June 29, 2006

Moviemakers’ Master Class - வாசக அனுபவம்

John Boorman, Sydney Pollack, Claude Sautet, Woody Allen, Bernardo Bertolucci, Martin Scorsese, Wim Wenders, Pedro Almodovar, Tim Burton, David Cronenberg, Jean-Pierre Jeunet, David Lunch, Oliver Stone, John Woo, Joel and Ethan Coen, Takeshi Kitano, Emir Kusturica, Lars Von Trier, Wong Kar-wai. திரைப்படங்களில் ஆர்வமிருப்பவர்களுக்கு மேலே நான் அடுக்கித்தள்ளியிருக்கும் பெயர்களில் கொஞ்சமாவது பரிச்சயமாகவிருக்கும். ஒரு சிலர் இவர்கள் உருவாக்கிய படங்களில் கணிசமானவற்றைப் பார்த்திருப்பீர்கள்.

எனக்குத் திரைப்படம் பார்ப்பது எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு பிடித்த விதயம், டிவிடியில் படங்களை இயக்குநர்கள் அலசி ஆராயும் பேட்டிகள். எல்லாப் பேட்டிகளும் சுவாரசியமானவை என்று சொல்லமுடியாது என்றாலும் சில நல்ல பேட்டிகளும் சிக்குவதுண்டு. உதா: க்ளிண்ட் ஈஸ்ட்வூட் இயக்கும் படங்களோடு வரும் அவரது பேட்டிகள்.

இந்தப் புத்தகத்தில் இயக்குநர்கள் செவ்வி அளித்திருக்கிறார்கள். செவ்வி என்றால் சாதாரணமாக நாம் படிக்கும் செவ்விகள் அல்ல. சினிமா பற்றிய புரிதல்கள், பாடங்கள் என்ற வகையறா. Laurent Tirard இந்த யோசனை தனக்கு எப்படி உருவானது என்று ஓரிடத்தில் சொல்கிறார். Studio என்ற பிரெஞ்சு இதழில் Lecons de Cinema என்ற தலைப்பில் ஏறக்குறைய இருபது கேள்விகளைத் தயாரித்து பல்வேறு இயக்குநர்களிடம் கேட்டாராம். அந்தத் தொடர் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதாகவும், அதிலிருந்து சில இயக்குநர்களோடு நடாத்திய செவ்விகளைத் தேர்ந்தெடுத்து இங்கே பகிர்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

Groundbreakers, revisionists, dream weavers, big guns மற்றும் new blood என்று மேலே நான் குறிப்பிட்டிருக்கும் இயக்குநர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோக Jean-Luc Godard மிகமிகப் பொருத்தமாக, In a class by himself என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இந்த இயக்குநர்களின் படங்களெல்லாவற்றையும் நான் பார்த்ததில்லை. ஓரிருவர் இயக்கிய படங்களில் பெரும்பான்மையானவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.

Sydney Pollackஇன் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. முக்கியமாக The way we were, Out of Africa. The Firm உம் Three Days of the Condorஉம் அந்தளவு சொல்ல முடியாதென்றால் ஓரளவு பரவாயில்லை ரகம். Sydney Pollack ஒவ்வொரு படத்தின் உயிர்நாடியையும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். தான், படமெடுப்பதற்கு முன்னும் பின்னும் அதைப்பற்றி நிறைய யோசிப்பதாகவும் படமெடுத்துக்கொண்டிருக்கும்போது அந்தளவு யோசித்து அலட்டிக்கொள்வதில்லை என்றும் சொல்கிறார். Days of the Condor, நம்பிக்கையைப்பற்றியது என்கிறார் அவர். படம் தொடங்கும்போது ரெட்ஃபோர்ட் எல்லொரையும் நம்புபவராகவும் Faye Dunaway யாரையுமே நம்பாதவராகவும் இருப்பவர்கள், படம் முடியும்போது அப்படியே மாறிப்போகிறார்கள் என்கிறார். அதேபோல மெரில் ஸ்ட்ரீப் நடித்த Out of Africa உடமையாக்குதலைப்பற்றியது என்கிறார். இங்கிலாந்து ஆப்ரிக்காவை உடமையாக்க முனைவதும் மெரில் ஸ்ட்ரீப், ராபர்ட் ரெட்ஃபோர்டை உடமையாக்க முனைவதும் படத்தின் உயிர்நாடியாக அமைந்திருந்தாம். Havana படத்தில் அவர் செய்த பிழைகளை ஒப்புக்கொண்டவர், தான் அதே படத்தை இப்போதும் அதேபோல எடுப்பேன் என்கிறார். என்னைக்கேட்டால், ஹவானா படத்தை காஸபிளாங்கா போல எடுக்க முயற்சித்தது தவறில்லை. அவசரவசரமாக எடுத்ததுபோன்ற உணர்வைக் கொடுத்ததைத் தவிர்த்திருக்கலாம் என்பேன்.

பேர்னார்டோ பேர்டோலூச்சி, ஜான் ரெனுவாரைச் சந்தித்ததைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். ரெனுவார் டன்னிடம் ‘You must always leave the door of the set open because you never know what might come in’ என்று சொன்னதைத் தான் மறக்கவில்லை என்கிறார். கூடவே பெர்டோலூச்சி, ஒரு காட்சியைப் படமெடுக்கும் விதத்தைத் தன் கனவுகளில் காண முயற்சிப்பதாகவும் முடியாதபட்சத்தில் எல்லோருக்கும் முன்பாக வந்திருந்து படமெடுக்கும் தளத்தைக் கையில் ஒரு வியூஃபைண்டரோடு சுற்றுவதாகவும் சொல்கிறார். Last Tango in Paris படத்தை எடுக்க முடிவெடுத்தபோது தான் படப்பிடிப்பாளர் Vittoria Storaroவையும் மர்லன் பிராண்டோவையும் தனித்தனியாக ஒரு ஓவியக்கண்காட்சிக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்கிறார். ஃபிரான்ஸிஸ் பேக்கனின் ஓவியக்கண்காட்சியில் ஓவியங்களை இருவருக்கும் காட்டி அந்த உணர்வுகளையே தான் எதிர்பார்ப்பதாகச் சொன்னாராம். படத்தில் இருக்கும் ஆரஞ்சு வண்ணங்கள் பேக்கனின் ஓவியங்களால் உந்தப்பட்டவை என்கிறார். அதேபோல, படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் ஓவியத்தில் இருக்கும் அளவுகடந்த வேதனையை வெளிக்கொணர முயற்சிக்குமாறு பிராண்டோவைக் கேட்டுக்கொண்டாராம். “I often use paintings like that because they allow you to communicate much more effectively than with a hundred words’ என்கிறார் பேர்ட்டோலூச்சி.

பேர்டோலூச்சியின் கருத்துகளை ஏறக்குறைய பிரதிபலிப்பவர் Jean-Pierre Jeunet. இவரது அமேலி திரைப்படம் பல அருமையான வித்தியாசமான கமெராக் கோணங்களைக் கொண்டிருந்தபடம். புதிதாகப் படம் எடுக்க வருபவர்கள் கட்டாயம் அனிமே்ஷனில் வேலை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறார் இவர். அனிமே்ஷனில் வேலை செய்தால், அரங்கமைப்பு, ஒளி, உடைகள், காட்சியமைப்பு இவற்றோடு இயக்கமும் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் இவர். திரைப்படத்தின் ஒவ்வொரு கூறுகளிலும் பரிச்சயமாக முடியும் என்கிறார்.

பெரும்பாலான இயக்குநர்கள் தமக்கு wide lenseகளைத்தான் பிடிக்கும் என்று சொல்கிறார்கள். தூரத்தில் இருந்து எடுக்க வசதியாக இருக்கும் tele-photo லென்ஸ்களை அவசியமேற்பட்டாலொழிய வேறெப்போது பயன்படுத்துவதில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அதேபோல எல்லோரும் ஒருமித்துச் சொல்லும் விதயம் - எப்படி சினிமா எடுப்பது என்று கற்றுக்கொடுக்க முடியாது என்பது. தொழில்நுட்ப விதயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அவ்வளவுதான் என்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகங்களில் திரைப்படம் எடுப்பது எப்படி என்பதுபோன்ற வகுப்புகளை நடாத்தியிருக்கிறார்கள். தாங்கள் பெரும்பாலும் நல்ல படங்களைத் திரையிட்டு அவற்றை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத்தான் செய்யமுடியும் என்பதை செவ்வி கண்ட Laurent Tirardஉம் ஒத்துக்கொள்கிறார். யோசித்துப்பார்த்தால் உண்மைதான்!!!

வூடி ஆலன், பேர்னார்டோ பேர்டொலூச்சி, மார்ட்டின் ஸ்கோர்சேசி, பெத்ரோ ஆல்மோடோவர் என்று பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு இயக்குநர்களைப்பற்றியும் அவர்கள் பேசியிருப்பவை பற்றியும் தனித்தனி இடுகைகளே எழுத முடியும் என்பதாலும் எழுத முயற்சித்தால் காப்பியமாகும் அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இந்தப் புத்தகம் என்னிடமே இருக்கிறது. அடுத்த வாரமாவது நூலகத்தில் திருப்பிக்கொடுத்துவிடவேண்டும். இன்னும் சில காலங்களுக்குப் பிறகு திரும்ப எடுக்கலாம் என்றிருக்கிறேன்.

Moviemakers’ Master Class - Laurent Tirard

திரைப்படங்களோடு தொடர்புடைய இடுகை என்பதால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன். முதலில் எழுதிய இடம்:
http://mathy.kandasamy.net/musings/2006/06/26/443

June 28, 2006

Cape Fear (1962)

இடம்: அமெரிக்காவின் சிறு நகரங்களில் ஒன்று
காலம்: 1960கள்

வக்கீல் கிரெகொரி பெக்கின் வாக்குமூலம் ஒரு குற்றவாளியை சிறையில் போடுகிறது. ஏறக்குறைய எட்டுவருடங்கள் சிறையில் இருந்த அவன் பழிவாங்குவதற்கு வருகிறான். நீதிமன்றத்தில் கிரெகொரி பெக்கைத் தேடிக்கண்டு பிடித்து அறிமுகம் செய்துகொள்ளும் அவனைத் தான் குடும்பத்துடன் போகுமிடங்களில் கண்டதும் திகைத்துப் போகிறார் அந்த வக்கீல். போலீஸில் தனக்குத் தெரிந்தவர் மூலம் அவனை மிரட்டி ஊரை விட்டே துரத்த முயற்சி செய்கிறார். புத்திசாலித்தனமாக, போலீஸார் தன்மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாதபடி நடந்துகொள்கிறான் அந்தக் குற்றவாளி. அவன் மீது குற்றம் சாட்ட முயலும் வக்கீலுக்குத்தான் பிரச்சினை வருகிறது. நாயை வி்ஷம் வைத்துக் கொல்வது, மகளை அவளின் பள்ளிக்கூடத்துக்கு அருகில் வைத்து பயமுறுத்துவது, என்று படிப்படியாகப் பிரச்சினைகள் கொடுத்து வருகிறான். வக்கீலும் குடும்பத்தினரும் போலீஸாரும் என்ன செய்கிறார்கள். குற்றவாளியைச் சமாளிக்க முடிந்ததா? அதற்குள் அவன் ஏதாவது செய்துவிட்டிருந்தானா என்பதுதான் கதை.

ஆல்ஃபிரெட் ஹிச்கொக் சாயலில் எடுக்கப்பட்டிருக்கும் விறுவிறுப்பான படம். ஆல்ஃபிரெட் ஹிச்கொக் படமெடுப்பதுபோல சில காட்சிகளை எடுத்திருப்பதாக இயக்குநர் J. Lee Thompson ஒரு பேட்டியில் சொல்கிறார். படத்தின் தயாரிப்பாளர் கிரெகொரி பெக், Guns of Navrone படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஜெ. லீ தாம்ஸனை இந்தப் படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.

கிரெகொரி பெக்கிற்கு வழமையான நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றிருக்கும் வேடந்தான். வில்லன் Max Cadyயாக அவர் தேர்ந்தெடுத்த நடிகர்தான் இந்தப்படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இன்றைக்கும் சுவாரசியமான படம் என்று தயங்காமல் பரிந்துரைக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ராபர்ட் மிச்சம். Robert Mitchum-இன் அருமையான நடிப்பு இந்தப் படத்தை சிறந்த த்ரில்லர் வகைப்படங்களுள் ஒன்றாக்கியிருக்கிறது.

பதற்றம், படபடப்பு, பயம் - எதுவுமேயில்லாமல் உலகம் ஒரு போக்கில் சுழலுகிறது என்றால் தான் தனக்கென தன்பாணியில் தான் நிர்ணயித்த நேர ஒழுங்கில் நடந்துகொள்வேன் என்று இருக்கும் பாத்திரம். அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய காலஒழுங்கில் நடக்கும் அந்த நடையே கதாபாத்திரத்தின் தன்மையைச் சொல்லிவிடுகிறது. ஆரம்பத்தில், நீதிமன்றத்தில் வக்கீல் ஸான் போடனிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் தொடங்கி படத்தின் கடைசிக்காட்சி வரை முழுப்படமும் இவரையே சுற்றி வருகிறது. வரும்படி செய்தும் இருக்கிறார். அநாயாசமான வில்லன்!

1991-இல் Martin Scorcese, ராபர்ட் டி நீரோவை மாக்ஸ் கேடியாகப் போட்டு இதே படத்தை எடுத்திருக்கிறாராம். பார்க்க வேண்டும். கேப் ஃபியர் பார்க்கும்போது நினைவுக்கு வந்த இன்னொரு படம் மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருந்த பசிஃபிக் ஹைட்ஸ். படத்தைப்பற்றி ரொம்பவும் சிலாகிக்க முடியாதென்றாலும் வில்லனை போலீஸால் எதுவும் செய்யமுடியாமல் போகும் காட்சிகள், கேப் ஃபியரின் மாக்ஸ் கேடியை நினைவுபடுத்தின.

விறுவிறுப்பான காட்சிகளுக்காகவும் வில்லன் மாக்ஸ் கேடியாக நடித்திருந்த ராபர்ட் மிச்சமுக்காவும் பார்க்கலாம்.

June 26, 2006

Julius Caesar (1953)

Friends, Romans, countrymen, lend me your ears.
I come to bury Caesar, not to praise him.
The evil that men do lives after them;

The good is oft interred with their bones.
So let it be with Caesar. The noble Brutus
Hath told you Caesar was ambitious.
If it were so, it was a grievous fault,
And grievously hath Caesar answered it.

Here, under leave of Brutus and the rest—
For Brutus is an honorable man;
So are they all, all honorable men—
Come I to speak in Caesar’s funeral.
He was my friend, faithful and just to me.

But Brutus says he was ambitious,
And Brutus is an honorable man.

ரோம் மாநகர மக்களுக்கு எதிரில் ஜூலியஸ் சீஸரின் உடலைக்கிடத்திவிட்டு மார்க் ஆந்தனி பேசுகிறான். சதிகாரர்களோடு சேர்ந்து ப்ரூட்டஸ், ஜூலியஸ் சீஸரைக் கொன்றுவிட்டு மக்களிடம் அவர்களின் சுதந்திரத்தைக் காக்கவே தான் அப்படிச் செய்ததாகச் சொல்லிச் செல்கிறான். ப்ரூட்டஸ் அனுமதிகொடுத்தபிறகு பேசத்தொடங்கும் மார்க் ஆந்தனி, ப்ரூட்டஸைத் திட்டுவதில்லை என்றும் சீஸரைப் புகழ்ந்து பேச மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அதன்படி பேசத்தொடங்கும் மார்க் ஆந்தனி, பேச்சின் முடிவில் மக்களைத் தன்பக்கம் இழுத்துக்கொள்கிறான்.

ஜூலியஸ் சீஸர் நாடகம் என்றாலே நமக்கு நினைவு வரும் காட்சி இது. மார்க் ஆந்தனியாக வரும் மர்லன் பிராண்டோவின் நான்காவதோ ஐந்தாவது படம் இது. கணீரென்ற குரலிலே உரத்துப் பேசும் மர்லன் பிராண்டோ, ஒரு உரோமானியனைப்போலவே இருக்கிறார். ப்ரூட்டஸின் பேச்சுக்குப்பிறகு சீஸருக்கு எதிராகத் திரும்பியிருக்கும் மக்களை மௌனமாகக் கண்காணிக்கிறார். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முகபாவங்களோடு பேசுவது. அதுவரை சீஸர் செய்ததையும் நடந்துகொண்ட விதத்தையும் நினைவுகூரும்போது ப்ரூட்டஸ் நேர்மையானவன் என்பதை எகத்தாளம் கொப்பளிக்கச் சொல்வது. கொஞ்ச நேரம் பேசியபிறகு தன்னால் தொடர்ந்து பேசமுடியவில்லை சீஸரின் சவப்பெட்டிக்குள் தன்னுடைய இதயம் சென்றுவிட்டது என்று சொல்லி மக்கள் சிந்திக்க அவகாசம் கொடுத்து அவர்களுக்கு முதுகு காட்டி நின்று அவர்களை அவதானிப்பது. பேசி அவர்களை உசுப்பிவிட்டபிறகு திரும்பி நின்று அரைப்புன்னகையோடு பார்ப்பது என்று திரும்பத்திரும்பப் பார்க்க வைத்திருக்கிறார் மர்லன் பிராண்டோ.

மார்க் ஆந்தனி, சீசரின் உடலைக்கிடத்திவிட்டுப் பேசிய பேச்சைப் பெரும்பாலானவர்கள் ஆங்கில வகுப்பில் படித்திருப்பீர்கள். அல்லது என்னைப்போல வீட்டில் கேட்டிருப்பீர்கள். சின்ன வயதில் தட்டுத்தடுமாறி ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் காலங்களில் எங்கள் வீட்டில் அப்பா மேலே இருக்கும் வசனங்களையும் இதைப்போல இன்னும் சிலவற்றையும் சொல்லிக்கொண்டு/பொழிந்துகொண்டிருப்பார்.[சிலவற்றை என்னுடைய ஆங்கிலப்பதிவில் கொடுத்திருக்கிறேன். சுட்டி]. அப்பாவிற்கு சேக்ஸ்பியரை மிகவும் பிடிக்கும். கவிதைகளுக்காக சேக்ஸ்பியரைப் பிடித்திருந்ததைப்போல பிடித்துப்போன இன்னொருவர் மர்லன் பிராண்டோ. ஜூலியஸ் சீசர் படத்தில் மர்லன் பிராண்டோ பேசும் வசனங்களுக்காகவே தான் ஜூலியஸ் சீஸர் படத்தைப் பல தடவை பார்த்ததாகத் தம்பட்டமும் அடித்திருக்கிறார். :) அப்பாவினூடே தெரிந்துகொண்ட பல விதயங்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஜூலியஸ் சீஸர் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு பேரும் சேர்ந்து பார்ப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் விடவில்லை. சுவாரசியமாக இருந்தது.

1953ல் வெளியான இந்தப்படத்தில் மர்லன் பிராண்டோ ‘மார்க் ஆந்தனி’யாகவும் ஆங்கிலேய நடிகர் John Gielgud காஸியஸாகவும் James Mason ப்ரூட்டஸாகவும் நடித்திருக்கிறார்கள். காஸியஸாக நடித்திருக்கும் ஜோன் கியெல்கட் மிகமிக அருமையாக சின்னச்சின்ன அசைவுகளின்மூலமும் வசன உச்சரிப்பினூடாகவும் நினைவில் நிற்கிறார். காஸியஸாக நாடகங்களில் நடித்திருக்கிறாராம். அனுபவ முதிர்ச்சி நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கவனத்தை ஈர்க்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக வந்து ஓரிரு வசனம் பேசினாலும் நினைவில் நிற்கிறார்கள். உதா: படத்தின் தொடக்கத்தில் செருப்புத் தைப்பவராக வசனம் பேசும் நடிகர். அவருக்குப் பேசக்கிடைத்த வசனமும் மிகவும் அருமையானது.

Truly, sir, in respect of a fine workman, I am but, as you
would say, a cobbler.

A trade, sir, that I hope I may use with a safe conscience,
which is, indeed, sir, a mender of bad soles.

படத்தின் கதையைச் சொல்லத்தேவையிருக்காது என்று நினைக்கிறேன். பொம்பேய் போரில் வென்று நாடு திரும்புகிறார்கள் ஜூலியஸ் சீசரும் மற்றவர்களும். ரோம் நகரம் வெற்றியைக் கொண்டாடுகிறது. பேரரசராகும்படி மூன்று முறை ஜூலியஸ் சீஸருக்கும் முடிசூடக் கொடுக்கிறார்கள் மார்க் ஆந்தனியும் மற்றவர்களும். காஸியஸ், ப்ரூட்டஸிடம் பேசி அவனிடம் சீஸர் ஆதிக்க வெறி பிடித்தவர் என்று சொல்கிறான். காஸியஸும் அவனுடைய கூட்டாளிகளும் ப்ரூட்டஸுடன் சேர்ந்து சீசரைக் கொல்கிறார்கள். ஏன் கொன்றேன் என்று ப்ரூட்டஸ் ரோம் நகர மக்களிடம் பேசுகிறான். அவன் பேசி முடித்ததும் மக்கள் அவன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் பேசத்தொடங்கும் மார்க் ஆந்தனி, மக்களைத் தன்வயப்படுத்துகிறான். பொங்கி எழும் மக்கள் கூட்டம் அவன் பக்கம் சாய்கிறது. மார்க் ஆந்தனியும், ஒக்டேவியோ சீஸரும் ஜூலியஸ் சீஸரைக் கொன்றவர்களுடம் போரிட்டு வெல்கிறார்கள். காஸியஸும் ப்ரூட்டஸும் தனித்தனியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விதயம் - வேறென்ன வசனந்தான். இதற்கு முன்பு சில படங்களில் வில்லியம் சேக்ஸ்பியரின் வசனங்களை அப்படியே பயன்படுத்தியிருந்ததைப் பார்த்திருக்கிறேன். உதா: Richard III நாடக ஒத்திகையை அல் பச்சீனோ ஆவணப்படமாக்கியது. ஆனால், Joseph L. Mankiewiczவைப் போல அருமையாக யாரேனும் எடுத்திருக்கிறார்களா தெரியவில்லை.

கவனித்து உறுத்திய ஒரு விதயம். காஸியஸைக் கண்டதும் ஜூலியஸ் சீஸர், மார்க் ஆந்தனியிடம் கதைக்கிறார். அவர் சொல்வதாவது

CAESAR
(aside to ANTONY) Let me have men about me that are fat,
Sleek-headed men and such as sleep a-nights.
Yond Cassius has a lean and hungry look.

He thinks too much. Such men are dangerous.

ANTONY (aside to CAESAR)
Fear him not, Caesar. He’s not dangerous.
He is a noble Roman and well given.

CAESAR
(aside to ANTONY) Would he were fatter! But I fear him not.
Yet if my name were liable to fear,

I do not know the man I should avoid
So soon as that spare Cassius. He reads much.
He is a great observer, and he looks
Quite through the deeds of men. He loves no plays,
As thou dost, Antony. He hears no music.

Seldom he smiles, and smiles in such a sort
As if he mocked himself and scorned his spirit
That could be moved to smile at anything.
Such men as he be never at heart’s ease
Whiles they behold a greater than themselves,

And therefore are they very dangerous.
I rather tell thee what is to be feared
Than what I fear, for always I am Caesar.
Come on my right hand, for this ear is deaf,
And tell me truly what thou think’st of him.

சீஸர் சொல்வதுமாதிரியான ஆள்தான் காஸியஸ் என்றால், அவன் அப்படியொன்றும் பிழையான ஆளாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் எனக்கு..

தவறவிடக்கூடாத படம்.

June 13, 2006

மனோஷ் சியாமளன் - லேடி இன் த வாட்டர் - அமேசன்.காம் விளம்பரம்

மனோஜ் சியாமளனின் ‘Lady in the Water’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். அதே தலைப்பில் அவர், சிறுவர்களுக்கான கதைப்புத்தகம் ஒன்றை வெளியிட்டிருப்பது தெரியுமா? அமேசன்.காம் இணையத்தளத்தில் வாசகர்களுடன் மனோஜ் சியாமளன் உரையாடும் ஒளித்துண்டு இருக்கிறது. சுட்டி

நல்ல விளம்பர உத்திதான்! :)