தேடிச் சோறு நிதந் தின்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப் பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் விழுவேன் என நினைத்தாயோ!
எழுத்தாளர் தரீக் அலி சில வாரங்களுக்கு முன்பு McGill பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் மொன்ரியல் வந்திருந்தார். அவருடைய ‘New Wars and the New Media’ உரையைக் கேட்க பலரும் அலைமோதியதால் போக முடியவில்லை. எழுநூறுக்கும் மேற்பட்ட கூட்டம் அவருடைய உரையைக் கேட்டதாகப் பிறகு அறிந்தேன். இப்போது Media@McGillஇன் புண்ணியத்தில் யூட்யூப்பில்..
சில நாட்களுக்கு முந்தி நவராத்திரி படம் பார்க்கக்கிடைத்தது. சிவாஜி படங்களைப்பார்த்து வளர்ந்திருந்தாலும் இந்தப் படம் பார்க்கக்கிடைத்திருக்கவில்லை. எனவே, சந்தர்ப்பம் கிடைத்தபோது மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி உட்கார்ந்துவிட்டாயிற்று. தமிழ்ப்படம் பார்க்க மிகவும் பிடிக்குமென்றாலும் தேர்ந்தெடுத்துப்பார்க்கும் படங்களில் நிறையப் படங்கள் பாதி ஓடிக்கொண்டிருக்கும்போதே கண் செருக ஆரம்பித்து விடுகிறது. இதில் புதுசு பழசு என்றெல்லாம் வித்தியாசம் இருக்கவில்லை. ‘காதலிக்க நேரமில்லை’ பாணியில் சொல்லவில்லை. ஒரு நாள் அவதானித்தபோது ஆச்சரியமாகவிருந்தது.
அப்படியெல்லாம் இல்லாமல் முழுக்க உட்கார்ந்து பார்த்து முடித்த படம் ‘நவராத்திரி’. ஒன்பது வேட சிவாஜிக்காகப் பார்க்கத் தொடங்கினாலும் இழுத்துக்கட்டிப்போட்டது சாவித்திரி. நாடக பாணி வசனங்களைத் தவிர்த்து, ஆங்காங்கே தென்படும் அதிகப்படி உடலசைவுகள் (body language) தவிர்த்துப்பார்த்தால் பிடித்துப் போனது. சில பழைய படங்களைப் பார்க்கும்போது இதையா வாயில இலையான் போறது தெரியாமப் பார்த்தம் என்று நினைப்பு வரும். நவராத்திரியில் அப்படியிருக்கவில்லை.
பல காட்சிகள் திரும்பத் திரும்பச் சென்று பார்க்க வைப்பதாக இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது கீழே கூகுள் யூட்யூப்பிலிருந்து எடுத்திருக்கும் காட்சி. கூத்து என்ற வடிவத்தின்மேலிருக்கும் ஆர்வம் ஒரு காரணமே. கூத்து என்ற வடிவம் ஈழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் எப்படி வளங்கி வருகிறது. கூத்தின் வரலாறு பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பம். கூடவே, வெவ்வேறு வடிவங்களில் தென்-கிழக்காசியா முழுவதும் வழங்கி வரும் வடிவம் பற்றித் தெரிந்துகொள்ளவும். மும்முரமாகத் தேடத் தொடங்க வேண்டும்.
இப்போதைக்கு நவராத்திரி படத்திலிருந்து கூத்து உங்கள் பார்வைக்கு..
எனக்கு இசை பிடிக்கும். பல தரப்பட்ட இசை வகைகள் பிடிக்கும். ஏனென்று தெரியாமலேயே சில இசைவகைகள் ஈர்த்துவிடும். இசை நுணுக்கங்களோ தொடர்புடைய விதயங்களே, பல தடவைகளில் பாடல்களில் தலைப்பு, பாடியவரின் பெயர், பாடும் இசைவகை என்று எதுவுமே தெரியாமலும்கூட இசை பிடிக்கும். அப்படித்தான் ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒருவர் பாடியதைக் கேட்டேன். பாடியவர் யார், என்ன பாடுகிறார் என்றெல்லாம் தெரியவில்லை. ஏதோவொரு ஓப்ரா பாடுகிறார் என்று மட்டும் தெரிந்திருந்தது. கவனத்தை ஈர்த்து, மனதையும் கவர்ந்த அந்த இசையைப் பல வருடங்களாகக் கேட்கவில்லை. ஆனால், அந்த இசையின் சுவடும் பாடியவரின் முகமும் அந்தச் சூழலும் மனதின் ஓரத்தில் தங்கியிருந்தது. இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு ஒரு நாள், நண்பர்களுடன் அந்த இசையை மீண்டும் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்த இசையைத் திரும்பவும் கேட்டேன். இந்த முறை பாடியவரின் பெயரையும் கேட்டு உறுதி செய்துகொண்டாயிற்று. அதற்குப்பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரின் இசைத்தட்டுகளையும் இறுவட்டுகளையும் கேட்கிறேன். வானொலியில் பின்னிரவு நேரத்தில் அவரின் தாலாட்டோடு உறங்கிப்போன நாட்கள் நிறைய.
இப்போதும் ஓப்ரா இசையைப்பற்றி அதிகம் தெரியாது. மேற்கத்தேய பாரம்பரிய இசையைப்பற்றியும் அதிகம் தெரியாது. ஆனால், ஏதோ மந்திரம் இருக்கும் இந்த இசையில் ஆழ்ந்து போகிறேன். ஒரு வித meditative quality ஈர்த்து இழுத்துப்பிடிக்கிறது. அந்த சூழல் மனதை இதமாக்குகிறது. ஒரு குழுவினை சின்னச்சின்ன அசைவுகளின் மூலம் ஆட்டுவிக்கும் conductorகளின் அசைவை கண்கொட்டாமல் பார்க்கிறேன். அந்த அசைவுகளுக்கு உடனே பதில் தரும் இசைக்கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
நான் முதன்முதலில் கேட்ட இசைக்கலைஞர் இன்று இத்தாலியில் மரணமடைந்துவிட்டார்.
லூச்சியானோ பாவரொட்டி!
இவரைவிடத் திறமையானவர்கள் இருக்கிறார்கள். பல வகையான பாடல்களைப்பாடியிருக்கிறார்கள் என்றெல்லாம் பலரும் சொல்கிறார்கள். ஆனாலும், எனக்கு இவரைத்தான் பிடித்திருக்கிறது.
பிறகு பிறகு, லூச்சியானோ பாவரொட்டி பற்றித் தெரிந்து கொண்ட விதயங்களும் இந்த ஈர்ப்புக்காரணமாக இருக்கலாம். இவருடைய இசைத்திறமையைப் பல நல்ல விதயங்களுக்குப் பாவித்து இருக்கிறார். UNHCR என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்காக உழைக்கும் அமைப்பிற்காக கச்சேரிகள் வைத்துப் பணம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். ஈராக், கொசோவோ, பொஸ்னியா, குவாட்டமாலா போன்ற நாடுகளில் போரினாலும் உள்நாட்டுக்குழப்பங்களினாலும் அவதிப்படும் மக்களுக்காக கச்சேரிகள் நடாத்திப் பணம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். கண்ணி வெடிகளை நீக்குவதற்காக டயானாவுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார். இதுபோல நிறைய.
அந்தக் கலைஞனைக் கொண்டாட யூடியூபிலிருந்து இரண்டு துண்டுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். ஒன்று பலரும் அறிந்த ‘அவே மரியா’ மற்றது 2006 பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியில் டுரின் நகரத்தில் நடந்தபோது பாடிய ‘Nessun Dorma’.