‘ஓசோ்ஷிகி’ [Ososhiki - The Funeral] (1984)
சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிரம்பிய வாழ்வு தமிழருடையது. விருப்பமிருக்கிறதோ இல்லையோ இன்னும் பல சடங்குகளைச் செய்துகொண்டிருக்கிறோம். சம்பிரதாயங்களும் அப்படியே. தமிழரைப்போல வீண் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பல கலாச்சாரங்களில் இருந்தாலும் அதில் முதன்மையான இடம் ஜப்பானியர்களுக்கே. பிறப்பிலிருந்து இறப்புவரை சடங்குகளால் வழிநடத்தப்படுபவர்கள் அவர்கள். ஆனால், மாறிவரும் சூழலினால் அவர்களுடைய வாழ்வில் பல மாற்றங்கள் நடந்தன, நடந்தபடி இருக்கின்றன.
ஜப்பானியர்களின் பல பழக்கவழக்கங்களை நாசூக்காகக் கிண்டல் செய்யும் படங்களை Juzo Itami இயக்கியிருக்கிறார். நாளாந்த வாழ்வில் சந்திக்கக்கூடிய பாத்திரங்களை இவரது படங்களில் பார்க்கலாம். Juzo Itami-இன் முதல் படம்தான் ‘ஓசோ்ஷிகி’ [The Funeral].

Wabisuke Inoueவும் Chizuko Amamiyaவும் திரைப்பட உலகைச்சார்ந்த, பட்டினத்தில் வாழும் தம்பதியர். மனைவி Chizuko Amaiyaவின் பெற்றோர், Wabisuke Inoueவின் சிறுவயதுக் கிராமத்துப்பூர்வீக வீட்டில் வசிக்கிறார்கள். திடீரென்று மாரடைப்பில் Chizukoவின் தந்தை இறந்துபோகிறார். பட்டினத்திலிருந்து இரண்டு மகன்களுடன் கிராமத்துக்குப்போகிறார்கள் Inoue தம்பதியினர். அங்கே இறந்தவரின் இளையமகள் அவளுடைய குடும்பத்துடன் நிறைமாதக் கர்ப்பிணியாக ஏற்கனவே வந்திருக்கிறார். இறந்தவரின் அண்ணனும் வந்திறங்கியிருக்கிறார். Funeral Homeஇல் வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு உரிய மரியாதையை அங்கேயிருப்பவர்கள் சொல்லச்சொல்லச் செய்கிறார்கள். மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஜப்பானியர்களின் செத்தவீடு எவ்வாறு இருக்கிறது என்பதை இயக்குநர் பல காட்சிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
பழங்காலத்தில் செய்த பல விதயங்கள், அவற்றின் அர்த்தத்தை முழுவதுமாகத் தொலைத்த நிலையில் ஏனென்று தெரியாமலேயே, அவற்றைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் கடனே என்று செய்கிறார்கள். இறந்தவரின் அண்ணன், பழைய முறைப்படியே செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். பல தடவைகளில் அவர் அவ்வாறு செய்வது தன்னுடைய சௌகரியத்துக்காகவே என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
வீட்டுக்கு எடுத்துவரப்படும் உடல், வீட்டின் நடுப்பகுதியில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அப்போது நடக்கும் பல காட்சிகளினூடே விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஜப்பானிய கலாச்சாரத்தை நன்கறிந்தவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். படத்தில் வரும் பல காட்சிகளை இரசிப்பதற்கு ஜப்பானியக் கலாச்சாரம் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் அபத்தம் பல காட்சிகளில் நன்கு வெளிப்படுகிறது.
குடும்பத்தில் மூத்த மகள் மற்றும் மருமகன் என்பதால் செத்த வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, வீடியோ காசட் பாடங்கள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் எம்மாதிரி நடந்துகொள்ள வேண்டும். என்னென்ன கேள்விகளைக் கேட்கவேண்டும். என்னென்ன பதில் சொல்லவேண்டும் என்பதெல்லாம் அந்தக் காசட்டில் உள்ளடங்கிய சில பாடங்கள்.
செத்த வீட்டிற்கு வரும் புத்தகுருவை எப்படி நடாத்தவேண்டும். அவர் என்னென்ன செய்வார். என்னென்ன ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. புத்த குருவிற்கு என்னென்ன தட்சிணைகள் கொடுக்கவேண்டும் போன்ற ஏற்பாடுகளும் நடக்கின்றன.
ரோல்ஸ் ரொய்ஸ் காரில் வந்திறங்கும் புத்தகுரு, பல சடங்குகளைச் செய்கிறார். ஒரு சடங்கின்போது குடும்பத்தவர் அனைவரும் முழங்காலில் அமர்ந்து கால்களைப்பின்னுக்கு மடித்தபடி அமர்ந்திருக்கிறார்கள். தொடரும் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெரும் சோதனையாக இருக்கின்றன. குழப்படி செய்ய முயலும் குழந்தைகள் பெரியவர்களின் கண்டிப்பினால் அடக்கப்படுகிறார்கள். பெரியவர்களுக்கும் இந்தச் சடங்குகள் அப்படியொன்றும் சௌகரியமாக, சுவாரசியமாக இல்லை. கால் விறைத்துப்போவதில் தொடங்கிப் பல விதயங்கள் நம்மூர்ச்சடங்குகளின்போது நான் உணர்ந்தவற்றை நினைவுபடுத்தியது. தட்சிணை வாங்கிப்போகும் புத்தகுரு, தோட்டத்தில் போட்டிருந்த இத்தாலிய மார்பிள் கல்லைக் கண்டு ஆச்சரியப்பட்டுத் தன் விருப்பத்தைச் சொல்கிறார். குருவின் புத்தகோயிலுக்கு விசேடமாக மார்பிள் கல் அனுப்பி வைப்பதாகச் சொல்கிறார்கள் இறந்துபோனவரின் குடும்பத்தவர்.
பகல் பொழுதுகள் இப்படிக் கழிந்தாலும் இரவு நேரங்கள் மிகுந்த கொண்டாட்டங்களுடன் கழிகின்றன.
செத்த வீட்டிற்கு வந்து சேரும் மூத்தமகனின் காதலி, தன்னுடன் உறவு கொண்டால்தான் தான் அந்த இடத்திலிருந்து போவதாகத் தனியாக மிரட்டுகிறாள். அந்தக் காட்சிகள், வெறும் சடங்குகளுக்குத்தான் அந்த ஜப்பானியர்கள் மதிப்புக் கொடுக்கிறார்கள் என்ற கருத்தினை வலியுறுத்த உதவுகிறது. கிளுகிளுப்பு ஊட்டுவதற்குப் பதிலாக, அந்தக் காட்சிகள் நமது சோகத்தையும் யோசனைகளையும் அதிகப்படுத்துவது நல்ல காட்சியமைப்புக்கு உதாரணம்.
ஒரு காட்சியில் பலத்த காற்று வீசி, செத்தவீட்டுச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை வானத்தில் விசிறியெறிவதும், அவற்றைத் துக்கம் கொண்டாட வந்தவர்கள் துரத்திப்பிடிப்பதுவும் சொல்லாமற்சொல்லும் விதயங்கள் நிறைய.

Juzo Itami-இன் முதலாவது படமிது. 1997இல் இறந்துபோன இவர் 10 படங்களைத்தான் இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் நிகழ்காலத்து ஜப்பானைக் களமாகக் கொண்டிருக்கிறார். பொதுமக்களின் அன்றாட வாழ்வையும் அவற்றில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் அவற்றிலிருக்கும் அபத்தங்களையும் காட்டி, நயமாக எள்ளிநகையாடியும் இருக்கிறார் அவர். இதுபோன்று தமிழ்ச்சமூகத்தில் விரவிக்கிடக்கும் பல விதயங்களையும் அபத்தங்களையும் மக்கள் மனதில்படும்படி காட்டும் இயக்குநர்கள் இருக்கிறார்களா என்று தேடினால் ஏமாற்றாந்தான் மிஞ்சுகிறது.
சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கவேண்டிய படம்.
பின்குறிப்பு: பல நாட்களுக்கு முன்பு பார்த்த படத்தைப்பற்றி எழுதத் தூண்டிய பதிவு, சுந்தரவடிவேலின் ‘சாவிலும் பிழைக்கும் பார்ப்பனக் கூட்டம்’. அவருக்கு நன்றி!
தொடர்புள்ள சுட்டி: ஜப்பானியரின் செத்தவீடு சம்பந்தமான இடுகை - http://www.debito.org/JPRIjapanesefuneral.html



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (