September 7, 2005

Monsieur Batignole (2002)

பிரெஞ்சு நடிகரும் இயக்குநருமான Gerard Jugnot இயக்கி நடித்திருக்கும் படம். இரண்டாம் உலகப்போரையொட்டிய காலகட்டம் பல திரைப்படங்களில் பல விதமாக அலசப்பட்டு இருக்கிறது. Saving Private Ryan, Schindler’s List தொடங்கி The Pianist, Life is Beautiful வரை பலதரப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. இனியும் வரலாம். Monsieur Batignole இப்படங்களில் இருந்து, முக்கியமாக Roberto Benigniயின் Life is Beautiful திரைப்படத்திலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கிறது.

மொசியோர் பாடிங்னோல், பாரிஸ் நகரத்தில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத இறைச்சிக் கடைக்காரர். வீட்டில் ‘மதுரை ஆட்சிதான்’. மனைவி சொல்லைத் தட்டாத ஆசாமி பாடிங்னோல். நாட்சிகளை ஆதரிக்கும், எழுத்தாளனென்று சொல்லிக்கொள்ளும் ஒருவனை மணமுடிக்க நினைக்கும் மகளும் இருக்கிறாள். பாடிங்னோலின் வீடு/கடைக்கு ஒட்டியபடி ஒரு யூத மருத்துவரின் வீடு இருக்கிறது. பெரும் பணக்காரர் அவர். பாடிங்னோல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல், தம் பிழைப்பைப் பார்த்துப் போகும் பிரெஞ்சுக்காரர்களில் ஒருவர். அவருடைய தம்பியார் ஊரில் இருந்து கள்ளமார்க்கெட்டில் வாங்கி அனுப்பும் இறைச்சிகளையே பாடிங்னோல் விற்று வந்தார். பாடிங்னோலின் கடையில் இருந்து தினமும் இறைச்சி காணாமல் போய்க்கொண்டே இருந்தது. கடைக்குக் கீழே இருக்கும் ஸ்டோர் ரூம் கதவு தெருவிற்குக் கீழே இருந்தாலும், ஒரு ஜன்னல் நிலமட்டத்தில் இருக்கிறதென்பதையும், யாரும் கவனிக்காத பொழுதுகளில் சிறுவர்கள், உள்நுழைந்து திருடலாம் என்பதையும் பாடிங்னோல் அவதானிக்க மறந்துவிட்டார். வீட்டார், பக்கத்துவிட்டு யூத சிறுவனே திருடுகிறான் என்று சொன்னதை நம்புகிறார். பாரிசினுள் ஹிட்லரின் நாட்சிப் படைகள் உள்நுழைந்து அதிகாரம் செய்யத் தொடங்கிய காலம் அது. அதையுணர்ந்து கையில் முடிந்த அளவு உடமைகளை எடுத்துக்கொண்டு பல யூதர்கள் தப்பித்தனர். அவர்களைப் போல் தப்பிக்க, பக்கத்துவிட்டு யூத மருத்துவரின் குடும்பத்தினர் தயாராகியிருந்தனர். தருணம் அறியாமல், தமது குற்றச்சாட்டோடு பாடிங்னோல் வர, அவர்களால் தப்பிக்க முடியாமல் போகிறது. அவர்களுடைய மகன் மட்டும் தப்பிக்கிறான்.

அதற்கிடையில், பாடிங்னோலின் மருமகனாக வர இருப்பவனின் தூண்டுதல்/உதவியோடு பக்கத்துவீட்டில் குடியேறுகிறார் பாடிங்னோல். குடும்பத்தினரின் சொல்லுக்குப் பணிந்து, கெஸ்டபோ’வினர்களுக்கு உணவும் அளிக்கிறார். புதிய வீட்டிற்குப் போய் சில நாட்கள் கழித்து, கெஸ்டபோவிற்கு ஒரு விருந்தும் கொடுக்கிறார்கள். பேர்ன்ஸ்டைன் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த மகன் போவதற்கு இடம் இல்லாமல், வீடு திரும்புகிறான். அவனைக் கண்டு திகைத்துப் போன பாடிங்னோல், அவனால் தமக்கு வரப்போகும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக அவனை ஒளித்து வைக்கிறார். படுசூட்டிகையான அந்தப் பையனும் பாடிங்னோலை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்கிறான். அவனை வேறெங்காவது அனுப்பும் பாடிங்னோலின் முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. கூடவே இன்னும் இரண்டு சிறுமிகள் சேர்ந்துகொண்டதுதான் மிச்சம்.

வம்புதும்புகளில் மாட்டிக்கொள்ளாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் பாடிங்னோலுக்கும் அவர் வீட்டில் ஒளிந்திருக்கும் யூதக்குழந்தைகளுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக பாடிங்னோல் தோற்கிறார். உடனே, பெரிய தியாகி என்றெல்லாம் யோசிக்காதீர்கள் கெஸ்டபோவிடம் பிடிபடுதற்கு முன்னர் பேர்ன்ஸ்டைன் மறைத்து வைத்த ஓவியத்தை விற்று, அதில் கொஞ்சப் பணத்தை அக்குழந்தைகளை ஸ்விஸ்ஸில் கொண்டுபோய் விடுதற்கு செலவிடுகிறார். அது வேலை செய்யாமல் போய் விடுகிறது. அக்குழந்தைகள் தம்மோடு இருந்தால் வரப்போகும் ஆபத்தை நினைத்துப் பார்க்கிறார் பாடிங்னோல். பிரான்ஸ் நாட்டு எல்லையில் கொண்டு போய் சேர்த்துவிட்டு, அங்கிருந்து ஒரு வழி கண்டு பிடிக்கலாம் என்று குழந்தைகளுடன் பயணப்படுகிறார் பாடிங்னோல். இடையில் ஒரு கிராமத்தில் பேர்ன்ஸ்டைனின் மகன் போலீசாரிடம் பிடிபட, அவனையும் காப்பாற்றுகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக, மிகவும் மெதுவாகத்தான் பாடிங்னோலின் மனம் நெகிழ்கிறது. யதார்த்தத்துக்கு அருகில் வரும் பாத்திரப்படைப்பு. கடைசியில் வரும் காட்சியும் நம்பக்கூடியமாதிரித்தான் இருக்கிறது. நாட்சிப் படையினர் பிரான்சிற்குள் நுழைந்தபோது, உயிருக்கு அஞ்சியும், வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் பிரெஞ்சு மக்கள், ஜெர்மன் படையினரோடு ஒத்துழைத்தார்கள் என்பதையும் ஒளிவு மறைவில்லாமல், அதே நேரம் அவர்கள் செய்தது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல் யதார்த்தமாக சித்தரித்திருக்கிறார்கள். இந்த யதார்த்தச் சித்தரிப்பு படமெங்கும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் 2002 வெளியாகிய இப்படம் பிரெஞ்சு பேசுபவரிடையே சக்கைபோடு போட்டதென்று நினைக்கிறேன்.

[மரத்தடி குழுமத்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி எழுதியது - மதி]