July 10, 2006

The Proposition (2005)

இந்த ஆஸ்திரேலிய வெஸ்டர்ன் கிளாசிக் படம், பல விருதுகளைப் பெறவேண்டிய படம். பெறுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திடீரென்று தகரக்கொட்டாயொன்று துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்படுகிறது. உடனிருந்த பெண்கள் உயிரிழக்க, 14 வயதுத் தம்பி காயப்பட தனித்துப் போகிறான் சார்லீ பர்ன்ஸ். அவர்களைப் பிடித்த காப்டன் ஸ்டான்லீ அவர்களிடம் பேரம் பேசுகிறான். சார்லீ, அவனுடைய மூத்த சகோதரன் ஆர்த்தர் பர்ன்ஸைப் பிடித்துக் கொடுத்தால், சார்லியையும் அவனுடைய தம்பியையும் விட்டுவிடுவதாகச் சொல்கிறான். சார்லீயை நம்பலாமா கூடாதா? ஆர்த்தரின் கொடூரமான பழக்கங்களினால் தம்பியைக்கூட்டிக்கொண்டு பிரிந்து சென்ற சார்லி என்ன செய்வான்? மைக் பர்ன்ஸ் உயிர் பிழைப்பானா? அல்லது அண்ணன்கள் இரண்டு பேரும் சேர்ந்து தம்பியைத் தப்ப வைப்பார்களா? அல்லது அதற்குள் மைக் பர்ன்ஸ் செத்துவிடுவானா என்று பல கேள்விகள்.

இடம் ஆஸ்திரேலியா என்பதைத் தவிர மற்றையதெல்லாம் தெரிந்த பழகிய விதயங்களே. கோடூரமான கொள்ளைக்காரர்கள். பிராந்தியத்தின் சட்ட ஒழுங்கைக் கட்டிக்காக்க முயலும் போலீஸ். போலீஸ் காரனின் நாகரீகமான மனைவி. பழங்குடி இனத்தவர்கள். என்று எல்லாமே தெரிந்த விதயங்கள்.

ஆனால், தொடங்கியதில் இருந்து நம் கவனத்தைத் தக்க வைப்பதில் இயக்குநரும் கதாசிரியரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல காமரா. ஆஸ்திரேலியாவின் புழுதி பறக்கும் நிலம் படத்தை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. கொள்ளைக்காரர்களாக நடித்திருக்கும் கை பியர்ஸும் டானி ஹஸ்டனும் அசல் கொள்ளையர்கள் போலத் தெரிகிறார்கள். எல்.ஏ. கான்ஃபிடென்்ஷியல் மற்றும் மெமெண்டோ படங்களுக்குப் பிறகு இப்போதுதான் கை பியர்ஸைப் பார்க்கிறேன். i dont know why he doesnt act in more movies.

நடிகர்கள் அனைவருமே ஏதோவொரு விதத்தில் நம் கவனத்தைக் கவருகிறார்கள். ‘Breaking the Waves’ கவனத்தை ஈர்த்த எமிலி வாட்சன், காப்டன் ஸ்டான்லியின் ஆங்கில மனைவியாக. கொஞ்ச நேரம் வந்தாலும் கவனத்தில் நிற்கும் ஜோன் ஹர்ட். மிகச் சிறிய வேடத்தில் David Gulpilil. இவர்களெல்லோரையும் விட கூடுதல் கவனத்தைப் பெற்றவர் காப்டன் ஸ்டான்லியாக நடித்திருக்கும் Ray Winstone. கொள்ளைக்காரர்களுடன் பேரம் பேசி சார்லீ பர்ன்ஸை விடுவித்துவிட்டு அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவது. வீட்டில் நாகரீகமான மனைவியிடம் தன்னுடைய cockney வழக்கில் கதைப்பது, மனைவி இங்கிலாந்தில் இருப்பதுபோல நடந்துகொள்வதற்கு உதவியாக இருப்பது, தன்னுடைய திட்டம் பலிக்குமா என்று தெரியாமல் இருப்பது என்று பல பரிமாணங்கள் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு சுவாரசியமான காட்சி. காப்டன் ஸ்டான்லியின் வீட்டில் வேலை செய்யும் பழங்குடியினத்தவரொருவர் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் செல்கிறார். போகும்போது கவனமாக, சப்பாத்துகளைக் கழற்றி வைத்துவிட்டுப் போகிறார். டேவில் குல்புலில்-உம் அதேபோல அவரைப்பற்றிய விவரணப்படத்தில் நடந்துகொண்டது நினைவுக்கு வந்தது. சொந்த இடத்துக்குப்போகும்போது வெளியுலகின் எச்சங்களை அவரும் துறந்து குடும்பத்தாருடன் சொந்த மொழியில் பேசிப்பழகி வேட்டையாடி வாழ்ந்ததைக் காட்டினார்கள்.

வெட்ட வெளியில் படத்தை எடுத்திருந்தாலும் அது பற்றிய உணர்வு நம்மிடம் இல்லாதிருக்கிறது. காமரா அந்தளவு சிறப்பாக இருக்கிறது.

தவிர்க்கக்கூடாத படம் என்பதை மட்டும் திரும்பச் சொல்லி வைக்கிறேன். ஏற்கனவே வந்திருக்கும் வெஸ்டர்ன் படங்களுக்கு எந்தளவும் குறைவானதல்ல. என்னென்ன படங்களுடன் ஒப்பிடலாம் என்று சொல்ல ஆசைதான், ஆனால் அதுவே கதையை வெளிக்காட்டி விடுமோ என்று பயமாக இருக்கிறது. நீங்களே பாருங்களேன். :)

April 17, 2006

The Tracker (2002)

ஆஸ்திரேலிய பழங்குடியினர் ஒருவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெள்ளையினப் பெண்ணொருத்தியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பழங்குடியினத்தவனைத் தேடிச் செல்கிறார்கள். மூன்று போலீஸார் கூட்டணியில் ஒருவர் இதற்காகவே குழுவில் சேர்க்கப்பட்டவர். அடுத்தது புதிதாகப் போலீஸில் சேர்ந்த இளம்வயதினன். அடுத்தது அனுபவசாலியும் மூவரிலும் கொடூரமானவன். இவர்களின் பெயர் என்னென்ன என்றெல்லாம் சொல்லப்படவும் இல்லை. அவர்களும் தங்களுக்குள் பெயர்களைப் பயன்படுத்தவும் இல்லை. கொலை செய்தவன் போன பாதையைத் தொடர்ந்து செல்ல பழங்குடியினத்தைச் சேர்ந்த இன்னொருவன் உதவுகிறான். அவனும் போலீஸில் வேலை செய்பவன்தான். குதிரையில் தொடரும் போலீஸாரை வழிநடத்திச் செல்பவந்தான் இந்த Tracker. இவனைப்பற்றியும் நமக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாது.

கரடுமுரடான நிலங்களில் பயணிக்கிறார்கள். போகும் வழியில் பலவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. முதல் நாள், தன்னுடைய வாத்தியத்தை வாசிக்கும் புதியவனிடம், சத்தம் போடவேண்டாம், யாரேனும் வந்தால் தெரியாது என்று ஒரு போலீஸ்காரன் சொல்ல, மற்றவன், அவர்கள் வருவது கேட்காது என்கிறான். பழங்குடியினத்தவனோ, அவர்கள் ஏற்கனவே இங்கிருக்கிறார்கள் என்கிறான்.

போகும் வழியில் பார்த்த பழங்குடிக் குடும்பத்தினை, அவர்கள் ஏதும் செய்யவில்லை என்றாலும் அவர்கள் போலீஸ்காரகள் உடுத்தும் உடை போட்டிருப்பதால் கொல்கிறார்கள். கொல்லும் காட்சியும் இன்னும் பல வன்முறை நிறைந்த காட்சிகளும் ஓவியங்களாகக் காட்டப்படுகின்றன. அதே போல படத்தில் இடையிடையே பாடல்கள், கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. பாடப்பட்ட பாடல்கள், இந்தப் படத்திற்காகவே எழுதப் பட்டவையாம்.

தொடரும் காட்சிகள், மிகவும் சுவாரசியமாகவிருக்கின்றன. பல சமயங்களில் என்ன நடக்கின்றது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பழங்குடியின Trackerஆக நடித்திருக்கும் டேவிட் குல்பிலில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய கூர்மையான கண்கள், இந்த Tracker சாதாரணமானவர் அல்ல என்று சொல்கிறது. அதேபோல கொடூரமான போலீஸ்காரனாக நடித்திருக்கும் Gary Sweet மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். ஏனைய நடிகர்களும் அவர்களின் நடிப்பினால், நல்லதொரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் பல விருதுகளை இந்தப் படம் பெற்றிருக்கிறது. அதேபோல வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநர் Rolf de Heer விருது பெற்றிருக்கிறார்.

David Gulpilil நடித்திருக்கும் Walkabout (1971 - இவருடைய முதல் படம்) மற்றும் Rabbit Proof Fence (2002) படங்களையாவது பார்க்க வேண்டும். (இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் குறிப்பு.).

The Tracker பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் தவற விடாதீர்கள்.

பின்குறிப்பு: ஆஸ்திரேலியப் படங்கள் பற்றி அவ்வளவாக வெளியே தெரியவருவதில்லை. ஆஸ்திரேலிய வலைப்பதிவர்கள், அங்கே உருவாகும் படங்களைப்பற்றி எழுதினால் நன்றாகவிருக்கும்.