Archive for the ‘மரத்தடி’

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

தோட்டம்08.18.05

உங்களில நிறையப்பேர் பூக்கண்டுகளும் மரஞ்செடிகொடிகளும் வளர்த்திருப்பீங்க, வளர்த்தண்டு இருப்பீங்க. நான் இதுவரைக்கும் ஏதாவது பெருசா வளர்த்திருக்கிறனா எண்டு யோசிச்சுப்பார்க்கிறன்.

புங்குடுதீவில எங்கட வீடு எப்படி இருந்தது எண்டு முந்தி எழுதி இருக்கிறன்.
http://mathy.kandasamy.net/musings/?p=243

கிணத்தடிக்கு அங்கால, ஒரு சின்ன இடத்தில காய்கறித்தோட்டம் நடுவினம் அம்மம்மா, சித்தி, அம்மா எல்லாரும். அதுக்குக் கண்டுகள் சர்வோதயத்தில இருந்து வாங்கியண்டு வர்ரவையெண்டு நினைக்கிறன். பூசணிக்கொடி படர்ந்திருக்கும். வெண்டிக்காய், மிளகாய்ச்செடி எண்டு கொஞ்சம் இருக்கும். என்ன இருந்தாலும் இல்லையெண்டாலும் கத்தரி இருக்கும். எங்கட ஆக்களுக்கு, அதான் சிலோன் காரருக்கு மரக்கறியெண்டா அது ஒண்டுதான். கத்தரிக்காய், கத்தரிக்காய், கத்தரிக்காய். இங்க மொன்ரியல்’ல பனிக்காலத்திலயும் கத்தரிக்காய் அண்டைக்குக் காலமைதான் தோட்டத்தில இருந்து பறிச்சண்டு வந்தமாதிரி இருக்கும். டொமினிகன் ரிபப்ளிக்ல இருந்துதான் இங்க நிறைய மரக்கறி வாறது. அதுவும் இங்க, மொன்றியலில அந்த நாட்டுக்காரர் கூட இருக்கிறபடியா நேரடி விமானசேவை இருக்காம். அதில நம்மட ஆக்கள் மரக்கறியையும் கொண்டந்து சேர்த்திருவினம். அங்க கிடைக்கேல்லையெண்டா சமயத்தில இந்தியாவில இருந்துகூட ப்ளேன்ல கொண்டந்து சேர்த்திரும் அந்தளவு சனத்துக்கு கத்தரிக்காய்ப் பைத்தியம்.

மிளகாய்ச்செடியும் வைக்கிறனாங்க எண்டு சொன்னனாந்தானே? ஒரு பத்துப் பதினைஞ்சு மிளகாய்ச்செடிதான் நடுவம். மிளகாய் காய்ச்சு பச்சை நிறத்தில இருந்து கொஞ்சம் கொஞ்சமா சிவப்பா மாறும்பாருங்கோ, அப்பதான் எங்கயிருந்தோ வருவினம் விருந்தாளிப்பிள்ளைகள். கீச்சுக்கீச்செண்டு சிவப்பு சொண்டோட பாக்க வடிவாத்தான் இருப்பினம். அவை இருக்கிறது வெளியில தெரியாம, நல்ல வடிவா அந்த மெல்லிய மிளகாய்ச்செடியில தொத்தியண்டு மிளகாய்ப்பழங்களைச் சாப்பிட்டு முடிச்சிருவினம். அப்பதான் சின்னாக்கள் எங்களுக்கு கிளியைப் பாக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்.

அதுவும் கொழும்பில கொங்கிறீட்டையே பாத்திட்டு புங்குடுதீவுக்குப் போன எங்களுக்கெல்லாம், திரும்பின பக்கமெல்லாம் பிராக்குப்பாக்கிறதுக்கு ஆடு, மாடு, கோழி, செடி கொடியெண்டு நிறைய விசயம். வீட்டுமூலையில இருந்த கறையான் புத்தைப் பாக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் வெள்ளன விடிய ஓடிருவமெண்டா பாருங்களன். கறையான்கள் எல்லா இடத்திலயும் போய் வாறதைப் பார்த்திட்டு, பிறகு அம்மம்மான் ‘ இங்கை பார் இதுகளை! கறையான் செல்லரிச்சிரும் எண்டு சொன்னாலும் கேக்குதுகளில்லை. கறையான் புத்தை உடைக்க விடமாட்டன் எண்டுதுகள்’ எண்டு அம்மாட்ட சொல்லி, நாலு ஏச்சு அம்மாட்டை இருந்து எங்களுக்கும், ‘அதுகளை ஏன் பேசுற. உன்ற வேலையப் பார்’ எண்டு அம்மம்மாட்ட இருந்து அம்மாக்கும் வந்தபிறகு கறையான் புத்தை உடைச்சு, வீட்டில இருக்கிற கோழிகளை சித்தியோட சேர்ந்து ‘பப பப பப’ என்று கூட்டிக்கொண்டு வந்து விடுறது என்று நல்லாப்பொழுது போகும்.

எங்கட வீட்டில பத்துப்பதினைஞ்சு மிளகாய்ச் செடி வச்சதுக்கே வாற விருந்தாளிகள் மிளகாய்த்தோட்டத்தைக் கண்டா சும்மா விடுவினமே? எங்க வீட்டுக்கு முன்வீட்டுக்கு அந்தப் பக்கம் ஒரு காணி இருந்து தோட்டமெல்லாம் வச்சிருந்தவை. பிறகு அதில அவை வீடு கட்டினமெண்டு வையுங்களன். ஆனா, நாங்க புங்குடுதீவுக்குப் போன மூட்டத்தில அங்க மிளகாய்த்தோட்டமொண்டுதான் இருந்தது. வீட்டில இருந்து லேசில வெளிக்கிட்டுத் திரியேலாது. வெய்யில் குளிச்சிற்று கருவாடு மாதிரி வந்து நிப்பமாம் நாங்க எண்டு அம்மா விடமாட்டா. நாங்க ஏதோ திறமா இருந்தனாங்க. வெய்யில் குளிச்சுத்தான் வடிவு கூடிரப்போகுது எண்ட நினைப்பு அவவுக்கு. சரி விடுங்க அதை. இப்ப வெளியில நினைச்ச நேரத்துக்குப் போகேலாது. என்ன செய்யுறது? கடைக்குச் சாமான் வாங்கப்போறதெண்டு வெளியில போறது ஒரு வழி. பொதுவா சாமான் வாங்க அம்மம்மாதான் போவா. அம்மம்மா, நானும் வாறன் எண்டு கையைப்பிடிச்சுத் தொங்கியண்டு போகலாம். வழிமுழுக்க பிராக்குப் பாத்தண்டு போறதெண்ட படியா மெதுவாத்தா போய்த் திரும்புவம். ரோட்டோரமா சரியா நடந்தா அது நல்லபிள்ளைகளுக்கு அழகா சொல்லுங்க. அதால உள்ள குரங்குத்தனமெல்லாம் செய்யோணும். யாரின்ர வீட்டிலயாவது பூப்பூத்து அது வெளியில தெரிஞ்சா நைசா புடிங்கிரோணும். அதுவும் அடுக்குச் செம்பருத்தையெண்டா விசேஷம். வேலியோரத்துக் கதியால் வழிய சின்னச் சின்ன முள்ளு இருக்ம்தானே, அதை எடுத்துக் கதியாலில கீறிவிட்டீங்களெண்டா உள்ளுக்குள்ள இருந்து பிசின் மாதிரி ஒண்டு வரும். கொஞ்ச நேரம் விட்டா அது வெளியில வந்து காஞ்சுபோயிரும். எந்த வீட்டு வேலியில கீறினதெண்டு பார்த்து வச்சிட்டா திரும்பி வரேக்க பிசின் எடுத்திரலாம்.

இதையெல்லாத்தையும் விட, எங்களுக்கெல்லாம் பிடிச்ச விளையாட்டு, போற வழியில் இருக்கிற மிளகாய்த்தோட்டங்களுக்குப் பக்கதில சத்தமில்லாமப் போய் நிண்டுட்டுப் பிறகு ‘ஹோஓஓஓஓ’ எண்டு சத்தம்போட்டு கத்தினா மேல பறிப்பினம் பாருங்க விருந்தாளிப் பிள்ளைகளெல்லாம் பாக்க நல்ல வடிவா இருக்கும். உருப்பட்ட கிளிகள் பறக்கும். அதுவரைக்கும் எங்க இருப்பினமோ தெரியேல்லை. மிளகாய்ப்பழம் தின்னுறதுக்கு மட்டும் வந்திருவினம்.

புங்குடுதீவிலயும் யாழ்ப்பாணத்திலயும் கொஞ்ச வருசம் இருந்திற்று நாங்க சென்னைக்கு வந்திற்றம்தானே? அங்க பெருசா ஒண்டும் வளக்கேல்லை. சும்மா கொஞ்ச குரோட்டனும், மணிப்பிளாண்டும். பெரிய தொட்டியில வச்ச செம்பருத்தையும்தான். பிறகு ஹவாயில மோப்பம் பிடிச்சண்டு போய் வாங்கி வளர்த்த குண்டு மல்லிகைச் செடி தனி அலாதி அனுபவம் பாருங்க. பூப்பூத்தா வீடு முழுக்க மணக்கும். உடன புங்குடுதீவுக்குப் பறந்திருவன். மெட்ராசில முழம்கணக்கில வாங்கிற மல்லிகைப்பூ வாசமும் சேர்ந்து மணக்கும்.

இப்ப, இங்க என்ற பால்கனியில என்ன என்ன நிக்குது தெரியுமா? என்ன செடி எண்டு தெரியாமலேயே நான் கொண்டந்துபோட்ட எட்டு சூரியகாந்திச் செடிகள். என்னை விட உயரமா நிக்குதுகள். அதில மூண்டு நல்லா பெருசா பூப்பூத்திருக்கு. மிச்சம் அடுத்த கிழமை பூத்திருவம் எண்டபடி நிக்குது. மிச்சப்படிக்கு மூண்டு கிரைசாந்தமம் எக்கச்சக்கப்பூக்களோட சிரிக்குது. ஒரு ஓரத்தில ‘மிண்ட்’, ‘லாவண்டர்’ நிக்குது. ஒரு ஓரத்தில அப்பா வாங்கியண்டு வந்த துளசியும் நிக்கிறா. வீட்டுக்குள்ள அங்கனக்க இங்கனக்க கொஞ்சம் பச்சைச் செடிகள் நிக்கினம். அண்டைக்கு என்ற ·பிரெண்ட் நீலநிறச் சாடியில வச்சுக்கொண்டு வந்த மஞ்சள் நிற ரோசாப்பூச்செடியும் இருக்குது. என்னத்துக்கு என்ற வீட்டில இருக்கிற செடிகொடிகளைப்பத்தியெல்லாம் இங்க வந்து சொல்லி அறுத்தண்டு இருக்கிறன் எண்டு யோசிக்கிறீங்களா?

இங்க மொன்ரியலில, ‘Community Garden’ எண்டு நடுநடுவில காணிகள் இருக்கும். விருப்பமிருக்கிற ஆக்கள்போய்க் கேட்டுக்கதைச்சு இடம் வாங்கி தங்களுக்குப் பிடிச்ச மரக்கறி பூக்கண்டுகள் நடலாம். இப்பிடித்தான் Christian Vaillantஉம் வெயிட்டிங் லிஸ்டில இருந்து கேட்டுக்கதைச்சு ஒரு மாதிரி இடம் பிடிச்சு செடிகள் நட்டேர். இப்ப அவருக்கு மொன்ரியல் நகரத்தில இருந்து அவருக்கு நோட்டிஸ் போயிருக்கு. என்ன விசயம் தெரியுமா? அவரின்ற காணியில - என்ன பெரிய காணி, லேஞ்சி காயவைக்கக்காணாது இடம். சரி விசயத்துக்கு வாறன். அவரின்ற காணியில முழுக்க முழுக்க தக்காளி பயிரிட்டிருக்கிறேறாம். ஒருத்தர் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில ஒரேயொரு வகையான மரக்கறியோ பூக்கண்டோ நடக்கூடாதாம். இப்ப Christian Vaillant நட்டிருக்கிற 36 தக்காளிச்செடியில முக்காவாசியை அவர் புடுங்கி எறியோணுமாம். ஏனெண்டா, அவர் சிலவேளைகளில அந்தத் தக்காளிச் செடியில இருந்து கிடைக்கிற தக்காளியை வித்திருவேராம்.

[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், நினைவலைகள், மரத்தடிwith 2 Comments →

பிரமாபுரம் மேவிய பெம்மான் தரிசனம்07.28.05

எங்கள் ஊரில் பள்ளிக்கூடத்தில் சமயமும் ஒரு பாடம். தேவாரங்களும், புராணக் கதைகளும் சொல்லித் தருவார்கள். கூடவே ஆறுமுக நாவலரது சைவசமய வினாவிடையும் இருக்கும். அதில் படித்த சிலது இன்னமும் ஞாபகம் இருக்கு. திருநீற்றை எப்படிப் பூசவேண்டும், கோவிலுக்கு போனதும் முதலில் யாரை வணங்க வேண்டும், எத்தனை தரம் கோவிலை வலம் வர வேண்டும் என்றெல்லாம் அதில்தான் படித்தேன்(படித்தோம்). உளவாரப்பணி பற்றியும் அப்பரின் தொண்டு பற்றியும் படித்ததும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் கூட்டத்துடன் சேர்ந்து உழவாரப்படை கொண்டு உழவாரப்பணியாக புற்களை வெட்டியதும். இப்படியெல்லாம் படித்தாலும், எனக்கு வீட்டில் முதலில் சொல்லிக் கொடுத்தது திருஞானசம்பந்தரைப் பற்றித்தான். கதையே எங்களை முதலில் ஈர்த்தது. மூன்று வயது பையன் அழுததற்கு சிவபெருமான் வந்தது, அவன் தேவாரம் பாடியது என்று அதிசயிக்க பல விஷயங்கள் இருந்தன. முதன்முதலில் பாடிய தேவாரமும் ‘தோடுடைய செவியன்’தான். அத்தோடு எங்கள் வீட்டிலும் ஊர்க்காரர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனை மிகவும் பிடிக்கும். அவர் எங்கள் ஊர் கோவிலுக்கும் வந்திருக்கிறார். இப்படி எங்கெளுக்கெல்லாம் சீர்காழி (ஊரும், பாடகரும்) என்றாலே மிகவும் பிடிக்கும்.

இதுவரை கோயில் பிரயாணம் போகும்போதெல்லாம் சீர்காழி போகாமல் விட்டதில்லை. சிதம்பரம் சென்று விட்டு, அடுத்த கோவில் சீர்காழிதான். அமைதியான ஊரில் சாலைக்கு அருகிலேயே மிக உயர்ந்த மதிற்சுவர்களோடு தோணியப்பர் கோவில் இருந்தது. முதன்முதலில்தான் கோவிலைக் கண்டுபிடிப்பதற்கு சிரமப்பட்டுப் போனோம். இப்போதெல்லாம் தூக்கத்திலும் எப்படி போவதென்று வழி சொல்லுவோம். :) முதன்முதலில் கோவிலுக்கு போனபோது நாங்கள் எல்லாரும் திருக்குளத்தைத் தான் ஆவலுடன் தேடினோம். அதன் படிகளில் நின்றுகொண்டு கோவில் எப்படித் தெரிகிறது என்று பார்த்தோம். நாங்கள் அப்போது அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்தி வந்ததைப் பார்த்தோம் நாங்கள். கோவிலைப் பார்த்து விட்டு குளத்தில் கால் கழுவலாம் என்று திரும்பிய எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. என்னவென்று கேட்கிறீர்களா? அந்தக் குளத்தின் நிலைதான். ஊர்மக்கள் அனைவரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்று புரிந்து கொண்டோம். (2000இல் சென்றபோது நிலமை இன்னமும் மோசமாக இருந்தது.)

ஒரு வழியாக கால் கழுவிக்கொண்டு, பிரம்மபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தோம். இந்தக் கோயிலுக்குள் சிவனுக்கு மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதலில் பிரம்மபுரீஸ்வரன் சன்னிதிக்குச் சென்றோம். பாடல் பெற்ற தலங்களுள் மிக அதிகமான பாடல்கள் இந்தக் கோவில் இறைவனுக்குத்தான் பாடியிருக்கிறார்கள். மொத்தம் எழுபத்தியொரு தேவாரங்கள் கிடைத்திருக்கின்றதாம். சிவபெருமானின் அடுத்த பிரகாரத்தில் சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இது தோணி வடிவத்தால் ஆனது. தோணி வடிவத்தில் இருப்பதால்தான் தோணியப்பர் என்று சொன்னார்கள் என்றும் சிவபெருமான் ஒரு முறை அறுபத்திநான்று கலைகளையும் தோணியில் கொண்டு போய் காப்பாற்றினாராம். அதனால்தான் சீர்காழியையும் தோணிபுரம் என்று சொல்லுவார்களாம். அதேபோல பிரம்மபுரீஸ்வரர் என்று இறைவனுக்கும் பிரம்மபுரம் என்று ஊருக்கும் பெயர் வரக்காரணம் பிரம்மா இங்கு வந்து சிவனை வழிபட்டதாலாம். தோணியப்பரை வழிபட்டுவிட்டு மேலும் உயரச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி சட்டைநாதரையும் தரிசிக்கலாம். இங்கிருந்து கீழே பார்த்தால் கோவிலை நன்கு பார்க்கமுடியும், கோவில் குளமும் தெரியும். அமைதியாக இருக்கும் இந்தக்கோவிலில் கண்ணை மூடி நின்றால் 1000 வருடங்களுக்கு முந்தய காலத்துக்குப் போய் விடுவோம் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை இக்கோவிலில் சட்டைநாதரை தரிசித்துவிட்டு வரும்போது அருகில் இருக்கும் மண்டபத்தில் ஒரு துறவியைப் பார்த்தோம். ஆறேழு அடிகள் வளர்ந்த கூந்தல் அருகில் இருக்க அமர்ந்திருந்தார் அவர். அவரிடம் திருநீறு வாங்கியது எங்களுக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது. அப்போது இருந்த மனநிறைவும் நிம்மதியும் இப்போது கூட நினைவில் கொண்டு வரமுடிகிறது.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைனாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், பயணம், மரத்தடிwith 5 Comments →

  • You Avatar
    -


Creative Commons License