘மார்த்தாண்ட வர்மா’ விலும் ‘தர்மராஜா’விலும் சி.வி.ராமன் பிள்ளை காடுகளைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் சி.வி.ராமன்பிள்ளையின் நாவல்களே சொற்களின் காடு. முட்களையும் புதர்களையும் பிரித்துப் பிரித்து உள்ளே போகவேண்டும்.” (பக்.97) ;-) . அவனாஷி (வாசகா, நீதான் அது), நோட் த போயிண்ட்.

குறிப்பிட நினைத்த இன்னொரு விஷயம் அன்ன போல உவம உருபுகளின்றிப் படிமங்கள்வழி மன எழுச்சியை உணர்த்த இயலாமல் பரிதாபகரமாகப் பாதியுடன் அறுந்து தொங்கும் வாக்கியங்களை. இதுபோன்ற கதைகளில் எழுத்தாளன் பாத்திரங்களின் தலைக்குள் நுழையவேண்டிய தருணங்களில் இதுவே முக்கியமான ஒன்றென்பது என் அபிப்ராயம் - பாத்திரங்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்படும் தருணத்தில் அல்ல. “நான் அன்று உணர்ந்தது என்ன? சொல்லின்மையில் நிரம்பிய ஒரு பரவசம். சொற்களால் அதை அள்ளமுடியாது” (பக்.121) “இந்த அனுபவத்தின் சந்நிதி முன் வரவே அவர்களால் முடியாது. வைரங்கள் புதைந்த மண்போல அவ்வனுபவங்களை அடக்கியபடி காவியங்கள் மௌனமாகக் கிடக்கின்றன.” (பக்.122), “நான் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட உந்துதல் கொண்டேன். அந்த கருப்புப் பெண்ணை,,, ஆனால் என்ன சொல்ல? ஒரு மலைப்பெண்ணின் மார்புகளைப் பார்த்தேன். அவ்வளவுதான். அதை எப்படிச் சொல்வது,,,” (பக். 132), “விரல்கள் நன்றாகப் பதிந்திருந்தன. அந்தத் தடமருகே நின்றபோது தாங்கமுடியாத மன எழுச்சியில் நான் மயங்கிச் சரிந்து விழுவேன் என்று பட்டது” (பக்.165) என்றும், “திடீரென்று உருவான மன எழுச்சியால் என் உடல் வியர்த்துவிட்டது. வெகுநேரம் படபடவென்று இருந்தது” (பக்.409) என்றும், இதே ரீதியிலும் புத்தகம் முழுதும் விரவிக்கிடப்பது. “மன எழுச்சி” என்பது ஒரு சொற்றொடர். “அதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ போல் இருந்தது, மனசே நிலைகொள்ளவில்லை, பெரும் புளகாங்கிதம் அடைந்தேன், ஒரே இஷ்ஷா இருக்கு” போன்ற விகடன் குமுத escapist அரைவேக்காட்டுச் சொற்றொடர்களைத் தவிர்த்துதான், தவிர்க்கவேண்டிதான் இப்புத்தகங்களைப் படிப்பது. இங்கும் “மன எழுச்சி” என்பதோடு ஒரு பாத்திரத்தின் அனுபவம் அறுந்து தொங்குவது மிகவும் ஏமாற்றமளிக்கக்கூடிய ஒன்று. எங்கே எழுத்தாளன் நுழையவேண்டும் எங்கே நுழையக்கூடாது என்பதைத் தீர்மானிக்க வாசகனால் இயலாது, ஆனால் அப்படியொன்றை உருவாக்கிக்கொண்டு அதன்வழி தன் வாசக அனுபவத்தை அனுமானிப்பது தவறும் இல்லை, அப்படியொன்றின்றி வாக்கியங்கள் அறுந்து வீழ்வதை விமர்சித்து வசைபாடுவது தவறும் இல்லை, சொல்வது கிரிதான் - அவனால் அவ்வளவுதான் முடியும் என்பது பதிலும் இல்லை. அப்படிப் பார்க்கையில் இப்புத்தகத்தினுள் அறுந்து தொங்கும் வாக்கியங்களனைத்தையும் மாலையாகக் கட்டினால் பப்பனாவனுக்கு மூன்று வேளையும் ஆளுயர மாலை போடலாம். JJ’s theory of upheaval ஐத் தாண்டி வெளியே வர தாழ்மையுடன் விரும்பத்தான் முடியும். இத்தனை காலமாக ஜேஜே மூன்றடியால் உலகளந்த வாமனாவதாரம் மாதிரி மகாபலிச் சக்கரவர்த்திகளின் தலையில் தன் மனோஎழுச்சி யந்திரத்தால் இவ்வளவு அழுத்தமாக மிதித்து நசுக்கித் தேய்த்திருக்கிறானென்று நினைக்கையிலேயே மூச்சு முட்டுகிறது! காட்டினுள் அலையும் கிரியின் பாலுணர்வுகளும் வேட்கையும் காதலும் விரியாமல் அறுந்து தொங்குவதும், ஒரு அசௌகரியமான வேட்கையாக (அப்படிக் குறிக்க புத்தகம் முயன்றிருப்பதையும் தாண்டி - அது ஒரு சாக்கு அல்ல) மட்டும் முடிந்துபோவதும் கிட்டத்தட்ட இதே கதியில்தான் என்று நினைக்கிறேன். “குட்டப்பனின் நிர்வாணமான பின்பக்கத்தையும் அவன் தோளுக்குக் கீழே சினேகம்மையின் முகத்தையும் பார்த்தேன். வெளியே வந்துவிட்டேன்” (பக்.414) என்பது எந்தவொரு வகையிலும், “மன எழுச்சி ஏற்படுத்த இயலாத” சுஜாதாவின் பிரபலமான “அவள் ஒரு செயின் மட்டும் அணிந்திருந்தாள்” “அவள் ஒரு நெக்லஸ் மட்டும் அணிந்திருந்தாள்” ஸ்டைல் விவரிப்புக்களையோ, “சாக்ஸ் மட்டும் அணிந்திருந்து,,,” என்னும் மார்க்வெஸ்ஸின் மெர்சிடிஸுடனான, இன்னபிறருடனான சல்லாபங்கள் குறித்த அசட்டுப் பத்திரிகையியல் ரீதியான விவரணைகளையோ, நாயகன் படத்தில் “நீ ஒரு காதல் சங்கீதம்” பாட்டில் மணிரத்னம் காட்டும் கமல்ஹாசனின் வியர்த்த முதுகு, பொட்டு கலைந்து தோளுக்கு வெளியாகத் தெரியும் சரண்யாவின் தலையையோ தாண்டியதாகக்கூடத் தெரியவில்லை. ஏன் வேறெந்த மாதிரியும் கூறவில்லை என்று அபத்தமாகக் கேட்பதற்கல்ல இது - பொருத்தப்பட்ட இடத்தைப்பொறுத்து வாக்கியங்கள் முக்கியத்துவம் பெறுவதென்பது சில இடங்களில் வெற்று மாயையே, வீறிட்டு எழக்கூடிய சில வாக்கியங்களை எப்படி வெகு தட்டையாகவும் சொல்லமுடியும், fillers என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவை எப்படியிருக்குமென்று சுருக்கமாக உணர்த்திக்காட்டவுமே.


“குப்புறத் தொங்கும் பெருச்சாளிபோல அவரது குறி”
(பக்.134) என்று வர்ணிப்பதும், “நான் திரும்பிப் பார்த்தபோது சண்முகம் பிள்ளையின் கால் நடுவே பெரிய பொட்டலம் தொங்குவதைப் பார்த்தேன். சிரித்த படி குனிந்துகொண்டேன்” (பக்.388) என்பதும், துள்ளிச் செல்லும் சிறுத்தை பாய்ந்து செல்லும்போதுகூட அதைப்பற்றிய ஒரேயொரு விவரிப்பாக “ஒரு கணம் சிறுத்தையின் அடி வயிறும் விதைகளும் வெளிர் நிறமாகத் தெரிந்தன” (பக்.390) என்பதும், பலா மரத்தைப் பார்க்கும்போதுகூட “பெரிய பன்றியின் முலைகள்போல அதன் உடம் பெங்கும் காய்களும் கனிகளுமாக பலா” (பக்.159) என்பதும் சங்கப் பாடல்களில் காட்டின் அழகில் மனதைப் பறிகொடுக்கும் கிரிக்கு எப்படிச் சாத்தியம் என்ற தூய்மைவாதக் கேள்வியெழுப்புவதில் அர்த்தமில்லை எனினும், இந்த அழகியல் அனுபவத்தின் நிஜத்தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்க உதவும் முக்கியமான அளவுகோல் இப்படியான, இன்னபிற இப்படியான வாக்கியங்கள். ஒரு cesspool மனோபாவத்துடன் குறிப்பிடப்படுபவை இவை மட்டுமல்ல. கிரியும் இன்னபிறரும் கொள்ளும் பார்வைகளும் ஓரளவு ஒத்ததாகவே இருக்கின்றன. காட்டின் நடுவில் வெள்ளையான பெண்கள் பல்லி போலிருப்பர் என்று கிரி புத்தகத்தின் தொடக்கத்திலெங்கொ குறிப்பிடுவது அப்போது உறுத்தவில்லை எனினும், தொடர்ந்து “கரிய சருமம் கொண்டவர்களிடம் மட்டுமே பற்களுக்கு இந்த வெண்மை உள்ளது. வெண்சருமம் பற்களுக்கு பழுப்பு நிறத்தை அளிக்கிறதா என்ன” (பக்.373), “வெள்ளைக்காரனுங்க மோட்டார் மெக்கானிசம், கந்தகத்தில மக்னீஷியத்தைக் கலக்கிறது, இமயமலை மோல தலைகீழா ஏறறது இதுக்கெல்லாம்தான் சரி. அவன் தத்துவமெல்லாம் வெத்து மூளை விளையாட்டு. தருக்கம்னா அதருக்கத்தைப் போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு. அது அவனுக்குத் தெரியறதில்லை. எதுக்குச் சொல்றேன்னா,,,” (பக்.279) என்ற “ஓவியங்கள் குப்பை” (பக்.281) என்னும் அய்யரின் பிலாக்கணமாகட்டும், “அவனுக்க பாஷை அப்படியாக்கும். கெளங்கு முழுங்கின நரி விக்கினதுமாதிரி ஒரு பாஷை” (பக்.338) என்பதாகட்டும், “மூத்தவன் தாணுலிங்கம் இப்பம் பத்தாம் கிளாஸ் படிக்குதான். பயங்கரப் படிப்பாக்கும். இங்கிலீஷில பேசினா பன யோலையிலெ நாய் மூத்திரம் போறதுமாதிரிப் பேசுவான்,,,” (பக்.458) என்னும் நாடாராகட்டும் - ஒரேமாதிரிக் கருத்தாக்கங்கள் அனைத்துப் பாத்திரங்களிலின் வாயிலிருந்தும் வெளிப்படும் நிகரற்ற ஒத்திசைவில் கிரியின் கதை விரிவது எங்கோ உதைக்கிறது.

காடு நல்லது நகரம் கெட்டது, கறுப்பை அழுத்து வெள்ளையைத் தூக்கு, ஆங்கிலம் நச்சு ஏமான்களின் பேச்சு அமிர்தம் என்ற ரீதியில் கருத்துக்களும் காடாக விரிகின்றன, “என்னடாவன் ஏசு சிலுவையில வவ்வால் தொங்கற மாதிரி” என்ற குட்டப்பராசப்பவழிப் பிரச்சாரங்கள் வழியாகவும்.

நிரப்பிகளை (Fillers) எடுத்துவிட்டு, ஒரு குறுநாவலாக எழுதியிருந்தால் ஓரளவு டார்த்தீனியம், லங்கா தகனம் மாதிரி இன்னும் மேம்பட்டிருக்குமென்று நினைக்கிறேன். அதற்குமொரு விளக்கமாக புத்தகத்திலேயே, “காட்டில நாம போறதுதான் முக்கியம். போற இடமும் காடுதான். போய்ச் சேர்ற இடமும் காடுதான்” என்றொரு விளக்கத்தையும், மேலும் பிறிதொரு தறுணத்தில் “காட்டைப் பாக்கணும்னா வாயை மூடணும்பாங்க. நானும் மூடிமூடிப் பார்ப்பேன். ரெண்டு நாள் தாக்குப்பிடிக்கமுடியாது. ஐ டாக், தெயர்ஃபோர் ஐ யம்.” (பக்.276) என்றும் சொற்பிரவாகத்துக்கு ரெனே தெகார்த்தே வழியாகவும், ஆங்கில Casper குழந்தைப்படம் வழியாகவும் (I stink, therefore I am) ;-) விளக்கத்தையும் கிரிதரனுக்கும் மலைக்குளிருக்கு தத்துவ சூப் போட்டு வாசகர்கள் நமக்கும் அளித்துவிடுகிறார் இஞ்சினியர் அய்யர். இஷ்டமில்லா உறவுடன் புத்தகத்தில் கிரிதரனின் கதை சோகமாக முடிவதுபோலத்தான்!!

-->

Posted in பொது, தமிழ், புனைவு | Comments Off

பெருமாள் முருகனின் கூளமாதாரி

November 30th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: முத்து (தமிழினி)

சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனின் கூள மாதாரி என்ற நூலை வாங்கியிருந்தேன்.தற்கால தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் பெருமாள் முருகன்.ஏற்கனவே சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் இவரை பற்றி குறிப்பிட்டு அவரின் ஏறுவெயில் என்ற நாவலை பரிந்துரை செய்திருந்தார்.சுந்தர ராமசாமியின் கருத்துகளிலும்,ரசனைகளில் நான் அடிக்கடி என் கருத்துகளையும் ரசனைகளையும் பொறுத்தி பார்ப்பதுண்டு.அவ்வடிப்படையில் பெருமாள்முருகனை படித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். புத்தக கண்காட்சியில் கூளமாதாரி என்ற புத்தகத்தை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.

திருச்செங்கோடு நாமக்கல் பகுதி மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை இதை விடவும் அழகாக யாரும் இதுவரை ஆவணப்படுத்தியது இல்லை. இனிமேலும் யாரும் செய்துவிட முடியாது என்றும் தைரியமாக கூறலாம் என்ற அளவிற்கு எழுதியுள்ளார்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த பகுதி மக்களின்வாழ்க்கை முறை, இந்த பகுதி கலாச்சாரம், இந்த மக்களின் பண்பு பெரிதாக வெளிப்படுத்தப்படாமல் மறைந்துகொண்டு வருகிறதோ என்று. மண்ணின் மைந்தர்களான இந்த தலைமுறையை சேர்ந்த என்னை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாழ்வை விட்டு விலகி கொண்டிருக்கிறோம். படிப்பு என்பது பெரும்பாலும் இந்த தலைமுறையில் பரவலாகி இருக்கிறது.விவசாயம் செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற பயம் தோன்றும் அளவிற்கு.

தலித் இனத்தை சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனின் பார்வையில் கதையை நகர்த்தி உள்ள பெருமாள்முருகன் இந்த புத்தகத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் பெரும்பான்மையான கவுண்டர் இனத்தை தவிர நாடார் மற்றும் தலித் மக்களும் நிறைய வசிக்கும் இந்த நிலப்பரப்பின் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டு வருவதில் மிக்பபெரிய வெற்றி பெற்றுள்ளார்.இதை படிக்கும்போது பல இடங்களில் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.இவ்வாறு ஒரு வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரே கதையில் அடக்குவது என்பது வார்த்தையில் விளக்கமுடியாதது.

கெட்ட வார்த்தைகளையும் அதிர்ச்சி தரும் வார்த்தை பிரயோகங்களையும் செயற்கையான முறையில் கதைகளில் உபயோகப்படுத்தப்படுவதை பார்த்து பழகிய எனக்கு, தலித்தாக இல்லாதிருந்தாலும் தன்னை தலித்தாக உணருபவர் என்று கூறப்படும் இந்த எழுத்தாளர் அந்த மண்ணில் சாதாரணமாக புழங்கும் தாயோலி,தேவிடியா,பொச்சு, முதலிய வார்த்தைகளை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருந்தாலும் எந்த ஆபாச அதிர்ச்சிகளையும் நமக்கு தருவதில்லை.

இந்த மண்ணை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த கதை எந்தவிதமான உணர்வுகளை தரும் என்று என்னால் தெளிவாக கூறமுடியவில்லை.எங்கிருந்தாலும் மனித அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான் என்பதாக புரிந்துகொண்டோமானால் இதை ஒரு மிகச்சிறந்த நாவல் என்று எளிதாக கூறிவிடலாம்.

முன்பு பத்து பனிரெண்டு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் திருச்செங்கோட்டில் குமாரமங்கலம் பக்கத்தில் உள்ள எங்கள் தாத்தா பாட்டியுடன் சென்று மாத கணக்கில் இருப்பேன்.

தினமும் காலை எழுந்து ஆடு ஓட்டிக்கொண்டு (மேய்த்துக்கொண்டு) கிலோமீட்டர் கணக்கில் சென்ற அனுபவங்கள்…

பண்ணையத்தில்(வேலைக்கு) இருந்த தூங்கப்பிள்ளை என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று எலிக்கறி சாப்பிட்டது……

மாலை நேரங்களில் பனைமரம் பனைமரமாக தேடிச்சென்று பனம்பழம் பொறுக்கி வந்து நெருப்பில் சுட்டு தின்னது…..

சுழன்று சுழன்று மழை பெய்யும் நேரத்தில் ஆட்டு படலை கயிறு போட்டு இழுத்து கட்டியது…..

இன்னும் எவ்வளவோ என் நெஞ்சில் நின்ற நினைவுகளை அழகாக கிளறிக்கொண்டு வந்துள்ளார்.

கூளமாதாரியில் செல்வனும் கூளையனும் இரவு நேரம் ஆட்டு படலை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் படம் பார்க்க கொட்டாய்க்கு போவது..திரும்பி வந்தபோது ஆடு காணாமல் போயிருப்பது…………
முனியப்பன் சாமி கூளையனுக்கு காட்சி அளித்தது…

செல்வனும் கூளையனும் சண்டை போட்டுக்கொள்வது………

கூளையன் பனங்கிழங்குகளை சாயபு தாத்தாவிடம் விற்று பணத்தை கவுண்டரிடம் தருவது.அவர் அவனையே சட்டை வாங்கிக்கொள்ள சொல்வது..

போன்ற அத்தியாயங்களில் பெருமாள்முருகனின் சித்தரிப்பு அருமை..

கவுண்டர் இன மக்கள் சேலம், தர்மபுரி, நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ஈரோடு மற்றும் கோவை வரை வாழ்கிறார்கள்.ஆனால் காவிரி ஆறு பிரிக்கும் ஈரோட்டுக்கு மறுபுறம் இருக்கும் மக்களுக்கும் மேட்டு காட்டில் உழைக்கும் இவர்களுக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும்.

இந்த பதிவின் முதல் பாகம் மேட்டு காட்டு காட்டான்கள் என்ற பெயரில் இங்கே. தமிழ் சினிமாவில் கவுண்டர் பாஷை என்றும் கவுண்டர் வாழ்க்கை என்றும் காட்டப்படுவது பெரும்பாலும் கோயமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் கவுண்டர்களுடையது.இந்த மக்களுக்கும் நாமக்கல, திருச்செங்கோடு மக்களுக்கும் சிறிது வித்தியாசம் உண்டு என்று முந்தைய பதிவில் கூறியிருந்தேன். பாஷையிலும் வித்தியாசம் உண்டு. நாமக்கல், திருச்செங்கோடு மக்கள் அவர்களைவிட கொஞ்சம் பாமரத்தனமாக இருப்பார்கள்.

பெருமாள் முருகனின் இந்த நாவலில் அதுவும் குறிப்பாக திருச்செங்கோட்டு மலையை முக்கிய மையமாக வைத்துள்ளார்.இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் சாதி சார்ந்தது. இங்கு பெரும்பாலும் நிலத்தை வைத்திருப்பவர்கள் கவுண்டர்கள்.நாடார்கள் கள் இறக்கி வாழ்பவர்கள். சக்கிலியர் விவசாயக்கூலிகளாக வாழ்ந்து வருபவர்கள்.இந்த கதையின் நாயகன் கூளையன் ஒரு சக்கிலி சிறுவனாக இருக்கிறான்.இளம் வயதில் கவுண்டர் வீட்டு பண்ணையத்திற்கு வருஷம் இவ்வளவு என்று கூலி பேசப்பட்டு வேலை செய்கிறான்.சாதிக்கொடுமைகள் சம்பந்தப்பட்ட இடங்களை யதார்த்தமாகவும் நேர்மையாகவும் கையாள்கிறார் ஆசிரியர்.

எனக்கும் இதில் சில அனுபவங்கள் உண்டு. எட்டு ஒன்பது வயதிருக்கலாம். நான் ஒருமுறை ஊருக்கு சென்றிருந்தப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் என்னை முதலாளி என்று அழைத்ததோடு அவரை விட வயதில் சிறிய என்னுடைய மாமா டேய் கந்தா என்றெல்லாம் அழைத்ததற்கு எதுவுமே சொல்லவில்லை.இத்தனைக்கும் அந்த நபர் உள்ளூர் அரசு பள்ளியில் ஆசிரியர்.டவுனில் வளர்ந்த நான் வியந்து போனேன்.ஆனால் அப்போதே அங்கு வந்திருந்த என் தந்தை என்னையும் மாமாவையும் திட்டியதோடு இல்லாமல் வாத்தியார் கந்தனையும் சின்ன பையன்கள் மனதில் தவறான எண்ணத்தை வளர்ப்பதாக கடிந்துகொண்டார்.என் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது நிலைமையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று நினைக்கிறேன்.

எங்கள் காட்டுக்கு பக்கத்து காட்டு உரிமையாளரை பணக்கார சக்கிலி என்று அழைப்பார்கள்.கடும் உழைப்பின் மூலமாக நில உரிமையாளர் ஆகிவிட்டார் அவர்.ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன்.ஆனால் ஒற்றுமையுணர்வும் நிலவுகிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி இந்நாவலில் கதையோட்டம் என்று குறிப்பாக ஒன்றும் இல்லையென்றாலும் கதை முடிவில் உள்ள அந்த எதிர்பாராத திருப்பத்தின் மூலம் கதைக்கு ஒரு கனமான முடிவையும் கதையை படிப்பவர் நெஞ்சில் கதை நாயகனின் பாதிப்பையும ஏற்றிவிடுகிறார் பெருமாள்முருகன்.கண்டிப்பாக கதையை படித்த இரண்டு நாட்களுக்கு கூளையன் நம் நெஞ்சில் உட்கார்ந்துகொண்டு இருப்பான்.
கதையின் நாயகன் தாழ்த்தப்பட்ட குல சிறுவனாக இருப்பினும் கதையின் ஊடாக இழையோடி இருப்பது கவுண்டர்கள் வாழ்க்கைதான் என்று எனக்கு தோன்றுகிறது.இது கதைக்கு பலமா பலவீனமா என்று சொல்லமுடியவில்லை.வீட்டுக்கு வந்த கூளையன் திரும்பவும் கவுண்டர் பண்ணையத்திற்கு போக பயந்து தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போகும் சம்பவத்தில் சாதிகளை தாண்டிய ஒரு அனுபவத்தை நமக்கு காட்டுகிறார் பெருமாள்முருகன்.

நிறைய தகவல்களை , தேவையற்ற தகவல்களை அள்ளி தெளிப்பதாக சுந்தர ராமசாமி இவர் கதைகளின் மேல் ஒரு விமரிசனத்தை வைத்தார்.ஆனால் அந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அதை நான் மறுப்பேன்.நான் ஏற்கனவே கூறியுள்ளபடி இது ஒரு ஆவணப்படுத்துதல்.தேவையற்ற விவரணைகள் என்று எடுக்கப்படுகிற ஒவ்வொரு வரியும் இந்த நாவலை எதிர்மறையாக பாதிக்கும்.இவர் கதைகளை இதன்ஊடாகத்தான் ரசிக்கமுடியும்.அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டிய ஒரு எழுத்தாளராக என் அலமாரியில் சுந்தர ராமசாமியின் அருகில் அமர்கிறார் பெருமாள்முருகன்.

-->

Posted in பொது, தமிழ், புனைவு | Comments Off

கோபாலி…

November 22nd, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: யளனகபக கண்ணன்

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. “ஆகா”, என்று தன்னை மறந்து ஒரு வார்த்தை வாயில் வருகிறது. Without further ado, the passages from மரப்பசு.

கோபாலி பற்றி அம்மணி சொல்வது…
“…தள்ளி உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அந்த அசட்டு அணைப்பு அணைத்த உடம்பும் கண்ணும் இல்லை. மேடை மேடையாகத்தெரிந்தது. கண்முன் இருப்பவர்களை அழித்துவிட்டு அது பாடுகிற லயிப்பு, சிம்மம் மாதிரி சபையை ஆள்கிற தோரணை - சபையைப் பார்க்காமல், தன் உள்ளே பார்த்துக் கொண்டு, சபையை ஆட்டி வைக்கிற தன்னறியாமை. ஒரு தடவை கச்சேரியில் பின்னால் யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, இரண்டு மூன்று தடவை திரும்பிப் பார்த்தது அது - சுட்டெரிக்கிற ரௌத்ரம் கண்ணில். சற்று அடங்கிய குசுகுசுப்பு மீண்டும் பேச்சாக உயர்ந்ததும், திரும்பி “நான் இன்னிக்குப் பாடட்டுமா, வாண்டாமா?”என்று ஒரு கேள்வியாக வெடித்து, பாதிப்பாட்டை அவசர அவசரமாகப் பாடி முடித்து, “பவமான”என்று மங்களம் பாடி முடித்துவிட்டது. கச்சேரி தொடங்கி அரைமணி கூட ஆகவில்லை.கண்டுவைப் பார்த்து அஞ்சலியுடன் “பெரியவா பொறுத்துக்கணும் பின்னாலெ ரொம்பப் பெரிய வாயா ஆயிடுத்து, முடிச்சுட்டேன். எனக்கும் வருத்தம் தான்”என்று மன்னிப்புக் கோரிவிட்டு, மறுநாள் காலையில் அதே பக்க வாத்யத்துடன் கண்டுவின் வீட்டுக் கூடத்தில் பூஜை அலமாரிக்கு முன் உட்கார்ந்து பாடத் தொடங்கி, உச்சிவேளை வரையில் பாடி தன்னையே கரைத்துக் கொண்டுவிட்டது…”

இனி கோபாலியே இதுபற்றிச் சொல்வது…
“…நன்னா ஞாபகமிருக்கு எனக்கு. யாரோ பின்னாலெ பேசிண்டிருந்தான்னு கோபம் வந்ததுன்னா கச்சேரியை முடிக்கலாமோ? மகா அபச்சாரம்.ராத்திரி ஒரு மணியாச்சு, ரண்டு மணியாச்சு தூக்கம் வல்லெ. பகவானுக்காகப் பாடறபோது இது என்ன அகம்பாவம்?யார் கேட்டா என்ன, கேக்காட்டா என்ன? ராத்திரி ரண்டு மணி இருக்கும் எழுந்துண்டு கண்டுவாத்திலே போய்க் கதவை இடிச்சேன். எழுந்து ஜன்னல் வழியா ‘யாரு’ன்னார். நான் தான்னேன். பரபரன்னு வந்து கதவைத் திறந்தார். கால்லெ விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். காலமே கச்சேரி பண்ணப் போறேன் பெரியவா அனுமதி கொடுக்கணும்னு நின்னேன். இதுக்காகவான்னு உபசாரமா ஏதோ சொல்ல ஆரமிச்சார். சரி தூக்கத்தைக் கெடுத்துட்டேன், நாளை பேசிக்கலாம்னு வந்துட்டேன். மறுநாள் விடியகாலமே குளிச்சு என்னை ஒழிடா கிருஷ்ணான்னு வேண்டிண்டு வந்து பாட உட்கார்ந்துண்டேன். அன்னிக்கு தேவகாந்தாரி பாடி மோகனம் பாடி - எவன் பாட முடியும்? நான் பாடலெ, அதுக்குச் சொல்றேன்.ராகங்கள்ளாம் அதுகளாப் பாடிண்டுது. என்னைப் போட்டு மிதிச்சுண்டு அதுகளாப் பாடிண்டுது. இல்லாட்டா எந்தப் பய அப்படிப் பாட முடியும்? இவன்தான் பாட முடியுமா? கூடம், ரேழி, கொல்லைக்கட்டு, சமையல்கட்டு, முத்தம் - எல்லாம் தலையாத் தெரிஞ்சுது.கண்ணைக் கண்ணை மூடிக்க வேண்டியிருந்தது …மத்தியானம் ஒரு மணி ஆச்சு களைப்பு சளைப்பு இல்லே - “ஆஹா ஆஹான்னு கூடம் முழுவதும் பித்துப் பிடிச்சு அரடித்து. அன்னிக்கு அந்த தேவகாந்தரி பாடினப்புறம் பிடில் வாசிச்சுதே கோபு- வாசிக்கணுமே - பிழிஞ்சு பிழிஞ்சு அழுதது.’கோபாலி, சாட்சாத் கோபாலண்டா நீ. நான் வாசிக்க மாட்டேன். என்னை ஔமானப் படுத்தாதே’ன்னு ஜரிகை அங்கவஸ்திரத்தாலே கண்ணைத் துடச்சுண்டது.அதுக்கு என்னைச் சொல்றதாக எண்ணம். அது சொன்னதுதான் நிஜம்.கோபாலன் தான் பாடினான் - ”

“ஆ! அசத்தறியேடா மச்சி” என்று வாய்விட்டரற்றினேன். இதைப் படிக்கும்போதெல்லாம், ரேழி முழுக்கத் தெரிந்த தலைகளில் ஒன்று என்னுடையதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மருகுவேன். இந்தப் பகுதியை முதலில் படித்தவுடன் ஏதோவொரு வினோத உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப் பட்டேன். ஒவ்வொரு முறையும் ஆட்கொள்ளப்படுகிறேன். ‘உண்மையான கலைஞன் தன்னை வெளிப்படுத்துவது இப்படித்தானோ?’ என்று கோபாலியையும், இந்தப் பகுதியை ஒரு tranceல் இருந்தது போல எழுதிய தி ஜா வையும் பார்த்து நினைத்துக் கொள்ளுகிறேன்.

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?