Archive for the ‘ஈழத்து இலக்கியம்’

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

லண்டனில் தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா10.18.07

லண்டனில் வரும் சனிக்கிழமை 20-10-2007 அன்று மாலை 4.30 முதல் தமிழ் தகவல் நடுவம் & விம்பம் இணைந்து வழங்கும் புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா நடைபெறவிருக்கிறது.

நேரம்: 20.10.2007 சனிக்கிழமை மாலை 4.30 முதல்

இடம்: Trinity Center, East Avenue, London E12

காண்பிக்கப்படவிருக்கும் விவரணப் படங்கள்:

  1. சரஸ்வதி பூசை
  2. கூத்து
  3. இலங்கையின் மேளங்கள்
  4. தூதிகாவோ
  5. ட்ரோஜன்’ பெண்கள

தொடர்புகளுக்கு:

தமிழ் தகவல் நடுவம்:
Tamil Information Centre
Thulasi
Bridge End Close (Off Clifton Road)
Kingston Upon Thames
KT2 6PZ
(United Kingdom)
Telephone: +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: admin.tic@sangu.org

விம்பம்:
4 Burgas Road, EastHam,
London E6 2BH,
Email: vimpam@aol.com

தர்மசிறி பண்டாரநாயக்க தனது படைப்புக்களுக்கூடாகத் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த வன்முறைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் ஸ்ரீலங்கா அரசின் காவல் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தீவிரவாதச் சிங்களக் கும்பல்களால் கொலை மிரட்டல்களையும் உயிராபத்தையும் எதிர்நோக்குமொரு சிங்களக் கலைஞர்.

தர்மசிறி பண்டாரநாயக்க அவர்களைப்பற்றியும் அவரது விவரணப்படங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள இந்தக் கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். அவருடைய செவ்விகளும் இக்கோப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

Dharmasri Bandaranaike

தர்மசிறி பண்டாரநாயக்கா அவர்களைப்பற்றி என்னுடைய வலைப்பதிவில் வந்த இடுகைகள்.

தர்மசிறி பண்டாரநாயக்க: ஓர் அறிமுகம் - காலம்

தர்மசிறி பண்டாரநாயக்கவின் பேட்டி - காலம்

தர்மசிறி பண்டாரநாயக்க: WSWS பேட்டி

Posted in அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ்- நிகழ்வுகள்with 1 Comment →

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - முன்னுரை & என்னுரை04.11.07

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 5


முன்னுரை

நாட்டார் பாடல்கள், கல்வியறிவற்ற கிராமிய மக்களுக்கு மட்டும் உரியவை என்று கருதிய காலம் போய், அவற்றை ஒரு தேசியச் செல்வமாக மதிக்கும் காலம் இது. வளர்ச்சியடைந்த, வளர்ச்சி குறைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வித்துறையினரும் ஆய்வறிவுத் துறையினரும் கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டுப் பாடல்களில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். இலக்கியப் படைப்பாளிகளும், விமர்சகர்களும், இசைத் துறையினரும் கூட நாட்டுப் பாடல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். மேலைத் தேயப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நாட்டார் பாடல்களை உள்ளடக்கிய நாட்டுப் பண்பாட்டியல் (Folk Lore) பற்றிய ஆய்வு, ஒரு தனித் துறையாகவும் இடம் பெற்றுள்ளது. கிராமிய மக்களின் சமூக உறவுகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு நாட்டார் பாடல்கள் முக்கியமான ஊற்று மூலமாக இருப்பதும், சமூக அறிவியல் துறைக்கு அவை அதிக தகவல்களையும் தரவுகளையும் தருவதுமே இதற்குரிய முக்கிய காரணங்களாகும்.

நாட்டார் பாடல்கள் பலவகைப் படுவன. உடல் உழைப்போடு நேரடியான உறவுடையவை என்றும், வாழ்வின் பிற துறைகளோடு தொடர்புடையவை என்றும் அவற்றை நாம் இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். உழைப்பே மனிதவாழ்வின் இயக்கு சக்தியாகும். நாட்டார் பாடல்களில் உடல் உழைப்போடு தொடர்புடையவை அதிகமாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும். “ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்…” என்று பாரதி குறிப்பிடுபவை எல்லாம் உடல் உழைப்போடு நேரடியான உறவுடையவையே. கூட்டு உழைப்பின் ஆர்வப்பெருக்கினால் இத்தகைய பாடல்கள் தோன்றுகின்றன. உழைப்புச் சிரமத்தை மறைத்து உற்சாகம் ஊட்டுவதற்கு இப்பாடல்களின் தாளலயம் உதவுகின்றது.

மீனவர் பாடல்களும் இத்தகையனவே. இலங்கையின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் பல்வேறு வகையான, ஏராளமான மீனவர் பாடல்கள் வழங்குகின்றன. கப்பற்பாட்டு, தோணிப்பாட்டு, ஏலேலப் பாட்டு போன்ற வெவ்வேறு பெயர்களில் அவை அழைக்கப்படுகின்றன. அறிவுலகம் அறியாத அத்தகைய அநேகபாடல்கள் ஈழத்துக் கரையோரங்களில் கடற்காற்றில் மிதந்து வருவதை நாம் தினமும் கேட்கலாம். அவ்வகையில் குருநகர் போன்ற யாழ்ப்பாணக் கரையோர மீனவர்களிடையே வழங்கும் ‘அம்பா’ப் பாடல்கள் சிலவற்றைத் தேடித் தொகுத்து இந் நூல் மூலம், முதல்முறை அவற்றை அறிவுலகுக்கு அறிமுகப் படுத்துகின்றார் நண்பர் புஷ்பராஜன். கிராமங்கள் நவீன மயமாவதாலும் தொழில்துறைகள் இயந்திரமயமாவதாலும் தமது தலைமுறையில் வழக்கிறந்து மறைந்து வரும் இத்தகைய நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுத்துப் பேணுவதில், ஆர்வம் உடைய இன்னும் ஒருவர் கிடைத்ததில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈழத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அச்சேற்றும் முயற்சிகள் சில நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய பிரதேசங்களுக்குரிய நாட்டுப் பாடல் தொகுதிகள் சில வெளிவந்துள்ளன. பத்திரிகைகளில் அநேக கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. வானெலிப்பேச்சுக்கள் பலவும் ஒலிபரப்பாகியுள்ளன. இவற்றில் பொதுவாக நாம் இருபோக்குகளைக் காணலாம் கிடைக்கக்கூடிய பாடல்களை எல்லாம் சேகரித்து அவற்றை அச்சிட்டு வெளியிடுவது ஒருபோக்கு. இலக்கியச் சுவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட பாடல்களைத் தெரிந்து ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து அதையே உண்மை எனப்பாவித்து அப்பாடல்களை விளக்க முனைவது மற்றது. முதலாவது போக்கு வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை இரண்டாவது போக்கு, தான்தோன்றித் தனமான கற்பனை உலகுள் நாட்டுப் பாடல்களை இழுத்து விடமுனைவதால் ஒதுக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது.

நண்பர் புஷ்பராஜன் இவ்விருபோக்குகளில் இருந்தும் வேறுபடுவதை நாம் இந்நூலில் காண்கின்றோம். இது வெறுமனே அம்பாப் பாடல்களின் ஒரு தொகுப்பு நூல் அல்ல. அதுபற்றிய ஒரு கற்பனைப் புனைந்துரையும் அல்ல. அந்நூல் மூலம் நமக்கு ஒரு புதிய உலகைத் திறந்து காட்ட அவர்முயன்றுள்ளார். ஒரு குறிப்பிட்ட கிராமிய அல்லது பழங்குடி (Rural or Primitive) மக்கள் தொகுதியின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் சடங்கு சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாசாரக் கூறுகளை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதும், அக்கலாசாரக் கூறுகளோடு தொடர்புடையமொழியியல் கூறுகளையும் சொற்தொகுதியையும் ஆராய்வதும் கலாசார மானிடவியலாளரினதும் (Cultural Anthropologists) மானிடவியல் மொழியியலாளரினதும் (Anthropologists Linguists) முக்கிய பணியாகும். அத்தகைய ஆய்வு முறைகளில் பரிச்சயம் இல்லாவிடினும் தனது சொந்த முறைகளில் பரிச்சயம் இல்லாவிடினும் தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக அத்தகைய ஆய்வுத் துறையினரின் பணியையே நண்பர் புஷ்பராஜன் இந்நூல்மூலம் செய்திருக்கின்றார். குறிப்பாக கடவுள் வணக்கம், தொழில்வகைகளும் அதன் பாடுகளும் என்னுள் இரண்டு அத்தியாயங்களும் வடபகுதி மீனவர் சடூமுகத்தின் பிரத்தியேக பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை நுட்பமாக விபரிக்கின்றன. யாழ்ப்பாணக் கிளைமொழியில் சொல்லியல் ஆய்வு (Lexical Study) நடத்த முனையும், ஒரு மொழியியலாளனுக்கு உதவக் கூடிய பயனுடையதகவல்கள் அநேகம் இந்நூலில் உள்ளன. அறிவுலகுக்குச் சில புதிய நாட்டுப்பாடல்களை மட்டுமன்றி ஒரு புதிய கலாச்சாரத்தையே அறிமுகப் படுத்தும் புஷ்பராஜனின் இம்முயற்சி, பாராட்டி வரவேற்கத்தகுந்த பயனுடைய ஒன்றாகும்.

இந்நூலாசிரியர் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகளின் மேலும் ஈடுபட்டு, நமக்கு அதிகபேறுகளைப் பெற்றுத்தருவாரென்று நாம் எதிர்பார்க்கலாம். தமிழ் மக்கள் இம் முயற்சியில் அவருக்கு உதவுவார்கள் என்றும், நான் நம்புகின்றேன்.

எம். ஏ. நுஃமான்
தமிழ்த்துறை
இலங்கைப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணவளாகம்.
16-10-1976



என்னுரை

வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்காய் அலைகடலுடன் நித்தம் போராடும் கடலின் புதல்வர்களின் நானுமொருவனாய் அமைந்த அக்காலங்களில்; žறிச்சினந்த காற்றுடன், வெண்நுரை சுமந்த கடலடிகளை, அஞ்சாமை கொண்டு ஆர்ப்பரிக்க, அலையோசைகளை மீறியெழுந்த அந்த அம்பாவோசைகள் அடிமனம் தடவ, பின் எழுந்த அலையோசைகள் “எழுதடா எழுது, கடலோடு பிறந்து காற்றோடு மறையும் இக் கவித்துவங்களை எழுதப்படாஎழுது” என என்னைச் சுற்றிச்சுற்றிச் சப்தமிட்டதாக உணர்ந்ததன் விளைவே இந் நூல்.

இந் நூலில் இடம்பெற்ற வசைபாடல்கள், சிலபகுதி மக்களைப் புண்படுத்துமென நினைத்து ஒதுக்கமுனைந்த போது, குறையற்ற கதாநாயகத் தன்மையினால் இவர்களது ஆளுமை சிதைந்துவிடுமென எச்சரிக்கை கொண்டதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஆயினும், அக்கால மக்கள் பலர்,

கத்தரிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
கரையூரான் சொன்னானடி
பூசணிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
புத்தூரான் சொன்னானடி

(கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரி)

* * *

பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப்
பூட்டுந் திறலினுடனிருப் போர்
மல்லாகத்தில் வீரரிவர்
மற்றோர் நவாலியூராரே

* * *

ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன் காணென்பாரே

(கனகி புராணம்)

* * *

ஏழாலை இளவாலை கீழால போக
புன்னாலைக் கட்டுவன் பூம்பூட்டியாக

(கல்லடிவேலன் என்பது பலர்கூற்று)

இப்படிக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஊர்ப்பெயர் சொல்லிப் பாடியது கண்டு, மனம்தேறினேன்.

பிறந்த களத்துக்கு மட்டுமின்றி நாட்டின்ஏனைய மக்களுக்குமுரிய ‘புதைபொருளான’ இம் மக்கள் பாடல்கள், எத்தனை ஆண்டுகள் என்னோடு செயலற்றிருந்தன என்பது தெரியாதபோதிலும், “ஈழத்தில் இதுவரை யாரும் அக்கறை கொள்ளாத துரைபற்றி அறிமுகம் செய்கிறது” என்ற குறிப்புடன் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட விவேகியின் இரண்டு இதழ்களின் (28-5-69, 8-11-70) இவற்றில் சில வெளிவந்தமை, இன்னும் நினைவிலுண்டு,

இவ் அம்பா நூல் பூரணம் பெற்றிருக்கும் இந்தவேளையில் இவற்றைச் சேகரிக்க என்னோடு ஒத்துழைத்த என் மீவைத் தோழர்களுக்கும்; தன் மரணத்திற்குக் காலாயமைந்த நோயுடனுங்கூட இவற்றைப் படித்துத்தன் அபிப்பிராயங்கள் திருத்தங்களைக்கூறிய அமரர் மு. தளையசிங்கத்திற்கும் அவரின்பின் அதனைத் தொடர்ந்த மு. பொன்னம்பலத்திற்கும்; இவ் அழகியமுகப்பு ஓவியத்தினை வரைந்த சௌவிற்கும்; முன்னுரை வழங்கியவரும், ஈழத்து இலக்கியத் துறையில் நான் மதிக்கிறவர்களில் ஒருவருமாகிய எம்.ஏ. நுஃமானுக்கும்; கையெழுத்துப் பிரதியாக வாங்கி இவ் அழகிய அமைப்புடன் கூடிய புத்தகமாக என்னிடம் தந்த, என் இளம் பருவத்துத் தோழன் அ. யேசுராசாவிற்கும் தோழமையுடன் நன்றி கூறுகிறேன்.

மு. புஷ்பராஜன்

குருநகர்,
யாழ்ப்பாணம்.
16-10-1976.

Posted in ஈழத்து இலக்கியம், படித்தவை_பிடித்தவைwith 1 Comment →

  • You Avatar
    -


Creative Commons License