Archive for the ‘அனைத்து இடுகைகள்’

காலம் இதழில் வெளியான லஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான நேர்காணல்06.10.08

நேர்காணல்: மு. நித்தியானந்தன்

தமிழின் நவீன எழுத்துக்களைத் தனது நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் மூலம் உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டுசென்ற சாதனையை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்த்தி வருகிறார். புதுமைப்பித்தன், மௌனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் ஆகிய தமிழின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளை இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் தமிழர் அல்லாத வாசகர்கள் அறிந்துகொள்வதற்கான சாளரங்களை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் திறந்துவிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் ஓர் அழகிய, இதமான வெய்யில் மின்னிக்கொண்டிருந்த காலைப்பொழுதில் லண்டனிலிருந்து மேற்கே விரியும் அழகிய வெளிகளையும், பச்சைப்பசேல் என்ற நிலத்தோற்றத்தையும் ரசித்தபடி மூன்று மணிநேரக் கார்ப் பயணத்தின் பின் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமின் நோரிச் (Norwich) இல்லத்தைச் போய்ச்சேர்ந்தோம். பலமுறை சென்ற வீடுதான் அது. இந்தமுறை ‘காலம்’ இதழுக்கான விசேட நேர்காணலுக்;காகச் சென்றிருந்தோம். வ. பவகரன், மு. புஷ்பராஜன், இ. பத்மநாப ஐயர் ஆகியோர் இந்த நேர்காணலின்போது உடனிருந்தார்கள். லக்ஷ்மியின் ஐந்து பெரிய அறைகளைக் கொண்ட அந்த வீடு முழுவதும் புத்தகங்களால் நிரம்பி வழிகிறது. லக்ஷ்மியோடு அவரது கணவர் மார்க் ஹோம்ஸ்ட்ரோம் இனிய புன்னகையுடன் எங்களை வரவேற்றார். அவர் சமூக மானிடவியலில் கலாநிதிப் பட்டம் (Ph.D.) பெற்று, கிழக்கு அங்கிலியாப் பல்கலைகக் கழகத்தில் (University of East Anglia)) மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்தியாவில் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆங்கிலத்தில் நூல்களை எழுதியிருக்கிறார். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் பேட்டிகள், மேடைகள், விளம்பரங்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்ட எளிமைகொண்டவராகத் திகழ்பவர். மிகுந்த சங்கோசத்துடன் இந்தப் பேட்டிக்கு இணங்கினார் என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் இந்த உரையாடலைத் தொடர்ந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.


கேள்வி: உங்களின் கல்விப் பின்னணி பற்றி முதலில் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்.

