February 21, 2008

Away from Her (2007)

Category: Uncategorized

0802202.jpeg

சில வருடங்களுக்கு முன்பு தோழியொருவரின் பெற்றோர்கள் நாங்கள் வசித்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். தோழியைப்போலவே அருமையாகப் பழகக்கூடிய அவர்களை எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது. அன்ரி மட்டும் அவ்வப்போது பேசியதையே ஒரு ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு திரும்பவும் சொல்வார். ஆரம்பத்தில் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. அன்ரிக்கு அல்செய்மர் நோய் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது என்றும் அதன்காரணமாக சில சமயங்களில் சொல்வதையே திரும்பிச் சொல்வார் என்றும் இன்னும் சில சமயங்களில் செய்த செயலையே திரும்பவும் செய்வார் என்றும் சொன்னார். அவர் சொன்ன குறிப்புகளின் உதவியோடு அன்ரியோடு நன்கு பழகமுடிந்தது. சின்ன வயது நினைவுகள் அதிகம் இருப்பதாலும் கூட இருந்து பார்த்துக்கொள்ள உற்றார் உறவினர்கள் இருப்பதாலும் இலங்கைக்குப் போக முடிவு செய்திருந்தார்கள். இப்போது அன்ரிக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கொழும்பில் நல்ல கவனிப்போடு சந்தோஷமாக இருக்கிறார்.

அந்த அன்ரியின் நினைவுதான் away from her படத்தைப்பார்க்கும்போது வந்தது. அலிஸ் மன்றோ எழுதிய ‘The Bear Came Over the Mountain’ சிறுகதைதான் Sarah Polleyயால் Away from Her என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.
தம்பதிகளாக நியூஃபவுண்லாந்தைச் சேர்ந்த Gordon Pinsentஉம் இங்கிலாந்தைச் சேர்ந்த Julie Christieஉம் நடித்திருக்கிறார்கள்.

கிரான்ட், ஃபியோனா தம்பதிகள். அப்படியொன்றும் வயதானவர்கள் இல்லை. கிரான்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபிறகு கடந்த இருபது வருடங்களாக ஏரிக்கரையோர வீடொன்றில் வாழ்ந்து வந்தார்கள். வருடங்கள் போகப்போக ஃபியோனாவிற்கு அல்செய்மர் வியாதியின் நோய்க்கூறுகள் வரத்தொடங்கின.

பொதுவாக அல்செய்மர் நோய் பாதித்திருப்பவர்களைத் தனியாக வைத்துப்பராமரிப்பதையே மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். நெருங்கிய உறவினர்களுக்கும் நோயாளிக்குமிடையிலான உறவு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஃபியோனாவும் அத்தகைய விசேட மருத்துவமனை/தங்குமிடத்துக்குப் போக விரும்புகிறார். கிராண்டுக்கு அதில் விருப்பமில்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

0802203.jpg

கிராண்ட், ஃபியோனா போக முடிவு செய்திருக்குமிடத்தைப் போய்ப்பார்க்கிறார். அவர்களின் சில நடைமுறைகள் பிடிக்காததால் ஃபியோனாவைப் போகவேண்டாம் என்று கேட்கிறார். ஃபியோனா, முடிவு செய்தபடி ஒரு நாள் கிராண்டுடன் போய் அந்த இடத்தில் சேர்கிறார். விதிமுறைகளின்படி ஒரு மாதத்திற்கு யாருமே வந்து பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்குப்பிறகு பூங்கொத்துடன் வரும் கிராண்டுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஃபியோனாவிற்கு கிராண்டை யாரென்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாது அங்கேயே நோயாளியாக இருக்கும் ஒருவரின்மீது பாசம் வைக்கத் தொடங்கிவிட்டார். இளம்வயதுக்காதலர்களான தாங்கள் பிரிந்து இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று சொல்கிறார் ஃபியோனா. ஃபியோனாவின் 18 வயதில் அவர் விரும்பி கிராண்டைக் கல்யாணம் செய்தபடியால் ஃபியோனா சொல்வதுபோல இல்லையென்று கிராண்டுக்குத் தெரிகிறது.

ஆனால் தினமும் கிராண்ட் வந்தாலும் ஃபியோனாவிற்கு கிராண்டை நினைவுபடுத்தவே முடியவில்லை. யாரோ ஒரு மூன்றாமாள் போலவே நடாத்துகிறார். ஆரம்பத்தில் தான் செய்த பிழைக்காகத் தன்னை அதேபோலப் பழிவாங்குகிறாளோ என்று சந்தேகித்த கிராண்ட், போகப்போக ஃபியோனாவிற்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று யோசிக்கத் தொடங்குகிறார்.

ஆனால், ஃபியோனா விரும்பிய ஓப்ரேயை அவரது விருப்பத்துக்கு மாறாக அந்தத் தங்குமிடத்தில் இருந்து வெளியேற்றி அவரது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஃபியோனா அன்றிலிருந்து வில்லியம் ஹார்ட்டின் நினைவிலேயே இருக்கிறார். அதைப்பார்த்த கிராண்ட் ஒன்றுமே செய்யமுடியாமல் தவிக்கிறார். படிப்படையாக நடமாட்டங்களை ஃபியோனா குறைத்துக்கொள்ள, நீண்ட நாள் நோயாளிகள் தங்கும் இரண்டாம் மாடிக்கு ஃபியோனாவை மாற்ற நிர்வாகம் முடிவு செய்கிறது. அந்த மாடிக்குப் போகும் நோயாளிகள் பெரும்பாலும் சக்கர நாற்காலியிலேயே உலாவி, வேறெங்கும் போகாமல் அங்கேயே இறந்துபோகிறார்கள் என்பதை கிராண்ட் தெரிந்துகொள்கிறார்.

ஓப்ரேயின் மனைவியைச் சென்று சந்தித்து ஓப்ரேயை ஒரு முறை ஃபியோனாவைப் பார்க்க அழைத்துச்செல்ல அனுமதி கேட்கிறார். மனைவி மறுத்துவிடுகிறார். ஃபியோனாவின் நிலமை மோசமாகிக்கொண்டே போகிறது. இப்படி நாட்கள் போய்க்கொண்டிருந்தபோது வில்லியம் ஹார்ட்டின் மனைவி தொலைபேசுகிறார். அவரும் அப்படியொன்றும் சந்தோஷமாக இல்லை. தனிமையில் நாட்களையோட்டும் அவரும் கிராண்டும் சில தினங்களை ஒன்றாகக் கழிக்கிறார்கள். கிராண்டின் நோக்கமெல்லாம் ஃபியோனாவை சந்தோஷமாக்குவதிலேயே இருக்கிறது. ஓப்ரேயின் மனைவியை ஒருமாதிரி சம்மதிக்க வைத்து ஓப்ரேயை அழைத்துச் செல்கிறார் கிராண்ட்.

அலிஸ் மன்றோவின் வார்த்தைகளிலேயே அடுத்துவருவதைப் பார்க்கலாம்.

0802201.jpg

Fiona was in her room but not in bed. She was sitting by the open window, wearing a seasonable but oddly short and bright dress. Through the window came a heady warm blast of lilacs in bloom and the spring manure spread over the fields.

She had a book open in her lap.

She said, “Look at this beautiful book I found. It’s about Iceland. You wouldn’t think they’d leave valuable books lying around in the rooms. But I think they’ve got the clothes mixed up—I never wear yellow.”

“Fiona,” he said.

“Are we all checked out now?” she said. He thought the brightness of her voice was wavering a little. “You’ve been gone a long time.”

“Fiona, I’ve brought a surprise for you. Do you remember Aubrey?”

She stared at Grant for a moment, as if waves of wind had come beating into her face. Into her face, into her head, pulling everything to rags. All rags and loose threads.

“Names elude me,” she said harshly.

Then the look passed away as she retrieved, with an effort, some bantering grace. She set the book down carefully and stood up and lifted her arms to put them around him. Her skin or her breath gave off a faint new smell, a smell that seemed to Grant like green stems in rank water.

“I’m happy to see you,” she said, both sweetly and formally. She pinched his earlobes, hard.

“You could have just driven away,” she said. “Just driven away without a care in the world and forsook me. Forsooken me. Forsaken.”

He kept his face against her white hair, her pink scalp, her sweetly shaped skull.

He said, “Not a chance.”

நியூயோக்கரில் 1999 வெளியான சிறுகதையை இங்கே வாசிக்கலாம்.

ஃபியோனாவாக நடித்த ஜூலி கிறிஸ்டி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இதுவரைக்கும் இந்தப் படத்தில் நடித்ததற்காகச் சில விருதுகளும் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பரிந்துரைகளுக்கும் விருதுகளுக்கும் முழுக்க முழுக்கத் தகுதியானவர்தான் ஜூலி கிறிஸ்டி. படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜூலி கிறிஸ்டி Sarah Polleyயின் இடைவிடாத வற்புறுத்தலுக்குப்பிறகுதான் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். மிக அருமையாக ஃபியோனாவைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்.

அவரைப்போலவே கோபம், குழப்பம், அன்பு, பொறாமை எல்லாவற்றையும் மிக மிக அருமையாக வெளிக்காட்டி கிராண்டாகவே வாழ்ந்திருப்பவர் கோர்டன் பின்சென்ட். இவருக்கு எந்த விருதோ பரிந்துரையோ கிடைக்காதது வருத்தமான விதயம். ஆனால், ஆஸ்கர்பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டபோது சிறந்த நடிகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் டானியல்-டே லூயிஸ், கோர்டன் பின்சென்டைத் தொடர்பு கொண்டு தன்னுடைய ஏமாற்றத்தைச் சொன்னதாகப் பத்திரிகைகளில் படித்தேன்.

இயக்குநர் Sarah Polleyஐப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். கனேடிய நடிகர்களில் இப்போதிருப்பவர்களில் மிகவும் திறமை வாய்ந்தவராகக் கொண்டாடப்படுபவர். சிறந்த நடிகை மட்டுமல்ல மிகச்சிறந்த இயக்குநரும்கூட என்பதை Away from Her மட்டுமில்லை. இந்த டிவிடியுடன் I Shout Love என்ற Sarah Polley இயக்கிய குறும்படமும் பார்க்கக்கிடைக்கிறது. ஒரு உறவு முடிந்துபோகும் தருணத்தில் நடப்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப்படத்தில் Tessaவாக நடித்த Kirsten Thomson, எவே ஃப்ரொம் ஹெர்ரில் நர்சாக முக்கிய பாத்திரத்தில் வருகிறார். உறவுகள் சம்பந்தப்பட்ட இரண்டு படங்களும் ஒன்றாகக்கொடுக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டுமென்று நினைக்கிறேன். I Shout Loveஐப்பற்றித் தனியாக இன்னொரு தருணத்தில் பேசலாம்.

Alzheimer’s நோயைப்பற்றி இன்னும் சில படங்கள் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் Iris, Notebook. மலையாளத்தில் மோகன்லால் நடித்த தன்மந்த்ரா. மலையாளப்படம் இன்னும் பார்க்கக்கிடைக்கவில்லை. Notebook மற்றும் Irisஐ விட Away from Her அல்செய்மர் வியாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அணுகியிருக்கிறது.

ஆஸ்கர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சாரா பொலியின் இந்தப்படம், இவரிடமிருந்து அடுத்து என்ன படம் வரும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்க வைத்திருக்கிறது.

3 Comments »

  1. இடுகைக்கு நன்றி மதி. என் தோழியின் தந்தையை இந்த நோய் சிறிது சிறிதாய் அக்கிரமித்தைக் கண்டுள்ளேன்.தன் பெண்களை அடையாளம் காண முடியாமல், கடைசியில் diaper அணிந்து, அனைத்து இயக்கமும் மறந்து .. வேதனை.
    :-((((
    ..Ag

    Comment by Ag — February 22, 2008 @ 8:20 pm

  2. மதி ஸார்.. இப்போதுதான் உங்களுடைய லின்க்கைப் பிடித்து இங்கு வந்து படித்தேன்.

    நீங்களும் உலக சினிமாவில் ஆர்வமுள்ளவராக இருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்..

    கதையைப் படித்தேன்.. பார்க்க வேண்டும்போல் உள்ளது உங்களது விமர்சனம்..

    வாய்ப்பிருந்தால் பார்த்துவிடுவேன்..

    எனக்கு டிவிடியில் பார்ப்பதற்கு பிடிப்பதில்லை. அதில் பார்த்தால் முழு வீச்சும் தெரிவதில்லை என்பது எனது கருத்து.

    மேலும் இது போன்ற மறதி நோயை மையமாக வைத்து நீங்கள் சொல்லியிருந்தது போல் வெளிவந்திருக்கும் மலையாளத் திரைப்படமான தன்மந்திரா சிறந்த திரைப்படம்தான்.

    மோகன்லால் தனது அலட்டல் இல்லாத வெகு இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார். இதன் இயக்குநரும் வெகுவாகப் பாராட்டக்கூடியவர்தான்..

    பல விருதுகளை பெற்றது இத்திரைப்படம்.

    ‘தன்மந்திரா’வைப் பார்க்க தவறிவிடாதீர்கள்..

    வாழ்க வளமுடன்

    Comment by உண்மைத்தமிழன் — March 11, 2008 @ 3:39 am

  3. hi,

    since last week, i started reading your reviews on selected ‘good’ cinemas. indeed very interesting. thank you for putting your efforts in writing these stuffs. i’d like to watch these movies.

    i recommand you to watch “Lars and the Real Girl”. please get us your views. i saw it a week ago. kind of distrbing movie, for sure.

    two days back, i got this movie from a polish friend. soon i will watch.

    by the way, what is the best way of watching these movies. only very few movies are available in http://www.mybittorrent.net

    any other sources for downloading please?

    i can be reached @ v_vaithi@yahoo.com

    thank you again.

    vaithianathan. v
    lisbon
    13 september
    9.00 pm

    Comment by vaithianathan.v — September 12, 2008 @ 3:20 pm

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment