‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடி on May 07, 2008

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Trackback URI | Comments RSS

3 Responses to “ ‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு ”

  1. # 1 Kana Praba Says:

    பாபுவின் கூர்ந்த அவதானிப்பும் எழுத்தாளுமையும் வியக்கவைக்கின்றது, அகழ்வாராய்ச்சி செய்து எடுத்துத் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் இப்படியான பழைய கருத்தாடல்களையோ பதிவுகளையோ மூத்த (!) பதிவராகிய நீங்கள் செய்தால் மொக்கை வைரஸ் பதிவுகளை அழிக்கலாம்.

    இந்தப் பதிவின் தாக்கத்தில் இன்று போடவிருந்த கயல்விழியின் பாடல் தொகுப்பை நேற்றே இட்டுவிட்டேன், அதில் அழகிய கண்ணே (உதிரிப்பூக்கள்) பாட்டும் இருக்கும்.

    மகேந்திரனின் “நானும் என் சினிமாவும்” எடுத்துப் படியுங்கள், இந்தப் படங்கள் குறித்த வியப்பான இன்னொரு அனுபவத்தையும் பெறலாம்.

  2. # 2 எஸ். பாபு Says:

    அன்பு மதி:
    மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மரத்தடிக் காலம் மிக அற்புதமான காலம். அப்போது எனக்கு எழுத நிறைய நேரம் இருந்தது. அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பிய நான் சில மாதங்கள் பணியாற்றிய பின் மீண்டும் ஆராய்ச்சிப் பணிக்காக அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் இருந்தேன். எல்லாம் தற்காலிகப் பணிகள். நிரந்திர வேலை பெற வாய்ப்பு ஏதும் கிட்டாததால் கடந்த ஜனவரி 2008 இந்தியா திரும்பினேன். தற்போது கோயமுத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் உயிர்தொழில்நுட்பவியல் துறையில் உதவிப் பேராசிரியராக வேலையில் சேர்ந்துள்ளேன். இப்போது எழுத நேரம் கிடைக்கிறது. இடைப்பட்ட காலத்தில் தமிழ் இணையதளம் எவ்வளவோ மாறிவிட்டது. உண்மையில் வலைப்பதிவு தொடங்குவது குறித்த தொழில்நுட்பங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இங்குள்ள நண்பர்கள் மூலம் விரைவில் தொடங்க முயற்சிக்கிறேன். உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் கண்டேன். உடனே எனது favourites menu வில் இணைத்துவிட்டேன். தொடர்ந்து உங்கள் வலைப்பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டங்கள் இடுகிறேன்.
    உதிரிப்பூக்களைப் பற்றி நீண்ட கட்டுரையை விரைவில் எழுதுகிறேன். இன்னும் எனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பற்றியும்.
    அமெரிக்காவில் காலை எட்டு மணி தொடங்கி இரவு பன்னிரெண்டு மணி வரை ஆராய்ச்சிப் பணி. ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை. சில சமயம் அன்றும் கூட ஆராய்ச்சிக்கூடத்துக்கு செல்ல வேண்டியிருக்கும். காலையில் கிளம்பும்போது எனது மூன்று வயது மகன் உறங்கிக் கொண்டிருப்பான். இரவு வீடு திருப்பும்போது மகனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மனைவியிடம் பேசவும், மகனின் முகத்தைப் பார்க்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் முடியும். சம்பளம் மிகக் குறைவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் Postdoctoral fellows are the utmost under-employed and under-paid people என்பேன். குடும்ப வாழ்க்கை இப்படி. புத்தகம் படிக்கமுடியாமல், எதுவும் எழுத முடியாமல், நண்பர்களுக்கு அவ்வப்போது ஈமெயில் கொடுக்கக்கூட நேரமில்லாமல் போவது அதைவிடக் கொடுமை. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று யோசித்தேன். ஏதோ ஒரு தைரியத்தில் இந்தியாவுக்கு வந்தேன். வந்த ஒரு மாத்த்தில் வேலை கிடைத்தது. இதுவும் நிரந்தரமான வேலை என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்காவில் கிடைத்த சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு தான் இங்கு கிடைக்கிறது. ஆனால் நிம்மதி பல மடங்கு உயர்ந்துவிட்டது. இப்போது கலை இலக்கிய ஈடுபாடு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. என்ன செய்வது…அன்றாட வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால், அதற்கு அப்புறம்தானே கலை இலக்கியம் சினிமா சமூகம் என்று சிந்தனை போகிறது!!!!
    இப்போது நான் தீவிரமாக இயங்கிவரும் தளங்கள்:
    1. எழுத்தாளர் பாமரனின் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் செயல்பாடுகள். சமீபத்தில் அவ்வியக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா, ‘எம்.ஆர்.ராதா - காலத்தின் கலைஞன்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் பெரியார் திரைப்படத்தில் நடித்ததற்காக சத்யராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். சத்யராஜ வெகுவாகப் பாராட்டினார்.
    2. காளான் பூக்கும் காலம் என்ற எனது முதல் கவிதை நூலுக்குப் பிறகு நான் எழுதி, பத்திரிகைகளில் இணையதளங்களில் பிரசுரமான கவிதைகள், பிரசுரமாகாத கவிதைகள், கட்டுரைகள், குறிப்புகள், திரைப்பட விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தொகுத்து ஒரு நூல் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.
    3. கோவையில் இருந்து வெளிவரும் ‘தன்னம்பிக்கை’ என்ற மாத இதழுக்காக ஒரு தொடர் கட்டுரை எழுதுகிறேன். வருகிற ஜூன் மாதம் முதல் வெளிவருகிறது.
    4. ஆர்குட் இணையதளத்தில் இளையராஜாவின் திரைப்படப்பாடல்கள் குறித்து குறிப்புகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
    5. இரண்டு நாட்களுக்கு முன்புதான் குமுதம் இதழில் ஞாநி எழுதும் ஓ..பக்கங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதி முடித்திருக்கிறேன். எங்கே அனுப்புவது என்று முடிவு செய்யாமல் வைத்திருக்கிறேன்.
    6. உங்களைப் போன்ற பழைய நட்புகளின் (நட்பில் பழசு புதுசு உண்டா?) வலைப்பதிவுகளை தேடிப்பிடித்து பின்னூட்டங்கள் இட்டு வருகிறேன்.
    7. ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதங்கள் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

    மரத்தடியில் நான் எழுதியவை குறித்து என்னைப் பெருமைப்படுத்தும் விதமாக எழுதியிருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    மீண்டுமொரு பின்னூட்டத்தில் சந்திக்கிறேன்
    அன்புடன்
    எஸ். பாபு

  3. # 3 மஞ்சூர் ராசா Says:

    என்றாவது ஒரு நாள் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியவர்களில் எஸ்.பாபுவும் ஒருவர். அவரது மரத்தடி பதிவுகள் மூலம் பல கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவின் மூலம் அவர் கோவையில் தான் இருக்கிறார் என்பதறிந்து மகிழ்வுற்றேன். ஆனால் சமீபத்தில் கோவை போன போது சந்திக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.

    எப்படியும் அடுத்தமுறை கோவை செல்லும்போது சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    அன்பு பாபு: உங்களின் வலைப்பதிவை காணவும் பதிவுகளை படிக்கவும் ஆவல்.

Leave a Reply


  • You Avatar
    -


Creative Commons License