பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 9 • 05.02.07
சம்பு: நாம் இதுவரைக்கும் பேசியவை எல்லாமே பண்பாட்டுத்தளத்தில் நிகழ்பவை தான். பண்பாடு பற்றிய உங்கள் புரிதல் என்ன?
பிரளயன்: பண்பாடு என்ற சொல்லே தமிழில் 1950களில்தான் அறிமுகமாகிறது. வையாபுரிப்பிள்ளை தான் இந்த சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார். அதற்குமுன் கலாச்சாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது. ‘கலையில் பின்பற்ற வேண்டிய உயர்நெறிகள்’ என்ற பொருளிலே இது இருப்பதால் புதியசொல்லை காணவேண்டியதாயிற்று. ‘‘பண்பெனப்படுவது பாடறிந்து ஓழுகல்’’ என்று பத்தாம் நூற்றாண்டின் பாடல்வரி உண்டு. ‘‘ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் குணத்தார்…’’ என்கிறது தேவாரம். பண்பு என்ற சொல் இருந்தது. பாடு என்ற சொல்லும் தமிழில் இருந்தது. இதை இணைத்துதான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார் வையாபுரிப்பிள்ளை. Nature என்பதிலிருந்து Cultureஐப் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிமனிதன் ஆடையற்று இருந்தான்- இது Nature. ஆடை அணிய ஆரம்பிக்கிறான்-இது Culture. நிலம் என்பது nature. அதை பண்படுத்தி விளைவிப்பது culture. இன்னும்கூட சொல்லப்போனால் ஒரு மக்கள் குழுவை இன்னொரு மக்கள் குழுவிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் காரணி பண்பாடுதான். ஒரு மக்கள்குழுவை இன்னொரு மக்கள் குழுவோடு ஒருமைப்படுத்துகிற காரணியும் பண்பாடுதான்.
ஆதவன்: கல்ச்சுரல் ஆக்டிவிசம் பற்றி அடிக்கடி சொல்றீங்க விளக்க முடியுமா?
பிரளயன்: ஒரு தனிமனிதனின் அல்லது ஒரு மக்கள் சமூகத்தின் சொல், செயல், சிந்தை, நடையுடை, பாவனை, பழக்கவழக்கங்கள், உற்பத்தி உறவுகள், மதிப்பீடுகள் இவற்றில் பொதிந்துள்ள கருத்தியல் நிலைபாடுகளை அடையாளம் காண்பதுதான் பண்பாட்டு அரசியல். அந்த பண்பாட்டில் ஒரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்க செயல்படுவதுதான் பண்பாட்டு ஊழியம் (Cultural activism). ஒவ்வொரு பண்பாட்டு செயலிலும் ஒரு கருத்தியல் பொதிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த கருத்தியலை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவும் தாங்கிப்பிடிக்கவும் ஒப்புதலை உருவாக்கவும் பண்பாடு தொழிற்படுகிறது.பண்பாட்டு ஊழியம் என்பது நாம் நம்புகிற ஒரு கருத்தியலுக்கு வாழ்முறைக்கு ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் ஏற்படுத்துகிற அன்றாட நடைமுறை மாற்றங்கள்தான். அந்தக் கருத்தியலைப் புரிந்து கொண்டு செயல்படுவதையும் Cultural activism உள்ளடக்குகிறது.
நாடகமே இன்று ஒரு ஆக்டிவிசம்தான். ரவிவர்மாவும் நானும் தொழிலாக நினைக்கலாம். ஆனால் வாழமுடியுதா? அப்போ ஆக்டிவிசத்தாலத்தான் நாம் ஒரு குழுவா இருக்கமுடியுது. தியேட்டர் ஆக்டிவிசம், கல்ச்சுரல் ஆக்டிவிசத்தோட ஒரு பகுதியா இருக்கிறபோது அதைப்பற்றிய புரிதல் அவசியம். நமக்கொரு பண்பாடு இருக்கில்லையா அது ரொம்ப ஜனநாயகமா இருக்கணும். நம் பழக்கவழக்கத்தில் நிறைய Unlearning செய்யவேண்டியிருக்கு. Unlearning என்பது கற்றதை மறப்பது. (கற்ற அரசியல் தத்துவத்தை மறக்கிறதில்லை.) அதாவது சமூகத்தில் கற்ற சாதி முத்திரையை, சாதி, மத, பாலின குரோதத்தை மறக்கவேண்டியிருக்கிறது. ‘நல்ல ஜாதி டீயா போடுப்பா’, ‘நல்ல ஜாதி மாம்பழமா கொடுப்பா’ அப்படின்னு இந்த சொற்களையெல்லாம் திரும்பத்திரும்ப நாம் ஏன் ஒலியேத்திக்கிட்டிருக்கோம்? ஏன் Reinforce பண்றோம்? அப்போ மாம்பழத்துல சாதி இருக்கலாம்னா மனுசன்ல ஏன் இருக்கக்கூடாதுன்னுதானே அர்த்தம்? இந்த மாதிரி நம்முடைய பழக்கவழக்கங்களில் சூழ்நிலையில் வாழ்க்கையில் நாம் பழகின பெருமிதங்கள் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கு. மறக்கவேண்டியிருக்கு. இந்த Unlearning பண்பாட்டு ஊழியனுக்கு ரொம்ப முக்கியம். ‘ஆதாயமில்லாம செட்டி ஆத்துல இறங்குவானா’, ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்றெல்லாம் நாம் பழமொழி சொல்லமுடியாது. இதெல்லாம் cultural streaotypes. ஒரு சாதியினரை குறிப்பிட்ட குணாம்சத்துக்குள் அடக்குவது ‘குலத்தளவே ஆகும் குணம்’ எனும் பழமொழியை வலியுறுத்துவதுபோலத்தான்.
ஆதவன்: நீங்க நாடகத்துல பெயர் வைப்பது உட்பட ரொம்ப கவனமாகச் செயல்படுறீங்க. சமூகத்தில் இருக்கக்கூடிய ஜாதி இந்தமாதிரியான விஷயங்களில் பெயர்களுக்கு உள்ளிருக்கும் கூறுகளை நாடகத்துக்குள்ள கொண்டுவரணும்னு செய்யறீங்க இல்ல, அப்ப ஒரு நாடக ஆசிரியன்-இயக்குனன் பொலிட்டிக்கல் அலர்ட்டா இருக்கணுமா?
பிரளயன்: அது பொலிட்டிக்கல் அலர்ட்னஸ் மட்டும் இல்ல. அது கல்சுரல் அவேர்னஸ்தான். மனிதன்னா அவனுக்கு ஒரு முகம் இருக்கு, பேர் இருக்கு, பேருக்கு பின்னால சாதி இருக்கு. ஒரு அவார்னஸ்தான். நாம் வாழும் காலத்தைப்பற்றிய பிரக்ஞை இருக்கனும். தவறு செய்யக்கூடாது. இன்னிக்கி இருக்கிற அடிப்படையான பிரச்சினை என்னன்னா மக்களுக்கு எதிராக இருக்கிற மக்களுடைய பொதுப்புத்திதான். மக்களுடைய காமன்சென்ஸ் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கு. சில தளங்களில் சாதகமாகவும் இருக்கலாம். பல சமயங்களில் எதிரான மதிப்பீடுகளை கொண்டதாகத்தான் இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் ஆதிக்க சக்திகளுக்கான சாதகமான மதிப்பீடுகளைத்தான் வைச்சிருக்காங்க. இது எல்லா சமூகத்திலும் மக்கள் மத்தியிலிருக்கும் முக்கியமான பண்பாக இருக்கிறது. அப்ப மக்களோட பொதுப்புத்திக்கும், மக்கள் நலனுக்கும் இருக்கிற முரண்பாட்டை அடையாளப்படுத்தறது, இரண்டுக்கும் இருக்கிற முரண்பாட்டை கண்டுபிடிச்சி உடைத்தெறிவதுதான் பண்பாட்டு வேலை.
அப்ப Common sense-யோட contest செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் எது எது முடியுமோ அதையெல்லாம் செய்யலாம். பெயிண்டிங், கதை,கவிதை எழுதுவது, டாக்குமெண்டரி எடுப்பதென எதோவென்றில் செய்யலாம். பண்பாட்டு செயல்பாடு வெறும் கலை இலக்கிய உற்பத்திகளோட நின்னுடறதில்ல. அதையும் தாண்டி நடைமுறையிலும் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறது. கலை இலக்கியம் ஒரு பெரிய பூசணிக்காயில் ஒரு ‘பத்தை’ அவ்வளவுதான். கல்வி இருக்குது, சுகாதாரம் இருக்குது, பஞ்சாயத்து இருக்குது. வாழ்க்கை முறைகள் இருக்கு , பண்டிகைகள், விவசாயம் மற்றும் பலது இருக்கு.
குளத்துக்கும் சமூகத்துக்கும், ஏரிக்கும், ஆற்றுக்கும் இருக்கிற உறவு கூட பண்பாட்டுக்குள்ளத்தான் வருது. பண்பாட்டுக்கு பொருளாதார மதிப்பும் உண்டு. எல்லாத்தையுமே பண்பாட்டுல பாக்குறோம்னு நினைக்க வேண்டாம். பண்பாடுன்னா பொருளாதாரத்திலிருந்து - சுகாதாரம் வரைக்கும் எல்லாம்தான். கேரளாவைச் சேர்ந்தவங்க நாம பாமாயில் கடலையெண்ணை, நல்லெண்ணை உபயோகப்படுத்தற மாதிரி அவங்க தேங்காய் எண்ணையத்தான் சமையலுக்கு பயன்படுத்தறாங்க. அவங்க தேங்காய் எண்ணையை சாப்பிடலைன்னா அதுக்கு மார்க்கெட்டே இல்லாமப் போயிடும்.
உணவு பழக்கங்களில் எவ்வளவு சுலபமாக தமிழன் மாறிவிட்டான். கர்நாடகாக்காரன் இன்னும் களி சாப்பிடறதை விடல. அதுக்காக அவன் பழையகாலத்துல இருக்கான்னு சொல்லக்கூடாது. எதையுமே உள்ள விடாம இருக்கான்னும் கிடையாது. கேரளாவில் பாமாயில் இறக்குமதி பண்றபோது பெரிய போராட்டம் நடத்துனாங்க…. கிடங்குகளில் போய் லாரியில் இருந்த பாமாயில் கேன்களை கொளுத்தினாங்க. கர்நாடகாவில் பதநீரை alcoholic based என்று அரசாங்கம் அறிவித்தது அதை மென்பானம் (soft drink) இல்லேன்னு சொன்னாங்க. இது எப்படி நடந்துதுன்னா
அங்க இருக்கிற ஒரு சிலர் பதநீரில் ஆர்.எஸ் பவுடரை கலந்து விற்றார்கள் என்பதை காரணம் காட்டி மதுபான தயாரிப்பாளர்களெல்லாம் பதநீரை தடை செய்யச் சொல்லி அரசை நெருக்கினார்கள். அரசும் பதநீரை தடை செய்தது. அதை எதிர்த்து நடந்த போராட்டத்துல மூணு நாலு பேரு துப்பாக்கி சூடுபட்டு இறந்தாங்க. பதநீர் ஆல்கஹால் டிரிங் அல்ல, சாப்ட் டிரிங்தான் என்பதை முன்னிட்டு நடந்த உயிர்வாழ்வதற்கான போராட்டம் அது. உடனே அரசாங்கம் பதநீர் சாப்ட்டிரிங்தான்னு அறிவிச்சிடிச்சி.
பார்த்திபராஜா: பண்பாட்டில் இருக்கும் விஷயங்களை தமிழன் நிறைய இழந்திருக்கான்னு சொன்னீங்க இல்லையா? அதை மீட்டுருவாக்கம் பண்ணலாம் என்கிற இடத்திலிருந்து யோசிக்கலாம் இல்லையா?
பிரளயன்: மீட்டுருவாக்கம் என்பதுவேறு, எதிர்ப்புணர்வு இல்லாமல் போய்விடுவதென்பது வேறு. காலனியாதிக்கம் பல பின்விளைவுகளை ஏற்படுத்தினாலும் உலகம் பற்றிய பார்வையை ஏற்படுத்தியது அதுதான். ஆப்பிரிக்க சிந்தனையாளர் அமில்கர் கப்ரால் என்ன சொல்றார்னா ‘காலனியம் உன்னுடைய சமூகம் தாண்டி பலவிதமான மக்கள் சமூகங்கள் இருக்கு என்ற பார்வையை ஏற்படுத்தியது.’ கேள்வி முறையே இல்லாம எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதென்பது பலவீனமானது. தமிழ் சமூகத்துக்கு மற்றவர்களைவிட வரலாற்று ஓர்மை உண்டு. ஆனால் ஆங்கிலேயன் உங்களுக்கு வரலாற்று உணர்வே கிடையாதென்று தாழ்வாக மதித்தான். இயல்பாகவே தமிழனுக்கு நீண்ட பாதை பற்றிய வரலாற்று உணர்வு எப்பவும் இருந்துகிட்டே இருக்கு. ஆனாலும் நுகர்வு சமூகமா அதிக அளவில் மாறியிருப்பது தமிழர்கள்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் பெரிய நுகர்வோர் சந்தை. நமக்கு எதிர்ப்புணர்வு வேணும். எல்லோரும் பழமையில் நல்லா இருந்தோம் இப்பத்தான் கெட்டுப்போயிட்டோம் என்கிற பார்வையும் தவறானாது. நமக்கு ஜனநாயகம்தான் புதுசு. ஜனநாயகம் மேற்கத்திய இறக்குமதியா? இல்லை அதனுடைய மூலக்கூறுகள் சோழர் காலத்தில் இருக்கா? கிரேக்க ரோமானிய மரபுகளின் மூல மாதிரிகளில் அதன் கூறுகள் இருக்கிறதா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. ஆனால் பிரஞ்சுப்புரட்சி ஏற்படுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்…. என்ற கோட்பாடு நமது புராதனகாலத்தில் இருந்தது என்று பெருமைப்பட முடியாது. எந்த இந்திய புராதன சமூகத்தில் அது இருந்திருக்கு?
அதே சமயத்தில் உலகமயமாக்கம் எல்லா மக்கள் சமூகத்தையும் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் போது அதற்குள் போகாமல் இருப்பதற்கு நமது பழமை இடங்கொடுத்தால் அதில் தவறே கிடையாது. அதற்கு நம் பழம்பெருமை வாய்ப்பளிக்குமானால் தாராளமாக பின்பற்றலாம்.
பார்த்திபராஜா- ஒரு கல்ச்சுரல் ஆக்டிவிஸ்டா நீங்க எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சாதி முக்கியமானதா இருக்கு உங்க நாடகங்களில் இந்தப் பிரச்சினையை எப்படி வெளிப்படுத்திறீங்க சாதிக்கான வேரை தேடிப்போகும்போது பார்ப்பனியத்தை அடையாளம் காண்கிறோம். பார்ப்பனியம் ரெண்டு விஷயங்களை கொண்டிருக்கு. ஒண்ணு சாதிய ஒடுக்கு முறை, ரெண்டு தேசிய ஒடுக்குமுறை. இந்தியாவில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் தேசிய ஒடுக்குமுறை பற்றிய விசயங்களைத் தீவிரமாக பேசலையோ… அப்படி பேசியிருந்தால் மரபுக்கலைகளை நேரடியாக போய் தொடுவதற்கான வாய்ப்புகள் வந்திருக்கும் இல்லையா… இல்லைன்னா இன்று பெரியாரை இடதுசாரி இயக்கங்கள் எடுத்துக்கொள்வது விடுபட்ட தேசிய இன முரண்பாட்டை, பிரச்சனைகளை கூர்மையாக பார்க்க தவறியதை சரிபடுத்திக் கொள்வதாக இருக்குமா? அஜெண்டாவிலேயே தேசிய இனப்பிரச்சினைகளை தவறாக பார்த்த விசயமோ அல்லது சரியாக பார்க்காத விசயமோ அது கலைத்துறையிலும் கூட நீடித்திருப்பதாக சொல்லலாமா? கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு அதனாலதான் கேட்டாங்க. இன பேரினவாதத்திற்கு எதிராக புலிகளின் செயல்பாடும் இங்கயிருக்கற தேசிய ஒடுக்குமுறையை புறந்தள்ளிவிட்டு முற்றுமுழுதாக சாதிங்கற விசயத்தை பேசிடமுடியுமா?
பிரளயன்: இடதுசாரி இயக்கம் குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கம்தான் இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு என்று ஒப்புக்கொண்ட இயக்கம்… இந்தியாவில் பல்வேறு தேசியஇனங்களை பண்பாட்டு ரீதியாக அடையாளம் கண்டு ஒப்புக்கொண்டதும் கம்யூனிஸ்ட் இயக்கம்தான். வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல. தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையில் மொழிவாரி மாநிலத்திற்காக முதல் கோரிக்கை வைத்ததும் போராடியதும் இடதுசாரி இயக்கங்கள்தான். தேசிய இன கோரிக்கைகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். தேசிய இனக் கோரிக்கைகளே இன்று மாநிலங்களின் அதிக அதிகாரத்திற்கான கோரிக்கைகளாக மாறியிருக்கின்றன. மாநிலங்களுக்கான - மாநில கட்சிகளுக்கான முக்கியத்துவம் இந்திய அரசியலில் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு. இது தேசிய இனங்கள் வலுப்பெறுவதாகத்தான் பார்க்க முடியும். . ஒரு தேசிய இனத்துக்கு சரியான இடம் கொடுக்காம போயிருக்கலாம். அதமாதிரியான பிரச்சினைகள் இருந்தாக்கூட பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய தன்மையில்தான் இருக்கும். தேசிய இனத்தோட சுயநிர்ணய உரிமைக்கான கேள்வி இன்று இந்தியச் சூழலில் நீங்க நினைப்பதுபோல வெளிப்படவில்லை. அப்படியே வெளிப்பட்டாலும் அதை கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதன் மூலம் விடைகாண முடியும் என நான் நம்புகிறேன்.
பார்த்திபராஜா: தமிழக பண்பாட்டுத் தளத்தில் கம்யூனிஸ்ட்களின் குறுக்கீடு எப்படி தொடங்கியது?
பிரளயன்: 1948 ல் தெலுங்கானா எழுச்சியையொட்டி தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்படுகிறது. 1952 பொதுத்தேர்தலுக்கு முன்புதான் இந்தத்தடை நீங்குகிறது. தெலுங்கானா எழுச்சிக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் பலத்த கருத்தியல் விவாதங்கள் எழுகின்றன. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தன்மைகள் குறித்தும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டிய மக்கள் பகுதிகள் குறித்தும் அரசு அதிகாரத்தை கைப்பற்ற தேவையான வழிமுறைகள் குறித்தும் கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றது. அந்தநேரத்தில்தான் பெரியாரின் ராமாயண எரிப்புப் போராட்டம், எம்.ஆர்.ராதாவின் கீமாயணம், ராமாயணத்தை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாதுரையின் கம்பரசம், கருணாநிதியின் தீ பரவட்டும்- இவையெல்லாம் பெரிய அளவில் தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களை கிளப்புகின்றன. திராவிட இயக்கத்தின் அடித்தளமான பார்யுபன எதிர்ப்பு மற்றும் சமூகநீதி அரசியலின் கருத்தியல் பின்னணியை இவைதான் கட்டியமைக்கின்றன. இந்த பிரச்னையை தமிழகத்திலுள்ள கம்யூனிஸ்ட்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
ஐராவதி கார்வே எழுதிய புத்தகம், அமிர்தலிங்க ஐயர் (இவர் மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.பாலசுப்ரமணியனின் தந்தையாவார்) எழுதிய ஆங்கில புத்தகம், டி.டி. கோசாம்பி பண்டைய இந்திய சமூகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் ராமாயணத்தின் சமூகவியல் பற்றி சில உண்மைகளை முன்வைக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் உள்வாங்காமலே தோழர் ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் கம்பராமாயணத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். கம்பராமாயணம் தமிழ் இலக்கியத்தின் அரிய படைப்புக்களில் ஒன்று, அதை நிராகரிப்பதும் பழித்துரைப்பதும் ஒரு அராஜகப்போக்கிற்குத தான் இட்டுச் செல்லும் என்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணன் கம்பராமாயணத்தின் சிறப்புகளை விளக்கி ஆறு புத்தகங்களை எழுதினார். ஜீவா கம்பன் கழகக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். அவர் 13வது ஆழ்வார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடைசியில என்ன ஆச்சுன்னா கம்பனையே ஒரு பெரிய சோஷலிஸ்ட்டாக காட்டக்கூடிய அளவுக்கு வேற ஒரு எக்ஸ்ட்ரீக்முக்கு போயிடறாங்க. தாமரை பத்திரிகையின் முத்திரை வாசகம் ‘வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ கம்பராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்தில் இப்படித்தான் கம்யூனிஸ்ட்கள் தலையிடத் தொடங்குகிறார்கள்.
இந்த தலையீட்டில் உள்ள பிரச்னை என்னன்னா ராமாயணத்தில் வெளிப்படும் சமூகவியல் உண்மைகளுக்கும் சமகாலத்தின் சமூகநீதி அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் காணத் தவறியதுதான்.
ஆதவன்- கம்யூனிஸ்ட்கள் பெரியாரை கையிலெடுக்கணும்னா எதை ஒட்டி எடுக்கலாம்?
பிரளயன்: எதை ஒட்டின்னா, சமூக நீதிக்காக குரல் கொடுக்கவேண்டி இருக்கு… அனைத்துப்பகுதி உழைக்கும் மக்களை வர்க்கரீதியா அணி திரட்டறபோது இந்த கேள்விகள் தானா உதிர்ந்திடும் என்ற பார்வை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அந்தப் பார்வையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில வர்க்கங்கிறது தனித்து உருவாகல… ஏற்கனவே இருக்கும் சாதி அமைப்புகளிலிருந்துதான் வர்க்கம் கட்டப்படுகிறது. அதாவது இங்கே வர்க்க கட்டுமானங்கள் ஏற்கனவே இருந்த சாதி கட்டுமானங்கள் மேல்தான் உருவாகி இருக்கு. அதுதான் இன்றைய புரிதல். இந்தப் புரிதல் கருத்தியல் ரீதியா இன்னும் நிலைபெறணும். கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி செய்தது சாதிமறுப்புத் திருமணம். தமிழ்நாட்டுல சுயமரியாத திருமணம் அறிமுகப்படுது.
ஒரு மாடல் ஒரு மாற்றுப் பண்பாடு. உடை அணிதலிலிருந்து எல்லாத்திலயும் உருவாக்கறாங்க. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்கள் நடைமுறையில செஞ்சதுண்டு ஆனா கேள்விகளா வரும்போது அவங்க பெரியாரின் கருத்தியலை வெளிப்படுத்தாதனால ஏதோ அவங்க இந்த கேள்வியெல்லாம் கேட்காதவங்க இந்த விஷயத்துக்கெல்லாம் உடன்படாதவங்க என்கிற மாதிரி ஆயிடுது. உண்மையில் அன்றாட நடைமுறையில் அவங்க சாதியத்துக்கு எதிராகத்தான் இருந்தாங்க.இன்று மார்க்சிஸ்ட் கட்சியோட மத்திய குழுவின் கருத்தியல் ரீதியான நிலைபாடு, வழிகாட்டுதல், தலித்களுடைய அணிச்சேர்க்கை என்பது சாதிய ரீதியான அணிச்சேர்க்கை அல்ல என்கிறது. அதை ஒடுக்கப்பட்டவருடைய அணிச்சேர்க்கையாகத்தான் கட்சி பார்க்கிறது. அதேநேரத்தில் தலித் அணிதிரட்சி மூலமாக மட்டுமே தலித் விடுதலையை எய்திவிட முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.
இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை என்பது வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெறுவதுதான். இதனால்தான் அயோத்திதாசர் பெரியார், ஜோதிராவ் பூலே, அம்பேத்கருடைய சமூகநீதிக் கருத்துக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான விடுதலை இயக்கம் உள்வாங்கி செயல்படவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல சங்பரிவாரங்களின் இந்துத்வ அணிதிரட்சிக்கு எதிரான கருத்தியலில் இவர்களது பங்களிப்பு முக்கியமானது.
ஆதவன்- சாதி மறுப்பாளர்களை ஏற்றுக்கொள்வதில் தலித்துகளுக்கு பெரிய மனத்தடை இருக்கு. சாதிய படிநிலையை உருவாக்கியது பார்யுபனர்கள்ன்னு சொன்னாலும் அதை இப்போ காப்பாற்றுகிறவர்கள் இடைநிலைசாதியர்களே என்கிறார்கள். அதனால் இடைநிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையிலிருக்கும் முரண்பாடே முக்கியமானதென்று வலியுறுத்தகிறார்கள். இடைநிலை சாதி ஆதிக்கத்தை எதிர்க்க தலித்துகளுக்கும் பார்ப்பனர்களுக்குமான கூட்டுதான் இன்றைக்கு தேவை- நேரடியான ஒடுக்குமுறையில் ஈடுபடாத பார்ப்பனர்களோடு கூட்டுசேர்வதில் தவறில்லை என்கிற கருத்தும் முன்வருகிறது. அதுக்கு வெளிப்படையான உதாரணம் உ.பி.யில் மாயாவதி நடத்தியிருக்கும் பார்யுபனமேளா. இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?
பிரளயன்: ் பார்ப்பன தலித் கூட்டணியை சில தலித் கருத்தியலாளர்களும் மாயாவதியும் தான் முன்வைக்கிறார்களேயொழிய, உயர்சாதிக்கட்சியான பி.ஜே.பி அல்ல. இங்கு தமிழகத்தில் பி.ஜே.பி என்ன செய்ய நினைக்கிறது தெரியுமா? இடைநிலைச்சாதியினரை தனது கருத்தியல் வளையத்துக்குள் கொண்டுவருகிற முயற்சியை செய்கிறார்கள். சி.பி.ராதாகிருஷ்ணனும் திருநாவுக்கரசரும் பி.ஜே.பியின் முன்னணித் தலைவர்களானது தற்செயலான நிகழ்ச்சியல்ல. இடைநிலைச்சாதியினரை மேல்நிலையாக்கம் செய்வதன் மூலமும் அவர்களுக்கு கொம்பு சீவிவிடுவதன் மூலமும் இதைச் சாதிக்க முயல்கிறார்கள். சீவப்பட்ட இடைநிலைச்சாதியின் கொம்பு யாரைக் குத்தும்? ஏற்கனவே தென்மாவட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதில் எண்ணெய் ஊற்றி குளிர் காய்கிற வேலைதான் நடக்கும்.
பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையின் நாயகர்கள் யார்? இந்த இடைநிலை சாதியினர்தானே. 96லிருந்து ஒன்பது வருடமா இந்தப் பிரச்சினை இருக்கு. இது தமிழ்நாட்டுக்கே பெரிய அவமானம். வடஇந்தியாவில் இந்த மாதிரி கிராமங்கள் இருக்கலாம் அதெல்லாம் வெளிச்சத்துக்கு வரல. ஆனந்த விகடன் பேட்டியில தலித்துகள் அதிகாரத்துக்கு வந்தா குலதெய்வத்துக்கு ஆகாதுங்கறான். ஒரு ஐயர் வந்து பூஜை பண்ணிட்டு போறதை ஒத்துக்கிறான். அவங்க மனநிலை ரொம்ப அதிர்ச்சியூட்டறதா இருக்கு. தென்மாவட்டங்களில் அதிகம். இதுக்கான எதிர்ப்பு ஒருங்கிணைந்த முயற்சியில நடக்கனும். அதுக்கு இடதுசாரி இயக்கங்கள் தயாரா இருக்காங்க. தலித் இயக்கங்கள் அப்பறம் அங்க சிவிக் முவ்மெண்ட் ஏதாவது இருக்கான்னு பார்த்து அவங்கள எப்படி கையாள்வதுன்னு முயற்சி பண்ணணும். குறிப்பா குற்ற உணர்வே இல்லாத அந்த மக்களோடு மனநிலை ரொம்ப அதிர்ச்சியூட்டறதா இருக்கு. தென்மாவட்டங்களில் தலித் அல்லாத மக்கள், தேவையில்லாம இத பெருசு படுத்தறத்தா பேசிக்கிறாங்க. இந்த பேச்செல்லாம் அபாயச் சங்கு மாதிரி இருக்கு. ஆனா இங்க ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல. அந்த கிராமங்களுக்குள்ள போகனும். அந்த கிராமங்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற தலித் மக்களுடைய நிலைமை ரொம்ப சிக்கலானது. அதை நியாயப்படுத்தற மாதிரிதான் அவங்க பேசமுடியுது. இதை பெரிய சவாலாகத்தான் நாம எடுக்கனும்.
பார்த்திபராஜா- பெரியார் தெளிவா இந்திய தேசியத்தை நிராகரிச்சாரு அதுல அவருக்கு பெரும்பாலான பங்கு உண்டு. இடதுசாரிகள் பெரியாரை கையில் எடுக்கும்போது அந்த பிரச்சனைக்கான பதில் என்ன? அதைவிட்டுட்டு பெரியாரை பார்க்க முடியுமா?
பிரளயன்: பெரியாரை தேசிய இன விடுதலைக்கான ஆளா மட்டும் பார்க்க முடியாது. பெரியார் எப்படி இன்னைக்கு உத்தரபிரதேசத்துக்கு Relevent ஆகறாரு. அது முக்கியமான விசயமில்லையா? ரொம்ப விரிந்த இடத்துல அவர் பேசறார். அதவிட ரொம்ப முக்கியமா சமூக நீதிக்கான அடித்தளத்தைத்தான் வைக்கறாரு. அதை விட்டுட்டு பெரியாரை பார்க்க முடியாது. பெரியாருடைய சாராம்சத்தைத்தான் நாம பேசறோம். அதை வெளிப்படுத்துவதற்கான பல நடமுறைகள் இருக்கு. எல்லா நடைமுறைகளையுமே, அன்றைய காலத்துல அந்த கண்ணோட்டத்துல புரிஞ்சிக்கிறது தான் சரி. அதை இன்று நடக்கற விஷயங்களோடு யாந்திரீகமா பொறுத்திப் பார்ப்பது சரியா இருக்காது. அம்பேத்கர் ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகிறார். அதுக்கு நியாயமான காரணங்களை சொல்றார். இங்கிருக்கற சுதேசிகளைவிட அவங்களைத்தான் நம்பறார். ஏன்னா சுதேசிகள் உயர் சாதியினரா இருந்தாங்க.. அப்ப அம்பேத்கருடைய சாரம்சம் என்ன? அதெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு. அந்த வெளிப்பாடுகள் அந்தந்த சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுது. அதை அந்த contextல வைத்துப் பார்க்கணும். அதை de-contextualise செய்து பார்க்கக்கூடாது.
தெலுங்கானா போராட்டதில் கம்யூனிஸ்ட்கள் மக்களை திரட்டறப்ப- அதாவது தலித்கள், தலித் அல்லாதவர்களை ஒன்றிணைக்கும்போது- அவர்கள்மீது வச்ச பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? ‘கம்யூனிஸ்ட்கள் மாட்டுக்கறி திங்கறவங்க’ என்பதுதான். தலித் அல்லாத சாதியினரிடமிருந்து கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்த இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது. அன்றைக்கு இன்றிருப்பதுபோல பண்பாட்டு அரசியல் பற்றி- Cultural Ideology பற்றி Cultureக்கு இருக்கிற Ideological role பற்றி பெரிய புரிதல் எல்லாம் இல்லைனாகூட இந்த பிரச்னைகளை அவங்க அடையாளம் கண்டிருக்காங்க. இது கேரளாவில் நடந்திருக்கு, மேற்கு வங்கத்தில் நடந்திருக்கு. பல இடங்களில் இப்படி நடந்ததுனாலதான் இன்னிக்கு மக்கள் மத்தியில் அவங்க இருக்காங்க. எல்லோரிடமும் விடை காணமுடியாத கேள்விகள் இருக்கு. ஒரு அமைப்பு மட்டுமே எல்லாவற்றுக்கும் விடை காணமுடியாது. விடை காணுகிற முயற்சிகள் இருக்கு. சருக்கல்கள் தவறுகள் நடந்தாலும் அதை திருத்திக் கொள்கின்ற ஏற்பாடுகள் இருக்கு.
பார்த்திபராஜா- கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை திட்டம்தான் வழிகாட்டும் இல்லீங்களா, தத்துவம் வழிகாட்டும் திட்டம் செயல்முறைப்படுத்தும். தஞ்சைப்பகுதிகளிலோ சாதியப் பிரச்சனைக்கு செயல் திட்டத்துல வக்கலையே. அந்த பெரிய முரண்பாடு இருக்குல்ல. அதனாலதான் இன்னிக்கு இடதுசாரிகளோட பங்குபற்றி கேள்விகள் கேட்கப்படுது. திட்டத்துல இல்லாம களத்துல மட்டும் சின்னச் சின்ன வேலைகள் செய்யறங்க என்பதுபோல..
பிரளயன்: பீகார், உபி, அங்கெல்லாம் சமூக நீதிக்கான கேள்விகள் பிரச்சனைகள் மேலெழுந்திருக்கு. லல்லுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இவர்களது வளர்ச்சியை குறிப்பிட்ட சாதிப்பிரிவுகள் அதிகாரம் பெருகிற முயற்சியாகத்தான் பார்க்கணும். சாதீய கட்சியா மட்டும் பார்க்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினர் இன்னைக்கு வரைக்கும் சமூகத்துல பின்தங்கிய பிரிவினர் ஒரு அதிகாரம் பெருகிற முயற்சிக்கு வந்திருக்காங்க. ஒரு ஜனநாயக வழியில் வந்திருக்காங்க. இந்தக் கேள்விகள் எல்லாத்தையுமே Democratic Question -ஆகத்தான் பார்க்கறோம். சமூக மக்கள் தங்களை ஆற்றல்படுத்திக் கொள்கிற முயற்சி இது. ஒருவன் தன்னை சமூகமாக முதல்ல அடையாளம் காண்பது தான்சார்ந்த சாதிமூலமாகத்தான். அதன் மூலமா பேரம் பேசுகிற உரிமையை பெற முடியுமா ஆதாயம் பெற முடியுமா என்று பார்க்கின்றான். இதுதான் சாதி அமைப்புகளோட தோற்றம்.
100 வருடங்களுக்கு முன்பிருந்த சாதியின் தன்மைகள் வேறு. இன்று பேரம்பேசுவதற்காக அமைப்பாக திரண்டிருக்கும் சாதியின் தன்மைகள் வேறு. தலைமை தடம் புரண்டு போய்விடலாம். பின்னால அணிதிரண்ட மக்களுக்கு துரோகமிழைத்தவிட்டுக்கூட போய்விடலாம். ஆனாலும் அணிசேருகின்ற சூழல் என்ன? அதிகாரம் பெறுவதற்கான முயற்சி. ஜனநாயகத்துல இது நடக்குது. இதுதான் ஜனநாயகம் அடிமட்டம்வரை போறதுக்கான அடையாளம். ஜனநாயகம்னா தங்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதற்கோ அல்லது பேரம்பேசி பெறுவதற்குமான ஒரு முயற்சிதான். ஒரு Negotiable Terrain உள்ள இருந்து செயல்படுவதுதானே… அந்த மாதிரி புரிதல் எல்லாம் இன்னைக்கு இருக்குது. ஆனாலும் இப்படி அணி திரள்கிற அந்த மக்கள் பகுதியினரின் முன்னேற்றம் எல்லோரையும் உள்ளடக்குகிற ஒரு ஜனநாயக இயக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியம். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவினரை மட்டும் அணி திரட்டியவர்கள் பிறகு பல சாதிப் பிரிவினரையும் உள்ளடக்கி திரட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுக்கிறபோது இது நடக்கிறது.
ஆந்திராவில கத்தார் எடுத்துகிட்ட மாதிரி, அவங்க மரபு கலைவடிவங்களிடமிருந்து ஒரு தேசிய இனத்தினுடைய விஷயங்களை எடுத்துகிட்டா, அந்தப் பிரச்சினைக்கு வெளில இருக்கிறவங்க அதைப் பயன்படுத்த முடியாத ஒரு கட்டம் நடக்குமில்லையா… அந்த தேசிய இனத்துட கலை வடிவங்கள் இங்க பறையை பார்ப்பனர்கள் தொடமுடியாதுதானே… அப்படித்தானே இன்னிக்கு வரைக்கும் ஒரு நிலை இருக்கு… அது இல்லாம வேறு வடிவங்களுக்குப் போகும்போது அவங்களும் வந்து சேர்ந்துக்கிறது இருக்கு… அப்போ உலகமயம் ஒரு நெருக்குதலை ஏற்படுத்தும்போது இன்னும் கூடுதலா தேசிய இன அடையாளச் சிக்கல்கள் வரும்போது ஒரு தேசிய இனக் கலைவடிவத்தை ஆக்டிவிஸ்ட் முன்னெடுக்கறது அல்லது அதை முன்வைத்து ஒரு கலாச்சார சீரழிவை எதிர்கொள்வது அப்படிங்கறது இன்னும் கூடுதலான எதிர்ப்பாக இருக்குமா?
பிரளயன்- இது இப்போதைக்கில்ல.. நம்முடைய புதிய புரிதல், அதுவும் சங்கீத் நாடக அகாடமியோட வேர்களை தேடும் முயற்சி, அதுவும் மேற்கத்தியக் கண்களுக்காக உருவான நாடக முயற்சிகளில்தான் நாம் மரவை தேட ஆரம்பித்தோம்.. தலித் கேள்விகள், தேசிய இனக் கேள்விகள் வந்தபிறகு நாம் மரபைத் தேட ஆரம்பிக்கல. IPTA( Indian Peoples Theatre Association) வுடைய ஆவணங்களை பார்த்தீங்கன்னா, எல்லா நாட்டார் கலைகளுக்கும், நாட்டார் வழக்காறுகளுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.. மகாராஷ்டிராவில் இருக்கிற பல வடிவங்களில் ‘பாவாடா’ங்கற கதைசொல்லும் பாடல் வடிவம் உண்டு. குறிப்பாக மராட்டிய மன்னன் சிவாஜியப் பற்றியே எல்லா பாடல்களும் இருக்கும்- இங்க கட்டபொம்மன் கதைப்பாடல்கள் இருக்கிற மாதிரி…
அந்த வடிவத்தை தன்வயமாக்கி இப்டா சிறப்பா பயன்படுத்துது.. எல்லா வடிவங்களுக்கும், எல்லா கலைஞர்களுக்கும் இப்டாவில் ஒரு முக்கியத்துவம் இருந்திருக்கு… பாவாடல இருக்கிற மிகப்பெரிய கலைஞர் பொதுச்செயலாளர் பொறுப்புக்கெல்லாம் வந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
கத்தார் கைக்கொண்டது தெலுங்கானா பகுதியில் ஆடுமேய்க்கிற மலைமக்களுடைய கலைவடிவம். குறிப்பாக ‘மக்கள் யுத்தக் குழுவினர்’ செல்வாக்கு பெற்ற பகுதியில் இருக்கிற மலைமக்களுடைய கலைவடிவம். அது ரொம்ப பெரிய பாதிப்பை ஏற்படுத்துது. இது தெலுங்கு தேசிய இனத்துக்கான அல்லது தெலுங்கானாவுக்கான கலைன்னு தெரியல. அங்கே எல்லா பகுதியிலும் பொதுவா இருக்கிற கலைவடிவம் வீதிநாடகம் அல்லது புர்ரகதா… அதுக்கு வரலாறுகளும் உண்டு. கிருஷ்ணதேவராயர் காலத்துல இந்து மறுமலர்ச்சி நடக்கறபோது இந்த வடிவங்கள் மூலமா எல்லாப் புராணங்களையும் மக்கள் மத்தியில பரப்புற முயற்சி நடக்குது. கத்தார் இந்த வடிவத்தை எடுக்கல. ஏனெனில் புராணக்கதைகளோடு அது அடையாளம் காணப்படுவதால அதை எடுக்கல. ஒடுக்கப்பட்ட மலைமக்களோட கலையைத்தான் அவர் எடுக்கிறார். தேசிய இனம் என்ற கேள்வியைக் கேட்டு, தேசிய இனத்திற்கான கலைவடிவத்தை தேடுவதற்காக முயற்சியை அவர் செய்யவே இல்லை. தமிழ்நாட்டில் கூத்தை தமிழ்அரங்கு என்று சிலர் சொன்னதைப்போல அவர் மலைமக்கள் வடிவத்தை தெலுங்கு அரங்கு என்று சொல்லவில்லை. இந்த பின்னணியை ரொம்ப முக்கியமா புரிஞ்சுக்கணும்.
ஆதவன்- தலித் இயக்கங்கள் பறையை விடுதலையின் அடையாளமா எடுக்கறாங்க இல்லையா… ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஒட்டுமொத்த அடையாளமாக அதைப் பார்க்க முடியுமா?
பிரளயன்: தலித் இயக்கத்துலயே இரண்டு அழுத்தங்கள் கொடுக்கறாங்க. இந்த கலைகளையெல்லாம் முன்னிறுத்தனும் என்று சிலரும் செய்யாதிங்கன்னு சிலரும் சொல்றாங்க. இப்பவும்கூட பறையடிப்பது ஒரு இழிவான செயலாகவும், பறை என்பது மேடையிலும், சபையிலும் நிகழ்த்தப்படும் கலையாக கருதப்படாதபோது… அதுக்கு எதிர்வினையாற்றுகிற வேலையைத்தான் இன்று பண்பாட்டு இயக்கங்கள் செய்கின்றன. ஒடுக்கப்பட்டோர் கலைகளை மேடையில் ஏற்றுவது அதனை மேடைக்கலையாகவே மதிப்பது என்பதைத்தான் கடந்த பத்தாண்டுகள்ல செய்தியிருக்கோம். கலைஇரவுகள் அதுக்கு பெரிய பங்கு வகிக்குது. எதிர்வினையாற்றணும்கிறது ஒரு உந்துதல்தானே தவிர , திட்டவட்டமான பெரிய அரசியல் புரிதல், பண்பாட்டு புரிதலோட நடக்கலங்கறதுதான் உண்மை.. புரிதலை நாம உருவாக்கணும். உருவாக்கத் தவறிவிட்டோம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்தமான ஒரு விஷயத்தை தமிழுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு பொதுவான கலையைச் சொல்லமுடியுமா?. அது கூத்துதான், பறைமட்டும்தான்னு சொன்னா கடுமையான எதிர்வினை வரும். இன்று ஒற்றைப் பரிமாணத்துல தமிழ்நாட்டை நாம புரிஞ்சுக்கவே முடியாது. பறைன்னு எடுத்துக்கிட்டாகூட இங்க அடிக்கற பறைவேற, சிவகங்கைல அடிக்கற பறை வேற. அவங்க செய்யற விதம் வேற, இவங்க செய்யற விதம் வேற. வட்டாரத்துக்கு வட்டாரம் மாறும். உள்ளூர் சார்ந்தது. வித்தியாசங்கள் இருக்கு. அந்த வித்தியாசங்களுக்கு இடம் கொடுக்கணும். நாம என்ன பன்றோம் புதிதா தமிழ்தேசியம் பேசும்போது, ஒரு தரப்படுத்துகிற தவறை அறியாது செய்யறோம். தமிழர்களுக்கெல்லாம் பொதுவானது என்று, பெரிய கேள்விகளையெல்லாம் மறந்துவிட்டு சுலபமாச் சொல்லிடறோம்.. சந்திக்க வேண்டிய கேள்விகள் பிரச்சினைகள் இருக்கு… தமிழனுக்கான இசை என்ன?. தமிழனுக்கான இசைன்னா எல்லாம்தான்… பாணர், விறலியர் காலத்துலருந்து வர்ற ஒரு இசையோட நீட்சியும் தொடர்ச்சியுமா இருக்கிற எல்லா வடிவங்களும்தான்
பெரியசாமி: இப்படியான இந்திய தமிழகச் சூழலில் உலகமயம் நிகழ்த்தும் குறுக்கீடு எப்படியானது?
பிரளயன்: பண்பாட்டைப் புரிஞ்சுக்கற தளமே உலகமயமாக்கல்தான். அவங்க எந்த ஒரு புதிய கண்ணோட்டங்களைக் கொண்டு வந்தாலும், அணுகுமுறையைக் கொண்டுவந்தாலும் அது ஒரு பழக்க வழக்கம் மூலமாகத்தான் வருது. இதில் எதை நாம தேர்வு செய்யறது எதை நாம விடறது எப்படி நிலைகொள்றது அப்படியெல்லாம் பாக்கறதோடு என்ன மாதிரி Resistenceஐ நாம கொடுக்கனுங்கறது முக்கியம். உலகமயமாக்கலுக்கு எதிர்வினையை- எதிர்ப்புணர்வுகளை-செயல்களை உருவாக்குவதில் நாம ரொம்ப பின்தங்கியிருக்கிறோம் எல்லாவற்றிலும் அது நம்மை விழுங்கிக்கொண்டே போகிறது.
ரொமிலா தாப்பர் Perceiving the Forest in ancient India தலைப்பில் சென்னையில் நிகழ்த்திய உரையில் ஆசிரமங்கள் தான் காட்டில் நடந்த முதல் அத்துமீறல் என்று சொன்னாங்க… பர்ணசாலைகளும், ஆசிரமங்களும் காட்டுக்குள்ள வந்தது மற்றமைக்குள்ள நடந்த முதல் அத்துமீறல்னு (Intrusion into the otherness) ன்னு சொன்னாங்க… பர்ணசாலைகளும், ஆசிரமங்களும் எப்படி அமையுது.. முனிவர்களாக இருக்கறவங்களுக்கு அரசன் தானம் கொடுத்துதான். ஏற்கனவே காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு இருப்பவனுக்கும் அங்க போறவனுக்குமான மோதல் உருவாகுது அப்ப நீதியை நிலைநாட்டுறேன்னு தன்னுடைய ஆதிக்கத்துக்குள் வராத பகுதியான வனங்களுக்கு அரசன் போறான். அத்துமீறல் தானே இது.
ஆசிரமம் என்ற பெயரில் காட்டுக்குள் இன்றும் ஆக்ரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிறுவாணி அணைக்கிட்ட வெள்ளியங்கிரி மலை ரொம்ப அமைதியான இடம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா? தெற்காசியாவில் மேற்குமலைத் தொடர்ச்சியின் கிழக்குபகுதியில ரொம்ப அபூர்வமான தாவர உயிரினங்கள்- பல்லுயிர் வளங்கள் இருக்கிற இடம் அது. அந்த இடத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் இருக்கு. இந்தப்பக்கம் பால்தினகரன் பெரிய இடத்தை பிடிச்சி கட்டி வச்சுருக்கார்… அமைதியான இடம்கிறதால இங்கே போவதில் நடுத்தர மக்களுக்கு பெரிய ஈர்ப்பிருக்கு இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய பாதகமாப் பார்க்கிறாங்க… எத்தனைப்பேருக்கு இது தெரியுது? வெள்ளியங்கிரில ஏற்கனவே இருக்கற கோயிலுக்கு ரோடு கிடையாது. ரெண்டு குச்சிய ஊனிக்கிட்டு கைடு துணையோடு நடந்து தான் போகணும். மனிதர்கள் அதிகமா புழங்காம இருப்பதால இயற்கை வளத்தை அழிக்காம, இயற்கையின் ஒரு பகுதியா அந்த கோயில் இருந்துட்டு வருது. ஆனால் ஈஷா சென்டர் வந்த பிறகு கார்ல குறிப்பிட்ட தூரம் போகலாம். அப்புறம் சுத்தி கட்டிடங்கள் வந்துக்கிட்டே இருக்கப்போகுது.. அதைச்சுத்தி வியபாரம் உருவாகப் போகுது. முக்கியமான பல்லுயிர் வளம், தாவரவளம் நிறைந்த, இயற்கைச்சூழல் மிகப்பெரும் அபாயத்திற்கு உள்ளாகியிருக்கு. ஆன்மிகம்-ஆத்மா- அமைதி- மனஅமைதி இதெல்லாம் இன்று சந்தைச்சரக்கு. நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாகத்தான் இதையும் பார்க்கவேண்டும். இதையெல்லாம் பற்றிய கேள்விகளை உருவாக்கி கொள்வதில்லை. நம்முடைய விசாரம் வேறாகவே இருக்கு.
உலகமயம் கடந்த பத்தாண்டுகளாக அதிவேகமாக முன்னேறி வருது. அதற்கு ஏதுவான தொழில்நுட்ப வளர்ச்சி, இன்டர்நெட் வழியா உடனடியாய் கிடைக்கிற புதியதகவல்கள்- தகவல் தொடர்பு, முன்பைவிட தொழில்நுட்பங்கள் உலகநாடுகளுக்கு உடனடியாக கிடைப்பது ஆகியவற்றையும் நாம் புரிந்து கொள்ளணும். ஆனால் உலகமயமாக்கலின் பண்பாட்டு முகமானது இந்தியாவிலும் பலநாடுகளிலும் எதிர்வினைகளை உருவாக்குது. அது ஒரு பண்பாட்டு தேசியத்தை கிளப்பி சிக்கலாக்குது. அதுவும் அமெரிக்காவிலேயே போய் வாழற பல இந்தியர்கள் - எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தங்களுக்கு ஒரு அடையாளம் வேணும்னு சொல்லி தங்களை இந்துவா அடையாளம் காணுகிற ஒரு தன்மை இருக்கு. இந்தச் சூழ்நிலையில் உலகமயப் பண்பாட்டக்கு எதிர்வினையாக பண்பாட்டு தேசியத்தை உருவாக்கும்போது பலவித அடையாளப் பிரச்னைகளை கிளப்பிவிடுது. பிரதேச அடையாளங்களுக்கு ஒரு புத்துருவாக்கம், சாதிய அடையாளங்கள் முன்னைவிட அதிகமா கூர்மையடையறது, குழு அடையாளங்கள், இனம் சார்ந்த அடையாளங்கள், எல்லாமே ஒரு எதிர்வினையா மேலெழும்புது. இதுதான் இன்னிக்கு பண்பாட்டு இயக்கத்தோட தலையாய பிரச்னையாயிருக்கு.
உலகமயமாக்கலுடைய இன்றைய நவீன நுகர்வியத்துக்கு ஒரு செக்யூலர் முகம் உண்டு. உலகமயமாக்கல் ‘நுகர்வாளர்’னு ஒரு தட்டில் எல்லாரையும் நிறுத்தினாலும் இந்தியச்சூழலில் வேறுவிதமா, மேல்நிலையாக்கத்துடைய உந்துசக்தியா வேலை செய்துக்கிட்டிருக்கு. இந்துத்துவ திரட்சிக்கு ஒரு விதத்துல உதவி செய்யுது. அன்னிய விசயங்கள் வரும்போது மக்கள் மத்தியில ஒரு பயம் ஏற்படுது. அதனால இயல்பாகவே ஒரு Resistence கொடுக்கனும்னு நினைக்கிறாங்க.. இந்துத்துவாவை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஒரு மாற்று தேசியத்தை- பண்பாட்டு தேசியத்தை, முன்வைக்கிறபோது மக்கள் அதை நோக்கி செல்றாங்க. அதுவும் நகர்மயமாக்கப்பட்ட- நுகர்வு கலாச்சாரம் அதிகமா இருக்கிற பகுதிகளில் மக்கள் இந்த பண்பாட்டுத் தேசியங்களுக்கு சாய்ந்து போகிறார்கள். .
எல்லாவற்றையும் விட இன்றைய மிகப்பெரிய சவால், மீடியாக்கள் வழியாக வீட்டின் வரவேற்பறையில் உலகமயம் முன்வைக்கும் மற்றமை (Otherness) குறித்த தாழ்வான கண்ணோட்டம்தான். மற்றமையை குறைத்து மதிப்பிடுவது, அப்புறம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது, தன்னையே பிரித்துக்கொள்வது, உயர்த்திக் கொள்வதுங்கிற மனோபாவத்தை அது உருவாக்குகிறது. இந்தியச்சூழலில் ஒவ்வொருவனும் தனது சாதிப்பெருமிதத்தை கூர்தீட்டிக் கொள்வதும் பிற சாதியை இழிவாக பார்ப்பதும் நமது பண்பாட்டில் இருந்துவருகிற ஒன்று . இது கெட்டிப்படுவதற்கு இந்த மனோபாவம் உதவுகிறது. உலகமயமாக்கல் எல்லைகளையெல்லாம் உடைக்குது. ஆனால் அது மக்களை ஒன்றிணைப்பதற்கோ தேசங்களை ஒன்றிணைப்பதற்கோ எல்லைகளை உடைக்கவில்லை. எல்லை வகுத்துக் கொள்கிற உரிமையை நம்மிடமிருந்து பறிப்பதற்காகவே அது எல்லைகளை உடைக்கிறது. தேசக்கோடுகளை உலகமயம் உடைக்குதுன்னா எல்லாத்தேசங்களையும் பன்னாட்டு மூலதனங்களின் franchiseயாக மாற்ற அது உடைக்கிறது. உலகமயம் வேறு, தேசங்கள் தாண்டி எல்லைகள் தாண்டி மனிதர்களுக்குள்ளே ஒரு நேசத்தை ஏற்படுத்துகின்ற சர்வதேசியம் வேறு.
Exclusionஐ முன்வைக்கிற பண்பாட்டு தேசியத்தையும் உலகமயமாக்கலின் பண்பாட்டு முகத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் நமக்கு எதிரே உள்ள சவால். அது மிகவும் சுலபமான வழிமுறையாகவும் இல்லை. ஒவ்வொரு இடத்துக்கு இடம் மாறும். ஆனால் எதை நாம் அடிப்படையா வச்சிக்கினும்னா, தலித் கேள்விகளிலிருந்து- சிறுபான்மை இனம், சிறுபான்மை மொழி, சிறுபான்மை மதம், என எல்லாவற்றுக்கும் உரிய இடத்தை நிராகரிக்கிற - மனிதனை பிரிப்பதற்கு எதிரான ஒரு நிலைபாடுதான் நமது பண்பாட்டு வெளிப்பாடா இருக்கணும். அவங்க Exclusionஐ வச்சா நாம inclusionஐ வைக்கணும். அதாவது எல்லாவற்றையும் உள்ளடக்குவது. இந்த தேசம் எல்லாருக்குமான இடம்-எல்லோரும் சமமானவர்கள்-என்று எல்லோரையும் உள்ளடக்குவது. எந்த சாதியா இருந்தாலும், எந்த மதமா இருந்தாலும், எந்த இனமா இருந்தாலும், இந்த தேசம், பிரதேசம், ஊர், தெருவில் எல்லோருக்கும் அவரவருக்குரிய இடம் உண்டு. inclusion என்கிற இந்த கண்ணோட்டம்தான் நாம் உயர்த்திப்பிடிப்பதாய் இருக்கவேண்டும்.
அடுத்து, உலகமயமாக்கலுக்கான எதிர்ப்பு பண்பாட்டு ரீதியா வெடிக்காம, சிலநேரங்கள்ல வேறவேற ரூபங்களா வெடிக்குது. உதாரணமா, கேரளாவில் தேங்காயெண்ணெயை பாதுகாக்க பாமாயிலுக்கு எதிராக நடந்த போராட்டம், கர்நாடகாவில் பதனீர் தடைக்கெதிரான போராட்டம்- இதெல்லாம் பண்பாட்டு தளத்திலயும் பொருளாதார தளத்திலயும் சேர்ந்து வெடிக்கிற விசயம். உலகமயமாக்கலுக்கு எதிரானதையும் மேற்கத்திய பங்களிப்புகளுக்கு எதிரானதையும் இனங்காண தெரிய வேண்டும். நாம் வறட்டுத் தேசியவாதிகளல்ல. மேற்குநாடுகளிலிருந்து அறிவொளியுகம் கொடுத்த பல நவீன சிந்தனைகள் நம்மிடம் வந்திருக்கு. சமத்துவம்கிற கோட்பாடே பிரெஞ்ச் புரட்சியினுடைய ஒரு முழக்கம் தான். சமத்துவம்கிறதைத்தான் இன்னிக்கு பல விசயங்கள்ல பேசிக்கொண்டிருக்கிறோம். சமூகநீதியே சமத்துவத்திலிருந்து வருவதுதான். கடந்த காலத்தில ஏற்பட்ட இழப்புகளை இந்தக் காலத்துல ஈடுகட்டறதுக்கான முயற்சிகள்தான் சமூக நீதிக்கோரிக்கைகள், இடஒதுக்கீடு எல்லாம். இதை நமக்கு இனங்காணத் தெரியணும்… பண்பாட்டு தேசியத்துக்கு இவற்றை இனங்காணத் தெரியாது. எல்லாவற்றையும் அது நிராகரிக்குது.
இன்று நாம் எழுதும் சிறுகதை நாவல் எதார்த்தவாதம்னு கலை இலக்கியத்துக்கு மேற்கோட பங்களிப்பு நிறைய இருக்கு. உரைநடை, வசனக்கலை நம்மகிட்ட இருந்திருக்கு. ஆனா நம்ம கதை மாந்தர்கள் யாரா இருந்திருக்காங்க..? ரொம்ப உச்சபட்சமா போனா ராஜாவைத் தாண்டி கோவலன் மாதிரி ஒரு வணிகனாயிருப்பான். கோமானா இருப்பான். நம் இலக்கியத்துல பாடுபொருளாகவோ விசாரிப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லாத சாதாரண மனிதர்கள் கதைமாந்தர்களா இருப்பதும், அந்த சாமானியரின் பாடுகளை பாடுபொருளா சித்தரிப்பதும் ஐரோப்பாவில் தோன்றிய எதார்த்தவாதத்தின் கொடைதான். இதுமாதிரியான மேற்கின் பங்களிப்புகளை விமர்சனப்பூர்வமாக புரிந்து கொள்ளவேண்டும்.
சமூகங்களில் இருக்கிற- புராதன சமூகங்களில் இருக்கிற நல்ல அம்சங்களைக் கூட - அதாவது எல்லாவற்றையும் பொதுவாய் வைத்திருக்கிற நிலையை- ஒரு தனியாருக்கு மாற்றுகிறதுக்கான நியாயங்களை உலகமயம் வழங்குகிறது. மக்கள் சமூகம் பொதுவில் அனுபவிக்கிற எல்லா ஆதாரங்களையும் தனியார்மயமாக்குகிற முயற்சியைத்தான் உலகமயம் ஊக்குவிக்குது. நாம் ஒரு காலத்தில் தண்ணீர் என்பதை பொதுவாக அனபவித்து வந்தோம். அது சரக்காக விற்பனைப் பொருளாக மாறும்னு 15 வருசத்துக்கு முன்னாடி யாரும் கற்பனைகூட பண்ணினது கிடையாது. ஆனா இன்னிக்கு ஆயிருச்சு. எதுவாயிருந்தாலும் காசு கொடுத்துதான் பெறணும் என்பதை நியாயப்படுத்தி எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவதுதான் உலகமயத்தோட பொருளாதார இலக்கு. அதற்கான மனநிலையையும் அதற்கான பழக்கவழக்கங்களையும் அதற்கான சாத்தியப்பாடுகளையும் உருவாக்குவதுதான் அதனுடைய பண்பாட்டு முகம்.
உதாரணமா, கிரெடிட் கார்டு. எளிமையான வசதியான விசயமா தெரியுது. ஆனா அதுல ஒரு பெரிய பாலிடிக்ஸ் இருக்கு. எகானமி இருக்கு. ஒரு பொலிடிகல் எகானமியே இருக்கு. ஒரு பொருளை வாங்கறே, பணம் கொடுக்கிறே. பொருள் 180 ரூபாய்னா அதை கொடுக்கறே. அந்த தொகைக்கு வரி, சர்வீஸ் சார்ஜ் கட்டறே. வட்டி கொடுக்கறே. அப்புறம், ஒரு பொருளை தேவை அடிப்படையில வாங்கறதுன்னு இல்லாம, புதுசா வந்திருக்கு புது மோஸ்தர்ல வந்திருக்குங்கிறதுக்காக வாங்குகிற பழக்கமா மாறிடுது. நீங்க ஒரு டிவி வச்சிருந்தாலும் புதுமாடல்ல பிளாட் டிவி வந்த பிறகு ஒரு போதாமையை உணர்றீங்க. ஏற்கனவே நம்மகிட்ட இருக்கு. தேவையில்கூட மாற்றம் ஏற்படல. மற்றவங்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டறதுக்காக புதுசா வாங்கறது, வாங்கிக் குவிக்கிறது- இதுக்கெல்லாம் கிரெடிட் கார்டு உந்துசக்திய இருக்கு. முன்னயெல்லாம் பணமில்லன்னா எதையும் வாங்கமாட்டீங்க. கார்டு இருக்கறதால எப்பவும் வாங்கிடுறீங்க. கிரெடிட் கார்டும் மனிதனை தரம் பிரிக்கிறது. கிரெடிட் கார்டு யாருக்கு?. சம்பளக்காரனுக்குத்தான். ஒருகூலி விவசாயி ஏன் இந்த டார்கெட்டுக்குள் வரவேயில்ல?
வலுவான நுகர்வோன் (Volatile consumer) யாரோ அவங்களுக்குத்தான் அது. நாங்க வேறு வர்க்கம்… வேறு மனிதர்கள்… வேறு உலகம்.. என்று சொல்கிற ஒரு அடையாள அட்டை மாதிரி கிரெடிட் கார்டு ஒரு குறியீடாகவே இருக்கு. புதிய சந்தைப் பொருளாதாரத்துக்கான ஒரு முக்கியமான அறிகுறி இது. இதையெல்லாம் நாம் நிராகரிக்கணும். நாம் ஒருத்தர் நிராகரிச்சா ஒழிச்சிட முடியாது. உண்மைதான். உலகமயமாக்கலுக்கு எதிரா சந்தைப்பொருளாதாரத்துக்கு எதிரா அரசியல் பேசற நீங்க அந்த சந்தைப் பொருளாதாரத்தோட சின்னங்களை அணிந்திருக்கக்கூடாது. பண்பாட்டு ஊழியர்கள் மத்தியில் இதைப்பற்றியெல்லாம் புரிதல் இருக்கணும். இதை ஒரு நவீன தொழில்நுட்பம்னு நினைக்கிறாங்க. எங்கேயோ நீங்க வாங்கறதுக்கு எங்கேயோ எவனோ பணம் கொடுக்கிறான். உங்க கார்டை Read பண்றதில் உங்க கார்டை burn பண்ணும்போது உங்க கணக்கு நேர்செய்யப்படறதுல ஒரு தொழில்நுட்பம் இருக்கு தான். ஆனா அந்தத் தொழில்நுட்பம் எதுக்கு?
ஒரு காலத்தில் இம்மாதிரியான கார்டுகள் இருந்தது. அப்ப அதுக்கு அர்த்தம் வேறு. ஊர்ஊரா போறவங்க பாதுகாப்புக்காக- இன்னொரு இடத்துல பயன்படுத்தறதுக்காக அப்ப இருந்தது. ஆனா இப்ப முழுக்கமுழுக்க திட்டமிட்டு நீ காசு கொடுத்து எதையும் வாங்காதே… என் பொருள் விற்பனைக்கு வரும் போது உன்கிட்ட காசில்லேன்னாலும் பரவாயில்ல..என்று தூண்டுவது. இதனால், தேவை கருதி வாங்கும் நிலை மாறி வாங்கறது ஒரு அனிச்சை செயலாயிடுது. சரி, ஏன் இந்த கார்டு ஒருதரப்புக்கு மட்டும்.. கொடேன் எல்லாருக்கும்… விவசாயிகள் கிரெடிட் கார்டுலயே விவசாயம் பார்க்கட்டும்… கேட்கிறதுக்கு இது கேலியா இருக்கும். ஆனா Economic seclusion க்காக இதைப் பண்றாங்க. எப்பவுமே ஒரு சமூகத்துல இது நடக்கும். பொருளாதார ரீதியா வசதி படைச்சவங்க, தங்களோட வசதிக்கேற்ற மாதிரி தங்களுக்கான தனித்த ஒரு அடையாளத்தை பேணுவார்கள். மாதச்சம்பளக்காரர்களில் இருக்கும் middle income group, lower income group கூட இப்ப கிரெடிட் கார்டுக்குள்ள வந்துருச்சு. இதுக்கு மாற்றா, நாம இன்னொரு கிரெடிட் கார்டையா செய்யப்போறோம்? அது அல்ல. இது ஒரு மனநிலையை உருவாக்கிக்கிட்டே இருக்கு. ஒரு விசயத்தை- ஒரு மதிப்பீட்டை நியாயப்படுத்திக்கிட்டே இருக்குது. இந்த மதிப்பீடுகளுக்கு எதிரா நீங்க போராடும்போது இந்த மாதிரியான சின்னங்களையும் அடையாளங்களையும் கேள்விக்குள்ளாக்கணும். சிறிய அளவிலாவது இது நடக்கணும். அது ஒரு முக்கியமான விசயம்.
பண்பாட்டு தேசியமா வந்திருக்கிற இந்துத்வாவுக்கு 70, 80 வருட பின்னணி இருந்தாலுங்கூட இந்த 20 வருட வளர்ச்சி மிக முக்கியமானது. 1981 தேர்தல்ல 2 சீட் வாங்கின பி.ஜே.பி, 90 ல் 97 ஆகி, 96ல் 13 நாள் ஆட்சியில் இருந்து 98ல் ஆட்சியையே பிடிச்சிட்டுது. அவங்க என்ன செய்தாங்க? இந்து அடையாளத்தை முன்னிறுத்தி இந்துத்வ அணிதிரட்டலை ஆரம்பிக்கிறாங்க. இந்த அணிதிரட்சியை கேள்விக்குள்ளாக்குகிற எதிர் நிகழ்வாத்தான் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை கொண்டு வந்தார். இருந்தாலும் மத விசயமாக இதுவரையிலும் இல்லாத பிரச்னையை பெரிய அளவில் அரசியல்ரீதியா எதிர்கொள்ளும்போது அதுக்கான வலுவான தத்துவார்த்த ஆயுதம் நம்மிடம் இல்லை. எது வகுப்புவாத சொல்லாடல் , எது மதச்சார்பின்மைக்கான சொல்லாடல் என்று அடையாளம் காணமுடியாத குழப்பம் நம்மகிட்ட ரொம்பகாலமா இருக்கு. பி.ஜே.பி ஆட்சியில் செக்யூலர் என்ற வார்த்தை உச்சரிக்க முடியாதபடிக்கு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டது. அது ஒரு கெட்டவார்த்தை போல பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு அவங்களுக்கு கருத்துரீதியா செல்வாக்கிருந்தது. அரசியல்ரீதியா இப்ப பலவீனமடைஞ்சிருந்தாலும் இன்னிக்கும் பண்பாட்டுத்தளத்தில் அவங்க வலுவாகத்தான் இருக்காங்க. அவங்களை நாம குறைச்சு மதிப்பிட்டுடக் கூடாது. ரொம் எச்சரிக்கையா செயல்பட வேண்டிய காலகட்டம் இது.
சிவகுமார்- சமயச்சார்பின்மைக்கான சொல்லாடல் எது வகுப்புவாதத்துக்கான சொல்லாடல் எதுன்னு விளக்கலாமே..
ஒரு ஒற்றை அடையாளத்தை வைத்து அதை முதன்மைப்படுத்தி அவர்களுக்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த அச்சுறுத்தலுக்கு காரணமா இன்னொரு அடையாளத்தை நிறுத்தவது. இன்னொருத்தனுக்கு ஒரு அடையாளத்தை வழங்கி அவனை குரோதமா பார்க்கிறது… மதக்குரோதம், சாதிக்குரோதமெல்லாம் நம்ம மனசிலயும் நடைமுறையிலும் சிந்தனையிலும் காலங்காலமா ஊறியிருக்கு. இதுநாள் வரைக்கும் அதை யாரும் அரசியல்படுத்தல. அதை அரசியல் அறுவடை பண்றதுக்குத்தான் இந்துத்வா முயற்சி செய்யுது. அதுக்காக, நம்ம மனசுக்குள்ள இருக்கிற விசயங்களை- ஒவ்வொரு மனிதனுடைய அகநிலையில இருக்கிற- Subjectivity -யை தொட ஆரம்பிக்கிறாங்க. இதனால என்ன ஆகுதுன்னா நான் என்னை என்னன்னு சொல்லிக்கறது என்கிற கேள்வி எழும்புது பலரிடமும். முக்கியமான முற்போக்கான ஓவியர் ஒருவர், ‘காஞ்சா அய்லய்யாவிலிருந்து ரொமிலா தாப்பர் வரை பலரும் இந்துங்கிற வார்த்தையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…அப்ப நான் என்னை என்னன்னு சொல்லிக்கறது..’ ன்னு கேட்கிறார். என் மதத்துக்கு எவ்வளவு தப்பான பேர், என்னை என்னன்னு சொல்லிக்க முடியாத குழப்பத்தில ஆழ்த்திட்டாங்களேன்னு வருத்தப்படாம, ஏற்கனவே இருக்கிற பேரை பறிக்கிறீங்களேன்னு வருத்தப்படறார்.
பார்த்திபராஜா: ஒரு அடையாளத்துக்குத்தான் இங்கே முக்கியத்துவம். இது இல்லேன்னா வேற என்ன அடையாளம்?
பிரளயன்: நம்ம அடையாளத்தை யார் எடுத்திட்டுப் போயிட்டாங்கன்னு கோபம் வராம, இப்ப இருக்கிற அடையாளத்தை ஏன் பறிக்கிறீங்கன்னு கோபப்படறாங்க. மேலோட்டத்தில் சாதாரணமா தெரிஞ்சாலும் இது ரொம்ப ஆழமான பிரச்னை. உதாரணமா, நம்மூர்ல நம்ம சமூகத்துல ஒரு மனிதனை மதத்தால் அடையாளப்படுத்தறது இல்ல. ஒரு கிராம சமூகத்தில், நாங்கள்லாம் இந்துங்க- அவரு முஸ்லிம்னு சொல்றதில்ல. அவர் நாயக்கர்… அவர் முதலியார்… நாங்க வன்னியர்… இவர் மலையாளி… அவர் சாயபு.. அவர் கிறிஸ்துவர்.. என்று தான் அடையாளப்படுத்தப்படறாங்க. பிறமதங்களோ அல்லது இன்னொரு தேசிய இனமோ ஒரு சாதியத்தின் நீட்சியாகத்தான் பார்க்கப்படுது. இப்படி சொல்ற பழக்கந்தான் மிக வலுவா இருக்கு. இந்த அடையாளத்துக்குப் பதிலாகத்தான் இந்துங்குற அடையாளத்தை கொடுக்கறதுக்கு முயற்சி நடக்குது. அது பல இடத்துல எடுபடல. ஆனா அந்த ஆபத்து இருந்துகிட்டுத்தான் இருக்கு. இந்த அடையாளங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுது. தன்னை, இன்னொருவரை, அடையாளப்படுத்துவது சாதியா இருக்கலாம் அல்லது ஊர்க்காரனா பார்க்கலாம். இப்படியெல்லாம் அடையாளப்படுத்துற எந்த இடத்திலேயும் இந்துங்க-முஸ்லீம்ங்கறது வர்றதே இல்ல. அடிப்படையா இருக்கிற இதுலதான் இந்துத்துவாவாதிகள் Intrude பன்றாங்க. இதை எப்படி நீங்க எதிர்கொள்ளப்போறீங்க? ஒவ்வொரு மனிதனுக்கும் பல்விதமான அடையாளங்கள் (Multiple identities) உண்டு. ஒற்றை அடையாளம் மட்டுமே இருப்பதில்லை. இந்த பல்வித அடையாளங்கடள மாறிக் கொண்டுமிருக்கும்.
உள்ளூர் சமூகங்கள், வட்டார குணாம்சங்களை முன்னெடுக்கனும்னு நாம் சொல்றபோது அதை மீட்டுருவாக்கமா என்கின்றனர் சிலர். இது மீட்டுருவாக்கம் கிடையாது எதிர்ப்புணர்வுதான். இந்துத்துவம் பெருந்தேசியம் பேசும்போது வட்டார தேசியம் பேசவேண்டியிருக்கு. வட்டார தேசியம் பேசும் போதே சில நேரத்துல பெருந்தேசியம் பேசவேண்டியிருக்கும். ஏன்னா அதனுடைய நோக்கம் எல்லாரையும் உள்ளடக்குகிற தன்மையில் இல்லை. ஒருத்தர பிரிச்சி வைக்குற தன்மையில இருக்கு. இம்மாதிரியான சொல்லாடல்கள் பற்றி ஒரு ஆழமான பார்வை தேவை.
பி.ஜே.பி ங்கிற கட்சியை தனிமைப்படுத்த தெரிந்த அளவிற்கு இந்துத்துவ சொல்லாடலைத் தனிமைப்படுத்த தெரியல. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் செய்யறத, ஒரு பார்யுபனன் அல்லது மேல்சாதிக்காரன் முன்னின்று செய்கிற விசயங்களை சந்தேகப்பட்டு அதை தனிமைப்படுத்த தெரிஞ்சிக்கிட்டிருக்கோம். ஆனால் இந்த அமைப்புகள் இல்லாம இந்துத்துவாவின் சொல்லாடல் ஊடுருவும்போது நாம அதை கண்டுக்காம விட்டுடறோம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்றதும் பிரச்சினை இருக்குனும்னு சந்தேகத்தோட பார்க்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் பேர் வச்சிக்காம ஏதாவது ஒரு சொல்லாடல் வந்தா நம்மால அதை அடையாளங்கண்டுபிடிக்க முடியாம போயிடுது.
ஆதவன்- அப்படி ஒரு சொல்லாடலை குறிப்பா சொல்லுங்களேன்?
சாதி இல்ல, சாதி இல்லன்னு சொல்றாங்க, ஆனா பள்ளிக்கூடத்துக்கு போனாதான் சாதி கேக்கிறான். அதுக்கு முன்னாடி எனக்கு சாதியே தெரியாதுங்கங்கிற கருத்தை நாம் உள்பட நிறைய பேர் உள்வாங்கி பேசிக்கிட்டிருக்கோம். சாதி மறுப்புக்கான ஒரு நோக்கம் இந்த கருத்துல இருக்குற மாதிரி தெரியுது. இது இயல்பாக சாதி எதிர்ப்புல இருந்து எழும் கேள்வி அல்ல. குறிப்பாக சமூகத்துல சாதி இல்ல, பள்ளிக்கூடத்துலதான் சாதி கேக்கிறாங்கிறதுல திட்டவட்டமான ஒரு நோக்கம் இருக்கு. சாதிய வலியுறுத்துறதுக்கும் நியாயப்படுத்துறதுக்குமா பள்ளியில சாதி கேக்குறான்? நூற்றாண்டு காலமா நடந்த சமூகநீதி போராட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அடைந்த இடஓதுக்கீட்டை சலுகையை பெறுவதற்கு ஒருவன் தகுதி உடையவனா என்று சோதிக்கத்தான் பள்ளியில் சாதி கேட்கப்படுகிறது. நீ சாதியை மதத்தை சொல்லனுங்கிற கட்டாயம் இல்லை. Nationality நிச்சயம் சொல்லியாகனும் ஆனா யாருமே அப்படி சொல்றதில்லை.
மதத்தை கேக்குறாங்கன்னு மதத்தை சொல்லிடறாங்க. பள்ளிக்கூடத்துலத்தான் மதத்தை கேக்குறாங்க-அதுக்கு முன்னாடி மதம்னா என்னான்னு தெரியாம இருந்தேன் என்று ஏன் யாரும் பிரச்சினை பண்றதில்லை? இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்த ஆர்.எஸ்.எஸ் சிந்தனைப் பண்ணையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இக்கருத்தை எல்லோரும் உள்வாங்கி திருப்பி சொல்றாங்க. உண்மையை புரிஞ்சிக்காம இந்த கருத்துக்கள் யாருக்கு ஆதரவானவை என்று அடையாளம் காண தெரிவதில்லை. ஏதோ சாதிக்கு எதிரா பேசறதா நினைச்சிகிட்டு பள்ளிக்கூடத்துலதான் சாதி கேக்கிறான்னு நாமும் சொல்றோம். இம்மாதிரியான அகநிலை சார்ந்த விஷயங்களை அரசியலாக்கி செயல்படறவங்களுக்கு இருக்கிற தெளிவு, தலித்துகளுக்கு ஆதரவான அல்லது எதிரான கருத்துக்கள் என்பதில் தலித் இயக்கங்களுக்கு இருக்கிற தெளிவு, பெண்ணிய இயக்கத்தில் அவர்களுக்கு ஆதரவான- எதிரான சொல்லாடல்கள் பற்றி அவர்களுக்கு இருக்கிற தெளிவு, தலித்துகள் பெண்கள் ஒடுக்கப்பட்டோர் என எல்லோருக்குமான பொது இயக்கத்தின் ஊழியர்கள் மத்தியில் அந்த மாதிரி தெளிவுகள் இல்லை. ஏன்னா அகநிலை சார்ந்ததா இல்லாதவரைக்கும் இந்த தெளிவு வரப்போறதில்லை.
யோகா, ஆழ்நிலை தியானம் பற்றிய சொல்லாடலையும் இந்துத்துவாவின் சொல்லாடலாக பார்க்கலாமா?
யோகா என்பது உடல் பற்றிய ஒரு அறிவியல். Physical fitness, physical health -க்கான ஒரு முயற்சி. நாங்க நடிப்பு பயிற்சிக்காக காற்று பயிற்சி, முதுகெலும்பு பயிற்சி - வஜ்ராஸனத்திலிருந்து செய்யறோம். அப்ப காற்றையும் சுவாசத்தையும் சப்தத்தையும் சேர்க்கிற ஒரு சொல்லா ‘ஓம்’மை பயன்படுத்துவோம். ஓம்மை இந்துமத சொல்லாக கருதி சொல்லத் தயங்குபவர்களுக்கு ஹ¤… என்று சொல்லை பயன்படுத்த சொல்வோம். இரண்டுமே சரியான சப்தம்தான். ஹ¤ ங்கிறது இஸ்லாத்துல புனிதமான சொல் என்கிறார்கள். இஸ்லாம்ல தொழுகையின் போது உட்காருவது எழுந்திருப்பது கழுத்தைத் திருப்புவது எல்லாமே உடலைப் பேணும் பயிற்சிகள் தான். இந்த பயிற்சிகள் எல்லா மதத்திலயும் இருக்கு. இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமல்ல. ஆனா அவற்றுக்கு இந்து மதச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது. இந்து அணி திரட்சி முழுக்க முழுக்க பொய்யையும் புனை சுருட்டுகளையும் நம்பி இருப்பது. என்ன தான் இருந்தாலும் ஓரளவிற்கு மேல் அறிவியல் பூர்வமான ஒரு விசயத்தை தன்வயமாக்குவது அவர்களுக்கு சாத்தியமில்லை. யோகாவுக்கு பௌத்தத்தோட வேர் இருக்கு. தற்காப்புக்கலையின் (Martial Art) ஊற்றுக்கண் பௌத்தம்தான். வைதீக மரபா அவைதீக மரபா யார் இதையெல்லாம் கண்டுபிடித்தார்கள்? உடலை வருத்தி உழைக்காதவர்கள் எப்படி உடலுடைய நுட்பங்களை கண்டுபிடித்தார்கள்னு ஆழமாப்போனா பொருள்முதல்வாதமாகிடும். ஒரு Spiritual தளத்திலிருந்து அறிவு சார்ந்த தளத்திற்கு போய் நின்றிடும்.
புத்தகச்சந்தைகளில் அதிகமா விற்கப்படுகிற புத்தகம் சுகபோகானந்தாவுடைய மனசே ரிலாக்ஸ் பிளீஸ். அன்றாட ஜீவனத்துக்கு அல்லாட வேண்டியில்லாத பாதுகாப்பான சம்பளக்காரர்களாக உள்ள நடுத்தர - உயர் நடுத்தர வர்க்கத்துடைய பிரச்சினைகள் வேறாக இருக்கு. போட்டியில் ஏற்படும் இறுக்கங்கள் - அவற்றிலிருந்து தளர்ச்சியடைய வேண்டியிருக்கு. ஏதோவொரு நிம்மதியை தேடுறாங்க. உணவு உடை அதெல்லாம் முடிந்துபோய்விட்டது. பிளாட், கார் வாங்கியாச்சு அவர்களுக்கு இருப்பில் ஏற்படுகிற நெருக்கடி, வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுற முயற்சி, அர்த்தமற்று வாழ்கிறோமா என்கிற உளைச்சல் இதுதான் ஆன்மீக தேடலுக்கு வழிவகுக்குது. அப்படியானவர்களின் மனசை வருடிக்கொடுக்கிற மாதிரி, பிமீணீறீ பண்றமாதிரி பலபேர் பேசறாங்க, அப்படி பேசி ஆன்மிகத்தை கொடுக்கிறவங்கதான் இன்னைக்கி பெரிய சாமியார்கள்.
Spirituality Shop. Spirituality Departmental store, Spirutuality Super market என்று பல கடைகள் இருக்கு. அங்கு Spirituality ஒரு விற்பனை சரக்காயிடுச்சி. வீட்டுக்குள்ளேயே எல்லாம் தேட முடியாது. ஒரு நல்ல கடையை- விற்பனையாளனைத் தேடுகிறான். சாமியார்கள் சைக்ரியாடிஸ்ட் வேலையை செய்யறாங்க. உதாரணத்துக்கு ஜக்கி வாசுதேவ் சொல்றது - நீங்க எப்பவுமே ரிலாக்ஸ் பண்ணனும், அது உங்க உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும். ரிலாக்ஸ் பண்ண நீங்க கத்துக்கணும். ரிலாக்ஸ் பண்றத்துக்கு நேரம் காலம் கிடையாது. கர்மங்களை செய்துகொண்டிருக்கும் போதே யோக நிலைக்கு போவதெப்படி (கர்மயோகம் வேறு) , வேலை செய்துகொண்டிருக்கும்போதே எப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கிறது என்றெல்