-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

அந்த பச்சை நிற மைல் The Green Mile - Stephen King

February 6th, 2007 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பொன்ஸ

மரணதண்டனை பற்றிய பதிவுகளின் இடையில் நினைவுக்கு வந்த புத்தகம் இது. நண்பரின் வற்புறுத்தலுடன்கூடிய பரிந்துரை காரணமாக இந்த நாவலை நான் படிக்கத் தொடங்கிய போது, அதிக வர்ணனைகளுடனான இதை விட இன்னும் ஆவல் தூண்டும் “Best Seller” புத்தகங்கள் அறை முழுவதுமிருந்து கண் சிமிட்டிக் கூப்பிட்டன. அவற்றில் விழுந்துவிடாமல் ஸ்டீபன் கிங்கின் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்க ஏதுவாக இருந்தது இந்த நாவலை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தான்.

பொதுவாக புத்தகமாகப் படித்ததைத் திரைப்படமாகப் பார்க்கையில் வாசகரின் கற்பனையும் இயக்குனரின் கற்பனையும் ஒத்துவராமல் போய் திரைப்படங்கள் பெரும்பான்மையரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதவையாக அமைவதே இயல்பு. எத்தனை அவசியமான வேலையாக இருந்தாலும் பத்து மணிக்கு மேல் கண்விழித்தறியாத என்னை, நள்ளிரவு வரை உட்கார்ந்து படம் பார்க்க வைத்தது கதையின் முக்கிய பாத்திரமான ஜான் காஃபியின் மலை போன்ற ராட்சச உருவமும் உருவத்துக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத குழந்தை முகமும் தான்.

படம் புத்தகத்துக்குள் நுழைய காரணமாக இருந்தாலும், இந்தப் பதிவு பேசப் போவது புத்தகத்தைப் பற்றி மட்டுமே. கதை நாயகன் பால் எட்ஜ்கோம்ப் (Paul Edgecombe) அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண சிறைச்சாலை அதிகாரி. அதிலும், 1932வின் பொருளாதார வீழ்ச்சிக்காலத்தில் அப்போது வழக்கிலிருந்த மரண தண்டனை உத்தியான மின்னிருக்கைக்குக் குற்றவாளிகளைத் தம் கடைசி நடைக்குத் தயாராக்கும் பொறுப்பான பதவி வகிக்கும் அதிகாரி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கும் பால்(Paul), கடைசி முறையாக இந்தப் பொறுப்பை வகித்தமையும், இனிமேல் இதைச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்த விதத்தையும் சேர்த்தது தான் இந்தக் கதை. தலைப்பின் பச்சை மைல் குறிப்பது மின்னிருக்கை நோக்கி குற்றவாளிகள் பயணப்படும் கடைசி மைலை. இந்தத் தூரம் சிறையில் பச்சை மொசைக்கால் இடப் பட்டிருப்பதால், பச்சைமைல் ஆகிறது

ஜான் காஃபி (John Coffey) என்ற கறுப்பின ராட்சசன் (giant) குழந்தைகளான இரட்டைச் சிறுமிகளை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்காக கோல்ட் மவுண்டெய்ன்(Cold Mountain) சிறைச்சாலைக்கு வந்த போது, பால் சிறுநீரகப் பைக் கோளாறினாலும், அதிகார வர்க்கத்துப் பெரிய மனிதர்களின் நட்பால் அங்கு வேலைக்குச் சேர்ந்து உடன் பணியாற்றும் யாரையும் மதிக்காமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பெர்ஸி வெட்மோராலும்(Percy Whetmore) பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். காபியின் ஆறடி நெடிய பருத்த உருவத்துக்கு முன் சிறையதிகாரிகள் எல்லாருமே குழந்தைகள் போல தோன்றியதையும் அவன் செய்திருந்த குற்றத்தைப் பற்றியும் அறிந்திருந்த பாலுக்கு “இருட்டைப் பார்த்தால் எனக்குப் பயம், இரவில் இங்கே ஒரு விளக்கைப் போட்டு வைப்பீங்களா?” என்ற அவனது கோரிக்கை முதல் ஆச்சரியத்தை அளித்தது. நோய்களைக் குணமாக்கும் அற்புத சக்தி கொண்டவனான காஃபி அதைத் தவிர வேறு எதுவுமே தெரிந்தவனாகவோ நினைவாற்றல் மிக்கவனாகவோ இருக்கவில்லை. தோற்றத்துக்குத் தொடர்பேயில்லாமல் மிகவும் மெல்லிய குழந்தை மனம் அவனது. ஆனால், ஒரு சில சமயங்களில் எதிராளியின் மனதைப் படிக்கும் கலையும் காஃபிக்குக் கைவருகிறது.

ஜான் காஃபி சிறையில் சில அற்புதங்களை நிகழ்த்தினான், பால் எட்ஜ்கோம்பின் சிறுநீரகக் கோளாற்றைப் போக்கி மறையவைத்தான்; இன்னுமொரு குற்றவாளியான டிலாக்ருவாவின்(Delacroix) செல்லப் பிராணியான மிஸ்டர். ஜிங்கிள்ஸ் என்ற எலியை உயிர்நிலை மங்கியிருந்த கடைசி நிமிடத்தில் உயிர்ப்பித்தான். சிறை வார்டன் மூர்ஸின்(Moores) மனைவி மெலிண்டாவின்(Melinda) மருத்துவர்களால் கைவிடப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தி அவளை மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றினான். இத்துடன், அங்கிருந்தவர்களின் தலைவலியான பெர்சியையும் .. ஆஹா.. கதை முழுவதும் சொல்வது என் நோக்கமல்ல!.

கதை நடக்கும் நேரம் 1932 என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர். பாலின் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதையின் வர்ணனைகளும், பாலின் அவ்வப்போதைய மன உணர்வுகளும், சந்தோசம், சோகம், வருத்தம், ஜான் நிரபராதி என்று தெரிந்தும் அவனை விடுவிக்க இயலாத கையாலாகாத தன்மை என்று உணர்வுப் பூர்வமாகவே கதை நகருகிறது.

பால் உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு சமயத்திலும் சமயோசிதமான பேச்சாலும் செயலாலும் உதவி செய்யும் சக சிறையதிகாரி ப்ரூட்டஸ்(Brutus), ஈரமான உள்ளம் கொண்ட ஹாரி(Harry), பிள்ளைக் குட்டிக்காரன் என்ற காரணத்தினால் இந்தக் குழுவினர் செய்யும் எந்த சட்டவிரோதமான (பெர்சி விரோதமான) நடவடிக்கையிலும் ஈடுபட முடியாமல், அதை ஒப்புக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் டீன்(Dean), நம் தமிழ்ப் படங்களில் வழக்கமாக வரும் நேர்மையான போலீஸ் அதிகாரி போன்ற உயரதிகாரி வார்டன் மூர்ஸ்(Moores), கதையில் முழுக்க முழுக்க உடல் நிலை சரியில்லாமலே வந்தாலும், பால் மற்றும் அவனது மனைவியின் கண்கள் மூலம் மிக அற்புதமான மனுஷியாகக் காட்டப்படும் மெலிண்டா மூர்ஸ் (Melinda Moores), என்று கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட விதம் அழகு.

ஜான் காஃபி, பால் எட்ஜ்கோம்புக்குப் பின் மனதில் தைக்கும் மற்றொரு பாத்திரம் பாலின் மனைவி ஜேனிஸ் எட்ஜ்கோம்ப்(Janice EdgeCombe). சிறு வயதிலேயே திருமணமான ஜேனிஸ் - பால் தம்பதியனரின் அழுத்தமான காதலும், உண்மையான கருத்துப் பரிமாற்றங்களும், பாலுக்கு ஒரு சாயும் தூண் போல் இருக்கும் அவளின் திடமும் சேர்த்து இன்னுமொரு அற்புத பாத்திரம் ஜேனிஸ். ஒரு கட்டத்தில் காஃபி நிரபராதி என்று உணர்ந்த பின், கதைப்படி அவனைச் பார்த்திருக்கக் கூடவில்லாத ஜேனிஸ், அவனைச் சிறையிலிருந்து வெளிக் கொணர வேண்டி யோசனைகள் சொல்வதும், கருப்பினத்தவனான காஃபியின் வழக்கை மறு பரிசீலனைக்குக் கொண்டுவருவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பால், ஹாரி, டீன், ப்ரூட்டஸ் எல்லாரும் எடுத்துச் சொல்லும் போது, “ஆக, ஒரு கருப்பன் என்ற காரணத்துக்காக ஒரு நிரபராதியை நீங்கள் அனைவரும் எரித்துக் கொல்லப் போகிறீர்கள்? அப்படித் தானே? எல்லாருமே கொலைகாரர்கள்!” என்று அனைவரின் மனதில் இருப்பதை வெளியில் சொல்லி கூச்சலிடுவதும், உண்மையில் பாலின் மனசாட்சி ஜேனிஸ் தான் என்று தோன்றவைக்கிறது.

ஜிங்கிள்ஸ் மற்றுமொரு ஆச்சரியம், படத்தில் எப்படி வந்தது என்று இப்போது நினைவில்லை. ஆனால், கதையில் எலியின் நண்பனான டிலாக்ருவா சிறைக்கு வருவதற்கு வெகு நாட்கள் முன்பிருந்தே ஜிங்கிள்ஸ் அவன் இருக்கும் அறையை அவ்வப்போது வந்து எட்டிப் பார்ப்பதும் காத்திருப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்ததை வர்ணிக்கும் போது பாலுடன் நானும் அதிசயத்துப் போய்விட்டேன். பாலின் நூற்று நாலாவது வயதில் அவர் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தொடங்கும் இந்தக் கதை ஜிங்கிள்ஸும் அதே மாதிரி கிட்டத் தட்ட ஐம்பது சொச்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகவும், பாலுக்கு ரொம்பவும் வயதான பின் ஜிங்கிள்ஸ் தானே பாலை மீண்டும் கண்டுபிடித்து அவருடன் தன் கடைசி காலங்களைக் கழித்ததாகவும் சொல்கிறார் கிங்.

மரண தண்டனைகளை நிறைவேற்றும் சிறையதிகாரியான பாலின் முக்கியமான தொழில் பேசுவது, தான் இறக்கும் தேதி தெரிந்த மனிதனுக்கு என்ன தேவைப்படும்? செல்வம்? உணவு? கலவியின்பம்?.. இறக்கப் போகும் மனிதனுக்குத் தேவை ஒரு நம்பிக்கையான நண்பன். தன் எல்லாக் கவலைகளையும், வருத்தங்களையும், செய்த பிழைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு காது, சிரிக்கும் போது கூடச் சிரிக்க ஒரு வாய், சாகும் போது அழ இரண்டு அன்பான கண்கள், பழைய வாழ்க்கையை நினைத்து அழும்போது சாய்ந்து கொள்ள ஒரு தோள். இவை எல்லாமாக இல்லாவிடினும், இவற்றில் குற்றவாளிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் தரவேண்டிய வேலை தான் பாலுடையது - பேசுவது, குற்றவாளியைப் பேசவைப்பது. ஒருவேளை பழைய குற்றங்கள் எவற்றையாவது அவன் ஒப்புக் கொண்டால், அதை எழுதிக் கொள்வது, கடைசி விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளிப்பது(எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட முடியுமா என்ன), கடைசி நேர பயணத்துக்கு உடன் நடந்து, குற்றவாளிக்கும் அந்தப் பயணத்தை பயமின்றி மேற்கொள்ள உதவுவது.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது ஒரு குற்றமும் செய்யாமல் மின் இருக்கையில் அமர்ந்த ஜான் காஃபியைப் போன்றே, ஒரு சிறுமியின் வன்புணர் இறப்புக்கும், ஒன்பது உயிர்கள் எரிந்து இறப்பதற்கும் காரணமான ஆனால், சின்னக் குழந்தை போல் எலிகளுடன் விளையாடிய டிலாக்ருவாவின் மரணமும் நம்மைத் தாக்குகிறது.

இப்படி மின்னிருக்கையில் இறப்பவர்களைப் பார்க்க, நேரில் பார்த்து அந்தத் தண்டனையை ரசிப்பதன் மூலம் தம் இழப்புகளுக்கு ஈடு கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ, அந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களில் விருப்பமுடையவர்கள் வரலாம் என்ற வழக்கமும் இருந்திருக்கிறது, நாகரிகத்தில் முன்னேறிய நாடான அமெரிக்காவின் வெள்ளைக் குடிமக்களுக்கிடையில்! ஒவ்வொரு மின்னிருக்கை இறப்புக்கும் அங்ஙனம் வந்திருந்த மக்களை வர்ணிப்பதிலிருந்து அவர்களின் வன்மம் நிரம்பிய “நல்லா வேணுண்டா உனக்கு” போன்ற வார்த்தைகளையும் மனதில் தைக்குமாறு சொல்ல வைக்கிறார் ஸ்டீபன் கிங்.

கிட்டத் தட்ட ஒரு மாதம் போல், தன் தவறுகளுக்கு வருந்தி, மனம் திருந்தும், தம் வாழ்வின் மிக இனிமையான/கொடுமையான, நாட்களை அசை போடும் மனிதர்களின் இறப்பைப் பார்ப்பது ஒவ்வொரு முறையுமே கொடுமையான விஷயம் தான். எனினும் அந்த இடத்தில் குற்றமற்றவன் இறப்பதைப் பார்க்க நேர்ந்த பால், டீன், ஹாரி, ப்ரூட்டஸ் யாருமே, இது போன்ற அடுத்தவொரு “நாகரிகக் கொலைக்குத்” தயாராக இருக்கவில்லை என்பதையும் சொல்லி முடிக்கிறார் கிங்.

இரண்டாம் முறையாக சமீபத்தில் இந்தக் கதையைப் படித்து முடித்த போது, நம் நாட்டில் மரண தண்டனை எப்படி நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. மரண தண்டனை நியாயமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நண்பர்களும் வாய்ப்பு கிடைத்தால் இப்படி ஒரு தண்டனைக்கு சாட்சியாக இருக்கவும் விழைவார்களோ?

(கதை வேண்டுமாயின் இங்கே பார்க்கலாம்.. படத்தின் கதையில் ஜேனிஸ் பாத்திரம் அத்தனை முழுமையாக இருக்கவில்லை என்று நினைவு, மற்றபடி அதே தான். படங்கள், கதைக்கு சீனுவுக்கு நன்றி)

-->

Posted in பொது, .புனைவு | Comments Off

Disgrace - J.M.Coetzee

December 7th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சன்னாசி

ஐம்பத்திரண்டு வயது, இரண்டு முறை விவாகரத்தான வெள்ளைக்காரப் பேராசிரியர் டேவிட் லூரீ, வெள்ளை ஆட்சியிலிருந்து மண்டேலா தலைமைக்கு மாறிய தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆட்சி மாற்றத்தின்பின், பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தாலும், முன்னமிருந்த உயிர்ப்பில்லாததுபோல் தோன்றினாலும், பொறுப்பாகவே வகுப்புக்களை நடத்தி வருகிறார். வதங்கிக்கொண்டிருக்கும் இளமையைக்குறித்தா அல்லது சுற்றியுள்ள சூழல்மாற்றம் திணித்த வெறுமையா அல்லது பெரும்பாலான குட்ஸீ புத்தகங்களிலும் வரும் “அவன்”களிலுள்ள உள்ளார்ந்த அகன்ற (detached), அபத்தத்தின் விளிம்பில் நின்று சாவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு அ-பிரக்ருதியின் சுவாரஸ்யமின்மை என்றோ விளக்கமுடியாத நியதிச்சக்கரத்தின் ஒரு பல்லாகத் தினமும் சுழன்றுகொண்டிருக்கிறார். சொராயா என்னும் விலைமாதுவுடன் பொழுதைக் கழிக்கையில், “சின்ன அறுவைசிகிச்சைதான்: மிருகங்களுக்குத் தினமும் செய்கிறார்கள், சின்ன வருத்தத்தைத்தவிர பெரும்பாலும் அவை நல்லபடியாகவே தொடர்கின்றன. முடிச்சுப் போடுதல், கத்திரித்தல்: வலிநீக்கி மருந்து, நடுங்காத கை, பாடப்புத்தகங்களிலிருந்துகூடச் செய்துவிடலாம். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் தனதைத் தானே அறுத்துக்கொள்வது: அசிங்கமான காட்சி, ஆனால், ஒருவகையில் பார்க்கையில், அதே மனிதன் தன்னை ஒரு பெண்ணுக்குள் செலுத்திக்கொள்வதைவிட அசிங்கமானதொன்றுமல்ல″ என்று தன்னைத்தானே காயடிப்பதைப்பற்றி யோசித்துக்கொள்கிறார். தற்காலிகமாகப் பிடிப்புவைத்திருக்கும் சொராயா, தனது கணவனுடன் வேற்றிடம் போகிறாள். லூரீ தொலைபேசியில் அவளைப் பிடிக்க, குடும்பத்துடனிருக்கும்போது லூரீ அழைத்துவிட்ட அருவருப்பு அவள் குரலில் தெரிய, திரும்பி வருகிறார்.

நகரத் தெருக்களில் போய்க்கொண்டிருக்கும்போது மரூன் நிற குட்டைப்பாவாடை மஞ்சள்நிற மேல்சட்டை என்று நடந்துபோய்க்கொண்டிருக்கும் மெலனி ஐஸாக்ஸ் என்ற தனது மாணவியொருத்தியைச் சந்திக்கிறார். பின் அவரது வீட்டில் அவர்கள் உணவருந்திவிட்டு காஃபியில் சிறிது விஸ்கியை ஊற்றி அருந்திக்கொண்டிருக்கும்போது லூரீ கூறுகிறார்: “இரு. இரவை என்னுடன் கழி”
“ஏன்?”
“அப்படித் தான்”
“ஏன் அப்படித் தான்?”
“ஏனா? ஏனென்றால் ஒரு பெண்ணின் அழகு அவளுக்குமட்டும் உரித்தானதல்ல. உலகுக்கு அவள் கொண்டுவரும் செல்வங்களுள் அதுவுமொன்று. அதைப் பகிர்ந்துகொள்வது அவள் கடமை.”
“அதைப் பகிர்ந்துகொள்வதென்றுவிட்டால்?”
“இன்னும் ஆவேசமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்”
அன்றைய இரவு கழிகிறது. அடுத்த சில இரவுகளும் பகல்களும். உன்னுடனே வந்து தங்கிவிடட்டுமா என்கிறாள் மெலனீ ஒரு நாள். சற்றுத் தயக்கத்துடன் சரி என்கிறார் ஒருநாள். அவரது முந்தைய மனைவியின் படம் இருக்கிறதா என்கிறாள் மெலனீ. “படங்களைச் சேகரிப்பதில்லை. பெண்களைச் சேகரிப்பதில்லை” என்கிறார் லூரீ.
“என்னைச் சேகரிக்கவில்லையா நீங்கள்?”
“இல்லை”

அவள் வெளியேறிப்போக, அடுத்த நாள் லூரீயின் அலுவலகத்துக்கு மெலனியின் நண்பன் வருகிறான்.
“ஆகவே, நீங்கள்தான் அந்தப் பேராசிரியர்” என்கிறான். “பேராசிரியர் டேவிட். உன்னைப்பற்றி மெலனீ என்னிடம் சொல்லியிருக்கிறாள்”
“அப்படியா. என்ன சொல்லியிருக்கிறாள்?”
“அவளை நீ செருகிக்கொண்டிருக்கிறாயென”.
அவர் நடத்தி, மெலனீ ஆஜராகும் வகுப்பறைகளுக்குள் அவளது நண்பனும் வந்து அமர்ந்துகொள்ளத்தொடங்க, பிறருக்கும் விஷயம் கசிந்திருக்க, வகுப்பறைக்குள் தொடர்ந்து சங்கடமான இறுக்கம் நிலவுகிறது. வகுப்பறைக்கு அவள் வராமல் போக, அவள் எழுதாத பரீட்சைக்கும் மதிப்பெண் போட்டு வைக்கிறார் லூரீ. சற்று நாள் கழித்து கல்லூரிக்குள் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது, குள்ளமான, ஒல்லியான, தோள்க்கூனலுடன் சிகரெட் வாசனையுடன் தனது அளவைவிடப் பெரிதான சூட் ஒன்றைப் போட்டுக்கொண்டிருக்கும் மெலனீயின் தந்தையைச் சந்திக்கிறார். “நீங்கள் படித்திருக்கலாம், அது இதுவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் செய்தது சரியில்லை.” தலையைக் குலுக்கிக்கொள்கிறான். “சரியில்லை”. பிள்ளைகளை உங்களை நம்பி அனுப்பிவிட்டுப் போனால் இப்படியா என்று சீறுகிறான். பல்கலைக்கழகத்திடம் புகார் பதிக்கப்படுகிறது. பல்கலைக்கழக விசாரணைக் குழு லூரீயை விசாரிக்கிறது. எழுதாத பரீட்சைக்கு மதிப்பெண் போட்டதைக்கூட. எதையும் படித்துக்கூடப் பார்க்காமல், “மெலனீ சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் ஒத்துக்கொள்கிறேன்” என்கிறார் லூரீ. குழுவினர் திகைக்கின்றனர். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று. முதலில் ஒரு மன்னிப்புக் கடிதம், பிறகு தன்னிச்சையான ராஜினாமா என்று நேர்க்கோட்டில் ஒரு வீழ்ச்சி நிகழவேண்டாமோ? குழு உறுப்பினர் ஃபரோடியா ரசூல் கூறுகிறாள்: “ஒப்புக்கொள்வதற்குமுன் படித்துப்பார்ப்பது புத்திசாலித்தனமில்லையா?”
“புத்திசாலித்தனமாக இருப்பதைவிட முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன” என்கிறார் லூரீ.

வெளியே போகையில் பத்திரிகையாளர்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்கிறார்கள். “Enriched” என்றுவிட்டுப் போகிறார். “Enriched” என்று மறுநாள் பத்திரிகைகள் வீறிடுகின்றன.

* * *

நாட்டுப்புறத்தில் ஒரு சின்ன நகரத்தில் பண்ணை வீடொன்றில் விவசாயம் பார்த்துக்கொண்டு ஒண்டிக்கட்டையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன் லெஸ்பியன் மகள் லூசியுடன் வாழச் செல்கிறார் லூரீ. நாட்டுப்புறம் நகரத்தைவிட வித்தியாசமாக இருக்கிறது. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகத்துக்குச் சுருங்கியிருக்கிறது. லூரீ தூங்கப்போகிறார். இரவின் மத்தியில் ஏகப்பட்ட குலைப்புக்கள் அவரை எழுப்புகின்றன. ஒரு நாய், குறிப்பாக, இயந்திரத்தனமாக இடைவெளியேயின்றிக் குரைத்துக்கொண்டிருக்கிறது; பிற நாய்கள் அவ்வப்போது சேர்ந்துகொள்கின்றன, நிசப்தமாகின்றன, பின்பு தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி மறுபடியும் சேர்ந்து குரைக்கத் தொடங்குகின்றன.
“ஒவ்வொரு இரவும் அப்படித்தானா?” என்கிறார் லூரீ, தன் மகளிடம்.
“பழக்கமாகிவிடும். மன்னிக்க” என்கிறாள். தலையை உதறிக்கொள்கிறார் லூரீ.

பிராணிகள் நலக் கூட்டமைப்பு ஒன்றை நடத்தும் பெவ் ஷா என்ற தன் கறுப்பினத் தோழியிடம் லூரீயை அழைத்துச்செல்கிறாள் லூசி. அவர்கள் செய்யும் மிருகசேவையைப் பற்றிச் சிலாகித்தவாறே வரும் லூசியிடம், “பாராட்டத்தக்கதுதான். நீ செய்வது, அவள் செய்வது எல்லாம்; ஆனால், மிருகசேவகர்களும் ஒருவகையில் கிறிஸ்துவர்கள் போலத்தானென்று நினைக்கிறேன். அனைவரும் களிப்புடனும் வெள்ளை மனதுடன் இருப்பதைப்பார்த்துச் சற்றுக்காலம் கழித்து சில வெறியாட்டங்களும் கற்பழிப்புக்களும் செய்யலாமென்று அரிப்பு எடுக்கும். அல்லது ஒரு பூனையை எத்தலாம்” என்று குரைக்கிறார்.

அப்போது, நான் வாழ்க்கையில் இன்னும் முக்கியமான விஷயங்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டுமென்று நினைக்கிறாய் நீ. ஓவியங்கள் வரைவது, ரஷ்யமொழி கற்றுக்கொடுப்பது - இந்த மாதிரி. மேம்பட்ட வாழ்க்கை அல்ல அது, ஏனெனில் மேம்பட்ட வாழ்க்கை என்று ஒன்று இல்லை. இங்கிருக்கும் வாழ்க்கை இதுதான். பிராணிகளுடனான வாழ்க்கை. பெவ் இதைத்தான் நிறுவமுயல்கிறாள், அதைத்தான் நானும் தொடரவிரும்புகிறேன். நமது சில மனித சௌகரியங்களை மிருகங்களுடன் பகிர்ந்துகொள்வதை. மற்றொரு பிறப்பின் ஒரு நாயாகவோ பன்றியாகவோ நமக்கடியில் பிறக்க விரும்பவில்லை - என்கிறாள் லூசி. மௌனமாக வீட்டுக்குத் திரும்புகிறார்கள். பிறகு லூரி, பெவ்வுக்கு உதவிப் பணி புரிய ஒத்துக்கொள்கிறார்.

பெவ் லூரீயிடம் கேட்கிறாள், மிருகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா திரு லூரீ?
“எனக்கு மிருகங்கள் பிடிக்குமாவா? நான் அவற்றை உண்கிறேன், அதனால் அவற்றை நான் விரும்பியாகவேண்டும், சில பாகங்களையாவது” என்கிறார்.

* * *

லூரீ, லூசி இருவரைநோக்கியும் இரண்டு கறுப்பின ஆண்களும் ஒரு சிறுவனும் வருகிறார்கள். அவர்களை லூசியும் அதற்குமுன் பார்த்ததில்லை. “பெட்ரஸ்” என்று தன் உதவியாளனை அழைக்கிறாள் லூசி. அவன் இல்லை. காட்டுக்குள் குடியிருப்பவர்களென்றும், ஒரு விபத்து நடந்துவிட்டதென்றும் கூறி, தொலைபேசி செய்துகொள்ளவேண்டுமென்று உதவி கேட்கின்றனர். லூரி வெளியே நிற்க, லூசி அவர்களை வீட்டுக்குள் அழைக்கிறாள். இருவரும் புகுந்துகொள்ள, கதவு சாத்தப்படுகிறது. “பெட்ரஸ்” என்று உரக்க அழைத்தவாறு லூரீ, வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார். பின்னங்கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைய, உச்சந்தலையில் அடித்து வீழ்த்தப்பட்டு பாத்ரூமுக்குள் அடைக்கப்படுகிறார். அவரது கார் சாவிகள் பிடுங்கப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை நாய்களும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. பாத்ரூம் கதவு திறக்கப்பட, வெளியே வரும் லூரீ, தரையில் சிந்தியிருக்கும் திரவத்தில் வழுக்கி விழுந்து தலைமுதல் கால்வரை நனைகிறார். தீக்குச்சி கொளுத்தப்பட்டு எறியப்பட்டு, பாத்ரூமுக்குள் மறுபடி உதைத்துப் பூட்டப்படுகிறார். தலையின் பின்புறம் பற்றி எரியத்தொடங்கி முடி பொசுங்கும் வாசம் மூக்கிலேறுகிறது. கழிப்பறைத் தொட்டிமுன் தொங்கி நின்றுகொண்டு தண்ணீரை வாரி வாரி ஊற்றி பொசுங்கும் தலையின் தீயை அணைக்கிறார். தலையின் மேல்பக்கம் முழுவதும் எரிந்துபோய் மெதுமெதுப்பாக இருக்கிறது.

“லூசி, இருக்கிறாயா அங்கே” என்று கூவுகிறார். இருவருக்கிடையிலும் நசுங்கித் திமிறும் லூசியின் பிம்பம் அவர்முன் கடந்துபோகிறது. நெளித்துக்கொண்டு அந்தப் பிம்பத்தைத் துடைத்தெறிய முயல்கிறார். லூசி வெளியே இருக்கிறாள். வீடு அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி உட்பட. மிச்சமிருக்கும் காரின் டயர்கள் துளைத்தெறியப்பட்டிருக்கின்றன. அருகிலிருக்கும் ஜெர்மானிய வயோதிகன் எட்டிங்கர் வருகிறான் உதவிக்கு. “இதனால்தான் எனது பெரட்டா இல்லாமல் எங்கும் போவதில்லை” என்று துப்பாக்கியைத் தொட்டுக்காட்டுகிறான் எட்டிங்கர். லூசி, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக் கேட்டுக்கொள்கிறாள். போகும் வழியில், “போலீஸிடம், உனக்கு நேர்ந்ததை நீ சொல், எனக்கு நேர்ந்ததை நான் சொல்லிக்கொள்கிறேன்” என்கிறாள். போலீஸிடம் திருட்டு குறித்துச் சொல்லிவிட்டு, மறுபடியும் பண்ணைக்கே போகலாம் என்கிறாள். வீட்டிற்கு வந்ததும் லூரீயும் லூசியும் பேசிக்கொள்கிறார்கள். லூசி சொல்கிறாள்: “நான் ஏன் ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டை போலீஸிடம் வைக்கவில்லை என்று தெரிந்துகொள்ள உனக்கு இஷ்டம். என்னைப் பொறுத்தவரையில், எனக்கு நிகழ்ந்தது ஒரு மிகத் தனிப்பட்ட விஷயம். வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் இது பொது விஷயமாக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில், இந்த நேரத்தில், அப்படி இல்லை. அது என்னுடைய விஷயம் மட்டுமே”
“இந்த இடம் எனில்?”
“இந்த இடம் எனில் தென்னாப்பிரிக்கா”
மேலும் சிறிது நேரம் விவாதித்தபின்பு லூரீ, “அப்படியானால் என்ன? ஏதாவது தனிப்பட்ட பிராயச்சித்தமா? தற்காலத்தில் வேதனைக்குட்படுத்திக்கொள்வதன்மூலம் கடந்தகாலத்தின் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யலாமெனப் பார்க்கிறாயா?”
“இல்லை. என்னைத் தப்பாகவே புரிந்துகொள்கிறாய். குற்றவுணர்ச்சியும் பிராயச்சித்தமும் குணரூபமானவை. குணரூபங்கள்வழி நான் நடப்பதில்லை. அதை நீ உணரமுயலும்வரை, என்னால் உனக்கு விளக்கமுடியாது” என்கிறாள் லூசி.

* * *

பண்ணை வீட்டைவிட்டு வெளியேறுமாறு லூசியைக் கேட்டுக்கொள்கிறார் லூரீ. ஒப்புக்கொள்ளமாட்டேனென்கிறாள். கற்பழிக்கப்பட்டபோது அவர்களிடம் வெறுப்பை மட்டுமே உணர்ந்தேன் என்கிறாள் லூசி, பின்னொரு தருணத்தில்: “வெறுப்பு… டேவிட், ஆண்களையும் உடலுறவையும் யோசிக்கும்போது எதுவும் என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. நீ ஒரு ஆண், உனக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஏதோ வேற்றுமனுஷியுடன் உடலுறவு கொள்ளும்போது - அவளை மடக்கும்போது, உனக்கடியில் வீழ்த்தும்போது, உன் பாரமனைத்தையும் அவள்மேல் கிடத்தும்போது - அதுவும் ஓரளவு கொலை மாதிரியே இல்லை? ஒரு கத்தியைச் சொருகுதல்; பின்பு உருவியெடுத்தல், ரத்தக் குளத்தில் உடலை மட்டும் விட்டுவிட்டு - கொலைபோலத் தோன்றுவதில்லை அது? கொலைசெய்து தப்பிப்பதுபோல் தோன்றுவதில்லை?”

தன்னைத்தானே குத்தி ரணமாக்கிக்கொள்வதென்று லூரீக்குத் தோன்றுவதை லூசி அதற்குமேல் விளக்கவோ, நியாயப்படுத்தவோ முயற்சிப்பதில்லை. தொடர்ந்து பெவ் ஷாவின் மிருகசேவைச்சாலைக்குச் சென்று, வேதனையில் வாடும் நாய்களை கருணைக்கொலை செய்ய உதவுகிறார் லூரீ. கட்டையாக, குட்டையாக, கறுப்பாக இருக்கும் அவளுடனும் உறவுகொள்கிறார். சம்பவங்கள் கல்லின்மேல் நீர்த்துளிகள்போல் உருண்டு ஓடுகின்றன. பத்தொன்பதாம் அத்தியாயத்தில், மெலனீயின் தகப்பனாரை மறுபடித் தேடிச்செல்கிறார் லூரீ. இந்த அத்தியாயத்தை விவரிப்பது அதன் இறுக்கத்தைக் குலைத்துவிடுமென்பதால் அப்படியே விடுகிறேன். தன் மகள் கற்பழிக்கப்பட்டபின், தான் ‘சீரழித்த’ பெண்ணின் தகப்பனிடம் போவது, இறுதியில் ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தையை உபயோகப்படுத்துவது என்று இருக்கும் இந்த அத்தியாயம், பெரும்பாலும் பாவமன்னிப்பு என்ற ரீதியில் இல்லாமல், பாவமன்னிப்பை இன்னும் இழிவுபடுத்திச் சாக்கடையில் தள்ளுவது போலவே இருக்கிறது. சாக்கடைக்குள் விழுந்தபின் மேலும் சாக்கடைக்கழிசல்கள் கொட்டப்படுவதுபோல, மெலனீயின் தந்தை “கடவுள் என்ற பதத்தை உபயோகிக்கட்டுமா” எனக் கேட்டு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறான்/ர் (He என்பதை அவன் என்று மொழிபெயர்ப்பதா அவர் என்று மொழிபெயர்ப்பதா என்று குழப்பம். அவன் அவர் என்பதிலுள்ள வெளிப்படை Heயில் இல்லாததாலேயே இம்மாதிரி எழுத்துக்களிலும், பழைய இருத்தலியல் எழுத்துக்களிலும் ஆங்கிலத்தில்/ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது உணரமுடியும் உள்ளார்ந்த வெறுமையைத் தமிழுக்குக் கடத்தமுடியாமற்போகிறது. மரியாதையற்ற ஒரு ஜனரஞ்சகப் பதம் கண்டுபிடிக்கப்பட்டுப் புழக்கத்தில் வரும்வரை இதுமாதிரியான எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது அவன்/அவரிலேயே தடுக்கி விழுந்து பாதிப் பற்களைப் பெயர்த்துக்கொள்ளவேண்டியதிருக்குமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவில் லூரீயை மற்றும் “அவர்” என்பது வேண்டுமென்றே செய்யப்பட்டது. அதிலும் ஒரு உள்ளர்த்தத்தைப் பார்க்கமுடியும்படி ;-) மெலனீயின் தகப்பன், ‘அவன்’ ஆகவே நின்றுபோவது, புத்தகத்தின் உரைநடையுடன் பார்க்கும்போது சரியாகவே இருக்கும், ஆனால் அதில் political correctness இருக்கிறதா, என்றால் கிடையாது).

* * *

லூசி கர்ப்பமடைகிறாள். அந்தக் கர்ப்பத்தைத் தொடர்ந்து சுமக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப்பொறுத்தவரையில், நிகழ்ந்த கற்பழிப்பு, கிட்டத்தட்ட வட்டி வசூலித்த மாதிரி. “I am marked” என்கிறாள். எனக்காக அவர்கள் மறுபடி வருவார்கள் என்கிறாள். வராவிட்டாலும், கற்பழித்த மூவரில் ஒரு சிறுவன், லூசியின் உதவியாளன் பெட்ரஸ் வீட்டிலேயே வந்து தங்குகிறான். பெட்ரஸ், அவனைச் சொந்தக்காரன் என்கிறான். இறுதியில், பெட்ரஸ் ஒரு தீர்மானத்தைச் சொல்கிறான். கறுப்பினப் பெட்ரஸ், லூசியைத் தனது மூன்றாவது மனைவியாக ஏற்றுக்கொள்வதான அபிப்ராயத்தை முன்வைக்கிறான். அவனுக்குத் தனது பண்ணை மேல்தான் கண் எனும் லூசி, அதற்கு ஒத்துக்கொள்கிறாள். அந்தத் ‘திருமணம்’ அவளுக்கு ஒரு அரண் போல இருக்கும், என்பதை இறுதியில், ANCயினால் ‘இனவெறி வாதம்’ என்று குற்றம்சாட்டப்பட்ட பின்வரும் உரையாடல்களில் (பக்கம் 205) பேசிக்கொள்கிறார்கள். லூசியைப்பற்றிக் கூறுகையில்
“எவ்வளவு அவமானகரமானது” என்கிறார் லூரீ “எவ்வளவு உயர்ந்த நம்பிக்கைகள், இப்படித்தான் முடியவேண்டுமா”
“ஒத்துக்கொள்கிறேன், அவமானகரமானதுதான். ஆனால், முதலிலிருந்து தொடங்குவதில் ஒரு நல்லதும் இருக்கக்கூடும். ஒருவேளை அதைத்தான் நாம் ஒத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலிலிருந்து தொடங்குவது. ஒன்றுமில்லாததிலிருந்து. ஒன்றுமேயில்லாததிலிருந்து. ஆயுதங்களின்றி, சொத்தின்றி, உரிமைகளின்றி, மரியாதையின்றி”
“ஒரு நாயைப் போல″
“ஆம், ஒரு நாயைப் போல″

* * *

ஒரு வெள்ளைக்காரனும் அவனது bleeding heart மகளும் செயற்கையாக முன்வைக்கும் ‘தியாகக் கீற்றுக்களுக்குள்’ளும், குட்ஸீக்குள்ளும் ஒளிந்திருப்பது “ஆப்பிரிக்கர்கள் வன்முறையால் வெள்ளையர்களை நசுக்குகிறார்கள்” என்ற அடிப்படைவாத வெள்ளை இனவெறி என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு 1999ல் குட்ஸீக்கு வழங்கப்பட்டபோதுகூட தாபோ பெகி தலைமையிலான ANC அரசு அதை உற்சாகமாக வரவேற்கவில்லை என்றும், “நோபல் பரிசு, வெள்ளையர்களின் கலையுணரும் தன்மையை அளவுகோலாகக் கொண்டு அளிக்கப்படுவதால் அதற்குத் தரப்படும் மரியாதை அர்த்தமற்றது” என்ற ரீதியிலும் விமர்சனங்கள் இருந்தன. நோபல் பரிசு கிடைத்த காலகட்டத்தில் குட்ஸீ ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். பேட்டிகளே பெரும்பாலும் அளித்திராத, வெகு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த குட்ஸீயும் பேராசிரியராக வேலைபார்த்தவர் என்பதால், லூரீயே குட்ஸீதான் எனப்படும் விமர்சனங்களும் தவிர்க்கமுடியாமல் இருக்கின்றன. சமீபத்தில் இதைத் திரும்பப் படித்ததால் கோர்வையாக எழுதமுடிந்தது, Waiting for the barbarians, Life and times of Michael K போன்றவற்றையும் திரும்பப் படித்து இதனுடனான கோர்வையாக எழுதினால் நல்லபடியாக இருக்குமென்று நினைப்பதுண்டு - தினமும் ஒருமணிநேரம் படிப்பது நன்றாகவே இருந்தாலும், அங்கங்கே குறித்து வைத்ததை வைத்து இந்தமாதிரி கோனார் நோட்ஸ் பதிப்பிப்பதற்குத் தட்டச்சுவதுதான் மகா கடியாக இருக்கிறது. நான் வாசித்த சில படைப்புக்களையும் கட்டுரைகளையும் வைத்து குட்ஸீயிடம் தென்படுவது conservatism என்பதைவிட, ஒரு placid narration என்ற ரீதியில்தான் இருக்கிறது. இந்தமாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இறுக்கமான எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம், இந்த வெற்று எளிமை எத்தனை கட்டங்களில் நம்மை முட்டாளாக்குகிறதோ என்ற ஐயம் ஏற்படுத்தும் ஈகோ அரிப்பு தவிர்க்க இயலாதது. என் பார்வை வேறாக இருக்கலாம். சிலசமயம் “பாத்திர வார்ப்பு சரியாகத் திரண்டு வரவில்லை” என்ற ரீதியிலான குட்ஸீயின் சில ஈய விமர்சனங்களையும் படித்து வந்திருப்பதால், ஒரு அபிப்ராயம் உருவாக்குவதைவிட, புத்தகத்தைச் சுருக்கமாக அறிமுகமாவது செய்யலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு. முன்பு வெங்கட்டின் பதிவு ஒன்றின் பின்னூட்டத்திலும் இதைக் குறிப்பிட்டிருந்தேன். ருஷ்டீயின் Moor’s Last Sigh புத்தகத்தைப்பற்றிய கட்டுரையொன்றில் குட்ஸீ, “பால் தாக்கரே போன்ற கோமாளிகளைத் தவளை அரசன் என்று, Raman Fielding” என்று நக்கலடித்திருப்பதும், பம்பாய் அரசியல் நிலவரம் பற்றியும் படிக்கும் மேற்கத்திய வாசகன் அதில் எவ்வளவு தூரம் ஆழமுடியும் என்று தெரியவில்லை” என்றிருப்பார். வெளிநாட்டுப் படைப்புக்கள் பெரும்பாலானவற்றுக்கு அதே நிலைமைதான் எனினும், ருஷ்டீ அதில் Madhuri Dickshit என்று மாதுரி தீட்சித்தை நக்கலடித்திருப்பார் - வெளியாட்களுக்கு மாதிரி தீட்சித் என்ன முக்கியம் எனினும், அனைத்தும் கலாச்சாரமே. ருஷ்டீயிடம் மிகத் திறமையாக வெளிப்படும் palimpsesting போன்ற பல்வேறு அடுக்குக் கதைகள் மீது குட்ஸீக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருப்பதாக நான் படித்தவரையில் தெரியவில்லை. “நல்ல அபிப்ராயம்” என்பது எனது சோம்பலில்/தூக்கத்தில் வரும் வார்த்தைகள் - வேறு உபயோகித்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு பேராவது இப் புத்தகத்தைப் படித்துப்பார்த்தால் ஏதோ எழுதியதற்குப் பிரயோஜனமிருக்கிறதென்று நினைத்துக்கொள்ளலாம். முடிந்தமட்டும் சொந்த அபிப்ராயங்களைத் தவிர்க்க முயன்றிருக்கிறேன். அதுதாண்டியும் ஏதாவது துருத்திக்கொண்டிருந்தால் கண்டுகொள்ளாதீர்கள், Goodnight!!

Disgrace - J.M.Coetzee, Penguin Books 1999, 220 பக்கங்கள்.
படங்கள் நன்றி: நோபல், Topwritercorner

-->

Posted in பொது, .புனைவு | Comments Off

மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம்

November 20th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: யளனகபக கண்ணன்

“A good traveler has no fixed plans, and is not intent on arriving.” ~LaoTzu (570-490 BC)~.

Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட ‘இன்பச்சுற்றுலா’ வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் ‘தொத்திக் கொண்டு’ போக முனைய மாட்டேன். “Unreservedல் போகும் அனுபவமே தனி” என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க முடியாமல் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் பிடித்து, ஹிண்டு பேப்பர் இரவல் வாங்கிக் கக்கூஸ் அருகே தரையில் விரித்து இரவெல்லாம் முட்டைக் கட்டிக்கொண்டு தூங்க முயன்றேன். நல்ல அனுபவம் தான்; ஆனால் இதை நான் அவ்வளவாக ரசித்ததாகச் சொல்ல முடியாது. இது இப்படியென்றால், இரவு நேர பஸ் பயணம் வேறொரு வினோத அனுபவம். அரசு பஸ்களில் என்னை மாதிரி நீளமான ஆசாமிகள் காலை ‘S’ அல்லது ‘W’ போல மடக்கி வைத்துக் கொண்டு தான் உட்காரவேண்டும். அதுவும் வழியோர இருக்கையானால், அரைப் பிருஷ்டத்தில் balance செய்து தான் போகவேண்டும். களைத்து, அயர்ச்சியுடன் தூக்கம் தள்ளும் இந்த இரவுப் பயணத்தில், வர்ணாசிரம பேதங்கள் இல்லாமல் பரட்டைத் தலையுடனும், சிவந்த கண்களுடனும் எல்லார் மேலும் எல்லாரும் தூங்கி விழலாம்! அர்த்த ராத்திரியில் அத்துவானக் காட்டில் சூடான, இனிப்பென்ற சுவை மட்டும் தெரியும், டீ போலக் காணும் ஒன்றைக் குடித்து (அது எப்படியோ, சிலபேர் அந்த வேளையில் தான் புரொட்டாவெல்லாம் தின்கிறார்கள்)மேலும் தூங்கி சாமி ஆடலாம். ஒன்றும் தெரியாமல் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் போகும் ரயில் பயணத்தைவிட, வாழ்க்கையில் நாம் நம்முடனேயே கழிக்கும், ஆழ்ந்து சிந்திக்கும் சில அந்தரங்கமான பொழுதுகள் இந்த வினோதப் பயணங்களிலேயே வாய்க்கின்றன என்பது மட்டும் உண்மை.

***

எனக்கு மிகவும் பிடித்த ஒரு travel நிகழ்ச்சி lonley planet. இப்போது globe trekker என்ற பெயரில் வருகிறது. இதில் Justine Shapiro பயணம் போகும் நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்ப்பேன். Ian wright எனக்குப் பிடித்த மற்றொரு ‘பயணி’. “பயணத்தின் நோக்கம் புதிய புலங்களைக் கண்டு, அங்கு வழங்கிவரும் கலாச்சாரம், மற்றும் வாழும் மனிதர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதே என்று நினைக்கிறோம், ஆனால் நடப்பது என்னவோ, பயணம் போகும் ஒருவர் தன்னைப் பற்றித் தானே தெரிந்து கொள்வது தான்” என்கிறார் Shapiro. நான் போன சில சொற்பப் பயணங்களில் இருந்தும் இதைக் கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன். ‘சே’ வும் அனுபவித்திருக்கிறார் என்பது இந்த வரிகளில் இருந்து தெரிகிறது: (தமிழாக்கம் அடியேன்) “இந்தக் குறிப்புகளை எழுதிய நபர் தன் காலடி அர்ஜண்டீன மண்ணைத் தொட்டவுடன் மறைந்துவிட்டார். இக்குறிப்புக்களை மெருகூட்டி, ஒழுங்குபடுத்தும் இந்த நபராகிய நான் அப்போதிருந்த நானில்லை” இப்படித் துவங்கும் குறிப்புகளில் இருந்தே இதன் உரைநடையின் மாதிரியும் தெரிந்து விடுகிறது.

அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க மோட்டார் சைக்கிளில் கிளம்பும் இரு வாலிபர்கள் சந்திக்க நேரிடும் அனுபவங்கள் ‘கண்டது கண்டபடி’ நேரடியாகத் தரும் குறிப்புகள் இவை. பிற்காலத்தில் ‘சே’ ஆகப்போகின்ற ஆளுமையின் வித்து இங்கிருந்து தான் முளைவிட்டு அரும்புகிறது. இதனாலேயே இந்தக் குறிப்புகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், எனக்கு இவை அந்த context ல் இல்லாவிட்டாலும் அருமையான வாசிப்பு அனுபவம் தருகின்ற ஒரு படைப்பாகத் தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த, தொப்பியுடன் சுருட்டும் கையுமாய் ஒரு ‘சே’ வை மனத்தில் நிறுத்தி, இக் குறிப்புகளின் வரிகளில் அவரைத் தேட முயற்சிக்க வேண்டியதில்லை(தேடினால் கிடைப்பதும் சந்தேகமே).

