வின்சென்ட் & தியோ [Vincent & Theo] (1990)

வான்கோ என்றதும் நினைவுக்கு வருவது அவருடைய சூர்யகாந்திப் பூக்களும் காதறுத்த கதையுந்தான். குறைந்த பட்சம் எனக்கு. டச்சு ஓவியரான வின்சென்ட் வான்கோவுக்கு தியோ என்றொரு இளைய சகோதரன் இருந்ததோ, அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான உறவு பற்றியோ, வான்கோவை அவருடைய வாழ்நாள் முழுக்க வைத்துப் பார்த்தது தியோ என்பதோ பரவலாக அறியப்படாத விதயங்கள். 1990ம் ஆண்டு ராபர்ட் ஆல்ட்மான் இயக்கி வெளிவந்த ‘வின்சென்ட் & தியோ’ படம், வான்கோ சகோதரர்களின் இறுக்கமான உறவு பற்றியும் வான்கோவின் ஓவியங்கள் மற்றும் கடைசிக்கால கட்டம் பற்றியும் பேசுகிறது.
1988ம் ஆண்டு லண்டனில் வான்கோவின் சூரியகாந்திப் பூக்கள் ஓவியம் ஏலத்துக்கு விடப்படுகிறது. ஏலத்தொகை படிப்படியாக ஏறிக் கடைசியில் 22.5 மில்லியனுக்கு விலை போகிறது. ஏலம் இப்படி முடிந்துபோகும்போது படம் 100 வருடங்கள் பின்நடர்ந்து வான்கோ சகோதரர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது காட்டுகிறது. அழுக்கான தோற்றத்துடன், கறையேறிய பற்களும் வாயில் பைப்புமாக ஒரு கட்டிலில் வின்சென்ட் வான்கோ. எதிரில் முற்றிலும் எதிர்மறையான நாகரீகக் கனவான் தோற்றத்தில் தியோ வான்கோ. வின்சென்ட் வான்கோவின் நடைமுறைச் செலவுகளையெல்லாம் பார்த்துக்கொள்வது தியோ. அதைப்பற்றித் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சகோதரர்கள். ஒரு தொகையைக் குறிப்பிட்டுப் போதுமா என்று தியோ கேட்க, வின்சென்டும் தலையசைக்கிறார். அண்ணன் ஓவியரென்றால் தம்பியோ ஓவியம் விற்பவர். தான் ஓவியங்களை விற்பதைத்தான் விரும்புகிறேன் என்றும் கண்டகண்டவற்றையும் அல்ல என்று ஒரு கட்டத்தில் அலுப்புடன் வெறுப்பாகப் பேசினாலும் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துவந்தார். ஓவியங்களை விற்கும் தொழிலில் இருக்கும் தியோவுக்கு அண்ணனுடைய ஒரு ஓவியத்தைக்கூட விற்க முடிவதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் வின்சென்ட், தனக்கு ஓவிய மாடலாக இருந்த பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொள்கிறான். கூடவே, அவளின் நான்கைந்து வயதுச் சிறுபெண்ணும். கர்ப்பிணியாக இருக்கும் அவளைத் தொடர்ந்து வரைகிறார். திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் ஒரு தடவை, இயற்கைக்கடன்களைக் கழிக்கும்போதும் வரைந்துகொண்டிருந்த வான்க்கோவைப் பார்த்துச் சொல்லும் வசனம் மனதில் பதிந்துபோனது. அவள் சொல்வதாவது: ‘You can draw me when I model, not when I’m myself”. மனதில் பதிந்துபோனதற்கு அந்தக் காட்சியின் முகத்திலறையும் தன்மையும் காரணந்தான்.
திருமணம் முறிந்துபோக, அண்ணனுந்தம்பியும் ஒன்று சேர்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் பிரிந்திருந்தார்களென்றில்லை. அப்போதும் தியோ, அண்ணனுடைய வாழ்வில் ஓர் அங்கமாகத்தானிருந்தான். அவனும், இந்தப் பொழுதுகளில் தனக்கான ஒரு துணையைத் தேடிக்கொண்டிருந்தான். சிஃபிலிஸ் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவனை ஈர்த்தது, நண்பனொருவனின் தங்கை. பரஸ்பரம் இருவரின் ஈர்ப்பும் பிற்பாடு அவர்களைத் திருமணம்வரை கொண்டு சென்றது.
வான்கோ ஓரிடத்திலல்லாமல் பல இடங்களுக்கும் சென்றுகொண்டிருந்தான். ஒரு முறை Arlesஇல் தங்கியிருந்தபோது ஓவியர் Paul Gauguinஉடன் சேர்ந்து தங்கி, இருவரும் ஓவியங்களை வரைந்தார்கள். Paul Gauguin பெயரைச் சொன்னதுமே நினைவுக்கு வருவது அவருடைய Tahiti ஓவியங்கள்தான். அமைதியாகப் போய்க்கொண்டிருந்த நாட்கள், திடீரென்று குழம்பிப் போயின. இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடுகள் முளைத்தன. ஒரு நாள், வின்சென்ட் தன்னுடைய காதைத்தானே அறுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஒரு மனோநல மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இந்த நாட்களின்போதும் வின்சென்டின் வாழ்க்கையில் நிலையாக நின்ற ஒரு விதயம் தியோ. பாரிஸுக்குத் திரும்பிய வான்கோவை, பிரபல மனோநல மருத்துவர் ஒருவரிடம் சேர்த்துவிடுகிறான் தியோ. ஓவியத்தில் பயங்கர ஆர்வமுள்ள மருத்துவருடன் நல்லதொரு நட்பை உருவாக்கிக் கொள்ளும் வின்சென்ட், காதலில் வீழ்வது மருத்துவரின் மகளிடம். ஆனால், மருத்துவரோ அதை விரும்பவில்லை. இந்தக் காலகட்டத்தில், முன்புபோலவே பல ஓவியங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருக்கிறார் வின்சென்ட்.
இந்த நேரத்தில் ஒன்று சொல்லவேண்டும். காதலியைக் காண்பதற்காக ஹாலந்துக்குச் தியோ செல்ல, பாரிஸில் வின்சென்ட் தனியாகச் சில வாரங்கள் இருந்தார். ஹாலந்திலிருந்து திரும்பி வந்த தியோ, வீடு கிடந்த கோலத்தைப் பார்த்துத் தான் கொடுத்துவிட்டுப் போன பணம் என்னவாயிற்று, வீட்டு வேலைக்கு ஆள் வரவில்லையா என்றெல்லாம் கேட்டதற்கு, பெயிண்டுகள் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டதால், வீட்டுவேலையாளை நிறுத்திவிட்டதாக வின்சென்ட் சொல்கிறார். அந்தக் காட்சியின்போது, வின்சென்டுக்கு ஓவியம் வரைவதிலிருந்த அசுர ஈடுபாட்டை மெச்சத்தான் முடிந்தது.
Dr. Gachetஉடன் தங்கியிருந்த வின்சென்ட் வான்கோ, ஒரு நாள், தன்னைத்தானே (under mysterious circumstances) வயிற்றில் சுட்டுக்கொண்டு எவ்வித சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோகிறார். கடைசிவரைக்கும் வான்கோ சகோதர்களுக்கிடையில் நெருங்கிய கடிதத்தொடர்பு இருந்து வந்ததையும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு இரண்டு கடிதங்கள்கூடப் போட்டுக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. இந்தக் கடிதப்போக்குவரத்து, தியோ வான்கோவின் மனைவிக்கு மிகுந்த பொறாமையை அளித்ததையும் பார்க்க முடிந்தது.
அண்ணன் இறந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கமடைந்த தியோ வான்கோவும் அடுத்த ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிறான். Auvers-sur-Oise என்னுமிடத்தில் இருவரின் கல்லறைகளும் அடுத்தடுத்து இருக்கின்றன.
வழக்கமான ஓவியர்களுக்கும் பெண்களுக்குமிடையிலான உறவுகள் போன்ற விதயத்திலிருந்து வித்தியாசமாக சகோதரர்களுக்கிடையிலான இறுக்கமான தொடர்பைச் சுவாரசியமாகக் காட்டியிருக்கும் இப்படத்தை இயக்கியவர் ராபர்ட் ஆல்ட்மான். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு முன்பு நவம்பர் 20, 2006 அன்று இறந்துபோன Robert Altmanபற்றி விரிவாகப் பேச வேண்டும். இன்னொரு நாள்.. தன்னுடைய வழமையான பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும் இப்படத்தை முதலில் ஒரு தொலைக்காட்சிப் படமாக, நான்கு மணி நேரம் ஓடக்கூடியமாதிரித் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், பிறகு திரைப்படமாக்குவதென்று முடிவு செய்தபிறகு இரண்டரை மணி நேரமாகக் குறைத்துக்கொண்டாராம்.

ஆல்ட்மன், வின்சென்ட் வான்கோவாக நடிக்கத் தேர்ந்தெடுத்தது Tim Roth என்ற பிரிட்டிஷ் நடிகரை. நான் இந்தப் படத்தைப் பார்க்கத் தலைப்பட்டதற்கு முக்கிய காரணமும் Tim Rothதான். எனக்குப் பிடித்தமான Tarantinoவின் Reservoir Dogs மற்றும் Pulp Fictionஇல் நடித்திருந்த Tim Rothஐ Guiseppe Tornatoreஇன் Legend of 1900 படத்தில் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனேன். கொஞ்ச நஞ்சமல்ல, ரொம்ப நிறையவே.. அதைத் தொடர்ந்து Tim Roth நடித்த படங்களைத் தேடியபோது கிடைத்ததுதான் Vincent & Theo. அதற்கு முன்பு Jackson Pollock பற்றிய எட் ஹாரிஸ் நடித்து இயக்கிய Pollockஐயும் Merchant-Ivoryஇன் ஆந்தனி ஹாப்கின்ஸ் பிக்காஸோவாக நடித்திருந்த Surviving Picasso ஆகிய படங்கள்தான் நான் பார்த்திருந்த ஓவியர்களைப்பற்றிய படங்கள். ம்ம்.. Surviving Picassoவை பிக்காஸோவைப்பற்றிய படம் என்று முற்று முழுதாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஆந்தனி ஹாப்கின்ஸின் நடிப்பு அப்படியொரு பிம்பத்தை என்னுள் விதைத்திருக்கிறது.
ஒரு நேர்கோட்டைக்கூட சரியாக, நேராக வரைய முடியாத எனக்கு ஓவியங்களின்பால் மாறாத ஈடுபாடு இருப்பது ஒரு பக்கம் ஆச்சரியமானதாகவிருந்தாலும், இன்னொரு பக்கம் அவ்வளவு ஆச்சரியமான விதயமல்ல.
Pollock, Suriving Piccaso, Vincent & Theo. இந்த வரிசையில் ஓவியர்களைப்பற்றிய படங்கள் ஏதேனும் வந்திருந்தால், குறிப்பாகப் பார்க்க வேண்டிய படங்கள் என்று நீங்கள் குறித்துவைத்திருக்கும் படங்கள் ஏதேனும் இருந்தால் அறியத் தாருங்கள்.
Student Art Gallery: The Saatchi Gallery, has opened a website for Student Artists. Where, they could display their art for sale. http://www.saatchi-gallery.co.uk/stuart



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (
மதி, எனக்கு வான்கோவை பல காரணங்களாலும், காரணமற்றும் பிடிக்கும். அவரது மஞ்சள் நிறங்கள் ஒரு காரணம். இந்தப்படம் பற்றிய குறிப்புக்கு நன்றி.
Comment by Thangamani — January 1, 2007 @ 4:22 pm
//ஒரு நேர்கோட்டைக்கூட சரியாக, நேராக வரைய முடியாத எனக்கு ஓவியங்களின்பால் மாறாத ஈடுபாடு இருப்பது ஒரு பக்கம் ஆச்சரியமானதாகவிருந்தாலும், இன்னொரு பக்கம் அவ்வளவு ஆச்சரியமான விதயமல்ல//
மதி!
ஒரு கலைவடிவத்தை ரசிப்பதற்கு, ஈடுபாடு கொள்வதற்கு, அவ்வடிவத்தைத் முறையுறத் தெரிந்திருக்க வேண்டுமா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இப்படம் இதுவரையில் நான் பார்க்கவில்லை. பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அறியத்தந்தமைக்கு நன்றி.
Comment by malainaadaan — January 1, 2007 @ 7:16 pm
Thangamani & Malainaadaan, thanks for coming by.
Malainaadan: You cought me there.
Please do watch the movie, when you get the chance.
Comment by மதி கந்தசாமி — January 1, 2007 @ 10:29 pm
அருமையானதொரு அறிமுகம். நன்றி மதி.
Comment by Bharathi — January 2, 2007 @ 4:36 am
ம்ம்..நல்ல பதிவு. எனக்கும் வான்கோ என்றால் காதறுந்த கதைதான் தெரியும். குரோசோவாவின் ‘டிரீம்ஸ்’ பார்த்திருக்கிறீர்களா? ஓவியக்கண்காட்சியில் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் ஒருவன் அந்த ஓவியங்களுக்குள் பயணிப்பான். அங்கு வான்கோவைச் சந்திப்பான்.
Comment by sugunadiwakar — January 2, 2007 @ 6:37 am
அகிரா குரோசோவாவின் ‘ட்ரீம்ஸ்’ஐ நினைவுபடுத்தியதற்கு நன்றி சுகுணா திவாகர். குரோசோவாவின் படங்களில் சிலதைப் பார்க்கக் கிடைக்கவில்லை. பார்க்கவேண்டும் என்று குறித்துவைத்துத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள்..
பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு படம் Michel Gondryஇன் The Science of Sleep. வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள். நான் பார்த்தாலும் சொல்கிறேன்.
Comment by மதி கந்தசாமி — January 2, 2007 @ 7:18 pm
trhis gud post.
i ll write more film about paiting and art.
Comment by somee — January 2, 2007 @ 8:32 pm