November 21, 2007

Chaos (2001)

சில திரைப்படங்கள் முற்றிலும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மிகவும் சுவாரசியமாக, ஒன்றரை மணி நேரத்தைச் சுவாரசியமாகக் கவலைகளை மறந்து இரசிப்பதற்கு உதவுகின்றன. எந்தெந்தத் திரைப்படங்கள் யாராராருக்கு பொழுதுபோக்காக அமைகின்றன என்பது அவரவரைப் பொறுத்தது. சிலருக்கு அடிதடியென்றால் சிலருக்கு காதல் படங்கள் இன்னும் சிலருக்கு பேய்ப்படங்கள்!

இன்னும் சில, வாழ்க்கையை ஆராய்பவை. பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்களைவிட இந்தப் படங்களுக்கு இரசிகர்கள் குறைவு. தேடிப்பிடித்துப் பார்ப்பவர்களும் குறைவு. பார்வையாளர்கள் ஒருபுறம் இருக்க, வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நோக்குடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி பெறுபவதில்லை. வெற்றி என்பது எத்தனை இரசிகர்கள் பார்த்தார்கள் என்றில்லை. சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்களா என்ற விதத்தில் வெற்றி பெறுவதில்லை. எங்கேயாவது ஒரு சில இடங்களில் குறை சொல்லும்படியாக அமைந்துவிடுகின்றன. ஆனால், அந்தக் குறைகளின் காரணமாக அந்தப் படங்களை ஒதுக்கி விட முடியாது.

ஏன் இந்தப் புலம்பல் என்று கேட்கிறீர்களா?

Chaos. Coline Serreau என்ற பிரெஞ்சுப் பெண் இயக்குநர் இயக்கி 2001இல் வெளியான திரைப்படம். பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் இந்தப் படத்தின் கடைசி சில நிமிடங்களைக் கொஞ்சம் மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று ஒரு பார்வையாளராக நினைப்பு. ஆனாலும், அந்தக் காட்சிகள் பலரையும் கவர்ந்திருக்கலாம். சிலருக்கு உத்வேகம் கொடுக்கலாம்.

படத்தின் தொடக்கத்திலிருந்து நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் அன்றாட வாழ்க்கையோடு ஒத்துப்பார்த்து விரிவாக அலச முடியும். அலச வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வது இந்த வலைப்பதிவில் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. மங்கை, பத்மா, செல்வநாயகி, பொடிச்சி இன்னும் சில பதிவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் + அறிவு வைத்து சிறப்பாக ஆராய்ந்து எழுத முடியும்.

வெகு சில படங்களை இவர்களோடெல்லாம் சேர்ந்து பார்த்து விவாதிக்க வேண்டும். விதயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். Chaos அதிலொன்று. குறைந்தது எல்லோரும் பார்த்துவிட்டு இணையத்திலாவது கதைக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

May 23, 2007

Clean (2004)

clean.jpg

Maggie Cheung-ஐ ஹீரோ படத்தில் வரும் அற்புதமான சண்டையாளியாகப் பார்த்தபிறகு பார்த்த படமிது. ஹீரோ படத்திலும் ‘In the mood for love’ படத்தில் வந்ததற்கும் முற்றிலும் மாறுபட்ட வேடம். மாகி(g) சுங்கிற்காகவே இப்படம் உருவாக்கப்பட்டதாம். படத்தை எழுதி இயக்கியவர் மாகி(g)யின் முன்னாள் கணவர் பிரெஞ்சு இயக்குநர் Olivier Assayas. ஒலிவியே அசாயஸ்-இன் Irma Vepஇன் படத்திலும் மாகி சுங்தான் கதாநாயகி.

க்ளீன் படம் போதைமருந்துக்கு அடிமையாகிய ஒரு ரொக் பாடகி, எப்படி தன்னுடைய வாழ்வை மீட்டுக்கொண்டு அவளுடைய மகனையும் அடைகிறாள் என்பதை 90 நிமிடங்களில் சொல்கிறது.

கனேடிய ரொக் பாடகர் லீ ஹௌசருடன் சேர்ந்து வாழும் எமிலி வாங். இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்களுடைய மகன், ஹௌசரின் பெற்றோரிடம் வான்கூவரில் வளர்கிறான். ஒரு நாள், எமிலி வாங்கி வந்த போதை மருந்தை இருவரும் ஏற்றிக்கொள்வதற்கு முன்னர் வெடித்த சண்டையில் எமிலி காரை எடுத்துக்கொண்டு போய் முழு இரவையும் காரிலேயே கழித்துவிடுகிறாள். விடுதிக்கு திரும்பி வரும்போது, அங்கே லீ ஹௌசர், போதைப்பொருள் அதிகமான காரணத்தினால் மரணமடைந்து போலீஸாரினால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறாள். அவளிடம் கேள்வி கேட்டு, அவளுடைய பையை ஆராயும் போஸில், எமிலியை சிறையில் அடைக்கிறது. 6 மாதம் சிறையில் இருந்த எமிலி, மகனைத் தேடி வான்கூவர் வருகிறாள். அதற்குள் அவளுடைய போதைப்பழக்கத்தையும் சிறையிலேயே விட்டுவிடுகிறாள்.

clean5g.jpg

எமிலியின் மகனை, அவளிடம் ஒப்படைப்பதற்குலீ ஹௌசரின் பெற்றோர் (குறிப்பாக லீயின் தாய்) எமிலியை அவள் மகனை ஒப்படைப்பதற்கு நம்பிக்கையானவள்தானா என்று நிரூபிக்குமாறு கேட்கிறார்கள். லீ ஹௌசரின் அப்பா, Albrecht Hauserஆக நடித்திருப்பது ஹொலிவூட்டின் நிக் நோல்டே.

தான் முன்பு வாழ்ந்த பாரீஸ் நகரத்துக்குச் செல்லும் எமிலி, அவளுடைய பழைய நண்பர்களைத் தொடர்புகொண்டு உதவி கேட்கிறாள். சிலர் சாக்குப்போக்குச் சொல்லும்போதெல்லாம், அடுத்த நண்பரைத் தொடர்பு கொள்கிறாள். போதைப்பொருள் பாவிப்பதையும் முழுமையாக அவள் நிறுத்திவிடவில்லை. அவளுக்கு மனதில் மகனுடன் சேரவேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும், இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்பால் நாட்டக்காரர்களான சில பெண்களும் எமிலிக்குத் தோழிகளாக இருக்கிறார்கள். முக்கித்தக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக போதைப்பொருள் பாவனையிலிருந்து மீளும் எமிலி வேலையிலும் முன்னேறுகிறாள். சீன உணவகம் ஒன்றில் பரிசாரகராகவும் (waitress=பரிசாரகி?) வேலை செய்கிறாள். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் கொஞ்சம் மாண்டரின் பேசும் எமிலி கொஞ்சம் கொஞ்சமாக வருங்காலத்தில் நம்பிக்கை கொள்கிறாள்.

மனைவியின் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய லண்டனுக்கு வரும் ஹௌசர், பேரனுடன் பாரீஸ் வந்து எமிலியைச் சந்திக்கிறார். எமிலியின் மகன் ஜேக்கு ஏழு வயதென்றாலும் அவனைச்சுற்றி நடப்பதைக் கூர்மையாகக் கவனிக்கும் பழக்கம் உடையவன். அவனுக்குத் தன்னை எமிலியிடம் அனுப்ப பாட்டிக்கு விருப்பமில்லை என்பதை உணர்கிறான். தன்னுடைய மகனுடைய மரணத்திற்கு எமிலிதான் காரணமென்று பாட்டி நம்புவது ஜேவிற்கும் தெரிந்திருக்கிறது. பாரீஸுக்கு எமிலியைப் பார்க்க அவனுடைய தாத்தா கூட்டிச்செல்லும்போது இதை அவரிடமும் சொல்கிறான். தனக்கு எமிலியைப் பார்க்க விருப்பமில்லை என்றும் சொல்கிறான்.

பாரிஸில், தோழியொருத்தியுடன் அவளுடைய குடும்பத்தோடு தங்கியிருக்கும் எமிலி, மகனுக்காக பல ஏற்பாடுகளைச் செய்கிறாள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பவளிடம் தனியாக வரும் ஹௌசர், ஜே அவளைப் பார்க்க விருப்பமில்லை என்று சொன்னதைச் சொல்கிறாள். ஹௌசரைத் திட்டி விட்டு ஆற்றாமையோடு செல்லும் எமிலி, திரும்பவும் ஹௌசரைத் தேடி வருகிறாள். இந்தக் கட்டம் மிகவும் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. எமிலியின் தவிப்பும், சனக்கூட்டத்தினிடையே ஹௌசரைத் தேடுவதும் நன்றாகவிருக்கிறது. ஒரு வழியாக அந்தக் கூட்டத்தில் ஹௌசரைக் கண்டுபிடிக்கும் எமிலி, ஜேவைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்கிறாள். ஹௌசர் தங்கியிருக்கும் ஹோட்டலில் மகனைச் சந்திக்கவும் செய்கிறாள். ஹௌசர் கேட்டுக்கொண்டபடியால் எமிலியுடன் சில நாட்களைக் கழிக்க சம்மதிக்கிறான் ஜே.

clean1g.jpg

ரெண்டு பேரும் பாரீஸ் மிருகக்காட்சிச்சாலைக்குப் போகிறார்கள். அங்கே, ஓரிடத்தில் ஜே தொலைந்து போகிறான். தொலைந்துபோனவனை இவ்வளவு கஷ்டப்பட்டவள் எப்படித் தேடுவாள் என்று நினைக்கிறீர்களோ அதையும் விட பத்துமடங்கு அதிக உணர்ச்சிகளுடன் தேடினாள். ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோனவளை நோக்கி சாவகாசமாக நடைபோட்டு வந்த ஜே, அவள்தான் லீயைக் கொன்றாளா என்று கேட்கிறான். ஜேவைக்கண்டதும் எந்தளவு சந்தோ்ஷப்பட்டாளோ அந்தளவு உறைந்தும்போனாள். பிறகு, அதற்குப் பதில் சொல்வது அந்தளவு சுலபமில்லை என்று சொல்லி நடந்தவற்றைச் சொல்கிறாள். அடுத்து என்ன செய்ய நினைக்கிறாள் என்பதையும் ஜே, சிறுவனானாலும் சொல்கிறாள். அடுத்து இருவரும் எமிலி தங்கியிருந்த இடத்துக்குப்போகிறார்கள். அங்கே வைத்து ஜே, தன்னையும் அவளுடன் கூட்டிப்போகும்படி கேட்கிறான். சன்பிரான்ஸிஸ்கோவில் பாடல் பதிவு பண்ண வந்திருந்த வாய்ப்பைப்பற்றி அவனிடம் முதலிலேயே சொல்லியிருந்தாள் எமிலி. கடவுச்சீட்டை எடுப்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து ஹௌசருடம் ஜே தங்கியிருந்த விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு வெளியே நிற்கும் எமிலி, வெளியே போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஹௌசரின் கண்ணில் பட்டுவிடுகிறாள். அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காத எமிலி, வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிறாள். அந்த நேரத்தில் கடவுச்சீட்டுடன் அங்கே வந்த ஜேயும் தன்பங்குக்கு உளறிக் கொட்டுகிறான். எமிலியிடம் தனியாகப் பேசும் ஹௌசர் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்கிறார். அவரிடம் பேசியபிறகு எமிலி ஜேவிடம் விடைபெற்றுக் கொண்டு போகிறாள். அடுத்த காட்சி சன்பிரான்ஸிஸ்கோவில் பாடல் பதிவு செய்வதுடன் முடிகிறது. எமிலி, பாடல் பதிவுசெய்யுடமிடத்திலிருந்து தொடுவானத்தில் தெரியும் இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதுடன் படம் முடிகிறது.

சாம்பல் வண்ணப் பூச்சுடன் எஃகுத்தொழிற்சாலைகள் நிறைந்த ஹாமில்டன் ஒண்டாரியோவில் தொடங்கிய கதை இடை நடுவே வான்கூவர், லண்டன், பரபரப்பான பாரீஸ், இயற்கை அழகு நிறைந்த அமைதியான சன்பிரான்ஸிஸ்கோவில் முடிகிறது. படத்தில் 90-95 சதவிகிதம் திரையில் தெரிவது மாகி சுங். ஆரம்பத்தில் ஆங்கிலேய உச்சரிப்புள்ள ஆங்கிலம் பேசியபடி அறிமுகமாகுபவர், பாரீஸில் சரளமான பிரெஞ்சு பேசுவதுடன் சீன உணவுவிடுதியில் வேலை செய்யும்போது மாண்டரினும் பேசுகிறார். ஹாங்காங்கில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்த மாகி சுங்கிற்கு பல மொழிகள் தெரியும். ஒரு தடவை மாண்டரின், கான்டனீஸ், ்ஷாங்கைஸ் என்று மூன்று மொழிகளையும் பிசகில்லாமல் பேசி நடித்திருக்கிறாராம்.

பெரும்பாலும் சண்டைப்படங்களில் நடித்துக்களைத்திருந்த மாகி சுங் 90களில் நடிப்பதில்லை என்று ஓய்விலிருந்திருக்கிறார். ஹாங்காக் சென்று அவரைத் தேடிப்பிடித்துக் கதை சொல்லி, Irma Vepஇல் நடிக்க வைத்திருக்கிறார் ஒலிவியே அசாயஸ். இர்மா வெப் படம் முடியும்போது இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இடைநடுவே வொங் கர்-வாயின் அழைப்பின் பேரில் ஹாங்காங் செல்பவர் சில மாதங்களில் திரும்பி வர நினைக்கிறார். மாகி சுங் போனது ‘In the mood for love’ படத்தில் நடிக்க. 15 மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தபோது ஒலிவியே அசாயஸ்ஸுக்கும் மாகி சுங்கிற்கும் இடையே பல மாற்றங்கள் உருவாகியிருந்ததாம். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் மாகி சுங்கை மனதில் வைத்து ‘க்ளீன்’-ஐ உருவாக்கியிருந்திருக்கிறார் ஒலிவியே அசாயஸ். இரண்டு பேரும் இந்தப் படத்தை நிறுத்தாமல் படம்பிடிக்க எண்ணி முடித்திருக்கிறார்கள். இடைநடுவே, ‘2046′இல் நடிக்க வொங், கர்-வாய் அழைப்பு விடுக்க இரண்டு மாதங்கள் மட்டுமே கொடுத்து சில காட்சிகளில் நடித்துக்கொடுத்தாராம். ஒரு படத்தில் தொடங்கி இன்னொரு படத்தில் முடித்திருக்கிறாக்கள். ஆனாலும் மாகி சுங்கின் திறமையை வெளிப்படுத்தும்படியாக ஒரு படம் கொடுத்ததற்கு ஒலிவியே அசாயஸ்ஸைப் பாராட்டத்தான் வேண்டும்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் மாகி சுங்கின் நடிப்பு பலரையும் பார்க்க வைத்திருக்கிறது. மாகி சுங்கிற்கு கான் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும் இந்தப் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. இது நடந்தது 2004இல். இந்த வருடம் கான் விழாவில் நடுவர் குழுவில் மாகி சுங்கும் இடம் பெற்றிருக்கிறார். இனிமேல் படத்தில் நடிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கும் மாகி சுங். மனதிற்குப் பிடித்தமாதிரி ஏதேனும் காமடி கலந்த பாத்திரங்கள் வந்தால் மறுபரிசீலனை செய்வதாகச் சொல்லியிருக்கிறாராம்.

மாகி சுங்கின் வழமையான பாத்திரங்களிலிருந்து மாறுபட்ட இயல்பான நடிப்பிற்காகப் பார்க்கலாம்.

May 8, 2007

A Nos Amours [To Our Loves] (1983)

வரவர இங்கே எழுதுவது கடினமாகிக்கொண்டே வருகிறது. இந்த வலைப்பதிவில் எழுதுவதை ‘திரைவிமர்சனம்’ என்றெல்லாம் முத்திரை குத்த விரும்பாததால், ‘Moveitalk - திரைப்பார்வை’ என்று சொல்லிக்கொண்டேன். அப்படிச் சொல்லி திரைப்படங்களைப்பற்றிப் பேசலாமென்று ஒரு எண்ணந்தான். ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை பிறகுபிறகு வரத்தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு படததைப் பார்த்தால் அதைப்பற்றி எதையாவது கிறுக்க முடிந்தது. பிறகுபிறகு, ஒரு படத்தைப் பார்த்தபிறகு அந்தப் படத்தை இயக்கிய இயக்குநரின் பிற படங்களைப் பார்க்காமல் என்ன எழுதுவது, நடிகர்களின் ஏனைய படங்களைப் பார்க்காமல் எதை அலசுவது என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கேட்டுப் பேசாமலேயே இருந்துவிட்டாயிற்று.

எதிலும் ஒரு அத்தாரிட்டி, கரைகண்ட ஆசாமி போன்று பார்த்த ஒரேயொரு ஈரானியத் திரைப்படத்தை அலசியதையோ மறக்கவில்லை. அப்படி வரும் சில இடுகைகளைப் படிக்கும்போது நான் முன்பு எழுதியவை நினைவுக்கு வந்துபோகும்.

அப்படியெல்லாம் இருந்தாலும் A Nos Amours போன்ற படங்களைப் பார்க்கும்போது கை சும்மா இருக்க மாட்டேனென்கிறது. A Nos Amours-இன் இயக்குநர் Maurice Pialat-இன் பிற படங்களைப் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய தேடலை எனக்கு நினைவுபடுத்துவதற்காவது சிறு குறிப்பாக எழுதி வைக்கலாமென்ற எண்ணமே, இந்த இடுகைக்குக் காரணம்.

தன்னிலை விளக்கமெல்லாம் யார் கேட்டார்கள் என்பதையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி, எழுதி வைத்தாயிற்று. ;)

anosamours.jpg

A Nos Amours எதைப்பற்றியது? Suzanne என்ற பதின்ம வயதுப்பெண்ணை மையமாகக் கொண்டு நம்மெல்லோரையும் நம்மை நாமே உள்நோக்கிப் பார்க்க வைக்கும் படம். பொதுவாகவே நாம் மிகவும் Judgementalஆனவர்கள். நம்மால் முடிகிறதோ இல்லையோ, நாம் செய்கிறோமோ இல்லையோ அடுத்தவரைப் பற்றி ஏதாவது புரணி பேசிக்கொண்டேயிருப்போம். அடுத்தவருக்காகவே வாழ்ந்தும் முடிப்போம். இது நமக்கு (தமிழர்களுக்கு) மட்டுமே ஆகி வந்த குணமல்ல என்பதும் உண்மை!

ம்ம்.. Suzanne என்ற பெண்ணை எந்த விதமான Judgementsஉம் (தமிழில் என்ன வார்த்தை?) இல்லாமல் பார்த்திருப்பது வித்தியாசமாக விசே்ஷமாகவிருக்கிறது.

அப்பா, அம்மா, அண்ணன் என்று சிறிய குடும்பமாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் காயப்படுத்தத் தயங்குவதில்லை. வழமையாக வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடுகிறாள் என்ற கோணத்தில் அல்லாது யாருடனாவது உடலைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லும் Suzanne. அப்படிப் பகிர்ந்துகொள்வதற்காக அவள் யாரையும் தேடிப்போகவேண்டிய அவசியமில்லாமல், அவளைத் தேடி வருகிறார்கள் பலர் - நண்பர்கள், அன்னியர்கள், நண்பர்களின் நண்பர்கள் இப்படி. அப்படி வரும் எல்லோருடனும் உடலைப் பகிர்ந்துகொள்கிறாள், ஒருவனைத் தவிர. அவளை காதலிப்பதாகச் சொல்பவனைத் தவிர.

குடும்பத்தில் தந்தையுடன் மட்டுமே ஓரளவு சுமூகமான உறவு அவளுக்கு இருக்கிறது. ஒரு காட்சியில், குடும்பத்தை விட்டுப் போகப்போவதாக அவளிடந்தான் அவளுடைய தந்தை முதலில் சொல்கிறார். படத்தின் கடைசியில் திருமணம் செய்தவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சான் டியேகோ போவதை அவளும் அப்பாவிடந்தான் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறாள்.

படத்தில் பல காட்சிகளும் வசனங்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். யோசிக்கவும் வைக்கலாம்.

Suzanne considers her father to be the closest person. She seems to be comparing everybody she meets to him. Nothing strange in that. Psychologists have been talking about it too. Suzanne’s father and brother seem to be attracted to her and at the same time feel repulsed and jealous. If the brother points out to his friend, about his sister’s attractiveness. Towards the end of the movie some of the friends remark about the brother’s jealous attention too. They say something like, ‘We are primitive people’.

The movie is quire jumpy in that there does not seem to be a beginning and ending to scenes. The movie seems to be jumping from scene to scene. But for all the confusion, the impact on the viewer is quire strong.

maurice_pialat.jpg

Maurice Pialat has also directed “Le Garவூu”, ”Loulou’ and ‘Van Gogh’. Loulou’s available in the local library with a hugh waiting list. Van Gogh is nowhere to be seen. Have anyway filled out a request form.

தமிழில் தொடங்கி இங்கிலி்ஷில் முடித்திருக்கிறேன். படத்தைப் பற்றி விவரிக்க வேண்டுமென்றால் விரிவாகக் கதையைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாமல், எனக்கு எப்படியிருந்ததோ அப்படியான உணர்வு பிறருக்கும் வரட்டும் என்று விருப்பம். படம் பார்த்தபிறகு Maurice Pialatஐப்பற்றித் தெரிந்துகொள்வதற்காக வாசித்தவற்றிலிருந்து ஒரு சுவாரசியமான இயக்குநரை கண்டடைந்திருக்கிறேன் என்று உணர முடிந்தது. குறிப்பாக, ஒளிப்பதிவாளர் Jacques Loiseleux-இன் பேட்டிகள் Maurice Pialatஐப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள உதவின.

கிரைட்டீரியன் இணையத்தளத்தில் Molly Haskell எழுதிய கட்டுரை

Maurice Pialat (1925 - 2003) - A Tribute

http://www.maurice-pialat.net

February 4, 2007

மொசியோர் இப்ராஹிம் Monsieur Ibrahim (2003)

வந்தபுதிதில் பார்க்க நினைத்து முடியாமல், சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த படம். பார்க்க நினைத்ததற்கு முக்கிய காரணம் ஒமார் ்ஷெரிஃப். லாரன்ஸ் ஓஃப் அரேபியாவை நினைத்தாலே பீட்டர் ஓ டூலின் லாரான்ஸை முந்திக்கொண்டு நினைவுக்கு வருவது ஒமார் ்ஷெரிஃபின் ்ஷாரிஃப் அலி. அதற்குப் பிறகுதான் டாக்டர் ்ஷிவாகோ. போனால் போகிறதென்று ஃபன்னி கேர்ள்-ஐயும் சொல்லிவிடலாம். ஒமார் ்ஷெரிஃப், ஓய்விலிருந்து வெளிவந்து இந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், படம் எடுக்கப்படுவதற்கும் பாடுபட்டிருந்தார் என்று படித்ததுதான் ஆர்வத்துக்கு முக்கிய காரணமாகவிருந்தது.

1960களின் தொடக்க கால பாரிஸில் வறுமையான பகுதி. ஒடுக்கமான தெருக்கள். பலதரப்பட்ட மக்கள் வாழுமிடம். தெருக்களில் பாலியல் தொழிலாளிகளின் சகஜமான நடமாட்டம். இங்கே கசவாரத் தந்தையோடு வாழும் 16 வயது மோமோ. அவனுடைய தாய் அவர்களை விட்டுப் போய்விட்டாள். வீட்டுப் பராமரிப்புகள், சமையல், வீட்டுப் பொருட்கள் வாங்குவது என்று எல்லாப் பொறுப்புகளும் மோமோவிடம். தன்னுடைய பிறந்த நாளுக்குத் தானே ஏற்பாடுகள் செய்து கொண்டாட முனையும் அவனிடம், எப்போதோ வீட்டை விட்டுப்போன அவனது அண்ணனின் புகழையே பாடிக்கொண்டிருப்பதுதான் அவனது அப்பாவின் குணம். இதனால், வீட்டில் எப்போதும் ஒருவிதமான போர்ச்சூழல் நிலவிக் கொண்டிருந்தது. வீட்டுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்குவதற்குத் தோதாக மோமோவின் அடுக்குமாடிக்கட்டடத்துக்கு எதிரிலேயே ஒரு மளிகைக் கடை.. கடைக்காரர் இப்ராஹிம் (ஒமார் ்ஷெரிஃப்) துருக்கிக்காரராக இருந்தாலும் அரேபியராகத்தான் அறியப்படுகிறார்.

கவனிப்பில்லாமல் வளரும் மோமோவைப் பார்த்துக்கொள்வது தெருவில் நடமாடும் அந்தப் பெண்களும் எதிர்க்கடைக்காரரான இப்ராஹிமுந்தான். தெருப்பெண்களுக்கும் மோமோவுக்குமான உறவு சுவாரசியமான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்டியலை உடைத்து எடுத்த பணத்துடன் முதலாவது உறவு தேடிப்போகும் மோமோவிடம் அதுபற்றிப் பேசியபடியே உறவுகொள்வதில் தொடங்கி பிறகுபிறகு அவனைக் கவனித்துக்கொள்வதுவரை நீடிக்கும் அந்த உறவு வித்தியாசமானதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது. இந்த உறவு இப்படியென்றால், கடைக்காரர் இப்ராஹிமுடனான உறவு வித்தியாசமானது. கடையில் சிறுசிறு பொருட்களைத் திருடும் மோமோவைக் கண்டுகொள்ளாமல் விடுவதில் தொடங்கிப் பிறகு கஞ்சத்தனமான தந்தையின் உணவில் விலை குறைந்த உணவுகளைக் கலந்து கலப்படம் செய்வது, மோமோவுக்குப் பிடித்த உணவுப்பண்டங்களைக் கொடுப்பது என்பதிலிருந்து மனம் விட்டுப் பேச ஊக்குவிப்பது, அறிவுரைகளைக் கொடுப்பது என்று எல்லாவகையிலும் தந்தையாகியிருந்தார் இப்ராஹிம்.

இப்போதைய சூழலில் இவ்வாறு வலிந்து வந்து சினேகம் பாராட்டுபவர்களை, இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார் என்று பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நானும் விதிவிலக்கல்ல. படத்தில், இப்ராஹிம் வலிந்து வந்து உதவும் காட்சிகளில் இவர் ஏன் இப்படி செய்கிறார் என்றுதான் நினைத்தேன். வயதான பெரியவர்கள் சிறியவர்களை அன்பால் வழிநடத்துவது ஒரு க்ளி்ஷே என்றால் மற்றொன்று மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்டது. யூதச் சிறுவன் மோமோவுக்கும் இஸ்லாமியர் இப்ராஹிமுக்கும் இடையில் ஏற்படும் நட்பு. ஆங்காங்கே ‘The 400 blows’-இன் Antoine Doinelஐ நினைவுபடுத்தும் மோமோவை வழிப்படுத்துவதில் இப்ராஹிமுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறைந்த அளவு பங்கு, தெருவில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளுக்குப் போகிறது.

படத்தின் பிற்பாதியில் திடுதிடுப்பென்று வரும் மாற்றங்கள் வலிந்து செலுத்தப்பட்டது போலத் தோன்றினாலும் இப்போதும் மனதில் நிற்பது இப்ராஹிமுக்கும் மோமோவுக்கும் இடையில் ஏற்பட்ட அழகான நட்பு. அருமையான முறையில் சித்தரித்திருக்கிறார்கள். அதற்காகவே இயக்குநரையும் நடித்த ஒமார் ்ஷெரிஃபையும் Pierre Boulangerஐயும் பாராட்டலாம். ஓய்விலிருந்து வந்து இப்படம் வெளிவருவதற்கு பல முயற்சிகள் எடுத்த ஒமார் ்ஷெரிஃபுக்கு இதுவொரு அருமையான படம்.