December 28, 2003

The Last Samurai

samurai.jpg

1870களில் இலக்கில்லாமல் திரிந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் படைவீரனொருவன் merceneryஆக ஜப்பான் செல்கிறான். மாதம் ஐந்நூறு டாலருக்கு ஜப்பானியப் படைவீரர்களை மேற்கத்தைய முறையில் போருக்குத் தயார்செய்வதுதான் அவனுடைய வேலை. கூட செல்வது அவனுடைய கர்னல். ஜப்பானை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜப்பானிய பேரரசரின் படைகளையே இவர்கள் பயிற்றுவிக்கப்போகிறார்கள். விவசாயிகளும், சண்டை என்றால் என்னவென்று அறியாதவர்களும் நிறைந்த படையைப் பயிற்றுவிக்க மிகவும் சிரமப்படுகிறான் அந்த அமெரிக்கப்படை வீரன், நேதன் ஆல்கிரென் (Nathan Algren)

பேரரசரின் திட்டங்களுக்கு குறுக்கே நிற்பது அவரது சாமுராய்களில் ஒருவரும், அவரின் ஆசிரியருமான காட்சுமோட்டோ (Katsumoto). படைவீரர்கள் போருக்கு இன்னமும் தயாராகவில்லை என்று நேதன் ஆல்கிரென் சொல்லச்சொல்லக் கேளாமல், கர்னல் பாக்லி யுத்தத்துக்கு செல்கிறார். அங்கே காட்சுமோட்டோவின் சாமுராய் வீரர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் பேரரசரின் படைகள் சின்னாபின்னப்படுகிறார்கள். பல சாமுராய் வீரர்களுடன் பலத்த காயங்களோடும் போராடிக்கொண்டிருந்த நேதன் ஆல்கிரெனை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் காட்சுமோட்டோ. சாமுராய்கள் காட்டுமிராண்டிகள், நாகரீகம் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆல்கிரெனின் எண்ணம் மாறுகிறது. அமெரிக்காவில் சிவப்பிந்தியப் பெண்களையும் குழந்தைகளையும் போர் என்ற பெயரில் கொலை செய்தபிறகு, தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த ஆல்கிரென், காட்சுமோட்டோவுடன் தங்கியிருந்தபோதுதான் நிம்மதியாக ஒரு இரவையாவது கழிக்க முடிந்திருக்கிறது என்று சொல்கிறான். ஜப்பானிய கலாச்சாரம், சாமுராய்க்களின் பழக்க வழக்கங்கள், போர்முறைகள் என்று ஆல்கிரென் கற்றுக்கொள்ள மேற்கத்தியர் பற்றித் தெரிந்துகொள்ள காட்சுமோட்டோ ஆர்வம் காட்டுகிறார். அவ்வப்போது தத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

சாமுராய்கள் தோற்கடிக்கப்பட்டதும் தங்கள் உயிர்களைப் போக்கிக்கொள்வது ஆல்கிரெனுக்கு புதிரான விஷயமாக இருக்கிறது. இதற்கிடையில், காட்சுமோட்டோவின் உயிரை எச்சரிக்கையாக இருந்தபடியால் ஆல்கிரென் காப்பாற்றுகிறான். பேரரசர் தோக்கியோ வரை பாதுகாப்பாக செல்வதற்கு வழி அமைத்திருப்பதாக காட்சுமோட்டொ சொல்லி அனைவரும் புறப்படுகின்றனர். அங்கே போனபிறகுதான் நிலமையின் தீவிரம் ஆல்கிரெனுக்குப் புரிகிறது. பேரரசர், எடுப்பார்கைப்பிள்ளையாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதும். அவரை வழிநடத்துவதாகச் சொல்லி பழம்பெருமை வாய்ந்த ஜப்பானிய நாகரீகத்தை ஒதுக்கிவிட்டு மேற்கத்திய நாகரீகத்துக்கு வழிவிட்டுக்கொண்டிருப்பதும், மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் தத்தம் நாடுகளுக்கு வருமானம் ஈட்டுவதற்காக தோக்கியோவில் கூடியிருப்பதையும் காட்சுமோட்டோ காண்கிறார். ஆசிரியரான காட்சுமோட்டொ, பேரரசரிடம் ஜப்பானிய பழம்பெரும் நாகரீகத்தைப்பற்றிப்பேசி, அதைக்கைவிட வேண்டாம் என்று வேண்ட, பேரரசர் தான் என்ன செய்யவேண்டுமென்று ஆசிரியராக வழிகாட்டுமாறும் கேட்கிறார். (எனக்கென்னமோ தன்னைக்கடவுள் என்று கொண்டாடும் நாட்டின் பேரரசர், எத்தனை வயதில் குறைந்தவராக இருந்தாலும் கேட்டிருப்பார்/பேசியிருப்பார் என்று தோன்றவில்லை.) பேரரசர் முன்பு மண்டியிட்டமர்ந்து கடவுள் போன்ற பேரரசருக்குத் தான் வழிகாட்டலாமா என்று கேட்கிறார் காட்சுமோட்டோ.

அடுத்த நாள் நடக்கும் கலந்தாலோசனைக்கூட்டத்தில் ஜப்பானிய உடையோடும் உடை வாளோடும் வந்த காட்சுமோட்டோவுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பேரரசர் சொன்னால், வாளை அணியமாட்டேன் என்று காட்சுமோட்டோ சொல்ல, பேரரசரோ ஒன்றும் சொல்லாமல் மௌனம் காக்கிறார். காவலாளிகளால் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சுமோட்டோ வீர மரணம் எய்துவதற்காக கத்தியன்றையும் வைத்துச் செல்கிறார்கள். தன் இருப்பிடத்துக்குச் சென்று அமெரிக்கா திரும்பும் ஏற்பாடுகளைக் கவனிக்கும் ஆல்கிரென், ஏதோ தோன்ற காட்சுமோட்டோவின் இருப்பிடம் தேடிச் செல்கிறான். வழியில் தடுப்பவர்களை கொன்று தீர்க்கிறான். காட்சுமோட்டொ, தன் உயிரை எடுத்துக்கொள்ளாமல், தப்பிப்போவதே சிறந்தது என்று சொல்லும் ஆல்கிரெனுடன் காட்சுமோட்டோவுடன் வந்தவர்களும் இணைந்து தப்பிக்கிறார்கள்.

முன்பு தங்கியிருந்த மலைப்பிரதேசக் கிராமத்திற்குத் திரும்பி வரும் இவர்கள், போருக்கு ஆயத்தம் செய்கிறார்கள். பேரரசரின் இரண்டாயிரம் போர்வீரர்களை ஐநூறு சாமுராய் வீரர்களுடன் ஜெயிப்பதற்கு திட்டங்கள் தீட்டுகிறார்கள். இடையிடையே தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளாமல், அடுத்த போரிற்குத்தயார் செய்யவேண்டும் என்றெல்லாம் ஆல்கிரென் சொல்கிறான்.

கடைசிப்போரும் நடக்கிறது. பேரரசரின் படைகளை சேதப்படுத்தினாலும், காட்சுமோட்டோவின் வீரர்களும் பலர் இறந்துவிடுகின்றனர். ஏறக்குறைய முப்பது வீரர்களே பாக்கியிருக்கும்போது துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நிறைந்த பேரரசர் படையினை எதிர்நோக்கி 100% சாவை எதிர்ப்பார்த்து, நடப்பது என்னவென்று தெரிந்துகொண்டே காட்சுமோட்டோவும், ஆல்கிரெனும், சாமுராய்களும் போகின்றனர். எதிர்ப்பார்த்தபடியே நார்நாராகக் கிழிபடுகின்றனர். சாமுராய் வீரர்களின் வீரத்தைக்கண்ட ஜப்பானிய காப்டன் சுடுவதை நிறுத்தச் சொல்கிறான். அதற்குள் ஆல்கிரெனும் காட்சுமோட்டோவுமே எஞ்சுகின்றனர். காட்சுமோட்டோ கத்தியைத் தருமாறு கேட்க எடுத்துக்கொடுக்கும் ஆல்கிரென் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறக்கும் காட்சுமோட்டோவை ஆரத்தழுவுகிறான்.

தோக்கியோவில், இன்னுமொரு மேற்கத்திய நாட்டுத்தூதுவரோடு உடன்படிக்கை ஒப்பந்தம் முடிவு செய்யும் நிலையில் ஆல்கிரென் உள் நுழைகிறான். காட்சுமோட்டோவின் மாணவனான பேரரசருக்கு காட்சுமோட்டோ தன் இறப்பின் மூலம் பழமையான ஜப்பானிய கலாச்சாரமே சிறந்தது, மக்களுக்கு ஏற்றது என்று சொல்கிறார். இதை ஆல்கிரென் பேரரசரிடன், தான் தூக்கிவந்திருக்கும் காட்சுமோட்டோவின் வாளை வைத்துக்கொண்டு சொல்லாமல் சொல்கிறான். உடன்படிக்கையை நிறுத்திய பேரரசர், தனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த, சுயநலமாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஆலோசகரை நீக்குகிறார்.

பிறகு, அமெரிக்கரான ஆல்கிரெனிடம் தன் ஆசிரியர் எப்படி இறந்தார் என்று கேட்க ஆல்கிரெனோ ‘காட்சுமோட்டோ எப்படி வாழ்ந்தார் என்று சொல்கிறேன்’ என்று சொல்கிறார்.

Last Samurai (2003)

lastsamuraititle.jpg

Tom Cruise, Ben Watanabe, Masato Harada, Schichinosuke Nakamura, Koyuki, Billy Connolly ஆகியோர் Edward Zwick இயக்கத்தில் நடித்திருக்கின்றனர்.

கதாநாயகனை விட மற்றவர்களெல்லாரும் அற்புதமாக வாழ்ந்து காட்டியிருக்கும் படம். நியூசீலாந்து 19ம் நூற்றாண்டு ஜப்பானிய மலைப்பிரதேசக் கிராமமாக மிளிர்கிறது. Glory, Courage under fire, The siege படங்களை இயக்கி, பல படங்களை உருவாக்கிய
Edward Zwick நன்றாக இயக்கியிருக்கிறார். அருமையான இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத்தில் டாம் குரூஸைத் தவிர நெருஞ்சி முள்ளாய் நெருடும் இன்னொரு விஷயம் இருக்கிறது.

பண்டை நாகரீகமான ஜப்பானிய நாகரீகத்தின் பெருமையை ஜப்பானியர்களுக்கு மேற்கத்தியர் வந்து சொல்லித்தான் தெரியவேண்டுமா? இந்தப்படம் பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதும், ஜெயிக்கமுடியாத சூழலில் இருந்து விலகி, பிறகு பார்த்துக்கொள்வது பற்றியும் ஆல்கிரெனாக நடிக்கும் டாம் குரூஸ் பலமுறை சொல்லியும் படத்தின் கடைசிக்காட்சி எப்படி வந்தது/நடந்தது என்று புரிந்துகொள்ளமுடியவில்லை.

Update: Ken Watanabe won best supporting actor Oscar.

ken_watanabe5.jpg

December 9, 2003

Master and Commander: Far side of the world (2003)

masterandcommander.jpg

Peter Weir இயக்கத்தில் Russell Crowe, Paul Bettany மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Master and Commander: Fas side of the World திரைப்படத்தை ஒரு நல்ல சிறுகதையோடு ஒப்பிடலாமா? இப்போதெல்லாம் சிறுகதைகள், ஒரு ஆரம்பம், முடிவு நடுவில் கதை என்று இருப்பதில்லை. மாறாக, ஒரு நிகழ்வைச் சொல்லிச்செல்கிறது என்று படித்திருக்கிறேன். நான் படித்த சில சிறுகதைகளில் உணர்ந்தும் இருக்கிறேன்.

அதுபோலவே, இத்திரைப்படத்திலும் ஆரம்பம், முடிவு என்றில்லாமல், திடீரென்று தொடங்குகிறது. சில சமயம் Patrick O’ Brian எழுதியிருக்கும் இருபது சொச்சம் நாவல்களைப்படித்திருந்தால், இப்படி சொல்லியிருக்கமாட்டேன். Patrick O’ Brian, நெப்போலியன் காலத்தில் ஆங்கில கடற்படையில் இருந்த Jack Aubrey என்ற கப்பல் காப்டனைத் கதாநாயகனாகக்கொண்டு எழுதிய புத்தகங்களே இந்தத் திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன். முதலாம் புத்தகத்திலிருந்து கொஞ்சமும், மீதியை ஓ’ பிரையனின் பத்தாவது புத்தகமான ‘Far side of the World’இலிருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர் Peter Weir.

கப்பலில் தொடங்கும் கதை, தரைக்கு எப்போதாவதுதான் வருகிறது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இரண்டு தடவைதான் வருகிறது. இரண்டு தரமும் Gallapagos தீவுகளுக்கே வருகிறது. பெண்களே இல்லை படத்தில். (அப்படியும் சொல்லமுடியாது. ஓரிடத்தில் ஒரு பெண்ணை காப்டன் ஓbப்ரே சைட் அடிக்கிறார். :) )

பிரபுக்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் தலைமைப்பதவிகளிலும், சாதாரணர்கள் தொழிலாளிகளாகவும் இருக்க காப்டன் ஓப்ரே HMS Surprise என்ற கப்பலில் பயணப்படுகிறார். கூடவே நண்பர் டாக்டர். ஸ்டீபன் மடூரின் (Paul Bettany - Beautiful Mind). இரவு நேரத்தில் அமைதியாக மிதந்துகொண்டிருக்கும் கப்பலில் தூங்காமல் சிலர் கண்காணிப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் எதையோ பார்த்ததாக ஒருவன் நினைத்து காப்டனைக்கூப்பிட, ஒன்றுமில்லை என்று மற்றவர்கள் சொல்ல, தூரத்தில் ஏதோ பளிச்சிட்டு மறைய, காப்டன் ஓப்ரே அனைவரையும் உடனே கீழே படுக்குமாறு சொல்கிறார். வந்து விழும் குண்டை வீசியது ஒரு பிரெஞ்சுக் கப்பல் என்று அறிந்துகொள்ளும் காப்டன் ஓப்ரே, அந்த பிரெஞ்சுக் கப்பலை பழிவாங்க விரட்டுவதும் அதற்குப்பிறகு நடப்பதுவுந்தான் படம்.

master.jpg

இப்போது வரும் படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, அப்பட்டமாகத்தெரிவது கிராபிக்ஸ் காட்சிகள். ஷங்கர் படம் மட்டுமல்ல. ஹாலிவூட் படங்களிலும். அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டமான காட்சிகள் இல்லாமல் அமைதியாகச் செல்கிறது ‘மாஸ்டர் அண்ட் கமாண்டர்’. இப்படத்தை இயக்குமாறு அணுகியபோதே பல நிபந்தனைகளை வைத்து, அவையெல்லாம் ஒப்புக்கொள்ளப் பட்டபிறகே உள்ளே நுழைந்திருக்கிறார், பீட்டர் வெய்ர். திரைக்கதை, சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு அவர் அணுகியது இன்னொரு ஆஸ்திரேலியரை. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை படைத்த ரஸ்ஸல் குரோவை. குரோவைப் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களும் நன்றாக நடிக்கிறார் என்று சொல்லும்படியான திறமை அவரிடம் இருப்பதை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

ரஸ்ஸல் குரோ, பால் பெத்தானியோடு, இப்படத்தில் நடித்த எல்லோரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செய்தார்கள் என்றுதான் சொல்வேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட கப்பலில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை கிட்ட இருந்து பார்த்துப் பயணித்த உணர்வு முடிவில் நமக்குக்கிட்டுகிறது. கப்பலில் மேல்தளத்தில், கீழ்தளத்தில் என்ன நடக்கிறது, சூறாவளி வரும்போது என்ன செய்வார்கள், இரு வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒருவரையருவர் நம்பி இருக்கிறார்கள், நடுக்கடலில் சண்டை என்று வரும்போது என்ன செய்கிறார்கள் என்று எல்லாவற்றையும் நுணுக்கமாகப் படமாக்கியிருக்கிறார், பீட்டர் வெய்ர்.

சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

பி.கு.1 : இந்தக்கதை நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டிருந்தன என்பதை படத்தில் எங்குமே காணோம். Looks as if it’s been forgotten conveniently.

பி.கு.2 : காப்டன் ஓப்ரே, பிரெஞ்சுக்காரர்களைப்பற்றிச் சொல்லும் சில வசனங்கள், நமது புஷ்ஷிற்கு மிகவும் உவப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ;)