February 27, 2007

பெஷ்கெம்பிர் Beshkempir [The Adopted Son] (1998)

beshkembir.jpg

நம்மில் பலருக்கு உங்கள் வாழ்வின் இனிமையான பொழுதுகள் எவை என்று கேட்டவுடனே நினைவுக்கு வருவது நமது சிறுவயது அனுபவங்களாக இருக்கலாம். முக்கியமாக கிராமத்துச் சிறுவர்களுக்கு. கேட்க ஆளில்லாமல் காடுமேடெல்லாம் அலைந்துவிட்டு சாப்பாட்டு வேளைக்கு வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களை பலரும் பலவிதமாக அனுபவித்திருக்கலாம். புளியங்காய் அடிப்பது, தேன் எடுப்பது, வண்ணாத்திப்பூச்சி, தட்டான் பிடிப்பதிலிருந்து திருட்டுத்தனமாக கோழிமுட்டை எடுப்பது, ஏன் கோழி பிடிப்பதுவரைகூடச் செய்திருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு சிறுவர்கூட்டத்தைத்தான் கர்க்கிஸ்தான் படமான பெஷ்கெம்பிரில் பார்க்கிறோம். களிமண்ணிலிருந்து கற்கள் செய்யுமிடத்தில் களிமண்ணைத் திருடி உடலெங்கும் பூசிக்கொண்டு தேனெடுக்கச் சென்று தேன்கூட்டைக்கலைத்துவிட்டு ஓடித்தப்புவது, கோழி முட்டைகளைத் திருடுவது, ஒளிந்திருந்து பெண்களைப்பார்ப்பது என்று அந்தப்பருவத்துக்குரிய சேட்டைகளைச் செய்தபடி உற்சாகமாகத் திரிகிறது அந்த நண்பர் பட்டாளம். எல்லாப் பட்டாளங்களையும்போலவே இங்கேயும் யார் முதன்மையாக இருப்பது போன்ற, குழுச்சண்டைகள் லேசாக வந்து அப்படியே பறந்தும் போகிறது. இதற்கிடையில், கூட விளையாடும் பெண்ணின் கவனத்தைப் பெறுவதற்கு நடக்கும் சண்டையில் பெஷ்கெம்பிரை அவனது பெற்றோர் தத்தெடுத்ததுபற்றிய விவரம் வெளியே சிந்திவிடுகிறது.

கர்கிஸ்தானில், நம்மூரில் நடப்பதுபோலவே நிறையக் குழந்தைகள் பெற்றவர்கள், தமது ஆண்குழந்தைகளில் ஒன்றை குழந்தைகள் இல்லாத பெற்றோருக்குக் கொடுக்கிறார்கள். ஆண்குழந்தைகளுக்கான மவுசு, அங்கேயும் இருப்பது கவனிக்கவேண்டிய ஒரு விதயம். தான் தத்தெடுக்கப்பட்டவன் என்ற செய்தி, பெஷ்கெம்பிரை வருத்தப்பட வைக்கிறது. அது பற்றி யாரிடமும் பேசாதமல் இருக்கிறான். ஆனால், அவனைக் கண்டிப்புடன் நடாத்தும் தகப்பனின் போக்கு அவனை மிகவும் வருத்துகிறது.

ஒரு நாள், திரைப்படம் போக அனுமதி கேட்கும் பெஷ்கெம்பிரை அவனது அப்பாவிடம் கேட்கச் சொல்கிறார் பாட்டி. ஆனால், அவனை ஏறெடுத்தும் பார்க்காத தகப்பனைப் பார்த்தபிறகு தானே பணம் கொடுத்து அனுப்புகிறார். பெஷ்கெம்பிர் பார்க்கப்போகும் படம், திரைப்படக் கொட்டாயொன்றில் ஓடும் ஹிந்தித் திரைப்படம். உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டு பார்க்கும் கர்க்கிஸ்தான் மக்களை வண்ணமயமான ஹிந்தி திரைப்பட ஆடல் பாடல் காட்சிகள் வெகுவாக ஈர்க்கின்றன. படம் முழுவதும், பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையில் வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பெஷ்கெம்பர் சிறுகுழந்தையாகத் தத்துக்கொடுக்கப்படும் காட்சிகள், பெண்ணொருத்தி வயல்வெளியில் நடந்து வரும் காட்சி, வீட்டிற்குள் வந்து அகப்படும் பறவை, மற்றும் ஹிந்தித் திரைப்பட ஆடல்-பாடற்காட்சிகள் போன்றவனை மட்டும் வண்ணத்தில் காட்டப்படுகின்றன. இது, வண்ணத்தில் காட்டப்படும் காட்சிகளின் முக்கியத்துவத்தைக் கூட்டுவதை விட, கறுப்பு-வெள்ளையில் காட்டப்படும் காட்சிகளை மேலும் இரசிக்க வைக்கிறது. ஹிந்தித் திரைப்பட ஆடல்-பாடல் காட்சியைவிட, படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் முகபாவம் வெகுவாக இரசிக்கக்கூடியமாதிரி இருக்கிறது.

நம்மூர்க்கிராமங்களை ஒத்த வாழ்க்கைமுறையை படத்தில் காட்டப்படும் கர்க்கிஸ்தான் கிராமமும் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வரும் மாட்டின் கன்றுக்குட்டியைக் கொஞ்ச நேரம் பால்குடிக்க விட்டுப்பிறகு பால் கறக்கும் காட்சி, அப்படியே நம்மூரை நினைவுபடுத்தும் காட்சி. ஊர் ஞாபகம் துள்ளிக்குதித்தோடி வந்தது உண்மை! :)

நம்மூரைப்போலவே சிறுவயதுக்காரர்கள், அவர்களுடைய வயதில் பெரிய நண்பர்களுக்காக காதல்தூது போவது, காதலியை அழைத்து வர உதவி செய்வது போன்ற விதயங்களும் நடக்கின்றன. பெஷ்கெம்பிரும் அவனுடைய நண்பனின் காதலியை அழைத்து வருகிறான். சைக்கிளின் முன்பாரில் அமர மறுக்கும் அவள், பின்னால் அமர்ந்து போகிறாள். அடுத்த முறை, காதலியைக் காண வருமுன் கவனமாக அந்தப் பின்சீட்டைக் கழற்றி வைத்துவிட்டு வருகிறான். நம்மூரில் முன்பாரில் பெண்களை அமர்த்திச் செல்வதுகுறித்து அந்த வயதுக்காரர்கள் கிசுகிசுத்ததைக் கேட்ட நினைவு வந்தது.

தத்தெடுக்கப்பட்டவன் என்பதறிந்தபிறகு பெஷ்கெம்பிருக்கும் அவனுடைய உற்ற தோழனுக்கும் எங்கே பார்த்தாலும் சண்டை வருகிறது. இந்தச் சண்டைகளுக்கு, இவர்களின் வயதொத்த பெண்மீது இருவருக்கும் இருந்த ஈர்ப்பு முக்கிய காரணம். இந்தச் சண்டைகளினால், வீட்டிற்கு முறைப்பாடுகள் வருகின்றன. ஒருமுறை, நண்பனின் வீட்டில் வைத்தே அவனை அடித்துவிட்டதாக நண்பனுடைய அம்மா, நண்பனையும் இழுத்துவந்து கத்துகிறார். நண்பன், என்ன கட்டிய மனைவியா நீ அடிப்பதற்கு என்று அந்தப் பெண்மணி கேட்பதிலிருந்து, நம்மூர்க்காரர்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் இன்னொரு வெட்ககரமான ஒற்றுமையும் தெரியவந்தது. இந்தப் பிரச்சினைகளால் மனம்வெதும்பும் பெஷ்கெம்பிர் வீட்டைவிட்டு ஓடிப்போய் மீன்பிடிப்பவர்களோடு வேலை செய்கிறான்.

நோய்வாய்ப்படும் பாட்டி, பெஷ்கெம்பிரைப் பார்க்கவேண்டும் என்று சொல்லி விடத் தேடி வருபவர்கள் பெஷ்கெம்பிரைக் கண்டுபிடித்துக் கொண்டுசேர்ப்பதற்குள் அவள் இறந்துவிடுகிறார். ஊருக்கு வந்துசேரும் பெஷ்கெம்பிரிடம், அவன் தந்தை, குழந்தையில்லாததால் அவனைத் தத்தெடுத்ததாகவும், தனது மகன் போலவே கண்டிப்பாக இருக்க முயற்சித்ததாவும் கூறுகிறார். பாட்டி, பேரன்ந்தான் முன்றின்று தனது செத்தவீட்டை நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டதால் அப்படியே நடக்கிறது. புதிய பொறுப்புகளுக்கு உள்ளாக்கப்படும் பெஷ்கெம்பிர், ஊர்வழக்கப்படி, யாரேனும் பாட்டிக்குக் கடன் கொடுக்குமதி இருந்தால் தரத்தேவையில்லை என்று சொல்கிறான். அதேவேளை, யாருக்காவது பாட்டி கடன் கொடுக்குமதி இருந்தால், அதைத்தான் பொறுப்பெடுத்துக்கொள்வதாக உறுதி அளிக்கிறான்.

அடுத்துவரும் நாட்களில், தன்னைவிடச் சிறிய நண்பனை அழைத்துப்போய் அவனுக்குப் பிடித்த பெண்ணை அழைத்துவரச் சொல்கிறான். இதற்காகச் சைக்கிளை, மற்றொரு நண்பனிடமிருந்து பெறும் பெஷ்கெம்பிர், அவனைப்போலவே சைக்கிளின் பின்சீட்டைக் கழற்றி வைக்கிறான். :)

படத்தில் பெஷ்கெம்பிராக நடித்திருப்பது இயக்குநர் Aktan Abdykalykovஇன் மகன் Mirlan Abdykalykov. முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த கர்க்கிஸ்தான் சுதந்திரம் பெற்றபிறகு, அங்கிருந்து வெளியான முதற்படம் இது. 1998இல் வெளியான இந்தப் படம் இயக்குநர் Aktan Abdykalykovஇன் முதல் முழுநீளப்படம். கர்க்கிஸ்தானின் முன்னாள்-இன்னாள் அரசியல் இன்னபிற விதயங்களைக் காட்டாமல் சிறுபிராயத்து அனுபவங்களைச் சுவாரசியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இது சரியா, பிழையா என்று நான் ஆராயவில்லை. சிறுபிராயத்து அனுபவங்களோடு அந்தப் பிராந்திய மக்களின் பழக்கவழக்கங்களையும் ஆங்காங்கே காட்டியிருக்கிறார். குழந்தையில்லாத பெற்றோர், அதிக குழந்தைகளோடு இருக்கும் பெற்றோரிடமிருந்து ஆண்குழந்தைகளைத் தத்தெடுப்பதும், குடும்பத்தில் பெண்கள் பெரும்பாலான வேலைகளைச் செய்வதும், எல்லாம் செய்தும் கணவனிடம் சித்திரவதைப்படும் பெண்கள் அங்கும் பெருவாரியாக இருப்பதுவும் படத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியவை.

மொத்தத்தில் சுவாரசியமான படம். குறைந்தபட்சம், சிறுபிராயத்து அனுபவங்களை மிகவும் எளிமையாக மனதில் நிற்கும்படி காட்டியதற்காகவாவது பார்க்கவேண்டும்.

February 19, 2007

Zhou Yu’s Train (2002)

zhouyustrain.jpg

வாழ்க்கையில் நாம் கேட்ட, பார்த்த, படித்த, அனுபவித்தவற்றில் எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை அல்லவா. ஆனாலும், அப்படிப் புரிந்துகொள்ளமுடியாதவற்றில் சிலதை இரசிக்கக் கற்றுக்கொள்கிறோமில்லையா. சமயங்களில் எல்லாவற்றையும் அறுத்துறுத்துத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. சிலது புரியாமற்போவதே சுகம் என்றும் எடுத்துக்கொள்கிறோமில்லையா? இந்தப் படத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

அழகழகான சீனத்துப் பீங்கான் பொருட்களை உருவாக்கும் கலை வாய்த்த Zhou Yu. பீங்கான் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் இவள், வாரமிருமுறை ரயிலில் அவளுடைய காதலனைச் சந்திக்கச் செல்கிறாள். அவன், Chen Qing. ஒரு கவிஞன். முன்பே கண்டிருந்தாலும் நடனமொன்றில் உற்சாகமாகப் பொழுதைப்போக்கிக்கொண்டிருந்த Zhou Yuவிடம் ஒரு காதற்கவிதையைக் கொடுத்துத் தன்வசப்படுத்திக்கொண்டவன். அவளை ஒரு ஏரிக்கு ஒப்புமைப்படுத்தி எழுதிய அக்கவிதை ஒரு பத்திரிகையிலும் பிரசுரமானது Zhou Yuவை அவனிடம் நாட்டமேற்படக் காரணமாகிப் போனது. Chen Qingஐ பிரபலமான கவிஞனாக்கப் போவதாக அவனிடமே அடிக்கடி சொல்லிக்கொண்டு அதற்காகச் சில முயற்சிகளையும் அவள் எடுத்தாள். வேறொரு நகரத்தில், புத்தகக்கடையா, நூலகமா என்று குழம்ப வைக்கும் புத்தகங்கள் நிறைந்த அறையில் இருந்த Chen Qingஇற்கு Zhou Yuவின் ஆளுமை கொஞ்சம் தயங்கவைத்தாலும் அவர்களுடைய உறவு அந்த அறைக்குள்ளே வளர்ந்துவந்தது.

zhouyustrain1.jpg

Chen Qingஐச் சந்திப்பதற்காக வாரமிருமுறை ரயிலில் செல்லும்போதுதான் Zhang Qiang அவளைச் சந்திக்கிறான். Zhou Yuவிடம் ஈர்ப்பு ஏற்படுவதை அவளிடமே சொல்கிறான். கூச்ச சுபாவமுடைய கவிஞனைக் காதலிப்பவளுக்கு அடிதடியாக வெளிப்படையான பேச்சும் செயலும் கொண்ட இந்த மிருக வைத்தியனைப் பிடிக்கவில்லை. அல்லது அப்போது அப்படித்தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். ஏனென்றால், தொடரும் ரயில் பயணங்களில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள் ஒரு நாள் அவர்கள் உடலுறவு கொள்கிறார்கள். Zhang Qiangஇன் தங்குமிடத்திற்கும் அடிக்கடி செல்பவள், அவனுடைய நண்பர்களுக்கும் விருந்து சமைத்துப்போடுகிறாள்.

இங்கே, இப்படி நடக்கிறது என்றால், மறுபக்கம் நிலமை அவ்வளவு சுமூகமாகவில்லை. Zhou Yu, கவிஞனாக, அவனைப்பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் அவளது இன்னபிற முயற்சிகளும் Chen Qingஐ மூச்சுமுட்ட வைக்கின்றன. திபேத்திற்கு பள்ளிக்கூட வாத்தியாராக வருமாறு அழைக்கப்பட்டிருப்பதையும் Zhou Yuவிடம் சொல்கிறான்.

படத்தில் காட்சிகள் Non-linearஆக எடுக்கப்பட்டிருப்பதாலும் சில காட்சிகள் திரும்பக் காட்டப்படுவதாலும் சில சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தனவா அல்லது ஒரே சமயத்தில் நடந்தவையா என்ற குழப்பம் வருகிறது.

zhou_tu_train2.jpg

ரயிலில் சந்தித்து உறவை ஏற்படுத்திக்கொண்ட இரண்டாவது காதலனுக்கு, கவிஞன் அவளுடைய வாழ்வில் இருப்பது தெரிந்திருப்பதையும், கவிஞனைப்பற்றி வேறு சில விதயங்களும் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதையும் இங்கே சொல்லவேண்டும்.

இந்த முக்கோணக் காதல் குழப்பம் போதாதென்று Gong Li, குட்டைத்தலைமுடியுடன் கொஞ்சம் வயதான தோற்றத்தில் Xiuவாகவும் வருகிறாள். படத்தின் கதைசொல்லி இந்த Xiuதான். இந்த Xiuதான் முந்நாளைய Zhou Yuவா என்பதுவும் ஒரு குழப்பம். படத்தின் முடிவும் பார்ப்பவர்கள் அவரவர் எண்ணவோட்டத்திற்கேற்ப முடிவை ஊகிக்கும்படி அமைந்திருக்கிறது.

zhou_yu_train3.jpg

இத்தனை இருந்தும் படத்தைக் கொண்டுசெல்வது Gong Liயும் படத்தின் புகைப்படப்பிடிப்பாளருந்தான். தோற்றத்தில் மென்மையானவளாகவும் மனவுறுதியில் மிகவும் சிலாகிக்கக்கூடியவளாகவும் Zhou Yuவை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்ச சுபாவமுடைய கவிஞராக வரும் Tony Leung Ka Faiக்கும் இது நல்லதொரு வாய்ப்பே. இதற்கு முன்பு பார்த்திருந்த ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வியட்நாமில் வசிக்கும் சீன இளைஞனாக வந்திருந்த ‘The Lover’இலிருந்து வித்தியாசமான பாத்திரம். என்ன இரண்டு படங்களிலும் இவருக்கு காதற்காட்சிகளுக்கு வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. ‘L’amant அ. The Lover’, ‘Hiroshima Mon Amour’ கதை/படக்கதை எழுதிய Marguerite Duras-இன் சுயசரிதையை ஒட்டி எடுத்த படம். வியட்நாமில் இருந்தபோது நடந்த அவரது இளவயது வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட படம்.

Gong Li-இற்காகவும் படக்காட்சியமைப்புக்காகவுமாவது பார்க்கலாம். You won’t be disappointed.

February 9, 2007

எண்டூரிங் லவ் Enduring Love (2004)

enduring_love0.jpg

ஆங்காங்கே மரங்களுடன் அமைதியான புல்வெளி. அங்கே பிக்னிக் கூடையில் ்ஷாம்பெயினுடன் ஆணும் பெண்ணும். பறவைகள் சத்தமிடுவதுதவிர வேறெதுவும் இல்லாத அமைதி. திடீரென்று வானத்திலிருந்து தட்டுத்தடுமாறிக் கீழே இறங்கிய பலூன். அதிலிருந்து தடுமாறிக் கீழே விழுந்த ஆண். பலூனிற்குள் ஒரு சிறுவன். பலூனோ காற்றில் மேலே செல்லத் தொடங்குகிறது. பலூனில் தொங்கும் ஒரு கயிற்றைப் பிடித்திழுக்குமாறு தவறுதலாகக் கீழே விழுந்தவன் கத்துகிறான். என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைக்கிறார்கள், அந்தப் புல்வெளியில் பிக்னிக்கிற்கு வந்த ஆணும் பெண்ணும். சுதாகரித்துக்கொண்டு இருவரும் பலூனை நோக்கி ஓடுகிறார்கள். இவர்களைப்போலவே சுற்றிலுமிருந்து சிலர் ஓடிவருகிறார்கள். அனைவரும் மேலே தட்டுத்தடுமாறு எழும் பலூனின் கூடைப்பகுதியைத் தாவிப்பிடித்துக்கொள்கிறார்கள். பலூனிற்குள் இருந்த பையனோ தடுமாற்றத்தில் வேறேதோவொரு கயிற்றைத் தவறுதலாக இழுத்துவிடுகிறார். பலூன் மேலே செல்கிறது. கீழே பிடித்துக்கொண்டிருந்தவர்களும் பலூனோடு மேலே இழுபடுகிறார்கள். கைகளில் பெரிய சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. பலூனைப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் கீழே பார்க்கிறார்கள். கணிசமான உயரம் மேலே வந்துவிட்டதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பிக்னிக் வந்திருந்த ஆண் கையை விட்டுவிட்டுக் கீழே குதித்துவிடுகிறான். அவனுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. அவனைப்போலே இன்னும் சிலரும் குதித்துவிட்டிருக்கிறார்கள். அனைவரும் மேலே பார்க்கிறார்கள். இவர்களைப்போல பலூனைப்பிடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் இன்னும் பலூனைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவர், தொடக்கத்தில் பலூனிலிருந்து விழுந்தவரும் அல்ல. கடைசியில், பலூனைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தவர், தன்னுடைய கைப்பிடியைத் தளர விடுகிறார். கீழே விழுந்தவர் அந்த இடத்திலேயே சிதறி உயிரை விடுகிறார்.

அந்த இடத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டும் அந்த ஆள் விழுந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஓடுபவர்களில் முதலாமவர், பிக்னிக்கிற்கு வந்திருந்த ஆண். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும் ஜோ. ஜோவுடன் பிக்னிக்கிற்கு வந்தது அவனுடைய காதலி கிளேர். புல்வெளியில் பலூனிலிருந்து விழுந்து இறந்துபோன ஆள் கிடக்குமிடத்திற்கு வந்ததும் ஜோவைக் கூட வந்தவன் இறந்தவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கச் சொல்கிறான். மதநம்பிக்கையெல்லாம் இல்லையென்று சொல்லும் ஜோவை வற்புறுத்தி இருவரும் பிரார்த்திக்கிறார்கள்.

enduring_love1.jpg

வீட்டிற்குத் திரும்பும் ஜோவை, புல்வெளியில் நடந்த சம்பவம் பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. பலூனிலிருந்து விழுந்து இறந்துபோனது ஒரு டாக்டரென்று அறிகிறான். சதா சர்வகாலமும் பிறருக்கு உதவி செய்வதையே பழக்கமாகக் கொண்டவரென்றும் தெரிய வருகிறது. தான் கைப்பிடியை விட்டதைத்தொடர்ந்துதான் எல்லொரும் விட்டார்களோ. அதனால்தான் டாக்டர் மட்டும் பலூனில் தொங்கிச் செல்லும் நிலை வந்ததோ என்று நினைத்து நினைத்து மறுகுகிறான். எப்போதும் புல்வெளியில் நடந்ததையே நினைத்தபடி இருப்பதினாலும் அந்தச் சம்பவம் குறித்த செய்திகளைச் சேர்த்தபடி இருப்பதினாலும் ஜோவிற்கும் கிளேருக்குமிடையிலான உறவு விரிசல் காணுகிறது. இதற்கிடையில், புல்வெளியில் பிரார்த்தனை செய்யச் சொன்னவன் ஜோவைப் பின் தொடர்ந்தபடி இருக்கிறான். ஜெட்டின் தொலைபேசி அழைப்பை ஏற்று, அவனைச் சந்தித்த ஜோவிற்கு ஜெட்டின் பேச்சு மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. ஜோ, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அன்பு மற்றும் ethics பற்றிப் பாடமெடுக்கிறான். அவனுக்குப் புல்வெளியில் நேர்ந்த அனுபவங்களின் காரணமாக அவனால் இந்தப் பாடத்தைச் சரிவர நடாத்தவும் முடியவில்லை. ஜோவைப் பின்தொடரும் ஜெட், நடப்பதனைத்தும் விதிப்பதி நடப்பதாகவும் அவர்களுக்கிடையில் ஒரு பிணைப்பு உருவாகியிருப்பதாகவும் சொன்னபடி பின்தொடருகிறான்.

ஜெட்டை பல விதங்களிலும் கெஞ்சிக்கூத்தாடி, பயமுறுத்திப் பின் தொடரவேண்டாமென்று கேட்டாலும் ஜெட் கேட்பதாக இல்லை. ஒரு பக்கம் புல்வெளியில் டாக்டரின் மரணம், மறுப்பக்கம் இப்போது ஜெட்டின் பின்தொடருதல் ஆகியவற்றால் ஜோவின் வாழ்க்கைமுறையே மாறிப்போகிறது. சிற்பியாகவிருக்கும் கிளேரிடம் ஆரம்பத்தில் தன்னையும் சிற்பமாக வடிக்கும்படி வேண்டும் ஜோவிடம், அவன் தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருப்பதால் சிற்பமாக வடிப்பது கடினமென்று கிளேர் சொல்கிறாள். குழப்பமே வாழ்க்கையாக மாறிப்போன கட்டத்தில் ஒரு நாள், கிளேர் தன்னைச் சிற்பமாக வடித்திருப்பதைக் காண்கிறான் ஜோ. ஜோ சிற்பத்தைக் கண்டுவிட்டத்தைப் பார்த்த கிளேர், தான் அவனைப்பிரிந்து செல்ல முடிவெடுத்துவிட்டதைச் சொல்கிறாள்.

இதற்கிடையில் டாக்டரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலும் ஜோவிற்கு மேலும் பல புதிர்களே விடைகளாகக் கிடைக்கின்றன. புதிர்களை விடுவிக்க நினைத்து அவற்றை ஆராய்ந்துகொண்டிருக்கும் ஜோவிற்கு ஜெட்டினால் வரும் பிரச்சினைகளும் இன்னொருபக்கம் தலையிடியாகவிருக்கின்றன.

படத்தில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் முன்கூட்டியே சொல்லமுடியாதபடி இருக்கிறது. யாரும் எந்தவிதமான விடைகளுடனும் இருக்கவில்லை. தொடக்கத்தில் நேர்மை நியாயம் போன்ற கேள்விகளுடன் தொடங்கும் படம் கொஞ்சம் கொஞ்சமாக திரில்லர் படமாக மாறுகிறது. ஆனாலும், மனித உணர்வுகளையும் மனிதர்களையும் பார்ப்பதையும் நிறுத்திவிடவில்லை. இதுவே படத்தினை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் காரணியாக இருக்கிறது.

enduring_love.jpg

Ian McEwan-இன் நாவலைப் படமாக இயக்கியிருப்பவர் ரோஜர் மிச்செல். நோட்டிங் ஹில் பட இயக்குநரான இவர், இவ்வருடம் பேசப்படும் படங்களில் ஒன்றான வீனஸையும் இயக்கியிருக்கிறார். படத்தில் ஜோவாக வருவது சமீபத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டானியல் கிரெய்க். ரோட் டு பேர்டி்ஷன், சில்வியா, ம்யூனிக் போன்ற படங்களில் நடித்தவர் இங்கேயும் சொல்லிக்கொள்ளும்படி நடித்திருக்கிறார். அதிரடி நாயகனாக அல்லாமல் சராசரி உயரம், சராசரி உடல்வாகு என்று ஒரு academia-வாக வருகிறார். கிளேராக மைனோரிட்டி ரிப்போர்ட் மற்றும் இன் அமெரிக்காவில் நடித்த சமந்தா மோர்ட்டன். ஜெட்டாக தூள்கிளப்பியிருப்பது நோட்டிங் ஹில்லில் ஹ்யூக் கிராண்டின் அறைத்தோழனாக வந்த ரீஸ் இவான்ஸ்(Rhys Ifans).

February 4, 2007

மொசியோர் இப்ராஹிம் Monsieur Ibrahim (2003)

வந்தபுதிதில் பார்க்க நினைத்து முடியாமல், சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த படம். பார்க்க நினைத்ததற்கு முக்கிய காரணம் ஒமார் ்ஷெரிஃப். லாரன்ஸ் ஓஃப் அரேபியாவை நினைத்தாலே பீட்டர் ஓ டூலின் லாரான்ஸை முந்திக்கொண்டு நினைவுக்கு வருவது ஒமார் ்ஷெரிஃபின் ்ஷாரிஃப் அலி. அதற்குப் பிறகுதான் டாக்டர் ்ஷிவாகோ. போனால் போகிறதென்று ஃபன்னி கேர்ள்-ஐயும் சொல்லிவிடலாம். ஒமார் ்ஷெரிஃப், ஓய்விலிருந்து வெளிவந்து இந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், படம் எடுக்கப்படுவதற்கும் பாடுபட்டிருந்தார் என்று படித்ததுதான் ஆர்வத்துக்கு முக்கிய காரணமாகவிருந்தது.

1960களின் தொடக்க கால பாரிஸில் வறுமையான பகுதி. ஒடுக்கமான தெருக்கள். பலதரப்பட்ட மக்கள் வாழுமிடம். தெருக்களில் பாலியல் தொழிலாளிகளின் சகஜமான நடமாட்டம். இங்கே கசவாரத் தந்தையோடு வாழும் 16 வயது மோமோ. அவனுடைய தாய் அவர்களை விட்டுப் போய்விட்டாள். வீட்டுப் பராமரிப்புகள், சமையல், வீட்டுப் பொருட்கள் வாங்குவது என்று எல்லாப் பொறுப்புகளும் மோமோவிடம். தன்னுடைய பிறந்த நாளுக்குத் தானே ஏற்பாடுகள் செய்து கொண்டாட முனையும் அவனிடம், எப்போதோ வீட்டை விட்டுப்போன அவனது அண்ணனின் புகழையே பாடிக்கொண்டிருப்பதுதான் அவனது அப்பாவின் குணம். இதனால், வீட்டில் எப்போதும் ஒருவிதமான போர்ச்சூழல் நிலவிக் கொண்டிருந்தது. வீட்டுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்குவதற்குத் தோதாக மோமோவின் அடுக்குமாடிக்கட்டடத்துக்கு எதிரிலேயே ஒரு மளிகைக் கடை.. கடைக்காரர் இப்ராஹிம் (ஒமார் ்ஷெரிஃப்) துருக்கிக்காரராக இருந்தாலும் அரேபியராகத்தான் அறியப்படுகிறார்.

கவனிப்பில்லாமல் வளரும் மோமோவைப் பார்த்துக்கொள்வது தெருவில் நடமாடும் அந்தப் பெண்களும் எதிர்க்கடைக்காரரான இப்ராஹிமுந்தான். தெருப்பெண்களுக்கும் மோமோவுக்குமான உறவு சுவாரசியமான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்டியலை உடைத்து எடுத்த பணத்துடன் முதலாவது உறவு தேடிப்போகும் மோமோவிடம் அதுபற்றிப் பேசியபடியே உறவுகொள்வதில் தொடங்கி பிறகுபிறகு அவனைக் கவனித்துக்கொள்வதுவரை நீடிக்கும் அந்த உறவு வித்தியாசமானதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது. இந்த உறவு இப்படியென்றால், கடைக்காரர் இப்ராஹிமுடனான உறவு வித்தியாசமானது. கடையில் சிறுசிறு பொருட்களைத் திருடும் மோமோவைக் கண்டுகொள்ளாமல் விடுவதில் தொடங்கிப் பிறகு கஞ்சத்தனமான தந்தையின் உணவில் விலை குறைந்த உணவுகளைக் கலந்து கலப்படம் செய்வது, மோமோவுக்குப் பிடித்த உணவுப்பண்டங்களைக் கொடுப்பது என்பதிலிருந்து மனம் விட்டுப் பேச ஊக்குவிப்பது, அறிவுரைகளைக் கொடுப்பது என்று எல்லாவகையிலும் தந்தையாகியிருந்தார் இப்ராஹிம்.

இப்போதைய சூழலில் இவ்வாறு வலிந்து வந்து சினேகம் பாராட்டுபவர்களை, இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார் என்று பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நானும் விதிவிலக்கல்ல. படத்தில், இப்ராஹிம் வலிந்து வந்து உதவும் காட்சிகளில் இவர் ஏன் இப்படி செய்கிறார் என்றுதான் நினைத்தேன். வயதான பெரியவர்கள் சிறியவர்களை அன்பால் வழிநடத்துவது ஒரு க்ளி்ஷே என்றால் மற்றொன்று மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்டது. யூதச் சிறுவன் மோமோவுக்கும் இஸ்லாமியர் இப்ராஹிமுக்கும் இடையில் ஏற்படும் நட்பு. ஆங்காங்கே ‘The 400 blows’-இன் Antoine Doinelஐ நினைவுபடுத்தும் மோமோவை வழிப்படுத்துவதில் இப்ராஹிமுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறைந்த அளவு பங்கு, தெருவில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளுக்குப் போகிறது.

படத்தின் பிற்பாதியில் திடுதிடுப்பென்று வரும் மாற்றங்கள் வலிந்து செலுத்தப்பட்டது போலத் தோன்றினாலும் இப்போதும் மனதில் நிற்பது இப்ராஹிமுக்கும் மோமோவுக்கும் இடையில் ஏற்பட்ட அழகான நட்பு. அருமையான முறையில் சித்தரித்திருக்கிறார்கள். அதற்காகவே இயக்குநரையும் நடித்த ஒமார் ்ஷெரிஃபையும் Pierre Boulangerஐயும் பாராட்டலாம். ஓய்விலிருந்து வந்து இப்படம் வெளிவருவதற்கு பல முயற்சிகள் எடுத்த ஒமார் ்ஷெரிஃபுக்கு இதுவொரு அருமையான படம்.