-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

என் பெயர் ராமசேஷன் - முன்னுரை 2

June 28th, 2005 by மீனாக்ஸ்

(என்னிடமிருக்கும் புத்தகம்: உயிர்மை பதிப்பக வெளியீடு, இரண்டாம் பதிப்பு டிஸம்பர் 2003, ரூ. 100)

ராமசேஷன், அவனது நண்பர்கள் ராவ், மூர்த்தி மற்றும் ராவின் தங்கை மாலாவுடன் சினிமாவுக்குப் போனான். அன்று தான் மாலாவை முதன்முதலாகச் சந்தித்தான்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் - படித்திருந்த அவனுக்கு, அப்போது தான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது.

அவனுக்கு என்னவோ என்னவோ என்னவோ செய்தது.

அதற்கு முன் அவனுக்கு மாலாவின் வயதையொத்த பெண்களிடம் பேசிப் பரிச்சயமில்லை. பத்து வருடங்களாக இரண்டாங்கிளஸுக்குப் பாடம் எடுத்து விட்டு திடீரென்று ஆறாங்கிளாஸுக்குப் பாடம் எடுக்க அனுப்பப்பட்ட உபாத்தியாயரைப் போல, ரசிக ரஞ்சனி சபை, மியூஸிக் அகாடமி மெம்பர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டுத் திடீரென்று கொலம்பியா சர்வ காலா சாலை மாணவர்களெதிரே அனுப்பப்பட்ட நாடகாசிரியரைப் போல, அவன் உணர்ந்தான். (பக்கம் 18-19)

பக்கம் 23-ல் எல்லோரும் திரையரங்கினுள் நுழைந்து விட்டார்கள். இந்தக் குழுவில் ராவும் மூர்த்தியும் மாலாவும் பல நாள் அறிமுகம் கொண்டவர்கள். ராமசேஷன் புது ஆள்.

முதலில் நான், என்னையடுத்து ராவ், பிறகு மாலா, பிறகு மூர்த்தி என்று உட்கார்ந்தோம். ஆனால் மூர்த்தியிடம் உட்காரப் பிடிக்காமல் என்று நினைக்கிறேன், ராவுடன் இடம் மாற்றிக் கொண்டாள். என்னருகில் வந்து விட்டாள். என் இதயம் படபடத்தது. உடல் பரபரத்தது.

ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற்போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவுமே நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒரு வேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்துக்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொட வேண்டும். அல்லது பேசாமலிருக்க வேண்டும்.

ஆனால் என் தைரியத்தின் எல்லை, கையைத் தொடுவதாகத் தான் இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இந்தத் தைரியமும் தணிந்து விட, நான் என கையை விலக்கி வைத்துக் கொண்டேன்.

அப்போது எதிர்பாராதது நடந்தது. மாலா என் கால் மீது தன் காலினால் ஒரு இடி இடித்தாள். இது தற்செயல் அல்ல என்பதை உணர்த்துவதற்காகப் போல சில கணங்களுக்குப் பிறகு மறுபடி…

எனக்குத் தைரியம் திரும்பியது. என் கை மீண்டும் அவள் கையுடன் மோதியது. உரசியது. அதன் வழவழப்பை, உருண்டையை, மெத்தென்ற தன்மையை, உஷ்ணத்தை - இவையெல்லாவற்றையும் நான் முதன் முறையாகக் கண்டுபிடித்து அவற்றில் திளைத்தேன்.

ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் (Five Point Someone) என்று ஒரு ஆங்கில நாவல். சேத்தன் பகத் எழுதியது. டெல்லி ஐ.ஐ.டி.யில் படிக்கிற மூன்று மாணவர்களைப் பற்றிய கதை. மூன்று பேரும் சிஜிபிஏ-வில் பத்துக்கு ஐந்து எடுத்திருக்கிற மிகச் சுமாரான மாணவர்கள். ஐ.ஐ.டி. நிலவரப்படி ‘யாரோ முகமில்லாத சிலர்’.

அதில் ஹரி என்பவன் தனது மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறைத் தலைவரான செரியனின் மகளோடு பழக்கம் வளர்த்துக் கொள்கிறான். அவள் பெயர் நேஹா. தன் அப்பாவிற்கு இவன் மாதிரி ஆட்களைப் பிடிக்காது என்பதே நேஹாவுக்கு அவனைப் பிடிக்கக் காரணம். அவர்கள் இருவரும் ஒரு நாள் சினிமாவிற்குப் போகிறார்கள்.

I met Neha at Priya Cinema a week after the FluMech class. I would have said I met my girlfriend but the damn problem was I was still not sure. I had known her for over a year, but she called me different things depending on her mood. First, I was just a friend. Then I was a good friend, then a friend who was special, then really-really good and special friend or some such crap. For her, calling someone a boyfriend was a big thing. Her dad had made her promise that she would never have a boyfriend, and she wanted to keep it. Of course it did not prevent her from watching movie with me hand in hand every two weeks for over a year.

The movie was Total recall, another sci-fi action crap.That’s the thing about English theatres in Delhi. They either show action or adult movies. I don’t mind the latter except that you can’t really take a girl to them. Especially these really nice and good-Indian-traditional girls like Neha. So you have the choice of sci-fi action nonsense or a Hindi movie. No self-respecting girl will watch a Hindi movie on a date. Hence there I was again, to watch Arnold flex muscles and blo up planets.

“You like sci-fi,” she said as she took her seat.

“I do,” I said. What choice did I have anyway?

“Typical IIT engineer.”

Yeah right. Typical IIT engineers, my girl, don’t skip design class to watch stupid movies.

Neha held my hand as the movie began. She had grown comfortable with doing this and I could not hope for anything more. I remembered my last conversation with Ryan. Could Neha also secretly want to do more than hold hands? Could I just ask her? Should I just make a bold move?

They go to Nirula’s (restaurant) after the movie for a meal. She teases him a bit by saying she likes one of the professors at the institute…

“Hey, are you getting jealous?”

“No, why shoudl I get jealous? I’m not your boyfriend.”

Neha laughed really hard. Jokes only she finds funny. Stupid woman, I feel like cutting off her cute lock of hair.

“I am just kidding, silly,” she said. “In any case my dad will kill me for that. He hates Prof Veera anyway. But it is nice to see you all worked up.”

“I’m not.”

She held my hand, though she hadn’t stopped laughing. What is so funny to women all the time? And why do I still find her so beautiful? And why the hell can’t I kiss her?

She stopped laughing and got back her composure. “Sorry, Hari. Don’t feel bad, you are my sweetest little special friend.”

Now what is that? Another title for the fortnight?

She bent forward to kiss my cheek. Now is my chance, I thought. Give her the illusion that you don’t care, then as soon as her mouth comes to the cheek jerk once and move your lips there instead. This is the only way to kiss good Indian women, Ryan told me.

(pages 85-90)

மாலாவுக்குப் பதில் நேஹாவோடு ராமசேஷன் சினிமாவுக்குப் போயிருந்தால் என்ன செய்திருப்பான்? ஏதாவது செய்திருப்பானா?

நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டுமென்ற அந்தத் தருணத்தின் மனதின் அலைபாய்தல்கள், எதிர்பார்ப்புகள் வயதின் வெளிப்பாடா? அல்லது வேறேதுமா? புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிடப்படும் சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பு இது தானா?

யார் இந்த ராமசேஷன்? அடுத்த பதிவில் அவனை இன்னும் கொஞ்சம் திறந்து பார்க்கலாம்.

-->

Posted in அலசல்-பழையது | No Comments »

என் பெயர் ராமசேஷன் - முன்னுரை 1

June 27th, 2005 by மீனாக்ஸ்

ஐம்பது வயதில் சில ஆண்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாதது போல் இருக்கும். அன்றாடம் ஆர்வமாகப் பார்த்து வந்த மெட்டி ஒலி வேறு முடிந்து போயிருக்கும். என்ன செய்தால் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சுவாரஸ்யம் ஏற்படும் என்று அலையாய் அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ண ஓட்டத்தில் நிறையப் படித்து முடித்து பெங்களூரில் நல்ல வேலையிலிருக்கும் பின்னிருபதுகளின் வயதிலுள்ள மகனின் ஞாபகம் வந்து விட்டால் எல்லாம் போச். அப்படித்தான் என் அப்பாவுக்கு திடீரென்று ஒரு நாள் என் ஞாபகம் வந்து விட்டது.

அன்றாடம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்து விடுகிறது. தன்னை ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் மேனேஜர் போலவும் என்னை ஒரு வாடிக்கையாளர் போலவும் கற்பனை செய்து கொண்டு இப்போது Requirement Study செய்து கொண்டிருக்கிறார்.

“என்ன மாதிரிப் பொண்ணு வேணும்? சொல்லுடா. இப்பவே நெறைய எடத்தில இருந்து கேட்டு வர்றாங்க.”

“அப்பா! நான் ஆஃபீஸ் வேலையா ஒரு வாரம் கூர்க் (Coorg) போறேன். அது முடிஞ்சு வந்த பெறகு இதைப் பத்தியெல்லாம் பேசிக்கலாமே.”

“நோ நோ! கூர்க் தானே போறே? நல்ல எடம். குளு குளுன்னு இருக்கும். அங்க உக்கார்ந்து யோசிச்சா நல்ல தெளிவான முடிவெல்லாம் எடுக்க முடியும். அங்கயே நல்லா யோசிச்சு ஒரு முடிவோட வா, என்ன?”

கூர்கில் ஒரு Forest Trek முடித்து விட்டு குளத்தின் கரையில் இளைப்பாற உட்கார்ந்திருந்த போது யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமே சரியாகப் பிடிபடவில்லை. எனக்கும் என மனசாட்சிக்கு நடந்த ஒரு கற்பனை உரையாடல்:

பொண்ணு பார்க்குறதுக்கு ஜோதிகா மாதிரி இருக்கணும். (நெனப்பு?! தம்பி, நீ ஒண்ணும் பார்க்குறதுக்கு சூர்யா மாதிரித் தெரியலையே.)

நெறைய புஸ்தகம் படிக்கிற பழக்கம் இருக்கணும். (ஆமாமா, இல்லைன்னா நீ மாசா மாசம் புஸ்தகம் வாங்க பண்ணுற செலவக் கண்டுபிடிச்சுட்டா மவனே டின்னு கட்டிருவா.)

வேலைக்குப் போற பொண்ணு? (நீ எழுதிச் சம்பாதிக்கறதை வச்செல்லாம் குடும்பம் நடத்துறது கஷ்டம் தான்.)

மகள் பிறக்கணும்னு அவங்களும் ஆசைப்படணும். (மொதல்ல மனைவி பெரச்சனையத் தீருங்கடா. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.)

மிஸ்டர் ராமசேஷனின் தந்தை அவனை இப்படியெல்லாம் பட்டியல் போடச் சொல்லித் தொல்லை கொடுத்தாற்போல் தெரியவில்லை. ஆனால், அப்படித் தொல்லை கொடுத்திருந்தாலும் மிஸ்டர் ராமசேஷன் என்னை மாதிரிக் குழம்பிக் கொண்டிருந்திருக்க மாட்டான். பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்தால் அஞ்சு நிமிஷம். ஆதவன் அவனை அப்படித்தான் செதுக்கியிருக்கிறார்.

நாமிருவரும் பயணிக்கும் பேருந்து
சட்டென்று பிரபஞ்சத்தின் மையப்புள்ளியாகிறது.
உலகத்து ஜீவன்களெல்லாம் சுற்றி வந்து வணங்குகின்றன.
கரம் தொட்டு, விரல் கோர்த்து,
என் தோள் மேல் சாய்கிறாய்.
ஈரமணம் கமழும் காற்று
உள்ளே வந்து
உன் முடி பிடித்தெடுத்து
என் முகமெங்கும் தடவிச் செல்கிறது.
ஒரு விரல் பிடித்து அழுத்தினால்
கோபங்கொண்டு கன்னத்தைக் கடிக்கிறாய்.
கடிக்க வருகையில் கணப் பொழுதில்
முகம் திருப்பி
உன் உதடு தொடுகையில்…

கிறீச்சீட்டு நிற்கிறது பேருந்து.
பக்கத்துக் காலி இருக்கையின்
ஒற்றை மல்லிகைப் பூவோ
எனை ஏளனம் செய்தபடி உருண்டோடிக்
காணாமற் போகிறது.

என்று அவன் என்னைப் போல் desperation கவிதைகள் எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம். :cry:

யார் இந்த ராமசேஷன்?

-->

Posted in அலசல்-பழையது | 4 Comments »

புத்தகவாசத்தில் அடுத்ததாக ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’

June 17th, 2005 by புத்தகவாசம்

புத்தகவாசத்தில் அடுத்ததாக

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

விவாதத்தை ஒருங்கிணைத்து நடாத்துபவர்: மீனாக்ஸ்

வரும் திங்களன்று தொடங்குகிறார். அதற்கிடையில் விவாதத்தில் பங்குபெற விரும்புகிறவர்கள் புத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். [என்போன்றவர்கள், கடன் வாங்கி வந்த புத்தகத்தை படித்து முடிக்கலாம்!]

-->

Posted in அலசல்-பழையது | 13 Comments »

ஜே ஜே சில குறிப்புகள் : பகுதி 5(முடிவு)

April 23rd, 2005 by இரா.முருகன்

கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இதை முடித்து வைக்கிறேன்.

நாவலின் இரண்டாவது பாகத்தில் வரும் ஜே.ஜேயின் நாட்குறிப்புகளை அதற்கு முன் இருக்கும் கதையாடலோடு தொடர்பில்லாமல் தனியாக வாசித்தாலும் ஜே.ஜே குறித்த ஒரு பிம்பம் மனதில் கண்டிப்பாக எழும். அது நாவலோடு சேர்த்து வாசிக்கும்போது தரும் அனுபவத்திலிருந்து வேறுபட்டிருக்கக் கூடும்.

இங்கே ஜே.ஜே சு.ரா ஆகிற மார்·பிங் முழுமையடைகிறதாக நினைக்கிறேன். அவருடைய தற்போதைய அ-கதை உரைநடை இதுதான். கதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் சிந்தனைகளைத் தெளித்துக் கொண்டு அவ்வப்போது தாச்சியாக நாவலைத் தொட்டுக் கொண்டு இந்த சு.ரா நாட்குறிப்பு அமைந்திருக்கிறது. சு.ராவின் உரைநடை முழு வெற்றியடைகிற இந்த இடத்தில் நாவல் என்ற வடிவம் என்ன ஆகியிருக்கிறது என்பதை நம் வாசக அனுபவமாக உணர்வதும் வெவ்வேறு விதமாகத்தான் இருக்கும்.

இந்தப் பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்த சில வரிகளைக் கொடுத்திருக்கிறேன். ஆழ்ந்து படிக்கவும், ரசிக்கவும், விவாதிக்கவும், எழுதி இத்தனை வருடம் சென்ற பின்பும் விரும்பி மேற்கொள்ளும் மறுவாசிப்புக்கு இடம் கொடுக்கவுமாக இந்த நாவலை எழுதியதே சு.ராவின் சாதனைதான். அதனைப் போற்றுகிறேன்.

எல்லோருக்கும் நன்றி. வணக்கம்.

ஜே.ஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து
——————————–

பக்கம் 135

தனி நபர்களைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ள குறிப்புகளை மொழிபெயர்க்க முடியாமல் போனதில் என் வருத்தம், சமூகச் சீரழிவுகளுக்கு ஜே.ஜே தந்துள்ள பிரத்யட்ச உதாரணங்களைத் தவிர்க்கும்படி ஆகிவிட்டதே என்பதுதான்.

பக்கம் 136 -

அம்மா நிரந்தரம் என் கட்சி. இந்த நிரந்தரத் தன்மைதான் அருவருப்பு ஊட்டுகிறது.

பக்கம் 139 -

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத தர்ம சங்கடத்தினால்தான் புதிய பெயர்ச் சொற்கள் வந்து புகுந்துகொள்கின்றன. இதற்குப் பெண்களின் கண்டுபிடிப்பு வம்பளப்பு.

“டிராட்ஸ்கி, டிராட்ஸ்கி என்று புலம்பிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன் நாயர். ‘யாரும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று வருந்தினான். இந்த வருத்தத்தில் அவனுக்கு சந்தோஷம் இருப்பது தெரிந்தது.

(அவநம்பிக்கைவாதி) என்பதற்கு சர்மா உபயோகித்த வார்த்தை ‘நிஹிலிஸ்ட்’ என்பது. இனிமேல் இவன் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்வான். தினசரியின் ஞாயிறு இதழிலிருந்து பொறுக்கிக் கொண்டிருக்கக் கூடும்.

பக்கம் 140 -

பெறும் புகழ் பெற்றுவரும் பவானி. கட்சி அலுவலகத்திலிருந்து அவள் மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பும்போது தோட்டத் தொழிலாளி பிரான்சிஸ் துணைக்குச் செல்கிறான். இடைக்கால ஏற்பாடு. புரட்சிக்குப் பின் தேவைப்படாது. பதினேழு தோழர்கள் பவானியைக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பவானி பேசும் கூட்டம் ஒன்றைக் கேட்டேன். நல்ல வீராவேசம். ஆணாகிக் கொண்டிருக்கிறாள். கம்யூனிஸ்ட் ஆகிவிட்டாளா என்று சொல்லத் தெரியவில்லை.

(பவானி) ‘ஜோச·ப் விஸாரியோனோவிச் ஸ்டாலின் வாழ்க’ என்று யதுகுல காம்போதியில் பாடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கட்சிச் செலவில் பவானி அம்மாளுக்கு கர்னாடக சங்கீதம் கற்றுத்தர உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னேன்.

பக்கம் 142

சம்பார மடம் நாராயண ஐயர். நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது இறந்துவிட்டிருந்தார். எப்படிப் பேசுவார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. குடும்ப அங்கத்தினர்கள் 96 பேராம். அவரைக் குளிப்பாட்டி முடித்ததும் கால் சிரங்குக்கு மருந்து போடும் பேத்தி அன்றும் அழுது கொண்டே களிம்பு போட்டது எல்லார் மனதையும் உருக்கி விட்டது.

பக்கம் 143

மேனனின் மொழிபெயர்ப்புகள் அவருடைய ரசனையைக் காட்டுகின்றன. பிரக்ஞையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டுகின்றன. பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த.

பக்கம் 144

வெள்ளைக்கார்ரன் ஆட்சி செய்யும் திறமை கொண்டவன் என்று உள்ளூர ஒரு நினைப்பு. நம்மவர்கள் மீது அவநம்பிக்கை. பெண்களிடம்தான் இது அதிகம். அவர்களுக்குத் தங்கள் புருஷர்களைத் தெரியும். குடும்பத்தையே நிர்வாகம் பண்ணத் தெரியாதவன் தேசத்தை எவ்வாறு நிர்வாகம் பண்ணப் போகிறான் என்ற எண்ணம்.

மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி வற்புறுத்தி ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள்.

வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள். ‘கொன்றாலும் கத்த மாட்டேன்’ என்றாள். கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.

பக்கம் 145

நிஜின்ஸ்கி பற்றி எழுதிய கட்டுரைக்கு ஏழரை ரூபாய் சன்மானம் வந்திருக்கிறது. என்ன கணக்கோ! இந்தக் கட்டுரை எழுத ஒன்றே முக்கால் ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன். நூல் நிலையத்தில் நாற்பது, நாற்பத்தைந்து மணி நேரம் படித்திருக்கிறேன். கட்டுரை எழுதி முடிக்க மூன்று நாள்கள். நகல் எடுக்க ஒருநள். காகிதம், இங்க், பீடி இத்யாதி எட்டணா. மூளை உழைப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு அரையணாவுக்கு மேல் சம்பாதித்திருக்கிறேன்.

பக்கம் 147

அப்பா ஒவ்வொரு நாள் காலையிலும் அம்மாவிடமிருந்து வெற்றிலை புகையிலைக்காக இரண்டு சக்கரம் வாங்கிக் கொள்வார். இது சற்று அதிகம்தான். அம்மா குறைக்க முயன்றால் சத்தம் போட்டு வாங்கிக்கொண்டு விடுவார். இது போன்ற ஒன்றிரண்டு விஷயங்கள் தவிர பிற விஷயங்கள் எல்லாவற்றிலும் எதிராளிக்குச் சாதகமாகச் சமரசம் செய்து கொள்வார்.

பக்கம் 150

பத்திரிகை அலுவலகத்தில் ஏதாவது குட்டி வேலை கிடைத்தால் போதும். புரூ·ப் ரீடர் வேலை புனிதமான வேலை. பொய், அகடவிகடங்கள் இல்லாத வேலை. சென்னை ஆங்கில தினசரியில் காலி இருக்கிறது என்று தெரிந்து எழுதிப் போட்டேன். பதில் ‘முன் அனுபவம் வேண்டும்’. கங்காதரன் சொன்னான், ‘பெயரைக் கோபாலசாமி அய்யங்கார் என்று மாற்றிக் கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக்கொள்’ என்று.

பக்கம் 153

மரம் அறுப்பவர்கள். அகன்ற மார்புகளும் திரண்ட புஜங்களும் கொண்ட ஆண்களுக்குக் கால்கள் சோனியாக இருக்கும். கால் பந்தாட்டக் காரர்களுக்கு நேர்மாற்றி. பந்தாட்டக் காரர்களின் கால்களும், அறுப்புக்காரர்களின் மார்பும், புஜங்களும் இணையும்போது முழு மனிதன் கிடைக்கிறான்.

பக்கம் 158

இடைக்கா வாத்தியத்தின் சத்தம் நெஞ்சைத் தொடுகிறது. வர்ண வேலைப்பாடுகள் அதிகமற்ற ஓசைகள். ஒரு சுழற்சியில் மீண்டும் மீண்டும் சுற்றிவரும் ஓசை. ஆனால் மனத்தைச் சிறகு முளைக்கச் செய்கிறது. அதை வாசிக்கும் மாராரை ஓடிச்சென்று தழுவிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ‘இந்த நிமிஷத்திலிருந்து உம்முடனேயே இருக்கிறேன். எனக்குக் கற்றுத்தாரும்’ என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.

பக்கம் 159

இந்தியாவைப் போல் புத்தகங்களை இவ்வளவு ஆபாசமாகத் தோற்றுவிக்கும் தேசம் மற்றொன்று இருக்கும் என்று தோன்றவில்லை.

நேற்று ஒரு கவிதையை மொழிபெயர்த்தேன். மூலத்தில் கனமாக இருந்தது. என் தாய்மொழியில் கஞ்சித்தாள் மாதிரிப் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்த மொழிபெயர்ப்பை நான் பிரசுரம் செய்யக் கூடாது. குறைந்த பட்சம் இந்த உபகாரத்தையேனும் நான் அந்த மூலக் கவிஞனுக்குச் செய்யவேண்டும்.

பக்கம் 161

ரெயிலில் பிரயாணம் செய்யுபோது நான் ஒரு அழகான காரியத்தை, உலகத்தோடு ஒத்துப் போகும் காரியத்தை, நதியின் போக்கோடு போகும் காரியத்தைச் செய்வது போலவும், பஸ்ஸில் போகும்போது அந்தரத்தில் அநாகரிகமாகச் சாடிக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

பக்கம் 165

‘உழைப்பு உன்னதமானது என்று எண்ணற்ற தடவைகள் நீ சொல்லும்போது இது பற்றி உனக்கே சந்தேகம் இருக்கிறதா என்று எனக்குத் தோன்றி விடுகிறது’ என்றேன். ‘மேலான உறவுகளை நாம் பறை சாற்றுவது உண்டா என்று கேட்டேன். உழைப்பைத் தன்னளவில் போற்றிப் பேசுவது தவறானது. உழைப்பின்றிக் கற்பழிப்பு இல்லை. போற்றப்பட வேண்டியது உழைப்பின் பின்னுள்ள பிரக்ஞை. உடல் உழைப்பானாலும் சரி, மன உழைப்பானாலும் சரி என்றேன்.

பக்கம் 175

மனிதக் குரல்கள் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாறாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனத்தில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தி இருக்கும்! அதனால் தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல் அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

-->

Posted in அலசல்-பழையது | 2 Comments »

ஜே ஜே சில குறிப்புகள் : பகுதி 4

March 6th, 2005 by இரா.முருகன்

சுகக்கேடு காரணம் இந்த வாரம் எழுத இயலவில்லை. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி.

இரா.மு
மார்ச் 13, மாலை 4:24

——————————————————————————–
‘ஜே ஜே சில குறிப்புகள் : பகுதி 3′ உரையாடலில் கலந்து கொண்ட சங்கர், தங்கமணி, ஜெயந்தி, மாலன், மதி, ராம்கி மற்றும் ரமணி ஆகியோருக்கு நன்றி.

அனைவரின் விருப்பத்தையும் அனுசரித்து, இந்த வாரம் முதல் புத்தகம் முழுவதும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. (மேலும், இந்த வேகத்தில் போய்க்கொண்டிருந்தால், இன்னும் ஒரு வருட காலம் ஜே.ஜேயைத் தான் பாராயணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்!)

சங்கர், அசோகமித்திரன் கூட்டத்தில் சு.ரா பேச்சு பற்றி எனக்கு இரண்டுவிதமான எதிர்வினைகள் கிடைத்துக்கொண்டுள்ளன. அதில் பெரும்பகுதி, அது நையாண்டி என்பதுதான்.

சங்கர், சரித்திரக் கதைகளுக்கு ரெலவன்ஸ் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றை அடிப்படையாகவோ, மேம்பொடியாகத் தூவியோ எழுதிய கதைகளுக்கு முன்னோடி, தொன்மத்தைக் கருவாகக் கொண்டு எழுந்த காவியங்களும், மற்றைய பண்டை இலக்கியங்களும். கதை என்ற தளத்தில் இவை தரும் அனுபவங்கள் மற்ற எந்தப் படைப்பையும் போலவே, அவற்றை உள்வாங்கிக் கொள்கிறவர்களின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்து நிலை, சார்பு, கனவிடைத் தோய்தல், புறம் தள்ளுதல் எல்லாவற்றையும் சார்ந்தவை. படிக்கிறவரின் மனம் எந்தப் படைப்பின் புனைவு, கதையாடலிலிருந்தும் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டு களிதுள்ளிக் கூத்தாடவோ, இகழ்ந்து எச்சிலுமிழவோ, சும்மாப் புஞ்சிரி பொழிந்தபடி பக்கத்தைப் புரட்டவோ வைக்கக் கூடியது.

‘ஜெயந்தி, “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துக் கொண்டு விட்டாளா?’” என்று சுரா.ஜே நம்மை இந்தப் புத்தகத்திலிருந்து எட்டிப்பார்த்து சதா விசாரித்தாலும், ‘இப்பத்தான் நாகநந்தி வந்திருக்கார்; அவசரப்படாதீங்கண்ணா’ என்று சொல்லியபடி கல்கி கதையில் அமிழ இன்னும் குறைந்தது பத்து தலைமுறைகளுக்காவது வாசகர்கள் இருப்பார்கள். அவர்கள் சு.ரா வாசகர்களைப் பார்த்து, “ஓமனக்குட்டியின் கவிதைகளில் வந்த மலையாளக் கிராமங்களில் ஒன்றாம் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் வளர்ந்து, மிலிட்டரி வீரர்களான தங்கள் தகப்பன்மார்களைக் கொன்ற சத்ருக்களைக் கொன்று குவித்துப் பழிக்குப் பழி வாங்கித் தங்கள் வீரசபதத்தை முடித்துக் கொண்டார்களா?” என்று கேட்பார்கள்.

மாலன், உங்கள் பதிவு பாதிதான் (ரமணி தயவில்) படிக்கக் கிடைத்தது. முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்ன வீரவணக்கத்தை விட்டொழித்து ஜே.ஜேயோடு ஓடி, சு.ராவோடு வேட்டையைத் தொடர்கிறேன்.

சு.ராவைப் படிக்கும்போது எனக்கு சதா தோன்றுவது மனித நேயம் பற்றியும், சக மனிதர்கள் மேல் பரிவுணர்ச்சி குறித்தும் அவரில் தென்படும் சற்றே இரட்டையான தன்மைதான். Split personality complex என்று இதை முரட்டுத்தனமாகக் குற்றப்படுத்த என்னால் முடியாது. ஆனாலும் அங்கங்கே அது தட்டுப்படும்போது ஒரு பார்வையாளன் என்ற முறையில் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. A display of vacillation between cynicism and genuine concern.

ஜே.ஜே நாவலின் கதை சொல்கிறவன் நோயால் நலிந்து ஆல்வாயில் சத்தியானந்தாவின் ஆசிரமத்தை அடைகிறான். நாராயண குருவின் வழிவந்த சத்தியானந்தாவை நம்பி ஏற்றுக் கொள்கிறான். புழை வெள்ளத்தில் தன்னை அவர் குளிப்பாட்டி விடும்போது இவன் கண்கள் நிரம்பும். நீரோடைகளிலிருந்து குளிர்ந்த நீரை இரு கைகளிலும் ஏந்தி, ஏதோ சமஸ்கிருத ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே வீக்கங்களின்மேல் வார்ப்பார். கை, கால் வீக்கங்கள் குறைந்து கொண்டே வந்தன (அத்தியாயம் ஒன்று - பக்கம் 23).

ஆனாலும், பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி இவன் கேள்வி எழுப்பும்போது அவர் கீதையில் எல்லா விடைகளும் கிடைப்பதாகச் சொன்னதும், ‘விவரங்களில் நாம் நுழையப் புறப்பட்டால் பின்னகர்த்தி விடும் மனோபாவங்கள் காஷாயங்களிலிருந்து வெளிப்படுவதை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன்’ என்று அவரை நிர்த்தாட்சண்யமாகத் தூர எறிந்து விடமுடிகிறது. அவர் கவிதை சொல்லும்போது, ‘கூழாங்கற்களை மலை உச்சியில் சரித்தது போல் வார்த்தைகளின் பிரவாகம்’.

கரிசனம் ஊற்றுக்கண் தோண்டிப் பிரவாகம் எடுத்தாலும், தோளில் கைபோட்டு அருகருகேயோ, கையைப் பற்றியபடி தொட்டுப் பின்னேயோ நடந்து போனாலும், ஏதோ ஒரு கணத்தில் தன்னை உன்னதமாக உணர்வதற்காகவே சதா மனம் சஞ்சரிக்கிற இயக்கத்தின் விளைவாக இருக்கலாம் இது.

‘காஷாயங்களில்’ - இந்தப் பன்மை சு.ராவின் ஸ்பெஷாலிட்டி. ஒரே ஒரு ஒற்றை சுஜாதா காலச்சுவடு ஆண்டுமலர் பற்றிக் கருத்துச் சொன்னபோது, சு.ரா பதிலில் பயன்படுத்தியது - ‘சுஜாதாக்கள்’ சொல்கிறார்கள். மாற்றுக் கருத்து உடையவர்களைப் பொதுவான முகமும் மூளையும் உடையவர்களாக typecast செய்துவிடுவதாலேயே ஒருவர் சுத்த சுயம்புவான singleton தனியன் ஆகமுடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கத் தர்ம தேவதைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜே.ஜே சு.ராவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நாவலில் வரும் மற்றப் பாத்திரங்களில் பல இலக்கிய கர்த்தாக்கள் குழம்பித் தெரிகிறதைப் பார்க்கலாம்.

திருச்சூர் கோபாலன் நாயர் (முதல் அத்தியாயம் - பக்கம் 26) மலையாளச் சரித்திரக் கதாசிரியர் என்பதை விட அறுபதுகளில் தமிழில் சரித்திரக் கதை எழுதியவர்களின் மொத்த உருவம் என்று தோன்றுகிறது. ஆகிருதியை வைத்து நா.பா; அபத்தங்களை வைத்து அவரும் அகிலனும், சாண்டில்யனும். மணிபல்லவம், தகடூர் யாத்திரை, கயல்விழி, கடல்புறா என்றெல்லாம் இவர்கள் எழுதினதெல்லாம் ‘முற்போக்கு சரித்திரக் கதைகள்’ இல்லைதான். ஆனாலும் அவற்றின் நாயக நாயகியர் ஆராதனா மூர்த்தங்கள் அல்லர்.

சேர்த்தலை கிருஷ்ண அய்யர் (பக்கம் 33 - அத்தியாயம் ஒன்று). என்னதான் சு.ரா அவரை உள்ளூர் பரமேஸ்வர அய்யரிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றாலும் (அல்லது சு.ரா ஸ்டைலில், வேறுபடுத்துகிறது போல் நினைவூட்டியபடிக்கு) சேர்த்தலை உள்ளூரே. உள்ளூரின் உத்தியோகப் பின்னணியையும், அவர் உமாகேரளம் தொடங்கி, ‘விக்டோரியா மகாராணி, லின்லித்கோ பிரபு, மகாத்மா காந்தி, மூலம் திருநாள் மகராஜா, ராஜாஜி, சர்.சி.பி, தளவாய் கேசவன் தம்பி ஆகியோரைப் பற்றிப் பாடியவர்” என்ற பட்டியலைத் தருவதும், உள்ளூரின் கண்டகாவ்யங்களைப் பற்றி, “மலையாளத்தில் அவர் பாடியுள்ள குறுங்காவியங்களை, மலையாளம் தெரியாதவன் படிக்கலாம்; சம்ஸ்கிருதம் தெரியாதவன் படிக்கமுடியாது” என்று ஜே.ஜே குரலில் எள்ளுவதும் பரமேஸ்வர அய்யரைப் பற்றிய சு.ராவின் பதிவென்றே கொள்ளலாம்.

முன்ஷி வேலுப்பிள்ளை, முன்ஷி பரமுப் பிள்ளையின் மூன்றாம் கார்பன் காப்பி என்றால், ‘ஜே.ஜேயின் வின்னியாசமான பேச்சை, தனது விஷமியான பேரனின் சவடாலை ரசிப்பது போன்ற முகபாவத்துடன், உதட்டோரங்களில் அமுக்கப்பட்ட புன்னகை வடியக் கேட்டுக் கொண்டிருந்த’ பிறவம் கோவிந்தக் குறூப், குஞ்šண்ணி மாஷாக இருக்கலாம் - அவர் சிறுகதை ஆசிரியர் இல்லை; நுறுங்ஙு கவிஞர் என்றபோதும்.

முல்லைக்கல்? அவரை அப்புறம் பார்ப்போம். ஞானபீடம் எல்லாம் வாங்கினவரில்லையோ.

‘(This novel) is the story of one self conscious intellectual’s quest for intimacy with another, an established intellectual, whom he has already adopted as his role model’ என்று என்.எஸ்.ஜெகந்நாதன் குறிப்பிடும் தேடலின் உச்சகட்டமாக ஜே.ஜேயை பாலு சந்திப்பது நாவலின் முதல் அத்தியாயத்திலேயே நிகழ்ந்து விடுகிறது. ஜேஜே ஒரு கலகக்காரன். தமிழில் தற்கால எழுத்து பற்றிய ஒரு கூர்மையான மதிப்பீடு அவனுக்கு உண்டு. அவன் எந்தச் சந்தர்பத்திலும் தன் கருத்தைச் சொல்லத் தயங்கமாட்டான் என்று மேலதிகம் அதிர்ச்சிகளை எதிர்பார்க்க வைக்க, இந்த அத்தியயம் கல்கி மற்றும் பொதுவாகத் தொடர்கதை ஆசிரியர்கள் பற்றிய ஒற்றை வரி கடுமையான விமர்சனத்தில் முடிந்தால், அடுத்த அத்தியாயம் கம்பீரமான வேதாகம துல்யமான வசனங்களால் கவுரவமடைகிறது.

‘மரணத்தின் குகைவாயில் மனக் கண்ணுக்குத் தெரியும்போது எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது” ,”சத்தியத்தின் வாளை வீசி மரணத்தை வெல்ல முயல்கிறான் கலைஞன்” (பக்கம் 35 அத்தியாயம் இரண்டு) இத்தியாதி.

“கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்” என்பது போன்ற முழக்கங்களை வேறு யாராவது எங்காவது எழுதியிருந்தால், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் மரியாதை ஜே.ஜேக்குக் கிடைப்பதை விட முற்றிலும் வேறானதாக இருக்கும்.

“தருக்கமும், அங்கதமும் தனக்கு எப்போதும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையினாலோ என்னமோ, கடந்த இருபத்தைந்து வருடத்தில் ஒரு பத்திரிகையாளராக எந்த வளர்ச்சியையோ, மாற்றத்தையோ அவரிடம் பார்க்க முடியவில்லை” என்று சோ-வைப் பற்றிச் சொல்வது போல், இப்படிப் பிரகடனப்படுத்தியவர்களும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள்.

‘நாவலை சு.ரா ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதியிருக்கிறார். எனவே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்’ என்பார் என்.எஸ்.ஜெகன்னாதன்.

ஆனால் இது உண்மையாக இருக்காது என்றே தோன்றுகிறது. உதாரணமாக, இரண்டாம் அத்தியாயத்தில் வரும் இந்தக் காட்சி -

“ஒரு நாள் ஜே.ஜே ஏதோ ஓரிடத்தில் மழைக்கு ஒதுங்கி நிற்கும்போது அங்கு ஒதுங்கிய ஒரு பசுவின் மேல் .. வெற்றிலைத் தம்பலத்தைக் குறிவைத்துத் துப்புவதைக் கண்டான்..” (பக்கம் 41).

இதை சு.ரா தமிழிலோ அல்லது மலையாளத்திலோ யோசித்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தச் சிந்தனாகதிக்குப் பொருத்தமற்ற ஆங்கிலத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. (முன்னால் சொன்ன உலகம் முழுமைக்குமான பிரகடனங்கள் வேண்டுமானால் அந்த வகைப்பட்டவையாக இருக்கலாம்.)

இங்கு காட்சிப்படுத்தப்படும் வன்முறை மொழி, செயல்படுதல் என்ற தளங்களில் ஆழமான ஓர் அதிர்ச்சியைத் தருகிறது என்றாலும் நம்மை அதில் ஒரு நிமிடம் கூட அதிகமாக நிலைக்க வைக்கவில்லை சு.ரா. ‘இந்தச் சம்பவத்தைச் சிக்கனமான வார்த்தைகளில் நாட்குறிப்பில் விவரித்துவிட்டு .. மனித மனத்தின் கரும் புள்ளிகளைக் காணத் துடிக்கும் ஜே.ஜேயின் ஆவேசத்தை’ நமக்குக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் அவர். இந்த ஆவேசமும், வார்த்தைச் சிக்கனமும் இப்படி emphasise செய்யப்படாமலேயே நமக்குப் புரிகிறது என்று சொல்லவே விடவில்லை நம்மை அவர்.

“பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன்முன் உருட்டப்படுகின்றன .. அடிவானத்துக்குப் பின்னால் ஏதோ தொங்கிக் கொண்டிருக்கின்றது என்ற கற்பனை இனி வேண்டாம் ” (பக்கம் 41 - 42)

நாட்குறிப்பு என்ற உத்தியைக் கடைப்பிடிப்பதால் இந்த நீண்ட சொற்பொழிவை கதையாடலுக்குள் சுலபமாக நுழைக்க முடிகிறது சு.ராவால். அல்லது இங்கே கதைசொல்வதே ஒரு சாக்குத்தானோ. எல்லாவற்றையும் ரசகுல்லாவாக மாற்றித்தர வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பார் அவர். ரசகுல்லா கேட்கவில்லை. நாவல் கதை சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட ‘Dummies’ தனமான சிந்தனைதானா?

(தொடரும்)

-->

Posted in அலசல்-பழையது | 9 Comments »

« Previous Entries