Zhou Yu’s Train (2002)

வாழ்க்கையில் நாம் கேட்ட, பார்த்த, படித்த, அனுபவித்தவற்றில் எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை அல்லவா. ஆனாலும், அப்படிப் புரிந்துகொள்ளமுடியாதவற்றில் சிலதை இரசிக்கக் கற்றுக்கொள்கிறோமில்லையா. சமயங்களில் எல்லாவற்றையும் அறுத்துறுத்துத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. சிலது புரியாமற்போவதே சுகம் என்றும் எடுத்துக்கொள்கிறோமில்லையா? இந்தப் படத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
அழகழகான சீனத்துப் பீங்கான் பொருட்களை உருவாக்கும் கலை வாய்த்த Zhou Yu. பீங்கான் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் இவள், வாரமிருமுறை ரயிலில் அவளுடைய காதலனைச் சந்திக்கச் செல்கிறாள். அவன், Chen Qing. ஒரு கவிஞன். முன்பே கண்டிருந்தாலும் நடனமொன்றில் உற்சாகமாகப் பொழுதைப்போக்கிக்கொண்டிருந்த Zhou Yuவிடம் ஒரு காதற்கவிதையைக் கொடுத்துத் தன்வசப்படுத்திக்கொண்டவன். அவளை ஒரு ஏரிக்கு ஒப்புமைப்படுத்தி எழுதிய அக்கவிதை ஒரு பத்திரிகையிலும் பிரசுரமானது Zhou Yuவை அவனிடம் நாட்டமேற்படக் காரணமாகிப் போனது. Chen Qingஐ பிரபலமான கவிஞனாக்கப் போவதாக அவனிடமே அடிக்கடி சொல்லிக்கொண்டு அதற்காகச் சில முயற்சிகளையும் அவள் எடுத்தாள். வேறொரு நகரத்தில், புத்தகக்கடையா, நூலகமா என்று குழம்ப வைக்கும் புத்தகங்கள் நிறைந்த அறையில் இருந்த Chen Qingஇற்கு Zhou Yuவின் ஆளுமை கொஞ்சம் தயங்கவைத்தாலும் அவர்களுடைய உறவு அந்த அறைக்குள்ளே வளர்ந்துவந்தது.

Chen Qingஐச் சந்திப்பதற்காக வாரமிருமுறை ரயிலில் செல்லும்போதுதான் Zhang Qiang அவளைச் சந்திக்கிறான். Zhou Yuவிடம் ஈர்ப்பு ஏற்படுவதை அவளிடமே சொல்கிறான். கூச்ச சுபாவமுடைய கவிஞனைக் காதலிப்பவளுக்கு அடிதடியாக வெளிப்படையான பேச்சும் செயலும் கொண்ட இந்த மிருக வைத்தியனைப் பிடிக்கவில்லை. அல்லது அப்போது அப்படித்தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். ஏனென்றால், தொடரும் ரயில் பயணங்களில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள் ஒரு நாள் அவர்கள் உடலுறவு கொள்கிறார்கள். Zhang Qiangஇன் தங்குமிடத்திற்கும் அடிக்கடி செல்பவள், அவனுடைய நண்பர்களுக்கும் விருந்து சமைத்துப்போடுகிறாள்.
இங்கே, இப்படி நடக்கிறது என்றால், மறுபக்கம் நிலமை அவ்வளவு சுமூகமாகவில்லை. Zhou Yu, கவிஞனாக, அவனைப்பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் அவளது இன்னபிற முயற்சிகளும் Chen Qingஐ மூச்சுமுட்ட வைக்கின்றன. திபேத்திற்கு பள்ளிக்கூட வாத்தியாராக வருமாறு அழைக்கப்பட்டிருப்பதையும் Zhou Yuவிடம் சொல்கிறான்.
படத்தில் காட்சிகள் Non-linearஆக எடுக்கப்பட்டிருப்பதாலும் சில காட்சிகள் திரும்பக் காட்டப்படுவதாலும் சில சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தனவா அல்லது ஒரே சமயத்தில் நடந்தவையா என்ற குழப்பம் வருகிறது.

ரயிலில் சந்தித்து உறவை ஏற்படுத்திக்கொண்ட இரண்டாவது காதலனுக்கு, கவிஞன் அவளுடைய வாழ்வில் இருப்பது தெரிந்திருப்பதையும், கவிஞனைப்பற்றி வேறு சில விதயங்களும் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதையும் இங்கே சொல்லவேண்டும்.
இந்த முக்கோணக் காதல் குழப்பம் போதாதென்று Gong Li, குட்டைத்தலைமுடியுடன் கொஞ்சம் வயதான தோற்றத்தில் Xiuவாகவும் வருகிறாள். படத்தின் கதைசொல்லி இந்த Xiuதான். இந்த Xiuதான் முந்நாளைய Zhou Yuவா என்பதுவும் ஒரு குழப்பம். படத்தின் முடிவும் பார்ப்பவர்கள் அவரவர் எண்ணவோட்டத்திற்கேற்ப முடிவை ஊகிக்கும்படி அமைந்திருக்கிறது.

இத்தனை இருந்தும் படத்தைக் கொண்டுசெல்வது Gong Liயும் படத்தின் புகைப்படப்பிடிப்பாளருந்தான். தோற்றத்தில் மென்மையானவளாகவும் மனவுறுதியில் மிகவும் சிலாகிக்கக்கூடியவளாகவும் Zhou Yuவை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்ச சுபாவமுடைய கவிஞராக வரும் Tony Leung Ka Faiக்கும் இது நல்லதொரு வாய்ப்பே. இதற்கு முன்பு பார்த்திருந்த ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வியட்நாமில் வசிக்கும் சீன இளைஞனாக வந்திருந்த ‘The Lover’இலிருந்து வித்தியாசமான பாத்திரம். என்ன இரண்டு படங்களிலும் இவருக்கு காதற்காட்சிகளுக்கு வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. ‘L’amant அ. The Lover’, ‘Hiroshima Mon Amour’ கதை/படக்கதை எழுதிய Marguerite Duras-இன் சுயசரிதையை ஒட்டி எடுத்த படம். வியட்நாமில் இருந்தபோது நடந்த அவரது இளவயது வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட படம்.
Gong Li-இற்காகவும் படக்காட்சியமைப்புக்காகவுமாவது பார்க்கலாம். You won’t be disappointed.





A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (