Archive for May 3rd, 2007

சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன - நீங்க சொல்லுங்க!05.03.07

சில நண்பர்கள் சென்னைக்குப் போறோம்னு சொல்லி, சதா சென்னை புராணம் பாடிக்கிட்டிருக்கிற எங்கிட்ட சில கேள்விகள் கேட்டாங்க. சிலதுக்கு திக்குமுக்காடிப் பதில் சொல்லிட்டேன்னு வையுங்க. சிலதுக்குப் பதில் சொல்ல முடியல. அப்பதான், நாம இப்பயிருக்கிற சென்னை பற்றிய விபரங்களைச் சேகரிச்சு வைச்சா, சென்னைக்குப் போகும் சுற்றுலாப்பயணிகளுக்குப் பிரயோசனமாக இருக்கும்னு தோணிச்சு. சுற்றுலாப் பயணிகளென்ன சுற்றுலாப்பயணிகள்.. எனக்கே, நான் நாளைக்கே ஊருக்கு வர்ரேன்னு வையுங்க. பயனளிக்கும்.

சென்னைன்னா சென்னை + சுற்று வட்டாரம்னு எடுத்துக்குங்க.

அதனால, மஹாஜனங்களே.. உங்ககிட்ட கேட்டுக்கிறது என்னன்னா

சென்னை - சுற்றிப்பார்க்க (கோயில் குளம் தொடங்கி நேத்திக்குத் திறந்த புது பொழுதுபோக்கு அம்சம் வரைக்கும் திரையரங்குகள் உட்பட)

சென்னை - உணவகங்கள் (சைவம், அசைவம், நொறுக்குத்தீனி, கரும்பு ஜூஸ் இன்னபிற வரைக்க்கும்)

சென்னை - கடைகள் (புத்தகங்கள், திரைப்பட டிவிடிகள் - தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி - விருதுபெற்ற, அப்படியிப்படியென்று இந்திய மொழிகள் எல்லாமே.., சேலை செட்டு, காஸ்டூம் ஜுவெல்லரி எக்ஸ்ஸட்டரா, எக்ஸ்ஸட்டரா)..

மற்றும்படிக்கு, புதுசா வர்ரவங்களுக்கு ்ஷேர் ஆட்டோ தொடங்கி பலவகையான போக்குவரத்து வசதிகள் பற்றிய குறிப்புகள்.

நீங்கல்லாம் சொல்ற விசயங்கள, இங்க ஒரு பக்கத்தில தனியாசனம் கொடுத்து வைக்கிறதோட, நம்ம சென்னப்பட்டினத்து மக்கள்ஸ்கிட்டயும் சொல்லிப் போட்டு வைக்கலாம்னு இருக்கேன். உதவுங்க மக்களே!

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள்with 8 Comments →

கவனத்தை ஈர்த்த புதிய வலைப்பதிவுகள் மே 200705.03.07

hanging_chair_bibliotheque1.jpg

வலைப்பதிவுகளில் பிடித்த விதயமே எந்த வித எதிர்பார்ப்புகளுமில்லாமல் படிக்கத் தொடங்கும் வலைப்பதிவுகள், நமது கண்ணையும் கருத்தையும் ஈர்த்து, அடுத்து எப்போது இடுகை வரும் என்று காத்து நிற்க வைப்பதுதான். அவ்வகையில் என்னுடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில வலைப்பதிவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

அந்தாரா/Antara:
‘The Scent of a Green Papaya’ என்ற எனக்குப் பிடித்த படங்களின் விமர்சனமொன்றில் தொடங்கியது என்னுடைய பயணம். தொடர்ந்து, பாலியல் சொற்களும் குழந்தைகளும் என்ற இவரது இடுகை மனதை மிகவும் கவர்ந்து போனது. இடையில் இரண்டு மாதங்களாக இவரைக் காணக்கிடைக்கவில்லை. ஏப்ரலில் திரும்பவும் வந்த இவர், பெண்கள் பெரும்பாலும் பொதுவில் பேசாத ஒரு விதயத்தை அருமையாகக் கையாண்டிருந்தார். போர்னோகிராபி./Phornography குறித்த இடுகையில் காமம் பற்றியும் போனோகிராபியின் நுண்ணரசியலையும் கொஞ்சமாக எழுதியிருந்தாலும் சிந்திக்கும்படி எழுதியிருந்தார். அந்த இடுகை போதிய கவனம் பெறாதது என்னளவில் ஏமாற்றமாகவிருந்தது. மெனபோஸ் (Menopause) குறித்த இடுகையும் மிகவும் அவசியமானதொன்றாகும்.

நான் ஒரு தேவடியாள் மகள்
முண்டை சிறுக்கி
வேசை
புலால் உண்பவள்
கடவுளாலும் சட்டங்களாலும்
கைவிடப்பட்டவள்
மலட்டு விதவை
யாருக்கும் உகந்தவள்
சாம்பலிலிருந்து துளிர்க்கும்
ஏதோ ஒன்றைப் போல
தவிர்க்க முடியாதவள்

இந்தக் கவிதையில் இருக்கும் திமிர் மனதை மிகவும் கவர்ந்தது.

படித்துப்பாருங்களேன்.

hanging_chair_bibliotheque2.jpg
Taken at a Bibiliotheque in Montreal

சம்சாரி

Global Warming, சுற்றுச்சூழல் மாசுபடல் என்று பல விதயங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானதொரு விதயத்தைப் பற்றிப் பேசுகிறது சம்சாரியின் வலைப்பதிவு. இயற்கை விவசாயம். எனக்கு நினைவிருந்த பொழுதில், இயற்கை உரம் போடும் விவசாயிகள் பலர், பிறர் பட்டணத்திலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி வந்த உரங்களைக் கண்டு அவற்றிற்குத் தாங்களும் மாறியதைப் பார்த்திருக்கிறேன். இடைப்பட்ட இந்தச் சில வருடங்களிலேயே அம்மாதிரியான செயற்கை உரங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் அதிகம். இயற்கை உரம் போட்டு, சகல விதங்களிலும் இயற்கையை ஒத்து வளர்க்கப்பட்ட பயிர்கள், மேற்கத்தைய சந்தையில் Organic என்ற பெயரில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் காலமிது. நம்மூர் விவசாயிகள், தமது பாரம்பரிய முறைகளுடன் அவற்றை செம்மைப்படுத்திய வழிமுறைகளையும் பின்பற்றி விளைச்சலைப் பெருக்குவதைப் படிப்பது புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

தமிழகத்தின் நம்பர் 1 விவசாயி, தமிழ் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர், பஞ்சகவ்யம் என்று பல பயனுள்ள சுவாரசியமான இடுகைகளை சம்சாரி எழுதியிருக்கிறார்.

இதுபோன்ற இடுகைகளை, தமிழ் இணையத்தில் வலைப்பதிவர்கள் பலரும் வாசகர்கள் சிலரும் மட்டுமே படிக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு, சம்சாரி சொன்ன ஒரு விதயம் மிகவும் ஆச்சரியமாகவிருந்தது. வலைப்பதிவு என்பது ஒரு சாராரிடம் மட்டுமே தங்கிவிடக்கூடிய விதயமல்ல. சனநாயகமானதொரு ஊடகம் என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

சம்சாரி அவர்களின் மடலிலிருந்து ஒரு பகுதி இதோ:

தமிழகத்து விவசாயிகளுக்கும் கணினிக்கும் சம்பந்தமில்லை. நம் வலைப்பதிவை எந்த விவசாயி படிக்கப் போகிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அரக்கோணத்தில் உள்ள நீலசம்பத் பற்றி நான் எழுதிய இடுகையைப் படித்த ஒரு விவசாயி (பண்ருட்டியைச் சேர்ந்தவராம்) நேரில் வந்து தனக்கு 3 மூட்டை கடலை வேண்டும் என்று கேட்டாராம். இதுபோல மேலும் சில விசாரிப்புகள். இதனைக் கேட்டபோது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

அந்த இடுகை - காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?

துறைசார் பதிவுகள் வளரவேண்டிய கட்டாயம் சிலரால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், அவ்வாறான பதிவுகள் மிகவும் குறைவு. அம்மாதிரியான சூழ்நிலையில் சம்சாரியின் ‘இயற்கை விவசாயம்’ போன்ற பதிவுகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டியது மிக மிக அவசியம். செய்வோமா?

அய்யனார்

இலக்கியம், திரைப்படம் என்று பேசும் வலைப்பதிவுகளின் மீது எனக்கிருக்கும் ஆர்வம் பெரியது. அந்த ரீதியில் சமீபத்தில் என்னைக் கவர்ந்த பதிவு அய்யனாருடையது. கவிதைகள் சிலது இன்னும் கொஞ்சம் இறுக்கமாக இருக்கலாம் என்ற எண்ணம் வரும்வேளையில், திரைப்படங்கள் குறித்த இடுகைகள் விரிவாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். கடைசியாக எழுதியிருக்கும் ‘வனங்களில் அலையும் நீலி’ கவிதையைப் படியுங்கள். தலைப்பே ஜெயமோகனின் கதையை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல அய்யனார் எழுதிய ‘The Road Home’ இடுகையும் மிகவும் பிடித்துப்போனது.

பிறழ்வு

ஒரு நேர்கோட்டையே சரியாக கீறத்தெரியாமல் இருந்தாலும் ஓவியங்கள் என்னில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். ஓவியங்களைப்பற்றியும் ஓவியர்களைப்பற்றியும் ஓவியங்களின் வரலாறுகளைப்பற்றியும் தெரிந்துகொள்ள விருப்பமிருக்கும் எனக்கு சாத்தானின் பிறழ்வு வலைப்பதிவு மிகவும் பயனுள்ளது. மையநீரோட்டம் என்ற பெயரில் ஏறக்குறைய ஒரு வருடமாக எழுதிவரும் சாத்தான், இந்த வலைப்பதிவில் ஹொகுசாய், ்ஷகால், வான்கோ, மாக்ரித், பிகாசோ, எ்ஷர் என்று பல ஓவியர்களைப்பற்றியும், ஓவியக்கலையில் இன்னபிற அம்சங்களைப்பற்றியும் எழுதி வருகிறார். அவர் எடுத்து இடும் ஓவியங்களைப் பார்க்கவாவது இந்தப் பக்கம் போய் வரலாம்.

குறிப்பு: இந்தப் பதிவுகளைவிட இன்னும் பல சுவாரசியமான பதிவுகள் இருக்கலாம். இணையத்தில் புழங்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டதினால், அப்பதிவுகளைத் தவற விட்டிருக்கலாம். பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டினால், படித்துத் தெரிந்துகொள்கிறேன்.

Posted in அனைத்து இடுகைகள், தமிழ் இணையம்with 6 Comments →

சியாம் செல்வதுரையின் Cinnamon Gardens, Swimming in the Monsoon Sea, Funny Boy & Story-wallah!05.03.07

shyam_selvadurai.jpg

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சியாம் செல்வதுரையின் புத்தகங்கள்தான் வீட்டில் இறைந்து கிடந்தன. காரணம், முதலில் நூலகத்திலிருந்து எடுத்துவந்த Story-wallah!: A Celebration of South Asian Fiction’. சியாம் செல்வதுரை தொகுத்தளித்திருக்கும் புத்தகம். சில கதைகள் கவனத்தை ஈர்த்துத் தக்கவைத்துக்கொண்டன. சிலதை, அவசரவசரமாகத் தாண்டிக்கடக்க வேண்டியிருந்தது.

Story wallah-வில் தொடங்கிய பயணம் அடுத்தடுத்த நாட்களில் சியாம் செல்வதுரையின் மூன்று நாவல்களையும் கொண்டு வந்து நேரங்கிடைக்கும்போதெல்லாம் படித்து முடித்த பிறகுதான் ஓய்ந்தது. முந்தியெல்லாம் சோறு தண்ணியில்லாமல் கதைப்புத்தகம் படித்தமாதிரிப் படித்தேன். கதைப்புத்தகங்களின் மீதிருந்த மோகம் தீர்ந்துபோய்விட்டதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது இது நடந்தது.

ம்ம்.. அதுக்காகவாவது சியாம் செல்வதுரைக்கு நன்றி சொல்லவேண்டும். இந்தமாதிரி உட்கார்ந்து படிக்க வைத்தது சியாம் செல்வதுரையின் எழுத்தாற்றலா அல்லது அவரது கதை நடக்கும் களமான கொழும்பும் அந்தக் கதைகளில் உலா வரும் மனிதர்களுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முந்திப் படித்திருந்த சில இந்திய எழுத்தாளர்களின் சில கதைகளிலும் இப்படித்தான் கதைக்களம் இந்தியாவில் தொடங்கி அமெரிக்காவில் முடியும். அடுத்த பக்கத்தில் சுவாரசியமாக இருக்குமோ என்று எதிர்பார்த்தபடியே கதையைப்படித்து முடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. இதிலிருந்து லேசான விதிவிலக்கு ஜம்பா லஹரி. ஆனாலும் இவருடைய Interpreter of Maladiesஉம் அவ்வப்போது ஜவ்விழுத்தது.

சியாம் செல்வதுரையின் கதைகளைப்பற்றி ஓர் இடுகை எழுதினாலென்ன என்று போன கிழமை யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் முரண்வெளியினரின் கட்டுரையொன்றை வாசித்தேன். சியாம் செல்வதுரை தொடங்கி இன்னும் பல எழுத்தாளர்களையும் பின்னிப்பிணைத்து சமபாலுறவினர் குறித்த புனைவுகளை அலசி ஆராய்ந்த அற்புதமான கட்டுரை அது.

ஃபன்னி பாய், அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறுகதைகளாகவும் ஒன்று சேர்த்தால் சிலந்தியின் நூல் கொண்டு பிணைக்கப்பட்ட நாவல் போலத் தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமபாலுறவில் நாட்டமுடைய சிறுவனொருவனின் உணர்வுகளை மிகவும் நெருக்கமாக உணர்ந்துகொள்ளும்படி எழுதப்பட்டிருக்கும் அருமையான நாவல் Funny Boy. அந்தச் சிறுவனை, அவனது சுற்றமும் சமூகமும் எவ்வாறு நடாத்துகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. கூடவே, ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் இலங்கையின் இனப்பிரச்சினையும் தமிழ்-சிங்கள இனத்தவருக்கிடையே பிரச்சினைகளும் பிழவுகளும் வலுத்துக்கொண்டே போய், கடைசியில் 83 இனக்கலவரத்தோடு முடிவதையும் அருமையாக எழுதியிருக்கிறார் சியாம் செல்வதுரை.

முரண்வெளியின் கட்டுரை, என்னைவிட அருமையான Funny Boyஐ ஆராய்கிறது. சுட்டி: ‘வெளித்தோன்றும் மறுபாதியின் கதை’

-0-

Cinnamon Gardens. கொழும்பின் போயஸ் கார்டன். பெரும் பணக்காரர்களின் மாளிகைகளைக் கொண்ட பகுதியது. அந்த இடத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட நாவல்தான் சியாம் செல்வதுரையின் இரண்டாவது நாவல். 1920களில் கதை நடக்கிறது. கதையின் முக்கிய மாந்தர்கள் கறுவாத் தோட்டத்தில் வாழும் தமிழ்க்குடும்பத்தவர். இவர்களோடு, அந்நாளைய கொழும்பில் வாழும் சில வெள்ளையர்கள் + மற்றும் சிங்களவர்கள் வருகிறார்கள்.

இந்த நாவலுக்காக சியாம் செல்வதுரை நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் தேடித்தேடிச் சேர்த்திருக்கிறார். அவற்றையெல்லாம் பின்னிப்பிணைத்து சுவாரசியமாகக் கதை புனைந்திருக்கிறார் அவர். 1920களின் அரசியல் சூழல். இலங்கை மக்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து ஆராய வரும் பிரிட்டி்ஷார், படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுப்போடும் உரிமை அதாவது partial franchise கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பிரிவினர் ஒரு பக்கம். காலங்காலமாக இருந்து வந்த வழக்கங்கள் (அதாவது கிராமப் பஞ்சாயத்துகள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலே கட்டமைக்கப்பட்ட ஆட்சியமைப்பு) தொடரப்பட வேண்டும் என்று கேட்கும் பிரிவினர் ஒரு பக்கம். எல்லாவகையான மக்களுக்கும் - படிப்பறிவற்ற மக்களிலிருந்து பெண்கள் வரை எல்லாவிதமான மக்களுக்கும் சகல விதமான உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் அதாவது universal franchise என்று கோரும் பிரிவினர். இதுபோக, ஒன்றும் வேண்டால் வெள்ளையரிடமே அனைத்து உருமைகளும் இருக்கட்டும் என்று கேட்பவர்கள் என்று அப்போதிருந்த பலதரப்பட்ட சிந்தனைகளையும் கதையில் காட்டியிருக்கிறார்.

அக்காலத்தைய சமூகக்கட்டுப்பாடுகளையும் அவற்றை உடைக்கும் பெண்ணாக, கதையின் நாயகி அன்னலட்சுமியையும் பார்க்கிறோம். ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியையாகப் பணி புரியும் அன்னலட்சுமி சமூகத்தின் கோடுகளையெல்லாம் தாண்டுபவளாக இருக்கிறாள். அத்தோடு, தகப்பன் சொல் தட்டாத பிள்ளையாக பாலேந்திரனையும் பார்க்கிறோம். பாலேந்திரன் சிறுவயதில் இங்கிலாந்தில் படிக்கும்போது அன்புகொண்ட சமபாலுறவுத் துணையை இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறான். இருந்தபோதும், தகப்பன் கிழித்த கோட்டைத் தாண்டாமல் திருமணம் செய்து குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான்.

அந்தக் காலத்து ஆடை அலங்காரங்களையும் விருந்து நேர உணவுப்பழக்கங்களையும் நுணுக்கமாக விவரிக்கிறார் சியாம் செல்வதுரை. விக்டோரியன் காலத்து பழக்க வழக்கங்கள் நிறைந்திருந்த சமூகத்தைப் பார்க்க முடிந்தது.

சோறு தண்ணியில்லாமல் புத்தகத்திலேயே இலயித்து நிற்க, சரித்திரத்தையும் புனைவையும் சம அளவில் கலந்து கொடுத்திருக்கும் சியாம் செல்வதுரையின் எழுத்தாற்றல் காரணமா அல்லது லேசாக நினைவிலிருக்கும் கதைக்களமும் மாந்தர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் காரணமா என்று தெரியவில்லை.

-0-

Swimming in the Monsoon Sea. பதின்ம வயதினருக்காக எழுதப்பட்டிருக்கும் நாவல் என்ற குறிப்புடன் வந்திருக்கும் புத்தகம். சியாம் செல்வதுரை, ஓரிடத்தில் தன்னுடைய இளமைக்கால நினைவுகளைத் தொகுத்து வைப்பதற்காக தனக்காக எழுதிய புத்தகம் என்று சொல்லியிருக்கிறார். 14 வயது அம்ரித், அவனது வளர்ப்புப்பெற்றோருடனும் இரண்டு சகோதரிகளுடனும் கொழும்பில் வாழ்ந்து வரும்போது கனடாவிலிருந்து அவனுடைய மாமாவும் மச்சினனும் வருகிறார்கள். அம்ரித்தின் அம்மா குடும்பத்தை எதிர்த்துக் கல்யாணம் பண்ணியபடியால் தொடர்ந்த விரோதங்கள் பற்றியும் இரண்டு மச்சினர்களுக்குமிடையே வளரும் நட்பு பற்றியும் நாவல் பேசுகிறது. கொழும்பு நகர வாழ்க்கை, பணக்காரர்களின் குடும்ப வழக்கங்கள், கொழும்பு நகரப்பள்ளிகள் என்று பல விதயங்களை கதையினூடே பார்க்க முடிகிறது. சிற்சில பகுதிகள் மனதினடியில் படிந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டியெழுப்புகின்றன. அம்ரித் அவனுடைய பள்ளிக்கூடத்தைப்பற்றிச் சொல்லும்போதும் சரி, Funny Boy-இல் ஆர்ஜீ நாடகப்பயிற்சிக்காகச் செல்லும் கதையில் வரும் நாடகப்பயிற்றரங்கத்தை பற்றி வருமிடங்களிலும் சரி கொழும்பில் நான் படித்த பள்ளிக்கூடக்கட்டிடங்கள் நினைவுக்கு வந்து போனது. கொழும்பு நகர பெட்டா வீதிகளின் சித்தரிப்பு போன்ற விதயங்கள் இருந்தாலும், Swimming in the Monsoon Sea, ஏனைய கதைகளுடன் ஒப்பு நோக்கும்போது ஒரு மாற்றுக்குறைவுதான்.

ஆனாலும், சமபாலுறவு உணர்வுகள் தம்மில் எழுப்பும் குழப்பங்களையுடைய பதின்ம வயதினருக்கு இப்புத்தகம் தாங்கள் விந்தையான விசித்திரப்பிறவிகள் அல்ல என்ற ஆறுதலைக்கொண்டு வரலாம். தெரியவில்லை. அனுமானங்கள், எவ்வளவு தூரம் சரியாகவிருக்கும் என்ற கேள்வி வருகிறது.

இந்நாவல் பற்றிய விமர்சனமொன்று : http://www.umanitoba.ca/outreach/cm/vol12/no2/swimminginthemonsoonsea.html

-0-

Story-wallah!: A Celebration of South Asian Fiction

சியாம் செல்வதுரை தொகுத்திருக்கும் புத்தகம் இது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களின் பெயரை ஒருதடவை பட்டியலிட்டுவிடுகிறேன்.

Sam Selvon, Mena Abdullah, Chitra Fernando, Zulfikar Ghose, Anita Desai, Bharati Mukherjee, K.S.Maniam, Raymon Pillai, Farida Karodia, Michael Ondaatje, Rooplall Monar, Salman Rushdie, Rukhsana Ahmad, Kirpal Sigh, M.G.Vassanji, Rohinton Mistry, Hanif Kureishi, Romesh Guresekera, Aamer Hussain, Shani Mootoo, Ginu Kamani, Shyam Selvadurai, Sandip Roy, Jhumpa Lahiri, Monica Ali, Numair Choudhury. 1923இல் பிறந்த சாம் செல்வோன் (டிரினிடாட்) இலிருந்து 1975இல் வங்காளதேசத்தில் பிறந்த நுமேயிர் சௌத்ரி வரைக்கும் என்று வயதுவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்தது சியாம் செல்வதுரையின் முன்னுரை. யாரேனும் மொழிபெயர்த்தால் நன்றாகவிருக்கும். புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய விதயம். முன்னுரையிலிருந்து ஒரு பகுதி:

I am often invited to read from my novels in public, and , if there is a question period afterwards, someone inevitably stands up to ask the following: “what kind of a writer do you consider yourself to be? Are you a Canadian writer or a Sri Lankan writer?”

It is perplexing, this matter of cultural identity, and I am tempted like some other writers of multiple identities to reply gumpily, “I’m just a bloody writer. Period.”

Yet this response would be disingenuous. I suppose I could answer, “Sri Lankan - Canadian writer,” or “Canadian - Sri Lankan writer.” But this also does not get to the heart of what I consider my identity to be as a writers (and we are talking of my writing identity here). For, in terms of being a writer, my creativity comes not from “Sri Lankan” or “Canadian” but precisely from the space between, that marvelous open space represented by the hyphen, in which the two parts of my identity jostle and rub up against each other like tectonic plates, pushing upwards the eruption that is my work. It is from this space between that the novels come. From a double-visioness, a biculturalism.

தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் தொகுப்பு என்று சொல்லப்பட்டாலும் சாம் செல்வோன் மற்றும் ரூப்லால் மோனார் போன்றவர்கள் மூன்றாம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஹனீஃப் குரே்ஷி மற்றும் ஜம்பா லஹிரி போன்றவர்கள் முதற்தலைமுறையினர். இன்னும் சிலரோ சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்கள்.

மெனா அப்துல்லாவின் (ஆஸ்திரேலியா) ‘The Time of the Peacock’, Gwydirஇல் குடும்பத்துடன் வாழும் சிறுமியொருத்தியைப்பற்றியது. மென்மையான அதிர்வுகளில்லாத மொழியினூடே செல்லும் அழகான கதை. புலம்பெயர்ந்ததன் தாக்கங்களைப்பற்றி லேசாக அதிர்வுகளில்லாமல் சொல்லிச் செல்கிறது.

சித்ரா ஃபெர்னாண்டோவின் (இலங்கை) கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஈகைக்குணத்தை எல்லா மதங்களும் சிலாகிக்கின்றன. பௌத்தமதத்தைச் சேர்ந்த சிங்களகுடும்பத்தினரைப்பற்றிய ‘The Perfection of Giving’ என்ற கதையில் அதன் முரண்கள் நன்கு தெரிகிறது. கோயிலுக்கு ஒரு ட்யூப்லைட் கொடுத்தாலும் தங்களின் பெயரை அந்த டியூப் லைட்டை மறைத்துக்கொண்டிருக்கும் வகையில் பொறிப்பவர்களைக் கொண்ட சமூகத்திலிருந்து வந்தபடியால், இக்கதையில் வரும் பெரிய அன்ரி மகிந்தவை இரசிக்க முடிகிறது.

சுல்ஃபிகர் கோஸின் ‘The Marble Dome’ மத வன்முறையைப் பேசுகிறதென்றால் பாரதி முகர்ஜியின் ‘The Management of Grief’ 1985 விமான வெடிப்பின்போது பாதிக்கப்பட்டவர்களைக் காட்டுகிறது. அனிதா தேசாயின் ‘Winterscape’, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் முதியவர்களைப்பற்றி யோசிக்க வைக்கிறது. பஞ்சாபிலிருந்து கனடாவிற்கு படிக்க வந்து, இங்கேயே திருமணம் செய்து வாழும் மகனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்தக் குழந்தைப்பிறப்பிற்காக, பஞ்சாபிலிருந்து அவனுடைய அம்மாக்கள் வருகிறார்கள். ஆமாம் அம்மாக்கள்தான்! கதையின் சுவாரசியமான, நம்மூரவர்களுக்கு பழக்கமான வழக்கத்தைக் காட்டும் பகுதி அது. நல்ல கதை.

தொகுப்பில் மிகவும் பிடித்துப்போன கதைகளில் மலேசிய எழுத்தாளர் கே.எஸ்.மணியத்தின் ‘Haunting the Tiger’ கதையுமொன்று.

மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் முதியவர் ஆழ்ந்துபோய் இலயித்திருக்கும் அவரது இளம்பிராயத்து நினைவுகளைப் பேசுகிறது. ஆரம்பத்தில் தனியாக காட்டுக்குள் புலிவேட்டையாடப் போகும் முத்து (முதியவர்), காட்டுக்கு அருகில் குடியிருப்பவனொருவனுடன் போகிறார். இங்கே புலிவேட்டையென்பதை வைத்து ஆசிரியர் பல விதயங்களைப் பேசுவதாகப் படுகிறது. உதாரணமாக, கீழேயிருக்கும் பகுதியைப் படிக்கவும்.

“I know what’s wrong,” Zulkifli says. “There’s something foreign to the tiger’s nose. He won’t show himself until the smells are gone.”

“What smells?” he says.

“Mind and body smells,” Zulkifli says.

Muthu is offended and turns away from him.

“Not in the way you can’t go near a person,” Zulkifli says, confronting Muthu. “The clothes you wear, the thoughts you think. Where do they come from?”

“They’re just clothes and ideas,” Muthu says.

“They must fit into the place where the tiger lives.”

“Why must they fit in?” Muthu says. “I only want to break out from my father’s hold on me.”

“So you brought a purpose with you?” Zulkifli says. “And a way of thinking. How can you get into the tiger’s stripes and spirit?”

“I can make the leap,” Muthu says, thinking of the chameleon.

Visible Minority என்ற கட்டத்துக்குள் அடக்கப்படுவதினால், இம்மாதிரியான விதயங்களில் வழமையைவிட அதிகமாக நுண்ணுணர்வுடன் இருக்கிறோம்(றேன்) என்று நினைக்கிறேன். :)

Raymond Pillaiயின் ‘The Celebration’ வழமையான தமிழ்க்கதையை நினைவுபடுத்தியது. சேர்க்கவேண்டுமே என்பதற்காகச் சேர்த்திருப்பார்கள்போல. அதே இரகந்தான் சிங்கப்பூரைச் சேர்ந்த கிர்பால் சிங்கின் கதையும்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இந்திய/ஈழத்து வம்சாவளியினரைப் பற்றித் தெரிந்த அளவுகூட தென்னாப்பிரிக்க இந்திய வம்சாவளியினரைப் பற்றி (எனக்கு)த் தெரியாது. கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி வாழ்ந்தாலும் சில விதயங்கள் மாறவில்லை என்பதை ஃபரீடா கரோடியாவின் ‘Crossmatch’ சிறுகதை காட்டியது. இங்கிலாந்தில் காதலனுடன் சேர்ந்து வாழும் சுசீலாவுக்கும் அமெரிக்காவில் தற்பால்நாட்டமுள்ள திலீப்புக்குமிடையே திருமணம் செய்விக்க அவர்களின் பெற்றோர்கள் முனைந்து அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவரது கதை பேசுகிறது.

மைக்கேல் ஒண்டாட்செயின் ‘The Passions of Lalla’, கொழும்பில் வாழும் பர்கர் இனப்பெண், அவளுடைய குடும்ப சூழ்நிலைகள், அவளுடைய காதல் ஆகியவற்றைப் பேசுகிறது. அறிமுகமான களமென்பதாலோ மைக்கேல் ஒண்டாட்செயின் எழுத்தினாலோ பக்கங்கள் பரபரவென்று புரண்டன. ஒரு இடத்தில் எத்தனை வருடங்கள் இருக்கிறோம். நினைவு தெரிந்த பருவத்தில் வாழ்ந்தோமா இல்லையா என்பதெல்லாம் முக்கியமில்லை. சில விதயங்கள் மூளையின் ஒரு பக்கத்தில் புதையுண்டு கிடந்து திரும்பியெழுந்து வருவது உண்மைதான் என்றெல்லாம் கதையைப் படித்துமுடித்துச் சில வாரங்கள் ஆனபிறகும் யோசித்தபடி இருக்கிறேன்.

கயானாவைச் சேர்ந்த ரூப்லால் மோனாரின் ‘பகதூர்’ சிறுகதை, வி.எஸ்.நைபாலின் மிகுவெல் ஸ்ட்ரீட்டை நினைவுபடுத்தியது. சுவாரசியமான விறுவிறுப்பான கதை. பேய் வேடம் போட்டு, காவலுக்கு இருப்பவர்களை விரட்டிவிட்டு அந்த வேலைக்குப் பதவியுயர்வு பெறும் பகதூரின் கதை.

சிலரின் எழுத்துகள் எப்படியும் ஒரு படி மேல் என்பதை நிரூபித்த சல்மான் ருஷ்டியின் ‘The Courter’. இங்கிலாந்தில் பணிப்பெண் சகிதம் வாழ்ந்த இந்தியக் குடும்பத்தின் பணிப்பெண்ணுக்கும், அவர்கள் வாழ்ந்த கட்டடத்தில் பணிபுரிந்த முன்னாள் யுஸ்.எஸ்.எஸ்.ஆர்.-ஐச் சேர்ந்த முன்னாள் சதுரங்க விளையாட்டுக்காரருக்கும் இடையே முகிழ்ந்த உறவு பற்றிப் பேசுகிறது. அதனினூடே வேறு சில விதயங்களையும் பேசிச் செல்கிறது.

ருக்்ஷானா அஹ்மதின் ‘The Spell and the Ever-Changing Moon’, லாகூரின் வாழும் நிஸா பற்றிப் பேசுகிறது. ஐந்து பிள்ளைகள் + கணவன் + கர்ப்பம் + கணவனின் அடியுதை என்று வாழும் அவள், குறி சொல்பவள் ஒருத்தியைத் தேடிப்போகிறாள். இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் அங்கேயும் இருக்கிறதா என்று நிமிர்ந்து உட்கார்ந்த வேளையில், குறி சொல்பவளுடைய சில செய்முறைகளைச் செய்ய முடியாமல், தாய்வீட்டுக்குப் போக முடிவு செய்கிறாள்.

கென்யாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து தற்போது டொராண்டோவில் வாழும் எம்.ஜி.வாசன்ஜியின் கதை, இவருடைய கதைகள் கிடைக்குமாவென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கியது. தொகுப்பில் இருந்த இன்னொரு சுவாரசியமான கதை இவருடைய ‘In the Quiet of a Sunday Afternoon’. வார்த்தை விவரிப்புகளின் மூலம் சம்பவங்களை நேரடியாகவே பார்ப்பதுபோன்ற உணர்வை உருவாக்கிவிட்டிருந்தார்.

கராச்சியில் பிறந்து 1970 தொடக்கம் லண்டனில் வாழும் ஆமெர் ஹூசெயினின் ‘Karima’ மறக்கமுடியாதவொரு சிறுகதை. இக்கதையை யாரேனும் மொழிபெயர்த்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும் என்று படித்துமுடித்ததும் தோன்றியது.

(March, 3rd week 2007)

Posted in அனைத்து இடுகைகள், வாசக அனுபவம்with 2 Comments →

  • You Avatar
    -


Creative Commons License