பதில்: எனது ஆரம்பக் கல்வி பெங்களூரில் அமைந்தது. அப்போது பெங்களூர், சென்னை மாநிலத்தின் கீழ் இருந்த காலனித்துவ காலம். அப்போது பெங்களூர் கன்ரோன்மன்ற் பகுதி முழுவதுமே தமிழ் சார்ந்ததாகத்தான் இருந்தது. நான் மிகச்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றாலும் அதற்குச் சமமான தமிழ்ப் பயிற்சியும் எனக்கு பெங்களூரில் கிடைத்ததைச் சொல்லவேண்டும். மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர்கள் எங்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்பித்தார்கள். கம்பனையும் சிலப்பதிகாரத்தையும் சிறப்பாகக் கற்பித்தனர். எனது இன்ரமீடியற் பாடத்திட்டத்திற்கு ஆங்கிலத்துடன் தமிழையும் நான் ஒரு பாடமாகக் கொண்டிருந்தேன். எங்களது இந்த இலக்கிய ஆர்வத்திற்கு எங்களது குடும்பப் பின்னணி பெருமளவு காரணமாக அமைந்தது. எனது தந்தை சமஸ்கிருதத்திலும், ஒப்பியல் சமயத் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எனது சகோதரி சமஸ்கிருதத்தை நன்கு கற்று, பாளி மொழியில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராகத் திகழ்கிறார். ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற நான், எனது பட்டப் படிப்பை முடித்த பின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் எனது முதுமானி (M.A.) பட்டத்திற்கான பயணத்தைத் தொடர்ந்தேன். பாரம்பரிய ஆங்கில ஆராய்ச்சிமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை எனது ஆராய்ச்சிப்பொருளாக நான் எடுத்தபோது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வியப்படைந்தது என்றே கூறவேண்டும். எனது ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஓர் இரவு விருந்துபசாரத்தின்போது, ஆர். கே. நாராயணன் என்ற எழுத்தாளர் பற்றி லக்ஷ்மி ஆராய்ச்சி செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்தப் பெயரை யாராவது கேட்டிருக்கிறீர்களா என்று அங்கு இருந்தவர்களிடம் வினாவினார். நல்லவேளையாக அங்கிருந்த ஒருவர் நான் ஆர். கே. நாராயணனின் Bachelor of Arts என்ற நாவலை வாசித்திருந்ததாகக் கூறி, எனது மரியாதையைக் காப்பாற்றினார். அறுபதுகளில் இந்திய வாழ்க்கையை ஆங்கிலத்தில் சித்தரித்த முக்கிய மூலவர்களாக முல்க்ராஜ் ஆனந், ராஜா ராவ், ஆர். கே. நாராயணன் ஆகிய மூவரும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். இந்த மூவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், ஆர். கே. நாராயணனின் படைப்புக்களை ஆய்வுக்கு எடுத்தபோது இந்திய இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியர், Oxford School of Oriental Studies என்ற கல்லூரியின் சார்பாக எனது மேற்பார்வையாளராக அமைந்தார்.


கேள்வி: ஆர். கே. நாராயணனின் ஆராய்ச்சி குறித்த உங்களது ஆய்வேடு நூலாக வெளிவந்திருக்கிறதா?

பதில்: ஆம். அந்த நூல் வெளியாகிப் பல வருடங்களாகிவிட்டன. அந்த நூல் இப்பொழுது எங்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது அந்த நூலை நான் வாசிக்க விரும்புவேனா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. நான் அந்த ஆய்வைத் தொடங்கியபோது இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி முன்னோடி ஆய்வுகள் எதுவும் நடைபெற்றதில்லை. உண்மையில் முற்றிலும் ஒரு புதிய தரத்தில் எனது ஆராய்ச்சியை தொடங்கினேன் என்று நான் கூறுவேன். இந்த ஆய்வையொட்டி ஆரம்பகாலத் தமிழ் நாவல்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ‘கமலாம்பாள் சரித்திரம’;, ‘பத்மாவதி சரித்திரம்’ போன்ற நாவல்கள் என் கவனத்தை ஈர்த்தன. தமிழ் இலக்கியத்துடன் தொடர்ந்து, இந்தியாவில் பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலும் அப்போது நான் ஆர்வம் கொண்டிருந்தேன். இந்த வாசிப்பில் இருந்துதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் தீவிரம் கொள்ள ஆரம்பித்தேன். ஏ. கே. ராமாநுஜத்தின் தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எனக்கு இத்துறையில் உத்வேகம் ஊட்டின.

நான் முதலில் மொழிபெயர்த்த தமிழ்ச் சிறுகதை அம்பையின் ‘மஞ்சள் மீன்’ என்ற சிறுகதையாகும். Virago என்ற வெளியீட்டகத்திற்காக இந்தியப் பெண்களின் தேர்ந்த சிறுகதைகளை தொகுத்து The Inner Courtyard என்ற சிறுகதைத் தொகுப்பு, ஆங்கிலத்தில் வெளியான எனது முதல் நூலாகும். இந்த நூல் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மூலந்தான் அம்பை எனக்கு அறிமுகமானார். அவரது ‘சிறகுகள் முறியும்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பை அடுத்து, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை ‘க்ரியா’ வெளியிட்டிருந்தது. அம்பையின் மொழிபெயர்ப்பை அடுத்து, பாமாவின் ‘கருக்கு’ என்ற நாவலும் மொழிபெயர்ப்பில் செழுமையான அனுபவங்களைச் சேர்த்துள்ளது. தமிழில் எழுந்த தலித் இலக்கிய நூல்கள் இந்திய வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை எனக்கு உணர்த்தின. இமையத்தின் ‘கோவேறு கழுதை’ என்ற நாவலை நான் மிகுந்த ஆர்வத்துடன் மொழிபெயர்த்திருந்தேன். மினி கிருஷ்ணன் பாமாவின் ‘கருக்கு’ நாவலை மொழிபெயர்க்குமாறு கேட்டபோது அந்த மொழிபெயர்ப்பில் நான் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டேன். ‘கருக்கு’ நாவல் மொழிபெயர்ப்பு எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது என்று சொல்லவேண்டும். ‘கருக்கு’ நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது, அது இந்தியாவிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அம்பையும் பாமாவும் இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே அதிகம் பேசப்படும் பெண் எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள் என்றால், அதற்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்தான் ஆதாரமாக அமைந்தன என்று கூறலாம். ‘கருக்கு’ நாவல் ஒரு தலித் பெண்ணின் கோபத்தையும் வலியையும் நேரடியாக, அந்த மண்ணின் மணத்தோடு பேசும் நாவலாகும்.

கேள்வி: தலித் இலக்கியம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: மராத்திய தலித்துகளிடமிருந்து ஊட்டம் பெற்ற தலித் இலக்கியம், இந்தியத் தேசிய அளவில் எழுந்துள்ள எதிர்ப்பு இலக்கிய வடிவமாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் தனித்த ஓர் இலக்கியச் செல்நெறியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இதுகாலவரை தமிழில் நிலவி வந்த இலக்கிய நியமங்களுக்குப் பெரும் சவால்களை விடுத்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கை பற்றிய இந்தப் புதிய விவரணங்கள் தமிழ் வாசகர்களுக்குப் புதியதோர் உலக நோக்கினைத் தந்துள்ளன. மறுபுறம், இலக்கண அமைதி, மரியாதையான மொழிப்பயன்பாடு போன்ற நியமங்களுக்கு மாறாகத் தலித் மக்களுக்கேயுரிய மொழிவழக்கு, செலவடை, நாட்டார் வழக்கு ஆகிய அம்சங்களைக்கொண்டு தலித் இலக்கியம் தமிழிற்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளது. பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ ஆகிய இரு படைப்புகளும் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாயிலாக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறன.

கேள்வி: நவீன தமிழ்ப் படைப்புக்கள் எந்த அளவிற்குத் தமிழர் அல்லாதவர்கள் மத்தியில் அறிமுகமாகி இருக்கிறது?

பதில்: துரதிஷ்டவசமாக இல்லை என்றே கூறவேண்டும். உலகத் தரத்திற்கு இணையாக வைத்துப் பேசக்கூடிய எம் தமிழ்ப் படைப்பாளிகள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியவரவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கிறது. புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற நவீன தமிழ் எழுத்தின் மூலவர்கள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியாதவர் களாகத்தான் இருக்கிறார்கள். வங்காள மொழி இலக்கியத்திலும் உருதுமொழி இலக்கியத்திலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் பெயர்கள் உலக அரங்கில் பரிச்சயம் மிக்க பெயர்களாக இருக்கும் அதேவேளையில் தமிழின் மிக உன்னத எழுத்தாளர்கள் இன்னும் தெரியவராமல் இருப்பது நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்று கருதுகிறேன்.

கேள்வி: தமிழின் நவீன எழுத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட மௌனியின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மௌனியின் கதைகள் மொழிபெயர்ப்புக்கு ஒரு சவாலாக அமைய வில்லையா?

பதில்: உண்மைதான். மௌனியின் எழுத்து சற்றே பூடகமானதும் கவித்துவப் பாங்கானதுமாகும். தன்னுடைய மன உத்வேகத்தை வெளிப்படுத்துவதற்குத் தமிழ்மொழி போதுமானதாக இல்லை என்றுகூட மௌனி குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வசனநடை தனித்துவமானதும் வித்தியாசமானதுமாகும். அவருடைய பல வாக்கியங்கள் perhaps, maybe ஆகிய அர்த்தம் தொனிக்கும் ‘போலும்’ என்று முடிவதைக் காணலாம். வாழ்க்கைக்கும் சாவுக்கும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மங்கலாக்கும் எழுத்து அவருடையது. தமிழின் புனைகதை இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உந்தித்தள்ளிய ஓர் அற்புதமான எழுத்தாளராகவே மௌனியைப் பார்க்கிறேன். இதனைவிட அசோகமித்திரனும் தமிழில் மிக அற்புதமான சிறுகதைகளை வடித்திருக்கிறார் என்றே கூறுவேன். அசோகமித்திரனின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பதில் இரண்டு, மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளார்கள் என்றாலும், அவரது ‘தண்ணீh’; என்ற நாவலை மொழிபெயர்த்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்று கருதுகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல்களில் ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுவேன். தமிழ்மொழியைக் கையாள்வதில் சுந்தர ராமசாமி ஒரு தேர்ந்த சிற்பியைப்போலச் செயற்பட்டிருக்கிறார். அவரது நாவல்களையும் கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்க்கும்போது அவருடன் நான் மேற்கொண்ட உரையாடல்கள் அவரின் மகத்தான ஆளுமையை என்னில் பதியச்செய்துள்ளது. ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ என்ற நாவலின் மொழிபெயர்ப்பை சுந்தர ராமசாமி உயிருடன் இருந்தபோதே முடித்துவிட்டிருந்தேன் என்றாலும் அதனை அச்சில் காண்பதற்கு இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும்போல் தெரிகிறது.

கேள்வி: தமிழ் எழுத்துக்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு இந்திய அளவில் அல்லது ஐரோப்பிய அளவில் எந்தளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்: இந்திய மொழிகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அண்மைக்காலங்களில் பெருமளவில் வெளிவந்தவண்ணமுள்ளன. இந்தியாவில் பல வெளியீட்டு நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளில் தீவிரமாகவே உழைத்துவருகின்றன. Oxford University Press (OUP)> Macmillan, Orient Longman, East West Press, Penguin> Katha, Kali for Women ஆகிய வெளியீட்டகங்கள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டிவருகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் இந்த மொழிபெயர்ப்புக்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஏ. கே. ராமாநுஜன், நோமன் கட்லர் போன்றோரது பெருமுயற்சி காரணமாக இந்திய இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு மிகச்சிறந்த வரவேற்புக் காணப்படுகின்றது. அமெரிக்காவில் இடம்பெற்ற எழுத்தாளர்களின் பட்டறை ஒன்றில் புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் நான் வாசித்தபோது அந்த அரங்கு மிகுந்த அமைதியுடன் அக்கதையை ஆர்வத்துடன் கேட்டது. மிக அற்புதமான கதை இது, என்று அந்த அரங்கில் குழுமியிருந்த ஆங்கில எழுத்தாளர்கள் பாராட்டினார்கள். தமிழில் மிகச்சிறந்த எழுத்துக்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் வெளியாகவேண்டிய தேவை உள்ளது. பெருமளவு மொழிபெயர்ப்புக்கள் கிடைக்கும்போதுதான் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய சித்திரம் ஒன்று உலக வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடியதான சூழல் உருவாகும். இந்தப் பணி மிகுந்த உழைப்பையும் தீவிர அர்ப்பணிப்பையும் ஈ:டுபாட்டையும் கோரி நிற்கிறது. தமிழில் இன்று மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குலகின் வாசிப்பிற்கு உகந்த வகையில் இம்மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்வதும் அவசியமாக அமைகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் புகழ்பெற்ற Heinemann பதிப்பகத்தினர் இந்திய நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். முதலில் ஆறு இந்திய நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தமிழில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்ற நாவலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். திட்டமிட்டபடி ஆறு நாவல்கள் வெளியாகின எனினும், அவை போதுமான அளவிற்கு ஆங்கில வாசகப் பரப்பில் வரவேற்பைப் பெறாததால் அவர்களின் பாரிய மொழிபெயர்ப்புத் திட்டம் கைவிடப்பட்டமை மிகப்பெரிய துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.

