Archive for April, 2007

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 504.26.07

பார்த்திபராஜா: ஏதோவொரு வகையில் அறிவொளி இயக்கம் அரசாங்கத் திட்டம்தானே. நோக்கம் வேறாக இருந்தாலும் அரசாங்க திட்டமாக அது மாறியதால் வீதி நாடகம் நீர்த்துப் போவதற்கான தொடக்கம் அறிவொளி இயக்கத்தில் இருப்பதாக சொல்லமுடியுமா?

பிரளயன்: அறிவொளி இயக்கம் அரசாங்கத் திட்டமாக மாறல. அது அரசாங்கத் திட்டமாகவேதான் ஆரம்பித்தது.மக்களுக்கு கல்வி அறிவு தரணும்கிற உந்துதலில் வரலை. சர்வதேச அரங்கில் தன்னை வளர்ந்த நாடாக காட்டிக்கொள்ள நாட்டின் எழுத்தறிவுசதவீதம் இவ்வளவு, பிரசவகாலத்தில் தாய்மார்கள் இறப்புவிகிதம் இவ்வளவு, பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் எத்தனை உயிரோடு இருக்கிறது என்பது போன்ற சர்வதேச அளவீடுகள்படி இந்தியாவும் தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறது. இம்மாதிரியான சமூக அடிப்படை அறிகுறிகளை உயர்த்துவதற்கு உலகவங்கி நிதி இருக்கு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவில் வயதுவந்தோருக்கு எழுத்தறிவு தருவதற்கு அறிவொளி இயக்கம் வருகிறது. அரசு மட்டும் அதை தனியாக செய்யமுடியாது. மக்கள் அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள், அறிவியல் இயக்கம் எல்லாம் சேர்ந்து செய்தால்தான் இது சாத்தியம். இதற்காக அரசு தேசிய எழுத்தறிவு இயக்கம் (National Literacy Mission) என்ற அமைப்பை உருவாக்குது.

அறிவியல் இயக்கங்கள் இணைந்து பாரத் க்யான் விக்யான் சமிதி( ஙிநிக்ஷ¢ஷி) என்ற அமைப்பை உருவாக்குகின்றன. தேசிய எழுத்தறிவு இயக்கத்தில் BGVSம் ஒரு அங்கம். முறைசாரா கல்வி அல்லது வயதுவந்தோர் கல்வியை வருடம் முழுவதும் சில துறைகள் செய்துகொண்டிருப்பதை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் எப்படி செய்வதென்ற திட்ட வரைவோடு BGVS எர்ணாகுளம் மாவட்டத்தில் முதன்முதலாக ‘அட்சர கேரளம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி ஓராண்டுக்குள் இலக்கையும் எட்டியது. எர்ணாகுளம் மாடல் என்றழைக்கப்பட்ட இந்த முன்மாதிரியை நாட்டின் பலபகுதிகளிலும் செயல்படுத்த வந்ததுதான் எழுத்தறிவு இயக்கம். தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இதற்கு அறிவொளி இயக்கம் என்று பெயர்.

என்.ஜி.ஓக்கள் Conlflict Resolution என்பார்கள்-அதாவது முரண்பாட்டையே தீர்வாக சொல்வது. எழுத்தறிவின்மைக்கு வேராகவும் விழுதாகவும் நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லி மக்களிடம் பிரச்சனையை தள்ளி அவர்களையே தீர்வுகாண பொறுப்பாக்குவதுதான் இதன் நோக்கம். ஒரு மாவட்டத்தில் ஏழுலட்சம் பேருக்கு எழுத படிக்கத் தெரியாது என்று சொன்னால் பெரிதாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். அதையே தெருவாரியாக பிரித்து இந்தத்தெருவில் இருபதுபேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்- அவர்களுக்கு கற்றுத்தருவதை அதேதெருவின் படித்தவர்களின் பொறுப்பாக மாற்றிவிடுவது. இதைத்தான் எர்ணாகுளத்தில் செய்துபார்த்தார்கள். பிறகு தேசிய அளவில் BGVSசுடன் சேர்ந்து பல இடங்களில் செயல்படுத்தினார்கள். வங்காளத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் வேறுவகையாக முயற்சித்தார்கள்.

திட்டம் அரசுடையது. ஆனால் அதனால் மக்களை திரட்டமுடியாது. அரசுசாரா அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் மக்களைத் திரட்டின. கேரளத்தில் கே.எஸ்.எஸ்.பி பொறுப்பேற்றது. ஏற்கனவே அவர்களிடமிருந்த வீதிநாடக வடிவத்தை இந்த திட்டத்திற்காக மக்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தினாங்க. அதுவே எல்லா இடங்களுக்கும் போனது.

Scene from Pralayan’s drama இங்கே பாண்டிச்சேரியில்தான் முதலில் அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்படுது. அந்த அனுபவங்கள் முக்கியமானவை. எழுத்தறிவு குறித்து ஏற்கனவே அரசாங்கம் வைத்திருக்கும் புள்ளிவிவரம் சரியா தப்பான்னு ஒரு கணக்கெடுப்பு நடக்குது (லிட்ரரி சென்சஸ்). பிறகு உங்க ஊர்ல எழுத்தறிவு இயக்கம் நடக்கப்போகுதுன்னு கலைப்பயணம் நடக்குது. கற்றுக்கொடுக்கும் தன்னார்வலர்கள் அடையாளம் காணப்படறாங்க. அப்படியொரு பத்துபேர் கொண்ட குழு அமைந்தால் ஒவ்வொருவரும் பத்துப்பேருக்கு கற்றுத் தருகிற ஏற்பாடு. இதுக்காக அவங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பதுன்னு பயிற்சி. (இவங்களை லிட்ரசி அனிமேட்டர்ஸ்னு என்.ஜி.ஓக்களும், சோல்ஜர்ஸ்னு அறிவொளி இயக்கத்திலும் சொல்வார்கள்). இதுக்கான பாடத்திட்டம் அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டது. பெரிய நிபுணத்துவமுள்ள சமூக விஞ்ஞானிகள் பங்கேற்புடன் தயாரானது. Pre writing concept அடிப்படையில் கோடு,வட்டம், சதுரம் போடுவதில் ஆரம்பிச்சு ப, ட… எழுத கற்றுக்கொடுத்து, பிறகு பட்டா, படி, பசி என்ற சொற்களை கற்றுக் கொடுத்தார்கள்.

இந்த அனிமேட்டர்ஸ் தயாரான பிறகு வகுப்புகள் தொடங்குது. வகுப்புகள் தொடருதுதான்னு பார்க்கிறாங்க. முதல்வாரம் நாற்பதுபேர். ரெண்டுவாரம் கழிச்சி பாதியா குறையுது. பெண்கள் அவ்வளவுபேரும் ஆப்சண்ட். ஏன் இந்த நிலைமைன்னு மிகுந்த பொறுப்போடு விசாரிக்கிறாங்க. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெரும்பாலானவங்களுக்கு வெள்ளெழுத்து. ஆனா அதை சொல்ல கூச்சப்பட்டும் சொல்லத் தெரியாமலும் பல ஆண்கள் வருவதில்லை. அந்த பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏன் வரலேன்னு பெண்களிடம் கேட்டால் ‘அறிவிருக்காயா…. ஆறுமணிக்கு வச்சா வேலையெல்லாம் முடிச்சிட்டு நாங்க வீட்டு வேலை பார்க்க வேணாமா’ன்னு கேட்குறாங்க.இதுபற்றி திட்டமிடுதல் இல்லை. முறைசாரா கல்வித்திட்டத்திலேயோ, வயதுவந்தோர் கல்வித்திட்டத்திலோ இந்தப் பிரச்னையை நினைச்சே பார்க்காம சாயந்திரம் ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரைக்கும் நடத்திட்டு பெண்கள் வருவதில்லே, அவங்களை வீட்டார் அனுமதிக்கிறதில்ல, ரொம்ப பின்தங்கிய நிலைமையில பெண்கள் இருக்காங்கன்னு பத்து வருசமா ரிப்போர்ட் எழுதிக்கிட்டிருந்தான். வெள்ளெழுத்துக்காரர்களுக்கு கண்ணாடி வழங்குவது மூலமாகவும் பெண்களுக்கு உகந்த நேரத்தில் வகுப்புகளை நடத்தறது மூலமும் அறிவொளி இயக்கம் அவர்களது பங்கேற்பை அதிகரித்தது.

ஒரு ஆறுமாசத்துக்கப்புறம் Booster (எல்லாம் சும்மா வார்த்தை தானே..). உற்சாகம் போயிட்ட அனிமேட்டர்களை ஊக்கப்படுத்தறதுக்கு. மறுபடியும் ஒரு கலைப்பயணம் நடத்தி மக்கள் மத்தியில் திரும்பவும் பழைய ஈடுபாட்டை கொண்டு வருவது. இதெல்லாம் பாண்டிச்சேரியில் எல்லா மட்டத்திலும் நடந்தது.மற்ற இடங்களில் இப்படி நடந்ததான்னு சொல்லமுடியாது. அவங்கவங்களுக்கு இருந்த புரிதல்படி தான் யோசிச்சாங்க.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் வழிநடத்துகிறவர்களின் முன்முயற்சியில் அறிவொளியில் கூடுதலா சில விசயங்கள் நடந்தது. மத்த இடங்கள்ல வழக்கமான அரசுத்திட்டமா இருந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்ட அனுபவம் முக்கியமானது. அங்கே, எழுத்தறிவோடு பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொடுத்தாங்க.

அறிவொளிமாதிரி மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட அரசுத்திட்டம் வேறெதுவுமில்லை. முற்போக்காளர்கள், அறிவியல் இயக்கத்தினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் - இவர்கள் தான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களா வந்தாங்க. அவர்களுக்கெல்லாம் இது புது அனுபவம். மக்களைத் திரட்டுவதில் நமக்கு நீண்டகால அனுபவமிருக்கு. ஈராக் மீதான அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிரா கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள், கர்நாடக சங்கீத வித்வான்கள் எல்லோரும் பங்கேற்கிற ஒரு பேரணியை மெரினாவில் நடத்தினோம். அதுக்கு இவங்கள்லாம் கையெழுத்திட்ட அறிக்கையை வீடுவீடா கொடுத்து மக்களை அழைத்தோம்… என்னவெல்லாம் கேள்வி வருது பாருங்க… ‘அவன் பேரழிவு ஆயுதம் வச்சிருக்கலேன்னு நீங்க எப்படி சொல்றீங்க… இங்கிருக்கிற முஸ்லிம் தீவிரவாதிக்கு அதை கொடுத்துட்டான்னா?’. அமெரிக்காவுக்கு ஆதரவா அவ்வளவுபேர் பேசறாங்க. இஷ்டத்துக்கு கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் பொறுமையா பதில் சொல்லிட்டு வரவேண்டியிருந்தது. இப்படி ஒரு நோக்கத்துக்காக மக்களை திரட்டும்போது பல பிரந்னைகள் இருக்கு. ஆனா அறிவொளி இயக்கத்தில் மக்களைத் திரட்டும்போது எந்தக் கேள்வியும் வரலை.

‘இது நல்ல விசயம்தானுங்களே… படிக்கட்டும்ங்க… நம்ம ஊர் முன்னேறுமில்லிங்களா’என்கிறான். இரண்டுமே இயக்கம்தான்.ஆனா இந்த இயக்கத்தோட தன்மையை நாம் புரிஞ்சிக்கணும். அதுவும் அரசாங்க ஜீப்புல போறீங்க. அதுல போனா ஒரு பிரச்னையுமில்ல. ரொம்ப சுலபமாயிருக்கு. டகார்னு போறான். கூப்புட்டா பத்துபேர் வந்துடறாங்க. ஒரு பெரியவர் வீடு கொடுத்துடறார். எங்க திண்ணையில நடத்திக்கிங்க என்கிறார். இப்படி உருவான மக்கள் செல்வாக்கை பார்த்த அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய பலரும் தவறாக புரிந்துகொண்டார்கள். இதுவரை மக்களைத் திரட்ட முன்வைத்த முழக்கங்கள், வழிமுறைகள் எல்லாமே தப்போன்னு நினைச்சாங்க. சமூக மாற்றத்திற்கு மக்களைத் திரட்டுகிற இயக்கத்திற்கு மாற்றாக இதை நினைச்சாங்க. சுலபமா மக்கள் இந்த விசயத்துக்கு திரள்வதை ரொமாண்டிக்காக புரிஞ்சிக்கிட்டாங்க… ஆனா அரசு தன்னோட நிதியையும் பங்கேற்பையும் நிறுத்தினதும் அறிவொளி இயக்கம் நின்னு போச்சு.

மக்களிடம் ஏற்கனவே இருக்கிற சாதி,வர்க்க,பாலினப்பிளவுகளை-இடைவெளிகளை- ஒடுக்குமுறைகளை அப்படியே வச்சுக்கிட்டு அறிவொளியில் பொதுநோக்கத்துக்காக மக்களை திரட்டினோம். ‏இப்படி மக்களைத் திரட்டும்போது விரிசல்கள், கேள்விகள் மேலே வரும். பாப்பாப்பட்டியிலேயும் கீரிப்பட்டியிலேயும் அறிவொளி இயக்கம் நடத்தியிருக்கோம். மக்களை திரட்டியிருக்கோம். அப்ப, அங்கே இன்னிக்கிருக்கிற கேள்வியெல்லாம் வந்திருக்குமில்லையா? அந்த கேள்விகளுக்கு எப்படி முகம் கொடுத்தோம்… எதையெல்லாம் பதிவு செய்திருக்கோம்…? மக்களை திரட்டணும்கிறதுக்காக இதையெல்லாம் மூடிமறைச்சிட்டமா (camouflage பண்ணிட்டமா…?) இதையெல்லாம் பதிவு செய்வதுதான் ஒரு இயக்கமாக இருக்கமுடியும். ஆனால் அறிவொளியில் இப்படியான கேள்விகளே பல இடங்களில் கிடையாது. வந்த கேள்விகளையே நிராகரிச்சுட்டுப் போனதாகத்தான் அனுபவம். பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, மாடசாமி இயங்கின விருதுநகர் மாவட்ட அனுபவங்கள் முக்கியமானவை. வேறுபட்டவை. மற்ற இடங்களில் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியல.

மோகன்: கலைப்பயணங்கள் பங்கெடுத்தவர்களுக்குள் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

பிரளயன்: அறிவொளி இயக்கம் கண்ட மிகப்பெரிய நிகழ்கலைஞர்களைப் பற்றி முறையாக மதிப்பிடப்படலை. ஆரம்பத்திலிருந்த வாலண்டரிசம் போயிடுச்சி. அதுக்கப்புறம் வந்தவங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பூதியமாவது கொடுக்க வேண்டியிருந்தது. அப்ப ஒவ்வொரு மாவட்டத்திலேயும் பத்துக் குழுங்கிறது சாத்தியமா…? சாத்தியமேயில்லாத போதும்,இதெல்லாம் நடந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகக்கலையை மறந்திருந்த மக்களுக்கு நாடகக்கலையை நினைவூட்டியதன் மூலம் - பார்வையாளர் மத்தியில் மறந்துபோன சப்தங்கள், அடவுகளை நாடகங்கள் காட்சிரூபமா காட்டியதின் மூலம் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிற மாதிரியான தன்மை உருவானது. நிறையப் பெண்கள் நாடகத்தில் ஈடுபட்டாங்க. சரஸ்வதி, பூங்கோதை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடிச்ச பெண்களெல்லாம் ஒரு வலுவான ஆளுமையுள்ளவர்களாக மாறி இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி பெரியராணி மாதிரி தமிழ்நாட்டில் ஒரு ஐம்பது அறுபது பேரை இப்படி பார்க்கிறேன் - அவங்க இப்ப நடிக்கல- வேற துறையில இருக்காங்க. நடிக்க கூப்பிட்டா வருவாங்க. சுதா, ஜாம்ஷெட்பூர்ல பிறந்து வளர்ந்தவங்க. மார்வாடிங்க பேசறமாதிரி - குழந்தைமாதிரி இழுத்து இழுத்து தமிழ் பேசுவாங்க. ஆனா சென்னை கலைக்குழுவோட ‘பெண்’ நாடகத்தில் நடித்தபிறகுதான் தமிழில் பேச முடியுங்கிற நம்பிக்கை அவங்களுக்கு வந்தது. இதெல்லாம் ஆளுமையில் நாடகம் ஏற்படுத்தும் மாற்றங்கள். அவங்ககிட்ட ஏற்பட்ட குணமாற்றங்கள்தான் ஒரு பண்பாட்டு இயக்கத்தோட முக்கியமான விளைவுகள்.

கலைப் பயணங்களில் பங்கெடுத்த பலரும் ஏற்கனவே இருந்த சமூகப்பின்னணியிலிருந்து நல்லநிலைக்கு மேல வந்திருக்காங்க. தன்னம்பிக்கை, தலைமைப்பண்பு உள்ளவங்களா மாறியிருக்காங்க. குறிப்பாக பெண்கள்… நாடகம்கிறது ஒரு செய்தியைச் சொல்றது மட்டுமில்ல. ஒரு ஆளுமையிடம் சில பண்புகளை வளர்த்துவிடுகிறது. இன்னொருவர் கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கிறது. இன்னொருவர் காலணிக்குள் காலை விடுவது- அதை நாடகம்தான் சொல்லிக் கொடுத்தது. குழுவா இயங்க கற்றுக்கொடுத்தது. கிராமத்தில் சாதிரீதியான சமூகமாக இருந்தவங்க இங்கே ஆணும் பெண்ணுமாக குழுவில் இயங்கியது, அதற்குள் எழுந்த பிரச்னைகளை தீர்த்தது- இதனால் நிறைய பேரிடம் தலைமைப்பண்புகள் வளர்ந்தது. நாடகத்தால் மக்களிடம் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்கு ஒரு தெம்பு வந்தது. இதெல்லாம் தெளிவாக ஒரு தளத்தில் மதிப்பிடப்படலை.

பார்த்திபராஜா: அறிவொளி இயக்கத்தை எப்படி மதிப்பிடறீங்க..?

பிரளயன்: அறிவொளி இயக்கம் ஒண்ணுமே பண்ணலன்னு நினைக்கிறதுதான் ஒரு டாமினன்ட் டிரென்ட். அரசாங்கம் முன்வைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மக்கள் அமைப்புகளோடு சேர்ந்து நடத்தப்பட்ட ஒரு முயற்சி. மக்கள் கல்வி பெறுவது தவறல்ல, அதுவொரு தேவை என்கிற ஒரு சமூக நியாயம் அதில் ஈடுபட்ட மக்கள் அமைப்புகளுக்கு இருந்தது. ஆனால் அது ஒரு இயக்கமாக மாறவேண்டுமென்றால்,மக்களை ஒரு நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டும்போது ஏற்கனவே மக்களிடமிருக்கும் இடைவெளிகளை,பிளவுகளை மூடி மறைக்கிறோமா-அவை வெளியே தெரியவந்ததா? இந்தக்கேள்விகளோடு நாம் பார்க்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமாக எழுந்த கேள்விகளை-அனுபவங்களை மற்ற மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்ளுதலோ, கொண்டு செல்லுதலோ நிகழவில்லை.அதனால் அதை இயக்கமாக வரையறுப்பதில் கேள்விகள் இருக்கு. ஆனால் அறிவொளி மக்களுக்கு செய்தது- சாதித்தது நியாயம்தானே…?எனினும் நமது சமூகத்தின் ஜீவாதாரமான அடிப்படைக் கேள்விகளில் ஒன்றான ‘எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக்கல்வி’ என்பது குறித்து இத்தனை பெரிய மக்கள் இயக்கத்தில் அறிவொளி எழுப்பவேயில்லை.

பெரியசாமி: தமுஎச நாடகக்குழுக்கள் பற்றி…

பிரளயன்: அறிவொளி இயக்கம் வருவதற்கு முன்னாலயே தமுஎசவில் முப்பது நாற்பது நாடகக்குழுக்கள் இருந்தன. போப்பு,ஆதவன்,விநாயகம்,கீதா இவங்கள்லாம் சேர்ந்த ஒசூர் கலைக்குழு, திருவண்ணாமலையில் தீட்சண்யா கலைக்குழு, வேலூரில் புயல் கலைக்குழு… திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, பரமக்குடி, மதுரை, சேலம், நாகை, தஞ்சை, செங்கை, காஞ்சிபுரம்- இதுதவிர சென்னையில் 12 குழுக்கள். கோவில்பட்டியிலிருந்து தமிழ்ச்செல்வன், கோணங்கி, திடவை பொன்னுசாமி, உதயசங்கர், சாரதி, தாமிரன், ராமசுப்பு…, பரமக்குடியிலிருந்து கந்தர்வன், பறம்பைச் செல்வன், கே.ஏ.குணசேகரன், திருச்சியில் முகில். இவங்க எல்லாருமே கதை, கவிதை எழுதுகிறவர்கள். பெரிய அளவில் நாடகத்தில் பங்கெடுத்தாங்க. அவங்கவங்க புரிதல்ல ஆளுக்கொரு நாடகம் செய்தாங்க. இவங்களெல்லாரும் 86ல் மதுரையில் எஸ்.வி.சகஸ்கரநாமம், கோமல் சுவாமிநாதன், ராமானுஜம், எஸ்.பி.சீனிவாசன் நான்குபேரையும் கொண்டு நடத்தப்பட்ட நாடக முகாம்ல கலந்துக்கிட்டாங்க.

சிவகுமார்: வீதிநாடகத்துக்கான பட்டறையா அது?

பிரளயன்: இல்லை. வழக்கமான பாடத்திட்டம். சகஸ்கரநாமம்,சேவா ஸ்டேஜ்ல இருக்கிற சில திட்டங்களை முன்வைக்கிறார். நாடகம் பற்றி இவங்களுக்கு ஏற்கனவே இருந்த தெளிவை புரிதலை ராமானுஜமும் சீனிவாசனும் கலைத்து வேறுமாதிரி பார்க்க வைக்கிறாங்க. நாடகத்துக்கான ஒரு ஸ்கிரிப்டை இம்ப்ரவைஸ் செய்து உருவாக்குகிற இவங்ககிட்ட ஒரு பிரதியை கொடுத்து மனப்பாடம் பண்ணி அதை நடிக்கவைக்கணும்கிற நோக்கம் முகாமுக்கு இருந்தது. அதுக்காக பி.எஸ்.இராமையாவோட ‘தேரோட்டி மகன்’ல இருந்து சில காட்சிகளை கட்டாயமா மனப்பாடம் பண்ணி நடிக்க வச்சாங்க. அதாவது ஒரு wellmade theatreக்கான பயிற்சி அது.

ஆனா குழுக்களோட தேவைகள் வேறாகயிருந்தது. அதை உணர்வதில் பொறுப்பாளர்களுக்கு பெரிய இடைவெளியும் இருந்தது. பல குழுக்கள் குழம்பிட்டாங்க. ஏற்கனவே அவங்க செய்துக்கிட்டிருந்த நாடகத்தில் என்ன இருக்கு அல்லது என்னென்ன இல்லேன்னு சொல்றதுக்கு பதிலா, இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல, இனிமேதான நாடகமே பண்ணனும்கிற பிரமையை அவங்களுக்குள்ள அந்த முகாம் உருவாக்கிடுச்சி. அதில் பங்கேற்ற பல நாடகக்குழுக்கள் முகாமுக்குப்பிறகு காணாமல் போயின.

பிறகு அறிவொளி இயக்கம் வருது.பாண்டிச்சேரியில் பத்து பன்னிரண்டு கலைக்குழுக்கள் தயாரானது. தமிழ்நாடு பூராவுமிருந்து ஏராளமான எழுத்தாளர்கள்-பெரும்பாலும் நிரந்தர வேலை- சம்பளம் என்று இருப்பவர்கள்- தன்னார்வத்தோடு ஒரு மாதம் ஒன்னரை மாதம்னு லீவ் போட்டுட்டு வந்து கலந்துக்கிட்டாங்க. அந்தளவுக்கு ஈடுபாடிருந்தது. தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டத்திலும் அறிவொளி ஆரம்பிச்சப்ப இவங்களெல்லாம் தலைவர்களா- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாயிட்டாங்க.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பகுதிவாரியா பத்துப்பதினைந்து கலைக்குழு தேவைன்னு ஆகும்போது கிராமப்புறங்கள்ல படித்து வேலையில்லாமலிருக்கிற இளைஞர்கள் வர்றாங்க. அவங்க அநாயசமா ஒரு வாரத்துல தவில் கத்துக்கிறாங்க. அவங்களுக்கு தாளஞானம் இருக்கு. விரலை எப்படி பிடிக்கிறதுன்னு தெரிஞ்சாப் போதும். அப்ப பாண்டிச்சேரி வினாயகம் மாதிரியான தவில் கலைஞர்கள் உருவாகிறாங்க. (அரசு ஊழியர்களிலிருந்து வந்தவங்கள்ல தவில் வாசிக்கிறவங்க குறைவு) . தவில் வாசிக்க, பாட, நடிக்க கிராமங்கள்ல இருந்து புதியவர்கள் வந்த பிறகு ஏற்கனவே நாடகத்திலிருந்த எழுத்தாளர்களெல்லாம் வெளியேறிட்டாங்க. இதைத்தான் ‘தலித்கள் உள்ளே வந்துட்டாங்க, அக்ரஹாரத்து ஆளுங்க வெளியே போயிட்டாங்க’ன்னு நான் சொன்னேன். அதாவது Performing tradition - Oral tradition (நிகழ் கலைஞர்கள்) என்பது தலித்தாகவும் Textual tradition - எழுத்தாளர்களை அக்ரஹாரமாகவும் சொன்னேன். அப்படியொரு பார்வை தமுஎசவுக்குள் இல்லை. ஆனா என்னோட கருத்து அது. ஏன் எழுத்தாளர்கள் வெளியே போனாங்கன்னு யாரும் விவாதிக்கவேயில்ல. ஏன்னா வெளியே போன எழுத்தாளர்கள் எல்லாருமே தான் நாடகக்காரன் இல்லேன்னு நம்பறான்.

ஒரு நாடகப் பிரதிக்கு நாடகாசிரியன் தேவை. நாடகம்கிறது கூட்டுமுயற்சின்னா பத்துப்பேர் உட்கார்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கித் தின்கிற விசயமல்ல. பத்துப்பேருடைய கற்பனைக்கும் இடம் இருக்கணும். அவங்கள்ல நாலுபேர் யோசிக்காம சும்மாகூட இருக்கலாம். ஆனால் ஒரு பிரதி அங்கு உருவாகுது. நாடகாசிரியன் இருக்கிறான். இயக்குனன் இருக்கிறான். இந்த விசயம் புரியாம நாடகாசிரியனுக்கு மரியாதை இருக்காது- முகம் தெரியாது- கூட்டு உழைப்புன்னு சொல்லிடுவாங்கன்ற பயத்தில பல எழுத்தாளர்கள் நாடகத்தை விட்டுப் போயிட்டாங்க. எஞ்சி இருந்தவங்க எல்லாம் தலைவர்களாத்தான் இருந்தாங்க. வேல ராமமூர்த்தி, காளீஸ்வரன், முகில் இவர்கள் மட்டும் தான் நாடகத்தில நீடிச்சவங்க. பிறகு அவர்களும் நிறுத்திட்டாங்க.

தொடரும்..

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith 1 Comment →

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 404.26.07

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 3

பார்த்திபராஜா - நிலவுகிற சமூக மதிப்பீடுகளை குறுக்கீடு செய்ய வேண்டியது ஒரு கலைஞனுடைய கடமை… இப்போ சென்னைக் கலைக்குழு ஒரு கூட்டு முயற்சியாக நாடகங்களை செய்யுது… புதிய புதிய விஷயங்களைப் பார்க்குது… அதைப்போல தமிழ்நாட்டுல வேற வேற நாடகக் குழுக்கள் பார்க்குதா… புதிய நாடகங்கள் உருவாக்கம், வீதிநாடக முயற்சிகள், அல்லது ஒரு இடத்துல செய்யப்பட்ட நாடகத்தைப் பிரதியெடுக்கறது… இந்த மாதிரி இருக்கா.. .

பிரளயன்- வீதிநாடகத்தில் மூன்று நான்கு குழுக்கள்தான் இயங்குது. தலித் இயக்கங்களில் செம்மணி, நாகர்கோவில் பகுதியில் கலை இலக்கிய பெருமன்றத்தின் ஒரு குழு- மதுரையில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்ற சண்முகராஜாவோட குழு- வீதிநாடகங்களும் அவ்வப்போது செய்யும். இடதுசாரி இயக்கங்கள்ல செயல்பட்ட 24 குழுக்களும் இப்ப நின்னு போச்சு… சென்னையில் எங்களுடைய சென்னை கலைக்குழு, பாவேந்தர் கலைக்குழு, பகத்சிங் நாடகத்தை செய்த அக்னி நாடகக்குழு தவிர மற்ற குழுக்கள்லாம் இயங்கறதில்ல. கூத்துபட்டறையும் வீதிநாடகம் பண்றாங்க. மௌனக்குரல் ஒரு காலத்துல பண்ணிகிட்டுருந்தாங்க… கிறிஸ்டியன் காலேஜ் பேராசிரியர் ஜார்ஜ், மாணவர்கள வச்சி அப்பப்போ சில முயற்சிகள் செய்கிறார். டான் போஸ்கோ தீபிகாவில் சில நேரத்தில் ஏதாவது பண்ணுவாங்க. ஆனா தொடர்ந்த செயல்பாடா இருக்கிறதில்ல…

புதுகை பூபாளம் வீதிநாடகம் அதிகம் பண்றதில்லை. கதாகலாட்சேபம் மாதிரி இசையும் உரையாடலும் கொண்ட நிகழ்ச்சி. அது ஒரு புதுவடிவம். ரொம்ப Spantanity Skill வேணும் அதுக்கு. திறமையுள்ள இளைஞர்கள். கிருஷ்ணகிரி மக்கள் கலைக்குழு பெரும்பாலும் எங்களோட ஸ்கிரிப்டைத் தான் செய்யறாங்க… சுயமாகவும் சிலது தயாரிக்கிறாங்க… ஒசூர் கலைக்குழு எங்களுடைய ‘பெண்’ ‘முற்றுப்புள்ளி’ இரண்டையும் செய்திருக்கு. இப்ப இயங்கிறதில்ல. தாமிரபரணி கலைக்குழு, கருமாத்தூர் திசைகள், சேலம் அக்னி கலைக்குழு- இவையே தற்போது இயங்கிக்கொண்டிருப்பவை.

பார்த்திபராஜா: இன்றைக்கு தமிழகத்தில் நடத்தப்படும் வீதி நாடகங்களுக்கு ஒரு வரையறையும், புரிதலும் இருக்கிறதா?

பிரளயன்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். நான் வீதி நாடகம் செய்கிறபோது எங்களுக்குன்னு ஒரு வரையறை உண்டு. அது வளர்ந்துகொண்டும், மாறிக்கொண்டும் வரலாம். எது சரியான வீதிநாடகம் எது தவறானது என மதிப்பீடு செய்து தீர்ப்பு வழங்கும் நாள் இன்னும் வரவில்லை. இன்று இருக்கிற பண்பாட்டுச் சூழல்ல யாருடைய நாடகமாக இருந்தாலும் அது சமூகத்துல என்ன விளைவுகளை ஏற்படுத்துது என்பதை வைத்துத்தான் அதை மதிப்பீடு செய்ய முடியும். நாடகமாடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஏற்கனவே இருந்ததைப் போல இன்று வீதிநாடகம் இல்லை. தன்மயமாக்கப்பட்டு பலவிதங்களில் மாறியிருக்கு. ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்குக்கூட வீதிநாடகம் பண்ணமுடியுமான்னு சிலபேர் கேட்கிறாங்க. பண்ணமுடியும்னு சிலர் ஆரம்பிச்சிருக்காங்க.

பார்த்திபராஜா: வீதிநாடக இயக்கத்தை நீங்களெல்லாம் முன்னெடுத்து வந்தவங்க. அப்படி ஒரு வரையறைக்குள்ள இதனுடைய ஸிமீதீமீறீ-ங்கிற தன்மையை அழுத்தமாகப் பதித்திருந்தால் இன்னிக்கு இந்தமாதிரியான ஒரு டிரெண்ட் வளர்ந்திருக்காதே?

பிரளயன்: இன்று வீதி நாடகம் என்பது விழிப்புணர்வு நாடகங்களாக என்.ஜி.ஓக்களின் தகவல் சொல்லும் உத்தியாக (Media strategy) மாறி வருகிறது. நீங்கள் அதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். நாம் நம்முடைய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே சில விஷயங்களை பார்க்க முடியாது. என்.ஜி.ஓக்கள் நாடகம் செய்வதை தடைசெய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்க முடியாது. நீங்கள் நம்புகிற வீதி நாடகத்தை வலுவாகச் செய்வதன் மூலம் மட்டும்தான் அதை எதிர்கொள்ள முடியும். ஒரு என்.ஜி.ஓ. நாடகத்திற்கு இருக்கிற நோக்கம் என்ன? பலகீனங்கள் என்னவெனில் பிரச்சினைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவதை அவர்கள் அனுமதிப்பதில்லை.

என்.ஜி.ஓ வில் நீங்க ஒரு பிரச்னையை எடுக்கும்போது Confrontation-க்கு போகவேண்டியிருக்கும். அரசு அதிகாரிகளோட நிர்வாகத்தோட, மோதலுக்கும், முரண்பாடுகளுக்கும் நீங்க போக வேண்டியிருக்கும். எல்லா விஷயத்தையும் மோதல் முரண்பாடு உண்டாக்கித்தான் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒத்த கருத்தை உருவாக்கியும் கூட சில விஷயங்களை செய்து முடிக்கலாம். சில இடங்களில் வலுக்கட்டாயமாக தவிர்க்கவே முடியாது. அதுக்கு அந்த என்.ஜி.ஓக்களுடைய செயல்பாட்டு எல்லைகள் இவற்றை அனுமதிக்காது. தண்ணீர் சம்பந்தமா ஒரு ப்ராஜெக்ட் செய்யறாங்க. அதுல கிடைக்கிற அனுபவங்களை அடுத்த திட்டத்தில் பயன்படுத்தனும்னா அது முடியாது. அடுத்து கல்வி பற்றிய ப்ராஜெக்ட்டுக்கு போயிடுவாங்க.அவங்க செயல்பாடுகளுக்குள்ள தொடர்ச்சி இருக்காது. தர்க்க ரீதியான உறவு இருக்காது.

இருந்தபோதிலும் என்.ஜி.ஓக்கள் செயல்படும் தளங்களை குறைத்து மதிப்பிட முடியாது. நாம் எதையெல்லாம் முக்கியமற்றதென நினைக்கிறோமோ அதிலெல்லாம் வேலை செய்யறாங்க. அதை ரொம்ப சுலபமா எளிமைப்படுத்தி பார்த்திட முடியாது. பிரச்சினைகள் இருக்கிறது என்பது உண்மை. இப்ப என்.ஜி.ஓக்கள் வீதிநாடகம் செய்யறாங்கன்னா அவங்க வீதிநாடகத்துக்கு வரணுங்கிற ஆர்வத்துல செய்யறதில்ல. அவங்களுக்கு பண்ட் தருகிற ஏஜென்சியிடமிருந்து, உங்கள் திட்டம் மக்கள் மத்தியில் எப்படி ஈர்க்கப்படுகிறது ? எப்படி இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பரவலாக்குகிறீர்கள் எனும் கேள்வி வர்றப்போ அதுக்கு வீதிநாடகம்தான் பதில்னு வந்துடுது. ஆனா என்.ஜி.ஓக்களுக்கு வீதி நாடகம் பற்றின பிரக்ஞை கிடையாது. மேலிருந்து ஒரு கருத்தை திட்டமிட்டு உருவாக்கி கீழ்மட்டத்தில் அதை பரவலாக்குவதுதான் என்.ஜி.ஓ அணுகுமுறை- அரசாங்க அணுகுமுறை. திட்டத்தை உருவாக்குவதற்காக கீழ்மட்டத்தில் பலவிதமான ஆய்வுகளை நடத்தி Case Study நடத்தி அதன்மூலம் மேல்மட்டத்தில் கருத்துக்களை திட்டமிட்டும் இருக்கலாம். ஆனால் இச்செயல்பாட்டிலிருக்கும் பிரச்னை என்னவென்றால் மக்களை ஒரு மந்தையாக நினைத்து (Passive Being) அவர்களை எந்த கருத்துக்கும் உடன்பட வைக்கலாம் என்ற அணுகுமுறைதான் அவர்களிடம் கோலோச்சுகிறது. ஆனால் உண்மையான வீதிநாடகம் என்பது மக்களை மந்தைகளாக கருதாமல் செயலூக்கமுள்ளவர்களாக (Active Being) கருதுகிறது. அடிமட்டத்திலுள்ள எதிர்ப்புணர்வுகளை கொந்தளிப்புகளை மேல்மட்டத்துக்கு கொண்டு செல்கிறது.

என்.ஜி.ஓக்களின் தன்மையிலான இதுபோன்ற ஒரு நாடகப்போக்கிற்கு அறிவொளி இயக்க நாடகங்கள் வித்திட்டுவிட்டதோ என்ற கருத்து எனக்குண்டு. அந்த நாடகங்களை உருவாக்குவதில் பயிற்சியளிப்பதில் நான் முழுமையாக பங்கேற்றிருந்தாலும் கூட நான் இதை ஒரு சுயவிமர்சனமாகத்தான் பார்க்கிறேன். அறிவொளியில் ஒரு நாடகத்தை உருவாக்குவோம். திறமை வாய்ந்த பல நாடக ஆளுமைகளின் பங்களிப்பில் அது உருவாகும். பிறகு அந்த நாடகம் அட்சரம் பிசகாமல் அசைவுகள் அடவுகள் படிமங்கள் மாறாமல் அப்படியே பல குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒரே மாதிரியான நாடகத்தை நூற்றுக்கணக்கான குழுக்கள் தமிழகம் முழுவதும் நடத்தும். ஒரு மையப்படுத்தப்பட்ட தயாரிப்பை பல இடங்களுக்கு கொண்டு செல்வது என்ற போக்கு அப்போது ஏற்பட்டது. மையப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அந்த நாடகம் செறிவுள்ளதாகவும் வலுவானதாகவும் கூட இருக்கலாம். கருத்தியல் ரீதியாக எந்த பிழையும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்றால் ஒரு மையப்படுத்தப்பட்ட தயாரிப்பை பல இடங்களுக்கு கொண்டு செல்கிற ஒரு முன்மாதிரியை அது உருவாக்கிவிட்டது.

நூற்றுக்கணக்கான நடிகர்களை பாடகர்களை வாத்ய கலைஞர்களை இந்த அறிவொளி கலைப்பயணம் உருவாக்கியிருந்தாலும் நாடகத்தை எழுதுகிற- தயாரிக்கிற திறமைகளை அது மாவட்டங்கள் தோறும் உருவாக்கத் தவறிவிட்டது. அதனால் உள்ளூர் முயற்சிகள், நாடகக்குழுக்களின் தனிப்பட்ட முயற்சிகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. குழுச் செயல்பாடுகள் முற்றிலும் அழிந்துபோனது. மாநிலம் முழுவதும் கலைஞர்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் பரவலான தனித்த சுயேச்சையான நாடக முயற்சிகளுக்கு அது இடம் தரவில்லை. மையப்படுத்தப்பட்ட தயாரிப்பு என்பது ஒன்றிரண்டு முறை நிகழ்வது தவறில்லை. ஒரு இயக்கத்தின் தொடக்கநிலையில் இதுதான் சாத்தியம். ஆனால் இதுவே சிறந்த உத்தி என்று பின்னாளில் ஆகிவிட்டது. அறிவொளி இயக்கமோ, அதனை வழிநடத்திய அறிவியல் இயக்கமோ இதை உணர்ந்து கொள்ளவேயில்லை. இந்த முன்மாதிரியைத்தான் என்.ஜி.ஓக்கள் நாடு முழுவதும் விஸ்தரித்தார்கள்.

மையப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் ஒரு நாடகாசிரியன்- ஒரு இயக்குனன் இருந்தான். எனினும் கூட்டுச்செயல்பாட்டில் பல நாடக ஆளுமைகளின் பங்களிப்பில் இவை உருவாயின. இதே அனுபவங்களின்- படிமுறைகளின் மூலம் மாவட்டங்கள் தோறும் நாடகங்களை உருவாக்குகிற பல குழுக்கள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அறிவொளி இயக்கத்தில் இதற்கான இடம் இருக்கவில்லை.

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 5

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith No Comments →

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 304.26.07

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 2

பார்த்திபராஜா: விஞ்ஞானத்தை பரப்பும் நோக்கத்தோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வீதிநாடகம் நடத்தியது ஒரு காலத்தில். பிறகு அறிவொளி இயக்க காலத்தில் பரவலானது. இப்போ நீங்க செய்வதெல்லாம் அதிலிருந்து வருவதுதானே?

பிரளயன்: அப்படி சொல்லமுடியாது. அறிவியல் இயக்கத்திற்கு நாடகம் செய்வதற்கு முன்பே பெண் என்ற வீதிநாடகத்தை நாங்கள் நிகழ்த்தியிருக்கிறோம். 1989க்கு பிறகு நாங்கள் வட்டவடிவ அரங்கை கைக்கொண்டோம். ஆனால் அறிவியல் இயக்கத்திற்கோ, அறிவொளி இயக்கத்திற்கோ செய்யப்பட்ட நாடகங்களெல்லாம் முன்முற்ற மேடை அல்லது மூன்றுபுறம் திறந்திருக்கும் உயரமான மேடையில் தான் நிகழ்த்தப்பட்டன. நடிப்பிடங்களில் உள்ள இந்த வேறுபாடு மிகவும் நுட்பமானது. இது நாடக கட்டுமானத்தை(Dramuturgy), அதன் எடுத்துரைப்பை (Narrative), தளக்கோலங்களை (Choreography), தளப்புனைவை(Compositions) தீர்மானிக்கிற அம்சமாகவும் உள்ளது. இன்னும் சரியா சொன்னால் ஒரு நாடகத்தை முன்முற்ற மேடையில் செய்கிறபோது போட்டோகிராபிக் கம்போசிஷன் தான் செய்யமுடியும்.(அதாவது புகைப்படத்தின் பின்புறம் பார்த்து நீங்கள் எதையும் விளங்கிக் கொள்ளமுடியாது என்பதுபோல.) ஆனால் சுற்றுவட்டத்தில் பார்வையாளர்கள் இருக்கக்கூடிய வட்டவடிவ அரங்கில் இந்த போட்டோகிராபிக் கம்போசிஷன் செய்யமுடியாது.

வட்டவடிவ அரங்கில் Sculptural Composition தான் செய்யமுடியும். (ஒரு புகைப்படத்தை முன்பக்கமிருந்துதான் பார்க்கமுடியும். ஆனால் ஒரு சிற்பத்தை எந்தப்பக்கமிருந்தும் பார்க்கலாம்- விளங்கிக்கொள்ளலாம் என்பதைப்போல). நடிப்பிடத்தில் உள்ள இந்த அடிப்படையான வேறுபாடுகள் குறித்து நாங்கள் வட்டவடிவ அரங்கில் செயல்படத் தொடங்கியபோதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். பாத்திரங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் வட்டவடிவ அரங்கின் சுற்றுவட்டப்பாதையில் நிகழும். கடிகாரச்சுற்றில் நுழைவும் எதிர்கடிகாரச் சுற்றில் வெளியேற்றமும் அமையும். அதுமட்டுமல்ல, வட்டவடிவ அரங்கில் செங்குத்துவெளி எல்லையற்றது. 1989 தொடங்கி இதுவரை எங்களது சென்னைக் கலைக்குழு தொடர்ந்த செயல்பாடுகள் மூலமும் கண்டறிதல் மூலமும் தவறுகளிலிருந்து கற்பதன் மூலமும் (Trial and Error) வட்டவடிவ அரங்கை புரிந்துகொள்ள ஆரம்பித்தது. இந்தப் புரிதல்தான் எங்கள் குழுவின் தனித்தன்மையும் கூட. அறிவியல் இயக்க, அறிவொளி இயக்க நாடகங்கள் இந்த சவால்கள் எதையும் எதிர் கொள்ளாதவை. எனினும் அறிவியல் இயக்கமும், அறிவொளி இயக்கமும் எங்களது நாடக படைப்பாக்கத்திற்கு வேறுவிதமான சவால்களை முன்வைத்தன.

பார்த்திபராஜா: உபகதை நாடகத்தில் பள்ளிக்கூடக் காட்சியை வீதிநாடகமாவும், மற்ற பகுதிகள் நவீன நாடகத்தோட தன்மையோடும் இருக்கு. ஒரு மைக்ரோ பாலிடிக்சை சொல்றதுக்காக அப்படியான வடிவத்தை தேர்ந்தெடுத்தீங்களா? இல்லை ஏற்கனவே அப்படி பண்ணியிருக்கீங்களா?

பிரளயன்: ஏற்கனவே சத்யாகிரகம்னு ஒரு நாடகம் செய்தோம். உபகதை மேக்ரோ பாலிடிக்ஸ்தான். வீதிநாடகத்துல தீவிரமான நீண்ட விசாரணையை செய்யடியாது. சிலதை செய்றோம். பவுன்குஞ்சு அந்த முயற்சிதான். ஏற்கனவே தெரிந்த விஷயங்களில் இருந்து தெரியாதத்துக்கு கூட்டிக்கிட்டு போறது. அப்போ ஆழமான வேறுமாதிரியான புரிதல்களோட செய்யவேண்டியிருக்கு. இரண்டுக்குமான அனுபவங்கள் வேறு. என்னதான் இருந்தாலும் மாநகரை மேடைநாடகமா செய்யமுடியாது. தயாரிப்பிலிருக்கும் வெண்மணியைப் பற்றிய நாடகத்தை மேடைநாடகமாத்தான் செய்கிறோம். அதில் வேறு பரிமாணத்தை சேர்க்க வேண்டியிருக்கு. எந்தவிதமான முன்தயாரிப்பும் இல்லாம கூடிக்கலைகிற பார்வையாளர்கள்தான் வீதிநாடகம் பார்க்க வர்றாங்க. அவங்ககிட்ட கொட்டையெழுத்தில் பேசணும். ஆனா எல்லாத்தையும் கொட்டையெழுத்தில் பேசிக்கிட்டிருக்க முடியாது.

மேடைநாடகத்திற்கானவர்கள் திரட்டப்பட்ட பாரவையாளர்கள் - நாடகத்துக்காக ரெண்டுமணிநேரம் செலவிடக் கூடியவங்களுக்காக நிகழ்த்துறோம். அவங்களிடம் வேறுமாதிரியான சொல்லாடல் தேவை. ஒரே கருவை எடுத்தாலும் இரண்டு பார்வையாளர்களையும் கையாள்வது வேறுவேறு முறை. உபகதையில் காவியப்பின்னணி வரும்போது வியக்கத்தக்கவொரு பகட்டான (Spectacular) காட்சியாக அமையணும்னு நினைச்சோம் . அதனாலதான் நடிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். இந்தப் பக்கம் ஏழுபேரு அந்தப்பக்கம் பதினெட்டுபேருன்னு வரும்போது அந்த உணர்வு கிடைக்குது. லைட்ஸ் ஆப் இல்லாமல் காட்சியை நகர்த்துகிற உத்தி நாடகத்தை வேகப்படுத்தியது. முதல் காட்சியிலும் கடைசிக் காட்சியிலும் எல்லா நடிகர்களும் வந்தாங்க. இடையில் இருந்த காட்சிகளில் வேறு நடிகர்கள் வந்தாங்க. எண்ணிக்கை அதிகரிச்சதால இந்த ஸ்பெக்டக்குலர் கிடைத்தது.

பார்த்திபராஜா: உப கதைக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

பிரளயன்: இதுவரைக்கும் பதிமூன்று இடங்களில் உபகதையை நடத்தியிருக்கோம். மற்ற நாடகங்களைவிட செலவு அதிகம். பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. திராவிடர் கழகத்தின் கி.வீரமணி, அருள்மொழி இந்த நாடகத்தை விரிவா கொண்டுபோகணும்னு விரும்பினப்ப நாங்க பிஸியா இருந்தோம். இடையில் அந்த முயற்சி கைகூடவில்லை. போட்ட இடங்களிலெல்லாம் பார்வையாளர்களிடம் வரவேற்பு இருந்துச்சு. ஆனா நடத்துறத்துக்கு பெரிய அளவில் யாரும் முன்வரல. சீரியஸான விவாதத்தை நாடகம் முன்வைக்குது. சிலபேர் அதை தவறாகக்கூட புரிந்துகொண்டார்கள். ரவீந்திரன் உபகதை புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்போது சொல்லாத கருத்தை கட்டியத்தில் விமர்சனம் எழுதினபோது சொன்னார். ஒரு சாதிக்கு எதிரா ஐக்கிய முன்னணி கட்டறதா எழுதறார். அவர் நாடகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை. சம்புகன் தலை வெட்டப்படுவது மட்டுமல்ல அவன் ஏன் வேதம் படிக்கணும் என்பதும்கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. உயர்நிலையாக்கத்தை கேள்விக்குள்ளாக்குவது யார்? கேள்விக்குள்ளாவது யார்? பார்யுப‎னனோ, உயர்சாதிக்காரனோ இதை கேட்கப்போறதில்ல.

இடைநிலைசாதிக்கு எதிராக வைக்கிற கேள்வி இது. திரும்பத் திரும்ப நாடகத்தில் ஏகலைவன் என்ன சொல்றார்னா ‘தனக்கு கீழே ஒரு சாதி இருக்கணும்னு நீ நினைச்சீன்னா உனக்கு மேல இருக்கிற சாதியை நீ நியாயப்படுத்தறேன்னு அர்த்தம்’. அந்த நாடகம் முழுக்க முழுக்க இடைநிலைச் சாதியை அட்ரஸ் பண்றதுதான். கடைசியா ஏகலைவன் சொல்றார் : நான் அருளுரை செய்யவந்த ஆச்சார்யனுமல்ல உபதேசிக்க வந்த தீர்க்கத்தரிசியுமல்ல. நான் கடைசி மனிதன். எனக்கு கீழே எந்த சாதியும் இல்லை, அந்த ஒரு தகுதியால் சொல்கிறேன்என்கிறார். சமத்துவம் குறித்த சொல்லாடல்களுக்குள் சாதியை கொண்டுவந்து சேர்ப்பதுதான் உபகதைதான் நோக்கம். ஏற்றத்தாழ்வற்ற உலகத்தை படைக்கப் போறேங்கிற … பெண்கள் சமத்துவத்தை பேசுகிறாய்… வர்க்க ஏற்றத்தாழ்வை பற்றி ஒடுக்குமுறையைப் பற்றி பேசுகிறாய்… ஆனா சாதீய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிறாயே… இப்படி ஏற்றத்தாழ்வுகளை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தணும்கிற விஷயம் எங்க விவாதிக்கப்படணுமோ அந்த பகுதியில விவாதிக்கப்படலன்னுதான் நான் நினைக்கிறேன். நாடக்த்தோட மையப்புள்ளி எதுவோ அதிலிருந்து பேசப்படல. நாடகம் பாத்தவங்க மத்தியில் நல்ல உற்சாகத்தைத் தந்தது. குழுவுக்குள்ளேயும் உற்சாகத்தை தந்த நாடகம்தான் இது.

சிவகுமார்- அடுத்து என்ன நாடகம் செய்யப்போறீங்க?

பிரளயன: அடுத்ததாக வெண்மணி நாடகத்தை பண்றோம். வெண்மணி சம்பவம் மட்டுமில்லாமல் அங்கே விவசாய தொழிலாளிகளான தலித்துகள், குடியானவர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர் எல்லாருமே எப்படி ஒன்றிணைந்து இருந்தாங்க- அந்த கூட்டு எப்படி வந்தது- எப்படி அதை சாதித்தார்கள்- எப்படி மனங்களை வென்றார்கள்… வர்க்கமாக எங்கே நின்னாங்க, சாதியா எங்கே நின்னாங்க… வர்க்கம் எங்கே முடிஞ்சது சாதி எங்கே தொடங்கிச்சி, சாதி எங்கே முடிஞ்சிச்சி வர்க்கம் எங்கே தொடங்கிச்சி… எப்படி அந்த அலையன்ஸ் உருவானது என்ற விசயங்கள்தான் நாடகத்தோட மையம்.

தஞ்சையில் நடந்தது சாதி ரீதியான போராட்டமா, வர்க்கப்போராட்டமான்னு ஒரு விவாதம் நடக்குது. இது ரெண்டுமே தனித்தனியே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. கூலித்தொழிலாளர்களும், குத்தகை விவசாயிகளும் வர்க்கரீதியாக சரியாக இணைந்திருந்தாங்க. வர்க்க ரீதியா இருந்தவங்களும் அடிமட்டத்துல ஒரு குறிப்பிட்ட மூன்று நான்கு சாதிக்குள்ளத்தான் இருந்தாங்க. அந்த மக்களை ஆற்றல் பெறச் செய்கிற, empower பண்ணக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளுமே ஆதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான முயற்சியாகத்தானிருந்தது. ஆனா ரொம்ப சிக்கலான வரலாற்று உண்மையை நாம புரிஞ்சிக்கனும். எப்படி தலித்துகள் செங்கொடி இயக்கத்தை நம்பினார்கள்.? ஏதோ ஆட்டுமந்தைமாதிரி தலித்களும் வந்தவிடவில்லை, ஏமாற்றி செங்கொடி இயக்கமும் அவர்களை கூட்டிக் கொண்டு போய்விடவில்லை. செங்கொடி இயக்கம் அவர்கள் மனங்களை வெல்லாமல் இது நிகழ்ந்திருக்குமா! இன்னிக்கும் தங்களுடைய உரிமையை நிலைநாட்டக்கூடிய சக்தி எந்த மாவட்டத்தை விடவும் தஞ்சாவூர் மாவட்ட தலித்துகளுக்குத்தான் உண்டு. அங்கு நடக்கும் நிகழ்வுளின் சூழலை தீர்மானிக்கும் சக்தி அவங்களுக்குத்தான் உண்டு. வேறு எந்த மாவட்டத்திலும் கூட்டுபேர சக்தி தலித்துகளுக்கு கிடையாது. பேரம்னா வெறும் கூலி உயர்வு பற்றி சொல்லல. சமூகத்துல ஒரு இடத்துக்காக, ஒரு அந்தஸ்துக்காக கூட.

பலதரப்பட்டவர்கள் அந்த இயக்கத்துல இருந்தாங்க… பிற்படுத்தப்பட்டவர்கள் பார்யுப‎னர்கள் இருந்தாங்க… பார்யுப‎ன நிலச்சுவன்தார்களுக்கு எதிராக பெரிய போராட்டம் நடக்குது.. வேளாளர்களுக்கு எதிராக நடக்குது– முக்கியமான தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமி பிற்படுத்தப்பட்டவர்தான்… இந்த இடைவெளியையெல்லாம் மீறி எப்படி நம்பினாங்கன்னா கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளால்தான்… அதுக்கான சூழல் அப்போ இருந்தது. மணலூர் மணியம்மை ஒரு பார்யுப‎ன இளம் விதவை. அவங்க நிலத்தை சுயமா நிர்வாகம் பண்ற நிலைமைக்கு வர்றாங்க… கொஞ்சம் கொஞ்சமா அந்த பிரச்சினைகளில் ஈடுபடறாங்க…ஈர்க்குது… ஏன் ஈர்க்குதுன்னா, அவங்க உண்மையிலேயே பார்யுப‎னரா, பெண்ணாக இருந்தாலும், விதைவையாக இருந்தாலும் அவங்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பண்பாட்டு ஒடுக்குமுறைல ஒரு ஒற்றுமையை பார்த்துருக்காங்க… எல்லாப் பெண்களுக்கும் சூத்திர அந்தஸ்து…பறையர் அந்தஸ்துதானே… அதுவும் விதவைகளுக்கு அதைவிடக் கீழான நிலைமை… முண்டிதம் - தலையை மழிக்கணும்… அந்த புறக்கணிக்கப்பட்ட - அவமானப்படுத்தப்பட்ட மனநிலையில் ஒரு தலித் விவசாய கூலியோடு தன்னை அடையாளம் காண்றாங்க… அவங்கள பத்தி பதிவுகள் இருக்கு. அதுமாதிரி பலரையும் அந்த சூழ்நிலை உள்ளிழுத்திருக்கும்.. இது இல்லேன்னாலும் அந்தப் போராட்டம் தாராளமா நடந்திருக்கும்… மக்கள் தங்கள் விடுதலையைப் பெற்றிருப்பார்கள்… செங்கொடி இயக்கம் துரிதப்படுத்தியிருக்கலாம். தலித்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து போராடியதுதான் ரொம்ப முக்கியம்.

பார்த்திபராஜா: இப்ப தலித் இயக்கங்கள் வெண்மணியை ஒரு வர்க்கப்போராட்டமே கிடையாது சாதிப்போராட்டம்னு சொல்றாங்களே.?

பிரளயன்: வர்க்கப்போராட்டமென்பது வெறுமனே பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டம் என்று புரிந்துகொள்வது தவறானது. எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டம்தான் உண்மையான வர்க்கப்போராட்டமாக இருக்கமுடியும். சாதிய, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை உள்ளடக்காமல் வர்க்கப்போராட்டம் முழுமையடையாது. இதுதான் தஞ்சைப்பகுதியில் நடந்தது. கூலிக்கான போராட்டமாக அது மேலோட்டத்தில் தோற்றமளித்தாலும்கூட சாதீய கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை அங்கு கம்யூனிஸ்டுகள் நடத்தினதாலதான் அங்கிருக்கும் தலித்துகள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அணிதிரண்டார்கள். இன்றிருக்கிற புரிதல்கள் அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் உதாரணத்துக்கு சொல்லணும்னா ஒரு இடத்துல நிலப்பிரபுக்களுக்கும் குடியான விவசாயிகளுக்கும் பெரிய பிரச்சினை வருது. குடியானவங்க என்று சொல்லப்படுகிற தலித் அல்லாதவர்களும் கூலிகள்தான். அவர்களும் தலித் கூலிகளோடு சேர்ந்து நிற்கிறார்கள். அப்போ நிலச்சுவான்தார்கள் என்ன பண்றாங்க? குடியானவர்களை தனிமைப்படுத்த இவங்களுக்குள்ள பிரச்சினையை உருவாக்க மூன்று நான்கு வருஷமா நிறுத்தி வச்சிருந்த தேர்த்திருவிழாவை நடத்தறாங்க. திருவிழா நடந்துச்சின்னா தலித்கள் யாரும் ஊர்க்குள்ள போக முடியாது. அவங்களும் காலனிப்பக்கம் வரமுடியாது. அதாவது இரண்டுபேரும் கூடி பேசிக்க முடியாது.

தலித்களை விலக்கி வைக்கும் இந்த திருவிழா நடந்தால் பிரச்சினைகள் வரும் தகராறு வரும் அதை நடத்தக்கூடாதுன்னு அரசாங்கத்துக்கிட்ட விவசாய சங்கம் எப்படியெப்படியோ பேசிப்பார்க்குது. மத நிகழ்வை தடை செய்யமுடியாதுன்னு அரசாங்கம் மறுத்துடுது. பெரிய பின்னடைவும், பிளவும் ஏற்பட்டுவிடுமேன்னு விவசாய சங்கத்துக்கு ஒரே பதட்டம். திருவிழாவில் பிரச்சினை வரும் என்பதற்காக கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரை அரஸ்ட் செய்யறாங்க. பலபேர் தலைமறைவாயிடறாங்க. கடைசியில் என்ன செய்யறாங்கன்னா ராத்திரியோட ராத்திரியா ஆட்களைத் திரட்டி ஊருக்குள்ளே வராம இருட்டிலேயே பதுங்கியிருந்தாங்க. காலையில் திருவிழா ஆரம்பிக்கும்போது, தேருக்கு முன்னால் ஒரு ஆயிரம்பேர் கூடியிருக்கான்னா தலித்களும் குடியானவங்களுமா இவங்க ஒரு ஐயாயிரம் பேரா திரண்டு திபுதிபுன்னு போயி தேரை காலனிக்கு இழுத்துக்கிட்டு வந்து நிறுத்திடறாங்க. பி.சீனிவாசராவ்- ஒரு கன்னட பார்யுப‎னர். அவர் தலைமையில்தான் இந்த தேரை இழுத்துக்கிட்டு வர்ற விசயம் நடந்தது. திருவிழா நடத்திய நிலச்சுவான்தார்கள் கடைசியில் இவங்க காலில் விழுந்து இவங்க கோரிக்கைக்கு அடிபணிஞ்சி தேரை நிலைக்கு கொண்டு போறாங்க.

இ‏ந்த வரலாறு, படிப்பினைகள், அனுபவங்கள் எதுவுமே தமிழகத்தி‎ன் மற்ற மாவட்ட மக்களி‎ன் ஞாபகப் பதிவுகளுக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை. உண்மையில் தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி தலித்துகளுக்கு எதிராகத்தான் இருக்கு. சாதி இந்து மனோபாவம்தான் தமிழ்ச்சமூகத்து மனோபாவம். அதற்காக அவங்க எல்லாரையும் விரோதிகளாக்கிடணும்னு நான் சொல்ல வரல. இதுக்கு மத்தியிலதான் வேலை செய்யவேண்டியிருக்கு. ஒட்டுமொத்தமா பார்த்தோம்னா எல்லோருக்குமே அவங்கவங்க மனோபாவம் சாதி சார்ந்துதானே இருக்கு. அப்ப அந்த சாதிபூராவும் தலித்தை எப்படி பார்க்குது- அதுதானே சமூகத்தின் பொதுபுத்தி. அதுல ஒரு உடைப்பை கொண்டு வர்றதுக்கு ஒரு முயற்சி இருக்குன்னா அதானே முக்கியமான விஷயம். ஆக்டிவிஸ்டுகள் வரலாம் நிறையபேர் வந்திருக்காங்க, தலித் அல்லாதவர்கள் வர்றலாம் நிறைய வந்துகிட்டு இருக்காங்க. இன்னும்கூட வரலாறு விரிவடைஞ்சுதுன்னா இரண்டு நிலைபாடுகளில்தான் சாதி இருந்தது. தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று சொல்லும்போது, உயர்த்திக்கிட்ட சாதி எதுன்னு தலித் சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பினாங்க.

இடைநிலைச் சாதிகள் உயர்த்திக்கிட்ட சாதியாக நடந்து கொள்வதைத்தான் அவங்க அம்பலப்படுத்தினாங்க. உண்மையில் இரண்டுநிலை தான். ஒன்று பறைநிலை. மற்றது பார்யுப‎னநிலை. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் இரண்டுக்குமிடையில் தனக்கொரு விசேசமான இடம் இருப்பதாக இடைநிலைச்சாதிகள் நினைத்துக் கொள்வதுதான் இப்போதைய பிரச்னை. பார்யுப‎னர்கள் அல்லாத அனைவரும் பறையவர்கள்தான் என்று எப்போது நாம் உணர்கிறோமோ அன்றுதான் சாதியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவும் வீச்சும் கிடைக்கும். இது பார்யுப‎னர்களுக்கு எதிராக கட்டப்படும் ஐக்கிய முன்னணி அல்ல. சாதிய கருத்தியலுக்கு எதிராக நமக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட வேண்டிய போராட்டம். தனக்கு கீழே ஒரு சாதி இருக்கவேண்டும் என்கிற நிலைபாட்டை மறுக்கிற எல்லோருக்குமான அணி இது. தனக்கு கீழே சாதியே இல்லாத தலித்கள் இந்த அணியின் முன்னணிப்படையாக இருப்பது ஒரு இயற்கையான நிகழ்வுதான்.

பார்த்திபராஜா- கலைஞர்கள் அமைப்பை சார்ந்து இயங்குதல் பற்றி பல பிரச்சனைகள் பேசப்படுது… அமைப்பைச் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா… உங்களுடைய அனுபவம் எப்படி… ? அமைப்பைச் சார்ந்து இயங்குவதை ஒரு பலமா உணர்றீங்களா, உங்களுடைய கருத்துக்களை வெளிப்படையா வைக்க முடியுதா? அமைப்பு சார்ந்த படைப்பாளிகளிடமிருந்து நல்ல படைப்புகள் வர்றதுக்கான வாய்ப்பு இல்லைன்னு ஒரு பிரச்சாரம் இருக்கு… நீங்க என்ன நினைக்கிறீங்க?

பிரளயன: ரொம்ப பழசு இந்தக் கேள்விகள்… இருந்தாலும், கலைஞர்கள்னு சொல்லும்போது அவங்க பின்னால ஒரு ஒளி வட்டத்தோடதான் ஒரு காட்சி கண் முன்னால விரியுது.. அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்விகளே வருது… அமைப்புகள் சார்ந்து இயங்கும்போது, ஒரு அமைப்பில் இருக்கிற தனிமனிதனுக்கு என்ன பிரச்சனைகள் வருமோ அதே பிரச்சனைகள்தான் எல்லோருக்கும் வரும். நாடகம் என்பது கூட்டு முயற்சிங்கறதால அது ஒரு பிரச்சினை இல்லை… கருத்துரீதியாக மாறுபட்ட கருத்துகள்லாம் வந்திருக்கு… அதெல்லாம் நாங்க பேசியிருக்கோம்.. நாடகக்குழுவுக்குள்ளே எந்த மாதிரியான நாடகச்செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்கற மாதிரியான கேள்விகள்லாம் வந்து சிலபேர் தனியாபோய் வேற மாதிரி இயங்க ஆரம்பிச்சாங்க… அவங்க முதலில் எதை நிராகரிச்சாங்களோ பிற்பாடு அதையே செய்ய ஆரம்பிச்சாங்க… என்னை பொறுத்த வரை நாடகங்கறதே ஒரு ஆக்டிவிசம்தான். இன்று நாடகத்துக்கான புரவலர்கள் இல்லாததால் தொழில்முறை ரீதியாக வளரவில்லை.. ஆனாலும் சில நிதிநிறுவனங்கள் உதவுகிறார்கள். அவங்க ஏன் நிதி தறாங்க அவங்களுக்கு என்ன லாபம் இருக்கு கருணைக் கொடையாக தறாங்களா அப்படிங்கற கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கு… அந்த நிதிநிறுவனங்களோடு சேர்ந்து செயல்படும் கலைஞர்கள் ஒரு அமைப்புக்குள் எப்படி செயல்படணுமோ அப்படி செயல்பட வேண்டியிருக்கு… ஆனால் இப்படி நிதியுதவி பெற்று செயல்படுபவர்களிடம் உங்கள் சுதந்திரம் பறிபோகிறதா என்ற கேள்விகள் வைக்கப்படுவதில்லை. ஆனால் அரசியல் அமைப்புகளோடு இருந்து செயல்படும் கலைஞர்களிடம்தான் இந்த கேள்விகள் வைக்கப்படுகின்றன.

பார்த்திபராஜா- நீங்க உபகதையில் முன்வைத்த மாதிரியான விஷயங்களை, நாடகத்தோட உள்ளடக்கத்தை அமைப்புகளுக்குள்ளிருந்து சுதந்திரமா செய்ய முடிவதாக உணர்கிறீர்களா? அமைப்போட கலாச்சாரத்தளத்தின் அரசியலை நீங்க நுட்பமா பார்க்கிற விஷயங்களை, தனிநபராக பார்க்கிறீங்களா, அமைப்பின் தத்துவார்த்த பின்னணியிலிருந்து எடுத்துக்கொள்கிறீர்களா?

பிரளயன்: அமைப்புன்னு வரும்போதே கருத்தியல்தான் முன் வருது. கருத்தியல்தான் அமைப்புக்குள்ள கொண்டுபோகுது…? அந்த கருத்தியல் இன்னிக்கி எதுஎதுக்கெல்லாம் முகம் கொடுக்கனுங்கற எதிர்பார்ப்புலதான் உபகதை உருவானது. சாதியம் என்கிற சொல்லாடல், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டம், ஏற்றத்தாழ்வு எதனால் உருவாகிறது. எதுவெல்லாம் ஏற்றத்தாழ்வுன்னு அவற்றோடெல்லாம் தொடர்புபடுத்தித்தான் உபகதையை எழுதினோம் செய்தோம். அமைப்புக்குள் ஒரே கருத்தியல் நம்பிக்கை உள்ளவர்கள் ஒண்றிணைந்திருந்தாலும் கூட ஒவ்வொருத்தருடைய அணுகுமுறையிலும் புரிந்துகொள்ளுதலிலும், தத்துவம் வித்தியாசப்படும். எதுக்கு அழுத்தம் கொடுக்கணும் எதுக்கு கொடுக்கக்கூடாது என்பதிலெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம். நான் நினைக்கிற மாதிரியே அமைப்பிலுள்ள எல்லோரும் சிந்திக்க மாட்டாங்க. ஆனாலும் கூட எங்களுடைய நாடகக்குழு மிகமிக சுதந்திரமாக தேர்வு செய்த கதைக்கருதான் உபகதை. அமைப்பில் இருக்கறதால எங்களுக்கு சில செயல் திட்டங்கள் கிடைக்கும். இப்ப ரொம்ப குறைவாகத்தான் செயல்திட்டங்கள் வருது. அப்ப நாடகக்குழுக்கள் செயல்திட்டங்களை தாமாகவே வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கு. நீங்க நினைக்கிற மாதிரி நாடகக்குழுக்களெல்லாம் ஒரு திட்டவட்டமான கட்டுக்கோப்பான மிலிட்டென்டான அமைப்பு விதிகளோடு இருப்பதாக கருதவேண்டியதில்லை. இன்னிக்கு பெரும்பாலான இயக்கங்கள் ரொம்ப ஜனநாயகப்படுகிற காலகட்டம்தான். முன்னைவிட மேலும் மேலும் ஜனநாயகப்படுகிற கட்டாயத்தில் எல்லோரும் இருக்கும்போது இதில் வரும் பிரச்சினைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு கதைக்கருவை தேர்ந்தெடுக்கற போது- நாடகங்களை மேடை ஏற்றுவதற்கு முன்னால் அந்த கருத்தியலில் நம்பிக்கை உள்ள ஆழமான விஷயங்களை தெரிந்த ஆட்களையெல்லாம் நாடகத்துக்கு கூப்பிடுவோம் அதுபோல கருத்துருவாக்கம் (Concept developement) பண்ணும்போது கூட இதுபோன்ற முன்வேலைகளை செய்வோம். நம் பார்வை கூர்மையடைவதற்கு அல்லது பார்வையில் எதாவது பிசகுகள் இருந்தால் இனங்காணுவதற்கு வாய்ப்புகள் வைத்திருக்கிறோம். நாடகம் முடிந்தபிறகு நாடகத்தைப் பற்றி அரசியல் ரீதியா மதிப்பீடு செய்வது உபகதையில் நடந்தது.

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 4

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith 1 Comment →

  • You Avatar
    -

  • Recent Comments