என்னுடைய அம்மம்மா அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007) • 08.24.07



அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)
அம்மம்மா! சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லியான உடல்வாகு. கம்பீரமான தோற்றம். கட்டியிருக்கும் பருத்தி சேலையை விட மிருதுவான தோல். பளபளக்கும் கண்கள். மேலுதட்டில் கொஞ்சம் வித்தியாசமாக கறுப்பு முடிச்சுப்போன்ற மரு. என்ன அவசர வேலையிலிருந்தாலும் ஏதேனும் கேள்வி கேட்டால் பொறுமையாகப் பதில் சொல்லும் பாங்கு. அண்டை அயலவர் ஊரார்களை நின்று நிதானித்து ஒரு சொல்லாவது பேச வைக்கும் கம்பீரமும் கனிவும் நிறைந்த முகம். இவைதான் அம்மம்மாவை நினைத்தால் எனக்கு இப்போதும் எப்போதும் மனதில் நிற்கும் சித்திரம்.
என்னுடைய ஆதர்ச பெண்களில் என்னுடைய அம்மம்மாவுக்கே முதலிடம். நாற்பது வயதுச் சொச்சத்திலேயே கணவரை இழந்துவிட்டாலும் தனியாளாக நின்று குடும்பத்தை வளர்த்தெடுத்தவர். புங்குடுதீவு-நடுவுத்துருத்தியில் பிறந்தவர், அம்மப்பா இறந்தபிறகு இறுபிட்டியில் 1950களில் தனியாளாக வீடு கட்டிக் குடிபுகுந்தார். வீட்டின் அமைப்பு, முக்கியமாக ஜன்னல்கள் கொஞ்சம் அடைசலாக இருப்பதைச் சொன்னபோது, வீடு கட்டியவர்கள் புதிய ஆட்கள் என்று சொல்லிப் பிறகு, அவர்களுக்கு மதிய உணவு நடுவுத்துருத்தியில் இருந்து தலையில் கடகத்தில் வைத்துச் சுமந்து வந்த கதையைச் சொன்னார். வீட்டிற்கு சொர்ணவாசா என்று அம்மப்பாவின் பெயரை வைத்திருந்தாலும் எனக்கென்னமோ அது இன்னமும் அம்மம்மாவின் வீடுதான்!
என்னுடைய சிறுபிராயத்து நினைவுகளிலெல்லாம் அம்மம்மாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. கொழும்பில் வசித்தபோது யாழ்ப்பாணத்துக்கு போறதுக்கு டிரெயின் ஏறிட்டா பயங்கரக் கொண்டாட்டம் எங்களுக்கு. இரவு நித்திரை கொண்டு எழும்பேக்க டிரெயின் வடக்க வந்திருக்கும். டிரெயினில இருந்து இறங்கிப் பிறகு காரில ஏறித்தான் வீட்டுக்கு, புங்குடுதீவுக்குப் போகோணும் எண்டு தெரியும். ஆனாலும் வழி நெடுக வாற வீட்டு வேலிகளையும் படலைகளை பார்த்துப்பார்த்து அதில எங்கட வீட்டுப் வேலியையும் படலையையும் ஒத்ததா எதையாவது கண்டிட்டா வீடு வந்திற்றுது எண்டு மனது சந்தோசப்படும். சில நேரங்களில வெளியில சொல்லித் திட்டு வாங்கிறதும் உண்டு. பிறகு உண்மையாவே யாழ்ப்பாணத்தில இறங்கி வண்டியில் புங்குடுதீவுக்குப் போய் இறங்கி, படலையைத் திறந்தண்டு உள்ள ஓடிப்போய் ‘அம்மம்மோய்!’ எண்டு கூச்சலிட்டண்டு ஓடிப்போய் கட்டிப்பிடிக்கிறது இப்பவும் நினைவில் நிற்கும் விசயம்.
எங்கட வீட்டு மாட்டுக்கெல்லாம் ‘அ’ என்று சூடு போட்டிருக்கும். சின்ன வயசில அரவிந்தனுக்கு அது தன்ர மாடு எண்டு சந்தோசம். தன்ர மாடுதானே எண்டு அவர் அம்மம்மாட்டக் கேக்கேக்க, ஓம் எண்டு சொல்லிருவா. எனக்குக் கோவம் கோவமா வந்தாலும் வேற கதைகள் சொல்லி கவனத்தை மாத்தி விட்டிருவா.
விடிய வெள்ளன முழிப்பு வந்திற்ற நான் முதல்ல போறது மாட்டுமால் பக்கந்தான். அப்பிடிப் போகாம படுக்கையிலயே கிடந்தண்டு உன்னிப்பாக்கவனிச்சா, அம்மம்மா கண்டுக்குட்டிய அவிட்டு விடுறதும். அது மாட்டிட்ட பால் குடிக்கிறது. கொஞ்ச நேரம் கழிச்சு கண்டுக்குட்டிய மாட்டுக்குப் பின்னால கட்டி விட்டுட்டு கையோட கொண்டு போன செம்பில இருந்த தண்ணி விட்டு அலம்பிட்டு பால் கறக்கத் தொடங்கிறதும் கேக்கும். சில நாட்களில கொஞ்சம் பிந்தி எழும்பிட்டா, சொய் சொய் எண்டு கறந்த பால் செம்பில விழுற சத்தம் கேக்கும். முந்தியே எழும்பி, மாட்டுமால் பக்கம் போனா படிக்கட்டிலயே இருந்து பாக்கச் சொல்லிச் சொல்லுவா.
கிடுகு பின்னச் சொல்லித்தந்தது. கொழும்பில இருந்து புங்குடுதீவுக்கு வந்து சேர்ந்தபோது முதன்முதலா பள்ளிக்கூடத்துக்குக் கூட்டியண்டு போனது. விக்கியைப் பள்ளிக்கூடத்தில விட்டுட்டு அம்மம்மா வாறதுக்குள்ள விக்கி வீட்டில நிக்கிறது. வீட்டுக்குப் பின்னால நிக்கிற மாமரத்தில ஏறி இருந்து புத்தகம் படிக்கிறது எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்குகளில ஒண்டு. மாம்பழ சீசனில, மத்தியான நேரத்தில அம்மம்மாவிட்ட முன்னுக்கும் பின்னுக்கும் அலைஞ்சு கெஞ்சிக் கேட்டா ஒரு தட்டில மிளகாய்த்தூளையும் உப்பையும் கலந்து கூடவே மாங்காயையும் வெட்டித் தருவா. அம்மாவுக்குத் தெரிஞ்சா பேசுவா எண்டு சொல்லிக்கொண்டே தந்தாலும், அடுத்த நாள் போய்க்கேக்கும்போதும் அப்படியே வெட்டித் தருவா அம்மம்மா.
கோயில் திருவிழா நேரம் கச்சானுக்குக் காசு தாறது. வேப்பம்பூ பூக்கிற காலத்தில கொக்கச்சத்தகத்தோட பூ புடுங்கிறது. நடுவுத்துருத்திக்கு குறுக்கு வழியால நடந்து போறது. போற வழியில கதைக்கிற கதைக்கெல்லாம் ஈடு கொடுத்துக் கதைச்சண்டு வாறது. இரவில அரிக்கன் லாம்போட போய் படலையைக் கட்டிட்டு வாறது எண்டு என்னுடைய ஊர் நினைவுகளெல்லாம் அம்மம்மாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தன. நினைவலைகள் என்று என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதியிருக்கும் இருபத்திச் சொச்சம் கட்டுரைகளிலும் அம்மம்மா ஏதாவது வடிவத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.
நாங்கள் சென்னைக்குச் சென்று எனக்கு அங்கே நண்பர்கள் உருவாகியபோதும் அவர்களிடம் அம்மம்மாவைப் பற்றி அளந்துவிடுவதுண்டு. அது சிற்சில சமயங்களில் ‘எங்கப்பா சிற்றெறும்பின் தோல் வைச்சு ஆகாயத்தின் ஓட்டை அடைத்தவர்’ அளவுக்கு இருந்தாலும் என் நண்பர்களிடையேயும் அம்மம்மா பிரபலமாகியிருந்தார். அம்மம்மா கடல் வழியாக மண்டபத்துக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தபிறகு என்னுடைய நண்பர்கள் பலரும் வந்து அம்மம்மாவைப் பார்த்துப்போன அளவிற்கு அம்மம்மா பிரபலமாக இருந்தார்.
சென்னைக்கு வந்தவரிடம் அவருடைய சிறுவயது நினைவுகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அவர் சொன்னவற்றில் முக்கியமான விசயம். அம்மம்மா சின்ன வயதில் படு குழப்படி என்பது! அக்கா தங்கையுடன் மூவராகப் பிறந்த இந்தச் சகோதரிகளின் தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டாராம். தந்தையின் கவனிப்பில் வளர்ந்தவர்கள் வீட்டு வளவு முழுக்க அலைந்து திரிந்து விளையாடி வளர்ந்திருக்கிறார்கள். நடுப்பிள்ளையாக இருந்தாலும் பெரும்பாலான யோசனைகள் அம்மம்மாவிடமிருந்தே வந்திருக்கின்றன. அப்போது அவர்களின் உடை, ‘சிற்றாடை’ என்று சொல்லப்படும் உடையாக இருந்திருக்கிறது. சீர்காழி கோவிந்தராஜன் ‘சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ர்துர்கை சிரித்திருப்பாள்’ என்ற பாடல் வரிதான் அம்மம்மா இதைச் சொல்லும்போது என் மனதில் ஓடியது. தான் சரியான குழப்படி என்று சொல்லிய அம்மம்மாவிடம் ஆச்சரியமாக, ‘குழப்படியா. எங்களுக்குத் தெரியாதே. என்ன குழப்படி செஞ்சிருக்கிறீங்க’ என்று நாங்கள் கேட்டபோது அம்மம்மா சிரித்தார். மாரி காலத்தில் கிணறுகளெல்லாம் நிரம்பிக் கிடக்கும்போது ஆட்டுக்குட்டியொன்றைப் பிடித்து வந்து வளவின் மூலையில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நின்றபடி ஆட்டுக்குட்டியில் இரண்டு கால்களையும் பிடித்தபடி ஆட்டுக்குட்டியைத் தோய்த்தெடுப்பது தங்கள் வேலையென்றார். ஆட்டுக்குட்டியும் தன்பாட்டுக்கு கதறுமென்றும், அந்தச் சத்தம் கேட்டு இவர்களின் அப்பா வந்து பார்த்துவிட்டு தங்களையெல்லாம் அடிப்பதற்குத் துரத்துவாரென்றும். பிடிபடாமல் தாங்களெல்லோரும் ஓடித்தப்புவதாகவும் சொன்னபோது உண்மையாகவே அம்மம்மா குறும்பான ஆள்தான் என்று தோன்றியது.
ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலின்போது பெரிய வாசலுக்கு முன்பு சிறிதாக கோலம் வரைந்து பானை வைத்து பொங்கல் வைப்போம். எல்லோரும் சுற்றி நின்று பொங்கலோ பொங்கல் என்று கூவி பொங்கி முடித்ததும் சுவாரசியமான அடுத்த கட்டம் தொடங்கும். பொங்கற் சாமான்களோடு வாங்கி வந்திருந்த வெடிகளை வெடிக்கும் வேளையே அது. சென்னையில் தீபாவளி சமயம் பலரும் கையில் வைத்து வெடிக்கும் ‘புஜிலி’ இரக வெடிகள்தான் அவை. ஆனாலும் பயங்கர ஆயத்தம் நடக்கும். தேங்காய் மட்டையில் கொஞ்ச நாரும் வைத்து திரி கிள்ளப்பட்ட வெடி பாங்காட வைக்கப்படும். நீண்ட குச்சியொன்று பொங்கல் அடுப்பில் வைக்கப்பட்டுத் தயாரா இருக்கும். அந்தக் குச்சியை தூஊஊஊர நின்று வெடியின் திரியில் முட்டுமாறு அம்மம்மா வைப்பா. குச்சி திரியில் பட்டுக்கூட இருக்காது. துள்ளியடித்தபடி தூர ஓடி விடுவா. நாங்களெல்லாம் மூச்! படியில் நின்றுதான் பார்க்க வேண்டும். பிறகு நினைத்து நினைத்துச் சிரிக்கும் விசயம் இது.
இன்னொரு அனுபவமும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் தேதியன்று ஏதேனும் புதிய விசயங்களைப் புழுகி எல்லோரையும் நம்ம வைத்துவிடுவார். சமயத்தில் அன்றைக்கு ஏப்ரல் முதலாம் தேதி என்று நினைவு வந்தாலும் அவர் சொல்லும் விதமும் உடலசைவுகளும் நம்மை நம்ப வைத்துவிடும். ஒருமுறை அவர் ஓட்டமும் நடையுமாக வந்து, இவன் லலித் அத்துலத் முதலியை கொண்டுட்டாங்கள் என்று விரிவாக கதை சூடிச் சொன்னார். அதற்கு முந்தைய வருடமும் அம்மம்மாவால் ஏமாற்றப்பட்டிருந்தும் அம்மா, அன்ரி எல்லோரும் விழி அகல கேட்டுக்கொண்டார்கள். வீட்டிற்கு வருபவர்களிடமும் சொன்னார்கள். அம்மம்மா எதுவுமே சொல்லவில்லை. எல்லா விவாதங்களிலும் கலந்துகொண்டார். பொழுது சாயும் நேரத்தில்தான் தான் சொன்னது புழுகு என்று சொல்லி எல்லோரையும் முட்டாளாக்கினார்!
இதிலே இன்னொரு விசயமும் சொல்ல இருக்கு. அம்மம்மா பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி இருந்தாலும் பரந்த உலக அறிவு கொண்டவர். அரசியல் மிகவும் பிடித்த விசயம் இவருக்கு. சென்னையில் வீட்டுக்கு வரும் தினமணி இதழை முதற்பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒன்று விடாமல் வாசித்து, ஆள் கிடைத்தால் விவாதித்தபடி இருப்பார். தமிழக அரசியலையும் விட்டு வைக்கவில்லை அவர். அறுபதுகளில் ஒவ்வொரு ஊரிலிருந்து ஆட்கள் போய் நடத்திய போராட்டத்திலும் அம்மம்மா பங்குபற்றி இருக்கிறார் என்று அப்பா சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. விழிப்புணர்வும் போராட்ட குணமும் கொண்ட மனு்ஷியாக இருந்திருக்கிறார் இல்லையா!
தன்னுடைய உடமைகளை முதியோர் இல்லத்துக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் அம்மம்மா. விக்கி சொன்னாள். வித்தியாசமான ஆள் என்பதைக் கடைசிவரையிலும் நிரூபித்திருக்கிறார் அம்மம்மா.
எப்படிப்பட்ட மனு்ஷி இவர்!



