She is a Doctor! Doctor in philosophy thatis. So what’s she doing in the hospital? She’s discussing the treatment plan and is agreeing to a vigorous eight month period devoted to treatment and research. She has stage IV metastatic ovarian cancer. Her name’s Dr. Vivian Bearing and she is a no-nonsense professor with indepth knowledge of metaphysical poetry specialising in the Holy Sonnets of a 16th century poet named John Donne.

ம்ம்.. டாக்டர் கேட்டுக்கிட்டபடி, பேராசிரியரும் எட்டு மாத முழுவீச்சான சிகிச்சைக்கும், மாணவர்களுக்கு அந்த சிகிச்சையை வைச்சுப் பாடமெடுத்துக்கிறதுக்கும் ஒத்துக்கிட்டாங்க. படத்தின் தொடக்கத்தில் அலங்கார வார்ததைகளைப் பயன்படுத்தி பேராசிரியருக்கு வந்திருக்கும் கான்சரைப்பற்றியும் சிகிச்சையைப்பற்றியும் மருத்துவர் சொல்லுறார். பேராசிரியர், ஆங்கிலத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதால் சிற்சில வார்த்தைகளுக்கான அர்த்தம் வேறுபட்டிருப்பதைச் சொல்கிறார். இருவரும் தத்தமது மாணவர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். பேராசிரியரின் வருத்தம் பற்றித் தெரிகிற அளவுக்கு நமக்கு அவருடைய சொந்த வாழ்க்கைபற்றித் தெரியவில்லை. ஆனாலும், பார்த்த பத்து நிமிடங்களில் பேராசிரியர், சுயகட்டுப்பாடுகள் அதிகமுள்ளவர் என்பதை உணர முடிகிறது. முன்வைத்த காலைப்பின் வைக்காத குணமுள்ளவர் என்பது எட்டு மாத சிகிச்சை, மிகவும் கடினமானது என்று மருத்துவர் எச்சரிக்கும்போதும், அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், வெற்றிகொள்ளவேண்டிய ஒரு விதயம் போலப் பாவிப்பதிலிருந்து தெரிகிறது.
அடுத்த காட்சியில் பட்டென்று அதிர்ச்சியடைகிறோம். தீவிரப்புற்றுநோய்க்கான சிகிச்சையின் காரணமாக தலைமுடிகளனைத்தையும் இழந்து மருத்துவமனைக்கட்டிலில் இருக்கிறார் பேராசிரியர் பேரிங்க். தீவிர சிகிச்சையின் காரணமாக அடிக்கடி வாந்தி எடுத்தபடியோ, வாந்தி வருவது போன்ற உணர்வுடனோ இருக்கிறார். இருந்தும் பேராசிரியரின் Wit குறையவில்லை. சிகிச்சையின் ஆரம்பக்கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்தபோது நடந்த விதயங்களை லேசான சிரிப்போடு சொல்கிறார் பேராசிரியர். இங்கே ஒன்று சொல்லவேண்டும். இந்தக் கட்டத்தில் இருந்து பேராசிரியர் நேரடியாகப் பார்வையாளர்களைப்பார்த்தபடி, அவர்களுடன் நிறையப் பேசத் தொடங்குவார். இந்தப் பேச்சு படம் முழுவதும் தொடரும். மருத்துவப் பரிசோதனைக்காகப் பெயரைக் கொடுப்பதில் தொடங்குவது - டாக்டர்? என்று சோதனைக்கூடத்தில் கேட்க, பேராசிரியர் தன்னுடைய பட்டத்தைப்பற்றிச் சொல்கிறார். - பிறகு பிறகு சுவிட்சுப்போட்டதுபோல ஒப்பிப்பதில் வந்து நிற்கிறது.
பேராசிரியரின் சிகிச்சை முறையைப் பரிசோதனைப் படிப்பாக/ஆராய்ச்சியாக அவருடைய மருத்துவரும், மருத்துவருக்குக்கீழே ஆராய்ச்சியாளராகப் படிக்கும் இளம் மருத்துவரொருவரும் மேற்கொள்கிறார்கள். இதில், அந்த இளம் மருத்துவர் ஒரு காலத்தில் பேராசிரியரிடம் மாணவராக இருந்திருக்கிறார். இதைப்பற்றிப் பேசிக்கொண்டே பேராசிரியரின் Pelvic-examinationஐச் செய்கிறார் அந்த இளம் மருத்துவர். பேராசிரியரை மருத்துவமனையில் பார்த்துக்கொள்வது சோஃபி என்னும் நர்ஸ்.
படிப்படியாக தீவிரமான சிகிச்சை காரணமாக பேராசிரியரின் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். எடை வெகுவாகக் குறைந்துபோய்க்கொண்டேயிருக்கிறது. காய்ச்சல், நடுக்கம், வாந்தி, வயிற்றுவலி என்று பலவிதமான பக்கவிளைவுகளுடன் பேராசிரியர் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், சிகிச்சையின் அடுத்த கட்டத்துக்கு எப்போதும் சம்மதம் தெரிவித்தபடி, மிகவும் கடினமான சிகிச்சைகளைத் தாங்கியபடி இருக்கிறார். சிகிச்சை அளவைக் கொஞ்சம் குறைத்தாலென்ன என்று நர்ஸ், இளம் மருத்துவரிடம் கேட்கும்போது, பேராசிரியரைப்போன்ற குணாதிசயங்களைக் கொண்ட அந்த இளம் மருத்துவர், பேராசிரியரால் அதை எதிர்கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டுப்போகிறார்.
இப்படி சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போது பேராசிரியர், அவருடைய கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். பேராசிரியரின் ஆசிரியருடன் நடந்த விவாதமொன்றையும், ஆசிரியர் சொன்ன அறிவுரையையும் நினைத்துப் பார்க்கிறார். முதன்முறையாக சொற்களின் மீது காதல்வயப்பட்ட நிகழ்வையும் நினைவுகூர்கிறார். ஒருவித மயக்க நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தோற்றத்திலும் அவ்வப்போது கடந்த கால நிகழ்வுகளிலும் தோன்றுகிறார். மருத்துவமனையிலும், நிகழ்வுகள் நடந்த களங்களிலும் இருப்பதாக மாறி மாறி உணர்கிறார்.
படிப்படியாக சிகிச்சை பேராசிரியரின் உடலை வருத்தி மேலும் பலவீனமடையச் செய்கிறது. பேராசிரியரைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸுக்குப் பேராசிரியரின் மீது தனி அக்கறை உருவாகிறது.
உடம்புக்கு சரியில்லாமப் போய் மருத்துவமனைக்குப்போயிருக்கிறீங்களா? வெளி நோயாளியாக அல்லாமல் அங்கேயே தங்கும்படி ஆகியிருக்கிறதா? அதுவும் நீங்கள் சென்ற மருத்துவமனை, ஒரு teaching hospitalஆக இருந்திருக்கிறதா? எனக்கு ஒரு முறை அப்படி ஆகியிருக்கிறது. சுற்றி வர இளம் மருத்துவர்கள் நின்றபடி, நம்மை ஒரு மனிதராக (அதாவது பேசக்கூடிய புத்திசாலித்தனமான சுவாரசியமான பேர்வழியாக..) மதித்து நடந்திருந்தால் பெரும் அதிசயம்தான். நமக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நமக்கு என்ன வியாதி என்று கேட்பார். நம்முடைய உடல் கண்டபடிக்கும் சித்திரவதைக்கு ஆளாகி, இளம் மருத்துவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்வார்கள். பெரிய மருத்துவரோ இல்லையில்லையென்றபடியே இருப்பார். நம்ம உடம்போ இங்க ரணகளமாகிக் கொண்டிருக்கும். ஒருவழியாக ஒரு ஆள் சரியான பதிலைச் சொல்லும். ஃப்பூ!!! நிம்மதி. இங்கேயும் பேராசிரியருக்கு அதேதான் நடக்கிறது. மேலே விவரித்ததையும் விட பல மடங்கு அசௌகரியமாக உணர்கிறார் பேராசிரியர். நம்மை யாரும் கவனிக்காவிட்டாலும் நாம், இந்தத் தருணத்தில் பல விதயங்களைக் கவனிக்கலாம். நோயாளி ஒரு பொருட்டு இல்லையென்பதையும், அதாவது நோய்தான் இங்கே முக்கியமான விதயம், இளம் மருத்துவர்களிடையே இருக்கும் போட்டி, பெரிய மருத்துவருக்கும் கூட்டத்திலிருக்கும் புத்திசாலி மாணவருக்குமிடையேயான பரிவர்த்தனைகள்.. என்று பல விதயங்கள்.
உடல்நிலை மோசமாக மோசமாக கவிதை வரிகளை உச்சாடனம் செய்தபடியே இருக்கிறார் பேராசிரியர். போகப்போக வாழ்க்கையில் கருணை மிகவும் முக்கியமானதொரு விதயம் என்பதை உணர்கிறார். தனக்கு இப்போது தேவைப்படும் கருணையைத் தான் பல தடவை பிறருக்கு - மாணவர்களுக்குக் - காட்டவில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறார்.
தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பெரிய மருத்துவர் சொன்ன எட்டு சுற்று சிகிச்சையும் முடிந்தபிறகும் பேராசிரியர் குணமாகவில்லை. மிகவும் நோய்வாய்ப்பட்டே இருக்கிறார். அவருடன் பேசும் நர்ஸ் சோஃபி, பேராசிரியர் குணமாக வாய்ப்பில்லையென்று சொல்கிறாள். கர்ப்பப்பையில் இருந்த கட்டி மிகவும் சிறுத்துவிட்டிருந்தாலும் உடலின் பிற பாகங்களுக்குப் புற்றுநோய் பரவிவிட்டிருப்பதைச் சொல்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியும் மேலதிக அறிதலுமே மிகவும் முக்கியமான விதயம் என்று சொல்லும் சோஃபியிடம், தனக்கும் அப்படித்தான் என்று சொல்கிறார். அப்படியானால் இருதயம் நின்று போனால் திரும்பவும் இயங்க வைத்து உயிர் பிழைக்க வைத்து சிகிச்சை/ஆராய்ச்சியைத் தொடருவதா என்று ஆச்சரியத்துடன் கேட்கும் சோஃபியிடம் இல்லை வேண்டாம். இருதயம் நின்று போனால், அப்படியே விட்டுவிடும்படி சொல்கிறார் பேராசிரியர்.
சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் பேராசிரியர் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட ஒரு பகுதி:
Vivian Bearing: This is my play’s last scene Here… Heavens appoint my pilgrimage’s last mile And my race Idly, yet quickly run Hath this last pace My span’s last inch My minute’s last point And gluttonous death Will instantly unjoint my body and soul” John Donne… I’ve always particularly liked that poem. In the abstract. Now I find the image of my minute’s last point, a little too, shall we say… pointed. I don’t mean to complain but I am becoming very sick. Very sick. Ultimately sick, as it were. In everything I have done, I have been steadfast. Resolute. Some would say in the extreme. Now, as you can see, I am distinguishing myself in illness. I have survived eight treatments of Hexamethophosphacil and Vinplatin at the full dose, ladies and gentlemen. I have broken the record. I have become something of a celebrity. Kelekian and Jason are simply delighted. I think, they see celebrity status for themselves upon the appearance of the journal article, they will no doubt write about me. But I flatter myself. The article will not be about me, it will be about my ovaries. It will, be about my peritoneal cavity. Which, despite their best intentions, is now crawling with cancer. What we have come to think of as me is, in fact, just the specimen jar. Just the dust jacket. Just the white piece of paper… that bears the little black marks… My next line is supposed to be something like this: “It is such a relief to get back to my room after those infernal tests.” This is hardly true. It would be a relief to be a cheerleader on her way to Daytona Beach for spring break. To get back to my room after those infernal tests is just the next thing that happens.
இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணரும் பேராசிரியர், அப்போதும் அவரை யாரும் பார்க்க வருவதை விரும்பவில்லை. ஆனாலும், தற்செயலாக அவருடைய ஆசிரியர் வெளியூரிலிருந்து வந்தவர் பார்க்க வருகிறார். கருணை மிகவும் முக்கியமானவொன்று என உணர்ந்திருந்த பேராசிரியருக்கு, அவருடைய ஆசிரியரின் வருகை மிகவும் ஆச்சரியத்தையும் சந்தோ்ஷத்தையும் கொடுக்கிறது. இருவருக்கும் பிடித்தமான கவிஞர் ஜோன் டன்னின் கவிதையைச் சொல்லட்டுமா என்று கேட்கும் ஆசிரியரிடம் அவசரவசரமாக வேண்டாம் என்று மறுக்கிறார் பேராசிரியர். ஆசிரியரும், அவருடைய பூட்டப்பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த சிறுவர் புத்தகமொன்றை வாசித்துக் காட்டுகிறார்.
ஒரு நாள் மூச்சு நின்றுபோக, பேராசிரியர் சொல்லியிருந்ததை மறந்துபோன இளம் மருத்துவர், பேராசிரியரின் உடைகளைக் கிழித்துவிட்டு முதலுதவி சிகிச்சையளித்து மூச்சைக் கொண்டுவர முயற்சிக்கிறார். கோட் ப்ளூவிற்கான அழைப்பையும் அவர் கொடுத்துவிட்டிருக்க, அதற்கான குழு உடனே வந்து, பேராசிரியரின் உடலைக் கையாண்டு மூச்சைக் கொண்டுவர முயற்சிக்கிறது. சோஃபி, பேராசிரியர் தன்னை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டதையும் பெரிய மருத்துவர் சம்மதித்ததையும் சொல்லச்சொல்ல, அந்த அவசர களேபரத்தில் யாருமே கவனிப்பதாக இல்லை. இளம் மருத்துவர், தன்னுடைய தவறையுணர்ந்து பலமான குரலில் சொன்னதும்தான் எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன. பேராசிரியர் கேட்டுக்கொண்டபடி, சோஃபி, அவரை சீர்படுத்தி கடைசியாகக் கவனித்துக் கொள்கிறார்.

பற்பல சிந்தனைகளைக் கிளப்பும் இந்தப் படத்தின் மூலம், மார்கரெட் எட்ஸன் எழுதிய நாடகமாகும். 1995ம் ஆண்டு முதன்முறை மேடையேறிய இந்த நாடகம் 1999இல் புலிட்சர் பரிசைப் பெற்றது. 2001ம் ஆண்டு தொலைக்காட்சிக்கான திரைப்படமாக எம்மா தொம்சனும் இயக்குநர் மைக் நிக்கோல்ஸும் மாற்றியமைக்கிறார்கள். இருவரும் சேர்ந்தே திரைக்கதை எழுதுகிறார்கள். இரண்டு பேரும் ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகள் பெற்ற திறமைசாலிகள்.
பேராசிரியராக நடித்திருப்பது எம்மா தொம்ஸன். எம்மா தொம்சனைவிட வேறு யாராலும் இந்த வேடத்தை இந்தளவு சிறப்பாகச் செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. பல விதங்களில் யோசிக்க வைக்கிறது. வாழ்க்கையைச் சுவாரசியமாக்க கவிதை போன்ற விதயங்கள் தேவை என்று ஒரு பக்கம் யோசிக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் வெறும் புத்திஜீவித்தனம் மட்டும் போதாது என்பதையும் சொல்கிறது. எல்லாவற்றையும் விட அதிகமாக, மருத்துவமனைகளில் நோயாளிகள் நடாத்தப்படும் விதத்தை நோயாளிகளின் பார்வையூடாகச் சுட்டுகிறது.