Archive for July, 2005

பிரமாபுரம் மேவிய பெம்மான் தரிசனம்07.28.05

எங்கள் ஊரில் பள்ளிக்கூடத்தில் சமயமும் ஒரு பாடம். தேவாரங்களும், புராணக் கதைகளும் சொல்லித் தருவார்கள். கூடவே ஆறுமுக நாவலரது சைவசமய வினாவிடையும் இருக்கும். அதில் படித்த சிலது இன்னமும் ஞாபகம் இருக்கு. திருநீற்றை எப்படிப் பூசவேண்டும், கோவிலுக்கு போனதும் முதலில் யாரை வணங்க வேண்டும், எத்தனை தரம் கோவிலை வலம் வர வேண்டும் என்றெல்லாம் அதில்தான் படித்தேன்(படித்தோம்). உளவாரப்பணி பற்றியும் அப்பரின் தொண்டு பற்றியும் படித்ததும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் கூட்டத்துடன் சேர்ந்து உழவாரப்படை கொண்டு உழவாரப்பணியாக புற்களை வெட்டியதும். இப்படியெல்லாம் படித்தாலும், எனக்கு வீட்டில் முதலில் சொல்லிக் கொடுத்தது திருஞானசம்பந்தரைப் பற்றித்தான். கதையே எங்களை முதலில் ஈர்த்தது. மூன்று வயது பையன் அழுததற்கு சிவபெருமான் வந்தது, அவன் தேவாரம் பாடியது என்று அதிசயிக்க பல விஷயங்கள் இருந்தன. முதன்முதலில் பாடிய தேவாரமும் ‘தோடுடைய செவியன்’தான். அத்தோடு எங்கள் வீட்டிலும் ஊர்க்காரர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனை மிகவும் பிடிக்கும். அவர் எங்கள் ஊர் கோவிலுக்கும் வந்திருக்கிறார். இப்படி எங்கெளுக்கெல்லாம் சீர்காழி (ஊரும், பாடகரும்) என்றாலே மிகவும் பிடிக்கும்.

இதுவரை கோயில் பிரயாணம் போகும்போதெல்லாம் சீர்காழி போகாமல் விட்டதில்லை. சிதம்பரம் சென்று விட்டு, அடுத்த கோவில் சீர்காழிதான். அமைதியான ஊரில் சாலைக்கு அருகிலேயே மிக உயர்ந்த மதிற்சுவர்களோடு தோணியப்பர் கோவில் இருந்தது. முதன்முதலில்தான் கோவிலைக் கண்டுபிடிப்பதற்கு சிரமப்பட்டுப் போனோம். இப்போதெல்லாம் தூக்கத்திலும் எப்படி போவதென்று வழி சொல்லுவோம். :) முதன்முதலில் கோவிலுக்கு போனபோது நாங்கள் எல்லாரும் திருக்குளத்தைத் தான் ஆவலுடன் தேடினோம். அதன் படிகளில் நின்றுகொண்டு கோவில் எப்படித் தெரிகிறது என்று பார்த்தோம். நாங்கள் அப்போது அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்தி வந்ததைப் பார்த்தோம் நாங்கள். கோவிலைப் பார்த்து விட்டு குளத்தில் கால் கழுவலாம் என்று திரும்பிய எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. என்னவென்று கேட்கிறீர்களா? அந்தக் குளத்தின் நிலைதான். ஊர்மக்கள் அனைவரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்று புரிந்து கொண்டோம். (2000இல் சென்றபோது நிலமை இன்னமும் மோசமாக இருந்தது.)

ஒரு வழியாக கால் கழுவிக்கொண்டு, பிரம்மபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தோம். இந்தக் கோயிலுக்குள் சிவனுக்கு மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதலில் பிரம்மபுரீஸ்வரன் சன்னிதிக்குச் சென்றோம். பாடல் பெற்ற தலங்களுள் மிக அதிகமான பாடல்கள் இந்தக் கோவில் இறைவனுக்குத்தான் பாடியிருக்கிறார்கள். மொத்தம் எழுபத்தியொரு தேவாரங்கள் கிடைத்திருக்கின்றதாம். சிவபெருமானின் அடுத்த பிரகாரத்தில் சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இது தோணி வடிவத்தால் ஆனது. தோணி வடிவத்தில் இருப்பதால்தான் தோணியப்பர் என்று சொன்னார்கள் என்றும் சிவபெருமான் ஒரு முறை அறுபத்திநான்று கலைகளையும் தோணியில் கொண்டு போய் காப்பாற்றினாராம். அதனால்தான் சீர்காழியையும் தோணிபுரம் என்று சொல்லுவார்களாம். அதேபோல பிரம்மபுரீஸ்வரர் என்று இறைவனுக்கும் பிரம்மபுரம் என்று ஊருக்கும் பெயர் வரக்காரணம் பிரம்மா இங்கு வந்து சிவனை வழிபட்டதாலாம். தோணியப்பரை வழிபட்டுவிட்டு மேலும் உயரச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி சட்டைநாதரையும் தரிசிக்கலாம். இங்கிருந்து கீழே பார்த்தால் கோவிலை நன்கு பார்க்கமுடியும், கோவில் குளமும் தெரியும். அமைதியாக இருக்கும் இந்தக்கோவிலில் கண்ணை மூடி நின்றால் 1000 வருடங்களுக்கு முந்தய காலத்துக்குப் போய் விடுவோம் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை இக்கோவிலில் சட்டைநாதரை தரிசித்துவிட்டு வரும்போது அருகில் இருக்கும் மண்டபத்தில் ஒரு துறவியைப் பார்த்தோம். ஆறேழு அடிகள் வளர்ந்த கூந்தல் அருகில் இருக்க அமர்ந்திருந்தார் அவர். அவரிடம் திருநீறு வாங்கியது எங்களுக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது. அப்போது இருந்த மனநிறைவும் நிம்மதியும் இப்போது கூட நினைவில் கொண்டு வரமுடிகிறது.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைனாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், பயணம், மரத்தடிwith 5 Comments →

வைக்கிகியில் ஒரு சூரிய அஸ்தமனம்07.26.05

இன்னிக்கு வைக்கிகி(Waikiki) கடற்கரையோரம் போகலாம் என்று எண்ணம். மாலை வேளை வேறு. இதுதான் வைக்கிக்கி போவதற்கு நல்ல நேரம். கடற்கரையில் காற்று வாங்கி விட்டு, அந்தி சாயும் வேளையில் சூரியன் மறைவதைப் பார்த்து அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் கடற்கரையோரம் உலாவி விட்டு வீடு திரும்பலாம்.

நகரின் மத்திய பகுதியில் இருந்து எத்தனையோ பேருந்துகள் வைக்கிகிக்கு செல்கின்றன. ஒரு இருபது நிமிடப் பயணத்தில் போய் சேர்ந்து விடலாம். வைக்கிகிக்கு அருகில் இறங்கி கடற்கரையை நோக்கி நடக்கிறோம். ஆங்காங்கே நட்சத்திர ஹோட்டல்களும், அடுக்குமாடி அப்பார்ட்மெண்டுகளுமாய் இருக்கிறது. நேராகப் போனால் கடற்கரையை அடைந்து விடலாம். இடது பக்கம் திரும்பினால் விதவிதமான பொருட்கள் விற்கும் இடத்திற்குப் போகலாம். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். கொஞ்ச தூரம் தள்ளிப் போனால் உலகில் உள்ள டிசைனர் கடைகள் அத்தனையும் இருக்கின்றன. ஜப்பானியர்கள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள். அதையும் இன்னொருநாள் சுற்றிப் பார்ப்போம். இந்த அற்புதமான மாலைநேரத்தை கடைகளை வேடிக்கை பார்ப்பதிலும் மக்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் ஏன் வீணாக்குவது? அப்படியே இன்னமும் கொஞ்சம் தூரம் நடந்தால் கடற்கரையை எட்டி விடலாம். அலைகளின் சத்தம் கேட்கிறதா உங்களுக்கு? வாருங்கள் வாருங்கள். அந்த நீல நிறமான கடலலைகளைக் கண்டு நீங்கள் சந்தோஷப்படுவதை எனக்குப் பார்க்க வேண்டும்.

இதோ இதுதான் பலரும் பல ஊடகங்களில் பேசிக்கொண்ட வைக்கிக்கி கடற்கரை. சாலையோரத்தில் ஆங்காங்கே நுனி இலைகளுடன் காட்சி அளிக்கும் தென்னை மரங்கள். இங்கெல்லாம் தேங்காய்களை அவை குரும்பைகளாக இருக்கும்போதே வெட்டி விடுவார்கள். அதே போலத்தான் பாளைகளையும் தென்னோலைகளையும் வெட்டி சாய்த்து விடுவார்கள். இங்கு வந்த புதிதில் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பிறகு ஒரு கதை சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது. அமெரிக்கர்கள்தான் இருந்தால், நடந்தால், உட்கார்ந்தால் வழக்கு போடுபவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட அமெரிக்கன் ஒருவனின் தலையில் ஒரு தேங்காய் விழுந்து விட்டதாம். அவனும் அரசின்மீது வழக்குப்போட்டு நிறையப்பணம் சம்பாதித்துக்கொண்டானாம். அதிலிருந்து தென்னைமரத்தை சிரைத்து விடுகிறார்களாம்.

மணலைப்பாருங்கள். எவ்வளவு வெண்மையாக இருக்கிறது. கடலலைகளும் மிகவும் வேகமாக வந்து விழாமல் இருக்க அதோ பாருங்கள் ஒரு தடுப்புக்கட்டி இருக்கிறார்கள். சின்னஞ்சிறுவர்கள் எல்லாம் எப்படி கூத்தடிக்கிறார்கள்!. தூரத்தில் போவதெல்லாம் சரக்குக்கப்பல்கள். மெயின்லாண்டுக்கோ, பக்கத்து தீவுகளுக்கோ போகின்றன. சனிக்கிழமை வந்தால், மற்ற தீவுகளுக்கு சுற்றுலா போகும் கப்பல்களைப் பார்க்கலாம்.

அதோ கொஞ்சம் தூரத்துக்கு அப்பால் இடது பக்கம் தெரிகிறது பாருங்கள் அதுதான் ‘டையமண்ட் ஹெட்’ என்றழைக்கப்படும் பழைய எரிமலை. அதற்கு இன்னொரு நாள் போகலாம். காலைவேளையில் ஹைக்கிங் போவோம். உச்சியில் இருந்து நிறைய விஷயங்களைப் பார்க்கலாம். சரி அப்படியே டையமண்ட் ஹெட்டை நோக்கி நடப்போமா? கடலலைகளுக்குப் பக்கத்தில் நடக்கலாம்.

இங்கு ஹவாயில் வெகு சிலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். ஹானலூலுவின் மத்திய பகுதியில் King Kamehameha-விற்கு ஒரு சிலை இருக்கிறது. இதோ பாருங்கள். இவர்தான் ட்யூக் கஹானமோகு (Duke Kahanamouku). இவர்தான் Surfing-ஐப் பிரபலப்படுத்தியவர். பலருக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம். இவரை Father of International Surfing என்றும் சொல்லுவார்கள். சர்ஃபிங்க் போர்டோடு சிலை செய்திருப்பது நன்றாக இருக்கிறதல்லவா?

அதோ, சாலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் பூங்காவைப் பாருங்கள். ஏதாவது தெரிகிறதா? நன்றாக பாருங்கள். நமக்கு மிகவும் தெரிந்த ஒருவரின் சிலை இருக்கிறதே! ஆமாம், மகாத்மா காந்திக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை போடுவார்கள். முதல் முதலில் இந்த சிலையைப் பார்த்ததும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன்.

சூரியன் மறையப்போகிறான். இங்கே உட்கார்ந்து சூரியன் மறைவதைப் பார்க்கலாமா? நல்ல நீல நிறத்தில் இருந்த கடல் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியான நீல நிறமாக மாறுகிறது. கடற்காற்றும் லேசாக குளிர ஆரம்பிக்கிறது. கூட்டைத் தேடி போகும் பறவைகள் எப்படிச் சத்தம் போடுகின்றன. நல்ல வேளை இன்று நிறைய முகில் இல்லை. முகில் இருந்தால் சூரியன் மறைவதைப் பார்க்க முடியாது. எத்தனை சிவப்பாக இருக்கிறது பாருங்களேன். அதே சிவப்பு முகில்களின் மீதும் பட்டு, எத்தனை விதமான சிவப்பு நிறத்தை காட்டுகின்றன அந்த முகில்கள். தூரத்தில் போகும் கப்பல்களும் கொஞ்சம் mysterious-ஆக இல்லை?! கடலும் லேசாக அந்த சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்கிறது பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் நம் பார்வையில் இருந்து மறைகிறான். இங்கு வைக்கிகி கடற்கரையில் மறையும் அதே வேளையில் வேறு எங்காவது சூரியோதயம் நடக்கும்.

அத்தோடு இந்த வைக்கிகி கடற்கரையில் நம்மைப்போல எத்தனை பேர் இப்படி அமர்ந்து இந்த சூரியனை அந்திசாயும் பொழுதில் பார்த்து இருப்பார்கள்! எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த சூரியனும், இந்தக்கடலும், வைக்கிக்கி கடற்கரையும் இருக்கும். பார்வையாளர்கள்தான் மாறுகிறார்கள்!!

[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், பயணம், மரத்தடிwith No Comments →

நடுவுத்துருத்திக்கு ஒரு நடைப்பயணம்07.24.05

பள்ளிக்கூடம் விடுதலை விட்ட நாள்களில நடுவுத்துருத்தி பெரியம்மா வீட்டுக்குப் போறதுக்கு சில வேளையில அனுமதி கிடைக்கும். எனக்கும் அரவிந்தனுக்கும் இரண்டு மூண்டு நாள் அங்க தங்குறதுக்கும் எப்பயாவது அனுமதி கிடைக்கும். அதுக்கு புஸ்பம் அக்கா ஞானமக்கா மணியக்கா தொடங்கி கமலப் பெரியம்மா வரைக்கும் வந்து கடைசில எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற வெள்ளை மாமா வீட்டுக்கு, ‘மகன் வீட்டுக்குப் போயிற்று வாறன்’ எண்டபடி வந்திருக்கும் பெரிய அம்மம்மா வரைக்கும் சிபாரிசு செஞ்சு, “என்ற பிள்ளைகளை என்ர வீட்டுக்கு அனுப்பவே இப்படி அலையவேண்டியிருக்கு” என்று பெரிய அம்மம்மா ஒரு சொல்லுச் சொன்னாப்பிறகுதான் அனுமதி கிடைக்கும்.

இப்ப பயணம் போறதெண்டா பிளேன்காரனே பயந்து அலறுற மாதிரி சாமான் அடுக்கியண்டு வெளிக்கிடுறமாதிரி அப்ப இல்லைத்தானே? என்ன உடுப்புக் கொண்டுபோறது எண்ட கவலையெல்லாம் யாருக்கு இருந்திருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு எப்படிப்போறம் எண்டதிலைதான் கவனம் எல்லாம் இருக்கும். எப்பயாவது வெள்ளைமாமா கொண்டு போய் விடுற கார் பயணங்களும், பெருங்காட்டுக்கு வானில போய்(van) பிறகு அங்கேருந்து யாழ்ப்பாணத்தில இருந்து குறிகாட்டுவானுக்கு வாற வானில் ஏறிப்போற பயணங்களும் அவ்வளவு பிடிச்சதில்லை.

விளைஞ்சிருக்கிற வயல்கள், காஞ்சுபோய்க்கிடக்கிற வயல்கள், தாழம்பூப் பூத்திருக்கிற, ஒரு புல்லுக்கூட புடுங்கேலாத வறண்ட இடங்கள், வீடுகள் தோட்டங்கள், நடுவால முந்தி எப்பயோ கடல் இருந்து வத்திப்போய், சிப்பிகளெல்லாம் கிடக்கிற இடங்கள் எண்டு நிறைய விதம்விதமான விஷயங்களைப் பார்க்ககூடிய குறுக்கால நடக்கிறதுதான் எல்லாருக்கும் பிடிச்சது. இறுபிட்டில இருந்து குறுக்கால, நடுவுத்துருத்திக்கு நடந்தா, ஒரு மூண்டு நாலு மைலாவது இருக்குமெண்டு நினைக்கிறன்

பின்னேரம் கொஞ்சம் வெய்யில் சாஞ்சோடன, ஒரு தேத்தண்ணியக் குடிச்சிற்று கையில் உடுப்புப் பார்சலோட வெளிக்கிட்டா பிராக்குப் பார்த்தண்டே போயிரலாம். அம்மாவோட வெளிக்கிட்டா, அடிக்கொருதரம் பிராக்குப் பாக்காம பார்த்து நட எண்டு சொல்லுறதைக் கேக்கிற ஆய்க்கினை இல்லை. நம்மட பாட்டுக்கு முன்னுக்குப்பின்னுக்கு எப்படியெண்டாலும் போகலாம். என்ன நாகதாளி இருக்கிற இடத்திலை எல்லாம் கொஞ்சம் கவனமா நடக்கச் சொல்லுவா அம்மம்மா. எல்லாத்தையும் விட அம்மம்மாவோட நடக்கிறதுதான் வலு சுவாரசியமா இருக்கும். ஒவ்வொரு இடமும் முந்தி ஒரு முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தி எப்படி இருந்தது எண்டு சொல்லுவா.

சில விசயங்கள், நம்மட மனசில எப்படி எதுக்கு அப்படியே தங்கிப்போயிருதெண்டு சொல்லேலாது. ஒரு நாள் பின்னேரம். சூரியன் படுகிற நேரம். வானத்தில மேற்குப்பக்கத்தாலை நல்ல சிவப்பு. எங்கட வலதுகைபக்கத்திலைதான் அப்படி இருந்துது. சுத்தி முத்தி மரம்கிரம் ஒண்டுமில்ல. ஒரு குடிசை மாதிரி வீடுதான் கொஞ்சம் தூரத்திலை இருக்குது. அதுவும் இருட்டியண்டு வர்ரபடியா அவ்வளவு வடிவாத் தெரியேல்லை. பறவைகளெல்லாம் மரங்களைத் தேடி சத்தம்போட்டண்டு பறந்துபோகீனம். காலுக்குக் கீழ, நல்லா காஞ்ச நிலம். இருந்த புல்லையும் மாடாடுகள் நல்லாக் கடிச்சுத்திண்டபிறகு மிச்சமிருக்கிற புல்லு செருப்புக்காலுக்குள்ளாலையும் அண்டினபடி. இருட்டியண்டு வர்ரபடியா தூரத்தில போகாம தன்னோட வரச்சொன்ன அம்மம்மாவின்ற கையப்பிடிச்சண்டு நான். அப்பதான், நான் முந்திச் சொன்னனே சின்னக் குடிசை அதில இருந்து ரேடியோ பாடினது. ஒரு காலத்தில ரேடியோ வைச்சிருக்கிறதுக்கு எல்லாம் லைசன்ஸ் வேண்டோணும் எண்டு அப்பதான் தெரிஞ்சது.

இப்பிடிப் போய்க்கண்டே இருந்தா, குறிகாட்டுவான் ரோட்டு வந்திரும். அதில ஏறி, கொஞ்சத் தூரம் நடந்தோடன, ஒரு சின்னப் பாலம் வரும். கடல் நடுவுத் துருத்திய டீவிக்குள்ள டீவி மாதிரி, தீவுக்குள்ள தீவாக்கி இருந்துது. அந்தப் பாலத்துக்கு இரண்டு பக்கத்திலையும் மாரி காலமெண்டா கடல் தண்ணி நல்லா தழும்பியண்டு நிக்கும். நல்ல வெய்யில் காலத்தில, பாத்தி கட்டி உப்பு விளைஞ்சு கிடக்கும். கிட்டப்போய் பொறுக்கி, எப்படி இருக்குமெண்டு பார்ப்பமெண்டா, அதுக்கு மட்டும் அம்மம்மா விடமாட்டா. ‘நீ போய்ருவ. ஏதாவது நடந்திற்றுதெண்டா உன்ற கொம்மாட்ட(அம்மா) யாரு பதில் சொல்லுறது’ எண்டு சொல்லி மாட்டனெண்டு சொல்லிருவா. பாத்தி கட்டின இடம் தவிர மற்ற இடங்களில கொஞ்சம் கடல் தண்ணி நிக்கும். பாலத்துக்கு அங்கால, இடது கைப்பக்கம் சறுகலா இறங்கிறதுக்கு வழி இருக்கும். மாரி காலத்தில வேலியோரம் வரைக்கும் கடல்தண்ணி தழும்பியண்டு நிக்கும். அப்பேக்கையும் அந்தப் பக்கத்தாலை போகலாம். சில நேரம் காலை நனைக்கும். நிறையத் தரம், செருப்பையும் கழட்டியண்டு போயிரும் எண்டு சொல்லி அந்தப் பக்கத்தாலை கூட்டியண்டு போக மாட்டினம். அதோட, பாம்புகளும் கிடக்கும் எண்டு சொல்லிற்றா நாங்கள் ஏன் அந்தப் பக்கம் போறம்?

கடல் தண்ணி வந்து தழும்பியண்டு நிக்கும் எண்டு சொன்னனெல்லா, அந்த வேலிக்கு அங்கால எல்லாம் பெரியம்மாவையின்ற காணிதான். மாரிகாலத்தில வெங்காயம் போட்டிருப்பினம். உருப்பட்ட வெங்காயம், அவையின்ற வீட்டிலையும் காயும். அதோட, பனங்கிழங்கு, பினாட்டு, பனங்காய்ப்பணியாரம் எண்டு அவைட வீட்டில உருப்பட்ட சாமான் அததுக்கான அறைகளில் இருக்கும். ஒழுங்கையில வலதுபக்கம் தோட்டக்காணியெண்டா இடதுபக்கம் வேலியோரமா உருப்பட்ட பூவரசம் மரம் நிக்கிற வேலிதான் பெரியம்மாவையின்ற வீடு. அவையின்ற வீட்டு முத்தத்தில பெரிய முல்லைக் கொடி நிக்குது. பூக்கிற காலத்தில போனா, படலையடியிலயே நல்ல வாசமா இருக்கும்!

பெரியப்பாவின்ற அறையில இருக்கிற ஆளுயுர மணிக்கூடும், ஒரு மணித்தியாலத்துக்கொருக்கா அது போடுற சத்தமும் எங்களுக்கெல்லாம் பிடிச்ச இன்னொரு விசயம். பெரியம்மாவையின்ர வீட்டில கரண்ட் இல்லையெண்டபடியா, அவையின்ற வீட்டில இருக்கிற புத்தங்களையெல்லாம் விடிய வெள்ளன யாரும் எழும்ப முதல் உருட்டிப் பிரட்டினாத்தான் உண்டு. அதுக்குப் பிறகு ஆடு ஆட்டுக்குட்டிகளை, அம்மம்மாவும் அவவின்ற அக்கா தங்கச்சிமார் ஓடி விளையாடின காணியின் துரத்திப் பிடிக்கிறதுதான் எங்கட பெரிய சோலி.

இருட்டினபிறகு, லாம்பு வெளிச்சத்தில் இடியாப்பமும் ஜாமும் அமுக்கு அமுக்கெண்டு அமுக்கினபிறகு முத்தத்தில பெரியாக்கள் உக்காந்து கதைக்கேக்க விடுப்பு பார்க்கிறதை மாதிரி ஒரு சுகம் இருக்குதெண்டு தெரியாது. செல்லம் கொண்டாடுறதுக்குவேற உருப்பட்ட ஆக்கள் இருக்கிறபடியா, பெரியம்மா வீட்டில நிக்கிற மூண்டு நாளும் வலு கொண்டாட்டமா இருக்கும். வீட்டில செய்யச் சொல்லுற சின்னச் சின்ன வேலைகளுக்கே புறுபுறுத்தண்டு திரியுற ஆக்கள், பெரியம்மா வீட்டில ஏதாவது வேலை குடுங்கோ எண்டு கேட்டு நல்ல பெயரும் வாங்கிருவம். அவிச்ச பனங்கிழங்கில இருந்து பீலி எடுக்கிறது, தென்னம்பிள்ளைகளுக்கும் பனங்கண்டுகளுக்கும் தண்ணி விடுறது, பெரியம்மாவுக்கு மூண்டு பெரிய பிள்ளைகள். அந்த அக்காமாரோட அவை போற இடங்களுக்கெல்லாம் பின்னால ஒட்டியண்டு போறது எண்டு மூண்டு நாளும் நல்லாப் போயிரும்.

அதுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பி வரோணும் பாருங்க. இறுபிட்டியில இருந்து துள்ளிக்குதிச்சண்டு வந்த காலுக்கு எங்கேயிருந்தண்டு நோ வருமோ தெரியாது. இழுத்து இழுத்தண்டு வீடு வந்து சேருவா அம்மம்மா.

[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், நினைவலைகள், மரத்தடிwith 4 Comments →

  • You Avatar
    -


Creative Commons License