திட்டமிடப்படாத பயணங்கள் பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை, சந்தோஷங்களை, துக்கங்களைப் பொதிந்து வைத்திருந்து, அப்பொதியில் இருந்து எதிர்பாராதவொன்றை அவ்வப்போது நம்மெதிரே வீசுகிறது. ‘சே’ இந்தப் பயணத்தில் இருந்து தெரிந்து கொள்வது வாழ்க்கையும் அவ்வாறான ஒரு திட்டமிட முடியாத பயணமே என்பது தெரிகிறது. Forrest Gump இன் தாயார் சொன்னது போல “Life is like a box of chocolates. You never know what you are going to get” என்பது வாழ்க்கைக்கும், பயணத்திற்கும் எவ்வளவு சரியாய்ப் பொருந்துகிறது! சிலி நாட்டின் வடபகுதியிலுள்ள பாலைவனத்தைத் தவிர்க்க வேண்டிக் கடல் மார்கமாக செல்லும் ‘சே’ ஒரு அமைதியான இரவில் கப்பலில் கடலைப் பார்த்து மனத்தை கடலுடன் அலையவிடுகின்றார். அப்போது இப்படிப் பதிகிறார்: “There we understood that our vocation, our true vocation, was to move for eternity along the roads and seas of the world. Always curious, looking into everything that came before our eyes, sniffing out each corner but only ever faintly - not setting down roots in any land or staying long enough to see the substratum of things”. ‘வாழ்கைப்பயணம்’ எவ்வளவு “க்ளிஷேடா”க இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மானுடம் என்பது புலம், இனம், மொழி என்ற வட்டங்களைத் தாண்டி மிளிர்வது; இதுவே நாளைய உலகின் வழிகாட்டியாகப் போகிற நம்பிக்கை நட்சத்திரம். சிலி நாட்டில் அடுத்த வேளை உணவு மட்டுமே இலக்காக, உயிரையும் பணயம் வைத்து உழைக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் இருந்து, பெருவில் பிற்பட்ட நிலையில், முன்னாளைய பெருமைகளை இழந்து, “வாழ்க்கையே மாற்ற முடியாத ஒரு பழக்கமாய் ஆகிவிட்ட(அதனால மட்டுமே வாழ்கிற)” இந்தியப் பழங்குடி மக்கள், மற்றும் வெனிசுவேலாவின் குஷ்ட நோயாளிகள் வரை நாளை என்ற தினமே இலக்காய் வாழும் (”whose fartherest horizon has always been tomorrow”) விளிம்பு நிலை மனிதர்கள், அவர்களின் தினசரி அவலங்கள் ‘சே’ வின் மனத்தைத் தொடுகிறது. ஆயிரத்தில் ஒருவனுக்கே தன்னை அறியவேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது; இப்படியான ஆயிரம் பேர்களில் ஒருவனுக்கே அது சித்திக்கிறது என்பது போல அர்த்தம் வரும் சுலோகம் கீதையில் உள்ளது. இம்மாதிரியான மனிதர்களின் நிலைமை (புலம், இனம், மொழி என்ற கட்டமைப்புக்களைத் தாண்டி) எத்தனை பேர்களின் மனத்தில் பதிகிறது? அப்படியே பதிந்தாலும் எத்தனை பேர்களுக்கு அது செயலைத் தூண்டுகிறது? அதில் எத்தனை பேர்கள் ‘சே’ மாதிரி வெற்றியடைகிறார்கள்?

மேம்போக்காகச் சொல்கிற மாதிரியான, சார்பு நிலையற்ற ஒரு பார்வையாளரின் கோணத்தில் எழுதிய நடையானாலும், சில வரிகள் நம்மைச் சிந்தனையில் கட்டிப் போட்டுவிடுகிறது. எழுத்துத் திறமை இயற்கையாகக் கைவரப் பெற்றவராகத் தெரிகிறார் ‘சே’. தென்னமெரிக்காவின் அழகைச் சித்தரிப்பதாகட்டும், அவலங்களைச் சொல்வதாகட்டும், ஆங்காங்கே சிக்கல்களில் மாட்டிக் கொண்டு உடனே ஊரை விட்டு ஓடும் சுய பிரதாபங்களாகட்டும் - தொய்வில்லாத, கற்பனைவளம் மிகுந்த, சாமர்த்தியமான, சரளமான நடை எல்லாவற்றையும் விட மிஞ்சி நிற்கிறது. இன்கா வின் முக்கியத்துவம் வாய்ந்த மாச்சு-பிச்சு பற்றிப் பேசும்போது மட்டும், விவரணைகள் அதிகம் தெரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் குறிப்புகள் அங்கே ஒரு செய்தித் தாளில் பிரசுரம் ஆனதாகவும் தெரிகிறது. மாச்சு-பிச்சு வை உலகிற்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க அகழ்வாராய்சியாளர் ஹிரம் பிங்கம்மின் விளக்கங்கள் குறித்து தமக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் பதிந்துள்ளார். (சமீபத்தில் ஹிந்துவில் இந்தக் கட்டுரையைப் படித்து, ‘சே’ வின் கருத்துடன் பொருத்திப் பார்த்தபோது, இவைகளின் ஒற்றுமை ஆச்சரியமாக இருந்தது) . தாம் பயணம் செய்த நாடுகளின் அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, அங்கு கிடைக்கும் மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் பற்றிய விவரங்களில் ஆர்வம் காட்டினாலும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள், உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவது என்பவைகளைக் குறித்தும் கூரிய பர்வைகளை முன்வைக்கிறார். 1950 களின் தென்னமெரிக்கச் சமூகச் சரித்திரத்தில் இருந்து தொகுத்த ஒருசில காட்சிகளாகவும் எனக்கு இப்புத்தகம் ஆர்வம் அளித்தது.

இப்பயணத்திற்கு நடுவே இவருக்கு 24 வயது நிரம்புகிறது. எனக்கு 24 வயது ஆனபோது சனிக்கிழமையும் அலுவலகம் வந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருந்தேன். 40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ! 24 வயதில் இவருக்கு இருந்த கருத்துச் செறிவும், மனிதாபிமானமும் இன்னும் எனக்கு இல்லை! இதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

நிறைகளை மட்டுமே சொல்லி, குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருப்பது நல்ல விமரிசனம் ஆகுமா? எனக்குத் தெரியாது. படித்து முடித்தவுடன் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதலில் எழுதிவிட்டேன். ‘என்னை பாதித்தது’ என்கிற ஒன்று போதுமே. இன்னும் பிரிக்கப்படாத உறைகளில் தூங்கும் புத்தகங்களில் இருந்து, என்றோ வாங்கி வைத்த இதை உடனே படிக்க ஆர்வத்தைத் தூண்டிய டிசே வின் இப்பதிவுக்கு நன்றி. இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. சீக்கிரமே பார்த்துவிடுவதென்று இருக்கிறேன்.

The Motorcycle Diaries : A Latin American Journey by Ernesto Che Guevara , Ocean Press, 2003 , 175 பக்கங்கள்

-->

Posted in பொது, பிற மொழிகள், .புனைவு | Comments Off

பாலோ கோய்லோ (Paulo Coelho)

October 19th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பொன்ஸ்

தி அல்கெமிஸ்ட்(The Alchemist) என்னும் “இரும்பைப் பொன்னாக்குபவனின்” கதை மூலம் புகழடைந்த பாலோ கோய்லோ (Paulo Coelho) எனக்கு அறிமுகமானது தற்செயல் தான். புது வேலை தேடும் போது, என்னவெல்லாம் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்று பேசப் போக, சக அலுவலகத் தோழி வாழ்க்கையின் பொருளை (அர்த்தத்தைத்) தேடும் இளைஞனைப் பற்றிய இந்தக் கதையைக் கொடுத்தார். அதிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட பாலோவின் எல்லா நாவல்களையும் நான் படித்திருக்கிறேன்.

பாலோவின் நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.

1. அமெரிக்கப் பின்னணியிலேயே எழுதப்பட்ட ஆங்கில நாவல்களிலிருந்து வேறுபட்டு பாலோவின் நாவல்கள் ஐரோப்பியாவின் அதிகம் கேள்விப்படாத பக்கங்களைப் பேசுவது வழக்கம் - அதிலும் அமெரிக்கக் கண்ணோட்டத்தில் இல்லாமல் ஐரோப்பியாவைப் பேசும்.

2. எல்லாக் கதைகளும், ஆற்றொழுக்கான இயல்பான நடையில், அவருடைய சொந்தக் கதை தானோ என்று எண்ணும் அளவுக்கு ஒன்றிப் போய் எழுதி இருப்பார். வாசகனின் கூறுகளையும் சில(பல) இடங்களில் கதை நாயகனிடம்/நாயகியிடம் பார்க்க முடியும்.

நான் படித்த நாவல்களில் எனக்குப் பிடித்த பக்கங்களை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன். திறனாய்வு என்று சொல்ல முடியாது. திறனாயும் அளவுக்குக் குறைகள் பிடிபடவில்லை.

Eleven Minutes

பிரேசிலின் குக்கிராமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண் மரியா, காதலுடனான தன் ஆரம்பத் தோல்விகளால் மனமுடைந்து காதல் என்பதான ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை என்று முடிவெடுக்கிறாள். பணம் தான் முக்கியம், காதல் அன்பு பாசம் என்பதெல்லாம் வெறும் அடிமைத்தனமே என்னும் எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டுத் தப்பிப்பது தான் பணம் சேர்க்க ஒரே வழி என்றும் கண்டு கொள்ளுகிறாள்.

சுற்றுலாப் பிரயாணி ஒருவனின் உதவியால் ஜெனிவா செல்லவும் அங்கு மாடலாகிச் சம்பாதிக்கலாம் என்றும் எண்ணி வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். பல நாட்கள் ஆகியும் அவளை மாடலாக வைத்துப் படம் எடுக்கவோ, விளம்பரப்படம் செய்யவோ யாரும் முன்வரவில்லை. கொண்டுவந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்த பொழுது, தோற்றுப் போய் ஊர்திரும்பப் பிடிக்காமல் இப்போதைய ஆடம்பரமான வாழ்க்கையையும் விட முடியாமல், ஏற்கனவே உணவு பரிமாறும் வேலை மட்டும் செய்யும் உணவு விடுதியில் விபச்சாரியாகவும் தொழில் தொடங்குகிறாள்.

தினசரி பார்க்கும் ஆண்கள், அவர்தம் பயங்கள், ஆசைகள், தயக்கங்கள், கஷ்டங்கள் இவையெல்லாம் சேர்ந்து வெறும் பதினோரு நிமிடத்தில் முடிந்துவிடக் கூடிய உறவுக்காக, பல வருடங்கள் சேர்ந்து வாழ்வது, குழந்தை, குடும்பம், பொறுப்பு, வேலை, எல்லாமே வீணான ஒன்று என்னும் எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.

“உண்மைக் காதல் என்ற ஒன்று உலகத்தில் இல்லை. நான் நானாக இருக்க அனுமதிக்கும் அடிமைத் தனமில்லாத அன்பு கிடைக்க வாய்ப்பே இல்லை” என்று மரியா முடிவெடுக்கும் போது தான் அவள் எதிர்பார்த்த அந்தக் காதலனைப் பார்க்கிறாள். இவன் எனக்கானவன் என்று மரியாவும் அந்த இளைஞனும் உணரும் போது, அந்தப் பதினோரு நிமிடங்களைப் பற்றிய அவளது பார்வை மாறுகிறது. பாசாங்குகளற்ற உறவுக்கும் அடிமைத்தனமில்லாத அன்புக்குமான வழி அவளுக்குத் திறக்கிறது.

வெரோனிகா இறக்கப் போகிறாள்

வெரோனிகா தன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் அழகான இளம்பெண். சொந்த சம்பாத்தியம், நண்பர்கள், இயல்பான வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் அந்த முடிவுக்கு வருகிறாள் - தற்கொலை.

ஒரே மாதிரி சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை எப்படியும் ஒரு நாள் முடியப் போகிறது. வயதாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றே இறந்துவிடலாமே. அவள் அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் அவளது இறப்பு எந்தத் துன்பத்தையும் தராது. அருகில் இல்லாத அம்மாவும் கொஞ்ச நாள் வருந்துவாள். எப்படியும் ஒரு நாள் இறக்கவேண்டியவள் தானே வெரோனிகா. அது ஏன் இன்றாக இருக்கக் கூடாது?

இப்படி ஆரம்பிக்கும் Veronika Decides to Die, அந்நாளைய யூகோஸ்லோவியாவிலிருந்து பிரிந்து வந்த ஸ்லோவினியா என்னும் நாட்டைக் கதைக் களமாகக் கொண்டிருக்கிறது.

தூக்க மாத்திரைகளை விழுங்கி இறக்க முடிவெடுக்கும் வெரோனிகா கடைசி கடிதம் என்று யாருக்கு எழுதுவது என்று தெரியாமல், அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையாசிரியருக்கு எழுதுகிறாள். அந்தக் கட்டுரை “ஸ்லோவினியா என்பது எங்குள்ளது?” என்று ஒரு நாட்டின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு தொடங்குகிறது.

பாதி எழுதுகையில் மயங்கிவிடும் வெரோனிகா ஸ்லோவினியத் தலைநகரமான ஜூப்ளிஜானாவின் புகழ்பெற்ற மனநல விடுதியில் கண்விழிக்கிறாள். - பத்திரிக்கைக் கட்டுரைக்காக உயிர்விடத் துணிந்தவளை வேறெங்கே அனுமதிப்பார்கள்?

இன்று காப்பாற்றப்பட்டாலும், இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகும் உண்மையை வெரோனிகாவிடம் சொல்கிறார் தலைமை மருத்துவர்.
உயிரின் மீது எந்த ஆசையும் இல்லாமல், அதற்கு முன்பே இறந்து போக என்னவழி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வெரோனிகாவின் வாழ்விலும் அன்பு என்னும் அமுத சுரபி குறுக்கிடுகிறது, மற்றொரு மனநோயாளி என்று இல்லத்தில் வசிக்கும் இளைஞன் மூலம்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்து, பணம் சம்பாதிக்கும் ஆர்வமே இல்லாத இந்த இளைஞன் ஆசிரியரின் மறுபதிப்பே. யாரிடமும் பேச மறுக்கும் இந்த இளைஞன், வெரோனிகாவின் இனிய பியானோ இசைக்கு ரசிகனாகி, பின்னர் வெரோனிகாவின் பாசாங்கற்ற நேசத்துக்கும் உரித்தாகிறான். பலகாலமாக வெளியுலகில் இருவரும் தேடிக் கொண்டிருந்த அந்த அன்பு அவர்களுக்கு ஒரு மனநோயாளிகளின் காப்பகத்தில் கிடைக்கிறது..

இந்தக் கதையின் முதல் பகுதி என்னைக் கவர்ந்தது. வெரோனிகாவின் தற்கொலை முயற்சியும், அதுசமயம் அவளுடைய எண்ண ஓட்டங்களும், ஆசிரியர் அழகாக விவரித்திருப்பார். இறுதியில், வேறு யாருடனும் இல்லாத வகையில் கதை நாயகனுடன் வெரோனிகா தான் தானாக இருக்கும் சில நிமிடங்களும் மிக அழகான ஆர்ப்பாட்டமில்லாத வர்ணனையாகும்.

பொதுவாக, பாலோவின் கதைகளை, அடுத்து என்ன ஆகப் போகிறது என்று ஊகிக்காமல், கதையின் போக்கிலேயே போய்ப் படிக்க வேண்டும்.
எல்லாக் கதைகளுமே இது மாதிரி பாசாங்கில்லாத அன்பையும் அடிமைத்தனமில்லா நேசத்தியும் அடிப்படையாகக் கொண்டது தான். இன்னும் எனக்குப் பிடித்த மற்றொரு கதை O Zahir.

கதைகளைப் படித்துப் பல நாட்கள் ஆன போதும் அருளின் இந்தப் பதிவும் அதில் குழலியின் பின்னூட்டங்களும் இந்தக் கதைகளை மீண்டும் நினைவுப்படுத்தி விட்டன..

இந்தக் கதைகள் படிக்கையில், மற்றவர் மீதான நமது அன்பை நிச்சயம் ஒருமுறை மீள் பரிசோதனை செய்யத் தூண்டும்.

-->

Posted in பிற மொழிகள், .புனைவு | Comments Off

Reference Book list from ‘Ten Thousand Miles Without a Cloud’ by Sun Shuyun

August 28th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி

Alien, Charles, The Buddha and the Sahibs: The Men Who Discovered India’s Lost Religion, London: John Murray, 2002.

Almond, Philip C., The British Discovery of Buddhism, Cambridge: Cambridge University Press, 1988.

Armstrong, Karen, Buddha, London: Weidenfeld & Nlcolson, 2000.

Bagchi, P. C., India and China: A Thousand Years of Cultural Relations, Bombay, 1950, Westport, CT.: Greenwood Press, reprint, 1971.

Basham, A. L., The Wonder That was India, New Delhi: Rupa & Co., by arrangement with Macmillan, 3rd revised edn (1967), 34th impression, 1999.

Bayly, Susan, Caste, Society and Politics in India: From the Eighteenth Century to the Modern Age, New Cambridge History of India, Vol. 4, No. 3, Cambridge: Cambridge University Press, 1999.

Beal, Samuel, trans., Si-yu-ki, Buddhist Records of the Western World, Translated from the Chinese of Hiuen Tsiang (A.D. 629), 1884, Delhi: Oriental Books Reprint Corp., 2 vols, 1969.

Beal, Samuel, trans., Hui Li: The Life of Hiuen-Tsiang, 1911, Delhi: Munshiram Manoharlal, 2nd edn, 1973.

Buddhist Association of Canada, The Buddhist Liturgy, Ontario, 1983

Buddhist Text Translation Society, The Sixth Patriarch’s Sutra, San Francisco, CA: Sino-American Buddhist Association, 2nd edn, 1977.
Read the rest of this entry »

-->

Posted in பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

« Previous Entries