பெண்களுக்கான பெண்களாலான கட்சி கிராமத்துச் சிறுமிகளின் சிந்தனையும் சிறுவர்களின் எதிர்வினையும், சிவகாமியினூடாக
‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.
‘‘என்ன பேசாம இருக்கீங்க?’’ பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.
‘‘அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா…’’
‘‘என்ன ஆனா? ஆவன்னா?’’ எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ‘‘ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே’’ என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.
பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.
‘‘பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!’’ சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உடனே ஒரு சிறுமி எழுந்து ‘‘நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சு£தந்திரமே இல்ல’’ என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.
‘‘ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?’’
சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான_ குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான_ இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.
‘‘எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?’’ நான் கேட்டேன்.
‘‘அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்’’
‘‘அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’
சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு ‘சபாஷ்’ உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.
‘‘எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?’’ என் கேள்வி குழப்பத்தை _ அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.
எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.
‘‘எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?’’
ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.
‘‘பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?’’
விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.
‘‘ரொம்ப சூப்பரா இருக்கும்!’’ சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.
‘‘அடேயம்மா’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.
‘‘என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?’’
அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,
‘‘நாடு நாசமாப்பூடும்’’ என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.
நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.
‘‘ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?’’
‘‘ஓ. நிச்சயமா டீச்சர்’’ கோரஸ்.
‘‘சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?’’
‘‘சத்தியமாக மாட்டோம்.’’
இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ‘‘அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க’’ என்றார்.
‘‘உண்மையைத்தான் சொல்கிறோம்.’’
‘‘அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க’’ என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
‘‘சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.’’ அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.
ஆசிரியர் கப்சிப்.
‘‘சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?’’ என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,
‘என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?’’ என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.
‘‘செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.’’ இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.
பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி _ சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறுக்கு அருகேயிருக்கும் ஊரொன்றில் வேறொரு வேலையாகப் போன சிவகாமி, பள்ளி மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதன் சாராம்சந்தான் மேலே இருப்பது. தொடர்ச்சியை ஏப்ரல் மாத தீராநதியில் படிக்கலாம். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் இதே கேள்விகளும் பதில்களும் மேலே இருப்பதுபோலவே இருந்ததாக சிவகாமி சொல்கிறார்.
இஸ்ரேல், போலந்து, க்ரீன்லாந்து போன்ற நாடுகளில் பெண்களுக்கான கட்சி என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் உருவானாலும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. சில வருடங்களுக்குப்பிறகு அந்தக் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமற்போனது.
ஆனாலும், மேலே அந்தச் சிறுமிகளின் சிந்தனை யோசிக்க வைக்கிறது இல்லையா. எங்கே ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துச் சிறுமிகள் இவ்வளவு தெளிவுடன் இருப்பது நம்பிக்கை கொடுக்கிறதுதான்.


April 24th, 2008 at 11:00 am
மதி:
நம்பிக்கை வைப்பது தவறில்லை. ஆனால் அதிகாரம் கையில் வந்த பின்னர் ஆணாவது பெண்ணாவது, யாவரும் பரம்பொருளே. இந்தியாவையும் தமிழகத்தையும் பெண்கள் ஆட்சி செய்யவில்லையா? என்ன மாற்றம் நடந்துவிட்டது?
முத்து
April 24th, 2008 at 11:04 am
முத்து,
நான் நம்பிக்கை வைத்தது பெண்கள் ஆட்சிக்கு வருவதைப்பற்றியல்ல. என்னென்ன வேண்டும் என்று எங்கோ இருக்கும் இரு வேறு கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளின் ஒத்த எண்ணங்களைப் பார்த்து.. பெண்களுக்கான கட்சி வேண்டும் என்பதை நான் உடனே வெறுமனே அரசியலில் பொருத்திப் பார்க்கவில்லை. சமூகத்தில் நடப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எண்ணிப் பார்த்துத்தான்.
-மதி
April 24th, 2008 at 11:17 am
முத்து,
பெண்களே ஆட்சி செய்தது என்று இந்தியாவின் இந்திராவையும் தமிழகத்தின் ஜெயலலிதாவையும் இலங்கையின் சிறிமாவோ பண்டாரநாயக்காவையும் அவரது மகள் சந்திரிகா குமாரதுங்காவையும் இஸ்ரேலின் கோல்டா மேயரையும் இன்னபிற பாக்கிஸ்தானிய, பங்களாதேஷிய, பிலிப்பீன்ஸின் பெண் அரசியல் தலைவர்களை வைத்து சொல்லமுடியாது. அவர்கள் ஆண்களைப்போலவே அவர்களது சிந்தனையைப்போன்றே சிந்தித்து அரசியல் செய்தவர்கள்.
அரசியலில் பெண்களின் ஆட்சி என்று இந்தச் சிறுமிகள் நினைப்பது அதிகாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் கணிசமான சக்தியாக இருப்பது.
எந்த அரசும் பெண்களுக்கென்று எதையும் செய்யவில்லை என்ற இந்தச் சிறுமிகளின் சிந்தனையைப் பாருங்கள். கூடவே, பெண்களுக்கான கட்சியை ஆண்கள் தொடங்கமுடியாது என்று உடனேயே சொல்லும் சிறுமியைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
பாரதிதாசனின் ‘சுதந்திரம்’
தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?
April 25th, 2008 at 10:46 am
:))
இங்கே ‘தந்தையர்சிந்தனை’ என்பது ஏதோ.. ஆண்களுக்கு மட்டும் உரியது போல ஒரு கற்பிதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது பல ஆண்டுகளாக! ஆணாதிக்கம் என்பது கருத்தாக்கம்.. அதை சரி(அறியாமலேயே/ அறிந்தே) என்று ஒப்புக்கொள்ளும் பெண்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் முத்து போன்ற நண்பர்கள் கவனிக்க வேண்டும்.
மேலும், வீடுகளில் இருக்கும் சிறுவன் அழுதால்.. “ஏண்டா அழுவுற பொட்டப்புள்ள நீ! ” என்று கேட்கும் வழக்கம் பல இல்லங்களில் இன்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. அழுவது என்பது பெண்களுக்கான காரியம் என்பது எவன் ஏற்படுத்திய மரபு. ஆண் அழுதால் அசிங்கம், பெண் அழுதால் அது அவர்கள் இயல்பு நிலை என்ற கற்பிதம் எப்படி உருவாக்கப்பட்டது.
நம் சமூகத்தில் நிலவும் ‘ஆணாதிக்க சிந்தனையை’என்பதை களைய தொடர்ந்து போராடியே வெற்றி பெறமுடியும். அது தனிமனிதன் ஆனாலும் சரி, சமூகம் ஆனாலும் சரி!!
April 25th, 2008 at 10:46 am
:))
இங்கே ‘தந்தையர்சிந்தனை’ என்பது ஏதோ.. ஆண்களுக்கு மட்டும் உரியது போல ஒரு கற்பிதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது பல ஆண்டுகளாக! ஆணாதிக்கம் என்பது கருத்தாக்கம்.. அதை சரி(அறியாமலேயே/ அறிந்தே) என்று ஒப்புக்கொள்ளும் பெண்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் முத்து போன்ற நண்பர்கள் கவனிக்க வேண்டும்.
மேலும், வீடுகளில் இருக்கும் சிறுவன் அழுதால்.. “ஏண்டா அழுவுற பொட்டப்புள்ளாயா நீ! ” என்று கேட்கும் வழக்கம் பல இல்லங்களில் இன்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. அழுவது என்பது பெண்களுக்கான காரியம் என்பது எவன் ஏற்படுத்திய மரபு. ஆண் அழுதால் அசிங்கம், பெண் அழுதால் அது அவர்கள் இயல்பு நிலை என்ற கற்பிதம் எப்படி உருவாக்கப்பட்டது.
நம் சமூகத்தில் நிலவும் ‘ஆணாதிக்க சிந்தனையை’என்பதை களைய தொடர்ந்து போராடியே வெற்றி பெறமுடியும். அது தனிமனிதன் ஆனாலும் சரி, சமூகம் ஆனாலும் சரி!!
April 26th, 2008 at 3:31 am
இன்னும் எத்தனை காலம் தான் பாரதிதாசனின் கிளி கவிதையை பாடிக்கொண்டிருப்பீர்கள்? இந்திராவையும், ஜெவையும் வைத்துத்தானே ஆருடம் சொல்லமுடியும். பெண்கள் ஆட்சி செய்தால் பெண்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பிக்கை வைக்கலாம். ஆனால் வரலாறு அதை ஆதரிக்கவில்லையே. ஏன் அவ்வளவு பெரிய அளவுக்கு போகவேண்டும். நம் வீதிகளில் ஆட்சி செய்யும் பெண் கவுன்சிலர்களை வைத்தே அவர்களது பெண்ணிய வளர்ப்பு சிந்தனை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். மேலும் பாரதிதாசனின் காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்றே நினைக்கிறேன். அரசியல் தலைவர்களை விட்டுவிடுங்கள். பெண் கவிதாயினிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் சிந்தனை பெண்களின் கட்டுகளை கலைத்தெறிந்திருக்கிறதா?
யெஸ்.பாலபாரதி:
ஏன்டா பொண்ணு மாதிரி அழற என்பது யார் கட்டிவிட்ட மரபும் இல்லை. அது அறிவியல். பெண்கள் ஆண்களை விட எளிதாக அழுதுவிடுவார்கள் என்பது தான் உண்மை. அதைத்தான் சொல்கிறார்கள். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பெண்களை போல உறுதியானவர்கள் இல்லை என்பதும் அனைவரும் அறிந்தது. அதையும் இதே உங்கள் மொழியில் ஆணாதிக்க வர்க்கம் சொல்லியிருக்கிறது: பெண் மனசு ஆழம் என்று. பெண்ணிய சிந்தனை என்பதே ஒரு மாயை. பெண்கள் தங்களது கட்டுகளை அவர்களே உதறித்தள்ள வேண்டும். இங்கே பெண்ணிய சுதந்திரம் என்பது ஆடை அலங்கார கேளிக்கை சுதந்திரமாகத்தான் பார்க்கபடுகிறது. இதையும் சேர்த்து மற்ற சுதந்திரம் எல்லாம் என்றோ வழங்கப்பட்டுவிட்டது.
உண்மையில் சற்று உற்றுப்பார்த்தால், ஆணாதிக்கம் என்பதே சுத்த பொய். கற்பிதம் என்று விளங்கும். ஆண் உண்மையில் யாருக்காவது அடிமையாகத்தான் இருக்கிறான். வீட்ல எலி வெளில புலி என்பது நிதர்சன உண்மை. அம்மாவுக்கோ, மனைவிக்கோ, கேர்ள் ஃப்ரண்டுக்கோ, சகோதிரிக்கோ அடிமையாகத்தான் இருக்கிறான். பெண்கள் இல்லை என்றால் ஆணுக்கு இங்கே வேலையே இருக்காது. ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள் என்பது உக்காந்து யோசிச்சா புரியும். மற்றபடி பெண்ணியம் என்பது கவிதைகளை விற்பதற்கான உத்தி. அவ்வளவே. பெண்கள் எல்லா விசயங்களிலும் இன்று தேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
April 26th, 2008 at 5:08 am
//பெண்கள் தங்களது கட்டுகளை அவர்களே உதறித்தள்ள வேண்டும்.//
அதுக்கு தான் வுட மாட்டீங்கிறீங்களே தலைவா… குபீர்ன்னு கிளம்பி, வந்து கும்முகும்முனு கும்முறீங்களே! :(
//இதையும் சேர்த்து மற்ற சுதந்திரம் எல்லாம் என்றோ வழங்கப்பட்டுவிட்டது.//
யார் வழங்கினார்கள், பாருக்கு வழங்கினார்கள், அப்படி எனில் வழங்கியவரின் உரிமை என்ன? வாங்கிக்கொண்டவரின் நிலை என்ன? இதை அவர்களுக்கு வழங்க, வழங்கியவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
//இதே உங்கள் மொழியில் ஆணாதிக்க வர்க்கம் சொல்லியிருக்கிறது: பெண் மனசு ஆழம் என்று.//
இது மட்டுமா சொல்லி இருக்கிறது, ஆடியை நம்பு ஆவணியை நம்பு தாவணியை நம்பாதே! சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே, புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு.. என்று இன்னும் எத்தனையோ சொல்லி இருக்கிறது. நீங்கள் சொல்லும் ஆழம் குறித்த விசயம் பெண்களுக்கு மட்டுமல்ல.. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதியாகவே பார்க்கப்படவேண்டிய விசயம். அவன் சரியான அமுக்கன், வெளியில மூச் விட மாட்டான் என்பது போன்ற சொல்லாடல்களை கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லா பெண்களுமே பெண்ணியம் குறித்த அறிவுடன் செயல்படுகிறார்கள் என்ற போலியான மாயைக்குள் வந்து தாங்கள் பேசுவதாகவே படுகிறது. அதனால் தான் கவுன்சிலர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். கம்யூனிஸ்ட்கட்சி என்பது சமூகவிஞ்ஞானத்தை போதிப்பது… என்றார் லெனின். ஆனால்..அக்கட்சிகளுக்குள் இருக்கும் பலர் தாலுகா,வட்டம், மற்றும் கவுன்சிலர்கள் என்பவர்கள் கோவிலுக்கு தீச்சட்டி தூக்குவதையும், வேல் குத்தி தீயில் இறங்குவதையும் பார்த்தவன் நான். அதற்காக.. அவர்களின் சமூக,விஞ்ஞானத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. அந்த மனிதர்களுக்கு அதனை சரியாக சொல்லிக்கொடுக்காமல் விட்ட அக்கட்சிகளை குறை சொல்லுவது தான் சரியானதாக இருக்க முடியும்.
நீங்கள் குதிரைக்கு இரண்டு கண்களின் பக்கமும் கட்டிவிடப்பட்டிருக்கும்(அது பெயர் என்னங்க!)போல.. ஒரே பாதையில் தான் பார்ப்பேன் என்கிறீர்கள். அது தான் கோளாறு. கொஞ்சம் அந்த பட்டிகளை கழற்றி வைத்து அக்கம் பக்கம் பாருங்க தலைவா!
//உண்மையில் சற்று உற்றுப்பார்த்தால், ஆணாதிக்கம் என்பதே சுத்த பொய். கற்பிதம் என்று விளங்கும். ஆண் உண்மையில் யாருக்காவது அடிமையாகத்தான் இருக்கிறான். வீட்ல எலி வெளில புலி என்பது நிதர்சன உண்மை. அம்மாவுக்கோ, மனைவிக்கோ, கேர்ள் ஃப்ரண்டுக்கோ, சகோதிரிக்கோ அடிமையாகத்தான் இருக்கிறான். பெண்கள் இல்லை என்றால் ஆணுக்கு இங்கே வேலையே இருக்காது. ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள் என்பது உக்காந்து யோசிச்சா புரியும்.//
உள்ளதுலயே இது தான் தலைவா செம காமடி! இப்படியான எண்ணத்துடனும், அடிமையாகவும் இருக்கும் உங்களிடம் இனி இது போன்ற வாதங்கள் செய்ய நான் வரவில்லை.
அடிமை தனம் ஒழிய வேண்டும்.. அது எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும்.
அதனால்.. தொடர்ந்து அடிமையாக, அடுப்பாங்கரைக்குள் இருக்கும்.. ஆண்களைத் தேடி பயணம் போகிறேனாக்கும்! ஏதாவது ஒரு இடத்தில் உங்களையும் சந்திக்க நேரும் போது இக்கொடுமைகள் குறித்தும் நேரில் பேசுவோம்.
யாரங்கே… தோழர்களே… புறப்படுங்கள்…
April 26th, 2008 at 10:38 am
//யார் வழங்கினார்கள், பாருக்கு வழங்கினார்கள், அப்படி எனில் வழங்கியவரின் உரிமை என்ன? !@#$@#@$#$
அடடடடா..மொதல்ல சார் நீங்க என்ன பேசினீங்கன்னு பாருங்க சார். “ஆணாதிக்கம்” அப்படீன்னு நீங்க தான சார் சொல்றீங்க? ஆதிக்கம் செய்பவன் தான சார் விடுதலை வழங்கனும்?! அப்புறம் நீங்களே யார் வழங்குனாங்க? எப்படி வழங்குனாங்க? டாக்குமன்ட் இருக்கா? சைன் ஆப் பேப்பர் இருக்கான்னு கன்னாபின்னான்னு கேள்வி கேட்டா என்னா சார் அர்த்தம்?
//அதனால் தான் கவுன்சிலர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்
மதி சொன்னது: பெண்களுக்கான கட்சி ஆரம்பிப்பது பற்றி.
கட்சி ஆரம்பித்து என்ன பண்ணுவாங்க? புரோட்டா சால்னா வாங்கியா சாப்ட போறாங்க?
அதிகாரம் கையில் வைத்திருக்கும் பெண்களை பற்றித்தானே சார் பேச்சு இங்கே?! அதுக்கு அதிகாரத்தில் இருக்கும் பெண்களுடன் (கவுன்சிலர்கள்)தானே சார் ஒப்பிட வேண்டும்?! மேலும் கவுன்சிலர்களோடு ஒப்பிடுவதற்கு முன்னர், நான் பிரதமருடனும் முதலமைச்சருடனும் ஒப்பிட்டுவிட்டேன் சார்.. “இந்திராவையும், ஜெவையும் வைத்துத்தானே ஆருடம் சொல்லமுடியும். ”
//கம்யூனிஸ்ட்கட்சி என்பது சமூகவிஞ்ஞானத்தை போதிப்பது… என்றார் லெனின். ஆனால்..அக்கட்சிகளுக்குள் இருக்கும் பலர் தாலுகா,வட்டம், மற்றும் கவுன்சிலர்கள் என்பவர்கள் கோவிலுக்கு தீச்சட்டி தூக்குவதையும், வேல் குத்தி தீயில் இறங்குவதையும் பார்த்தவன் நான். அதற்காக.. அவர்களின் சமூக,விஞ்ஞானத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. அந்த மனிதர்களுக்கு அதனை சரியாக சொல்லிக்கொடுக்காமல் விட்ட அக்கட்சிகளை குறை சொல்லுவது தான் சரியானதாக இருக்க முடியும்.
//
கம்யூனிசம் எல்லா இடத்திலையும் நுழையுதுப்பா.. ஜோடி நம்பர் ஒன்ல கூட வந்திரும் போலருக்கு..ம்ம்….
கட்சிக்கு கொள்கைகள் இருக்கு தொண்டர்களுக்குதான் இல்லைன்னு நீங்களும் புறப்படப்போகும் உங்கள் படையும் சொல்றீங்க. கட்சி வேறு தொண்டர்கள் வேறா?! நல்லா அழகா ப்ரிண்ட் போட்டு கட்சியோட கொள்கைகளை பெண்களின் கட்சி (நீங்கள் மற்றும் புறப்படப்போகும் உங்கள் படை ஆரம்பிக்கப்போகும் கட்சி) எழுதி தொண்டர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனா தொண்டர்கள் வழக்கம்போல தீமிதிக்கத்தான் செய்வார்கள். கட்சி மேலிடம் சரியா சொல்லிக்கொடுக்கலப்பு என்று நீங்களும் புறப்படப்போகும் உங்கள் படையும் அலுத்துக்கொண்டு சொல்வீர்கள்!!.
//கொஞ்சம் அந்த பட்டிகளை கழற்றி வைத்து அக்கம் பக்கம் பாருங்க தலைவா
டான்ஸ் எல்லாம் வேற ஆடச்சொல்லுவாங்க போலிருக்குப்பா! (மன்னன் படத்தில் கவுண்டர் சொல்றமாதிரி சொல்லவேண்டும்)
//அடிமை தனம் ஒழிய வேண்டும்.. அது எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும்.
(எக்கோ)அடிமை தனம் ஒழிய வேண்டும்.. அது எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும்.
(எக்கோ)அடிமை தனம் ஒழிய வேண்டும்.. அது எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும்.
(எக்கோ)ஒழிக்கப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் (எக்கோ) வேண்டும் ..டும் ..ம்
ஆகா..ஆகா..ஆகககககா..கககபோ! ஆயிரத்தில் ஒருவன்ல எம்ஜிஆர் பேசின டயலாக் மாதிரியே இருக்கே! ம்ம் அவரு இந்த டயலாக் பேசி சுமார் எத்தனை காலம் இருக்கும்?!
//தொடர்ந்து அடிமையாக, அடுப்பாங்கரைக்குள் இருக்கும்..
அடிமைகள் அடுப்பாங்கரைக்குள் தான் இருப்பார்களா? புதுசா இருக்கே!
ம்ம்..சரி எதுவானால் என்ன..புறப்படுங்கள் பாலபாரதி சார்…உங்க படையையும் கூப்பிட்டுக்கோங்க.. என்னை சந்திக்கிற அன்னைக்கு தனியா வாங்க சார்..படையோடு வந்திராதீங்க..:)
April 26th, 2008 at 12:50 pm
முத்து சார்… நிச்சயம் பெண்களால் அடிமை படுத்தப்படிருக்கும் உங்களை காக்க படையோடு தான் வர வேண்டும்…
//ஆணாதிக்கம் என்பதே சுத்த பொய். கற்பிதம் என்று விளங்கும். ஆண் உண்மையில் யாருக்காவது அடிமையாகத்தான் இருக்கிறான். வீட்ல எலி வெளில புலி என்பது நிதர்சன உண்மை. அம்மாவுக்கோ, மனைவிக்கோ, கேர்ள் ஃப்ரண்டுக்கோ, சகோதிரிக்கோ அடிமையாகத்தான் இருக்கிறான். பெண்கள் இல்லை என்றால் ஆணுக்கு இங்கே வேலையே இருக்காது. ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள் என்பது உக்காந்து யோசிச்சா புரியும்//
இதை படித்த பின்னும் தனியாக வரமாட்டோம். :)
April 26th, 2008 at 1:46 pm
முத்து,
// ஏன்டா பொண்ணு மாதிரி அழற என்பது யார் கட்டிவிட்ட மரபும் இல்லை. அது அறிவியல். பெண்கள் ஆண்களை விட எளிதாக அழுதுவிடுவார்கள் என்பது தான் உண்மை. அதைத்தான் சொல்கிறார்கள். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பெண்களை போல உறுதியானவர்கள் இல்லை என்பதும் அனைவரும் அறிந்தது. //
நீங்கள் சொல்வதில் சற்றும் உண்மை இல்லை என்றுதான் தோன்றுகிறது. வளர்ப்பு விதமே அவர்களை அந்த மாதிரி மாற்றுகிறது.
இயற்கையில் எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் சரி ,அந்த இனத்தில் தனது குட்டிகளைப் பேனிப் பாதுக்கின்ற பாலினம் மிக உறுதியானதாக இருக்கும் ( உடளவிலும் மனதளவிலும்).அப்படிப் பார்க்கையில் பெண் இனமே எல்லா விதத்திலும் உறுதியானதாக இருக்க முடியும் இயற்கையில்.
April 28th, 2008 at 6:37 am
#4, #5லும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டும் இருக்கிறது, இதைப் பற்றி(இந்த மாதிரி ஐடெண்டிகள் பின்னூட்டங்களைப் பதிவிடுவதைப்) நிறைய என்னையறிந்த நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். சரி ஏதோ திரட்டியில் இருக்கீங்க, பின்னூட்டத்தாலையும் நாலு குத்து உரலுக்கு விழும்னாலும் சரின்னு சொல்லலாம். இங்க அதுவும் கிடையாது :)
எனக்கு உண்மையிலேயே புரியலை இந்த ஐடெண்டிகள் பின்னூட்டங்களை வெளிவிடும் ரகசியம். :)))
April 28th, 2008 at 9:02 am
மோகன்தாஸ்,
பெரும்பாலான பின்னூட்டங்களை நான் பார்த்து வெளியிடுவதில்லை. முதன்முறையாக பின்னூட்டமிடுபவர்கள் மட்டுமே மட்டுறுத்தப்படுகிறார்கள். மற்றவர்களின் பின்னூட்டங்கள் உடனுக்குடனே வெளியாகின்றன.
சிலர், வெவ்வேறு கணினிகளில் இருந்து பின்னூட்டமிடும்போது, அவையும் மட்டுறுத்தப்படுகின்றன. ஆனால், அந்தப் பின்னூட்டங்களை வெளியிட்டதும், அவையும் தானியங்கிபின்னூட்டப் பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.
குறைந்த அளவு மட்டுறுத்தல் இரண்டு மூன்று வருடங்களாகவே இந்தப்பதிவில் செயற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
ஆனால், சிற்சில சொற்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. :)
-மதி