கேள்வி: ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்: ஈழத்து அரசியலும் இலக்கியமும் எனக்கு மிக அண்மையில் பரிச்சயமானதொன்றாகும். பத்மநாப ஐயர் மூலமாகவே ஈழத்துக் கவிதைகளில் எனக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது. ஈழத்திற்குப் பயணம் செய்து ஈழத்துத் தமிழ் ஆய்வாளர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு அவராலேயே கிடைத்தது. ஈழத்தின் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் எனது அக்கறையைப் பெரிதும் ஈர்த்தன. ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பது, அவற்றின் அரசியல் பின்னணியில் பார்க்கும்போது கவலை தரும் ஒன்றாகும். ஈழத்தின் கணிசமான பெண் எழுத்தாளர்களின் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு மகிழ்ச்சி தருவதாகும்.

கேள்வி: மொழிபெயர்ப்புக்களை புதிய சிருஷ்டி முயற்சியாக நோக்குகிறீர்களா?

பதில்: மொழிபெயர்ப்பு இயந்திரீகமாகச் செய்யும் ஒன்றல்ல. ஒரு மொழியின் அர்த்த சாயல்களை, வேறுபாடுகளை நுணுகி விளங்கி, மூலநூலுக்கு விசுவாசமாக நின்று வேறொரு மொழியில் பேசும் முயற்;சி;;. ஒரு புதிய சிருஷ்டியை ஆக்குவதுபோலத்தான். மூலநூலினுடைய உள்ளார்ந்த குரலையும் நடையையும் மற்றுமொரு மொழியில் சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு மொழிபெயாப்ப்பாளரின் முன்னுள்ள சவாலாகும். ஒரு மொழிபெயர்ப்பாளன் ஒரு கண்ணாடிபோலச் செயற்படுவதில்லை. மூலநூலினை நன்கு கிரகித்து அதற்கு விளக்கம் தரும் ஒருவராகவும் அவர் அமைகிறார். மொழிபெயர்ப்பாக்கம் என்பது ஒரு புதிய சிருஷ்டியாகவே அமைந்துவிடுகிறது.

கேள்வி: இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்கள் இந்தியாவில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றுவருகின்றன?

பதில்: மொழிபெயர்ப்புக்கள் பெருமளவில் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் இன்னும் மொழிபெயர்ப்புக்கள்மீது தீவிரமான அக்கறை காட்டப்படவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து மிகச்சிறந்த மொழிபெயர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இந்தியாவின் இந்த மொழிபெயர்ப்புக்களின் வாசகப் பரப்பு எத்தகையது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். மொழிபெயர்ப்புக்களின் தாரதம்மியம் ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும், மொழிபெயர்ப்புக்கள் எவ்வாறு வாசிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் ஆய்வுகள் தேவை. பல்வேறு மொழிகள் பயில்கின்ற இந்தியா, மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மிகச்சிறந்த இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உலகிற்கு இன்னும் தெரியாவதவர்களாவே இருக்கிறார்கள். தேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த மொழிபெயர்ப்புக்கள் இல்லை என்பது மட்டும் ஒரு காரணமல்ல. வாசகப் பரப்பிற்கு எடுத்துச்சென்று இந்த எழுத்தாளர்களுக்குரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டிய பணியில் பிரபல வெளியீட்டு நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதும் ஒரு முக்கிய குறைபாடாகும்.

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் இந்தத் தமிழ் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

பதில்: இது சிறிது சுவாரஷ்யமான கேள்விதான். பல்கலைக்கழக மட்டத்திலும், ஆராய்ச்சி நோக்கிலும் தலித் மக்கள், பெண்ணிய எழுத்துக்கள் என்ற அடிப்படையிலும், ஒப்பியல் இலக்கிய அடிப்படையிலும் இந்த மொழிபெயர்ப்புக்களுக்கு ஒரு வரவேற்பு உண்டு என்பது உண்மை. மௌனி சிறுகதைகளின் எனது மொழிபெயர்ப்பைப் பார்த்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து மௌனியின் பேத்தி மிகுந்த வியப்புடன் எனக்கு தெரிவித்த பாராட்டினை நான் மனதில் கொள்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டுள்ள இளம் தலைமுறையினர், தமிழ் இலக்கியத்தை ரசிப்பதற்கும், தமிழ் மொழியில் ஈடுபாடு காட்டுவதற்கும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பெரிதும் துணைபுரியும் என்றே நான் கருதுகிறேன். லண்டனிலும் கனடாவிலும் நான் மேற்கொண்ட கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறைகள் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆங்காங்கே துளிர்த்துவரும் அக்கறையின் சாட்சியாக அமைகின்றன.

நன்றி: காலம்

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith 2 Comments →

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

நகரம்(சிறுகதை) - சுஜாதா02.28.08

‘‘பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை, பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத் தமிழ் மதுரையேயாம்.

-கால்டுவெல் ஒப்பிலக்கணம்

சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன, நிஜாம் லேடி புகையிலை ஆ.கே. கட்பாடிகள் எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் ஹாஜி மூசா ஜவுளிக் கடை (ஜவுளிக்கடல்), 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்:

மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்’ அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தலம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்’ கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன, மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம்போல் இருந்தது. (பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்) கதர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகை, பாவம்…மதுரை!

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி. டிபார்ட்மெண்டின் காரிடாரில் காத்திருந்தாள் முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்ட்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டி விட்டார். ‘‘உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போ’’ என்றார்.

அதிகாலை பஸ் ஏறி…பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தான். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக்கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன நெற்றியில் விபூதிக் கீற்று. மார்புவரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி ஜுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.

பெரிய டாக்டர் அவன் தலையைத் திருப்பிப் பார்த்தார். கண் இரப்பையைத் தூக்கிப் பார்த்தார். கன்னங்களை விரலால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்து பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர். போஸ்ட் கிராஜுலேட் வகுப்புகள் எடுப்பவர்கள், ப்ரொஃபஸர், அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள்.

‘Acute case of Meningitis. Notice the…’’

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாஷணையின் ஊடே தன் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆஃதால் மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குள்ளே பார்த்தார்கள். ‘‘டார்ச்’ அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள். குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள்.

பெரிய டாக்டர். ‘‘இவனை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள்’’ என்றாள்.

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி ‘‘மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், ‘‘இத பாரும்மா, இந்தப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்கார்ந்திருக்காரே, அவர் கிட்ட போ. சீட்டு எங்கே?’’ என்றார்.

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

‘‘சரி, அவரு கொடுப்பாரு. நீ வாய்யாஇப்படி பெரியவரே’’

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, ‘‘அய்யா, குளந்தைக்குச் சரியாய்டுங்களா?’’ என்றாள்.

‘‘முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம். டாக்டர் தனசேகரன். நானே இந்தக் கேஸைப் பார்க்கிறேன். ஸீ தட் ஷி இஸ் அட்மிட்டட். எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கிறேன்.’’

மற்றவர்கள் புடை சூழ அவர் ஒரு மந்திரிபோல் கிளம் பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டுப் பெரிய டாக்டர் பின்னால் விரைத்தார்.

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

‘‘இங்கே வாம்மா. உன் பேர்?… டேய் சாவு கிராக்டிக! அந்த ரிஜிஸ்தரை எடுடா!’’

‘‘வள்ளியம்மாள்.’’

‘‘பேஷண்ட் பேரு?’’

‘‘அவரு இறந்து போய்ட்டாருங்க.’’

சீனிவாசன் நிமிர்ந்தான்.

‘பேஷண்ட்டுன்னா நோயாளி… யாரைச் சேர்க்கணும்?’’

‘‘என் மகளைங்க.’’

‘பேரு என்ன?’’

‘‘வள்ளியம்மாளங்க.’’

‘‘என்ன சேட்டையாக பண்றே? உன் மக பேர் என்ன?’’

‘‘பாப்பாத்தி.’’

‘பாப்பாத்தி!… அப்பாடா. இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக்கிட்டுப்போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்திருப்பார். வருமானம் பாக்கறவரு. அவருகிட்ட கொடு.’’

‘‘குளந்தைங்க?’’

‘‘குளந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்திருக்கட்டும். கூட யாரும் வல்லையா? நீ போய் வா… விஜயரங்கம் யாருய்யா?’’

வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை. அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இறந்து போன தன் கணவன்மேல் கோபம் வந்தது.

அந்தச் சீட்டைக் கொண்டு அவள் எதிரே சென்றாள். நாற்காலி காலியாக இருந்தது. அதன் முதகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள். அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால் பாகத்தால் பார்த்தார். ‘‘இரும்மா, அவரு வரட்டும்’’ என்று காலி நாற்காலியைக் காட்டினார். வள்ளியம்மாளுக்குத் திரும்பத் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில், காத்திருப்பதா குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிட்ததது.

‘‘ரொம்ப நேரமாவுங்களா?’’ என்று கேட்கப் பயமாக இருந்தது அவளுக்கு.

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமகனை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார். ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக் கொண்டு சுறுசுறுப்பானார்.‘‘தயார், வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது?’’

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

‘‘டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே அதிலே!’’

‘‘அதுக்கு ‘‘எங்கிட்டுப் போவணும்?’’

‘‘எங்கேருந்து வந்தே?’’

‘‘மூனாண்டிப்பட்டிங்க!’’

கிளார்க், ‘‘ஹைத்’’ என்றார். சிரித்தார். ‘‘மூணாண்டிப் பட்டி! இங்கே கொண்டா அந்த சீட்டை.’’

சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறி போல் இப்படித் திருப்பினார்.

‘உன் புருசனுக்கு என்ன வருமானம்?’’

‘‘புருசன் இல்லீங்க’’

‘‘உனக்கு என்ன வருமானம்?’’

அவள் புரியாமல் விழித்தாள்.

‘‘எத்தனை ரூபாப மாசம் சம்பாதிப்பே?’’

‘‘அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேவரகு!’’

‘‘ரூபா_கிடையாதா!… சரி. தொண்ணூறு ரூபா போட்டு வெக்கறேன்.’’

‘மாசங்களா?’’

‘‘பயப்படாதே. சார்ஜு பண்ணமாட்டாங்க. இந்தா இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு இப்படியே நேராப் போய் இடது பக்கம்_பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும். 48_ஆம் நம்பர் ரூமுக்குப் போ.’’

வள்ளியம்மாள். அந்தச் சீட்டை இருகலரங்களிலும் வாங்கிக் கொண்டாள். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க, காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்குப் படிக்க வராது. 48_ஆம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பிப் போய் அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்து கொண்டு, பாதிபடுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வ்ண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தின் சாம்பார். சாதம் நகர்ந்து கொண்டிருந்தது வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தது. அலங்கரித்துக்கொண்டு, வெள்ளைக்கோட் அணிந்து கொண்டு, ஸ்டெதாஸ்கோப் மாலையிட்டு, பெண்டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்ஸ்கள் எல்லோரும் எல்லாத் திசையிலும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கிக் கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்தப் பெண் அங்கே தனியாக இருக்கிறாள் சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாகஅவர்களை உட்கார வைத்தான் பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து, ‘‘இங்கே கொண்டு வந்தியா! இந்தா,‘‘சீட்டைத் திருப்பிக் கொடுத்து, ‘‘நேராப்போ,’’ என்றான். வள்ளியம்மாள், ‘‘அய்யா இடம் தெரியலிங்களே’’ என்றாள். அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனைத் தடுத்து நிறுத்தி, ‘‘அமல்ராஜ், இந்த அம்மாளுக்கு ‘‘நாற்பத்தி எட்டாம் நம்பரைக் காட்டுய்யா. இந்த ஆள் ‘பின்னாடியே போ. இவர் அங்கேதான் போறார்’’ என்றான்.

அவன் அமல்ராஜின் பின்னே ஓடவேண்டி இருந்தது.

அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு வட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக் கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

அரை மணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக ஒருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்.

‘‘ஓ.பி.டிபார்ட்மெண்டிலிருந்து வரியா?’’

இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

‘அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்?’’

‘‘எங்கிட்டு வர்றதுங்க?’’

‘இங்கே வா. நேரா வா, என்ன?’’

வள்ளியம்மாளுக்கு அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட் பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன. மிஷன்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக அவளுக்குத் திரும்பவும் வழி புரியவில்லை.

‘அம்மா’’ என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு தான் புறப்பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். ‘‘நிறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க, பணம் கொடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா!’’

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொன்னான். அந்தஇடத்தில் அவள் அழுவதுஅந்தஇடத்து அஸெப்டிக் மணம்போல் எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டுப் பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்?’’ என்று பேசிக் கொண்டே நடந்தாள். ‘ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்துதான் தொலை தூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

ஆனால் வாயில்தான் மூடப்பட்டிருந்தது. உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

‘‘அதோ! அய்யா, கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம்மல அங்கே இருக்கு.’’

‘‘சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்.’’ அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள் அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான் அவன் கேட்டது அவளுக்குப் புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழிவிட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்.

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிடுடு விட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஸைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. ஙி வி யி யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார்.

‘‘இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின் ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா?’’

‘‘இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர்’’

‘‘என்னது? அட்மிட் ஆகலையா? நான் ஸ்பெஸிஃபிக் காகச் சொன்னேனே! தனசேகரன். உங்களுக்கு ஞாபகம் இல்லை?’’

‘‘இருக்கிறது டாக்டர்!’’

‘‘பால்! கொஞ்சம் போய் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்டி மிஸ் ஆகும்?’’

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார்.

‘‘எங்கேய்யா! அட்மிட் அட்மின்னு. நீங்க பாட்டுக்கு எழுதிப்புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது!’’

‘‘ஸ்வாமி! சீஃப் கேக்கறார்!’’

‘‘அவருக்குத் தெரிஞ்சவங்களா?’’

‘‘இருக்கலாம். எனக்கு என்ன தெரியும்!’’

‘‘பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ப பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்கு காலை 7.30க்கு வரச் சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூஹ பெட் காலியாகும். எமர்ஜன்ஸினனா? முன்னாலேயே சொல்லணும்! இல்லை, பெரியவருக்கு அதிலே இண்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா?’’

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7.30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டான். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

‘‘வாட் நான்ஸென்ஸ்! நாளைக்குக் காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்தப் பெண் செத்துப் போய்டும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி. யிலே போய்ப் பாருங்க. அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிபார்ட்மெண்ட் வார்டிலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க! க்விக்!’’

‘‘டாக்டர்! அது ரிஸர்வ் பண்ணி வெச்சுருக்கு!’’

‘‘I don’t care. I want that girl admitted now. Right now!’’

பெரியவர் அம்மாதிரி இதுவரை இருந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி. டிபார்ட்மெண்டுக்கு ஓடினார்கள்.

‘‘வெறும் சுரம்தானே? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போய்விடலாம். வைத்தியரிடம் காட்டி விடலாம் கிராம ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாகப் போய்விடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.’’ சைக்கிள் ரிக்ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது வள்ளியம்மாள், பாப்பாத்திக்குச் சரியாய்ப் போனால் வைதீஸ்வரன் கோவிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன்’’ என்று வேண்டிக் கொண்டாள்.

(1972)

சுஜாதா … - அருள்செல்வன் கந்தசுவாமி

Thank you sir, for everything - இகாரஸ் பிரகாஷ்


சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது….! - கானாபிரபா
கானாபிரபா ஒஸ்ரேலியத் தமிழ் வானொலிக்காக எடுத்த நேர்காணல்.

என் இனிய சுஜாதா : உண்மைத்தமிழன்(15270788164745573644)

வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம்…. : Jsri

பல பொழுதுகளைத் தன் எழுத்துகளுடன் இனிமையாகச் செலவழிக்க வைத்த, பல தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் அடையாளம் காட்டிய சுஜாதாவிற்கு..

Posted in அனைத்து இடுகைகள்with 9 Comments →

  • You Avatar
    -