Deep End (2001)
Scott McGehee, டேவிட் சீகல் இயக்கத்தில் டில்டா ஸ்வின்டன்(Tilda Swinton), கோரன் விஸ்ன்ஜிக்(Goran Visnjic), ஜோனதன் டக்கர்(Jonathan Tucker), பீட்டர் டோனாட்(Peter Donat), ஜோஷ் லூகாஸ்(Josh Lucas) நடித்திருக்கிறார்கள்.

கலிபோர்னியாவில் லேக் டாஹோவில் வாழும் குடும்பத்தைப்பற்றிய கதை இது. நேவியில் பணிபுரியும் தகப்பன், நோயாளியான மாமனார், மூன்று பிள்ளைகள் (மகன், மகள், மகன்) இவர்களையெல்லாம் பார்த்துக்கொள்ளும் தாய் மார்கரெட். பணத்துக்கு குறைவில்லாத இவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று யோசிக்குமுன்னரே, மார்கரெட் லேக் டாஹோவிலிருந்து பக்கத்தில் இருக்கும் நெவேடா மாநில நகரம் ரெனோவிற்கு போகிறாள். அங்கே ‘டீப் எண்ட்’ என்ற சூதாட்ட விடுதியில் அவளுடைய பதினேழு வயது மகனின் காதலனை சந்திக்கிறாள். முதல்பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடும் அவன், மார்கரெட்டிடம் அவளுடைய மகனை விட்டுவிலகுவதற்கு பணம் கேட்கிறான். இதற்கு முன்னர் ஒருமுறை கார்விபத்தில் குடிபோதையில் இருந்த இவனும் மார்கரெட்டின் மகன் பூ (Beau)வும் சிக்கியதால், அவனைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்த மார்கரெட் மறுத்துவிடுகிறாள்.
கல்லூரிகளில் அனுமதி வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கும் மகனிடம், அவனுடைய காதலனைப்பற்றி லேசாகப்பேச முயலுகிறாள். பூவோ இவளிடம் எதையும் பேசத்தயாராக இல்லை. ஆனாலும், அவனுடைய காதலன் தன்னிடம் பணம் கேட்டதை சொல்லிவிடுகிறாள். இவர்கள் இவ்வாறு முயற்சித்துக்கொண்டிருக்கும்போதே நேவியில் பணிபுரியும் கணவனிடம் இருந்து தொலைபேசி வருகிறது. மார்கரெட் அவரிடம் எதையும் சொல்லாமல் மறைக்கும்போதுதான் நமக்கு இந்தக்குடும்ப நபர்கள் ஒருவரிடம் மற்றவர் வெளிப்படையாக பேசுவதில்லையோ என்று யோசிக்கவைக்கிறது.
அன்றிரவு பூவைப்பார்க்க வரும் காதலனிடம் பணவிவகாரம் பற்றி விசாரிக்கிறான் பூ. மார்கரெட் சொன்னது உண்மையென்று தெரியவரும்போது பூவினால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பூ, வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அவனைத் தொடரமுயலும் காதலனோ எதிர்பாராத விதமாக சில மரப்பலகைகள் உடைந்து, ஏரியில் விழுகிறான். அங்கு நின்ற படகின் anchor(தமிழில் என்ன?) மீது விழுந்து இறந்து விடுகிறான். அவன் கையில் பூவின் ஷர்ட்டில் ஒரு பகுதி இருக்கிறது. அதிகாலையில் அந்தப்பக்கமாக வந்த மார்கரெட் அதிர்ச்சி அடைகிறாள். தன் மகந் தான் கோபத்தில் கொலைசெய்துவிட்டான் என்று நினைக்கிறாள். உடனே படகில் அவனைப்போட்டு ஏரியின் நடுப்பாகத்தில் போட்டுவிடுகிறாள். ஏதோ வேகத்தில் செய்துவிட்டாலும், அவள் மறுபடியும் வீட்டிற்கு திரும்புகையில் இறந்தவனின் காரைப்பார்க்கிறாள். கார்சாவி இறந்தவனின் பாக்கட்டிலேயே இருப்பதை உணர்ந்த மார்கரெட் மறுபடியும் ஏரிக்கு சென்று கார்சாவியை மீட்கிறாள்.
எதுவுமே நடக்காததுபோல வாழ்க்கையை நகர்த்துகிறாள் மார்கரெட். இதற்கிடையில் பத்திரிகையில் ஏரியில் ஒரு பிணம் கிடைத்தது பற்றிய செய்தியும் அதற்காக விசாரணை நடப்பதும் தெரியவருகிறது. இறந்தவன், தன்னுடைய முன்னாள் காதலந்தான் என்று அறியும் பூ, அவனைத்தன் தாய் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறான். மார்கரெட், பூவைப்பற்றி பேசுவதற்காக அவள் கணவரைத்தொடர்பு கொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள். இவ்வாறு இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கையில் இன்னொரு பிரச்சினை வருகிறது.
அலெக் ஸ்பெரா (கோரன் விஸ்ன்ஜிக்), மார்கரெட்டை பிளாக்மெயில் செய்கிறான். பூவையும் அவன் காதலன் பற்றியும் வெளியே சொல்லாமல் இருப்பதற்கு 50,000 டாலர்கள் கேட்கிறான். அதுவும் நாற்பத்தியெட்டு மணி நேரத்துக்குள் வேண்டுமென்று கேட்கிறான். அவன் பேச ஆரம்பித்ததுமே பயத்தினால் உறைந்துபோன மார்கரெட், பணத்தொகையையும் நேரக்கெடுவையும் கேட்டதும் மறுத்துப்பேசுகிறாள். ஆனால், அலெக் ஸ்பெரா, அவனிடம் இருக்கும் வீடியோ காசெட்டைப்போட்டு பூவும் அவன் காதலனும் நெருக்கமாக இருந்த காட்சியைக் காட்டுகிறான். விஷயம் தன் கணவருக்கு தெரிந்தால் என்ன நடக்குமென்று தெரியாது என்று அலெக்கிடமே சொல்லும் மார்கரெட், பணத்தை புரட்ட முயலுகிறாள். இதற்கிடையில் வீட்டிலும் எதுவும் நடவாதது போலவும் நடந்து கொள்கிறாள். கடைசிமகனை பள்ளிக்கு அனுப்புவது, மகளை கவனித்துக்கொள்வது, மாமனாருக்கு தேவையானதை செய்துகொடுப்பது என்று. ஒருவரிடமும் தன்மனப்போராட்டத்தையும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளாமல் கிடந்து உழலுவது என்று இருக்கிறாள் மார்கரெட். அவள் பணத்தை புரட்டுவதற்கு செய்யும் முயற்சிகள் நமக்கே பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. நடுக்கடலில் இருக்கும் கணவரின் கையெழுத்து இல்லாமல் ஒன்றுமே செய்யமுடியாது என்றுணர்ந்த மார்கரெட் கடைசியில் வங்கியில் கடன் வாங்க செய்யும் முயற்சியும் தோல்வியடைகிறது. அவளிடம் இருக்கும் நகைகளை விற்றதில் இருபதாயிரம் டாலர் சேர்கிறது. அலெக் ஸ்பெராவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களே இருக்கும்போது, களைத்துப்போய் மாமனாரிடம் தயங்கித்தயங்கி கடன் கேட்கிறாள். அவரும் எவ்வளவு வேண்டும் இருபதா, நாற்பதா என்று கேட்டு பர்சை திறப்பதற்குள் சுதாகரித்துக்கொண்ட மார்கரெட் பணத்தை வாங்கிக்கொள்கிறாள். மறுபடியும் அவள் தொலைபேசியில் முயற்சிக்கிறாள்.
அப்போது மார்கரெட் வாங்கி வந்திருந்த இருபத்தி ஐந்து லீட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்களை சொல்லச்சொல்ல கேக்காமல் தூக்கும் மாமனாருக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. பள்ளியிலிருந்து அப்போதுதான் வீடு திரும்பி கடைசிமகன், காத்திருந்து களைத்துப்போய் மார்கரெட்டைத்தேடி அங்கே வந்த அலெக்கை வீட்டினுள் அனுமதிக்கிறாள். அங்கே, கூடத்தில் மாமனாருக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்ச்சித்துக்கொண்டிருந்த மார்கரெட், மகனிடம் ஆம்புலன்சை வரவழைக்க சொல்கிறாள். செயற்கை சுவாசம் பற்றித்தெரியாத மார்கரெட் கஷ்டப்படுவதைப்பார்த்த அலெக் உதவுகிறான். ஆம்புலன்ஸில் அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல அலெக் பினதங்குகிறான். மார்கரெட்டின் வீட்டினை சுற்றிப்பார்த்து, அக்குடும்பத்தைப்பற்றி அங்கிருக்கும் புகைப்படங்கள் மூலமாக அறிந்து கொள்கிறான். வீடு திரும்பிய பூ, முன்னமே பார்த்திருந்த அவனை, மார்கரெட்டின் காதலன் என்று நினைக்கிறான்.
மருத்துவமனையில் மாமனாரை அனுமதித்துவிட்டு, சகஜமாக இருந்துகொண்டே பணத்தை புரட்ட பிரம்மப்பரியத்தனம் செய்கிறாள் மார்கரெட். இதற்கிடையில் அவளை சிலதடவை சந்தித்துவிட்ட அலெக், மார்கரெட்டிடம் உண்மையாகவே பணம் இல்லையென்பதை தெரிந்து கொள்கிறான். தனக்குப்பணம் தேவையில்லை என்றும் ஆனால், தன்னுடைய பாட்னருக்கு பணம் தேவையென்றும் அவனுக்கு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லுகிறான். அலெக் அவ்வாறு நடந்துகொள்வது ஏன் என்றும் யோசிக்கிறோம். இதற்கிடையில் போலீசார் இரண்டு தடவை அந்தப்பக்கம் விசாரணை நடத்துகிறார்கள். பூவின் காதலனை கொன்றது இன்னொருவன் என்று சொல்லி, அவனை கைதும் செய்கிறார்கள். அத்துடன் அப்பிரச்சினை முடிந்தாலும் அலெக்கின் பாட்னரின் தொல்லை தொடர்கிறது. முழுப்பணமும் வேண்டும் என்று மார்கரெட் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறான். விஷயம் தெரிந்த அலெக்கும் அங்கு வருகிறான். அங்கு நடந்த கைகலப்பில் அலெக்கின் பார்ட்னர் அலெக்கை காயப்படுத்த, அலெக் அவனைக்கொன்று விடுகிறான்.
அலெக்கின் காரும், அவனது பாட்னரின் காரும் அங்கு நிற்பது சரியில்லை என்பதால் அலெக்கும் மார்கரெட்டும் உடலை அப்புறப்படுத்த முயல்கின்றனர். அலெக்கின் காரை ஓட்டத்தெரியாத மார்கரெட் பூவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அலெக்கைப்பின் தொடர்ந்து ரெனோ செல்கிறாள்…
(படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்பவர்கள், எனக்கு தனியே எழுதுங்கள்.)

1940களில் Elisabeth Sanxay Holding என்பவரால் எழுதப்பட்ட கதையில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் Scott McGeheeஉம், டேவிட் சீகலும். இந்தப்படத்தையே தன் தோள்களில் தாங்கிக்கொள்வது டில்டா ஸ்விண்டன். கடந்த பதினைந்து வருடங்களாக நடித்துவந்தாலும், இவர் அவ்வளவு பிரபலமில்லை. படத்தில் விஷயம் முழுக்கத்தெரிந்தவர்கள் பார்வையாளர்களாகிய நாம்தான். மார்கரெட்டும் அவளுடைய மகன் பூவும் ஒருவரை மற்றவர் சந்தேகிக்கும்போதும், மார்கரெட் பணத்தை திரட்டுவற்கு திணரும்போதும் நமக்கும் பிளட்பிரஷர் எகிறுகிறது. தனியாக சிரமப்படும் மார்கரெட்டின் டென்ஷனை அருமையாக முக அசைவுகளிலும், உடல் அசைவிலும், குரலை சாதாரணமாக ஒலிக்கவைக்க முயற்சிக்கும்போதும் என்று பல இடங்களில் அநாயாசமாக நடித்திருக்கிறார். அலெக் ஸ்பெராவாக நடித்திருப்பது ER தொடரில் நடிக்கும் Goran Visnjic. இவருடைய வித்தியாசமான உச்சரிப்பு ஆரம்ப காட்சிகளில் இறுக்கத்தை அதிகரிக்கிறது. 1949இல் இதே கதை படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது இருந்ததை விட சிற்சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். மகள், மகனாகி இருக்கிறான். வயதான காதலன் அப்படியே இருக்கிறான். இப்படி சில. இயக்குநர்கள் இதற்குமுன்னர் ஒரு படம் இயக்கி இருந்தாலும் இதுவே இவர்களின் வெற்றிப்படமாகும். அமைதியான சூழலில் நடக்கும் அசம்பாவிதங்களை அருமையாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் Giles Nuttgens. இவர் தீபா மேத்தாவின் ‘·பையர்’, ‘ஏர்த்’ போன்ற படங்களுக்கும், Battlefield Earth போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோல்டன் குளோப், Sundance திரைவிழா போன்ற சில விருதுகளையும் பெற்றிருக்கிறது இப்படம்.







A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (