Archive for August 11th, 2005

வார இறுதி வாசிப்பு, ‘அழகிய தீயே’ பிரகாஷ்ராஜ் & ‘ப்ளாக்’08.11.05

போன வார இறுதி மிகவும் சுவாரசியமாகப் போயிற்று. கடந்த ஐந்து வருடங்களில் வெளியான கணையாழி, தீராநதி, காலச்சுவடு மற்றும் உயிர்மையோடு உறவாடினேன். பல விதயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. கணையாழி போரடித்தது. தீராநதியின் அட்டைப்படப் பேட்டிகள் மிகவும் சுவாரசியமாக இருந்தன. பல விதயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. கே.ஏ.குணசேகரனின் பேட்டியில் தொடங்கி அப்துல் கலாமின் விஞ்ஞானி நண்பர் பேட்டி என்று பல விதமான பேட்டிகள். காலச்சுவடும் உயிர்மையும் சோர்வடைய வைத்தன. சதா சர்வகாலமும் அக்கப்போர் பேசினால் போரடிக்காதா? எனக்கு அடித்தது.

படித்த நேரம் தவிர கொஞ்ச நேரம் ஊர் சுற்றலிலும் தண்ணீரிலும்[நீச்சல் குளத்தில்] போனது. மீதி நேரத்தில் கொஞ்சம் சினிமா. பார்த்ததில் இரண்டு சினிமா மிகவும் பிடித்துப்போயிற்று.

‘அழகிய தீயே’ - அருமையான படம். படத்தைப்பார்க்கவில்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் படித்திருந்தது ஞாபகத்தில் இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ். அண்ணனுக்கும் எம்.ஆர்.ராதாவுக்கு அடுத்து பிரகாஷ்ராஜ் இஷ்ட நடிகர். பிரகாஷ்ராஜின் பல படங்களைப்பற்றியும் அவருடைய ஆளுமையைப்பற்றியும் விளம்பர இடைவேளைகளில் பேசிக்கொண்டோம். அப்பா தமிழ்ப்படம் பார்க்கிறாரே என்று பிள்ளைகளுக்கும் ஆச்சரியம். 5ஸ்டார் பட நாயகன், பிரசன்னாவை அந்தப்படத்திலேயே பிடித்திருந்தது. இதிலும் ஏமாற்றவில்லை. பிரகாஷ்ராஜிடம் கதை சொல்லும்போதும், நாயகியுடன் சண்டை போடும்போது படு இயல்பு. பிரசன்னா, நந்தா போன்று இயல்பாக நடிக்கும் நடிகர்களை படங்களில் காணமுடிவதில்லையே. ஏன்? சும்மா சுளுக்கு வந்தமாதிரி விரலைச்சுழற்றும் நகல்கள்தான் சக்கைபோடு போடுகிறார்கள் போல. காதல் படமாக இருந்தாலும் சுவாரசியமாகச் சென்றது. படத்தில் ஓரிடத்தில் நாயகி கேட்டதுபோல, தமிழ் படமென்றால் காதல் படம் மட்டுந்தானா?

‘Black’: டொராண்டோ சென்றிருந்தபோது நண்பர்களிடமிருந்து கொண்டு வந்த படம். அக்காவின் மகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனைநாள் நானும் பார்க்காமல் காத்திருந்தேன். அவளுக்குப் பிடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த என்னை, அவள் ஏமாற்றவில்லை. ஆனால் அண்ணன் மகன்(ஒன்பது வயது) அவ்வளவு ஆர்வமாகப் படம் பார்ப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால்[எதிர்பாரா விருந்தினர் வருகை என்று அறிக.] படத்தை இரண்டு தடவை நிறுத்த வேண்டியதாயிற்று. ஒவ்வொருமுறையும் ஆர்வத்தோடு காத்திருந்தான். இடையில் வந்த தொலைபேசி அழைப்பின்போதும், படத்தை நிறுத்தி விட்டுக் காத்திருந்தான். நிவேதாவை அழைத்துக்கொண்டு படம் பார்க்க அமர்ந்தபோது என்ன படம் என்றபடி வந்தமர்ந்தவன் ஹிந்திப்படம் என்றதும் எழப் பார்த்தான். கண் தெரியாத, காது கேட்காத பேச முடியாத ஒரு சிறுமியைப்பற்றியது என்றதும் டக்கென்று அமர்ந்துவிட்டான். கூடவே ஐந்து வயதும் ஏழு வயதும் ஆன மற்றக் குழந்தைகள். படத்தில் தந்தையிடம் அந்தச் சிறுமி அடி வாங்கும் காட்சியில் எல்லோரும் துடித்துப்போனார்கள். கோபம் கொப்பளித்தது. மாட்டைப்போல மணி கட்டியிருந்ததைப்பார்த்ததும் அவர்களால் தாங்கமுடியவில்லை. பேசிக்கொண்டே இருந்தார்கள். கண்டிப்பான ஆசிரியராக வந்த அமிதாப் பச்சனை, அந்தச் சிறுமியின் தகப்பனைத் திட்டியபடியே மணியை அகற்றியபோது, உடனேயே பிடித்துப்போயிற்று.

சாப்பாட்டு மேஜையில் ஒழுங்காகச் சாப்பிட வைக்க ஆசிரியர் முயற்சி செய்யும் தருணங்களில் பயங்கர அமைதி. ஏறக்குறைய முழுப்படத்தையும் அமைதியாகவே பார்த்தார்கள். கடைசியில் அவளுடைய தங்கை காட்டமாகப் பேசும் காட்சிகளில் இவர்கள் முகங்களில் வேதனை துளிர்த்தது. அதெப்படி அப்படிச் சொல்லிச் செல்கிறாள் அவள் என்றபடி பொரிந்தாள் நிவேதா. இவர்களை முகம் சுழிக்க வைத்த காட்சி, Michelle அவளுடைய ஆசிரியரிடம் முத்தமிடுமாறு கேட்கும் காட்சியே. ஆனாலும், அவர்களிடம் அக்காட்சியை மற்றப்படங்களைப்போல பார்க்க வேண்டாம் என்று சொல்லி, காரண காரியங்களை விளக்கியதும் புரிந்துகொண்டார்கள். அதுவும் ஆசிரியர், அவளுக்கு மென்மையாக முத்தமிட்டு ஒன்றும் பேசாமல் நீங்கியதும் மற்றப்படங்களைப்போல இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள். ‘They are like Father and Child’ - இது நிவேதா.

அமிதாப் பச்சனுக்கு Alzheimers நோய் வந்து அவருடைய நினைவுகள் அழிந்துபோவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. Alzheimers நோய் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு தொடர்ந்து படம் பார்க்க, அவரவர்களுடைய தாத்தா பாட்டிகளைப்பற்றிப் பேசினார்கள். தாத்தாவுக்கு சில சமயம் ஞாபக மறதி வந்தது, அது Alzheimersஆ என்று பிரெண்டன் கேள்வி கேட்டான். அவனுடன் பேசிவிட்டு படத்தைத் தொடர்ந்தோம்.

பட்டமளிப்பு விழாவில் மிஷ்ஷெல் பேசும்போது எல்லோரும் கவனமாக அவளையே கவனித்தார்கள். பட்டமளிப்பு விழா முடிந்து, மிஷ்ஷெல் அவளுடைய ஆசிரியரின் அறைக்குச் சென்றதும், ‘Hope he recognises her, atleast now’ என்று ஒரு குரல் பிரெண்டனிடமிருந்து. ஆசிரியரும் மிஷ்ஷெலும் ஜன்னல் கதவுகளைத் திறந்து மழைத்துளிகளைக் கைகளில் ஏந்தியபடியே மிஷ்ஷெல் முதன்முதலில் சொன்ன ‘water’ என்ற சொல்லைச்சொன்னபோது இங்கே ஒரே ஆரவாரம்.

படம் முடிந்ததென்று அணைக்கப்போன என்னை விடவில்லை. எழுத்தோட்டம் எல்லாம் முடிந்தபிறகுதான் நிறுத்தினொம்.

மேலே வாசித்திருந்தீர்களென்றால், நான் படம் பார்த்ததை விட, அருகில் இருந்தவர்களைக் கவனித்ததுதான் அதிகம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். Blackஐ திரும்பப்பார்க்க வேண்டும். ஆனால், அப்போது முதல் தடவை பார்த்த ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்.

பி.கு.: இப்போது ஒரு பிரச்சினை. இந்த வாரமும் நல்ல படம் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன படத்தைக் கொண்டுபோக?

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், கட்டுரைகள்with 22 Comments →

  • You Avatar
    -


Creative Commons License