January 16, 2004

Amistad (1997)

amistad1.jpg

இன்னிக்கு பேசப்போற படம் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் இயக்கத்தில் வந்த அமிஸ்டாட். அமெரிக்க வரலாற்று சம்பவம் ஒன்றை படமாக்கி இருக்கிறார் ஸ்பீல்பேர்க்.

கதைச்சுருக்கம்:

1989ம் ஆண்டு கியூபாவிற்கு அருகில் ‘La Amistad’ - தோழமை என்ற கப்பல் வந்து கொண்டிருந்தது. கப்பலில் ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட அடிமைகள். அமெரிக்காவிற்கு விற்பதற்காக கொண்டுவரப்படுகிறார்கள். கப்பலின் சொந்தக்காரி ஸ்பெயின் நாட்டு ராணி இசபெல்லா. ஒரு நாள் திடீரென்று ஆப்பிரிக்க அடிமைகள் சின்கே ‘Cinque’ (ஆப்பிரிக்க பெயர் - Sengbe Pieh) தலைமையில் கப்பலைக்கைப்பற்றுகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்காவிற்கு போக வழி தெரியாமல், உயிர் பிழைத்திருக்கும் மாலுமிகளை நம்ப வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிற்கு திரும்பிச்சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருதவர்களின் நம்பிக்கையில் மண். கனெக்டிக்கட்டிற்கு அருகில் கப்பல் வந்து நிற்கிறது. ஆப்பிரிக்கர்களும் பிடி படுகின்றனர். மொழி தெரியாத ஊரில் சிறையில் கிடக்கும் இவர்கள், யாருக்கு சொந்தம் என்று வழக்கு நடக்கிறது. அமெரிக்க அரசாங்க வக்கீல், கப்பலைப் பிடித்த கடற்படைத் தளபதி, ஸ்பானிஷ் அரசு, கப்பல் மாலுமி இருவர் என்று பலரும் அந்த நாப்பத்திநாலு ஆப்பிரிக்கர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் அந்த நேரத்தில் அமெரிக்காவின் பிரசிடெண்டாக இருந்து தேர்தலுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் Martin Van Buren(8th President of USA) ஆரம்பத்தில் இந்த வழக்கில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அதே போல ஆர்வம் காட்டாத, ஆனால் என்ன நடக்கிறது என்று பத்திரிகைகளில் படிக்கும் நபர் John Quincy Adams (6th President of USA. இவருடைய தந்தைதான் USAஇன் இரண்டாவது ஜனாதிபதி ஜான் ஆடம்ஸ்) ஆரம்பத்தில் மற்றவர்களுக்கு சார்பாக முடிந்து விடும் என்று நினைத்த வழக்கு ஆப்பிரிக்கர்கள் பக்கம் சார்பாக முடிகிறது. ஆனால் அதற்குமுன் நடந்த போராட்டங்களும், மொழி தெரியாத ஆப்பிரிக்கர்களுடன் அவர்கள் தரப்பு வக்கீல் பேச போராடுவதும், அதிர்ஷ்ட வசமாக அவர்களின் ‘மெண்டி’ மொழி பேசும் ஒருவனை கனெக்டிகட்டில் கண்டு பிடித்து அவன் வாயிலாக ஆப்பிரிக்கர்களின் கதையை அறிவதும்தான் படத்தின் முக்கிய பாகங்கள்.

amistad.gif

நடிகர்கள்:

சின்கேவாக நடித்து நம்மையெல்லாம் படத்தில் ஒன்றிப்போக செய்திருப்பது Djimon Hounsou. கிளாடியேட்டர் படத்தில் ரஸ்ஸல் குரோ பாத்திரத்தின் கறுப்பு நண்பனாக வருவாரே அவர்தான். சிறையில் கிடக்கும் இவர்களுக்காக பாடும் கிறிஸ்தவர்களை திறமையில்லாத எண்டர்டெயினர்ஸ் என்று சொல்லும்போதாகட்டும், அமிஸ்டாட் கப்பலைக்கைப்பற்றும்போதாகட்டும், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது நடந்து கொள்ளும் விதத்திலாகட்டும் - அசத்தி இருக்கிறார் ஹ¥ன்சோ. ஜான் குவின்சி ஆடம்ஸ் பாத்திரத்தில் நடித்திருப்பது ஆந்தனி காப்கின்ஸ். தோற்றப்பொருத்தம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் சார்பில் முதலில் வாதாடும் வக்கீலாக மாத்தியூ மாக்கௌனே. முன்னாள் அடிமையும் இந்நாள் வரலாற்று ஆசிரியருமாக வருவது மார்கன் ·ப்ரீமான்.

படத்தின் சிறப்பம்சம்:

ஏனைய சில படங்களைப்போல அன்றி ஆப்பிரிக்கர்களின் கதையை அவர்களின் பார்வையிலேயே சொல்ல முயற்சித்திருப்பது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது ஹ¥ன்சோ மொழிபெயர்ப்பாளன் உதவியோடு கதை சொல்லும்போது ஒன்றிப்போகிறோம். சாதாரணவகைப்படமாக போயிருக்க வேண்டிய படத்தை நிலை நிறுத்துவது ஹ¥ன்சோவின் கதைதான். அதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் விஷயங்கள் பலப்பல. ஆப்பிரிக்கர்களை அவர்களின் tribeகளை சார்ந்தவர்களே உட்பகை காரணமாகவும், பணம், பொருள் மேல் ஆசைப்பட்டும் பிடித்துக்கொடுப்பதை பார்க்கிறோம். அதோடு ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு வந்தடைவதற்குள் அவர்கள் படும்பாடு நம்மை பதைபதைக்க வைக்கிறது.

ஜான் குவின்சி ஆடம்ஸ் படத்தின் பிற்பகுதியில் வழக்காடுமன்றத்தில் நடத்தும் உரை. ஏறக்குறைய 10 நிமிடங்கள் விடாமல் பேசும் இந்த உரைக்காகவே (இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு) படத்தைப்பார்க்கலாம்.

வரலாற்றாளர்கள் உதவியோடு கதை பின்னி இருக்கிறார் ஸ்பீல்பேர்க். அதோடு ஆப்பிரிக்கர்களாக நடிக்க அமெரிக்க நடிகர்களை தேர்ந்தெடுக்காமல் ஆப்பிரிக்கர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

குறைகள்:

படத்திற்காக சிரமப்பட்ட ஸ்பீல்பேர்க் வக்கீல் பாத்திரத்தில் நடிப்பதற்கும் நல்லதொரு நடிகரை தேர்தெடுத்திருக்கலாம். அதே போல மார்கன் ·பிரீமான் பாத்திரத்தை கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம் என்று நினைப்பதை தடுக்க முடியவில்லை. இந்தப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஸ்பீல்பேர்க்கின் ஷிண்ட்லரை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்தப்படம் போல இது அழுத்தமாக இல்லை என்றே நினைக்கிறேன்.

படத்தில் ஒரு கட்டத்தில் ஜான் குவின்சி ஆடம்ஸ் மார்கன் ·ப்ரீமானிடம் ‘What is their story? You have proved that they are from Africa. But what is their story? For example. Take you. You are a former slave, who is now a historian. You must have faced trials and tribulations on the way. That is your story. But, what about their story?” என்று கேட்பார். அதைத்தான் நாமும் கேட்கிறோம். வழக்கு விசாரணைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அந்த ஆப்பிரிக்க மனிதர்களுக்கும் கொடுத்திருக்கலாம். ஸ்பீல்பேர்க் கொடுத்திருக்கிறார்தான். ஆனால் போதாது என்று நினைக்கிறேன். சில வேளை சரித்திர பூர்வமான உண்மைச்சம்பவங்கள் கிடைக்கவில்லையோ என்னவோ.

தவற விடக்கூடாத வரலாற்றுப்படம்!

அன்புடன்,
மதி

பின்குறிப்பு: நீங்கள் அனைவரும் இந்தப்படத்தை அவசியம் பார்க்கவேண்டும் என்ற காரணத்தால், இந்தப்படத்தின் கதையை நான் விரிவாக சொல்லவில்லை.