April 30, 2007

Gaz Bar Blues (2003)

gaz_bar_blues.jpg

கியூபெக்கின் சிறுநகரமொன்றில் தொழ்ற்சாலைகள் இருக்கும் பகுதியொன்றில் இருக்கும் எரிபொருள் நிலையத்தைக் களமாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டிருக்கிறது. படத்தில் இடைநடுவில் கொஞ்சம் அலுப்புத்தட்டினாலும் மொத்தத்தில் சுவாரசியமாகவே இருந்தது. இந்தப் படத்தைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதவேண்டும் என்று இன்னும் பல படங்களைப் பார்த்தபோது நினைத்தமாதிரியே நினைத்தேன். எந்தப் படங்களைப்பற்றி நினைத்தேன் என்று இப்போது இந்தக் கணத்தில் நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. ஆனால், Gaz Bar Blues அப்படியில்லை. அவ்வப்போது நினைவிலாடிக்கொண்டிருப்பதால் சிறுகுறிப்பாகத்தன்னும் எழுதிவிட யோசனை.

எரிபொருள் நிலையத்தை கியூபெக் பிரெஞ்சு பேச்சுவழக்கில் Gaz Bar என்று சொல்லுவார்கள். இப்போதைய, நமக்கு நாமே திட்டத்தின்கீழ், நாமே எரிபொருள் நிரப்பி பணத்தைக் கொடுப்பது மாதிரியில்லாமல், வண்டியில் எரிபொருள் நிரப்பவென்று தனியாகவொரு ஆளை வைத்திருக்கும் பழைய பாணி எரிபொருள் நிலையம். கியூபெக்கின் ஒரு சிறுநகரத்தில், தொழிற்சாலைகள் அமைந்த பகுதியில் இந்த Gaz bar இருக்கிறது. அதை 15 வருடங்களாக நிர்வகித்து வரும் Monsieur Brochu. Boss என்றுதான் அவரை எல்லோரும் கூப்பிடுகிறார்கள். பாஸுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். படத்தில் ஓரிரு கட்டத்தில் மட்டுமே மகள் வந்து போகிறார். மற்றும்படிக்கு, இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஆண்களே வலம் வருகிறார்கள்.

gaz-bar-blues.jpg

நகரின் வறுமையான பகுதியில் இந்த Gaz Bar பெரிதாக வியாபாரம் ஒன்றுமில்லை. வரும் ஓரிரு வாடிக்கையாளர்களும் கடன் சொல்லிவிட்டுப்போகும் இரகம். இதுபோதாதென்று அவ்வப்போது வந்து போகும் முகமூடிக் கொள்ளைக்காரர்கள். படம் தொடங்குவதே அப்படியொரு கொள்ளையில்தான். பார்க்கின்ஸன் வியாதியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பாஸ், கல்லாவிலிருக்கும் பணத்தை கொள்ளையர்களிடம் உடனே கொடுத்துவிடுவார். படம் நடக்கும் காலகட்டம் 1989-90 என்றாலும் போன வருடம் எனக்குத் தெரிந்த பெண்ணின் குடும்பத்தினரின் depenneaur-இல் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்தது நினைவுக்கு வருகிறது. கடையில் இருந்தது அந்த 13 வயதுப்பெண்ணும் அவளுடைய அம்மாவுந்தான். அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, இந்தப் பெண் கல்லாவுக்குக் கீழே வைத்திருந்த சில நூறு டாலர் நோட்டுகளைக் கொடுத்துவிட்டிருக்கிறாள். கொள்ளையனும் உடனே சென்றுவிட்டான். பிறகு வந்த போலீஸ், அந்தப் பெண்ணைப் பாராட்டியது. கொள்ளையன் என்றாவது பிடிபட்டுவிடுவான் என்பது ஒரு பக்கமிருக்க, பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிடும். அப்படியிருக்கும்போது கதாநாயகத்தனமாக எதையாவது செய்துதொலைக்காமல் இருக்கும்படி காவற்துறை சொல்லுமாம். இந்தப் படத்திலும், அதையே பாஸும் சொல்கிறார்.

பாஸின் முன்று மகன்களின் முதலிருவரும் Gaz Barஇல் வேண்டா வெறுப்பாக உதவியாக இருக்கிறார்கள். முதலாவது மகன் Regeanஉக்கு புகைப்படமெடுப்பதில் ஆர்வம். இரண்டாமவனுக்கு பாட்டுப் பாடுவதில் ஆர்வம். இவர்களில் மூத்தவன் மட்டுமே ஓரளவு பொறுப்பாக எரிபொருள் நிலையத்தைக் கவனித்துவருபவன். இரண்டாமவன் அடிக்கடி காணாமல் போய்விடுவான். கடைக்குட்டி கை-க்கு வேலை செய்ய கொள்ளை ஆர்வம். ஆனால் 14 வயதான அவனை யாரும் கிட்டே அண்ட விடுவதில்லை. ஆனாலும், அவன் Gaz Barஏ கதி என்று கிடப்பவன்.

gaz-bar-blues-1.jpg

இவர்களைத் தவிர, டீக்கடையைச் சுற்றி அமர்ந்து பொழுதைப்போக்குவதைப்போல எரிபொருள் நிலையத்தில் பொழுதைப்போக்கும் ஊர்க்காரர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமாக இருப்பது படத்தைப் பார்க்கும்படி செய்கிறது. விற்பனை அதிகம் இல்லாவிட்டால் இடத்தை மூடிவிடப்போவதாக, அவ்வப்போது மேற்பார்வைக்காக வந்து தொல்லைகொடுக்கும் கம்பனிக் காரன். எரிபொருள் நிலையத்தில் பணத்தைப் பாதுகாப்பாக வைக்குமிடத்தைத் தெரிந்துவைத்துக்கொண்டு திருடுபவன். அவனைப் பிடித்ததும் பாஸுக்கும் மகன்களுக்கும் தெரியாமல் திருடனுக்கு விநோதமான தண்டனை கொடுக்கும், Gaz Bar பொழுதுபோக்கர்கள். அவ்வப்போது வந்து ஐந்து டாலருக்கு எரிபொருள் நிரப்பிவிட்டுக் கடன் சொல்லிவிட்டுப் போகிறவன். இப்படி சுவாரசியமான கதாபாத்திரங்கள் படத்தை செழுமைப்படுத்துகிறார்கள். வேறேதேனும் தருணத்திலும் மேலே சொன்ன கதாபாத்திரங்களில் யாரேனுந்தான் நினைவில் வந்து போகிறார்கள்.

மீதிக்கதைச் சுருக்கம். பார்க்கின்ஸன் நோய், நட்டத்தில் ஓடும் எரிபொருள் நிலையம், வேண்டா வெறுப்பாக வேலை செய்யும் மகன்கள் என்று இருந்தபொழுதில் பொறுப்பாக வேலை செய்துவந்த மூத்த மகன், 1989இல் பேர்லின் சுவரை இடிக்கப்போவது தெரிந்து, அதைப் புகைப்படம் பிடிக்கவென்று செல்கிறான். இரண்டாவது மகன், வழமையாக வாரக்கணக்கில் காணாமற்போகிறவன் இம்முறை மாதக்கணத்தில் காணவில்லை. பாஸும் வேறு வழியில்லாமல் கடைசிமகனை தொழிலில் ஈடுபடுத்துகிறார். மிக மிக உற்சாகமாக அதிகாலையில் கடையைத் திறக்க வரும் மகன் கொஞ்சங்கொஞ்சமாகத் தொழிலைக் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொடுப்பதில் பெரிய பங்கு, அங்கே பொழுதைப் போக்கும் ஊராருக்கு இருக்கிறது.

அப்படியிருக்கும்போது அந்த முகமூடிக்கொள்ளைக்காரன் வருகிறான். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியில் எல்லாமே சுபமாக முடிந்தாலும், பாஸ் ஒரு முடிவுக்கு வந்ததுபோலத் தெரிகிறது.

சில வாரங்களுக்குப் பிறகு, அங்கே பொழுதைக் களிப்பவர்களில் தொடங்கி கடனுக்கு எரிபொருள் நிரப்புபவர்கள் அனைவருக்கும் ஒரேயடியாக மூடிவிடப்போவதைச் சொல்கிறார்.

படத்தை முழுவதுமாகப் பார்த்ததற்கு முக்கிய காரணம், மாறி வரும் சூழலில் சில விதயங்கள், சில தருணங்கள் திரும்பி வரப்போவதில்லை. அம்மாதிரியான தருணங்களையும் விதயங்களையும் பதிவு செய்பவை இம்மாதிரியான படங்களே!

April 18, 2007

எனக்குப்பிடித்த காதற்படங்கள்: ஓர் பட்டியல்

romantic_movies.jpg

தமிழ் சினிமாவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் காதல், காதல் என்று பார்ப்பதாலோ என்னவோ, காதலை மையமாகக் கொண்ட படங்களைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் அவற்றைப்பற்றி எழுதுவதில் இருப்பதில்லை. ஆனாலும், திரும்பத்திரும்பப் பார்க்கும் படங்களில் காதற்படங்களும் உண்டு. எனக்குப்பிடித்த காதற்படங்களை இங்கே பட்டியலிட யோசனை. நினைவுக்கு வரும் படங்களை இப்போதைக்கு எழுதுகிறேன். நினைவு வரும்போது முக்கியமான படங்களையும் பிறகு, அவற்றின் இன்றியமையாத தன்மையைப் பார்த்துவிட்டுச் சேர்த்தாலும் சேர்க்கலாம்.

பின்னூட்டங்களில், நீங்களும் உங்களுக்குப்பிடித்த காதற்படங்களைச் சொல்லுங்களேன்.

[in no specific order.]

Casablanca (1942) - Humphre Bogart, Ingrid Bergman நடித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போது மொரோக்கோவில் வாழும் அமெரிக்கனும் அவனுடைய முன்னாள் காதலியும் மறுபடியும் சந்தித்துக்கொள்கிறார்கள். அமெரிக்கன் ரிக்-இடம், அவனுடைய காதலி, மொரோக்கோ ஜேர்மன் நாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொரோக்கோவிலிருந்து திரும்பவும் ஊருக்குத் திரும்பிப்போவதற்கான சீட்டைப் பெற்றுத்தருமாறு கேட்கிறாள். அவளுக்கு இப்போது திருமணமாகிவிட்டிருப்பது ஒரு விசயம். காதலர்கள் சந்தித்துக்கொள்வது தொடங்கி, படத்தின் முடிவு வரைப் பாருங்களேன். படத்தின் முடிவை நடிகர்களுக்கே கடைசியில்தான் சொன்னார்களாம். அது, படத்திலும் தெரிகிறது. ராபர்ட் ரெட்ஃபோர்ட் நடித்து 1990இல் வெளியான Havana, காஸபிளாங்காவின் (சொதப்பலான) அப்பட்டமான காப்பி.

The African Queen (1951) : நடிகர்கள்: Humphrey Bogart & Katharine Hepburn
நிஜவாழ்க்கையிலும் பிடித்துப்போகும் நடிகர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். அந்த வகையில் எனக்கு காத்தரின் ஹெப்பர்னைப் பிடிக்கும். அந்தத் திமிருத்தனம்..

Out of Africa (1985) - நடிகர்கள்: Robert Redford & Meryl Streep. மூக்கு சுந்தரின் இடுகை.
மெரில் ஸ்ட் ரீப்பின் நடிப்பைப்பற்றி என்ன சொல்வது? இவருக்கு ஏற்றபடி நடித்திருக்கும் ராபர்ட் ரெட்ஃபோர்டும் அட்டகாசம்!

The Way We Were (1973) - நடிகர்கள்: Robert Redford, Barbra Streisand
பொருத்தமேயில்லை என்று நாம் சொல்லக்கூடிய இரண்டு பேர்களுக்கிடையில் ஏற்படும் காதல்.

Indecent Proposal (1993) நடிகர்கள்: Robert Redford, Demi Moore, Woody Harrelson
கணவன் மனைவி இருவர். மனைவியைப் பார்த்து விரும்பி ஓரிரவை பணத்தால் வாங்க நினைக்கும் பணக்காரன். எனக்குப் பிடித்த படங்களிலொன்று.

Roman Holiday (1953) - நடிகர்கள்: Gregory Peck & Audrey Hepburn. சீனுவின் இடுகை
ஓட்ரேயின் முதலாவது படம். அழகான இளவரசி கதை.

Sabrina (1954) - நடிகர்கள்: Audrey Hepburn, Humphrey Bogart, William Holden. 80/90களில் Harrison Ford நடித்த காப்பியைத் தயவு செய்து பார்த்துத் தொலைக்க வேண்டாம்.

The Last of the Mohicans (1992) - நடிகர்கள்: Daniel Day-Lewis, Madeleine Stowe கட்டாயம் பார்க்கவேண்டிய படம். அமெரிக்க இந்தியனாக நடித்திருக்கும் டானியல் டே-லூயிஸின் நடிப்புக்காகவே பார்க்கலாம்.

The Unbearable Lightness of Being (1988) - நடிகர்கள்: Daniel Day-Lewis, Juliette Binoche.
டானியல் டே-லூயிஸுக்காகப் பார்க்கத் தொடங்கி ஜூலியர் பின்னோஷ்்ஷின் விசிறியான படம்.

The English Patient (1996) நடிகர்கள்: Ralph Fiennes, Juliette Binoche, Willem Dafoe, Kristin Scott Thomas, Naveen Andrews, Colin Firth.
என்னுடைய பழைய இடுகை - http://mathy.kandasamy.net/movietalk/2004/02/13/the-english-patient-1996

The Widow of St. Pierre(2000) - நடிகர்கள்: Juliette Binoche, Daniel Auteuil, Emir Kusturica(இவர் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். யூகோஸ்லாவியாவைச் சேர்ந்தவர். இவர் இயக்கிய Underground கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று)
நியூஃபவுண்ட்லாந்திற்கு அருகே இருக்கும் செயிண்ட் பிய்யெர் என்ற தீவில் நடக்கும் கதை. மிக மிக அருமையான, அழகான படம்.

Chocolat(2000) - நடிகர்கள்: Juliette Binoche, Johnny Depp, Alfred Molina, Carrie-Anne Moss, Judi Dench

Gone with the Wind(1939) - நடிகர்கள்: Clark Gable, Vivien Leigh
நான் சொல்ல என்ன இருக்கு?

A Streetcar Named Desire (1951) - நடிகர்கள்: Vivien Leigh, Marlon Brando, Kim Hunter, Karl Malden
இதைக் காதற்படமா என்று சொல்லலாமா என்றால் சொல்லலாம் என்றுதான் சொல்வேன். மார்லன் பிராண்டோவின் ஸ்டான்லி கோவால்ஸ்கியின் அந்த ஸ்டெல்லா என்ற கதறலுக்காகவே பார்க்கலாம். :) இந்தப் பட டிவிடியில் ‘Rebel Without a Cause’ படத்துக்காக மார்லன் பிராண்டோவை ஸ்க்ரீன் டெஸ்ட் செய்த துண்டு பார்க்கக்கிடைக்கிறது.

Ultimo tango a Parigi [Last Tango in Paris] (1972) - நடிகர்கள்: Marlon Brando, Maria Schneider
தனித்துவமான படம். சுடர் இடுகையில் இந்தப் படம் பற்றி ஏதோ கிறுக்கியிருக்கிறேன். மனதில் நினைப்பதை எழுத வரவில்லை. இன்னொன்று இந்தப் படத்தைப் பற்றி எழுத இன்னும் சில வருடங்கள் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

Un homme et une femme [A Man and a Woman] (1966) - நடிகர்கள்: Anouk Aimளூe, Jean-Louis Trintignant
Meg Ryanஇன் When Harry Met Sally (1989), Sleepless in Seattle (1993), You’ve Got Mail (1998) படங்களுக்கெல்லாம் அடியெடுத்துக்கொடுத்த படம்.

Annie Hall (1977) - நடிகர்கள்: Woody Allen, Diane Keaton
வூடி ஆலனின் சிறந்த படங்களிலொன்று.

Something’s Gotta Give (2003) - நடிகர்கள்: Jack Nicholson, Diane Keaton, Keanu Reeves, Amanda Peet
ஜாக் நிக்கல்ஸனும் டையான் கீட்டனும் நடித்திருக்கும் காதல் படம். போதாக்குறைக்கு கியானு ரீவ்ஸ் வேறு. ;)

A Walk in the Clouds (1995) - நடிகர்கள்: Keanu Reeves, Debra Messing
கியானு ரீவ்ஸ் நடித்திருப்பது போதாதா? ;) அம்சமான அழகான காதல்!!

Como agua para chocolate [Like Water for Chocolate] (1992) - இயக்கியிருப்பது A Walk in the Clouds இயக்குநர். reason enough. si?

La Strada (1954) - நடிகர்கள்: Anthony Quinn, Giulietta Masina, Richard Basehart
ஃபெல்லினியின் படங்களில் காதலைச் சொல்லும் படம். ஆந்தனி குவின்னை இதை விடச் சிறப்பாக நடிக்க வைத்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை. ஜூலியெட்டா மாஸினா பற்றித் தனியாக எழுத எண்ணம். Guilietta Masinaவின் Gelsomina, Anthony Quinnஇன் பாத்திரத்தை ‘Zampano’ என்ற விளிப்பது இன்னமும் காதில் கேட்கிறது..

Eternal Sunshine of the Spotless Mind (2004) - நடிகர்கள்: Jim Carrey, Kate Winslet
சில படங்களை அனுபவிக்க மட்டுமே முடியுமென்பதை நினைவுபடுத்திய படம். ஜிம் காரியின் திறமையைக் காட்டிய படம். கேட் வின்ஸ்லெட் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

Before Sunrise (1995)/Before Sunset (2004) - நடிகர்கள்: Ethan Hawke, Julie Delpy
நிஜ வாழ்க்கைக்கு மிக அருகாமையில் அமைந்த படங்கள். ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். சில நாட்களாவது இடைவெளி விட்டுப் பாருங்கள் என்பது என்னுடைய பரிந்துரை! அண்மையில் வந்த படங்களில் டயலாகுகளுக்காகத் திரும்பவும் பார்க்க வைத்த படம்.

Hiroshima mon amour [Hiroshima, My Love] (1959) - நடிகர்கள்: Emmanuelle Riva, Eiji Okada
டயலாகுகள் என்றதும் இந்தப் படத்தைத் தவிர்க்கவே இயலாது. எனக்குப் பிடித்த காதற்படங்களுள் ஒன்றேயொன்றை மட்டுமே சொல்ல வேண்டும் என்றால் தயங்காமல் இந்தப் படத்தைத்தான் சொல்வேன். அழகு, அழகு, அத்தனை அழகு!

Amant, L’ [The Lover] (1992) - நடிகர்கள்: Jane March, Tony Leung Ka Fai
Hiroshima Mon Amour-ஐ எழுதிய Marguerite Duras-இன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அவரே எழுதிய நாவலின் திரைவடிவம்.

Xin buliao qing [C'est La Vie, Mon Cheri] (1993)
வாழ்க்கையில் பார்க்கும் சாதாரண மனிதர்களின் காதல்.

Fa yeung nin wa [In the Mood for Love] (2000) - நடிகர்கள்: Maggie Cheung, Tony Leung Chiu Wai
Kar Wai Wong-இன் படம். Maggie Cheugஇற்காகவே பார்க்கலாம். இந்தக் கதைத் திருடி சமீபத்தில் ஒரு ஹிந்திப் படம் வந்தது. நியூயார்க்கில் நடப்பதாகக் காட்டியிருந்த படம். படம் பார்க்கவில்லை. விமர்சனம் மட்டும் வாசித்தேன். பெயர் மறந்துபோய்விட்டது.

Sommarnattens leende [Smiles of a Summer Night] (1955) - இயக்குநர்: இங்மர் பேர்க்மான்.
காதற்படத்திலும் வித்தியாசம் காட்டிய படம்.

The Bridges of Madison County (1995) - நடிகர்கள்: Clint Eastwood, Meryl Streep
இந்தப் பட்டியலைப் போடுவதற்குக் காரணமான படம். இந்தப் படத்தைப்பற்றிப் போகிற போக்கில் நான் எழுதியது
//ஹொலிவூட் காதல் படங்களில் மிகவும் பிடித்த ஐந்து படங்களில் Bridges of Madison Countyக்கு ஓரிடம் இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுவேன். பார்க்கவேண்டியது, இரண்டு நாட்களுக்கு இந்தப் பட நினைவிலேயே சுற்றவேண்டியது என்று இது ஒரு தீராத சுற்று. Meryl Streep அருமையான நடிகை. ஆனால், க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டை இந்தமாதிரியான பாத்திரத்தில் எதிர்பார்க்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தை இயக்கிதும் கிளிண்ட்தான். PHEW! Not the Cowboy/Dirty Harry Clint Eastwood I was introduced to. That’s for sure.//
இடுகை - Million Dollar Baby(2005) உருவாக்கிய அலைகள்..

மூக்கு சுந்தரின் இடுகை - http://mynose.blogspot.com/2007/04/bridges-of-madison-county1995.html

மற்றும்படிக்கு சட்டென்று நினைவு வந்த பிற படங்கள்: When Harry Met Sally (1989), Sleepless in Seattle (1993), You’ve Got Mail (1998), Shakespeare in Love (1998), Titanic, Ghost, Pretty Woman, Chasing Amy, Message in a Bottle, Dirty Dancing, Out of Sight, One fine day, Up Close & Personal, An Officer and a Gentleman, Notting Hill, Jerry Maguire.

தூக்கம் வருவதால் பட்டியலை இத்தோடு நிறுத்துகிறேன். நாளைக்குத் தொடருகிறேனா இல்லையா என்பது அந்நேரத்து உணர்வுகளைப் பொறுத்தது. :)

ஆரம்பத்திலயே கேட்டுக்கிட்டமாதிரி, உங்களுக்குப் பிடித்த காதற் படங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்.

Update:

Duel in the Sun

decalogue-6
closer
amelie
Dances With Wolves
The Age of Innocence
Constant Gardner
The Thomas Crown Affair
The Great Gatsby
Meet Joe Black
Harrison Ford - Witness

green card
the bodyguard
The Fabulous Baker Boys

3-iron

Cold Mountain

Tequila Sunrise
what women want

Open Your Eyes/Abre los Ojos


அய்யனார் Says:
April 18th, 2007 at 2:04 am

1.el postino ( the postman )

இது பாப்லோ நெருடா இத்தாலில தங்கியிருந்த சில நாட்களை சொல்லும் படம்..அவருக்கு தபால்களை கொண்டு சேர்க்கிற ஒரு சாமான்யனோட காதல் கதை

2.A SHORT FILM ABOUT LOVE

KIESLOWESKI யோட படம் இது எனக்கு பிடிச்ச படமும் கூட
ஒரு டீன் ஏஜ் பையனுக்கு மெச்சூர்ட் வுமன் மேல ஏற்படுற காதல் கொஞ்சம் வித்தியாசமான அனுபவமத்த இந்த படம் கொடுக்கும்

3.what dreams may come
வண்ணங்களை குழைத்து காதலை சொன்ன படம்..யதார்த்தம் மீறினாலும் சுவாரஸ்யமான கற்பனை..robin villiams நடிச்சிருப்பார்.

4.west side story

நிறைய பாட்டு கலக்கல் டான்ஸ் னு இளமை திருவிழா இந்த படம்..அதோட மெல்லிசா ஒரு காதல் ..:)

5.Brokeback mountain . ( அடிக்க வராதீங்க :))

ஏன் காதல் அப்படிங்கிறது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில தான் வரனுமா என்ன ?. lee யோட இந்த படம் எனக்கு பிடிச்ச படம் ..மிக அழகான ஒளிப்பதிவு

-0-

Rajesh Chandra Says:
April 18th, 2007 at 12:02 pm

Forrest Gump மற்றும் City Lights(Chaplin)

-0-

கார்திக்வேலு Says:
April 18th, 2007 at 12:44 pm

“Chungking Express” — another gem by Wong Kar-wai
such brilliant use of the mamas and papas sound track

“Un coeur en hiver” (The heart in winter)by Claude Sautet

-0-

Radha Says:
April 18th, 2007 at 6:38 pm

An affait to remember

-0-

Thara Says:
April 18th, 2007 at 11:38 pm

Dr.Zhivago
Autumn in Newyork
Titanic
The American President
As Good as it Gets

-0-

அய்யனார் Says:
April 19th, 2007 at 5:41 am

EYES WIDE SHUT - மூணு பெரிய ஆளுங்க படம் (stanely kubric,tomcruise,nicole kidman)conservative ஆளுங்க தவிர்ப்பது நல்லது. தமிழ் பாட்டெல்லாம் வருங்க

RED-BLUE-WHITE (இந்த மூணு படத்துக்கும் ஒரே ஒரு சின்ன நொடி ல ஒரு சிறிய தொடர்பை சொல்லியிருப்பார் kiesloweski,எந்த காட்சி ன்னு சொல்றவங்க சினிமா ஜீனியஸ்)

wild starewberries

இது வழக்கமான இங்க்மர் பெர்க்மென் னோட frustrated படம்.
ஃப்ளாஷ் பேக் ல சொல்லப்படுற காதல் ரொம்ப நல்லா இருக்கும்

serendipity

எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இந்த படம் நம்ம தமிழ் சினிமாவுல ரொம்ப கஷ்டப்பட்ட சப்ஜெக்ட்

அப்புறம் இந்த படம் A Walk in the Clouds
தமிழ் ல அப்படியே உல்டா பண்ணாங்க பூவேலி ன்னு தமிழ்லயும் சுமாரா இருந்தது

-0-

April 17, 2007

மார்லன் பிராண்டோவின் ஸ்க்ரீன் டெஸ்ட்

மார்லன் பிராண்டோவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. ‘Street Car Named Desire’ பட இறுவட்டில், மார்லன் பிராண்டோவின் ஸ்க்ரீன் டெஸ்ட் பார்க்கக்கிடைக்கிறது. Rebel Without a Cause படத்திற்கான ஸ்க்ரீன் டெஸ்ட் அது. Rebel Without a Cause-இல் கடைசியாக நடித்தது ஜேம்ஸ் டீன். மார்லன் பிராண்டோ பிரபலமானது Street Car Named Desire-இல். Tennesse Williams எழுதிய இந்த நாடகத்திலும் ஸ்டான்லி கோவால்ஸ்கியாக நடித்திருந்தது மார்லன் பிராண்டோதான்.

Marlon Brando
Sc. Rebel Without Cause

Age: 23
Height 5′ 10”
Weight: 170
Hair: Brown
Exp. Stage: 3 years

இவை, ஸ்க்ரீன் டெஸ்டில் பார்க்கக்கிடைக்கும் விவரங்கள்.