Archive for the ‘தமிழ் இணையம்’

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

Blog Day 2007 - வலைப்பதிவுகள் தினம் 200709.02.07

நேற்றைக்கு வலைப்பதிவர்கள் தினம்.

கடந்த சில மாதங்களில் எனக்கு அறிமுகமான தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இங்கே சிறு குறிப்பாகவாவது குறித்து வைக்க விழைகிறேன்.

blogday2007.gif

ஆடுமாடு - http://aadumaadu.blogspot.com

கிராமங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று, என்னுடைய வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. புங்குடுதீவில் வசித்த சில வருடங்கள், இன்றைக்கும் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கின்றன. இன்றும் அக்கம் பக்கம் இருக்கும் மேற்கத்தேய கிராமங்களுக்குப் போய்வருவது பிடித்தமாக இருக்கிறது. உலகமெங்கும் ஒவ்வொரு கண்டமாகப் போய் கிராமங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கிறது. கிராமியப் படங்கள் எந்த மொழியில் இருந்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்க்கப் பிடித்திருக்கிறது. எல்லாக் கிராமங்களையும் விட ஈழத்துக் கிராமங்களையொத்த தமிழ்நாட்டுக் கிராமங்களின் மீது பிரத்தியேக விருப்பு இருக்கிறது.

தமிழில் அவரவர் கிராமங்களைப்பற்றியும் அனுபவங்களைப்பற்றியும் பதியும் வலைப்பதிவர்களைப்பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். அந்த வரிசையில் ஜூலை மாதம் வலைபதியத் தொடங்கிய ‘ஆடுமாடு’ என்னும் வலைப்பதிவர்.

அவரது வலைப்பதிவின் தொடக்கத்தில் எழுதியிருக்கும்

இது மேய்ச்சல் காடு. கயிறு அவிழ்க்கப்பட்டதும் மேய்ச்சலுக்குத் தயாராகிற மாடு, ஆடுகளின் வாழ்க்கைதான் நமக்கும். குறுணி நிலத்தில் முதுகு குனிந்து முத்தெடுக்கிற அந்த மேய்ச்சல் காரர்களின் வாழ்க்கையை எழுத பேனாக்கள் போதாது. இது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம். முங்கினால் உங்கள் முகம் காணலாம்.

அறிமுகமே மனதை இதமாக்குகிறது. உங்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு உடனே வயக்காட்டுக்குப் போனமாதிரி இருந்தது.

திருநெல்வேலி மூலையில் இருக்கும் அவருடைய கிராமத்தைப்பற்றியும் அந்தக் கிராமத்து ஆடுமாடுகளைப்பற்றியும் அவ்வப்போது மனிதர்களைப்பற்றியும் வெகுசுவாரசியமாகச் சொல்லுகிறார். முதல் இடுகையில்,

திருநெல்வேலியின் மூலையில் இருக்கிற எங்கள் கிராமம் மாடுகளால் சூழ்ந்தது. கிழக்கு மேற்கு , தெற்கு,வடக்கு என எங்கு திரும்பினாலும் ஆடு மாடுகள் சாவாகசமாக அலைந்து கொண்டிருக்கும். அலைந்து கொண்டிருக்கும் என்பது கூட கொஞ்சம் நாகரிகம் கருதி சொல்லும் வார்த்தைதான். டவுண் பஸ்காரர்கள் பா்ஷையில் சொல்வதென்றால் ‘ஆக்கங்கெட்டதுவோ எப்ப பார்த்தாலும் நம்ம பிராணனை வாங்குதுக்கே வருதுவோ”.
காலையில் பத்து மணிவாக்கில் மாட்டுக்காரர்கள் மேய்ச்சலுக்கு தயாராகிவருவதே ஏதோ போருக்கு போவது போலத்தான் இருக்கும்.
”ஏல…ஆத்துக்கு மேப் பக்கம் மாட்டை பத்திராதே, சுப்பையா தேவன் நேத்தே பொலம்பிட்டு இருந்தான் வயல்ல விழுந்துட்டுன்னு. பாத்துக்கோ. இல்லைனா அவன் எழவுல நிக்க முடியாது” என்று ஒரு பெரிசு காது கிழிய கத்தும்…

இங்கிருந்து ஒரே வேகம் வேகம் வேகந்தான். என்ன ஒன்று, குட்டிக்குட்டி இடுகைகளாக இருக்கின்றன. என்னை மாதிரி நீளமான இடுகைகளை அதுவும் இந்தமாதிரியான சுவாரசியமான விசயத்தை உம்கொட்டிக் கேட்க விரும்பும் ஆளுக்குக் கொஞ்சம் கஷ்டந்தான். அடுத்த இடுகை எப்ப வரும்னு காத்திருந்து படிப்பதுவும் சுகமாகவே இருக்கிறது.

சமீபத்தில் எழுதிய ஒரு இடுகையில் ஒரு சிறு பகுதி இங்கே:

அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள். வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை. எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது. எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான வி்ஷயங்கள் தூரமானது. ரசிப்பதையே, ‘ஓ இதுதான் ரசனையா’ என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.
அப்போதுதான் தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை. அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை. எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவின் அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி?ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ?ரின் அடர்த்தியி?ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.

அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்தும் அந்தப் பசுவை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன. மாடுகளின் பார்வை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

மிகுதியை இங்கே படிக்கலாம். தொடர்ந்து அவருக்கு வந்த கனவை அருமையாக எழுதியிருக்கிறார்.

மேலும் சில சுவாரசியமான வலைப்பதிவுகள்

குப்புசாமி - http://mooligaivazam-kuppusamy.blogspot.com

வரகம்பாடி என்ற ஊரில் விவசாயம் செய்யும் குப்புசாமி என்ற விவசாயி, அவர் வளர்க்கும் மூலிகைகளைப்பற்றி எழுதி வருகிறார். மூலிகைகளைப்பற்றி முன்பு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதி வந்தாலும், நேரடியாகப் பயிர் செய்யும் ஒருவர் எழுதுவது சிறப்பான ஒரு விதயம். படங்களுடன், அறிவியற் குறிப்புகளும் விவசாயக்குறிப்புகளும் கலந்து எழுதி வருகிறார். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. தூதுவளை பற்றி இவர் எழுதியிருக்கும் இடுகை இங்கே

-o0o-

பைத்தியக்காரன் - http://naayakan.blogspot.com

பைத்தியக்காரன் என்ற புனைபெயர் + நாயகன் என்ற வலைப்பதிவு சகிதம் வலைபதியும் இவர் ஒன்றும் பைத்தியக்காரல்ல. இவரின் முதலாவது இடுகையில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்

ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி…

விநாடிதோறும் சிதைந்து கொண்டிருக்கிறேன்.

ஒருபோதும் என்னால் மனிதனாக இருக்க முடியாது என்பதால்தான் என்னை பைத்தியம் என அழைத்துக் கொள்கிறேன். மனம் பிறழ்ந்த நிலையில் மட்டுமே வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், வார்த்தைகளில் என்ன இருக்கிறது?

எனது மொழியை, எனது சிந்தனைகளை, எனது புத்தகத்தை, எனது காதலை, எனது காமத்தை… என்றுமே நான் தீர்மானித்ததில்லை. சுயமாக இருப்பதாகவும், சுயமாக சிந்திப்பதாகவும் நம்புவதில் இருக்கும் சுகமே ‘பிதற்றலுக்கு’ காரணம். நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் மத்தியில் ஒவ்வொரு மைக்ரோ விநாடியும் ஊசலாடுவதில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

எனக்கான அப்பம் என்றைக்குமே என் கண்களுக்கு தெரிந்ததில்லை. கைக்கும் எட்டியதில்லை. ஆனால், அடுத்தவனுக்கு கிடைத்த அப்பம் நியான் ஒளியில் என் முன் விஸ்வரூபம் எடுத்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் அது போல கிடைக்கும் என நம்பச் சொல்கிறது. இரவில் வெந்து தணியும் என் உடலுக்கு ஊடகத்தில் ஊசலாடும் பெண்களே மருந்து தடவுகிறார்கள். அல்லது ‘யாரோ’ அவர்களிடம் மருந்து போட்டுக் கொள்ளும்படி என் ஆளுமையை வளர்க்கிறார்கள். நான் யாருடன் பேச வேண்டும் என்பதை என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளே தீர்மானிக்கின்றன. அந்த அழைப்பை ஏற்பதும், மறுப்பதும் மட்டுமே எனக்கு கிடைத்த சுதந்திரம்.

வார்த்தைகளின் தாக்குதலில் மனம் சிதைவுறும்போது பிதற்றல்களே மறுமொழியாகிறது. கனவுகளைக் கூட அதிகாரங்களே தீர்மானிக்கும் நேரத்தில் உரக்கச் சொல்கிறேன்… நான் மனிதனல்ல. பைத்தியக்காரன்….

உங்களுக்கு இருக்கும் ‘சுதந்திரத்தை’ நான் மதிக்கிறேன். இதில் வரும் பிதற்றல்களை படிப்பதும், படிக்காமல் விடுவதும் உங்கள் விருப்பம். அதேநேரம், எனக்கு வழங்கப்பட்டிருக்கும் ‘சுதந்திரத்தை’ நீங்களும் மதிப்பீர்கள் என நம்புகிறேன். அதுசரி, உண்மையில் நமக்கு ‘சுதந்திரம்’ இருக்கிறதா என்ன?

கண்காணிப்பின் அரசியலில் பைத்தியமே எதிர் அரசியல்…

மீதி இடுகைகளை இங்கே படிக்கலாம்.

-o0o-

tbcd - http://tbcd-tbcd.blogspot.com
மலேசியாவிலிருந்து வலைபதியும் tbcd மலேசிய அனுபவங்களைப்பற்றி அவ்வப்போது எழுதி வருகிறார். எ.கா

-o0o-

பாரி.அரசு - http://pktpariarasu.blogspot.com: குறிப்பாகப் படிக்க வேண்டியது, விடுதலை கிடைத்துவிட்டதா இடுகை

ஜப்பானிய மொழி கற்றுத்தராத திராவிட ஆட்சியாளர்கள் ஒழிக

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில்

-o0o-

தாசன் - http://thasanonline.blogspot.com

துபாயிலிருந்து வலைபதியும் தாசன், எங்களூர்த் தமிழில் எழுதிய ஒரு இடுகை. துயாயில் வந்திறங்கியமே ஏற்பட்ட ஈழத்தமிழ் Xஇந்தியத்தமிழ்க் குழப்பங்களைப்பற்றி இங்கே எழுதியிருக்கிறார்.

-o0o-

http://vrkathir.blogspot.com

சுவாரசியமாகப் பல விதயங்களைத் தொட்டும் செல்லும் இவர், அவ்வப்போது இஸ்ரேலில் வேலை செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார். ஒன்று பசியைத்தீர்த்தவர்களைப்பற்றி. இரண்டாவது தற்பால் நாட்டமுள்ளவர்களைப்பற்றி நம்மூரில் நிலவும் எண்ணம் குறித்து

-o0o-

ஏவிஎஸ் - http://thabaal.blogspot.com

ஞாயிறு தபால் என்று வலைப்பதிவிற்குப் பெயரிட்டுப் பெரும்பாலான ஞாயிறுகளில் எழுதும் இவர் நெல்லையில் பிறந்து இப்போடு தொழில் நிமித்தம் உலக நாடுகளைச் சுற்றி வருபவர். அவருடைய அனுபவங்களைச் சுவாரசியமாக எழுதுகிறார்.

-o0o-

சிவகாசி ஸ்ர்னிவாசன் - http://yaathumoore.blogspot.com

சிக்காகோவிலிருந்து வலைபதியும் இவர், இப்போது இவருடைய சௌதி அனுபவங்களை எழுதி வருகிறார். காழ்ப்புணர்ச்சிகள் இல்லாமல், அனுபவங்களைப் பதிவதுபோலத் தோன்றுகிறது. சௌதியில் ஒட்டகம் மேய்க்கும் தமிழர் ஒருவரைச் சந்தித்தது பற்றி இங்கே எழுதியிருக்கிறார்.

-o0o-

இ.கா.வள்ளி - http://malargall.blogspot.com

பெங்களூரில் இருந்து வலைபதியும் இ.கா.வள்ளி சமீபத்தில் அவருடைய அனுபவமொன்றை எழுதியிருந்தார். லேசான கிண்டல் கலந்து எழுதியிருந்தாலும், நம்மூரில் இருக்கும் இதுபோன்ற பழக்கங்கள் நினைவில் வந்து போயின. குடகுமலைக்குப் போய் வந்த அனுபவம் சுவாரசியம்

-o0o-

பெப்ரவரி மாதத்தில் இருந்து வலைபதியும் நந்தா< ./a>, மே மாதத்திலிருந்து வலைபதியும் நீண்டநாள் வலைப்பதிவு வாசகர் வெய்யிலான் - வெய்யிலானின் சமீபத்தைய இடுகை அவருடைய சொந்த ஊரான விருதுநகரைப் பற்றியது. சுவாரசியமாகச் சுற்றிக் காட்டியிருக்கிறார். இவருடைய ‘சுருட்டுக்கடை’ என்றொரு இடுகையை மொழிபெயர்த்து குளோபல்வாய்ஸ் ஆன்லைனில் இட்டபோது படித்த அனைவரும் பெரிதும் பாராட்டினார்கள். கச்சிதமாகக் கதை சொன்னவிதம் அனைவரையும் ஈர்த்திருந்தது.

இதுபோக ‘அடர்கானகப் புலி’ அய்யனார் போன்று இவ்வருடம் வலைபதிய வந்து வெகுவிரைவில் பலருக்கும் தெரிந்த பெயராகிப் போனவர்கள் பலரும் இருக்கிறார்கள். சமீபத்தில் வலைபதிபவர்கள் யாரையாவது விட்டிருந்தால் சொல்லுங்கள்.

Posted in அனைத்து இடுகைகள், தமிழ் இணையம்with 10 Comments →

தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக: இயற்கை07.18.07

iyarkai1.jpg
Link: http://mathy.kandasamy.net/musings/wp-content/uploads/2007/07/iyarkai1.jpg

null
Link: http://mathy.kandasamy.net/musings/wp-content/uploads/2007/05/ilai.jpg

http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_17.html

கரு (theme) = இயற்கை
குறிப்பு: எந்த விதமான மேற்பூச்சுகளும் செய்யப்படவில்லை.
கமெரா: HP R607

Posted in அனைத்து இடுகைகள், தமிழ் இணையம், புகைப்படங்கள்with 3 Comments →

  • You Avatar
    -


Creative Commons License