Lady in the Water (2006)

தன்னை நம்பச் சொல்கிறார். எதிர்பார்க்கிறார்.
எனக்கு சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொன்ன அனுபவமெல்லாம் கிடையாது. அதுவும் bedtime stories - இல்லவேயில்லை! முன்பு ஒரு தடவை தேசிகனின் வலைப்பதிவில் அவருடைய பெண்ணுக்குச் சொன்ன கதையை எழுதியிருந்தார். அங்கே, பத்ரி சிறுபிள்ளைகளுக்குக் கதை சொல்லும் அனுபவம் பற்றிச் சொன்ன மறுமொழிதான் நினைவுக்கு வந்தது. சின்னப்பிள்ளைகள், நாம் கதை சொல்லும்போது நம்மோடு கூட வருவார்கள். ஈடுபாட்டோடு கேள்விகள் கேட்டு தம்மை புதிய அனுபவங்களுக்கு உட்படுத்திக்கொள்வார்கள். அதே சமயம், சமாளிக்க முடியாத இடக்குமடக்கான கேள்விகளையும் கேட்பார்களாயிருக்கும்.
Lady in the Water-இல் மனோஜ் சியாமளன், தன் பிள்ளைகளுக்குச் சொன்ன கதையைப் படமாக்கியிருக்கிறார். Finding Neverland-இல் ஜேம்ஸ் பார்ரீ, சிறுவர்களோடு கதைகளை உருவாக்கி விளையாடுவதுபோல, மனோஜ் சியாமளன் பார்வையாளர்களோடு விளையாடியிருக்கிறார் என்று சொல்லலாம். கதையென்று பார்த்தால், மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக வந்த ஒரு நார்ஃப்-ஐ பிலடெஃபியாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் மனிதர்கள் காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்கள். படத்தை நகர்த்திச் செல்லப் பயன்படுவது ஒரு கொரிய நாட்டுச் சிறுபிள்ளைகளுக்கான கதை.
வழமையான மனோஜ் சியாமளன் பட விதயங்களைக் காணக்கிடைக்கவில்லை. சந்தோ்ஷமாகவிருந்தது. Wide Awake தொடங்கி எல்லாப் படங்களிலும் இருக்கும் திடீர் முடிவுத் திருப்பங்கள் இதில் இல்லை. திகில்க் காட்சிகள் இல்லையென்றே சொல்லலாம். ஓரிரு முறைகள் இருந்தாலும், அப்படியொன்றும் நன்றாக வரவில்லை.

அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழும் மனிதர்களில் சில பாத்திரப்படைப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன. குறிப்பாக, கிராஸ்-வேர்ட் புதிர்களில் ஈடுபாடுள்ள அப்பாவும் பிள்ளையும். நார்ஃபாக நடித்திருக்கும் Bryce Dallas Howard நன்றாகச் செய்திருக்கிறார். அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பாத்திரமென்பதால் பெரிய கஷ்டமிருந்திருக்காது என்று நினைக்கிறேன். Sideways, Cindrella Man படங்களைப்போல இந்தப்படமும் Paul Giamattiக்கு நல்ல படம். ஆங்காங்கே Sideways படத்தை நினைவுபடுத்தினாலும் சாதாரணர் வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

படத்துக்கு என்ன நடந்தாலும், Cleveland Heep-ஆக நடித்த போல் கியாமட்டிக்கு நல்ல வேடம். நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். திரைப்பட விமர்சகர் வேடமொன்றும் படத்தில் இருக்கிறது. அந்தப் பாத்திரம் பேசும் வசனங்கள், விமர்சகர்களுக்குக் கோபமேற்படுத்தலாம். முக்கியமாகக் கடைசியில் அந்தப் பாத்திரம் பேசும் வசனங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சகர்களைக் கிண்டலடித்திருக்கிறார் சியாமளன். அந்தப் பாத்திரம் பேசும்போதெல்லாம், சிக்ஸ்த் சென்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுதிய N.Y.Times விமர்சகர் நினைவுக்கு வந்தது - என்னுடைய பக்கசார்பினால் இருக்கலாம்.

படத்தில் படுத்தியெடுக்கும் விதயங்கள் நிறைய இருக்கின்றன. மனிதர்களில் முக்கியமானவர் சரிதா சௌத்ரி. மனோஜ் சியாமளனும் படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறார். இவருக்கென்னத்துக்கு இந்த வி்ஷப்பரிட்சை, நடிக்க ஆசையிருந்தால் ஏதாவது சிறுபாத்திரத்தில் வந்துபோவதுதானே என்று தோன்றுகிறது. பார்க்க அசப்பில் என் சகோதரனைப்போல இருந்ததால் ரொம்பவும் திட்ட முடியவில்லை.
அவ்வப்போது தோன்றி, கதையை நகர்த்திச் செல்லும் கொரியப் பெண்மணி, ஒரு கொரிய [தெற்காசிய என்றும் வைத்துக்கொள்ளலாம்] ஸ்டீரியோடைப் பாத்திரமாக அமைத்திருந்தது ஏமாற்றமாக இருந்தது. அதுவும், கதையை சௌகரியமாக ஆங்காங்கே தொங்க விட்டுவிட்டு இந்தப் பெண்மணியிடம் வருகிறது திரைக்கதை.

ஒரு கட்டத்துக்கு மேல், படத்தில் அதன் குழறுபடிகளையும் தாண்டி ஆழ்ந்துபோனேன். அப்படிப் போகும்போதெல்லாம், அதிலிருந்து என்னை மீட்டு இரட்சித்தது மனோஜ் சியாமளன் உருவாக்கிய அன்னிய உருவங்கள். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே இருக்கும்போதாவது கொஞ்சம் நம்ப முடிகிறது. படத்தின் கடைசிக்கட்டங்களில்.. - மன்னிக்கவும்! என்னால் நம்பமுடியவில்லை. நம்புவதற்கு முயற்சி செய்தாலும் சிற்சில குழறுபடிகள் செய்து அந்த நம்பகத்தன்மையை போக்கடித்துவிடுகிறார் இயக்குநர்.
அதுவும் படத்தின் கடைசிக் காட்சி.. - யாராவது ஸ்டீவன் கோல்பேரின் நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டா?
கடைசியாக: என்ன சொல்வது? மனோஜ் சியாமளன் புதியதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமோ என்று மனதைத் தேற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. அசலான விதயங்களைவிட நம்பக்கூடியமாதிரி போலியான விதயங்களை உருவாகக்கூடிய தொழில்நுட்பம் இருக்கும்போது [உதா: டைனோசர் தொடங்கிப் பல விதயங்கள்..] எதற்கு ametuerishஆக அன்னிய உருவங்களை உருவாக்கினார் என்று தெரியவில்லை. Signs படத்து உருவங்களும் அப்படி இருந்தது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் வேறு ஓர் இடுகை எழுதியிருக்கிறேன்.










A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (