Archive for the ‘படித்தவை_பிடித்தவை’

காலம் இதழில் வெளியான லஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான நேர்காணல்06.10.08

நேர்காணல்: மு. நித்தியானந்தன்

தமிழின் நவீன எழுத்துக்களைத் தனது நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் மூலம் உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டுசென்ற சாதனையை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்த்தி வருகிறார். புதுமைப்பித்தன், மௌனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் ஆகிய தமிழின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளை இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் தமிழர் அல்லாத வாசகர்கள் அறிந்துகொள்வதற்கான சாளரங்களை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் திறந்துவிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் ஓர் அழகிய, இதமான வெய்யில் மின்னிக்கொண்டிருந்த காலைப்பொழுதில் லண்டனிலிருந்து மேற்கே விரியும் அழகிய வெளிகளையும், பச்சைப்பசேல் என்ற நிலத்தோற்றத்தையும் ரசித்தபடி மூன்று மணிநேரக் கார்ப் பயணத்தின் பின் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமின் நோரிச் (Norwich) இல்லத்தைச் போய்ச்சேர்ந்தோம். பலமுறை சென்ற வீடுதான் அது. இந்தமுறை ‘காலம்’ இதழுக்கான விசேட நேர்காணலுக்;காகச் சென்றிருந்தோம். வ. பவகரன், மு. புஷ்பராஜன், இ. பத்மநாப ஐயர் ஆகியோர் இந்த நேர்காணலின்போது உடனிருந்தார்கள். லக்ஷ்மியின் ஐந்து பெரிய அறைகளைக் கொண்ட அந்த வீடு முழுவதும் புத்தகங்களால் நிரம்பி வழிகிறது. லக்ஷ்மியோடு அவரது கணவர் மார்க் ஹோம்ஸ்ட்ரோம் இனிய புன்னகையுடன் எங்களை வரவேற்றார். அவர் சமூக மானிடவியலில் கலாநிதிப் பட்டம் (Ph.D.) பெற்று, கிழக்கு அங்கிலியாப் பல்கலைகக் கழகத்தில் (University of East Anglia)) மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்தியாவில் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆங்கிலத்தில் நூல்களை எழுதியிருக்கிறார். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் பேட்டிகள், மேடைகள், விளம்பரங்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்ட எளிமைகொண்டவராகத் திகழ்பவர். மிகுந்த சங்கோசத்துடன் இந்தப் பேட்டிக்கு இணங்கினார் என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் இந்த உரையாடலைத் தொடர்ந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.


கேள்வி: உங்களின் கல்விப் பின்னணி பற்றி முதலில் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்.

பதில்: எனது ஆரம்பக் கல்வி பெங்களூரில் அமைந்தது. அப்போது பெங்களூர், சென்னை மாநிலத்தின் கீழ் இருந்த காலனித்துவ காலம். அப்போது பெங்களூர் கன்ரோன்மன்ற் பகுதி முழுவதுமே தமிழ் சார்ந்ததாகத்தான் இருந்தது. நான் மிகச்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றாலும் அதற்குச் சமமான தமிழ்ப் பயிற்சியும் எனக்கு பெங்களூரில் கிடைத்ததைச் சொல்லவேண்டும். மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர்கள் எங்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்பித்தார்கள். கம்பனையும் சிலப்பதிகாரத்தையும் சிறப்பாகக் கற்பித்தனர். எனது இன்ரமீடியற் பாடத்திட்டத்திற்கு ஆங்கிலத்துடன் தமிழையும் நான் ஒரு பாடமாகக் கொண்டிருந்தேன். எங்களது இந்த இலக்கிய ஆர்வத்திற்கு எங்களது குடும்பப் பின்னணி பெருமளவு காரணமாக அமைந்தது. எனது தந்தை சமஸ்கிருதத்திலும், ஒப்பியல் சமயத் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எனது சகோதரி சமஸ்கிருதத்தை நன்கு கற்று, பாளி மொழியில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராகத் திகழ்கிறார். ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற நான், எனது பட்டப் படிப்பை முடித்த பின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் எனது முதுமானி (M.A.) பட்டத்திற்கான பயணத்தைத் தொடர்ந்தேன். பாரம்பரிய ஆங்கில ஆராய்ச்சிமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை எனது ஆராய்ச்சிப்பொருளாக நான் எடுத்தபோது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வியப்படைந்தது என்றே கூறவேண்டும். எனது ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஓர் இரவு விருந்துபசாரத்தின்போது, ஆர். கே. நாராயணன் என்ற எழுத்தாளர் பற்றி லக்ஷ்மி ஆராய்ச்சி செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்தப் பெயரை யாராவது கேட்டிருக்கிறீர்களா என்று அங்கு இருந்தவர்களிடம் வினாவினார். நல்லவேளையாக அங்கிருந்த ஒருவர் நான் ஆர். கே. நாராயணனின் Bachelor of Arts என்ற நாவலை வாசித்திருந்ததாகக் கூறி, எனது மரியாதையைக் காப்பாற்றினார். அறுபதுகளில் இந்திய வாழ்க்கையை ஆங்கிலத்தில் சித்தரித்த முக்கிய மூலவர்களாக முல்க்ராஜ் ஆனந், ராஜா ராவ், ஆர். கே. நாராயணன் ஆகிய மூவரும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். இந்த மூவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், ஆர். கே. நாராயணனின் படைப்புக்களை ஆய்வுக்கு எடுத்தபோது இந்திய இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியர், Oxford School of Oriental Studies என்ற கல்லூரியின் சார்பாக எனது மேற்பார்வையாளராக அமைந்தார்.


கேள்வி: ஆர். கே. நாராயணனின் ஆராய்ச்சி குறித்த உங்களது ஆய்வேடு நூலாக வெளிவந்திருக்கிறதா?

பதில்: ஆம். அந்த நூல் வெளியாகிப் பல வருடங்களாகிவிட்டன. அந்த நூல் இப்பொழுது எங்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது அந்த நூலை நான் வாசிக்க விரும்புவேனா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. நான் அந்த ஆய்வைத் தொடங்கியபோது இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி முன்னோடி ஆய்வுகள் எதுவும் நடைபெற்றதில்லை. உண்மையில் முற்றிலும் ஒரு புதிய தரத்தில் எனது ஆராய்ச்சியை தொடங்கினேன் என்று நான் கூறுவேன். இந்த ஆய்வையொட்டி ஆரம்பகாலத் தமிழ் நாவல்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ‘கமலாம்பாள் சரித்திரம’;, ‘பத்மாவதி சரித்திரம்’ போன்ற நாவல்கள் என் கவனத்தை ஈர்த்தன. தமிழ் இலக்கியத்துடன் தொடர்ந்து, இந்தியாவில் பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலும் அப்போது நான் ஆர்வம் கொண்டிருந்தேன். இந்த வாசிப்பில் இருந்துதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் தீவிரம் கொள்ள ஆரம்பித்தேன். ஏ. கே. ராமாநுஜத்தின் தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எனக்கு இத்துறையில் உத்வேகம் ஊட்டின.

நான் முதலில் மொழிபெயர்த்த தமிழ்ச் சிறுகதை அம்பையின் ‘மஞ்சள் மீன்’ என்ற சிறுகதையாகும். Virago என்ற வெளியீட்டகத்திற்காக இந்தியப் பெண்களின் தேர்ந்த சிறுகதைகளை தொகுத்து The Inner Courtyard என்ற சிறுகதைத் தொகுப்பு, ஆங்கிலத்தில் வெளியான எனது முதல் நூலாகும். இந்த நூல் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மூலந்தான் அம்பை எனக்கு அறிமுகமானார். அவரது ‘சிறகுகள் முறியும்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பை அடுத்து, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை ‘க்ரியா’ வெளியிட்டிருந்தது. அம்பையின் மொழிபெயர்ப்பை அடுத்து, பாமாவின் ‘கருக்கு’ என்ற நாவலும் மொழிபெயர்ப்பில் செழுமையான அனுபவங்களைச் சேர்த்துள்ளது. தமிழில் எழுந்த தலித் இலக்கிய நூல்கள் இந்திய வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை எனக்கு உணர்த்தின. இமையத்தின் ‘கோவேறு கழுதை’ என்ற நாவலை நான் மிகுந்த ஆர்வத்துடன் மொழிபெயர்த்திருந்தேன். மினி கிருஷ்ணன் பாமாவின் ‘கருக்கு’ நாவலை மொழிபெயர்க்குமாறு கேட்டபோது அந்த மொழிபெயர்ப்பில் நான் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டேன். ‘கருக்கு’ நாவல் மொழிபெயர்ப்பு எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது என்று சொல்லவேண்டும். ‘கருக்கு’ நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது, அது இந்தியாவிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அம்பையும் பாமாவும் இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே அதிகம் பேசப்படும் பெண் எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள் என்றால், அதற்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்தான் ஆதாரமாக அமைந்தன என்று கூறலாம். ‘கருக்கு’ நாவல் ஒரு தலித் பெண்ணின் கோபத்தையும் வலியையும் நேரடியாக, அந்த மண்ணின் மணத்தோடு பேசும் நாவலாகும்.

கேள்வி: தலித் இலக்கியம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: மராத்திய தலித்துகளிடமிருந்து ஊட்டம் பெற்ற தலித் இலக்கியம், இந்தியத் தேசிய அளவில் எழுந்துள்ள எதிர்ப்பு இலக்கிய வடிவமாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் தனித்த ஓர் இலக்கியச் செல்நெறியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இதுகாலவரை தமிழில் நிலவி வந்த இலக்கிய நியமங்களுக்குப் பெரும் சவால்களை விடுத்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கை பற்றிய இந்தப் புதிய விவரணங்கள் தமிழ் வாசகர்களுக்குப் புதியதோர் உலக நோக்கினைத் தந்துள்ளன. மறுபுறம், இலக்கண அமைதி, மரியாதையான மொழிப்பயன்பாடு போன்ற நியமங்களுக்கு மாறாகத் தலித் மக்களுக்கேயுரிய மொழிவழக்கு, செலவடை, நாட்டார் வழக்கு ஆகிய அம்சங்களைக்கொண்டு தலித் இலக்கியம் தமிழிற்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளது. பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ ஆகிய இரு படைப்புகளும் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாயிலாக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறன.

கேள்வி: நவீன தமிழ்ப் படைப்புக்கள் எந்த அளவிற்குத் தமிழர் அல்லாதவர்கள் மத்தியில் அறிமுகமாகி இருக்கிறது?

பதில்: துரதிஷ்டவசமாக இல்லை என்றே கூறவேண்டும். உலகத் தரத்திற்கு இணையாக வைத்துப் பேசக்கூடிய எம் தமிழ்ப் படைப்பாளிகள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியவரவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கிறது. புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற நவீன தமிழ் எழுத்தின் மூலவர்கள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியாதவர் களாகத்தான் இருக்கிறார்கள். வங்காள மொழி இலக்கியத்திலும் உருதுமொழி இலக்கியத்திலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் பெயர்கள் உலக அரங்கில் பரிச்சயம் மிக்க பெயர்களாக இருக்கும் அதேவேளையில் தமிழின் மிக உன்னத எழுத்தாளர்கள் இன்னும் தெரியவராமல் இருப்பது நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்று கருதுகிறேன்.

கேள்வி: தமிழின் நவீன எழுத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட மௌனியின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மௌனியின் கதைகள் மொழிபெயர்ப்புக்கு ஒரு சவாலாக அமைய வில்லையா?

பதில்: உண்மைதான். மௌனியின் எழுத்து சற்றே பூடகமானதும் கவித்துவப் பாங்கானதுமாகும். தன்னுடைய மன உத்வேகத்தை வெளிப்படுத்துவதற்குத் தமிழ்மொழி போதுமானதாக இல்லை என்றுகூட மௌனி குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வசனநடை தனித்துவமானதும் வித்தியாசமானதுமாகும். அவருடைய பல வாக்கியங்கள் perhaps, maybe ஆகிய அர்த்தம் தொனிக்கும் ‘போலும்’ என்று முடிவதைக் காணலாம். வாழ்க்கைக்கும் சாவுக்கும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மங்கலாக்கும் எழுத்து அவருடையது. தமிழின் புனைகதை இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உந்தித்தள்ளிய ஓர் அற்புதமான எழுத்தாளராகவே மௌனியைப் பார்க்கிறேன். இதனைவிட அசோகமித்திரனும் தமிழில் மிக அற்புதமான சிறுகதைகளை வடித்திருக்கிறார் என்றே கூறுவேன். அசோகமித்திரனின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பதில் இரண்டு, மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளார்கள் என்றாலும், அவரது ‘தண்ணீh’; என்ற நாவலை மொழிபெயர்த்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்று கருதுகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல்களில் ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுவேன். தமிழ்மொழியைக் கையாள்வதில் சுந்தர ராமசாமி ஒரு தேர்ந்த சிற்பியைப்போலச் செயற்பட்டிருக்கிறார். அவரது நாவல்களையும் கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்க்கும்போது அவருடன் நான் மேற்கொண்ட உரையாடல்கள் அவரின் மகத்தான ஆளுமையை என்னில் பதியச்செய்துள்ளது. ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ என்ற நாவலின் மொழிபெயர்ப்பை சுந்தர ராமசாமி உயிருடன் இருந்தபோதே முடித்துவிட்டிருந்தேன் என்றாலும் அதனை அச்சில் காண்பதற்கு இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும்போல் தெரிகிறது.

கேள்வி: தமிழ் எழுத்துக்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு இந்திய அளவில் அல்லது ஐரோப்பிய அளவில் எந்தளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்: இந்திய மொழிகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அண்மைக்காலங்களில் பெருமளவில் வெளிவந்தவண்ணமுள்ளன. இந்தியாவில் பல வெளியீட்டு நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளில் தீவிரமாகவே உழைத்துவருகின்றன. Oxford University Press (OUP)> Macmillan, Orient Longman, East West Press, Penguin> Katha, Kali for Women ஆகிய வெளியீட்டகங்கள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டிவருகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் இந்த மொழிபெயர்ப்புக்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஏ. கே. ராமாநுஜன், நோமன் கட்லர் போன்றோரது பெருமுயற்சி காரணமாக இந்திய இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு மிகச்சிறந்த வரவேற்புக் காணப்படுகின்றது. அமெரிக்காவில் இடம்பெற்ற எழுத்தாளர்களின் பட்டறை ஒன்றில் புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் நான் வாசித்தபோது அந்த அரங்கு மிகுந்த அமைதியுடன் அக்கதையை ஆர்வத்துடன் கேட்டது. மிக அற்புதமான கதை இது, என்று அந்த அரங்கில் குழுமியிருந்த ஆங்கில எழுத்தாளர்கள் பாராட்டினார்கள். தமிழில் மிகச்சிறந்த எழுத்துக்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் வெளியாகவேண்டிய தேவை உள்ளது. பெருமளவு மொழிபெயர்ப்புக்கள் கிடைக்கும்போதுதான் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய சித்திரம் ஒன்று உலக வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடியதான சூழல் உருவாகும். இந்தப் பணி மிகுந்த உழைப்பையும் தீவிர அர்ப்பணிப்பையும் ஈ:டுபாட்டையும் கோரி நிற்கிறது. தமிழில் இன்று மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குலகின் வாசிப்பிற்கு உகந்த வகையில் இம்மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்வதும் அவசியமாக அமைகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் புகழ்பெற்ற Heinemann பதிப்பகத்தினர் இந்திய நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். முதலில் ஆறு இந்திய நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தமிழில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்ற நாவலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். திட்டமிட்டபடி ஆறு நாவல்கள் வெளியாகின எனினும், அவை போதுமான அளவிற்கு ஆங்கில வாசகப் பரப்பில் வரவேற்பைப் பெறாததால் அவர்களின் பாரிய மொழிபெயர்ப்புத் திட்டம் கைவிடப்பட்டமை மிகப்பெரிய துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.

கேள்வி: ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்: ஈழத்து அரசியலும் இலக்கியமும் எனக்கு மிக அண்மையில் பரிச்சயமானதொன்றாகும். பத்மநாப ஐயர் மூலமாகவே ஈழத்துக் கவிதைகளில் எனக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது. ஈழத்திற்குப் பயணம் செய்து ஈழத்துத் தமிழ் ஆய்வாளர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு அவராலேயே கிடைத்தது. ஈழத்தின் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் எனது அக்கறையைப் பெரிதும் ஈர்த்தன. ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பது, அவற்றின் அரசியல் பின்னணியில் பார்க்கும்போது கவலை தரும் ஒன்றாகும். ஈழத்தின் கணிசமான பெண் எழுத்தாளர்களின் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு மகிழ்ச்சி தருவதாகும்.

கேள்வி: மொழிபெயர்ப்புக்களை புதிய சிருஷ்டி முயற்சியாக நோக்குகிறீர்களா?

பதில்: மொழிபெயர்ப்பு இயந்திரீகமாகச் செய்யும் ஒன்றல்ல. ஒரு மொழியின் அர்த்த சாயல்களை, வேறுபாடுகளை நுணுகி விளங்கி, மூலநூலுக்கு விசுவாசமாக நின்று வேறொரு மொழியில் பேசும் முயற்;சி;;. ஒரு புதிய சிருஷ்டியை ஆக்குவதுபோலத்தான். மூலநூலினுடைய உள்ளார்ந்த குரலையும் நடையையும் மற்றுமொரு மொழியில் சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு மொழிபெயாப்ப்பாளரின் முன்னுள்ள சவாலாகும். ஒரு மொழிபெயர்ப்பாளன் ஒரு கண்ணாடிபோலச் செயற்படுவதில்லை. மூலநூலினை நன்கு கிரகித்து அதற்கு விளக்கம் தரும் ஒருவராகவும் அவர் அமைகிறார். மொழிபெயர்ப்பாக்கம் என்பது ஒரு புதிய சிருஷ்டியாகவே அமைந்துவிடுகிறது.

கேள்வி: இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்கள் இந்தியாவில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றுவருகின்றன?

பதில்: மொழிபெயர்ப்புக்கள் பெருமளவில் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் இன்னும் மொழிபெயர்ப்புக்கள்மீது தீவிரமான அக்கறை காட்டப்படவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து மிகச்சிறந்த மொழிபெயர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இந்தியாவின் இந்த மொழிபெயர்ப்புக்களின் வாசகப் பரப்பு எத்தகையது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். மொழிபெயர்ப்புக்களின் தாரதம்மியம் ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும், மொழிபெயர்ப்புக்கள் எவ்வாறு வாசிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் ஆய்வுகள் தேவை. பல்வேறு மொழிகள் பயில்கின்ற இந்தியா, மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மிகச்சிறந்த இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உலகிற்கு இன்னும் தெரியாவதவர்களாவே இருக்கிறார்கள். தேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த மொழிபெயர்ப்புக்கள் இல்லை என்பது மட்டும் ஒரு காரணமல்ல. வாசகப் பரப்பிற்கு எடுத்துச்சென்று இந்த எழுத்தாளர்களுக்குரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டிய பணியில் பிரபல வெளியீட்டு நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதும் ஒரு முக்கிய குறைபாடாகும்.

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் இந்தத் தமிழ் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

பதில்: இது சிறிது சுவாரஷ்யமான கேள்விதான். பல்கலைக்கழக மட்டத்திலும், ஆராய்ச்சி நோக்கிலும் தலித் மக்கள், பெண்ணிய எழுத்துக்கள் என்ற அடிப்படையிலும், ஒப்பியல் இலக்கிய அடிப்படையிலும் இந்த மொழிபெயர்ப்புக்களுக்கு ஒரு வரவேற்பு உண்டு என்பது உண்மை. மௌனி சிறுகதைகளின் எனது மொழிபெயர்ப்பைப் பார்த்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து மௌனியின் பேத்தி மிகுந்த வியப்புடன் எனக்கு தெரிவித்த பாராட்டினை நான் மனதில் கொள்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டுள்ள இளம் தலைமுறையினர், தமிழ் இலக்கியத்தை ரசிப்பதற்கும், தமிழ் மொழியில் ஈடுபாடு காட்டுவதற்கும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பெரிதும் துணைபுரியும் என்றே நான் கருதுகிறேன். லண்டனிலும் கனடாவிலும் நான் மேற்கொண்ட கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறைகள் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆங்காங்கே துளிர்த்துவரும் அக்கறையின் சாட்சியாக அமைகின்றன.

நன்றி: காலம்

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith 2 Comments →

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

யாழன் ஆதி கவிதைகள்12.10.07

வண்ண மாறிலி

- யாழன் ஆதி

மேய்ந்து திரும்பும்
மாடுகளில் தெரியும் ஒருவகை
பச்சைநிற வாசனை

பறவையின் சிறகில்
பிரதிபலிக்கும் நீலம்
வானத்திற்கானது

பூக்களிலிருந்து பட்டாம்ப்பூச்சிகளுக்கோ
அல்லது பட்டாம் பூச்சிகளிலிருந்து
பூக்களுக்கோ மாறியிருக்கலாம்
வண்ணங்கள்

நீருக்குள் தெரியாத வண்ணம்
மீனுக்குப் புலப்பட்டிருக்கலாம்
நீரில்

உறிஞ்சிய
வண்ணங்களில் மீன்கள்

-0-

மிச்சம்


- யாழன் ஆதி

என் சொற்களில் தேடாதீர்கள்
போதை தரும் எதையும்

பாதி எரிந்த எலும்பின் சாம்பலும்
செத்துத் தொலைத்த முன்னோர் ஆவியும் அலையும் அவற்றில்

விரல்களின் ரத்தக்கசிவு
வரிகளில் அடிக்கும் கவுச்சியில் தெரியும்

ஒரு நாளும் பூவின் மணம் வீசாத
என் வீட்டின் சேற்றுச் சகதியும்
உழைத்துக் களைத்துக் குடித்து வந்த
முனிரத்தினம் சித்தப்பாவின் வசவுகளும்
வாய்த்திருக்கும் என் சொற்கூட்டங்களுக்கு

பேரோலங்களில் கரைந்த எம்
இசையோவியங்கள் தேடக்கிடைக்காதவையே
கொடு நெருப்பில் தூர்ந்து போனது
எங்கள் விளக்கின் ஒலி

எம் முன்னோர்களுக்குக் குடிக்க
கொடுக்கப்பட்ட சாணிப்பாலைத்தான்
கக்கிக் கொண்டிருக்கிறேன்
கவிதையென

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith No Comments →

  • You Avatar
    -


Creative Commons License