Gaz Bar Blues (2003)

கியூபெக்கின் சிறுநகரமொன்றில் தொழ்ற்சாலைகள் இருக்கும் பகுதியொன்றில் இருக்கும் எரிபொருள் நிலையத்தைக் களமாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டிருக்கிறது. படத்தில் இடைநடுவில் கொஞ்சம் அலுப்புத்தட்டினாலும் மொத்தத்தில் சுவாரசியமாகவே இருந்தது. இந்தப் படத்தைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதவேண்டும் என்று இன்னும் பல படங்களைப் பார்த்தபோது நினைத்தமாதிரியே நினைத்தேன். எந்தப் படங்களைப்பற்றி நினைத்தேன் என்று இப்போது இந்தக் கணத்தில் நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. ஆனால், Gaz Bar Blues அப்படியில்லை. அவ்வப்போது நினைவிலாடிக்கொண்டிருப்பதால் சிறுகுறிப்பாகத்தன்னும் எழுதிவிட யோசனை.
எரிபொருள் நிலையத்தை கியூபெக் பிரெஞ்சு பேச்சுவழக்கில் Gaz Bar என்று சொல்லுவார்கள். இப்போதைய, நமக்கு நாமே திட்டத்தின்கீழ், நாமே எரிபொருள் நிரப்பி பணத்தைக் கொடுப்பது மாதிரியில்லாமல், வண்டியில் எரிபொருள் நிரப்பவென்று தனியாகவொரு ஆளை வைத்திருக்கும் பழைய பாணி எரிபொருள் நிலையம். கியூபெக்கின் ஒரு சிறுநகரத்தில், தொழிற்சாலைகள் அமைந்த பகுதியில் இந்த Gaz bar இருக்கிறது. அதை 15 வருடங்களாக நிர்வகித்து வரும் Monsieur Brochu. Boss என்றுதான் அவரை எல்லோரும் கூப்பிடுகிறார்கள். பாஸுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். படத்தில் ஓரிரு கட்டத்தில் மட்டுமே மகள் வந்து போகிறார். மற்றும்படிக்கு, இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஆண்களே வலம் வருகிறார்கள்.

நகரின் வறுமையான பகுதியில் இந்த Gaz Bar பெரிதாக வியாபாரம் ஒன்றுமில்லை. வரும் ஓரிரு வாடிக்கையாளர்களும் கடன் சொல்லிவிட்டுப்போகும் இரகம். இதுபோதாதென்று அவ்வப்போது வந்து போகும் முகமூடிக் கொள்ளைக்காரர்கள். படம் தொடங்குவதே அப்படியொரு கொள்ளையில்தான். பார்க்கின்ஸன் வியாதியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பாஸ், கல்லாவிலிருக்கும் பணத்தை கொள்ளையர்களிடம் உடனே கொடுத்துவிடுவார். படம் நடக்கும் காலகட்டம் 1989-90 என்றாலும் போன வருடம் எனக்குத் தெரிந்த பெண்ணின் குடும்பத்தினரின் depenneaur-இல் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்தது நினைவுக்கு வருகிறது. கடையில் இருந்தது அந்த 13 வயதுப்பெண்ணும் அவளுடைய அம்மாவுந்தான். அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, இந்தப் பெண் கல்லாவுக்குக் கீழே வைத்திருந்த சில நூறு டாலர் நோட்டுகளைக் கொடுத்துவிட்டிருக்கிறாள். கொள்ளையனும் உடனே சென்றுவிட்டான். பிறகு வந்த போலீஸ், அந்தப் பெண்ணைப் பாராட்டியது. கொள்ளையன் என்றாவது பிடிபட்டுவிடுவான் என்பது ஒரு பக்கமிருக்க, பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிடும். அப்படியிருக்கும்போது கதாநாயகத்தனமாக எதையாவது செய்துதொலைக்காமல் இருக்கும்படி காவற்துறை சொல்லுமாம். இந்தப் படத்திலும், அதையே பாஸும் சொல்கிறார்.
பாஸின் முன்று மகன்களின் முதலிருவரும் Gaz Barஇல் வேண்டா வெறுப்பாக உதவியாக இருக்கிறார்கள். முதலாவது மகன் Regeanஉக்கு புகைப்படமெடுப்பதில் ஆர்வம். இரண்டாமவனுக்கு பாட்டுப் பாடுவதில் ஆர்வம். இவர்களில் மூத்தவன் மட்டுமே ஓரளவு பொறுப்பாக எரிபொருள் நிலையத்தைக் கவனித்துவருபவன். இரண்டாமவன் அடிக்கடி காணாமல் போய்விடுவான். கடைக்குட்டி கை-க்கு வேலை செய்ய கொள்ளை ஆர்வம். ஆனால் 14 வயதான அவனை யாரும் கிட்டே அண்ட விடுவதில்லை. ஆனாலும், அவன் Gaz Barஏ கதி என்று கிடப்பவன்.

இவர்களைத் தவிர, டீக்கடையைச் சுற்றி அமர்ந்து பொழுதைப்போக்குவதைப்போல எரிபொருள் நிலையத்தில் பொழுதைப்போக்கும் ஊர்க்காரர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமாக இருப்பது படத்தைப் பார்க்கும்படி செய்கிறது. விற்பனை அதிகம் இல்லாவிட்டால் இடத்தை மூடிவிடப்போவதாக, அவ்வப்போது மேற்பார்வைக்காக வந்து தொல்லைகொடுக்கும் கம்பனிக் காரன். எரிபொருள் நிலையத்தில் பணத்தைப் பாதுகாப்பாக வைக்குமிடத்தைத் தெரிந்துவைத்துக்கொண்டு திருடுபவன். அவனைப் பிடித்ததும் பாஸுக்கும் மகன்களுக்கும் தெரியாமல் திருடனுக்கு விநோதமான தண்டனை கொடுக்கும், Gaz Bar பொழுதுபோக்கர்கள். அவ்வப்போது வந்து ஐந்து டாலருக்கு எரிபொருள் நிரப்பிவிட்டுக் கடன் சொல்லிவிட்டுப் போகிறவன். இப்படி சுவாரசியமான கதாபாத்திரங்கள் படத்தை செழுமைப்படுத்துகிறார்கள். வேறேதேனும் தருணத்திலும் மேலே சொன்ன கதாபாத்திரங்களில் யாரேனுந்தான் நினைவில் வந்து போகிறார்கள்.
மீதிக்கதைச் சுருக்கம். பார்க்கின்ஸன் நோய், நட்டத்தில் ஓடும் எரிபொருள் நிலையம், வேண்டா வெறுப்பாக வேலை செய்யும் மகன்கள் என்று இருந்தபொழுதில் பொறுப்பாக வேலை செய்துவந்த மூத்த மகன், 1989இல் பேர்லின் சுவரை இடிக்கப்போவது தெரிந்து, அதைப் புகைப்படம் பிடிக்கவென்று செல்கிறான். இரண்டாவது மகன், வழமையாக வாரக்கணக்கில் காணாமற்போகிறவன் இம்முறை மாதக்கணத்தில் காணவில்லை. பாஸும் வேறு வழியில்லாமல் கடைசிமகனை தொழிலில் ஈடுபடுத்துகிறார். மிக மிக உற்சாகமாக அதிகாலையில் கடையைத் திறக்க வரும் மகன் கொஞ்சங்கொஞ்சமாகத் தொழிலைக் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொடுப்பதில் பெரிய பங்கு, அங்கே பொழுதைப் போக்கும் ஊராருக்கு இருக்கிறது.
அப்படியிருக்கும்போது அந்த முகமூடிக்கொள்ளைக்காரன் வருகிறான். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியில் எல்லாமே சுபமாக முடிந்தாலும், பாஸ் ஒரு முடிவுக்கு வந்ததுபோலத் தெரிகிறது.
சில வாரங்களுக்குப் பிறகு, அங்கே பொழுதைக் களிப்பவர்களில் தொடங்கி கடனுக்கு எரிபொருள் நிரப்புபவர்கள் அனைவருக்கும் ஒரேயடியாக மூடிவிடப்போவதைச் சொல்கிறார்.
படத்தை முழுவதுமாகப் பார்த்ததற்கு முக்கிய காரணம், மாறி வரும் சூழலில் சில விதயங்கள், சில தருணங்கள் திரும்பி வரப்போவதில்லை. அம்மாதிரியான தருணங்களையும் விதயங்களையும் பதிவு செய்பவை இம்மாதிரியான படங்களே!








A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (