May 2, 2006

The Bourne Supremacy (2004)

Robert Ludlum எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு Tony Gilroy திரைக்கதையமைத்த The Bourne Identity படத்தின் இரண்டாம் பாகம் The Bourne Supremacy. Matt Damon, Franka Potente (ரன் லோலா ரன்), Brian Cox, Julia Stiles, Joan Allen நடிக்க Paul Greengrass இயக்குகிறார்.

முதல் பாகமான The Bourne Identity’இல் கடற்கரையில் வந்து ஒதுங்கிய, சுயநினைவற்ற ஜேசன் போ(b)ர்ன் தனக்கு அம்னீஷியா என்றும், தன்னை யாரோ கொல்ல முனைகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டு இரண்டையும் சமாளிக்க முயற்சிக்கிறான். வழியில் காரில் வந்த Marieயை தடுத்து நிறுத்தி காரோடு கடத்துகிறான். படம் முழுக்க தம்மைத் துரத்துபவர்களிடம் இருந்து தப்பிக்கும் இந்த ஜோடி இரண்டாவது பாகத்தில் கோவா, இந்தியாவில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், அங்கும் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜேசன் போர்னைக் கொல்ல அங்கும் ஆள் வருகிறான். இந்தியாவின் சூழலுக்கு வித்தியாசமாக இருந்தமையால் கொஞ்சம் விழிப்புடன் இருந்த ஜேசன் போர்ன் அவனிடம் இருந்து தப்பித்தாலும், யார் அவர், ஏன் தன்னை இப்படி வேட்டையாடுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தேடி ஐரோப்பாவிற்கு வருகிறான். இத்தாலி, நெதர்லாந்து என்று எல்லா இடங்களில் அவனுடைய சொந்த கடவுச்சீட்டோடு பயணிக்கும் ஜேசன் போர்ன் ஜேர்மனியில் அதிகாரிகளால் தடுத்தி நிறுத்தப்படுகிறான்.

இதற்கிடையில் ஜேர்மனியில் நடந்த கொலையொன்றில் போர்னுடைய கைரேகை கிடைப்பதால் அவனை சி.ஐ.ஏ.வும் தேடுகிறது. கூடவே ரஷ்ய கொலையாளி ஒருவனும். எல்லோரிடமும் இருந்து தப்பித்து, தன்னை சி.ஐ.ஏ. தேடுவதற்கான காரண காரியங்களை ஆராய்கிறான் அவன். கூடவே அவனுக்கு அவ்வப்போது சுய நினைவுகள் வந்து வந்து போகின்றன. பேர்லினுக்கு இதுவரை வந்ததில்லை என்று கோப்புகள் சொன்னாலும், அவனுக்குப் பல இடங்கள் பரிச்சயமாக இருக்கின்றன. பல மொழிகளை சரளமாகப் பேசும் போர்ன் ஜேர்மனும் பேசுகிறான். தன்னைத் தேடும் சி.பி.ஐ.யை, அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் தன்னைத் தேடுவதற்கான காரணங்களையும் அறிகிறான். இதற்கிடையில் பேர்லின் அவனுக்கு ஏன் பரிச்சயமாக இருக்கிறது என்றதற்கான காரணமும் அவனுக்கு ஞாபகம் வந்துவிடுகிறது. இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, செக்கோஸ்லாவாக்கியா, ஜேர்மனி என்று சுத்திய ஜேசன் போர்ன் அங்கிருந்து ரஷ்யா செல்கிறான். அங்கே அவனை இந்தியாவில் கொல்ல முயன்ற கொலையாளியும் ரஷ்ய காவல்துறையும் துரத்துகிறது. ஜேர்மனியில் நடந்த கொலையை இவனே செய்திருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள். ஜேர்மனியிலும் காவல்துறையிடம் இருந்து லாவகமாக ஜேசன் போர்ன் தப்பிக்கும் காட்சிகள் மிக அருமையாக இருக்கின்றன. ரஷ்யாவில் தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு எல்லோர் கண்ணிலும் இருந்து விலகிக்கொள்கிறான் ஜேசன் போர்ன்.

ரோபர்ட் லட்லத்தின் நாவல்களிலேயே The Bourne Triology மிகச் சிறந்தது என்று பாராட்டுப்பெற்றது. The Bourne Identity பார்த்த போது, கதையில் நடக்கும் சம்பவங்கள் இல்லையே என்ற ஏமாற்றத்தில் அந்தப் படம் பெரிதும் என்னைக் கவரவில்லை. திரும்பவும் பார்த்தால் பிடிக்குமோ என்னவோ. The Bourne Supremacy ஆரம்பத்தில் இருந்தே வேகம் வேகம் படுவேகம். படத்தில் ஜேசன் போர்னாக நடிக்கும் மாட் டேமன் மொத்தப்படத்தில் ஏறக்குறைய பத்து நிமிடங்கள்தான் பேசி இருப்பார். The Bourne Supremacy படத்தின் திரைக்கதை எழுதிய Tony Gilroy ஆரம்பத்திலேயே மேட் டாமனிடம் அதிக வசனங்கள் இருக்காது என்று சொல்லிவிட்டாராம். அப்படியும் படத்தில் நடிக்கச் சம்மதித்த டேமன், தான் படத்தில் தொண்ணூறு சதவிகித நேரம் இருப்பதால் வேறு வழிகளில் தன்னிருப்பைக் காட்ட முயன்றிருப்பதாகச் சொல்கிறார். மாட் டேமன் அவருடைய முயற்சியில் வென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

லாவகமாக சிக்கல்களில் இருந்து தப்பித்தாலும், ஹீரோத்தனம் காட்டாமல் ஜேம்ஸ் பாண்ட் போல தம்மைப் பாவித்துக்கொள்ளாமை எல்லாம் ஜேசன் போர்னை சாதாரண மனிதனாகக் காட்டுகிறது. வாழ்வில் பலதை இழந்ததோடு ஞாபகங்களையும் தொலைத்த நிறையத் திறமை கொண்ட சாதாரண மனிதனாக ஜேசன் போர்னைத் தன் நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார் மாட் டேமன். ஜேசன் போர்னைத் தேடும் சி.ஐ.ஏ. அதிகாரியாக Joan Allen. மாட் டேமனுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் தன்னுடைய Screen Presence’ஆல் அசத்தும் Julia Styles, வசீகரிக்கும் ரஷ்ய கொலையாளியாக வரும் Karl Urban (LOTR - (future) King of Rohan) என்று எல்லோருமே தத்தம் வேலைகளைச் சரிவரச் செய்திருக்கின்றனர்.

படம் தொடக்கத்தில் இருந்தே வேகம் வேகம் படு வேகம் என்று சொல்லி இருந்தேனில்லையா. இந்தியாவில் தொடங்கும் கார் துரத்தல்கள், ஜேர்மனியில் போலீசாரிடமும் சி.ஐ.ஏ.விடமும் இருந்தும் புத்திசாலித்தனமாகத் தப்பிக்கும் பல காட்சிகள், ரஷ்யாவில் நடக்கும் நீண்ட நேர கார் துரத்தல்கள் என்று எல்லா நேரத்திலும் நாமும் கூடவே பயணிப்பது போல இருக்கிறது. அதுவும் படு வேகமாக நகரும் காட்சிகளும் ஒற்றைவரி வசனங்களும் படத்தில் மிகவும் ரசிக்ககூடியதாக இருக்கிறது. சமயத்தில், காமரா ஆடும் ஆட்டத்தினால் நமக்குத் தலைவலியே வந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னுமொரு விஷயம். ஒவ்வொரு நாட்டையும், இந்தியா, இத்தாலி, ஜேர்மனி, முக்கியமாக ரஷ்யா என்று எல்லா இடங்களையும் நாமும் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. அத்தனை நேர்த்தியாக ஒவ்வொரு ஊரையும் காட்டியிருக்கிறார்கள்.

எப்படியும் அடுத்து இன்னுமொரு படம் வரும் என்று எதிர்பார்க்கலாம். The Bourne Ultimatum.

[மரத்தடி குழுமத்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி எழுதியது - மதி]