முதல் வணக்கம்!
புத்தகவாசம்
தமிழ் புத்தகங்களை வாசித்து விவாதிக்க உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுப் பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன்.
-->Posted in பொது |
7 Comments »
-->
புத்தகவாசம்
தமிழ் புத்தகங்களை வாசித்து விவாதிக்க உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுப் பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன்.
-->Posted in பொது |
7 Comments »
புத்தகவாசம்
Tamil Book Club என்ற பெயரை விட ‘புத்தகவாசம்’ என்ற பெயர் நன்றாக இருக்கிறது.
Wordpressஐப் பழகிக்கொண்டிருக்கிறேன். யூனிகோடு நன்றாக இருக்கிறது. சுரதாவின் ‘பொங்குதமிழ்’ செயலியையும் பூட்டிவிட்டால் அனைவரும் யூனிகோடில் எழுதலாம். செய்யவேண்டும்.
சோதனைகள் தொடர்கின்றன.
-->Posted in பொது |
6 Comments »
புத்தகவாசம்
ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழிலும் புத்தகங்களை வாசித்து அலசியாராய்ந்து அனுபவிக்க ஒரு குழுமம் இருந்தால் என்ன என்று தோன்றியது. அதன் செயல்வடிவமே இந்த கூட்டு வலைப்பதிவு. ஊக்கமளித்து உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
பொதுவாக எனக்குத் தெரிந்தவரையிலும் நண்பர்கள் சொன்னதையும் வைத்து சில விதிகளை உருவாக்கியிருக்கிறேன். அனுபவங்கள் சேரச்சேர, விதிகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இப்போதைக்கு இருக்கும் விதிகள்
ஒரு புத்தகத்தை படிக்க எடுத்துக் கொண்டால், விவாதங்களை வழிநடத்திச் செல்ல ஒரு நிர்வாகி இருப்பார். அவர், ஏற்கனவே அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பவராதலாம் புத்தகத்தைப் பற்றிய அறிமுகமும், ஆழமான தர்க்கரீதியான விமர்சனமும் தருவார்.
புத்தகவாசத்தில் இணைந்து படிக்க விழைபவர்கள் அவர் சொல்லும் வேகத்தில் செல்வது நல்லது. உதாரணமாக இந்த வாரம் 50 பக்கங்கள் என்றோ 3 அத்தியாயங்கள் என்றோ கூறினால் அந்த வேகத்தில் படித்தல் நன்று. இது குழுமத்தில் விவாதிப்பதற்கு உதவும். அதற்கு மேலும் படிக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அப்படிப் படித்த பக்கங்களில் ஏதேனும் திருப்புமுனையோ, விவாதத்திற்குரிய கருத்தோ இருந்தால் மற்றவர்கள் படிக்க முதல் வெளியே விடாமல் காக்க வேண்டும்.
புத்தகவாசத்தில் முதலில் எடுக்கப் படும் நூல் - சுந்தரராமசாமி எழுதிய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’
விவாதத்தைத் தொடக்கி வழிநடத்துபவர் - இரா.முருகன்
தொடங்கும் நாள் - ஞாயிற்றுக்கிழமை 20 பெப்ரவரி, 2005
-->Posted in அலசல்-பழையது |
7 Comments »
இரா.முருகன்
மதிக்கு நன்றி.
இந்தக் கலந்துரையாடலை நடத்திப் போகும் முன், ‘to keep us all at the same page (literally too!) -
என்னிடம் இருக்கும் பதிப்பு -
நூல் : ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு எண் : ஆறாவது பதிப்பு
வெளியீடு : செப்டம்பர் 2004
பக்கங்கள் : 184
இந்தக் கலந்துரையாடலுக்கு நான் ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் :
1) இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டும்போது செப்டம்பர் 2004 பதிப்பிலிருந்து பக்க எண்கள் தரப்படும். இந்தப் பக்க எண்கள் முந்திய பதிப்புகளில் மாறி இருக்கலாம். எனவே பக்க எண்ணோடு கூடவே அத்தியாய எண்ணும் தரப்படும். அதை வைத்து மேற்கோள் எங்கிருந்து என்று பழைய பிரதி வைத்திருப்பவர்களும் எளிதில் கண்டுகொள்ளலாம்.
2) மேற்கோளின் முதலில் வரும் சில சொற்களும் பின்னர் ‘……..’ என்ற குறிப்பும் தொடர்ந்து மேற்கோளின் இறுதி வரிகளும் மட்டும் குறிப்பிடப்படும். முழுமையாகத் தட்டச்சு செய்யும் வேலையைக் குறைப்பதற்காகவே இந்த ஏற்பாடு.
3) புத்தகம் தற்போது கைவசம் இல்லாத நண்பர்களில் யாராவது முன்னர் படித்த நினைவோடு கலந்து கொள்ள வரும்போது, இந்த வரிகளில் சொல்லப்பட்டது மறந்து போயிருந்தால், அவர்களுக்கு விவாதத்துக்கு இடையே, பங்கு பெறும் வேறு யாராவது அந்த வரிகளை முழுமையாகத் தட்டச்சு செய்து அளித்து உதவலாம்.
4) புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படிப்போம். ஏழு அல்லது எட்டு வார இறுதிகளில் இதை நிறைவு செய்யத் திட்டம். இந்த வாரம் இந்தப் பகுதி என்று அறிவிக்கப்படும் (உதாரணம் ‘அத்தியாயம் எட்டும் ஒன்பதும்’). அடுத்த வாரம் வரை அந்தப் பகுதி விவாதிக்கப்படும். அந்தப் பகுதி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்போது அந்தப் பகுதியையும், அதற்கு முந்திய பகுதிகளையும் பற்றிச் சொல்லலாம். ஆனால் அடுத்து வரப்போகும் பகுதி பற்றிப் பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும் - குவியம் மாறாமல் இருக்கும்.
5) ஒவ்வொரு வாரமும் நான் சில பக்கங்களிலிருந்து (வரிசை மாறாமல் இருக்கும் இது) சில மேற்கோள்களைக் காட்டி வினாவாகவும், உரத்த சிந்தனையாகவும், விமர்சித்தும், சிலாகித்தும் சொல்லக் கூடும். மற்றவர்கள் இவற்றையே வெட்டியும் ஒட்டியும் பேச வேண்டும் என்றில்லை. ஆனால் அந்த வாரத்துக்கான லட்சுமண ரேகையைத் (விதி எண் #4 காண்க) தாண்டக்கூடாது. அவ்வளவுதான்!
6) சு.ரா எழுதிய வேறு புத்தகங்கள், அந்தந்த வாரப் பகுதியைப் படிக்கும்போது தமிழ், பிறமொழி இலக்கியங்களில் ஒத்த சிந்தனையுடைய, முற்றிலும் எதிர் சிந்தனை கொண்ட பகுதிகள் பற்றி எல்லாம் பேசலாம்.
7) ஜே.ஜே படிக்காதவர்கள் மேற்குறிப்பிட்ட விதி எண் # 6-ன் படி ஆட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள்
மற்றபடி, அவர்கள் படிக்காத ஜே.ஜே பற்றி விவாதிக்க மாட்டார்கள் என்பது எனக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும்.
அத்ரயே உள்ளு. ஜே.ஜேவைச் சந்திக்கப் போகலாமா (அடுத்த கடிதத்தில்)?
அன்புடன்,
இரா.மு
Posted in அலசல்-பழையது |
1 Comment »
இரா.முருகன்
ஜே.ஜே 1981-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. கிட்டத்தட்ட ஒரு அக்ஞாத வாசத்திற்குப் பிறகு பீறிட்டுக் கிளம்பிய இந்தப் புதினம் சு.ராவைத் தமிழ் இலக்கியத்தில் மிக உயர்ந்த தளங்களுக்கு எடுத்துச் சென்றது.
1) ஜே.ஜேயில் அவருடைய மொழிநடை, கதைக்கப்படும் பொருள், உத்தி எல்லாமே அதுவரை அறிமுகமாகியிருந்த சு.ராவிடமிருந்து வேறுபட்டவை. அவரை ‘புளிய மரத்தின் கதை’ மூலமாகவோ, அதற்கு முந்திய ‘பிரசாதம்’ சிறுகதைத் தொகுதி மூலமாகவோ அறிந்த வாசகர்களுக்கு இந்த பாரடைம் ஷிப்ட் பிடித்திருந்தது. ஜே.ஜேக்குச் சற்றே முந்தைய ‘பல்லக்குத் தூக்கிகள்’ இந்த மாற்றத்தைக் கோடிகாட்டியிருந்ததை அந்தத் தொகுப்பைப் படித்த வாசகர்கள் உணர்வார்கள்.
ஒரு விதத்தில் படைப்பாளியின் படைப்பில் இப்படியான காலப் பரப்பில் ஒத்திசையும் வளர்சிதை மாற்றத்தின் பிரதிபலிப்பு நிகழ்வது தவிர்க்க முடியாயததுதான்.
எனக்குத் தெரிந்து ஒரு விளம்பரம் முப்பது வருடமாகப் பத்திரிகைகளில் ஒரு எழுத்து கூட மாறாமல், நீள அகலம் குறையாமல், பத்திரிகையின் ஒரே பக்கத்தில் ஒரே மாதிரி வெளிவந்து கொண்டிருக்கிறது. அது விளம்பரப் படுத்தும் பொருள் ஒரு களிம்பு - ஒரே இடத்தில் ஆசுவாசம் அளிப்பது.
ஹெடன்ஸா தான் அந்த ஆயிண்மெண்ட் - மூல நோக்காட்டுக்கானது.
ஹெடன்ஸா படைப்புகளாக எழுதி ஒரே வகை ஆசுவாசம் தரவேண்டும் என்று படைப்பாளியிடம் எதிர்பார்க்க முடியாது!
கேள்வி - ஒரு படைப்பாளியின் படைப்பு முறை சார்ந்த மாற்றங்கள் ஒற்றைப் பாய்ச்சலில் நிகழ்வதும், மெல்ல மெல்ல நிகழ்வதும், நிகழாமலே இருப்பதும் எந்தக் காரணிகளை அடிப்படையாக வைத்து நிகழ்கின்றன? (எழுத்தாளன் என்ற முறையில் என் அனுபவத்தை இங்கே அப்புறம் பதிகிறேன்).
**********************************
இன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் பகுதி - அத்தியாயம் ஒன்று
(பக்கம் 9-லிருந்து பக்கம் 34 வரை)
2) சு.ராவின் முதல் நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ படித்திருக்கிறீர்களா? அதில் கையைப் பிடித்துக் கூட்டிப் போகும் எளிமையும், கூட வருகிறவருக்கு ஒரு விஷயத்தை அறியத் தருவதில் இருக்கும் உற்சாகமும் பொங்கி வரும். ஜே.ஜே எழுதிய சுந்தர ராமசாமி, முப்பது வருடம் முந்திய புளியமரக் கதைக் காரர் சுந்தர ராமசாமியோடு வேறுபடுகிறாரா?
உதாரணத்துக்கு இந்தத் தொடக்கத்தைக் கவனியுங்கள் -
ஜோச·ப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5-ம் தேதி, தனது 39-வது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான் …………. நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். (பக்கம் 9-10; அத்தியாயம் 1)
இதில் கதைத் தன்மை இருக்கிறதா? அல்லது அந்த அ-கதை (கிட்டத்தட்ட கட்டுரை) அமைப்பு, கதையாடலில் இன்னொரு வடிவமா?
காம்யு பற்றி சு.ரா இன்னொரு படைப்பில் கிண்டல் தொனியோடு குறிப்பிடுவார். எந்தப் படைப்பு அது?
**************************************
3) மேற்கோள்
மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள் தமிழில் எழுதுவதால் நமதாகி விடுமா? (பக்கம் 10 - அத் 1)
முதல் முறை படித்ததும் எல்லோரையும் பிடித்து நிறுத்தும் வாக்கியம் இது. பல பேர் பலமுறை படித்து, எடுத்துக்காட்டாகக் காட்டி ஒரு cult status இதற்கு வந்துவிட்டது.
கால இடைவெளி விட்டு (சில ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளலாம்) திரும்பப் படிக்கும்போது இது கதையாடலிலிருந்து ஒற்றைப்பட்டுப் போய், அது தரும் அதிர்ச்சி மதிப்புக்காகவே இங்கே போட்டது போல் தொனிக்கிறதா?
அல்லது அந்த மொழி, தொனி சார்ந்த அதிர்ச்சியை விதைத்துப் போவதுதான் சு.ராவின் நோக்கமா?
இரா.மு
-->Posted in அலசல்-பழையது |
13 Comments »