டித் பிரான் (செப்டம்பர் 27, 1942 – மார்ச் 30, 2008)

அதென்னமோ தெரியாது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். குறிப்பாக நாட்டின் போக்கையே மாற்றிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்றது இரண்டே இரண்டு படங்கள்தான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும்.
ஒன்று அல்ஜீரிய விடுதலைப்போரினைச் சித்தரிக்கும் ‘Battle of Algiers’. இரண்டாவது கம்போடிய நாட்டுப்பிரச்சினைகளைக் காட்டிய ‘Killing Fields’. இரண்டு படங்களுக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றனதான். முதலாவது, மேற்கத்தேய நாடு ஒன்றிலிருந்து அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து விடுதலை வாங்கிய வரலாற்றை, விடுதலை கிடைத்த சில வருடங்களில் சுடச்சுடச் சொல்லிச்சென்றது. இதைவிடச் சிறப்பாக ஒரு நாட்டின் விடுதலைக்கான போரினை, பிரச்சினைகளைச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. இன்றைக்கு இந்தப் படத்தினைப்பற்றிப் பேச வரவில்லையென்றபடியால் இன்னொரு நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு முக்கியமான ஒற்றுமையொன்றைப் பார்ப்போம். Battle of Algiers படத்தினை இயக்கியவர் ஜில்லோ பொன்டகொர்வோ என்ற இத்தாலிய இயக்குநர். இவர், இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் விடுதலைப்போராட்டங்களைச் சித்தரிக்கும் படங்களை எடுத்தார். எல்லாவற்றிலும் நேர்த்தியை மிகவும் விரும்பும் ஜில்லோ பொன்டகொர்வோ மிகக்குறைவான படங்களையே எடுத்திருக்கிறார்.
கில்லிங் ஃபீல்ட்ஸ் படத்தையும் ஜில்லோ பொன்டகொர்வோவையே எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டார்களாம். ஏதோவொரு காரணத்தினால் அவர் மறுத்துவிட ரோலண்ட் ஜோஃப் இயக்கியிருக்கிறார். கில்லிங் ஃபீல்ட்ஸ் படமும் கம்போடியாவில் பொல்பொட் கொடுமை விளைவிக்கத் தொடங்கிய சில காலத்தில் வெளியான படம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் வியட்நாம் போரின் தாக்கங்கள் அண்டைநாடான கம்போடியாவிலும் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. பல வெளிநாட்டுப்பத்திரிகையாளர்கள் கம்போடியாவின் தலைநகரத்திலும் தங்கியிருந்தார்கள். அவர்களில் நியூயார்க் பத்திரிகையின் நிருபரான சிட்னி ஷான்பேர்க்கும் ஒருவர். இந்த வெளிநாட்டுப்பத்திரிகையாளர்களுக்கு உள்ளூர்க்காரர்கள் உதவி மிகவும் அவசியமாகவிருந்தது. சிட்னிக்குப் பல விதங்களிலும் உதவியாக இருந்தவர் டித் பிரான் என்ற கம்போடிய பத்திரியாளர். இவர், பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்தார். 1973இல் அமெரிக்க விமானமொன்று தவறுதலாக கம்போடியாவில் குண்டு பொழிந்ததை இவர்கள் இருவரும் வெளியுலகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிறது. பலர் தங்களுடைய தொடர்புகளைப்பயன்படுத்தி நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். டித் பிரானும், சிட்னி ஷான்பேர்க்கின் தொடர்புகளைப்பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தை வெளியேற்றுகிறார். அவரும் வெளியேறக்கூடியதாகவிருந்தும் போகாமல் பிற வெளிநாட்டுப்பத்திரிகையாளர்களுடன் செய்திகளைச் சேகரிக்கிறார். ஒரு கட்டத்தில் கைமர் ரூஜ்ஜிடமிருந்து இந்தப் பத்திரிகையாளர்களைக் காப்பாற்றப் பெரும்பாடு படுகிறார். அவர்களாலேயே கைதும் செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டது, பிற கம்போடிய மக்களுடன் நாட்டுப்புறத்துக்கொண்டு செல்லப்பட்டு வயல்களில் வேலை செய்விக்கப்படுகிறார். பலவிதமான கொடுமைகளுக்கும் ஆளாகிறார்.

டித் பிரான் பலவித சித்திரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவில் சிட்னி ஷான்பேர்க், டித் பிரானின் விடுதலைக்கால பல்வேறு அமைப்புகளைத் தொடர்புகொண்டபடி இருக்கிறார்.
இங்கே நான் விரிவாகச் சொல்லப்போவதில்லை. விரும்பியவர்கள் விக்கிப்பீடியாவிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அல்லது கில்லிங் ஃபீட்ல்ஸ் படத்தைப் பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Killing_Fields_(film)

கில்லிங் ஃபீல்ட்ஸ் திரைப்படத்தில் சிட்னி ஷான்பேர்க்காக நடித்தவர் சாம் வாட்டர்சன். டித் பிரானாக நடித்தவர், அப்போது அமெரிக்காவில் கம்போடிய அகதிகளுக்காக வேலை செய்துகொண்டிருந்த டாக்டர் ஹெய்ங் எஸ். ங்கோர்(Haing S. Ngor). இவருடைய அனுபவங்களும் ஏறக்குறைய டித் பிரானின் அனுபவங்களைப்போலவே இருந்தன.
தொழில்முறை நடிகரல்லாத Haing S. Ngor மிகச்சிறப்பாக நடித்து/வாழ்ந்து 1985ம் வருடத்திற்கான சிறந்த துணைநடிகர் விருதினையும் பெற்றார். இவரையும் இவருடைய நடிப்பையும் கில்லிங் ஃபீல்ட் இயக்குநரும் பிற நடிகர்களும் சிலாகிப்பதை கில்லிங் ஃபீல்ட்ஸ் படத்துடன் வரும் இறுவட்டில் பார்க்கலாம்.
படத்தில் பலரது கவனத்தையும் அனுதாபத்தையும் ஈர்த்த Haing S. Ngor 1996ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ்ஸில் கொலை செய்யப்பட்டார். என்ன காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் இன்னமும் அவ்வளவு தெளிவாக இல்லை.
http://www.dithpran.org/reader.htm
http://www.haingngorfoundation.org
இரண்டு நாட்களுக்கு முன்னர், நியூஜேர்சி மாநிலத்தில் டித் பிரான் தம்முடைய அறுபத்தைந்தாவது வயதில் மரணமடைந்தார்.
அமெரிக்காவிற்கு வந்தபிறகு நியூயார்க் பத்திரிகையில் புகைப்படப்பிடிப்பாளராக வேலை செய்த டித் பிரானுக்கென்று அந்தப் பத்திரிகை உருவாக்கியிருக்கும் சிறப்புப்பக்கம்.
http://topics.nytimes.com/top/reference/timestopics/people/d/dith_pran/index.htm
டித் பிரான் தொடர்பான சில சுட்டிகள்:
http://www.guardian.co.uk/world/2008/apr/01/cambodia.pressandpublishing


April 6th, 2008 at 8:22 am
good effort.keep it up
April 14th, 2008 at 9:34 am
எங்க பதிவிறக்கினீங்க? torrent ஏதாவது இருக்கா?