C.R.A.Z.Y. (2005)
Christian. Raymond. Antoine. Zachary. Yvan.

AWESOME!
இதுவரை இப்படியொரு படம் பார்த்ததாக நினைவில்லை - எந்த மொழியிலும்! The best coming of age, coming out movie. ஆனால் அது மட்டுமல்ல பல கோணங்களில் பார்த்து இரசிக்க, சிந்திக்க வைக்கிறது.
ஜான்-மார்ர்க் வால்லே(Jean-Marc Vallee) இயக்கத்தில் Michel Cote, Marc-Andre Grondin, Danielle Proulx மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கியூபெக்கில் உருவான பிரெஞ்சு படம். 2005 ஆண்டு வெளியாகி வசூலில் இப்போதும் முன்னுக்கு நிற்கிறது. ஆஸ்கர் விருதுக்கு கனடா சார்பில் அனுப்பப் பட்ட படம்.

ஐந்து பையன்களில் நான்காவதாக Zachary Beaulieu. 1960ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று Zac பிறப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. பெடியன்களே நிறைந்த குடும்பத்தில் கொஞ்சம் வித்தியாசமானவனாக இருக்கும் Zacஇன் வாழ்க்கையைப்பற்றிப் பேசுகிறது. கூடவே அவனது குடும்பத்தினரைப்பற்றியும். கண்டிப்பு நிறைந்தவராக இருந்தாலும் மகன்களின் மேல் உயிரையே வைத்திருக்கும் தகப்பனார். நிறைந்த கடவுள் நம்பிக்கை கொண்ட தாயார். ஒவ்வொரு போக்கில் போகும் மகன்கள். மற்றவர்களிடம் இருந்து தான் ஏதோவொரு விதத்தில் வித்தியாசமானவன் என்பதைச் சிறுவயதிலேயே உணரும் Zac.

60இல் தொடங்கி 80கள் வரை உள்ளடக்கி இருக்கிறது படம். சிறுவனாக இருக்கும்போது உணரும் குழப்பங்கள் வளர வளர அதிகமாவதையும் அந்தக் குழப்பங்களை எப்படிக் கையாள்வது என்று Zacகோடு அவனது குடும்பத்தினரும் அவரவர் வழிகளில் குழம்புகிறார்கள். சமாளிக்கிறார்கள். ஒன்று சேர்கிறார்கள்.
இசை படத்தில் மிக மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. பல தருணங்களில் வசனங்களுக்கு தேவை வைக்காமல் பாடல்களே நமக்கு என்ன நடக்கிறது என்பதையோ, பேசப்படாமல் இருக்கும் விதயங்களின் தாக்கத்தையோ உணர வைக்கிறது. Patsy Clineஇன் அருமையான “Crazy.. I’m crazy for feelin’ so lonely” பாடலில் தொடங்கி Pink Floyd, Rolling Stones, Charles Aznavour முக்கியமாக David Bowie என்று அருமையாக பாடகர்களின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறைந்த அளவு முதலீட்டில் உருவான இந்தப் படத்தில் பாடல்களுக்கு மட்டும் ஏறக்குறைய அறுநூறாயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன.
பெரிய பெரிய கார்கள், மோட்டர் சைக்கிள்கள், திருட்டு சிகரெட்டுகள், போதைப்பொருட் பாவனை, சண்டை சச்சரவுகள், எத்தனை சண்டை சச்சரவுகள் வந்தாலும் இடையே ஊடாடும் நகைச்சுவையுணர்வு, அன்பு என்று பல விதயங்கள்..
எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தில் அசத்தியிருப்பது, திரும்பத்திரும்ப பார்க்க வைப்பது அப்பா Gervais Beaulieu ஆக நடித்திருக்கும் Michel Cote. கண்டிப்பு நிறைந்த, அதே சமயம் குடும்பம் மட்டுமே முக்கிய விதயமாகக் கருதும் பாத்திரத்தில் தன் ஒவ்வொரு சின்ன அசைவிலும் நம் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார். உதாரணமாக ஒரு காட்சியில் Zacஇன் மீது காமராவின் கவனமும் நம் கவனமும் குவிந்திருக்கையில் ஒரு சின்னப் பெருமூச்சு மூலம் பலப்பல விதயங்களைச் சொல்லி அவரைக் கவனிக்க வைத்து விடுகிறார். ஒரு பிராங்கோஃபோன்(francophone) தகப்பனாக நடித்திருக்கும் இவரில் நம் அப்பாக்களையும் காண முடிகிறது. கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும் உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றே என்பதை உணர்த்திவிடுகிறது.
கூர்மையான வசனங்கள். ஆங்கிலத்தில் அருமையாக மொழிபெயர்த்திருந்தாலும் பிரெஞ்சில் இன்னும் கூர்மையாக இருக்கின்றன. [பிரெஞ்சு வசனங்கள் முழுவதும் புரியவில்லை என்பதையும் நானும் ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடுதான் படம் பார்த்தேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.]

ஒரு ஓரினப்புணர்ச்சியாளன் தன் உணர்வுகளோடும் குடும்பத்தினரின், சமூகத்தின் உணர்வுகள்/எதிர்பார்ப்புகளோடும் போராடுவதை வேறெந்தப் படமும் இத்தனை சிறப்பாகச் சித்தரித்ததில்லை. கியூபெக்கில் உருவாகி வெளியான Mambo Italiano படத்தில் இத்தாலிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு ஓரினப்புணர்ச்சியாளனின் பிரச்சினைகளைச் சித்தரித்திருந்தாலும் இத்தனை ஆழமாக, உணர்வுகளோடு ஒன்றக்கூடியதாக அந்தப் படம் இருக்கவில்லை. இங்கே Zac ஓரினப்புணர்ச்சியாளனாகத்தான் இருந்திருக்க வேண்டியதில்லை. குடும்பத்தினரிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமானவனாக ஒருவன் இருந்தால் எப்படி உணர்வான், எம்மாதிரியான பிரச்சினைகள் அவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் வரும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளை எவ்வாறு உணர்வார்கள் என்றுகூட நாம் உருவகப் படுத்திப் பார்க்க முடியும்/முடிகிறது. அதனாலேயே Best coming of age என்ற கோணத்திலும் பார்க்க முடிகிறது.

இதில் இன்னொரு விதயமும் இருக்கிறது. கியூபெக் பிரெஞ்சு சமுதாயம்! இவர்களைப்பற்றி நீண்ட தொடரே எழுதலாம். இப்போதல்ல. இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதைக்குக் கொஞ்சமாக.. பொதுவாகப் பார்த்தால் கியூபெக் சமுதாயம் விவசாயச் சமுதாயம். கத்தோலிக்க விவசாயச் சமுதாயம். ஒவ்வொரு ஊரிலும் தேவாலயம் இருந்தது. பாதிரியார் சொல்லும் சொல்லுக்கு எதிர்க்குரல் இருந்ததில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் படிப்பு, பெண்களுக்காக கல்வி, பெண் சுதந்திரம் என்று மாறி இருக்கிறார்கள். அறுபதுகளில் நடந்த முக்கிய மாற்றம் கத்தோலிக்கப் பாதிரியார்களுக்கும் தேவாலயத்துக்கும் சமுதாயம் மீதிருந்த கட்டுப்பாடு குறைந்து போனமை. மொன்ரியலில் வீதிக்கு வீதி இருக்கும் தேவாலயங்கள் காலியாக இருப்பதுவும் பிற சமுதாயத்தினர் சில தேவாலயங்களை வாங்கியிருப்பதுவும், இன்னும் சில தேவாலயங்கள் சமூகக் காரியங்களுக்காகப் பயன்படுபவையாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதுவும் இம்மாற்றத்தின் அறிகுறிதான். இந்த மாற்றத்தை இந்தப் படத்திலும் நாம் பார்க்க முடிகிறது. தேவாலயத்துக்குத் தவறாது செல்லும் Beaulieu குடும்பத்தலைவர் ஓரிடத்தில் சொல்லும் வசனத்தின் ஆங்கில மொழியாக்கம்.
Gervais Beaulieu (தந்தை) : What did the priest say?
Laurianne Beaulieu (தாய்) : It’s a sin. Yes.
Gervais Beaulieu (தந்தை) : Sometimes i wonder why we pray to a long haired guy who hangs out with a bunch of guys in robes.
It’s fishy. Why are there no female priests, then?
They are starting ot get on my nerves.
Coming out, coming of age, கியூபெக் சமூக மாற்றம் இவற்றைத் தவிர இன்னொரு விதயமும் படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. Mythical லெவலுக்குப் படத்தைத் தூக்கியதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எல்லாம் கிறிஸ்மஸ் தினத்தன்று Zac பிறந்த விதயந்தான். மற்ற மகன்களிடமிருந்து Zac வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம் அவன் யேசு பிறந்த அன்று பிறந்தது காரணமாக இருக்குமோ என்று இறைநம்பிக்கை உள்ள Laurianne நினைக்கிறார். சிறு குழந்தைகளிடம் இவனுக்கு இருக்கும் பற்றும் அவரை அப்படி நினைக்க வைக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த, விசேட குணங்கள் கொண்டவர் என்று கருதும் பெண்மணியிடம் சிறுவயது Zacஐ அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண்மணியும் Zacஇற்கு குணமாக்கும் வல்லமை இருப்பதாகச் சொல்கிறார். அன்றிலிருந்து சுற்றத்தாரில் எவராவது காயப்பட்டால் முதல் தொலைபேசி அழைப்பு Zacஇற்கு வருகிறது. படத்தில் முக்கிய காட்சிகளில், அது யேசுவின் படம் சுவரில் தொங்கியபடி Zacஐப் பார்ப்பதாகட்டும், Zac ஜெரூசலேமிற்குச் சென்று தன்னை அறிந்துகொள்வதாக வருவதாகட்டும் இந்தக் கோணத்தை வலுவானதாக ஆக்குகிறது.
மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்.

மகன்களிடம் உயிரையே வைத்திருக்கும் ஒரு தகப்பனின் அன்பையும், அந்தத் தகப்பனுக்காக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப் போகும் மகனின் பாசத்தையும், மகன் மாற முடியாது என்றுணர்ந்து அவனை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தகப்பனுக்காகவும்..
பார்க்கவேண்டும்.



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (