December 26, 2006

ப்ளட் டையமண்ட் [Blood Diamond] (2006)

Warning: Spoilers Ahead!

Blood Diamond, வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், அந்த நிறுவனங்கள் விற்கும் கறைபடிந்த வைரங்கள், இந்த வைரங்களை அவர்களிடம் விற்கும் இடைத்தரகர்கள், வைரங்களை கடத்திக்கொண்டுவந்து சேர்ப்பிக்கும் ஆட்கள், சிறுவர்களையும் ஏழை எளியவர்களையும் வலுகட்டாயமாகக் கடத்திவந்து வைரங்களை அகழ்ந்(அரித்)தெடுக்கப் பயன்படுத்துபவர்கள், வைரங்களை வைத்து உள்நாட்டுப்போர்களை நடாத்தும் குழுக்கள்/தத்தமது ஆசைகளைத் தீர்த்துக்கொள்பவர்கள் மற்றும் இடையில் அகப்பட்டுக் கிடக்கும் மக்கள் ஆகியோரைப் பற்றியது. இடையிடையே பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக்கொள்ளவும். உள்நாட்டுப்போர்களாலும் வேறுபல குழப்பங்களாலும் அலைக்கழிக்கப்படும் சியேரா லியோன்-இல் தொண்ணூறுகளின் இறுதிக்கட்டந்தான் படத்தின் களம்.

அங்கே, வைரங்களை அகழ்ந்தெடுப்பவர்களிடமிருந்து பெற்று பெரிய நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஆப்பிரிக்க வெள்ளையன் டான்னி ஆர்ச்சராக லியோனார்டோ டிகாப்ரியோ. ஜிம்பாபேவில் பிறந்து, தென்னாப்பிரிக்க இராணுவத்தில் கொஞ்சக் காலம் இருந்தவன். வலுக்கட்டாயமாக குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, குடும்பத்தவர்கள் பற்றி ஏதும் தெரியாத நிலையில் தவிக்கும் மீனவன், ஸொலமன் வாண்டியாக ஜீமொன் ஹொன்்ஷூ. நல்லெண்ணமே(!) வடிவான பத்திரிகையாளர் மாடி போவனாக ஜென்னிஃபர் கான்னலி. வைரங்களுக்காக எதுவும் செய்யத்துணிந்த கர்னல் கோட்ஸீயாக ஆர்னோல்ட் வாஸ்லோ(’மம்மி’ வில்லன்).

மிகவும் சாதாரணமான ஊகிக்கக்கூடிய கதைதான். குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு, வைரங்களை ஆற்றுநீரில் அரித்தெடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஸொலமன் வாண்டிக்கு மிகவும் பெரிய வைரமொன்று கிடைக்கிறது. அதைப் புதைத்து வைக்கிறான். இவனைக் குடும்பத்தினரிடமிருந்து பிரித்துக்கொண்டுவந்து இந்த வேலையில் ஈடுபத்துவது சியேரா லியோன் அரசுக்கெதிராகப் போராடும் குழுக்களில் ஒன்று. அக்குழு, வாண்டியின் மூத்த மகனையும் அவனின் வயதொத்த சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டுபோய் மூளைச்சலவை செய்து போரிடக் கற்றுக்கொடுக்கிறது. — வைரத்தைப் புதைத்த கையோடு, அந்த இடத்தை முற்றுகையிட்ட அரசாங்க இராணுவத்தால் சிறைப்படுத்தப்படுகிறான் ஸொலமன் வாண்டி. இந்தக் கதையைக் கேள்விப்படும் டான்னி ஆர்ச்சர், ஸொலமன் வாண்டியை சிறையிலிருந்து மீட்டெடுக்கிறான். குடும்பத்தாரைத் தேடிக்கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கும் ஆர்ச்சர், பதிலுக்கு அந்தப் பிங்க் நிற வைரம் புதைத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். இதற்கிடையில் ஆர்ச்சரும் சியேரா லியோனுக்கு வந்திருந்த அமெரிக்க பத்திரிகையாளரான மாடி போவனும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆர்ச்சர், வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவரும் மாடி, ஆப்பிரிக்காவில் அகழ்ந்தெடுக்கப்படும் இந்த வைரங்கள், உலகின் பெரிய வைர வியாபாரிகளிடம் எப்படிப் போய்ச்சேருகிறது என்று சொல்லச் சொல்லிக் கேட்கிறாள். ஸொலமன் வாண்டி, தன் குடும்பத்தைக் கண்டுபிடித்தால் மட்டுமே, வைரத்தைப் புதைத்த இடத்திற்கு அழைத்துச் செல்வான் என்றபடியால் மாடியின் உதவியை அவ்வப்போது நாடுகிறான் டானி. இதற்குக்கைமாறாக, தான் பெறும் வைரங்கள் எப்படி எங்கே செல்கின்றன என்பதைப் படிப்படியாகச் சொல்கிறான். இரத்தக்கறை படிந்த இந்த வைரங்கள், வைரங்கள் உற்பத்தியாகும் பிற நாடுகளுக்குச் சென்று, அங்கே கிடைக்கும் வைரங்களுடன் சேர்க்கப்பட்டு பிறகு அங்கிருந்து பெரும் வைர நிறுவனங்களின் லாக்கர்களை அடைகின்றன என்று விவரிக்கிறான். பெரும்பாலான தருணங்களில் வைரங்களின் விலையைக்கூட்டியே வைத்திருப்பதற்காக அகழ்ந்தெடுக்கப்படும் வைரங்கள், வைர நிறுவனங்களின் லாக்கர்களிலேயே பூட்டி வைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறான். இந்த விவரணைகள் வெறும் ஐந்து நிமிடங்களிலேயே முடிந்து விடுகின்றன.

இதுவரை சொன்னதிலிருந்து மீதியை மிகவும் சுலபமாக ஊகித்துவிட முடியும். குடும்பத்தினரை மாடியின் உதவியுடன் கண்டடையும் ஸொலமன், போராளிக்குழுவினர் கடத்திச் சென்ற மகனை மீட்டெடுக்க முனைகிறான். அவனுடைய முடிவை மாற்ற இயலாத டான்னியும் ஒத்துழைக்கிறான். மூவரும் மகனைத் தேடிச் செல்கிறார்கள். இதற்கிடையில் டான்னிக்கும் பத்திரிகையாளரான மாடிக்கும் லேசான ஈர்ப்பு வருகிறது. ஒரு கட்டத்தில், மாடியை விட்டுச் செல்லவேண்டி வருகிறது. மாடி தன்னுடைய விசிட்டிங்க் கார்டைக் கொடுக்க, டான்னி வைர வியாபாரத்தில் அவனுக்குத் தெரிந்த விபரங்கள் அடங்கிய நோட்டுப்புத்தகத்தைக் கொடுக்கிறான்.

ஸொலமன் வாண்டி வைரத்தைப் புதைத்துவைத்த அதே ஆற்றுப்படுகையில்தான் போராளிக்குழுவினர் இருக்கிறார்கள். ஸொலமன் வாண்டி, வைரத்தைப் புதைத்துவைத்ததை அறிந்த அந்தக் குழுவின் தலைவன் பல இடங்களில் தோண்டிப் பார்த்திருக்கிறான். ஸொலமன் எப்படியும் வைரத்தைத் தேடிவருவான் என்றபடியால், ஸொலமனின் மகனுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து அவனை முழுவதுமாக மாற்றிவிட்டிருக்கிறான். அந்த ஆற்றுப்படுகையை அடையும் டானியும் ஸொலமனும் அந்தப் போராளிக்குழுவினருடன் சண்டை போடுகிறார்கள். ஸொலமனின் மகன், தந்தையுடன் வர மறுக்கிறான். கர்னல் கோட்ஸி தன்பங்குக்கு உதவுகிறான். கடைசியில் தேடத்தொடங்கிய ஒரு நிமிடத்தில் புதைத்துவைத்த வைரத்தை ஸொலமன் தோண்டியெடுக்கிறான். அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டையில் சிலர் இறக்கிறார்கள். டான்னியும் காயமடைகிறான். துப்பாக்கியும் கையுமாக நிற்கும் மகனிடம் உருக்கமாகப் பேசுகிறான் ஸொலமன் வாண்டி. தகப்பனின் பேச்சைக்கேட்டதும் மகன் பழையபடி மாறுகிறான். இதற்கிடையில் முன்னரே டான்னி, சாட்டலைட் தொலைபேசியினூடாக விமானத்தை அழைத்த விவரம் தெரிகிறது. விமானம் மேடான இடத்தில்தான் இறங்கமுடியும் என்பதால் குன்றொன்றைத் தேடிச் செல்கிறார்கள். காயப்பட்டிருக்கும் டானியைச் சுமந்து செல்கிறான் ஸொலமன். தான் இறக்கப்போகிறோம் என்றறிந்துகொண்ட டான்னி, வைரத்தை ஸொலமனிடம் கொடுக்கிறான். மகனை அழைத்துச் சென்று, மாடியின் உதவியுடன் எஞ்சிய குடும்பத்து உறுப்பினர்களையும் மீட்டெடுக்கச் சொல்கிறான். சாட்டலைட் தொலைபேசியூடாக, மாடியைத் தொடர்பு கொள்கிறான். உயிரைப் பிடித்துவைத்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, ஸொலமனுக்கு உதவுமாறு கேட்கிறான். தொடக்கத்திலிருந்து, ஸொலமன் புதைத்த வைரத்தின் உதவியோடு ஆப்பிரிக்கக் கண்டத்தைவிட்டுப் போவதுதான் தன்னுடைய இலட்சியமென்று சொல்லும் டான்னி; கடைசியில் அவனுடைய இரத்தம் சிந்திய, ஆப்பிரிக்கச் செம்மண்ணைக்் கையில் அள்ளியபடி இறந்துபோகிறான்.

படம், இந்தக் கட்டத்தில் முடிந்தால்கூட பரவாயில்லை. தொடர்ந்து, வைரவியாபாரிகளிடன் ஸொலமன் பேரம் பேசுவதையும், அவர்களின் உதவியோடு குடும்பத்தினரை அழைத்துக்கொள்வதையும் மாடி அதையெல்லாம் படமெடுப்பதையும் பார்க்கிறோம். கடைசியாக படத்தில் அவ்வப்போது காட்டப்பட்ட மாநாடு ஒன்றில் ஸொலமன் வாண்டி பேசுவதோடு முடிகிறது.

கடந்த ஒரு வருடத்துச் சொச்சத்தில் ஆப்பிரிக்காவைக் களமாக வைத்து சில high profile படங்கள் வந்துவிட்டன. ஆஸ்கர் விருது பெற்ற ‘Hotel Rwanda’, ‘Constant Gardner’[போலி மருந்துகள்], ‘Lord of the war’[ஆயுதங்கள்], ‘The Interpreter’. அந்த வரிசையில் கறைபடிந்த வைர வியாபாரத்தை அடிப்படையாக வைத்து ‘Blood Diamond’.

என் கருத்துப்படி, இந்தப் படத்தை இரண்டு கண்ணோட்டத்தில் அணுகலாம். ஒன்று: சாதாரண அமெரிக்கனுக்கு நாட்டு நடப்பு பற்றிய அறிவும் புரிதலும் மிகவும் குறைவு. இங்கே அமெரிக்கனை மட்டும் சொல்வது எந்தளவு சரி என்ற கேள்வி இருக்கிறது. அவர்களுக்கு, ஆப்பிரிக்காவில் நடக்கும் பல பிரச்சினைகள் தெரியாது. அம்மாதிரியானவர்களுக்கு பிரச்சினையைக் கொண்டு செல்ல நல்லதோர் உபகரணம் திரைப்படம். இரண்டாவது அணுகுமுறை, உலகில் நடக்கும் பிரச்சினைகளைக் களமாக வைத்து, கருவேப்பிலைபோலத் தொட்டுக்கொண்டு காசு பண்ணுவது.

படத்தின் இயக்குநர் Ed Zwick-இன் கடைசிப்படம் ‘The Last Samurai’. 1989-இல் வந்த Gloryஐத் தொடர்ந்து டென்சல் வா்ஷிங்கடனை வைத்து ‘Courage Under Fire’, ‘The Siege’ போன்ற த்ரில்லர் படங்களை எடுத்திருக்கிறார். நடுவே, ஆந்தனி ஹாப்கின்ச், பிராட் பிட்., எய்டன் க்வின் & ஜூலியா ஓர்மொண்ட் நடித்த ‘Legends of the Fall’ என்ற சரித்திரப்படமொன்றையும் எடுத்திருக்கிறார். இவருடைய படங்களிலே இன்றைக்கும் சர்ச்சையைக் கிளப்பி வருவது ‘The Siege’.

Blood Diamondஐப் பொறுத்தளவில், விறுவிறுப்பான காட்சிகளில் அடிப்படைப் பிரச்சினைகள் மறைந்தும் மறந்தும் போகின்றன. அப்பாவிச் சிறுவர்கள் போர்களில் ஈடுபடுத்தப்படுவதும் கறைபடிந்த வைரங்களை பெரிய நிறுவனங்கள் கையாள்வதும் போதிய கவனம் பெறவில்லை.

ஆனாலும் படத்தைத் தங்கள் தோள்களில் தாங்கிச் செல்வது லியோனார்டோ டிகாப்ரியோ. ஆப்பிரிக்க ஆங்கில உச்சரிப்பைக் கேட்க கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. The Departed-உடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லாத பாத்திரம். இந்தப் பாத்திரத்துக்காக கோல்டன் க்ளோப் பரிந்துரை கிடைத்தது கொஞ்சம் விந்தைதான்.

படத்தில் எல்லோருடைய கவனத்தையும் பிடித்திழுத்துக் கொள்வது Djimon Hounsou. கிராமத்தைத் தாக்கும் ஆயுதந்தாங்கியவர்களிடமிருந்து குடும்பத்தைக் காப்பாற்றும்போது, பிறகு குடும்பத்தவரைத் தேடும்போது, மகன் எங்கே என்று மனைவியிடம் கதறி அழும்போது, டானி ஆர்ச்சரிடம் வைரத்தைப் புதைத்த இடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி மகனைத் தேடிப் போகும்போது, டானி ஆர்ச்சருடன் தகறாறு வரும்போது, பிறகு வைரத்தைக் கண்டெடுத்தபிறகு வரும் காட்சிகளில் என்று ஒவ்வொரு காட்சியிலும் கவனத்தைக் கவருகிறார். 1997-இல் ஸ்பீல்பேர்க்கின் ‘Amistad’-இல் சிறைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அடிமையாக நல்லதொரு தொடக்கம். பிறகு 1999-இல் ‘Gladiator’. 2002-இல் ‘Four Feathers’-இல் ஏறக்குறைய கிளாடியேட்டர் பாத்திரத்தை ஒத்த வேடம். அதே வருடத்தில் வெளியான ‘In America’வில் இரகசியமொன்றைத் தன்னுள்ளே கொண்ட ஓவியன் ‘Mateo’வாக வித்தியாசமான வேடம். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் பரிந்துரை கிடைத்தது. டிஜீமொன் ஹொன்சூவின் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘In America’.

Getting back to Blood Diamond.

ப்ளட் டையமண்ட் படம் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே De Beers வைர நிறுவனம், சில விளம்பரங்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. ப்ளட் டையமண்டுக்கான விளம்பரங்களிலும் பொதுமக்களை வைரங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடச் சொல்லவில்லை. வைரங்களை வாங்கும்போது, அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தையும் கேட்டு வாங்கச் சொல்கிறார்கள்.

Conflit diamonds, Kimberly Process, கனேடிய வடக்குப் பிராந்தியத்தில் கிடைக்கும் வைரங்கள் பற்றி இங்கே, இன்னொரு நாள் எழுதுகிறேன்.

December 20, 2006

பொன் காப், பாட் காப் [Bon Cop, Bad Cop] (2006)


Shoot first, translate later.

கியூபெக் மாகாணம், ஏனைய கனேடிய மாகாணங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இதில் மிக முக்கிய பங்கு மொழிக்கிருக்கிறது. இந்த வித்தியாசத்தை வைத்து ஒரு ஜாலியான சிரிப்பு மூட்டும் படம் பண்ணினால் எப்படியிருக்கும்? கூடவே, கொஞ்சம் திகில் காட்சிகளையும் ஒரு தொடர் கொலைகாரனையும் சேர்த்துவிடுங்கள். அப்ப படத்துக்குப் பெயர் “பொன் காப், பாட் காப்”.

கொலையுண்ட சடலம் ஒன்று சரியாக ஒன்டாரியோ-கியூபெக் மாகாண எல்லையில் கிடக்கிறது. அதுவும் எங்கே, பெயர்ப்பலகையில் சரிபாதியாக. இந்தக் கொலையை விசாரிப்பதற்கு இருவரடங்கிய குழு உருவாக்கப்படுகிறது. வித்தியாசமான அணுகுமுறை கொண்ட போலீஸார் இருவரணியை மிகவும் வெற்றிகரமாகக் காட்டிய ‘லீதல் வெப்பன்’ படத்தைப் போன்றதொரு அணிதான் இங்கேயும். கியூபெக் போலீஸ் டேவிட் புஷ்்ஷார்(David Bushard), ஒன்டாரியோ மாகாணப் போலீஸ் மார்ட்டின் வார்ட் இருவருக்கும் தொடக்கத்திலேயே போட்டி தொடங்கி விடுகிறது. சடலத்தில் தலைப்பக்கம் கியூபெக்கிலும் பின்பக்கம் ஒன்டாரியோவிலும் இருப்பதை பரஸ்பரம் கிண்டலடித்துக்கொள்கிறார்கள்.

பிரெஞ்சுக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பு தொடங்கி, stiff neck உள்ளவர்களெனக் கருதப்படும் ஆங்கில கனேடியர்களின் பழக்கவழக்கங்கள் வரை சகட்டுமேனிக்குக் கிண்டலடிக்கிறார்கள். புஷ்்ஷாரும் வார்டும் தத்தமது தலைமைப் போலீஸ் அதிகாரிகளுடன் கொலை விசாரணை தொடர்பாக சந்திக்கும் காட்சி மிகவும் சிரிக்க வைக்கும். பொதுவாக ஆங்கிலம் பேச வராத பிரெஞ்சுக்காரர்கள், ஒவ்வொரு பிரெஞ்சு வார்த்தைக்கும் நேரடியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேடிக் கண்டுபிடித்து வசனமைப்பார்கள். அது, நடைவீதியில் சந்திக்கும் ஃபிராங்கோபோனாக இருந்தாலும் சரி, லிபரல் கட்சியில் தலைவர் ஸ்பெஃபான் டியோனாக இருந்தாலும் சரி வித்தியாசம் கிடையாது. சரளமாக ஆங்கிலமும் தட்டுத்தடுமாறி பிரெஞ்சும் பேசும் ஆட்களும் பெரிய யோக்கியம் கிடையாது. இதே கதைதான் அங்கேயும், கொஞ்ச மாற்றங்களுடன். [சொந்தக்கதை சோகக்கதையென்று அறிக! ;)] அப்படி ஆங்கிலத்தில் பேச முனையும் பிரெஞ்சுப் போலீஸ் அதிகாரியாக Seraphin: Un homme et son peche படத்தில் அருமையான வில்லனாக நடித்த Pierre Lebeau. தொலைக்காட்சி anchor டாம் பெர்ரியாக ரிக் மேர்சர். ஹாக்கி இரசிகர்களுக்கு, ரிக் மேர்சர் யாராக வந்திருக்கிறார் என்று தெரியுமென்று நினைக்கிறேன். ஒன்டாரியோ போலீஸ் மார்ட்டின் வார்ட்-ஆக Colm Feore. சில வருடங்களுக்கு முன்பு வந்த Trudeau தொலைக்காட்சித் தொடரில், ட்ரூடோ-வாக நடித்தவர். கியூபெக் பிரெஞ்சு போலீஸ் டேவிட் புஷ்்ஷார்-ஆக Patrick Huard.

படத்தின் முதற்பாதி முழுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்கச் செய்துவிடுகிறார்கள். பிற்பாதியில் அங்காங்கே தென்படும் நகைச்சுவைகள், கலாசாரக் கிண்டல்களுடன் கொலையாளிக்கான தேடலும் சூடுபிடிக்கிறது. சிற்சில காட்சிகள், அபத்தமாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

கனேடியத் திரைப்படங்களிலேயே அதிக அளவு வசூல் படைத்த படம் இது. வட அமெரிக்க அளவில் பார்த்தால் இவ்வருடத்தையப் படங்களில் Bon cop, Bad cop 17-ஆவதாக இருக்கிறதாம். படம் வெளியாவதற்கு முன்னால், நாடெங்கும் அமோக வரவேற்புக் கிடைக்குமென்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அமோகமாக ஓடியதென்னமோ கியூபெக்கில்தான். போன வாரம் கூட, இங்கே நடந்த திரைப்பட விழாவொன்றில் இந்தப் படத்தை, அதன் தயாரிப்பாளர்கள் இலவசமாகப் போட்டுக்காட்டினார்கள். எல்லாம் கியூபெக் இரசிகர்களுக்குச் செலுத்தும் நன்றிதான்.

படத்தின் வசனங்களிலிருந்து சில:

[a dead body has been impaled by a Quளூbec-Ontario border sign. There is a dispute concerning jurisdiction]
Martin Ward: His heart is in Quளூbec.
David Bouchard: Ya l’Ontario dans l’cul aussi![அப்பட்டமாக கியூபெக்குவா சொல்லும்பாங்கில் மொழிபெயர்த்தால்: ஆமா! அவனுடைய குண்டிக்குக் கீழ ஒன் டாரியோ இருக்கு.]
Martin Ward: What ?
David Bouchard: But his ass belongs to you.

-0-

David Bouchard: You have an accent in both languages. Who was your teacher? Jean Chrளூtien?

வழமையான கியூபெக் பிரெஞ்சுப் படங்களைவிட வித்தியாசமான, பொழுதுபோக்கு அம்சங்களடங்கிய படம். ஜாலியாகப் பார்க்கலாம்.

December 16, 2006

சென்னைத் திரைப்பட இரசிகர்களுக்கு..

இன்று (15-dec-2006) தொடக்கம் வரும் வெள்ளி (22-dec-2006)வரை சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா நடக்குமென்று தெரிகிறது. இவ்விழாவில், கனேடிய பிரெஞ்சு மொழித் திரைப்படம் C.R.A.Z.Y.யும் திரையிடப்படுமென்று தெரிகிறது. எப்போது, எங்கே திரையிடுவார்கள் என்று தெரியவில்லை. மன்னியுங்கள்! ஆனால், விரும்பியவர்கள் கீழே கொடுத்திருக்கும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விசாரியுங்கள்.

கனேடியப் பிரெஞ்சு மொழித் திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்களும், சினிமா இரசிகர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் C.R.A.Z.Y.

C.R.A.Z.Y. குறித்த என் திரைப்பார்வை: http://mathy.kandasamy.net/movietalk/2006/03/09/crazy-2005

தொடர்புள்ள இடுகை: http://mathy.kandasamy.net/movietalk/2006/07/14/crazy-best-quebecois-movie-yr2005

மேலதிக விவரங்களுக்கு

E2-4, Gemini Parsn Appartments,
Cathedral Garden Road,
Chennai - 600 006.
Tamilnadu, India.

Tel +91 - 44 - 5516 3866 / +44 - 2821 2652
Mob 0 - 98401 51956
Fax +91 - 44 2821 2652
thangaraj_icaf@hotmail.com

Chennai International Film Festival
http://www.chennaifilmfest.org