October 16, 2007

Conversation(s) with other women (2005)

2005இல் இந்தப் படம் வெளியானபோது மேலோட்டமாக விமர்சனம் படித்த நினைவிருக்கிறது. ஆரோன் எக்கார்ட் நடித்த படம் என்ற அளவிலேதான் இந்தப் படத்தின்மீது கவனம் இருந்தது. விமர்சனங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் பற்றியும் சிலாகித்திருந்தார்கள். வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டது அப்படியிப்படியென்று.

உண்மைதான்!

வசனங்களுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து 99.9% நேரம் இரண்டு நடிகர்கள் மட்டுமே திரையில் வரும்படியாக அமைக்கப்பட்ட படம். அதுவும் திரை இரண்டாகப்பிரிக்கப்பட்டு இருவரின் கண்ணோட்டத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாகவிருந்து இரண்டொரு முறை தொடக்கத்திலிருந்து தொடங்கிப் பிறகு அலுத்துப்போய் படம் போகிறபோக்கில் போகட்டும் நாமும் தொடர முயற்சிப்போம். முடியவில்லையா மெமெண்டோ மாதிரி இரண்டாவது தடவை உட்கார்ந்து பார்ப்போம் என்று உட்கார்ந்தேன். படம் முடித்த கையோடு இப்போது கணினியின் முன்னே நான். திரையை இரண்டாகப் பிரித்து இருவருடைய கண்ணோட்டத்தையும் சொல்வது இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஒருவர் பேசும்போது அடுத்தவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார், அது அடுத்தவரின் பார்வையில் எம்மாதிரித் தெரிகிறது. இந்த உத்தி வேறு படங்களுக்குப் பொருந்துமாவென்று தெரியவில்லை. ஆனால், இங்கே நன்றாகவிருக்கிறது.

ஹொலிவூட்டிலிருந்து இம்மாதிரியான படங்கள் எப்போதாவது அபூர்வமாகவே வருகின்றன. வசனங்களும் கதையின் சில கூறுகளும் Before Sunriseஐயும் Before Sunsetஐயும் நினைவுபடுத்துகின்றன. ஆனாலும் இந்தப் படத்தோடு ஒப்பிடும்போது மற்ற இரண்டு படங்களும் சராசரி போலத் தோற்றமளிக்கின்றன. ஹ்ம்ம்ம்… எத்தனையாவதோ முறையாக அந்த இரண்டு படத்தையும் முன்பதிவு செய்து வைத்திருக்கிறேன். :) உறவுமுறைகளை அதன் குழப்பங்களோடு வெகு சில படங்கள்தாம் அணுகுகின்றன. சர்க்கரை முலாம் பூசப்பட்ட காவியங்களைப்போல அல்லாமல் இதுபோலக் கொஞ்சப் படங்கள்தான் வருகின்றன. ஆனால், பிரெஞ்சு மொழிப் படங்கள் கொஞ்சம் தேவலாம்தான்.

கதையைப்பற்றி ஓரிரு வரிகளாவது சொல்லணுமில்ல.

அவன் + அவள். இரண்டு பேரின் பெயர்களும் பரிமாறப்படவில்லை. தொடர்புடைய பிறருடைய பெயர்களும் வேறு சில விபரங்களும் நமக்குக்கிடைக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு திருமண-விலக்குப் பெற்ற இருவர் அவனுடைய தங்கையின் திருமணத்தில் சந்திக்கின்றனர். லண்டனில் இருந்து வந்தவளும் நியூயார்க்கில் வாழும் அவனும் முன்னபின்ன சந்தித்திராதவர்கள் போல பேச்சைத் தொடங்குகிறார்கள். இரண்டாகப் பிரிந்திருக்கும் திரையும் இருவரது கண்ணோட்டத்தையும் காட்டுகிறது. தொடரும் பேச்சுகளும் செய்கைகளும் இடையிடையே இரண்டு திரைகளிலும் வந்து போகும் பழைய நிகழ்வுகளும் அடுத்து நடக்கவிருப்பவைகளும் சொல்லாமல் சொல்பவைகளும் என்று பார்வையாளர்களையும் உள்ளேயிழுத்துக்கொண்டுபோய் விடுகின்றன. அவர்களும் தத்தம் அனுபவங்களினூடே இரண்டு திரைகளில் காட்டப்படுபவற்றில் தம்மை ஈர்க்கும் காட்சிகளிலே அமிழ்ந்து போகிறார்கள்.

Richard Linklaterஇன் Before Sunrise & Before Sunset பிடித்திருந்தால் இந்தப் படமும் பிடிக்கலாம்!

பிற்சேர்க்கை:
அல்லது என்னைப்போல முதல் நாள் Lakehouse பார்த்து முடியைப்பிய்த்துக்கொண்டு பிராயச்சித்தமாக A Walk in the Clouds பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே பிடித்துப்போகிறமாதிரியும் இருக்கும். Conversation(s) with other womenக்கும் லேக்ஹவுஸுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. இரண்டு புத்தகத்திலும் ஜேன் ஓஸ்டனின்ர Persuasion பற்றிக் கதைக்கீனம். கதையை இங்க வாசிக்கலாம். பேர்ஸுவே்ஷனுக்கும் இந்த இரண்டு கதைகளுக்கு ஒரு இழை ஒற்றுமை இருக்குத்தான்.

இப்ப வர்ர ரொமான்டிக் காமடி எதுவுமே பெருசா தேற மாட்டேங்குதுன்னு யாராவது யோசிச்சிருக்கீங்களா? போன வரு்ஷம் வந்த Holiday ஒரே சொதப்பல். Music and Lyrics எப்படின்னு தெரியல. Ok. Enough பொலம்பல்! à demain.

October 8, 2007

Elephant (2003)

இந்தப் படத்தை எடுத்தற்கு முக்கிய காரணம் Gus Van Sant என்ற பெயர்தான். எந்தவொரு முன்முடிவுகளுமில்லாமல் இன்று வானம் மப்பாக இருக்கும் பொழுதில், கனேடிய நன்றிநவிலல் விடுமுறையன்று கொஞ்ச நேரத்துக்கு முந்திப் பார்க்கத்தொடங்கினேன். அட்டையின் பின்பக்கம் எழுதியிருந்ததைப் படித்ததோடு சரி. அட்டையில் எழுதியிருந்தது உங்களுக்காக.

Winner of Golden Palm winner at the 2003 Cannes Film Festival, Gus Van Sant’s (Good Will Hunting Finding Forrester) realistic drama Elephant takes us inside an American high school on one single, ordinary day that very rapidly turns tragic. The story unfolds, filled with class work, football, gossip and socializing. It observes the comings and goings of its characters from a safe distance, allowing us to see them as they are. With each student we see high school through a different experience, a new lens. These experiences range from friendly and innocent to traumatic and deeply disturbing.

Elephant demonstrates that high school life is a complex landscape where the vitality and beauty of young lives can shift from light to darkness with surreal speed. It’s an ordinary hight school day. Except that it’s not.

படம் போகப்போக யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடத்தில் அன்னியமாக நடாத்தப்பட்ட விதமும், வேற்று நாட்டில் ஒரே மொழி பேசும் ஊரில் அன்பாக நட்புடன் எல்லோராலும் நடாத்தப்பட்ட விதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நல்ல கெட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு படத்தைத் தொடர்ந்தேன். படத்தில் கமெரா சில வகுப்புகளுக்குள்ளே போய் வந்தபோது நானும் என்னுடைய பள்ளிக்கூடத்துக்கும் போய் வந்தேன்.

படம் நகர நகர என்ன நடக்கப்போகிறது என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத்தொடங்கியது. போன வருடம் செம்படம்பர் மாதம் இங்கே, மொன்ரியலில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமும் போன மாதம் நடந்த ஒரு வருட நினைவஞ்சலியும்; போன வருடம் வெர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் அந்த சமயத்தில் நண்பர்கள் சிலருடன் சன்னாசியின் இடுகையில் இருந்த ‘பைத்தியம்’ என்ற வார்த்தைப்பிரயோகம் பற்றிக் கதைத்ததும், நீயூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு பல்கலைக்கழத்திற்கெதிராக மாணவியொருத்தி வழக்குத்தொடர்ந்து வெற்றி பெற்றதையும் பற்றிக் கதைத்து என்று இதுபோன்ற துன்ப நாட்களில் கதைகதையென்று உலகமே கதைப்பதைப்போல நானும் கதைத்து வைத்தது நினைவுக்கு வந்தது.

இன்றைக்கு எதுவுமே கதைப்பதாக இல்லை!

எல்லோரும் இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சொல்வதைத் தவிர.

பொடிச்சி போல வட அமெரிக்க பள்ளிகளில் படித்தவர்களால் இந்தப் படத்தைப்பற்றிக் கொஞ்சம் காத்திரமாகப் பயனுள்ள வகையில் உரையாட முடியும் என்று நினைக்கிறேன். ஒரு தொடர் உரையாடல் + சிந்திப்புகளுக்கு வழிவகுத்தால் நல்லது. இதுக்கு மேல் என்னால் எதையும் சொல்ல முடியவில்லை!

October 5, 2007

Eastern Promises (2007)

History of violenceஐத் தொடர்ந்து இயக்குநர் டேவிட் க்ரொன்னன்பேர்க்கும் நடிகர் வீகோ மோர்ட்டென்ஸனும் இணைந்திருக்கும் படம் ஈஸ்டேர்ன் ப்ரொமிஸஸ். இதுவரை டேவிட் க்ரொன்னன்பேர்க் அவரது அத்தனை படங்களையும் கனடாவிலேயே எடுத்திருக்கிறார்; ஹிஸ்டரி ஓஃப் வையலன்ஸ் உட்பட. அந்தப் படம் வெளியானபோது இதைப்பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்விகள் கூட கேட்டதாக ஞாபகம். ஆனால், ஈஸ்டேர்ன் ப்ரொமிஸஸ் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவிலிருந்து லண்டனுக்குக் குடியேறி அங்கே அவர்களது நடவடிக்கைகளைத் தொடரும் ரஷ்ய மாஃபியா கும்பலைச் சுற்றிப் படம் நகர்கிறது. பதினான்கே வயதான ரஷ்யப் பெண்ணொருத்தி காலில் செருப்புகள்கூட இல்லாத நிலையில் ஒரு இந்திய(என்றுதான் நினைக்கிறேன்) மருந்துக்கடையில் நுழைந்து உதவி கேட்கிறாள். இரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அவளையும் அவளது குழந்தையையும் லண்டன் மருத்துவமனையொன்றில் காப்பாற்றப்போராடுகிறார்கள். குழந்தையைக் காப்பாற்றிவிட்டாலும் அந்த இளம் தாய் இறந்து போகிறாள். அந்தச் சிறுமியின் கைப்பையில் இருந்த டயரியொன்றை அவளையும் குழந்தையையும் காப்பாற்றப்போராடிய mid-wife ஆன்னா வீட்டுக்கு எடுத்து வருகிறாள். ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருக்கும் அந்த டயரியில் லண்டனில் இருக்கும் பிரபல ரஷ்ய உணவு விடுதியின் அட்டை இருக்கிறது. இரண்டாம் தலைமுறை ரஷ்யப் பெண்ணான ஆன்னாவுக்கு ரஷ்ய மொழி படிக்கத் தெரியாதென்றாலும் அவளுடைய மாமாவிற்கு ரஷ்ய மொழி படிக்கத் தெரிந்திருக்கிறது. இறந்த பெண்ணிடம் இருந்து எடுத்து வந்த டயரி என்றபடியாலும் புரட்டியபோது கண்ணில் பட்ட வரிகளாலும் அந்த டயரியை மொழிபெயர்த்து உதவ மறுக்கிறார் அவர். குழந்தையை சில நாட்களுக்குள் யாரேனும் பொறுப்பெடுக்காவிட்டால் அனாதைக்குழந்தையாகிவிடும் என்று கவலைப்படும் ஆன்னா, டயரியில் இருந்த ரஷ்ய உணவு விடுதிக்குச் செல்கிறாள்.

அங்கே இறந்த சிறுமியைப்பற்றியும் அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையைப்பற்றியும் அவளது டயரி தன்னிடம் இருப்பது குறித்தும் கூறுகிறாள். அந்த விடுதியின் உரிமையாளர், அந்தப் பெண்ணைத் தெரியாதென்று கூறி, அன்னா அந்தப் பெண்ணின் குடும்பத்தவரைத் தேடுவதை அறிந்து தான் அந்த டயரியை மொழிபெயர்த்துத் தருவதாகச் சொல்கிறார். இதற்கிடையில் ஆன்னா, அந்த விடுதி உரிமையாளரின் மகன் கிர்ரிலையும் கூடவே இருந்த நிக்கோலாயையும் பார்க்கிறாள். தொடரும் நாட்களில் உணவு விடுதியின் உரிமையாளர் அப்படியொன்றும் நல்லவரில்லை என்று ஆன்னா உணருகிறாள். கதை இதுவரைக்கும் போதுமென்று நினைக்கிறேன்.

ஆன்னாவாக நடித்திருப்பது Naomi Watts. அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆனாலும் நம்முடைய கவனத்தை முழுக்கத் தக்க வைத்துக்கொள்வது ரஷ்ய மாஃபியா கும்பலே. மாஃபியா கும்பலின் தலைவராக, பக்கத்து வீட்டுத் தாத்தா போன்ற தோற்றத்துடன் Armin Mueller-Stahl. அவருடைய மகன் Kirrilஆக பிரெஞ்சு Vincent Cassel. கிர்ரில்லின் நம்பிக்கைக்குரிய நிக்கொலாயாக Viggo Mortensen. இந்த மூவரின் பாத்திரப்படைப்பு கொஞ்சம் Godfatherஐ நினைவுபடுத்துகிறது. கிர்ரில்லுக்கும் நிக்கோலாய்க்கும் இடையேயான உறவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், இவர்களிடையே இருக்கும் ஈர்ப்பு சில காட்சிகளில் தெரிகிறது. சில முடிவுகளுக்குக் காரணமாகவும் அமைகிறது என்று நினைக்கிறேன்.

ரஷ்ய மாஃபியா குழுவினர் அவர்களின் உடலில் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமான உருவகங்களை பச்சை குத்தியிருப்பதற்கான காரணங்கள் சுவாரசியமாகவிருக்கின்றன. Viggo Mortensen அடையாளமே தெரியாதபடி மாறியிருக்கிறார். இந்தப் படத்துக்காக சில பல வாரங்கள் யாருடைய துணையுமின்றி ரஷ்யாவில் தன்னந்தனியாகச் சுற்றியதாக எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது. சிரத்தையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

படத்தில் பெரும்பாலும் ரஷ்ய மொழியின் சாயலுடனான ஆங்கில உச்சரிப்பும் ரஷ்ய மொழியுமே பேசுகிறார்கள். படமும் ரஷ்ய மாஃபியா கும்பலையும் அவர்களுடைய செயற்பாடுகள், உறவுமுறைகள், நடப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறது. மேலே சொன்னமாதிரி இந்த விதயத்தில் Godfatherஐ நினைவுபடுத்துகிறது. லண்டன் போன்ற பல நாட்டு மக்கள் வாழும் நகரத்தில் ஒவ்வொரு தரப்பினரும் தனித்தனியாக தீவுகளைப்போன்று தத்தமது மக்கள் கூட்டத்துடன் வாழ்வதையும் இந்தப் படம் நினைவுபடுத்துகிறது. லண்டன் மட்டுமல்ல டொராண்டோ மற்றும் மொன்ரியல் (சிறிய அளவில்) போன்ற நகரங்களிலும் இந்தச் சூழல் நடைமுறையில் இருப்பதை Eastern Promises நினைவுபடுத்தியது. ஒரு நாளில் வேறு மக்களுடன் பேசாமல் முழுக்க முழுக்கத் தமிழில் மட்டுமே பேசி நாளாந்த வேலைகளை - மருத்துவமனை, வங்கி, கடைகளில் உணவுப்பொருட்கள் தொடங்கி தங்கம் வரை தேவையான பொருட்கள் வாங்குவது, விரைவு உணவு விடுதிகள் மற்றும் கார் வாங்குவது தொட்டு பழுதுபார்ப்பது வரையாகட்டும் எல்லாமே - முடித்துக்கொள்ளக்கூடிய சூழல் டொராண்டோ போன்ற பெரிய நகரங்களில் சாத்தியம். இதனால், தமது வட்டத்தை விட்டு வெளியே வந்து பிறருடன் பழக வேண்டிய வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்காது போகிறது. இதற்கும் படத்தின் கருவிற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. படத்தில் ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளிலிருந்து குடியேறிய மக்களைப் பார்த்ததும் எழுந்த எண்ணம் மட்டுந்தான்.

திகிலூட்டும் படங்களை எடுத்துக்கொண்டிருந்த டேவிட் க்ரொன்னன்பேர்க், சமீப காலமாக பலதரப்பட்ட மக்களும் பாராட்டும் படியாக த்ரில்லர் வகையறா படங்களை எடுத்துக்கொண்டிருந்தாலும் படத்தில் ஆங்காங்கே வரும் வன்முறைக்காட்சிகள் மனதில் தங்கிப்போகும்படி வடிவமைத்திருக்கிறார். Eastern Promises தொடங்குவதே ஒருவனின் கழுத்தை அறுத்து இரத்தம் பீச்சிடும் காட்சியோடுதான். மொத்தமே மூன்றே மூன்று காட்சிகளில்தான் வன்முறை பெரிய அளவில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அது படம் முடிந்த பிறகும் நம் மனதில் தங்கிப்போகிறது. ஒரு காட்சியில் horror படங்களைப்பார்ப்பது போல கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். ;) இந்தப் படத்திலும் சரி, இதற்கு முதலில் வந்த History of Violenceஇலும் சரி முகத்தில் அறைந்தாற்போன்ற வன்முறைக்காட்சிகளினூடாக டேவிட் க்ரொன்னன்பேர்க் சில விதயங்களைச் சொல்ல வருகிறார் என்பது என்னுடைய அனுமானம். மேலோட்டமான வன்முறைக்காட்சிகளைப் பார்த்து இரசிப்பதற்காகவே வரும் இரசிகர் கூட்டத்தைக் கொஞ்சம் தள்ளி நின்று யோசிக்க வைக்கிறாரோ என்று நினைத்திருக்கிறேன். வரும் இரசிகர்கள் இதையெல்லாம் நினைக்கிறார்களோ தெரியாது! just my thought.

கடைசியாக படத்தைப்பற்றி ஒரு வார்த்தை. ரொம்பவும் எதிர்பார்க்காமல் போனால் படத்தை இரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.