October 24, 2006

கில்டி பை சஸ்பி்ஷன் Guilty by Suspicion (1991)

ஹொலிவூட் கறுப்புப் பட்டியல். சில படங்களில் இதைப்பற்றிய குறிப்புகள், காட்சிகள் வந்திருக்கின்றன. The Way We Were போன்ற காதல் படங்களில், சமீபத்தைய Good Night and Good Luck போன்ற அரசியல் படங்களில், Chaplin போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களில். ஏன், Elia Kazan-இன் On the Waterfront(1954) போன்ற படங்களில் கூட இது வேறுவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஹொலிவூட்டைச் சேர்ந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது கூட்டங்களில் பங்குபெற்றவர்கள் என்று சொல்லி அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டு, விசாரணைக்கு உள்ளானவர்கள் பிறகு ஹொலிவூட்டில் வேலை செய்யமுடியாமல் போய், சிலர் பிறருடைய பெயரில் தம் வேலைகளைச் செய்து கடைசியில் 1970 மட்டில்தான் தத்தம் பெயர்களில் வேலை செய்யக்கூடியதாயிற்று. மேலதிக விவரங்களுக்கு - http://en.wikipedia.org/wiki/Hollywood_blacklist

ராபர்ட் டீ நீரோ, டேவிட் மெர்ரில் என்ற கற்பனைப்பாத்திரத்தில் நடிக்கிறார். டேவிட் மெர்ரில், ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநர். D. Zanuckஇன் நம்பிக்கை நட்சத்திரம். Zanuck போன்ற சில உண்மையான பாத்திரங்களும், Joe Lesser, Jarry Copper போன்ற நிஜத்தையும் கற்பனையையும் கலந்த பாத்திரங்களும் படம் முழுக்க வருகிறார்கள். இதில் Joe Lesserஆக நடித்திருப்பது இயக்குநர் மார்ட்டின் ஸ்கொர்ஸெசி.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் டேவிட் மெர்ரில், Zanuck-இனால் Felix Graff என்ற வக்கீலைப் பார்த்து வருமாறு அனுப்பப்படுகிறார். பார்த்துவிட்டு வந்ததும் புதுப்பட விதயங்களை மேற்கொண்டு விவாதிக்கலாம் என்ரு சொல்கிறார். Zanuckஇன் Golden Boy என்றழைக்கப்படும் டேவிட் மெர்ரிலும் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், போன இடத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவர் டேவிட் பல வருடங்களுக்கு முன்பு சென்ற கம்யூனிஸ்ட் கூட்டங்களைப்பற்றிக் கேட்கிறார். புதிய சித்தாந்தங்களைக் குறித்த கூட்டமென்பதால் அதற்குப் போனதாகவும் அங்கே நிறையக் கேள்வி கேட்டுக் குழப்பம் விளைவித்ததால் வெளியேற்றப்பட்டதாகவும் சொல்கிறார் டேவிட் மெர்ரில். தொடர்ந்து கேள்விகள், டேவிட் மெர்ரிலின் நண்பர்களைக் குறி வைக்கிறது. Howard Da Silva, Elizabeth Cummings போன்ற பெயர்களைத் தொடர்ந்து டேவிட்டின் உற்ற தோழனின் பெயரும் வருகிறது. Robert Baxter என்ற Bunnyக்கும் கம்யூனிசக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஆணித்தரமாக மறுக்கும் டேவிட் மெர்ரில், தொடரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்து விடுகிறார். வெளியேறிய மெர்ரிலைச் சமாதானப்படுத்த Gruff, இது பத்திரிகைகளில் இடம்பெறுவதற்கு அரசாங்கம் செய்யும் முயற்சி, அதற்கு ஒத்துழைத்துவிட்டால், டேவிட் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கலாம் என்கிறார். மறுத்துவிடும் டேவிட் மெர்ரிலை Zanuckஇலிருந்து நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் ஒதுக்குகிறார்கள்.

மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்துவந்த மெர்ரில், வேறுவழியில்லாமல் மனைவியின் வீட்டுக் கூடத்தில் ஒதுங்குகிறார். தொடர்ந்து வேலை தேடி அலையும் அவரை FBI பின்தொடர்ந்தபடி இருக்கிறது. கிடைத்த சாதாரண Cowboy western படமும், விதயம் வெளியே தெரிந்ததால் கையைவிட்டுப் போய்விடுகிறது. எந்த Bunny Baxterக்காக, சண்டைபோட்டு வெளியே வந்தாரோ, அந்த Bunny Baxterக்கு அழைப்பு வந்திருக்கிறது. டேவிட் மெர்ரிலின் பெயரைப் பட்டியலிட அனுமதி கேட்டு வந்தவரைக் கண்டு மனம் சோர்கிறார் டேவிட் மெர்ரில். என்னதான் செய்வது என்று ஃபெலிக்ஸ் கிராஃபைப் பார்க்கச் செல்கிறார். கமிட்டி வேண்டியதைச் செய்துவிட்டு வேலையில் சேரச் சொல்கிறார் கிராஃப். அப்போதும் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க மறுத்துவிடுகிறார் டேவிட். டேவிட்டுக்கும் இரண்டொரு வாரங்களில் House Committee on Un-American Activities (HCUA)யின் அழைப்பு வருகிறது.

கமிட்டி, டேவிட்டின் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களைப்பற்றிக் கேட்கிறது. தொடர்ந்து கூட்டங்கள் யார் யார் வீடுகளில் நடந்தன, யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என்று விசாரிக்கிறார்கள். பதில் சொல்ல மறுக்கும் டேவிட்டை, விட்டு ஒதுங்குகிறார் அவரது வக்கீல். தொடரும் கேள்விகள், டேவிட் கலந்துகொண்ட பிற கூட்டங்களைப்பற்றி விசாரிக்கிறது. அணு ஆயுதத்துக்கு எதிரான பேரணியில் டேவிட் கலந்துகொண்ட புகைப்படங்களைக் காட்டி விசாரிக்கிறார்கள். அதே பேரணியில் கலந்து கொண்ட டேவிட்டின் மனைவி, ஆசிரியையாக இருப்பது குறித்தும் கருத்துச் சொல்கிறார்கள். இளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு இம்மாதிரியான ஆசிரியர்களிடம் போய்ச்சேர்ந்திருப்பது வருந்தத்தக்கது என்றும் அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் மிரட்டுகிறார்கள். எட்கர் ஹூவர், அணு ஆயுதத்துக்குச் சார்பாகச் சொன்னவற்றைக் கமிட்டியினரும் கிளிப்பிள்ளைபோல ஒப்பிக்கின்றனர். இத்தனை மிரட்டியும் பதில் சொல்லாத டேவிட் மெர்ரிலை நீக்கிவிட்டு அடுத்த நபரைக் கூப்பிடுகிறார்கள். அது Bunny Baxter. டேவிட்டின் பாணியில் பாஸ்டரும் பதில் சொல்ல மறுப்பதுடன் படம் முடிகிறது.

யோசித்துப் பார்த்தால், அநாயாசமான உரைகளோ, சாகசங்களோ படத்தில் இல்லை. உதா: Good Night and Good Luckஇல் மர்ரோவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் & மக்கார்த்தியின் பிதற்றல்கள். ஆனால், படத்தினூடே நிரவிக் கிடக்கும் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சம்பவங்கள் நடக்கும்போது அவற்றிற்கடியே பல இரகசியங்கள் ஒளிந்துகொண்டிருப்பதையும் உணர முடிகிறது. வசனங்களும் பாடல்களும் இதற்குப் பெரிதும் துணையாக இருக்கின்றன.

டேவிட் பாக்ஸ்டராக நடித்திருக்கும் ரோபர்ட் டி நீரோவுக்கு இது கஷ்டமான வேலை அல்ல. திரைப்பட மனைவியாக நடித்திருந்த அன்னெட் பென்னிங்கும் நன்றாக ஒத்துழைத்திருந்தார். பன்னி பாக்ஸ்டராக நடித்த George Wendt, கிரிஸ் கூப்பர் ஆகியோரும் நன்றாக நடித்திருந்தார்கள். இயக்குநர் எர்வின் விங்க்லருக்கு இது முதற்படமாம். அப்படித் தெரியவேயில்லை. இதற்குப்பிறகு இவர் இயக்கிய ஐந்து படங்கள் அத்தனை பெரிய வெற்றியைப் பெறவில்லை.

1940-50களில் நடந்தவற்றைப் பற்றி 1991இல் வெளியான இப்படத்தைப் பார்க்கும்போது நிகழ்காலத்தில் நடக்கும் விதயங்கள் சிலவற்றுக்கும் வரலாற்றில் நிகழ்ந்தவைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது யோசிக்கப் படவேண்டியது.

October 8, 2006

The Departed (2006)

Martin Scorcese, Jack Nicholson, Leonardo Di Caprio, Matt Damon, Mark Wahlberg, Martin Sheen, Alec Baldwin & Ray Winstone.

இந்தப் பெயர்களையெல்லாம் ஒரு திரைப்பட விளம்பரத்தில் பார்த்தால் என்ன செய்வீர்கள்?

முதல் நாளே திரையரங்கை முற்றுகையிட்டாலும் இடலாம். அதைத்தான் நாங்கள் செய்தோம். Martin Scorceseயின் பெயர் மட்டுமே என்னை முதல்நாள் காட்சிக்கு இழுக்கும் என்பது தனிக்கதை.

அருமை & அட்டகாசம். இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தலாம்.

இந்த வருடத்தில் பார்த்த படங்களுள் மிகச்சிறந்த படம்.

கதையென்னமோ ஹொங்கொங் சீன மொழிப் படத்தழுவல்தான். ஆனால், சீன மொழிப்படங்களையே சுவாசிக்கும் ஒரு நண்பருக்கு, படம் முடிவதற்குக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் பொறிதட்டியது. ஆகவே, பெரும்பாலான காட்சிகள் புதியவையாக இருக்கவேண்டும்.

கதை நடக்குமிடம் தெற்கு பாஸ்டன். அங்கே, ஃபிராங்க் காஸ்டெல்லோ(ஜாக் நிக்கோல்ஸன்) ஒரு மாஃபியா தலைவன். காலின் சல்லிவன்(மாட் டேமன்), ஃபிராங்க் காஸ்டெல்லோவினால் சிறுவயதிலிருந்தே கவனிக்கப்பட்டு வந்தவன். நன்கு படித்துவரும் அவன், வளர்ந்ததும் ஃபிராங்க் காஸ்டல்லோவின் ஒற்றனாக பாஸ்டன் போலீஸில் சேர்கிறான். அதே பகுதியைச் சேர்ந்த பில்லி காஸ்டிகன்(லியோனார்டோ டி காப்ரியோ), போலீஸ் உளவாளியாக ஃபிராங்க் காஸ்டெல்லோவின் குழுவில் இணைகிறான்.

காலப்போக்கில், இரு தரப்பினருக்கும் தத்தம் குழுவில் எதிர்த்தரப்பு உளவாளி இருக்கிறான் என்று புரிகிறது. இரு தரப்பாரும் எப்படி, தம் பக்கத்தில் இருக்கும் ஒற்றனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். தொடர்ந்து என்ன நடக்கிறது. இதுதான் கதை.

தொடக்கத்தில் பட்டியலிட்டிருந்த ஜாக் நிக்கல்சன், லியோனார்டோ டி காப்ரியோ, மாட் டேமன் தவிர மார்க் வாஹ்ல்பேர்க், மார்ட்டின் ்ஷீன், அலெக் பால்ட்வின் மற்றும் ரே வின்ஸ்டன் போன்ற திறமையான நடிகர் கூட்டத்தை நன்கு வேலை வாங்கி, அவர்களின் நடிப்புப் பசிக்குத் தீனி போட்டிருக்கிறார் மார்ட்டின் ஸ்கொர்ஸெசி. ஸ்கொர்ஸேசியும் லியோனார்டோ டி காப்ரியோவும் இணைந்து வேலை செய்யும் மூன்றாவது படம் இது. 2008 இவர்களின் இன்னொரு படம் வரவிருக்கிறதாம்.

லியோனார்டோ டி காப்ரியோவைப் பலருக்கும் டைடானிக் பட நாயகனாகத்தான் நினைவிருக்கும். என்னைப்பொறுத்தவரை, அந்தப் படத்தாக்கத்திலிருந்து டி காப்ரியோ வெளியே வந்தது மிகவும் நல்ல விதயம். Robert DeNiroவுடன் ‘This Boy’s Life’, Johny Deppஉடன் ‘What’s Eating Gilbert Grape’ போன்ற படங்களில் நடித்த டி காப்ரியோ, 1995யில் வந்த ‘The Quick and The Dead’இலும் சுற்றி இருந்த நடிகர் பட்டாளத்துக்கு மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். நடுவில் வந்த சில சாதாரண படங்களையும் டைடானிக்கையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், டி காப்ரியோவின் அடுத்த குறிப்பிடத்தக்க படம் மார்ட்டின் ஸ்கொர்ஸேசியுடன் முதன்முதலில் இணைந்த 2002இன் Gangs of New York. அதே வருடத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்குடன் ‘Catch Me If You Can’. அடுத்து 2004இல் மார்ட்டின் ஸ்கொர்ஸெசியுடன் ‘The Aviator’. இப்போது ‘The Departed’. The Departedஇல் டிகாப்ரியோவின் நடிப்பை என்னவென்று சொல்லிப் பாராட்டுவதென்று தெரியவில்லை. விரிவாகப் பேசப்போனால், படத்தின் கதையையும் ஆங்காங்கே சிதறிவிடும் அபாயம் இருப்பதால், படத்தின் டிவிடி வெளிவரும்போது ஒரு இடுகை எழுதலாம் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன்.

போவதற்கு முன்னால் ஏனைய நடிகர்களைப்பற்றியும் ஓரிரு வார்த்தை சொல்லவேண்டும். what can i say? I am so enamoured with the whole movie, it’s all i’ve been thinking of ever since i watched it.

மாட் டேமனை ‘Good Will Hunting’க்குப் பிறகு ‘The Talented Mr.Ripley’யில் பார்த்தேன். அந்த எதிர்பார்ப்போடு ‘The Legend of Baggervance’க்குப் போய் ஏமாந்தது சொந்த சோகக்கதை. ‘The Talented Mr.Ripley’யைக் கொஞ்சம் நினைவுபடுத்தும் பாத்திரம். அவருடைய நல்லவர் இமேஜைத் தூக்கி நிறுத்தும் சிரிப்பை இங்கே நல்லபடியாகப் பயன்படுத்தியிருக்கிறார். மார்ட்டின் ஸ்கொர்ஸெசியுடன் மாட் டேமனுக்கு இது முதற்படம். நன்றாகச் செய்திருக்கிறார்.

ஜாக் நிக்கல்சன். லியோனார்டோ டி காப்ரியோவை எப்படி அவருடைய சமவயதுக்காரர்களோடு ஒப்பிட்டுச் சிறந்த நடிகர் என்று சொல்கிறார்களோ அப்படி ஜாக் நிக்கல்சனைச் சொல்வார்கள். ஆனாலும் இது நாள்வரை ஜாக் நிக்கல்சனின் படங்களில் சிலவற்றை தவிர்க்கமுடியாத காரணங்கள் மற்றும் உந்துதல்களினால்தான் பார்த்திருக்கிறேன். ஜாக் நிக்கல்சனைப் பொறுத்துக்கொண்டுதான் அந்தப் படங்களை வீட்டுக்கும் எடுத்துவந்திருக்கிறேன். The Departed பார்த்தபிறகு அந்த எண்ணம் மாறியிருக்கிறது. முடிந்தவரை, ஜாக் நிக்கல்சனின் எல்லாப்படங்களையும் தேடிப்பிடித்துப் பார்த்துவிடும் ஆர்வம் துளிர்த்திருக்கிறது.

மற்ற நடிகர்களைப்பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்த இடுகை முழுமையடையாது. எனவே..

மார்ட்டின் ஸ்கொர்ஸெசியின் படம் என்றாலே நடிப்பவர்களின் திறமைகள் மிகவும் பளிச்சிடுகின்றன. எங்கேயோ லியோனார்டோ டி காப்ரியோ சொன்னதுபோல, ஒரு காட்சியைப்பற்றி விவாதிக்கும்போது அதுவரை அந்தமாதிரிக் காட்சியமைப்பு எந்தெந்தப் படங்களில் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று போட்டுக்காட்டி விவாதித்துப் பிறகு தனக்கு எப்படி வேண்டும் என்று சொல்வது ஸ்கொர்ஸெசியின் பழக்கம் என்று தெரிகிறது. அந்த உழைப்பு படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. அது, ரே வின்ஸ்டனின், அவருக்குப் பழகிப்போன Frenchyயாக இருந்தாலென்ன[அதேன் மார்ட்டின் ஸ்கொர்ஸேசியின் படங்களில் ஒரு Mr. Frenchyயாவது வந்துவிடுகிறார்கள். ஏதாவது காரணமிருக்கும். என்னவென்று பார்க்கவேண்டும்.], தானொரு Mr.Perfect என்று மாட் டேமனின் காலின் சல்லிவனிடம் மார்தட்டிக்கொள்ளும் அலெக் பால்ட்வின்னின் போலீஸ் பாத்திரமாயிருந்தாலென்ன[அந்தக் காட்சியில், அலெக் பால்ட்வின்னின் போலீஸ்காரர், காலின் சல்லிவனின் கல்யாணம் எந்தளவில் இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு போலீஸார் திருமணம் செய்துகொள்வது நல்லது என்று கூறியபடி தற்பால் நாட்டக்காரர் பற்றி போகிற போக்கில் எள்ளிநகையாடிப் போகிறார். இது, சமூகம் எவ்வளவு முன்னேறினாலும் ஒரு சிலர், முக்கியமாக போலீஸ் போன்ற முக்கியமான துறைகளில் இருப்பவர்களின் மனப்போக்கைக் காட்டுகிறது என்பதாக எடுத்துக் கொண்டேன். காலச்சுவட்டில் இந்த மாதம் 'வேட்டையாடு விளையாடு' பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. படம் பார்த்தால்தான் என்னமாதிரியான காட்சியமைப்பு என்று பார்க்கமுடியும். பார்க்கவேண்டும்.]

Mark Wahlberg நல்லதொரு திறமையான நடிகர் என்பதைப் பலருக்கும் The Departed நினைவுபடுத்தும். படுத்தவேண்டும்! Goodfellasஇல் Joe Pesciயை நினைவிருக்கிறதா? நொடிக்கொரு கெட்டவார்த்தை பேசும் பாத்திரம். இங்கே, அதைப்போல Mark Wahlbergஇன் Dignam. But, that’s not all to Mark Wahlberg’s Dignam.

சுருக்கமாகச் சொன்னால் The Departed அவசியம் பார்க்கவேண்டிய படம்.