எண்டூரிங் லவ் Enduring Love (2004)

ஆங்காங்கே மரங்களுடன் அமைதியான புல்வெளி. அங்கே பிக்னிக் கூடையில் ்ஷாம்பெயினுடன் ஆணும் பெண்ணும். பறவைகள் சத்தமிடுவதுதவிர வேறெதுவும் இல்லாத அமைதி. திடீரென்று வானத்திலிருந்து தட்டுத்தடுமாறிக் கீழே இறங்கிய பலூன். அதிலிருந்து தடுமாறிக் கீழே விழுந்த ஆண். பலூனிற்குள் ஒரு சிறுவன். பலூனோ காற்றில் மேலே செல்லத் தொடங்குகிறது. பலூனில் தொங்கும் ஒரு கயிற்றைப் பிடித்திழுக்குமாறு தவறுதலாகக் கீழே விழுந்தவன் கத்துகிறான். என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைக்கிறார்கள், அந்தப் புல்வெளியில் பிக்னிக்கிற்கு வந்த ஆணும் பெண்ணும். சுதாகரித்துக்கொண்டு இருவரும் பலூனை நோக்கி ஓடுகிறார்கள். இவர்களைப்போலவே சுற்றிலுமிருந்து சிலர் ஓடிவருகிறார்கள். அனைவரும் மேலே தட்டுத்தடுமாறு எழும் பலூனின் கூடைப்பகுதியைத் தாவிப்பிடித்துக்கொள்கிறார்கள். பலூனிற்குள் இருந்த பையனோ தடுமாற்றத்தில் வேறேதோவொரு கயிற்றைத் தவறுதலாக இழுத்துவிடுகிறார். பலூன் மேலே செல்கிறது. கீழே பிடித்துக்கொண்டிருந்தவர்களும் பலூனோடு மேலே இழுபடுகிறார்கள். கைகளில் பெரிய சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. பலூனைப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் கீழே பார்க்கிறார்கள். கணிசமான உயரம் மேலே வந்துவிட்டதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பிக்னிக் வந்திருந்த ஆண் கையை விட்டுவிட்டுக் கீழே குதித்துவிடுகிறான். அவனுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. அவனைப்போலே இன்னும் சிலரும் குதித்துவிட்டிருக்கிறார்கள். அனைவரும் மேலே பார்க்கிறார்கள். இவர்களைப்போல பலூனைப்பிடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் இன்னும் பலூனைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவர், தொடக்கத்தில் பலூனிலிருந்து விழுந்தவரும் அல்ல. கடைசியில், பலூனைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தவர், தன்னுடைய கைப்பிடியைத் தளர விடுகிறார். கீழே விழுந்தவர் அந்த இடத்திலேயே சிதறி உயிரை விடுகிறார்.
அந்த இடத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டும் அந்த ஆள் விழுந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஓடுபவர்களில் முதலாமவர், பிக்னிக்கிற்கு வந்திருந்த ஆண். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும் ஜோ. ஜோவுடன் பிக்னிக்கிற்கு வந்தது அவனுடைய காதலி கிளேர். புல்வெளியில் பலூனிலிருந்து விழுந்து இறந்துபோன ஆள் கிடக்குமிடத்திற்கு வந்ததும் ஜோவைக் கூட வந்தவன் இறந்தவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கச் சொல்கிறான். மதநம்பிக்கையெல்லாம் இல்லையென்று சொல்லும் ஜோவை வற்புறுத்தி இருவரும் பிரார்த்திக்கிறார்கள்.

வீட்டிற்குத் திரும்பும் ஜோவை, புல்வெளியில் நடந்த சம்பவம் பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. பலூனிலிருந்து விழுந்து இறந்துபோனது ஒரு டாக்டரென்று அறிகிறான். சதா சர்வகாலமும் பிறருக்கு உதவி செய்வதையே பழக்கமாகக் கொண்டவரென்றும் தெரிய வருகிறது. தான் கைப்பிடியை விட்டதைத்தொடர்ந்துதான் எல்லொரும் விட்டார்களோ. அதனால்தான் டாக்டர் மட்டும் பலூனில் தொங்கிச் செல்லும் நிலை வந்ததோ என்று நினைத்து நினைத்து மறுகுகிறான். எப்போதும் புல்வெளியில் நடந்ததையே நினைத்தபடி இருப்பதினாலும் அந்தச் சம்பவம் குறித்த செய்திகளைச் சேர்த்தபடி இருப்பதினாலும் ஜோவிற்கும் கிளேருக்குமிடையிலான உறவு விரிசல் காணுகிறது. இதற்கிடையில், புல்வெளியில் பிரார்த்தனை செய்யச் சொன்னவன் ஜோவைப் பின் தொடர்ந்தபடி இருக்கிறான். ஜெட்டின் தொலைபேசி அழைப்பை ஏற்று, அவனைச் சந்தித்த ஜோவிற்கு ஜெட்டின் பேச்சு மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. ஜோ, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அன்பு மற்றும் ethics பற்றிப் பாடமெடுக்கிறான். அவனுக்குப் புல்வெளியில் நேர்ந்த அனுபவங்களின் காரணமாக அவனால் இந்தப் பாடத்தைச் சரிவர நடாத்தவும் முடியவில்லை. ஜோவைப் பின்தொடரும் ஜெட், நடப்பதனைத்தும் விதிப்பதி நடப்பதாகவும் அவர்களுக்கிடையில் ஒரு பிணைப்பு உருவாகியிருப்பதாகவும் சொன்னபடி பின்தொடருகிறான்.
ஜெட்டை பல விதங்களிலும் கெஞ்சிக்கூத்தாடி, பயமுறுத்திப் பின் தொடரவேண்டாமென்று கேட்டாலும் ஜெட் கேட்பதாக இல்லை. ஒரு பக்கம் புல்வெளியில் டாக்டரின் மரணம், மறுப்பக்கம் இப்போது ஜெட்டின் பின்தொடருதல் ஆகியவற்றால் ஜோவின் வாழ்க்கைமுறையே மாறிப்போகிறது. சிற்பியாகவிருக்கும் கிளேரிடம் ஆரம்பத்தில் தன்னையும் சிற்பமாக வடிக்கும்படி வேண்டும் ஜோவிடம், அவன் தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருப்பதால் சிற்பமாக வடிப்பது கடினமென்று கிளேர் சொல்கிறாள். குழப்பமே வாழ்க்கையாக மாறிப்போன கட்டத்தில் ஒரு நாள், கிளேர் தன்னைச் சிற்பமாக வடித்திருப்பதைக் காண்கிறான் ஜோ. ஜோ சிற்பத்தைக் கண்டுவிட்டத்தைப் பார்த்த கிளேர், தான் அவனைப்பிரிந்து செல்ல முடிவெடுத்துவிட்டதைச் சொல்கிறாள்.
இதற்கிடையில் டாக்டரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலும் ஜோவிற்கு மேலும் பல புதிர்களே விடைகளாகக் கிடைக்கின்றன. புதிர்களை விடுவிக்க நினைத்து அவற்றை ஆராய்ந்துகொண்டிருக்கும் ஜோவிற்கு ஜெட்டினால் வரும் பிரச்சினைகளும் இன்னொருபக்கம் தலையிடியாகவிருக்கின்றன.
படத்தில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் முன்கூட்டியே சொல்லமுடியாதபடி இருக்கிறது. யாரும் எந்தவிதமான விடைகளுடனும் இருக்கவில்லை. தொடக்கத்தில் நேர்மை நியாயம் போன்ற கேள்விகளுடன் தொடங்கும் படம் கொஞ்சம் கொஞ்சமாக திரில்லர் படமாக மாறுகிறது. ஆனாலும், மனித உணர்வுகளையும் மனிதர்களையும் பார்ப்பதையும் நிறுத்திவிடவில்லை. இதுவே படத்தினை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் காரணியாக இருக்கிறது.

Ian McEwan-இன் நாவலைப் படமாக இயக்கியிருப்பவர் ரோஜர் மிச்செல். நோட்டிங் ஹில் பட இயக்குநரான இவர், இவ்வருடம் பேசப்படும் படங்களில் ஒன்றான வீனஸையும் இயக்கியிருக்கிறார். படத்தில் ஜோவாக வருவது சமீபத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டானியல் கிரெய்க். ரோட் டு பேர்டி்ஷன், சில்வியா, ம்யூனிக் போன்ற படங்களில் நடித்தவர் இங்கேயும் சொல்லிக்கொள்ளும்படி நடித்திருக்கிறார். அதிரடி நாயகனாக அல்லாமல் சராசரி உயரம், சராசரி உடல்வாகு என்று ஒரு academia-வாக வருகிறார். கிளேராக மைனோரிட்டி ரிப்போர்ட் மற்றும் இன் அமெரிக்காவில் நடித்த சமந்தா மோர்ட்டன். ஜெட்டாக தூள்கிளப்பியிருப்பது நோட்டிங் ஹில்லில் ஹ்யூக் கிராண்டின் அறைத்தோழனாக வந்த ரீஸ் இவான்ஸ்(Rhys Ifans).



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (