Talk to her (2002)
பெத்ரோ ஆல்டொமோவார் இயக்கத்தில் ஜாவியர் கமாரா(Javier Camara), டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இரண்டு பெண்கள் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் ஆட்பட்டவர்கள்போல மேடையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேடை முழுவதும் தளபாடங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவர்கள் அவற்றின்மேல் முட்டி விழப்போகிறார்கள் என்று நினைக்கும்போது ஒரு ஆண் வந்து அவற்றையெல்லாம் தள்ளித்தள்ளி விடுகிறான். அவர்களும் கண்ணிழந்தவர்கள்போல மேடையில் அலைகிறார்கள். பின்னணி இசையும் இந்த மேடை நிகழ்ச்சிக்கு வலுசேர்க்கிறது. இந்த மேடை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் இருவர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரின் கண்ணில் கண்ணீர். மற்றவர் முதலாமவருடன் பேச நினைத்தாலும் தயங்கி பேசாமல் விடுகிறார்.
முன்பின் தெரியாத இந்த இருவரும் மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது முதலாமவரான மார்கோவின் காதலி ஒரு matador ஸ்பெயினில் மாடுகளுடன் சண்டை போடுவார்களே அவர்கள்தான். இவர்தான் முதல் பெண் மாடடோர். லிடியா புகழின் உச்சத்தில் இருக்கும்போது சந்திக்கிறார்கள். இவர்களின் உறவு கொஞ்சம் குழப்பம் நிறைந்ததுபோல தெரிகிறது. மார்கோவிடம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டுப்போன லிடியா சண்டையில் இருந்து சுயநினைவுடன் திரும்பவில்லை. மாடு முட்டி கோமாவிற்கு போய் விட்டாள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றவர் பெனிங்னியோ(Benignio). இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ். நிகழ்ச்சியில் நடந்ததைப்பற்றி இவரின் நோயாளியிடம் விவரிக்கிறார். மார்கோவிடம் பேச வேண்டும் போலிருந்ததையும் கூறுகிறார். பெனிங்னியோ பார்த்துக்கொள்வது நான்கு வருடங்களாக கோமாவில் கிடக்கும் அலிசியாவை. அலிசியா பாலே நடனம் ஆடுபவர். பெனிங்னியோ அலிசியாவை காதலிக்கிறார். ஏறக்குறைய இருபத்திநான்கு மணிநேரமும் அலிசியாவுடனேயே செலவழிக்கும் பெனிங்னியோ இதற்கு முன் நோய்வாய்ப்பட்டு இருந்த அவரின் தாயை பராமரித்து வந்தார். தன் பெண்ணை இப்படி ஒருவன் பராமரிப்பதை விரும்பாத அலிசியாவின் தந்தையிடம் பெனிங்னியோ தன்னைப்பற்றி பொய் சொல்கிறார்.
லிடியாவும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளுடன் வந்த மார்கோ, பெனிங்னியோவையும் அலிசியாவையும் சந்திக்கிறார். பெனிங்னியோவும் மார்கோவும் நண்பர்கள் ஆகிறார்கள். பெனிங்னியோ, கோமாவில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான், உணர்வுகள் இருக்கிறது என்று மார்கோவுக்கு சொல்லுகிறார். கூடவே லிடியாவுடன் பேசிக்கொண்டே இருக்குமாறும் சொல்லுகிறார். அலிசியாவுடன் தான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதாகவும் சொல்லுகிறார்.
பெனிங்னியோ அலிசியாவைப்பற்றியும் தன்னைப்பற்றியும் மார்கோவிற்கு சொல்லும்போதுதான் நமக்கும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. அதுவரை, அலிசியாவை பெனிங்னியோவின் காதலியாக நினைத்த நமக்கு, அலிசியாவுக்கு பெனிங்னியோவை தெரியாது என்பதே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெனிங்னியோவின் வீட்டிற்கு எதிரில் இருந்த பள்ளியில்தான் அலிசியா பாலே நடனம் கற்ற்வந்தாள். அவளை ஜன்னல் வழியே கண்டு மயங்கிய பெனிங்னியோ இரு முறை அவளை சந்தித்திருக்கிறான். அலிசியாவின் பர்சை வீதியில் கண்டெடுத்து ஒப்படைத்தபோது ஒரு முறை. அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது தற்செயலாக அவனைக்காணும் அலிசியா அலறுகிறாள். அலிசியாவின் தலைக்கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த பெனிங்னியோ, தன் வீட்டில் அவள் பள்ளிக்கு வருவதற்காக காத்திருக்கிறான். அவள் வரவில்லை. பிறகு, மருத்துவமனைக்கு வந்த அவனுக்கு புது நோயாளியை தன் கண்காணிப்பில் விட்டிருப்பது தெரிந்து பார்க்கப்போகிறாள். மழை பெய்ந்துகொண்டிருந்த போது நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவிற்கு போய்விட்ட அலிசியாதான் அந்த நோயாளி. சுயநினைவில் இர்ந்த போது கிட்ட நெருங்க முடியாத அலிசியாவை, இப்போது முழுக்க முழுக்க கவனிப்பது பெனிங்னியோதான். அவளுக்காகவே வாழ்ந்து வருகிறான் அவன்.
அவ்வப்போது அலிசியாவை அவளது பாலே நடன ஆசிரியை வந்து பார்க்கிறாள். அந்த ஆசிரியைதான் நாம் முதலில் பார்த்த மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இரு பெண்களில் ஒருவர். முதன்முறை அலிசியாவின் பர்சை எடுத்துக்கொடுத்து அவளுடன் பேசியபோது பெனிங்னோ அவளிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று அலிசியாவின் பொழுதுபோக்குகள் பற்றி. அவளுக்கு உலகநாடுகளுக்கு சுற்றுலா போக ஆசை, சைலண்ட் மூவிஸ் பிடிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறான். இப்போது அவளுக்காக உலகநாடுகள் பற்றி வாசிப்பதும், அவளுக்கு படித்த படங்களைப்பார்த்து வந்து அலிசியாவிடம் கதைசொல்வதுமாக பெனிங்னோ இருக்கிறான்.
மார்கோவிற்கு மட்டுமல்ல நமக்கே பெனிங்னியோ அலிசியாமீது செலுத்தும் அக்கறை ஆச்சரியப்படுத்துகிறது. பெனிங்னியோவின் சொற்படி மார்கோவும் லிடியாவிடம் பேசுகிறான். ஆனால் மார்கோவிற்கு லிடியா தன்னிடம் முன்பு பேசவேண்டும் என்று சொன்னது அவளும் அவளுடைய பழைய காதலனும் திருமணம் செய்வதாக எடுத்த முடிவைப்பற்றி என்று தெரியவருகிறது. இதற்கிடையில் பெனிங்னியோ, அவன் பார்த்து விட்டு வந்த ஒரு படத்தைப் பற்றி அலிசியாவிடம் சொல்லுகிறான். அப்போது நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் நமக்கு படம் முடியும் தறுவாயிலேதான் தெரியவருகிறது.
கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறான் பெனிங்னியோ. கோமாவில் இருக்கும் லிடியாவையும் அவளுடன் இருப்பதற்காக வந்த அவளின் பழைய காதலனையும் விட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறும் மார்கோ, பெனிங்னியோவை அப்படி எல்லாம் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறான். அப்படி செய்யப்போவதில்லை என்று சொல்லவைக்கிறான். தன்னுடைய பழைய சுற்றுலா எழுத்தாளர் வேலையை தொடரும் மார்கோ, பல மாதங்களாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறான். இந்நிலையில் அலிசியாவின் உடலில் நிகழும் மாற்றங்கள் மருத்துவர்களை யோசிக்க வைக்கிறது. பரிசோதனையில் அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. விசாரணையில் பெனிங்னியோவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தெரியவருகிறது. பெனிங்னியோ சிறைச்சாலைக்குப்போக அலிசியா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாள். இதெல்லாம் லிடியா இறந்துபோனதை பத்திரியையில் பார்த்து மருத்துவமனையை தொடர்பு கொள்ளும் மார்கோவிற்கு தாமதமாகவே தெரியவருகிறது. பெனிங்னியோவை பார்ப்பதற்காக ஸ்பெயினிற்கு திரும்பி வரும் மார்கோ, பெனிங்னியோவின் வீட்டில் தங்குகிறான். பெனிங்னியோ அந்த வீட்டை அலிசியாவிற்காகவே தயார் செய்து வைத்திருப்பதையும் காண்கிறான்.
மூளை சரியில்லாதவன் என்று கருதப்படும் பெனிங்னியோ, மார்கோவிடம் அலிசியா எப்படி இருக்கிறாள் என்று கேட்ட படியே இருக்கிறான். அலிசியா இறந்து விட்டாள் என்று கருதும் மார்கோ, ஒரு நாள் பெனிங்னியோவின் வீட்டில் இருந்து நடனபள்ளியில் பயிற்சி செய்யும் அலிசியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைகிறான். பெனிங்னியோவின் வக்கீலையும் சந்தித்து என்னவேது என்று விசாரிக்கும் மார்கோ, அனைவரும் பெனிங்னியோவிடம் பொய் சொல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். குழந்தை பிறப்பின்போது அலிசியா சுயநினைவு அடைந்ததையும், குழந்தை இறந்தே பிறந்ததையும் தெரிந்துகொள்கிறான். ஆனால், பெனிங்னியோவின் வக்கீல் மார்கோவிடம், தான் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டாள் என்று சொல்லப்போகிறேன் என்று சொல்வதை தடுக்க முடியவில்லை. ஒரு நாள் காலை செல்தொலைபேசியை ஆன் செய்யும் மார்கோ, அதில் பெனிங்னியோ, தான் அலிசியாவிடம் போவதாக விட்டிருக்கும் செய்தியை கேட்கிறான். அலறி அடித்துக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவனுக்கு பெனிங்னியோ அளவிற்கு அதிகமாக மருந்துகளை சாப்பிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியே கிடைக்கிறது. பெனிங்னியோ வைத்திருந்த பொருட்களில் ஒன்று, அலிசியாவின் ஹேர் கிளிப்.
பெனிங்னியோ அவன் வீட்டை மார்கோவிற்கு விட்டுச்செல்கிறான்.
ஒரு நாள் மேடை நிகழ்ச்சிக்கு செல்கிறான் மார்கோ. அங்கே அலிசியாவையும் அவளது ஆசிரியையும் கண்டு அதிர்ச்சி அடைகிறான். மார்கோவை யாரென்று தெரியாத அலிசியா அவனை அவன் நலமா என்று கேட்கிறாள். மார்கோவை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியையிடம், பெனிங்னியோ இறந்து போன விவரத்தை தனியாக அழைத்துக்கூறுகிறான். தொடரும் மேடை நிகழ்ச்சியை அலிசியா ரசிக்க, அவளுக்கு முன்னால் இருந்த மார்கோ அடிக்கடி திரும்பி அலிசியாவைப் பார்ப்பதோடு படம் முடிகிறது.
Pedro Aldomovarஇன் ‘All about my mother’ படத்தை பார்த்திருந்ததனால், கொஞ்சம் எச்சரிக்கையோடே இந்தப்படத்தை பார்த்தேன். ஆனால், நான் பயந்த மாதிரி இல்லை. நன்றாக இருந்தது இந்தப்படம். நண்பர்களிடம் தைரியமாக பாருங்கள் என்று சொல்லக்கூடியதாகவும் இருந்தது. ஆல்டமோவரின் படங்களில் மேற்சொன்ன படத்தையும் இந்தப்படத்தையும் மட்டுமே பார்த்திருப்பதனால் இவருடைய பாணியை பற்றி நிறைய சொல்ல முடியவில்லை. ஆனால் உறவுகளில், நிகழ்சிகளில் சிக்கல்கள் இருக்கும் படங்களையே எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சாதாரணமாக செல்லும் இந்தப்படம்கூட, பெனிங்னியோ, அலிசியாவை ஒருதலையாக மட்டுமே காதலிக்கிறான் என்று தெரியும் போது வித்தியாசப்படுகிறது. பிறகு சுயநினைவில்லாத அலிசியாவை கற்பழித்த பெனிங்னியோவின் மீது வெறுப்பு வரவில்லை என்பது இயக்குநரின் திறமை என்றே நினைக்கிறேன். அலிசியாவின் மீது வைத்த அன்பினால், அவள் இறந்துபோய் விட்டாள் என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளும் பெனிங்னியோ மீது நமக்கு அனுதாபமே வருகிறது. வேறு உணர்வுகள் இருந்தாலும், அனுதாபமே முன்னிற்கிறது. மார்கோவைப்போல.

பெனிங்னியோவாக நடித்த ஜாவியர் கமாரா நல்ல தேர்வு. நல்ல குரல். படம் நெடுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் சலிப்படைய வைக்கவில்லை. அதேபோல மார்கோவாக நடித்த டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) என்று அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். இசையும், படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு வேறு காரணங்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்த இப்படத்தை நினைத்துப்பார்த்தால் மனதில் முதலில் வரும் உணர்வுகள், நட்பு, காதல், தனிமை, இழப்பு, பெனிங்னியோவின் அக்கறை அவன் அலிசியாவை பராமரிக்கும் ஒவ்வொரு அசைவிலும் தெரிவது. அந்த அக்கறைதான் அவன் மேல் அவ்வளவு கோபம் வராததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
சாதாரணமாகவே நீட்டி முழக்கி கதை சொல்லும் நான், இந்தப்படத்தைப்பற்றி நிறையவே கதைத்திருக்கிறேன். முடிச்சுகளையும் சொல்லிவிட்டேன். இந்தப்பட்த்தை பற்றி எப்படி சொல்வது என்று இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. எப்படி இருந்தது என்று சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது உதவியாக இருந்தால், அதன்படி மாற்றி எழுதுகிறேன்.





A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (