January 19, 2007

சில்ரன் ஆஃப் மென் [Children of Men] (2007)

அல்ஃபோன்ஸோ குவாரோன் திரைக்கதை, இயக்கத்தில் க்ளைவ் ஓவன், ஜூலியான் மூர், மைக்கேல் கெயின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பி.டி.ஜேம்ஸ் 1992வாக்கில் எழுதிய வருங்கால dystopian உலகத்தைக் காட்டும் கதையை அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் குவாரோன். Cuaron என்றதும் பலருக்கு அவருடைய Yu Tu Mama Tambien திரைப்படமும் சிலருக்கு Harry Potter & the Prisoner of Azkaban திரைப்படமும் நினைவுக்கு வரலாம். அத்திரைப்படங்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமாகவிருக்க முடியுமோ அந்தளவு வித்தியாசமான படம் ‘சில்ரன் ஆஃப் மென்’.

புதிய படங்களைப்பற்றி எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கதையை எந்தளவு தூரம் பகிர்ந்துகொள்வது என்பதில் எப்போதுமே குழம்பிவிடுவேன். சில நேரங்களில் இக்குழப்பங்களினாலேயே படங்களைப்பற்றி எழுதுவதும் தள்ளிப்போய்விடும். படம் பார்த்து ஏறக்குறைய பத்துநாட்களாகிவிட்ட நிலையில் எழுதுஎழுது என்று அரித்துக்கொண்டிருக்கும் இப்படத்தைப்பற்றி பகிர்ந்து கொள்ள ஆற்றாக்கொடுமையோடு வந்துவிட்டேன். ;)

இன்றிலிருந்து 20 வருடங்களுக்குப் பிறகான உலகம். தினந்தினம் குண்டுவெடிப்புகளும் வருங்காலத்தைப்பற்றிய கவலைகளும் பிடித்தாட்டும் உலகம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற கவலையோடு அன்றாட வாழ்வில் உழலும் மக்கள். பிறநாட்டவரை உள்ளே நுழைய விடாமல் சதாசர்வகாலமும் கண்காணிக்கும் அரசு. அதையும் மீறி உள்ளே நுழைந்தவர்களையும் ஏற்கனவே நாட்டில் இருக்கும் அகதிகளையும் பிடித்து ஆங்காங்கே இருக்கும் கூண்டுகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை ஏற்கனவே திட்டமிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் சிறைக்கூடங்களுக்குக் கொண்டு செல்ல விசேட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. [அப்பேருந்துகளின் இரு புறங்களிலும் 'ஹோம்லாண்ட் செக்யூரிட்டி' என்ற வரி தெரிகிறது. ;) ] அடுத்து என்ன என்ற கவலைகளுக்கு மிகவும் முக்கிய காரணம், குழந்தைகள் பிறக்காமை. கிட்டத்தட்ட 18 வருடங்களாகப் பூமியில் குழந்தைகளே பிறக்காத நிலை. படத்தின் தொடக்கத்தில், உலகிலேயே வயது குறைந்த 19 வயது டியேகோ கொலை செய்யப்பட்டு விடுகிறான். ‘பேபி டியேகோ’வின் மரணத்துக்காக உலகமே அழுகிறது.

படத்தின் களம் இங்கிலாந்து. உலகமே கலவரப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டிஷ்்ஷார், அவர்களுடைய வழக்கமான இறுகிய மேலுதட்டுப் பாணியில் நிலமையை எதிர்கொள்கிறார்கள். லண்டனில் வாழும் அரசாங்க ஊழியன் தியோ ஃபாரோன்(க்ளைவ் ஓவன்). அவனுடைய நெருங்கிய நண்பர் கார்ட்டூன் வரையும் எக்ஸெண்ட்ரிக் ஜாஸ்பர்(மைக்கேல் கெயின்). ஜாஸ்பரின் வீடு நகரத்திற்கு வெளியே பாதுகாப்பற்ற சூழலில், வெளியாட்களுக்குத் தெரியாத நிலையில் அமைந்திருக்கிறது. அங்கே, ஜாஸ்பரின் மனைவி, ஒரு வித கோமா நிலையில் இருக்கிறார். அவர், அரசாங்கத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இந்நிலைக்காளாகியிருக்கிறார் என்பதை, சுவற்றில் ஒட்டியிருக்கும் பத்திரிகைச் செய்திகள் காட்டுகின்றன. லண்டனுக்குத் திரும்பும் தியோ கடத்திச் செல்லப்படுகிறான். தியோவைக் கடத்திச் செல்வது அவனுடைய முன்னாள் காதலியும் அவர்களின் இறந்துபோன மகனின் தாயுமான ஜூலியன் டெய்லரும்(ஜூலியான் மூர்) அவருடைய ‘ஃபி்ஷெஸ்’ குழுவும். அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் இக்குழு, தியோவிடம் கரையோர நகரத்திற்குச் செல்ல அனுமதி அட்டையொன்றை, அவனுடைய செல்வாக்குள்ள உறவினர் மூலமாக வாங்கித் தரச்சொல்கிறது. அதற்குப் பணமும் கொடுப்பதாகச் சொல்கிறது. தியோவுக்கு அனுமதியட்டையும் கிடைக்கிறது. ஆனால், அவ்வட்டை தியோவுடன் பயணம் செய்வதற்கானது. வேறு வழியில்லாமல் தியோவும் ஜூலியனுடனும் ‘கீ’ என்ற பெண்ணுடனும் இன்னும் சிலருடனும் பயணிக்கிறான். ‘கீ’ என்ற அந்தப் பெண்ணில்தான் அனைத்தும் தங்கியிருக்கிறது. அதனால்தான் அவளைப் பாதுகாப்பாக கரையோர நகரத்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கப்பலொன்றில் ஏற்றிவிட ஜூலியன் பிரயத்தனிக்கிறாள். சிற்சில காரணங்களினால், பயணம் தடைப்பட்டுவிட, ‘கீ’, தியோவிடன் தனக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறாள். ஏறக்குறைய 18 வருடங்களாக குழந்தைகளே பிறக்காத சூழலில், ‘கீ’ என்ற அந்த அகதிப்பெண் கர்ப்பமாகவிருக்கிறாள். தன்னுடைய மகன் இறந்ததிலிருந்து, வாழ்க்கையை ஏனோதானோவென்று வாழும் சாதாரணனான தியோ, ‘கீ’யைக் கரையோர நகருக்குப் பாதுகாப்பாகக் கூட்டிச் செல்ல முடிவெடுக்கிறான். இவர்களின் பயணந்தான், மீதிக்கதை.

இவ்வருடம் நான் பார்த்த, சாம்பல் வண்ணமிக்க சூழலைப் படம் முழுக்கக் கொண்டிருக்கும் இரண்டாவது படமிது. முதலாவது கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘Flags of Our Fathers’. அறுபது-எழுபது வருடங்களுக்கு முந்தைய போர்ச்சூழலைக் காட்ட அப்படத்தின் சாம்பல் வண்ணமிக்க சூழல் பயன்படுத்தப்பட்டதென்றால், இங்கே ‘சில்ரன் ஆஃப் மென்’-இல் இருபது வருடங்கள் கழித்து வரும் வருங்காலச் சூழலின் நம்பிக்கையற்ற தன்மை காட்டப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்களும், சுவற்றில் கிறுக்கித் தள்ளப்பட்டிருக்கும் கிராஃபிட்டிகளுமாக இருண்ட தன்மைகளடங்கிய சூழல். தற்போதைய பாக்தாதிற்கும் இருபது வருடங்களுக்குப் பிறகான லண்டனுக்கும் பெரிதும் வித்தியாசமிருக்கவில்லை. செக்ஸ் காட்சிகள் நிறைந்த படமென்ற துருப்புச்சீட்டோடு மக்களைக் கவரும் ‘யூ டூ மாமா தாம்பியேன்’ படத்திலும் உற்றுக்கவனித்தால், மெக்ஸிகன் நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரருக்குமிடையிலான வித்தியாசங்களும் வாழ்க்கையின் பிரச்சினைகளும் தெரியும். என்ன!, அவையெல்லாம் பின்புறக்காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்கே, பளிச்சென்று முகத்திலறையும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இரு படங்களிலும் அடிநாதமாக ஓடுவது வாழ்க்கையின் இன்றியமையாத முக்கியத்துவம், அதனைக் கொண்டாடவும் காக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள்.

துப்பாக்கி கூடத்தூக்காத சாரணனன் தியோவாக க்ளைவ் ஓவன் கவருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்றபடி நடந்துகொள்ளும் தியோ, ‘கீ’யைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு தனக்கு வந்ததும் அதற்கேற்றபடி நடந்துகொள்கிறான். சண்டைப்படக் கதாநாயகனுக்கு முழுவதும் பொருந்தக்கூடிய க்ளைவ் இங்கேயும் நம்பக்கூடிய அளவில் பொருந்திப்போகிறார். ‘கீ’யாக நடித்திருக்கும் Claire-Hope Ashiteyயும் போகப்போக நம்மைத் தன்பக்கம் இழுத்துக்கொள்கிறார்.

படத்தில் நம்மை ஆழ்ந்துபோகச் செய்வது குவாரோனின் இயக்கமென்றால் அதற்குத்துணையாகச் செயற்படும் காமராவிற்கு அதில் முக்கிய பங்கிருக்கிறது. கூர்மையான வசன அமைப்பு, வருங்காலத்தைச் சொல்கிறார்களா நடப்பைப்பற்றிப் பேசுகிறார்களா என்ற குழப்பத்தை உண்டு பண்ணுகிறது.

Theodore Faron: Julian? I haven’t seen you in twenty years. You look good. The picture the police have of you doesn’t do you justice.
Julian Taylor: What do the police know about justice?

தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள் உலகத்தின் கவனத்தைப் பெறத்தொடங்கிச் சில வருடங்களாகின்றன. இவ்வருடம் கோல்டன் க்ளோபை மெக்ஸிகோவைச் சேர்ந்த இன்னொரு இயக்குநர் அலெஹாண்ட்ரோ கொன்ஸாலஸ் இனாரிட்டு பெற்றிருக்கிறார். தத்தம் மொழிகளில் படமெடுத்ததுபோக இப்போது ஹாலிவூட்டிலேயே வித்தை காட்டத்தொடங்கியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், இப்படத்தையும் பாருங்களேன்.

4 Comments »

  1. நன்றாக விமர்சனம் செய்திருக்கீங்க..

    நன்றி

    Comment by Sivabalan V — January 19, 2007 @ 1:29 pm

  2. Thanks for the review. I am going to go see the movie this week-end.

    Comment by Mahen — January 20, 2007 @ 4:03 pm

  3. சிவபாலன் & மகேன், நன்றி!

    Comment by மதி கந்தசாமி — January 21, 2007 @ 9:39 pm

  4. வணக்கம் மதி…

    சமீபத்தில் நான் மிக ரசித்துப் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக அதன் நீஈஈஈஈள காட்சிகள் (குறிப்பாய் ஜூலியன் இறக்கும் காட்சி, கியை முகாமிலிருந்து மீட்கும் காட்சி). என்ன ஒரே வருத்தம்.. ஜூலியன் மூரை அவ்வளவு சீக்கிரம் கொன்றிருக்க வேண்டாம். :)

    குவைத் திரையரங்கில் இருந்து மனநிறைவோட வெளிவந்த அபூர்வமான தருணங்களில் ஒன்று… :)

    Comment by சித்தார்த் — July 8, 2007 @ 4:58 pm

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment