-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

ஜே.ஜே: சில குறிப்புகள் - 2

February 20th, 2005 by இரா.முருகன்

ஜே.ஜே 1981-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. கிட்டத்தட்ட ஒரு அக்ஞாத வாசத்திற்குப் பிறகு பீறிட்டுக் கிளம்பிய இந்தப் புதினம் சு.ராவைத் தமிழ் இலக்கியத்தில் மிக உயர்ந்த தளங்களுக்கு எடுத்துச் சென்றது.

1) ஜே.ஜேயில் அவருடைய மொழிநடை, கதைக்கப்படும் பொருள், உத்தி எல்லாமே அதுவரை அறிமுகமாகியிருந்த சு.ராவிடமிருந்து வேறுபட்டவை. அவரை ‘புளிய மரத்தின் கதை’ மூலமாகவோ, அதற்கு முந்திய ‘பிரசாதம்’ சிறுகதைத் தொகுதி மூலமாகவோ அறிந்த வாசகர்களுக்கு இந்த பாரடைம் ஷிப்ட் பிடித்திருந்தது. ஜே.ஜேக்குச் சற்றே முந்தைய ‘பல்லக்குத் தூக்கிகள்’ இந்த மாற்றத்தைக் கோடிகாட்டியிருந்ததை அந்தத் தொகுப்பைப் படித்த வாசகர்கள் உணர்வார்கள்.

ஒரு விதத்தில் படைப்பாளியின் படைப்பில் இப்படியான காலப் பரப்பில் ஒத்திசையும் வளர்சிதை மாற்றத்தின் பிரதிபலிப்பு நிகழ்வது தவிர்க்க முடியாயததுதான்.

எனக்குத் தெரிந்து ஒரு விளம்பரம் முப்பது வருடமாகப் பத்திரிகைகளில் ஒரு எழுத்து கூட மாறாமல், நீள அகலம் குறையாமல், பத்திரிகையின் ஒரே பக்கத்தில் ஒரே மாதிரி வெளிவந்து கொண்டிருக்கிறது. அது விளம்பரப் படுத்தும் பொருள் ஒரு களிம்பு - ஒரே இடத்தில் ஆசுவாசம் அளிப்பது.

ஹெடன்ஸா தான் அந்த ஆயிண்மெண்ட் - மூல நோக்காட்டுக்கானது.

ஹெடன்ஸா படைப்புகளாக எழுதி ஒரே வகை ஆசுவாசம் தரவேண்டும் என்று படைப்பாளியிடம் எதிர்பார்க்க முடியாது!

கேள்வி - ஒரு படைப்பாளியின் படைப்பு முறை சார்ந்த மாற்றங்கள் ஒற்றைப் பாய்ச்சலில் நிகழ்வதும், மெல்ல மெல்ல நிகழ்வதும், நிகழாமலே இருப்பதும் எந்தக் காரணிகளை அடிப்படையாக வைத்து நிகழ்கின்றன? (எழுத்தாளன் என்ற முறையில் என் அனுபவத்தை இங்கே அப்புறம் பதிகிறேன்).

**********************************

இன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் பகுதி - அத்தியாயம் ஒன்று

(பக்கம் 9-லிருந்து பக்கம் 34 வரை)

2) சு.ராவின் முதல் நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ படித்திருக்கிறீர்களா? அதில் கையைப் பிடித்துக் கூட்டிப் போகும் எளிமையும், கூட வருகிறவருக்கு ஒரு விஷயத்தை அறியத் தருவதில் இருக்கும் உற்சாகமும் பொங்கி வரும். ஜே.ஜே எழுதிய சுந்தர ராமசாமி, முப்பது வருடம் முந்திய புளியமரக் கதைக் காரர் சுந்தர ராமசாமியோடு வேறுபடுகிறாரா?

உதாரணத்துக்கு இந்தத் தொடக்கத்தைக் கவனியுங்கள் -

ஜோச·ப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5-ம் தேதி, தனது 39-வது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான் …………. நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். (பக்கம் 9-10; அத்தியாயம் 1)

இதில் கதைத் தன்மை இருக்கிறதா? அல்லது அந்த அ-கதை (கிட்டத்தட்ட கட்டுரை) அமைப்பு, கதையாடலில் இன்னொரு வடிவமா?
காம்யு பற்றி சு.ரா இன்னொரு படைப்பில் கிண்டல் தொனியோடு குறிப்பிடுவார். எந்தப் படைப்பு அது?

**************************************

3) மேற்கோள்

மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள் தமிழில் எழுதுவதால் நமதாகி விடுமா? (பக்கம் 10 - அத் 1)

முதல் முறை படித்ததும் எல்லோரையும் பிடித்து நிறுத்தும் வாக்கியம் இது. பல பேர் பலமுறை படித்து, எடுத்துக்காட்டாகக் காட்டி ஒரு cult status இதற்கு வந்துவிட்டது.

கால இடைவெளி விட்டு (சில ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளலாம்) திரும்பப் படிக்கும்போது இது கதையாடலிலிருந்து ஒற்றைப்பட்டுப் போய், அது தரும் அதிர்ச்சி மதிப்புக்காகவே இங்கே போட்டது போல் தொனிக்கிறதா?

அல்லது அந்த மொழி, தொனி சார்ந்த அதிர்ச்சியை விதைத்துப் போவதுதான் சு.ராவின் நோக்கமா?

இரா.மு

-->

Posted in அலசல்-பழையது |

13 Responses

  1. rosavasanth Says:

    என் பின்னூட்டம் என்ன ஆச்சு?

  2. மதி கந்தசாமி Says:

    ரோசாவசந்த்,

    நீங்க இட்ட இடத்தில்தான் இருக்கு. இரா.மு. கேட்டபடி தனித்தனிப் பதிவுகளாக இட்டீருக்கிறேன்.

    நீங்க அங்க இருந்து எடுத்தூடு வந்து போடலைன்னா நான் காலைல வந்து போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். என்ன என்பேர்ல கீழ உங்க மறுமொழின்னு போடணும்.. நீங்களே இங்க கொண்டுவந்து போடுறீங்களா?

    http://mathy.kandasamy.net/tamilbookclub/archives/2005/02/17/6#comment-16

  3. மதி கந்தசாமி Says:

    Rosavasanth’s comment
    =====================

    ரோஸாவசந்த் Says:
    February 19th, 2005 at 11:44 pm
    நான் ஜேஜே குறிப்புகள் படித்து 10 வருடங்கள் ஆகிவிட்டது, எனினும், முதன் முதலாய் ஒரு நீண்ட காலத்திற்கு பாதிப்பை கொண்டிருந்த நாவல் என்பதாலும், பத்துமுறையாவது படித்த நாவல் என்பதாலும் நினைவிலிருந்து சிலவற்றை கூறமுடியும்.

    இராமு சொல்வது போல் “காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள..” என்ற வரி பல முறை பயன்படுத்தப் பட்டு ‘cult status’ வந்து விட்ட வரிகள்தான். சமீபத்தில் அரவிந்தன் கூட பாய்ஸ் பட விமர்சனத்தில் இதை பயன்படுத்தியிருந்தார்.

    இந்த வரி தொடக்கத்திலேயே ஜேஜே சில குறிப்புகளை அடையாளம் காட்டிவிடுவதாக தோன்றுகிறது. கதையில் இருத்தலியல் என்பதாக செய்யபடும் ஒரு பாவனை ஒரு பழமைவாத தன்மை கொண்டதென்பது இந்த வரிகளிலேயே தெரிந்து விடுகிறது. இன்னோரு இடத்தில் (நாவலில் அல்ல) ரெகார்ட் டான்ஸ் ஆடுபவரின் தொடையில் சங்கராச்சாரி என்று ஒரு உவமையை வைத்து சுரா பேசியிருப்பார். அதில் தென்படும் பார்வையே இங்கும் வெளிபடுகிறது. கதையில் வரும், கதை சொல்லியான பாலு சுந்தர ராமசாமியின் ஆளுமைகொண்ட பாத்திரம் என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய ஒரு எளிய பழமைவாத கருத்தே இப்படி வசீகரிக்கும் வாக்கியமாய் வருகிறது. பாலியல் வேட்கை என்பதை கேவலமாகவும், அந்த இன்பத்தை தருபவர்களை கேவலப்படுத்தும் மதிப்பீட்டை உள்ளடக்கியதே இந்த வரிகள். தமிழ் சிறுபத்திரிகை உலகம் இதற்கு cult status தருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இதை எழுதிய பின் 20 ஆண்டுகள் கழித்தும், என்னென்னவோ பேசப் பட்ட பின்னும் சுராவின் இந்த பார்வையில் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

    மேலே சொல்வதற்கு உண்டு. விவாதத்தின் போக்கில் பார்கலாம்.

  4. ரோஸாவசந்த். Says:

    மன்னிக்கவும் மதி. அவசரத்தில இதை பழைய பதிவு என்று நினைத்து பின்னூட்டம் காணாமல் போனதாய் நினைத்து எழுதினேன். இப்போதுதான் மீண்டு்ம் வர முடிந்தது. இங்கே மீள இட்டதற்கு மிகவும் நன்றி!்

  5. மதி கந்தசாமி Says:

    ramachandran usha Says:

    February 22nd, 2005 at 9:35 am
    மன்னிக்கவும், பலமுறை முயன்றும் புத்தகத்தில் முழுவதுமாய் என்னால் ஒன்ற முடியவில்லை. முருகன், ஒரு சந்தேகம். கதையில் வரும் மலையாள எழுத்தாளர்கள், உண்மையில் மறைமுகமாய் யாரையாவது குறிக்கிறதா? உதாரணமாய், கதையில் வரும் ஆனந்தவல்லி அம்மா என்பது பிரபல
    மலையாள கவிஞர் பாலாமணி அம்மா வை சொல்கிறாரா?
    உஷா

  6. வெங்கட் Says:

    வஸந்த்,

    ஜே.ஜே. - வகை இருத்தலியலுக்கும் அதைத் துவக்கிவைக்கும் அல்பர் காமூவின் இருத்தலியலுக்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்வது எளிது. உள்ளடக்கத்தில் மாத்திரமல்லாமல் நடையிலும் ஜே.ஜே. முதல் வாசிப்பில் தந்த அனுபவத்தைத் தரவில்லை.

    முருகன்,

    சுரா-வின் எழுத்தில் நான் நிறையச் சொல்கிறேன் என்று தொனிக்கும். “… மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால், முடியும் என்றால்”. ரீதியில் இதில் புரியாதவை எல்லாம் வாசகனின் இயலாமைமீது சுமத்தப்படும். இருத்தலியலின் எடையின்மை இங்கே கிடையாது. மாறாக, அல்பர் காமூ-வின் The Stranger இப்படித் துவங்கும்;

    “Maman died today. or yesterday maybe, I don’t know. I got a telegram from the home: “Mother deceased. Funeral tomorrow. Faithfully yours.” That doesn’t mean anything. Maybe it was yesterday.”

    இந்த மூன்று வரிகளுக்குள்ளே இருக்கும் சாத்தியங்களை யோசித்தால் வியப்பாக இருக்கிறது. காமூ இதைப் போகிற போக்கில், with exisistential abandon சொல்லிவிட்டுப் போயிருப்பார்.

    ஜே.ஜே-யில் வரும் நிறைய வாக்கியங்கள் அதிர்ச்சி தரவே வலிந்து எழுதப்பட்டிருக்கின்றன. இவை அள்ளித் தெளித்துவிட்டுப் போனவை மாத்திரமல்ல, “இதைப் பாரு” என்று கூவி விற்கப்பட்டவை என்றுதான் தோன்றுகிறது.

  7. மாலன் Says:

    ஒரு புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு அந்த வாசக அனுபவத்தின் அடிப்படையில் அதைப் பற்றி பேசலாம். கல்லூரித் தேர்வுக்குப் படிப்பது போல வாராவாரம் இந்த அத்தியாயத்திலிருந்து இந்த அத்தியாயம், அது குறித்த கேள்விகள் இதெல்லாம் வேண்டாம். புத்தக சங்கங்களின் நோக்கம் நானறிந்தவரை நூல்களை அறிமுகப்படுத்துவது. அதன் மூலம் மற்றவரை அந்த நூலை வாசிக்கச் செய்வது. நார் நாராகக் கிழிப்பது அல்லது வரிக்கு வரி மெச்சுவது அல்ல. புத்தகவாசம் மட்டுறுத்துநர்கள் இது குறித்து சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஜே.ஜே. இரண்டுகாரணங்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 1. பல ஆண்டுகள் (ஏழாண்டுகள் என்று ஞாபகம்) எழுத்துலகிலிருந்து ஒதுங்கியிருந்த சு.ரா நடுநிசிநாய்கள் கவிதைத் தொகுதிக்குப் பின் வெளியிட்ட நாவல் இது. சு.ரா எழுத ஆரம்பித்த காலத்தில் இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டவர். சாந்தி, சரஸ்வதி, தாமரை இதழ்கள் மூலம் அறிய வந்தவர். பின் இடதுசாரிகள் மீது (அவர்களது செயல்பாடுகள் மீது, சித்தாந்தத்தின் மீதல்ல) விமர்சனங்களை வெளியிட்டுவந்தவர் எழுதாமல் ஒதுங்கியிருந்தார் ( இது இலக்கியக் காரணங்களுக்காக அல்ல, பெரிதும் உடல் நலம், குடும்பச் சூழல் காரண்மாக என்பது பலருக்கு அப்போது தெரியாது) அவர் மீண்டும் எழுத வந்தபோது அவரது பார்வை மாறி இருந்தது என்பதற்கான ஆவணம் ஜே.ஜே.

    2.உள்ளடக்கம், நடை இவற்றிலும் மாற்றத்தைப் பதிவு செய்திருக்கும் நூல் ஜே.ஜே. அவரது புளியமரத்தின் கதை ஒரு நேரொழுக்கு (linear naration) விவரணை கொண்ட நாவல். சமூக விழுமிய (values)மாற்றங்களைப் பதிவு செய்யும் கதை அம்சம் கொண்டது. ஜே.ஜே.இருத்தலியப் பாவனைகள் கொண்டது.எழுபதுகளில் எழுதத் தலைப்பட்ட இளைஞர்கள் இருத்தலியல், அந்நியமாதல் தாக்கங்களில் எழுதினார்கள். உலகப்போரின் தாக்கத்தால், போருக்குப் பின் ஐரோப்பாவில் எழுந்த தத்துவங்களைப் ‘போலச் செய்து’ பலர் எழுதினார்கள். (அவற்றைத் தன்மயமாக்கிக் கொண்டு தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத் திறம்பட எழுதியவர் வண்ணநிலவன் போன்ற சிலரே) யதார்த்தவாதத்தை வலியுறுத்திய இடதுசாரி எழுத்தாளர்களும், இதழ்களும் இந்த இருத்தலிய, அந்நியமாதல் தாக்க எழுத்துக்களை மூர்க்கமாக சாடினார்கள். தமிழ் இலக்கிய உலகம் சிந்தாந்த அடிப்படையில் இருகூறாகப் பிரிந்து எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடிக் காமன் பண்டிகைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

    இந்தக் காலச்சூழலில் ஜே,ஜே. வந்தது. இடதுசாரி என்றறியப்பட்ட ஒருவரிடமிருந்து இப்படி ஒரு உள்ளடக்கம் கொண்ட நூலா என்று புருவங்கள் உயர்ந்தன. ஆனால் அதற்கு சற்றுமுன்பாக இடதுசாரி சிந்தனை கொண்ட எஸ்.வி.ராஜதுரையிடமிருந்து எக்ஸிஸ்டென்ஷியலசம் வந்திருந்தது.சோல்செனிட்ஸனைப் பற்றிய விவாதம் கசடதபறவில் நடந்து முடிந்திருந்தது. மார்க்கஸ் பற்றியும், கிழக்கு ஐரோப்பிய புதிய இடதுகள் பற்ற்றியும், லத்தீன் அமெரிக்க விடுதலை இறையியல் பற்றியும் ஆங்கில நூல்களோடும் உலக அரசியலோடும் பரிச்சயமுள்ள நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். நடுநிசிநாய்கள் பற்றியும் (சு.ராவின் கவிதைத் தொகுப்பு) அதைப்பற்றியும் வெ.சாவும் தருமு சீவராமும் பேசி வந்ததையும் அறிந்திருந்தோம். ஆனால் இவற்றை அறியாதவர்களுக்கு, ஜே.ஜே, இடதுசாரி ஒருவர் ஏதோ ‘கட்சி’ மாறிவிட்டதைப்போல பிரமைகளை ஏற்படுத்தியிருந்ததல் அதைக் குறித்துப் பேச்சுக்கள் எழுந்ததன.

    தமிழில் புனைவு என்பதை நேரொழுக்கிலிருந்து மாற்றுவதற்கான மடை திறப்பு ஜே.ஜே. ஆனால் அந்த நாவலில் பல பிறழ்வுகள் உண்டு.ஜே.ஜேவை ஒரு சிந்தனையாளன், எழுத்தாளன் என்கிற நிலைக்கு அப்பால், பீடத்தில் வைத்துத் தொழுகிற மனோபாவத்தை அதில் காணலாம். கிட்டத்தட்ட நா.பா குறிஞ்சிமலர், பொன்விலங்கு கதாநாயகனை ‘ரோஜாநிறப்பாதங்கள்’ என்று சித்தரித்து மெய்சிலிர்த்துக் கொள்வதற்கு நிகரான அபத்தங்கள் இதில் உண்டு. சில தனிமனித சிற்றிதழ் பூசல்களை வரலாற்று சம்பவங்களைப் போன்ற பிரமையுடன் விமர்சனம் செய்ய முற்படிருப்பது இன்னொரு பிறழ்வு. முதல்முறை படித்த அனுபவத்தை இன்று அது தர இயலாமல் இருப்பதன் காரணம் இதுதான்.

    இது மாதிரி நாவல்களின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை சு.ராவே உணர்ந்து கொண்டு விட்டார் என்பதை பின்னால் வந்த அவரது நாவல்கள் உணர்த்துகின்றன.

    என்னுடைய அபிப்பிராயத்தில் ஜே.ஜேவை விட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நல்ல நாவல்.

  8. Jayanthi Says:

    //என்னுடைய அபிப்பிராயத்தில் ஜே.ஜேவை விட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நல்ல நாவல். //

    இதை நான் சொல்ல நினைத்தேன். மாலன் முந்திக்கொண்டார். :grin:

    என் கருத்து—

    வடிவத்தில் ஜேஜேயைவிட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கச்சிதம். நல்ல சரளமான நடையும் ஓட்டமும் கொண்ட நாவல்.ஒரு புளிய மரத்தின் கதைகூட ‘நாவல்’ என்ற வடிவில் ஜேஜேயை விட நன்றாக மைந்துள்ளது.

    ஜேஜேயில் வரும் பாலு, சம்பத், எஸ் ஆர் எஸ் பொன்ற பல பாத்திரங்கள் அதில் வரும். இன்னும் சொல்லப்போனால்,.. ஜேஜே கொடுத்த குறிப்பில் இன்ஸ்பையர் ஆகி எழுதியதுபோலத் தோன்றும் இடங்கள் பல ஆ.பெ.கு வில் இருக்கும்.

    எனக்குப் பிடித்த வரிசை
    1) ஆ.பெ.கு
    2) ஒ.பு.க
    3) ஜே ஜே. சி. கு

    It is very interesting to read ira.mu’s postings,.. very enlightening :smile:

    எல்லோருடைய கருத்துக்களையும் படிக்கும் ஆவலுடன், ஜெ :iamwaiting:

  9. ஜெ. ரஜினி ராம்கி Says:

    ‘இன்னும் இருபது வருடங்கள் கழித்து (அப்போது 1978!) அதாவது 90களில் தலைகீழ்மாற்றங்கள் வரும். அப்போது எந்த தவளையும் கிணற்றுக்குள் இருக்கமுடியாது’

    படிக்கப் படிக்க பரவசத்தை ஏற்படுத்திய வரிகள். பாரதி பரம்பரையில் வந்தவர்களில் தொலைநோக்கு பார்வை ஒரு சிலருக்குத்தான் உண்டு. அந்த வகையில் 90களுக்கு பின்னர் இணையம், தமிழை ஏற்றத்தில் வைக்கும் என்பதை எப்படித்தான் எழுதிவைத்தாரோ? :clap:

    முல்லைக்கல் மாதவன் நாயர் பாத்திரத்தின் வாயிலாக என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. சு.ராவின் எள்ளலை பல சமயம் என்னால் புரிந்து கொள்ள முடியாததற்கான காரணத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!:movai:

  10. மதி கந்தசாமி Says:

    ஜே.ஜே. சுல குறிப்புகள், சு.ரா. எழுதி நான் படிக்கும் இரண்டாவது புனைவு. முதலாவது ‘ஒரு புளிய மரத்தின் கதை’. இப்போது கைவசம் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் இருக்கிறது. படிக்க வேண்டும். சு.ரா. வின் கட்டுரைகளையே முதலில் வாசித்திருக்கிறேன். ஒரு புளிய மரத்தின் கதை படித்தபோதும் அதைவிட அவரது கட்டுரைகளே பிடித்திருந்தது.

    இந்தப் பின்னணியோடு ஜே.ஜே.சில குறிப்புகளைச் சில மாதங்களுக்கு முன்பு வாசிக்க முயன்றேன். எதுவுமே புரியவில்லை. அதுவும் ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிய இணையத்தில் பலர் எழுதியிருந்ததை அங்கொன்றும் இங்கொன்றுமாக வேறு வாசித்திருந்தேன். மரத்தடியில் சுந்தர்வேறு மூன்று நான்குபகுதிகளாக எழுதித் தள்ளியிருந்தார்.

    இப்போது இரா.மு. உங்களுடைய துணையோடு கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சிக்கப்போகிறேன்.

    முதலாவது அத்தியாயத்தில் நிறைய விஷயங்களைப் பூடகமாகச் சொல்லிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் அதற்கு முதல் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டால் முதலாவது அத்தியாயம் கொஞ்சம் விளங்குமா?

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும்

    ‘இதற்கு நேர்மாறாக, மாயக்காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள் தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா’ என்னும் வரிகள் அதிர்ச்சியை எல்லாம் உருவாக்கவில்லை. என்னதான் சொல்ல வருகிறார். யாரைக் குறித்துச் சொல்கிறார் என்ற கேள்விகள்தாம் எழுகின்றன.

    பக்கம் 13இல்
    ‘மேல்வாரியாகப் பார்க்கும்போது இது சிறிய புத்தகம்போலவும் ஒரு எழுத்தாளனின் அரைகுறையான வரலாறுபோலவும் தெரியும்’

    என்று தொடங்கி

    பக்கம் 14ல் ஆக, இது மனிதர்களைப் பற்றிச் சொல்வதும்தான்.

    இந்தப் பகுதி யோசிக்க வைக்கிறது. குழப்புகிறது. இது கதையா கட்டுரையா? கதையைத் தாண்டி வந்து சு.ரா. பேசுகிறாரா என்றெல்லாம் குழப்புகிறது.

    அடுத்த பதிவை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.

    -மதி

  11. Jayanthi Says:

    ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ என்பதே சரியான பெயர் இல்லையா? முன் பதிவில் நான் எழுதியதில் குளறுபடி,.. மன்னிக்கவும்.

  12. Shankar Says:

    ஜே.ஜே. படித்தவுடன் முதலில் தோன்றிய கருத்து அதனை மீளவும் வாசிக்கவேண்டும் என்பதுதான். மற்றொரு முறை படிக்கும்போது அதன் கட்டுமானம் ஓரளவு தெளிவடைவதாக எண்ணுகிறேன். மிகச்சிறந்த நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் குறுகுறுப்பு ஜே.ஜேவைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

    முதலில் “மாயக்காம…” மேட்டர். கண்டிப்பாக இது நாவலின் பல இடங்களில் தெளிக்கப்பட்டிருக்கும் ஷாக் வேல்யூ படிமங்களில் ஒன்றே. மாயக்காம உறுப்பாளர்களின் அத்தியாவசியம் பற்றி யாரேனும் கருத்து வைத்திருக்கிறீர்களா? அல்லது ஆனா ஆவின்னா படித்தவுடன் ஆல்பெர் காம்யூதானா?

    மிகவும் சுவாரசியமான விஷயம் சுராவின் நகைச்சுவை. மிகவும் subtle-ஆனது. முதுபெரும் எழுத்தாளர் என்.இக்கண்ட வாரியர், குமிழியிடும் பாராட்டுணர்வுடன், சுபத்திரம்மாத் தங்கச்சியை விமர்சித்து அவளுடைய கல்லூரி நாட்களில் எழுதிய பத்திரிகைக் கடிதத்தில், “பார்க்கப் பார்க்கப் பெண் போலவே காட்சியளிக்கக்கூடியவள் அவள்” என்று எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. பின்வரும் பக்கங்களில் மேலும் சிறப்பான உதாரணங்கள் இருக்கின்றன. இந்த நகைச்சுவைத் தொனியை மனதிலே வைத்துக்கொண்டுதான் சுரா அசோகமித்திரனின் கதை ஒன்றைச் சொல்லிக் கிண்டல் செய்ததை (அசோகமித்திரன் 50 விழா) புரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன். அதனாலே தான் அச்செயல் மிகவும் வருத்தமூட்டுவதாக இருந்தது. உயர்தர மிமிக்ரி என்று வருணிக்கப்பட்ட அது கீழ்த்தர நக்கல் என்று எனக்குத் தோன்றியது அதனாலேதான்.

    ஜே.ஜேவின் எழுத்து பற்றி சுரா சிலாகிப்பது (பக்கம் 16-17) மிகச் சிறப்பான உரைநடை. அவனது எழுத்து என்று வரும் மேற்கோள்கள் பற்றிப் பிறகு பேசும்போது இந்தப் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் பூர்வபீடிகைகளை நினைவில் வைத்துக்கொண்டு பேசவேண்டும். அதேபோல் ஜே.ஜே எதிர்பார்க்கும் எழுத்து என்பது என்ன என்பது பற்றியும் கொஞ்சம் பின்னால் பேசவேண்டியிருக்கிறது (9-34 பார்டர் தாண்டக்கூடாதே!).

    (பக்கம் 29) கற்பனைக் காட்டில் வேட்டியைக் கிழித்துக்கொண்டு அங்குமிங்கும் பாயும் பைத்தியங்களின் முதுகில்…:
    சுரா நம்மிடம் நேரடியாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டே போவதும், போதனை வடிவிலேயே பேசுவதுமாகப் பல இடங்கள். தற்குறிப்பேற்றி ஜே.ஜே. சொன்னதாக சுரா சொல்லும் இந்தக்கருத்து பற்றிக் கொஞ்சம் பேசவேண்டும். சரித்திர நாவல்கள் பற்றி மிகத் தெளிவான கருத்துகள் வைத்திருக்கிறார் சுரா. இவர் குறிப்பிடுவது கல்கியா சாண்டில்யனா என்று தெரியவில்லை. ஆனால், அவ்வளவு வீராவேசமாக இக்கதைகளை ஒதுக்கிவிடமுடியுமா? கல்கி அனைத்தும் குப்பையா? பொன்னியின் செல்வனுக்கு நாவல் உலகில் எந்த ஒரு relevance-உம் இல்லையா? எப்போதுமே அவ்வளவு காத்திரமான சிந்தனைகளோடு உலகையும் தன்னையும் உய்விக்கும் எண்ணங்களோடேதான் அலையவேண்டுமா?

    சிறந்த நாவல் என்று தொடக்கத்தில் சொல்லிவிட்டு வரிசையாக சொட்டை சொள்ளை சொல்வதாக எண்ணவேண்டாம். ஜே.ஜே என்மட்டில் ஒரு மிகச்சிறந்த நாவல். சந்தேகமேயில்லை. எவ்வளவு சிறந்த நாவல் எனில், அதன் சிறப்புப் பற்றிப் பேசுவதே redundant-ஆகத் தோன்றுகிறது எனக்கு. எனவே, எனக்கு எழுந்த கேள்விகளையே சொல்ல விழைந்தேன். கேள்விகள் எழுப்புவதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான நாவலைப் பற்றிக் கேள்விகள் எழுப்புவதே அதற்கு மரியாதை செய்வதாகும் என்று தோன்றுகிறது.

  13. தமிழ் வலைப்பதிவு » சுந்தர ராமசாமி நினைவாக.. Says:

    […] ஜே.ஜே. சில குறிப்புகள் - 2 […]

Leave a Comment

Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.