History of Violence (2005)
John Wagnerஉம் Vince Lockeஉம் உருவாக்கிய கிராபிக் நாவலில்[கிராபிக் நாவல் என்றால் சித்திரக் கதை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். காமிக்ஸ் வடிவிலான ஆனால், அதைவிட நீளமான கதைவடிவம்.] இருந்து உருவாகிய படம்
டொம் ஸ்டோலாக நடித்திருப்பது வீக்கோ மோர்ட்டென்ஸென் (Viggo Mortensen). Lord of the Rings(Triology) படங்களில் நடித்ததால் கவனத்துக்குள்ளானவர் மோர்ட்டென்ஸென். அதுவரைக்கும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்ததில்லை. லோர்ட் ஓ·ப் த ரிங்க்ஸ் படங்களில் நடிப்புக்குப் பெரிதாக வேலையில்லாவிட்டாலும் பல இரசிகர்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. லோர்ட் ஓ·ப் த ரிங்க்ஸ் படத்துக்குப் பிறகு வந்த ஹிடால்கோ’வும் (2004) நடிப்புக்குத் தீனி போடவில்லை. ஆனாலும் என்னைப்போன்று பலர் மோர்ட்டென்ஸெனுக்காகவே ‘ஹிடால்கோ’ பார்த்தார்கள். மோர்ட்டென்ஸெனை இனிமேல் கதாநாயகனாகப் பல தரமான படங்களில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் விதைத்திருக்கிறது. அதுவும் க்ரோனென்பேர்க், மோர்ட்டென்ஸெனை இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக லொஸ் ஏஞ்சலஸ் சென்று பேசினாராம். இருவரும் அமெரிக்க அரசியல் தொடக்கம் பல விதயங்களைப்பேசியதாக ஒரு பேட்டியில் க்ரோனென்பேர்க் குறிப்பிடுகிறார். மோர்ட்டென்ஸெனும் படத்தில் செட்டில் வேலை செய்திருக்கிறாராம். டொம் ஸ்டோலாக நடிப்பதற்குமுன் அமெரிக்க மத்திய மாநிலங்களில் வசிப்பவர்கள்குறித்து அறிந்துகொள்ளச் சென்ற மோர்ட்டென்ஸென் படத்தில் பயன்படுத்தவென்று சில பொருட்களை வாங்கி வந்தாராம். அப்பொருட்களின் மூலமாக டொம் ஸ்டோலை அங்கே பார்ப்பதாக வீக்கோ மோர்ட்டென்ஸென் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் க்ரோனென்பேர்க்.
அமெரிக்க சிறுநகரவாசி வேடத்தில் கன கச்சிதமாகப் பொருந்தும் வீக்கோ மோர்ட்டென்ஸென் பல இடங்களில் கைதட்டல்களை வாங்கிப்போகிறார். கனவுகண்டு பயப்படும் மகளைத் தேற்றும் பாந்தமான தகப்பனாக, மகனிடம் தோழமையான தகப்பனாக, மனைவியிடம் சகலத்தையும் பகிர்ந்துகொள்ளும் சுவாரசியமான கணவனாகவும் தோன்றுகிறார் வீக்கோ மோர்ட்டென்ஸென். ஆள்மாறாட்டத்தால் என்னைத் தொடருகிறீர்கள் என்று சொல்லியும் கேளாமல் தொடரும் மா·பியா கும்பலால் பல்வேறு தொல்லைகளுக்கு டொம் ஸ்டோலின் குடும்பத்தினர் ஆளாகிறார்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் குடும்பத்தவரைப் பல்வேறு வழிகளில் பாதுகாக்க முயல்கிறார் டொம் ஸ்டோல். அந்தத் தருணங்களிலும், மா·பியாக்கும்பல் சொல்வது உண்மைதானோ என்று மனைவி சந்தேகிக்கும்போதும் அதற்குப்பிறகும் பல பரிமாணங்களில் பிரகாசிக்கிறார் வீக்கொ மோர்ட்டென்ஸென். ‘லோர்ட் ஓ·ப் த ரிங்க்ஸ்’ அரகோன்தானா என்று கொஞ்சம் யோசிக்கலாம். என்ன அப்படி யோசிப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு படம் ஓடும்போதோ படம் முடிந்தபிறகோ கிடைப்பதில்லை.
இதற்கு முழுக்காரணம் இயக்குநர் டேவிட் க்ரோனென்பேர்க் (David Cronenberg). இந்தக் கனேடிய இயக்குநர் எழுபதுகளில் தொடங்கி பல படங்களை இயக்கி இருந்தாலும் இதுவரை அமெரிக்காவில் எந்தப் படத்தையும் படமாக்கியதில்லை. இதுவரை இவர் இயக்கிய படங்களில் மூன்று படங்களே அமெரிக்காவில் நடப்பதுபோல எடுத்திருக்கிறார். அப்படங்களையெல்லாம் ஒன்டாரியோ மாநிலத்தில்தான் எடுத்திருக்கிறார். அமெரிக்க கிராமமாகக் காட்டப்படும் கனேடிய ஒண்டாரியோ மாநிலம் அழகாத்தான் இருக்கிறது.
வன்முறைக்காட்சிகளை, அதிரடிக்காட்சிகளை விரும்பும் என் போன்றவர்கள், அதன் மறுபக்கத்தப்பற்றி அதிகம் யோசித்ததில்லை. ஒருவனைச் சுட்டுக்கொன்றால், உடல் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட காயங்கள் எங்கேயெங்கே கிடைக்கும்? என்றெல்லாம் யோசித்திருக்கிறேனா என்று பார்த்தால், இல்லையென்றே சொல்வேன். ஹிஸ்டரி ஓ·ப் த வயலென்ஸ் படத்திலோ வன்முறைக்காட்சிகளுக்குப் பிறகு இருக்கும் காட்சிகள் ஓரிரு வினாடிகளாவது காட்டப்படுகின்றன. கஃபேயில் சுடப்பட்ட ஒருவனின் முகம் எப்படியிருக்கும் என்று காட்டும்போது, திரையரங்கே திகைத்துப்போகிறது. அதற்கடுத்த காட்சிகள் வரும்போது கண்ணை மூடிக்கொண்டு கைதட்டுவதோ விசிலடிப்பதோ இல்லை. அட, ஒழிந்தான் என்றுகூட சந்தோஷப்படுவதில்லை. வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம் என்று இன்னொரு படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்கும்போது, ‘ஹிஸ்டரி ஓ·ப் வயலென்ஸ்’ பட நினைவுகள் நிச்சயம் வரும். இதே படத்தின் வெற்றிகளில் ஒன்று என்று சொல்லலாம்.
படத்தில் வரும் அமைதியான காட்சிகள், படத்தில் வரும் கதாபாத்திரங்களையும் நம்மையும் எதிர்காலத்தைப்பற்றி யோசிக்க வைக்கின்றன. வருங்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் தூண்டுகிறது. வாழ்க்கையின் சுவாரசியமான/அசுவாரசியங்களைப் பற்றியும் யோசிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. விரிவாக இங்கே பேசலாம், ஆனால் படத்தைப் பார்த்தவர்களுடன் கதைத்தால் இன்னும் சுவாரசியமாக விரிவாகக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். மேலும், மேலே நான் சொன்னமாதிரி சிந்தனையைத் தூண்டும் ஆற்றல் எல்லா இயக்குநர்களிடமும் இருந்துவிடுவதில்லை. படத்தைப் பார்த்தபிறகு சில நாட்களாவது, அதன் பாதிப்பு நம்மிடையே இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, அம்மாதிரிப்படங்களையே ‘Classics’ என்று சொல்வேன். ஆரம்ப காலத்தில் பத்தோடு பதினொன்றாகக் கருதப்பட்ட டேவிட் க்ரோனென்பேர்க் இப்போது முதன்மை இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவ்வருட காஹ்ன் திரைப்பட விழாவிலும் ‘
இப்படத்தில் நடித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் Maria Bello, Ed Harris மற்றும் William Hurt. ஒவ்வொருவரின் நடிப்பையும் சிலாகித்து பத்தி பத்தியாக எழுதலாம். எழுதப்போனால் இப்பதிவே ஒரு நாவலாகிப்போகும் என்பதால் விட்டுவிடுகிறேன்.
ஆனாலும் வில்லியம் ஹர்ட்டிற்காகவேகூட இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதைச் சொல்லிப்போகிறேன்.
டேவிட் க்ரோனென்பேர்க்கின் Salon.com செவ்வி
க்ரோனென்பேர்க்கின் ‘ஹிஸ்டரி ஓ·ப் வயலென்ஸ்’ வீடியோ வலைப்பதிவு



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (