உலகிற்குத் தமிழகம் தந்த கொடையாம் திருவாளர் வெங்கட் சாமிநாதன் திருவாய் மலர்ந்தருளியது

Posted in Uncategorized on Apr 21, 2008

சுட்டி

//உலகிற்கு தமிழ் நாடு தந்தது என்ன? தனது என்று கர்வம் கொள்வது என்ன? தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தம் இருப்பை ஸ்தாபித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல டாக்டர்கள் உண்டு. மற்ற பல்வேறு துறையினரும் உண்டு. அவர்கள் வேலை தேடிச்சென்றவர்கள். அல்லது வேலை தேடிப் பிழைக்க விரட்டப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் அவ்வத் துறை வல்லுனர்களாக தமக்குப் பெருமை தேடிக்கொண்டவர்கள். நிறையப் படித்தவர்கள். அவர்களுக்குக் கிடைப்பது சன் டிவி. சன் டிவி தான் கிடைக்கிறது என்பதனால் அதைச் சொன்னேன் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே பாமர ரகம் தான். அதை சகித்துக்கொள்ள ஒரு உணர்வு மரத்த நிலை இருந்தால் தான் சாத்தியம். அதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும் மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம், டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.//

என்ன சொல்றது. ஏது செய்யறது. வாயடைச்சுப்போயிருக்கேனாக்கும்!

இதெல்லாம் அப்படியே வர்ரதுதான்ல!

Jokes apart. இந்தப் பந்தியில் மட்டுமல்ல, இந்தக் கட்டுரை முழுவதுமே கொப்பளிக்கும் வன்மம் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இந்தளவு தொட்டாஞ்சிணுங்கியாகவா இருப்பார்கள்? இணையம் சுதந்திரமானதுதானென்றாலும், வலைப்பதிவுகள் வரமுதல் தமிழில் எந்தளவு சுதந்திரம் இருந்ததென்பதைப் பலர் அறிவார்கள். வலைப்பதிவுகள் என்ற சுதந்திர ஊடகத்தில் பல கருத்துகள் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் அவனது அனுபவங்களினூடாக வெளிப்படுத்தப்படுகிறது. அப்படிப் பேசப்படும் விதயங்கள் பெரும்பாலான வாசகர்களிடம் நல்லதொரு அதிர்வை உருவாக்குகிறது. அதையெல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதோடு மட்டுமில்லாமல், இந்த நல்ல விதயங்களையும் ஒதுக்கி விட்டு, மூர்க்க மனங்கள், பாமரர்கள என்றெல்லாம் சொல்லும் இவரையும் இவரைப்போன்றவர்களையும் உலகிற்குத் தமிழகம், தமிழ்த்தாய் அளித்த கொடையென்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெம்மாங்கு பாடுவோம் மக்களே.

Trackback URI | Comments RSS

13 Responses to “ உலகிற்குத் தமிழகம் தந்த கொடையாம் திருவாளர் வெங்கட் சாமிநாதன் திருவாய் மலர்ந்தருளியது ”

  1. # 1 kathir Says:

    அந்த சுட்டி வேலை செய்யலியே…

  2. # 2 மதி கந்தசாமி Says:

    சரி செஞ்சிட்டேன் கதிர்.

    -மதி

  3. # 3 kathir Says:

    இரண்டொரு விஷயத்தை தவிர அவர் சொல்றது எல்லாம் சரிதாங்க.இன்னமும் முகம் காட்டாம ஒருத்தரை ஒருத்தர் திட்டிகிட்டுதான் இருக்கோம், போலி வலைத்தளம், ஆபாச வசைகள், கருத்து வன்முறைகள் இதேல்லாம் தினம் தினம் நடந்துகிட்டுதான் இருக்கு. இதை எல்லாம் செய்பவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்கள்தான். இதுபோன்ற தவறுகள் எல்லாமட்டத்துலயும் நடந்துகிட்டுதான் இருக்கு. சாருவின் முகவரி, செந்தழல் ரவி போலீஸ் புகார் எல்லாம் கடந்த ஒருமாதத்தில் நிகழ்வுகள்.

    ஆனா குறிப்பிட்டு தமிழ்மணத்தையும் மேலும் வெளிநாட்டில் வாழும் / வாழ்கின்றவர்கள் பலரும் பாசிச/பாமரர்கள்/ நுண்ணிய அறிவு இல்ல(எதைக்குறித்து!!) என்ற முன் அணுமுறைகள் தவறு. சிலர் என்று சொல்லலாம்.

    முக்கியமா வெ.சா ஒரு விஷயத்தை மறந்துட்டார். இங்க எழுதுபவர்கள் எல்லாரையும் எழுத்தாளர் அளவுக்கு எழுதணும்னு எதிர்பார்த்தா இப்படியான பிம்பம்தான் கிடைக்கும். கிடைக்கும் நேரத்தில் எழுதுபவர்களுக்கும், இதையே தொழிலாக கொண்டவர்ர்களுக்கும் வித்தியாசம் உண்டு.
    தூங்க போகும் முன்பு கிடைக்கும் சேனலைத்தான் பார்க்க முடியும். வேறு எதை பாக்க சொல்றார் இவர்?

    வெளிநாட்டுக்கு போனால்தான் அந்த நாட்டு சேனலை பார்க்கமுடியும் என்ற மனோபாவம் உள்ளவர் போல. உலகத்தின் எந்த சேனலும் எல்லா இடத்திலும்/ இணையத்திலும் கூட பார்க்க முடியும். தமிழ்நாட்டில் இவர் என்ன சேனல் பார்க்கிறார் என்று தெரிந்தால் அதே சேனலை நாமும் பார்க்கலாம்.

    பி.கு “சண்ட” போன்ற படத்துக்கெல்லாம் ஒருமுறை பார்க்கலாம் என்று விமர்சனம் எழுதும் ஆட்களும் தமிழ்மணத்தில் தினமும் பார்க்க வேண்டி உள்ளது. :(

    நம்மள சொல்லவில்லை, வேறு எவரையோ சொல்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம்.

  4. # 4 யெஸ்.பாலபாரதி Says:

    //எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் //

    வெ.சா சொன்னாரா… (அவர் இணையத்துப் பக்கம் எல்லாம் தினமும் வந்துட்டுப்போறார் என்பதே ஆச்சரியமான விசயம்) அல்லது சொல்ல வைக்கப்பட்டாரான்னு எனக்கு உண்மை தெரிஞ்சாகனும். மேற்கண்ட நிறுவனத்துக்காரர்களுக்கு வலை உலகில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அல்லது இன்றைய லைட்ரைட்டர்களுடன் போட்டி போடமுடியாமல் ஓடிப்போனவர்கள். அந்த காழ்ப்புணர்ச்சியை தொடர்ச்சியாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நுண்னறிவு/நுண்ணரசியல் தெரிந்தவர்கள்.

    அவர்கள் வெளியிட்ட மாத இதழின் முதல் இதழிலேயே.. வலைப்பதிவுகள் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்ததையும் இங்கு குறிப்பிட்டு செல்லவேண்டும்.

    போராடி… தனக்கான இடத்தை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியாதவர்கள் போலி பக்கங்களை உருவாக்குகிறார்கள். அதே போல.. இணையத்துக்கு வெளியே போய்.. ச்சீசீ.. அந்த பழம் புளிக்கும் என்று புலம்பி வருகிறார்கள்.

    கற்றற்ற இடத்தில் எல்லாமும் இருக்கும். உனக்கு எது தேவையே அதை எடுத்துக்கொள். அவ்வளவ்வுதான்!

  5. # 5 யெஸ்.பாலபாரதி Says:

    //ஆனா குறிப்பிட்டு தமிழ்மணத்தையும் மேலும் வெளிநாட்டில் வாழும் / வாழ்கின்றவர்கள் பலரும் பாசிச/பாமரர்கள்/ நுண்ணிய அறிவு இல்ல(எதைக்குறித்து!!) என்ற முன் அணுமுறைகள் தவறு.//

    கதிர்.. இதற்கு முன் போட்ட பின்னூட்டத்தைன் தொடர்ச்சியாக.. உங்களின் கேள்விக்கான பதில் கிடைக்கலாம்.

    தேன்கூடு போன்ற வலைப்பதிவு திரட்டிகள் என்று ஏன் சொல்லவில்லை? :)

  6. # 6 Raj Chandra Says:

    வலைப் பதிவுகளை மேலோட்டமாக மேய்ந்து (யாரும் கேட்காமல்!) கருத்துக் கொடுக்கும் இன்னும் ஒரு ‘சென்ற தலைமுறை’ எழுத்தாளர்…

    வேறு ஒன்றும் சொல்லும் அளவிற்க்கு அந்தக் கட்டுரையில் எதுவும் இல்லை.

  7. # 7 kathir Says:

    //கற்றற்ற//

    அவ்வ்வ்வ்வ்
    தல நீங்களே இப்படி விவகாரமாக பொருள் தரும்படி பிழையாக எழுதலாமா?

  8. # 8 நந்தா Says:

    மதி அந்த கட்டுரையை ஏற்கனவே படித்திருந்தேன்.. சொல்லப்போனால் கலையைப் பற்றி பேசுவதால் அப்புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    சொல்லப் போனால் அந்தக் கட்டுரையில் இது போன்ற ஒரு சில இடங்களைத் தவிர பல முக்கிய விசயங்களை ஓரளவு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

    என்ன கண்ணன், வெ.சா பிரச்சினைக்க்கப்புறம் அவரது விமர்சனங்களின் மீதிருந்த தீவிரத்தன்மை ரொம்பவே குறைந்து விட்டது.

    என்னக்கென்னமோ கலைகளைப் பற்றி பேச ஆரம்பித்த இடத்தில் வலையுலகைப் பற்றி பேசியது வலிந்து செய்த செயலாகத்தான் தோன்றுகிறது. அதே சமயம் ஒட்டு மொத்த கட்டுரையையும்,புத்தகத்தையும் இது போன்ற கருத்துக்களை வைத்து புறம் தள்ளி விட வேண்டாம் என்றும் தோன்றுகிறது.

  9. # 9 யெஸ்.பாலபாரதி Says:

    // அவர்கள் வெளியிட்ட மாத இதழின் முதல் இதழிலேயே.. வலைப்பதிவுகள் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்ததையும் இங்கு குறிப்பிட்டு செல்லவேண்டும் //

    தமிழினி பதிப்பகம் வெளியிட்ட மாத இதழின் முதல் இதழிலேயே.. ஹரன் பிரசன்னா வலைப்பதிவுகள் தன் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்ததையும் இங்கு குறிப்பிட்டு செல்லவேண்டும்… - என்று மாற்றி இருக்கவேண்டும்.

  10. # 10 மூக்கு சுந்தர் Says:

    //செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது//

    நாயைக் குளிப்பாட்டி என்ற பழமொழியை நாசுக்காக சொல்லி இருக்கிறார்

    அவர் பார்வையில் நாய் என்பது எது என்பதும், யாருக்கு செல்வமும் கல்வியும் சிந்தனை வளத்தை தந்து விடவில்லை என்பதையும் நான் விவரித்து பொருள் கொண்டு சரியாக விளங்கிக் கொண்டோம் என்று நினைத்து சந்தோபபடுக்கொள்வார்.

    வெசா வெசா கண்டுக்காதீங்க. அவருக்குத் தேவை ஜெலூசில். இத்தனை கவனம் அல்ல.:-)

  11. # 11 மதி கந்தசாமி Says:

    கதிர், பாலா, ராஜ்சந்திரா & நந்தா: உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

    கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மன்னியுங்கள்.

    வலைப்பதிவுகள் பற்றிய வெ.சா.வின் கருத்துகளை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு ஏனையவற்றைப் பேசலாம். அவர் சொல்லியிருப்பதில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைப்பற்றியும் படித்த தமிழர்கள் தமிழிலே பேசாமல் இருப்பதைப்பற்றியும் சினிமாவிற்கு இங்கே (தமிழகம் மற்றும் இந்தியா) கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் தமிழ்த்தொலைக்காட்சிகள் பற்றியும் சொல்வதையெல்லாம் நானும் ஒத்துக்கொள்கிறேன். அதுவும், 1960இலே அவர் எழுதிய+ அவர் மேற்கோள் காட்டியிருக்கும் பத்தியில் ஒரு விஷயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசவேண்டும்.

    “ஒரு கால் மற்றவர்களுடனும், அவர்கள் காலத்தில் தான் வாழ்கிறோம் என்ற நினைப்பை ஊட்ட அவர்களைப் போன்ற வேஷத்தை நாமும் தரிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அளிக்க நம்மிடம் ஏதும் இல்லை. உலகத்திற்கு நமது என்று அளிக்க நாம் ஏதாவது படைக்கப் போகிறோமா? நமது பொருளாதார நிலையை நாம் உயர்த்திக்கொள்ளலாம். ஒரு பலம் வாய்ந்த சமுதாயமாக நாம் ஆகலாம். ஆனால், கலை உணர்வு கொண்ட சமுதாயமாக, புதிய சிந்தனைப் பாதைகளைத் தோற்றுவிக்கும் சமுதாயமாக நாம் என்றுமே வாழப்போகிறோமா? இக்குணங்கள் நம்மிடம் என்றோ அழிந்து விட்டன.”

    (எழுத்து: ஜூலை- ஆகஸ்ட், 1960) பாலையும் வாழையும்: பக்கம் 38-39)

    என்று சொல்லியிருக்கிறார். கலை உணர்வு கொண்ட சமுதாயமாக ஒரு சமுதாயம் இருக்க வேண்டும்தான். அதிலே எந்தவிதமான மறுப்பும் கிடையாது எனக்கு. இராம.கி. ஐயா ஒரு விதயத்தைத் அலுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருவார். தமிழிலே கலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற அறிவுபூர்வமான விதயங்களுக்குக் கொடுக்கப்படுவட்ர்ஹில்லையென்று. 64 கலைகள் என்று நாம் சொன்னவற்றில் ஒன்றிரண்டைப்பற்றித்தானே பலரும் எழுதி வருகிறார்கள். (அச்சூடகத்திலும் சரி இணையத்திலும் சரி). விஞ்ஞானம், கணிதம், சுற்றுப்புறவியல் என்று பலவிதமான விதயங்களில் அதிகம் பேர் எழுதுவதில்லை.

    அதேபோல, தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று சொன்னாலும், இங்கேயிருந்து புதிதாக எதுவும் பெரிதாக வரவில்லை. தகவற்தொழில்நுட்பத்திலுங்கூட. வேறு யாரோ செய்திருப்பதற்கு தமிழ்முலாம் போடுகிறோம். அதற்கே பெரும்பாடு. “”இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு என்று மா.சிவக்குமார் அவருடைய வலைப்பதிவில் எழுதியிருப்பார்.

    **சில விதயங்களைப்பற்றிப் பொதுவிலோ தனிப்படவோ பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். அதில் மரத்தடி குழுமத்திலிருந்து நான் விலகுவதற்கு முன்பு அறிமுகமாகி நண்பர்களாகவிருந்த சிலர் ஒன்றிணைந்து தொடங்கிய எனி இந்தியன் ஒன்று. இன்னொன்று, சிலபல காரணங்களினால் டி.எம்.ஐ நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் தமிழ்மணம் திரட்டி.**

    என்னுடைய முடிவைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு ஒன்றிரண்டு வார்த்தைகள்.

    மேலே சொல்லியிருப்பதெல்லாம், ////தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் //// என்ற புத்தகத்தின் முன்னுரைக்கு சரி.

    தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் என்ற தலைப்புக்கேற்றபடி பல விதயங்களையும் பேசியிருக்கிறார். புத்தகத்தைப் பார்த்தால்தான் தெரியும், உள்ளே என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று. [வாங்கியிருக்கும் புத்தகங்களையே படிக்காத நிலையில் புதிதாக வேறு புத்தகம் வாங்கும் எண்ணமில்லை. எனவே, முன்னுரையை மட்டும் வைத்துக்கொண்டு என்னுடைய கேள்விகள். யாராவது புத்தகத்தைப் படித்தால் உங்களுடைய கருத்தை எழுதுங்கள்.] தமிழகக் கலைகளின் இன்றைய முகங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம். சரி, அப்படி சம்பந்தம் இருக்கிறது. பல விதயங்களைப்பற்றி எழுதும் வலைப்பதிவர்கள், 64 கலைகளிலே சிலதைப்பற்றியும் எழுதுகிறார்கள். புத்தகங்கள், இசை, நடனம், நாடகம், நாடகத்தின் நீட்சியோ இன்னொரு வடிவமோ ஏதோவொன்றாகத் திரைப்படம், கூத்து, நாட்டுப்பாடல்கள் என்று பலதைப்பற்றியும் எழுதுகிறார்கள். எனவே தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் வலைப்பதிவிலே தென்படுகிறது என்று வெ.சா. சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

    அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும் மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம், டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.

    இங்கே என்ன சொல்ல வருகிறார்?

    தமிழிலே திரட்டிகள் பல இருக்கின்றன. அப்படியிருக்கும்போது ஒரேயொரு திரட்டியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும் அரசியல் என்ன? பாலபாரதி கேட்டதுபோல தமிழ்மணம் தொடங்கி ஒரு வருடத்துச்சொச்சத்துக்குள் உருவான இன்னொரு திரட்டியைப்பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே. முன்பு, வலைப்பதிவுகளைப்பற்றி ஊடகங்களில் செய்தி வரும்போதெல்லாம் ஏனோ தெரியாது தமிழ்மணம் திரட்டியைப்பற்றி ஒரு வார்த்தைதன்னும் வந்துவிடாது. இப்போது வருகிறதா, இல்லையா என்பதைப்பற்றி எனக்குத் தெரியாது. அக்கறையுமில்லை. ஆனால், முன்பு காசியிடமிருந்தபோது தமிழ்மணம் திரட்டியில், தமிழ் இணையத்தில் முன்னெப்போதும் இல்லாத சுதந்திரம் இருந்தது. ‘ம்ரத்தடி’ என்ற இணையக்குழுமத்தை நிர்வகித்த அனுபவத்திலும் வேறு சில குழுமங்களில் உறுப்பினராக இருந்த அனுபவத்திலும் சொல்கிறேன். குழுமங்க‎ளில், அதனை நிர்வகிப்பவர்களின் கருத்துக்கு எதிராக மிக மிக அரிதாகவே கருத்து சொல்லமுடிந்திருந்தது. ஓரிரு தருணங்களில் அக்குரல்கள் நெரிக்கப்பட்டுமிருக்கின்றன. ஆனால், வலைப்பதிவுகளில் சுதந்திரமாக இயங்க முடிந்தது.

    அச்சூடகங்களும் இன்னபிற ஆதிக்க சக்தியாளர்களும் உருவாக்கிய சிந்தனைகளைக் கேள்விகேட்டுப் பலரும் வெவ்வேறு வழிகளில் சிந்திக்க முடிந்தது. இலக்கியத்தில், தலித் இலக்கியம் என்பது எப்படி ஒரு புதிய வெள்ளத்தைக் கொண்டுவந்ததோ, அதேமாதிரி தமிழ் இணையத்தில் இளைய தலைமுறை அரசியல், சமூக விதயங்களைப்பற்றி சிந்திக்க முடிந்தது. குழுமங்களில் பேச அனுமதி மறுக்கப்பட்ட பல விதயங்கள் சுதந்திரமாக அலசப்பட்டன.

    அதனால்தான், இன்றுவரை தமிழ்வலைப்பதிவுகளை ஒதுக்கிவைக்கும் போக்கு இருக்கிறது.

    60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச்சமூகமானாலும் சரி இப்போதைய தமிழ்ச்சமூகமானாலும் சரி ஒரு சிறிய சதவிகிதம் நல்லன அல்லாதவை இருந்திருக்கின்றன/இருக்கின்றன. அதேபோல வலைப்பதிவுகளிலும் இருக்கின்றன. அச்சூடகம் இன்னபிற ஊடகங்களைப்போல அல்லாது சுதந்திரமாக இயங்கும் இந்த வெளியில் இவற்றைத் தவிர்க்க இயலாது.

    //அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும்// அப்டீன்னு எதைச் சொல்கிறார்?

    //மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள்.// எப்படி இப்படிச் சொல்ல முடிகிறது. எதை வைத்து சொல்கிறார்?

    //நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை// இதுக்குள்ள odd man out கே.வீரமணி சிந்தனைகள் எதுக்காக? கே.வீரமணியின் சிந்தனைகளைப்பற்றிப் பேசும், பகிர்ந்துகொள்ளும் வலைப்பதிவர்கள் மூர்க்கர்களா? பாமரர்களா? என்ன உளறல்?

    இதைத்தான் நுண்ணரசியல் என்கிறேன்!!!

    இதுக்குள்ள ஜெயமோகன் சொன்ன அதே நுண்ணிய உணர்வு பற்றிய கருத்து வெ.சா.விடமிருந்தும்.

    இன்னொரு விஷயம்…

    //செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.// எனக்குத் தெரிந்து கல்வி புதிய சிந்தனைகளை உருவாக்கும். சிந்திக்கும் போக்கை வளர்க்கும் அறிவை விசாலமாக்கும் என்றெல்லாந்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இங்கேதான் வெங்கட் சாமிநாதன் மூலமாக கல்வி கலை உணர்வையும் சிந்தனை வளத்தையும் தராது. மனித உன்னதத்தைக்கூடத் தராது என்று கேள்விப்படுகிறேன். பாரம்பரியமாக கல்வி கற்றவர்கள் மட்டுமே தொடர்ந்து கல்வி கற்றுவந்திருந்தால் இந்நேரம் தமிழகமே உலகமே திரும்பிப் பார்க்கக் கூடியவண்ணம் தெண்டனிட்டுக் கற்கும்வண்ணம் புதிய சிந்தனை மரபுகளை உருவாக்கி மனித உன்னதத்தைக் கொடுத்து வீறுநடை போட்டிருக்கும். ம்ம்ம்..

    -மதி

  12. # 12 மதி கந்தசாமி Says:

    சன்னாசியும் அருள்செல்வனும் சொல்லியிருப்பவை

    -மதி

  13. # 13 prabhu rajadurai Says:

    “முக்கியமா வெ.சா ஒரு விஷயத்தை மறந்துட்டார். இங்க எழுதுபவர்கள் எல்லாரையும் எழுத்தாளர் அளவுக்கு எழுதணும்னு எதிர்பார்த்தா இப்படியான பிம்பம்தான் கிடைக்கும்” kathir

    மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். இன்று தமிழ் அச்சு ஊடகங்களில் எழுதும் எந்த ஒரு எழுத்தாளரையும் விட சிறப்பாக மொழி வளத்திலோ, பொருள் வளத்திலோ சிறப்பாக எழுதக்கூடியவர்கள் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்.

    சரி, இந்த வெங்கட சாமிநாதன் என்பவர் யார்…தமில் இணையத்தில் உலாவுவதில் உள்ள ஒரே கஷ்டம் இதுதான். இவரைப் போலவே, தமிழில் நாலு பக்கம் எழுதியதாலேயே ராக்கெட் விஞ்ஞானத்திலிருந்து மனோதத்துவம் வரை அனைத்தும் தெரிந்த அதி மேதாவிகளாக தங்களை கற்பனை செய்து கொள்ளும் சிலரை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

Leave a Reply


  • You Avatar
    -


Creative Commons License