Memento (2001)
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கை பியர்ஸ் (Guy Pearce), ஜோ பான்டோலியானோ(Joe Pantoliano), காரந்ஆன் மொஸ்(Carrie-Ann Moss) ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

கை பியர்ஸ்ஸின் ‘ஷெல்பி’ என்ற கதாபாத்திரம் தன்னுடைய மனைவியை பாலாத்காரப்படுத்தி கொலை செய்பவனை பழிக்குப்பழி வாங்க தேடி அலைகிறான். தொடர்ந்து என்ன நடக்கிறது என்கிற சாதாரணமான கதைதான். ஆனால் நோலனின் திரைக்கதையும் படத்தை அவர் எடுத்து சென்றிருக்கும் விதமும் இதை வேறுபடுத்துகிறது.
படத்தைப்பற்றி சொல்வதற்கு முன்னால் நான் இந்தப்படத்தை பார்த்த கதையை கட்டாயம் சொல்லியாக வேண்டும். இந்தப்படம் நன்றாக இருக்கும் பார் என்பதைத்தவிர வேறு எதுவும் என் நண்பன் சொல்லவில்லை. பார்க்க ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் ஓடியும் ஒன்றும் விளங்காததால் மறுபடியும் இரண்டு தடவை பார்த்தேன். அப்படியும் அந்த முதல் பத்துநிமிடக்காட்சிகள் ஒன்றும் விளங்காமல் தலையும் வலிக்கத்தொடங்கி விட்டது. சரியென்று இணையத்தில் பத்திரிகை விமர்சனம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று படித்துவிட்டு மறுபடி பார்த்த போதுதான் கொஞ்சமாவது விளங்கியது.
அட என்னமோ புரியாத படம்னு பிகு பண்ணுறாளேன்னு நீங்க யோசிக்கலாம். இதோ உங்களுக்காக கதைச்சுருக்கம்.
ஷெல்பி தன் மனைவியின் கொலைகாரனை தேடி அலைவதுதான் படம் என்று சொன்னேனல்லவா? அதற்கும் மேல் சில விஷயங்கள் இருக்கின்றன. ஷெல்பிக்கு ஒரு வித அபூர்வமான அம்னீஷியா இருக்கிறது. எங்கோ பலத்த அடிபட்ட அவனுக்கு அந்த நிமிடத்திற்கு முன் நடந்த ஒரு விஷயமும் ஞாபகம் இல்லை. அவன் மனைவியைக்கொலை செய்தவன் எப்படி இருப்பானென்பது அவனுக்கு ஞாபகம் இல்லை. தான் யார் என்பதும் அவன் மனைவி கொலை செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. ஷார்ட் டேர்ம் மெமரிதான் உதைக்கிறது. அதுவும் எப்படி? ஒரு நிமிடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் இல்லாத அளவுக்கு!
அதற்கும் அவன் ஒரு வழியைக்கண்டுபிடிக்கிறான். உடனடி புகைப்படக்கருவியை பயன்படுத்தி புகைப்படங்களாக எடுத்துத்தள்ளுகிறான்.(பின்பக்கம் குறிப்புகளுடன்) தன் உடலில் பார்க்கக்கூடிய இடங்களில் எல்லாம் குறிப்புகள் எழுதுகிறான். பச்சை குத்திக்கொள்கிறான்.
இன்னுமொரு புதிர் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும், விலையுயர்ந்த ஆடைகளை அணியும் அவன் ஏன் சின்னச்சின்ன ஹோட்டல்களில் தங்க வேண்டும் என்பது.
இப்பவே தலை சுத்துதா அல்லது என்ன பெரிய புதிர் இருக்குப்போ அவன் கண்டுபிடிச்சுருவான் சுலபமான்னு நினைக்காதீர்கள்.
படத்தில் பல காட்சிகள் பலரின் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. புரிந்தது போலிருக்கும். அடுத்த ஆளின் கண்ணோட்டத்தை பார்த்ததும் குழம்பிப்போகும். படம் எடிட் செய்யப்பட்டிருக்கும் விதம்தான் இதை மற்ற திரில்லர்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
படத்தின் கதாநாயகனாக வரும் ஆஸ்திரேலிய நடிகர் கை பியர்ஸ் நல்ல தேர்வு. இதற்கு முன் இவரை எல்லே கான்பிடென்ஷியல் (அது பற்றி இன்னொரு நாள்) படத்தில் பார்த்தது பிறகுதான் ஞாபகம் வந்தது. இறுக்கமான முகபாவத்துடன் சிறிது திருவிழாவில் தொலைந்த குழந்தை போன்ற பார்வையும். அம்னீஷியாவின் காரணமாக இவரின் கதாப்பாத்திரம் கஷ்டப்படும் இடங்களில், இவரை ஏமாற்ற நினைப்பவர்களை எதிர்கொள்வதில், ஞாபகசக்தியின்மையினால் பார்ப்பவர்கள் நல்லவர்களா இல்லையா என்று கஷ்டப்படும்போது மற்றும் படத்தினூடே குட்டிக்கதை போல வந்துபோகும் ஷெல்பியின் தொழில் முறை அனுபவம் என்று பல இடங்களில் பேஷ் போட வைக்கிறார்.
படத்தின் இதர முக்கியமான பாத்திரங்கள் காரி-ஆன் மொஸ். கனடிய நடிகையான இவரை டிரினிடி என்னும் பாத்திரத்தில் மேட்ரிக்ஸ் (Matrix) படத்தில் பார்த்திருப்பீர்கள். சில காட்சிகளில் வந்திருந்தாலும் படத்தின் கதையோட்டத்திற்கு வெகுவாகப்பயன்படுகிறார்.
அற்புதமான குணச்சித்திர நடிகர் என்று பலரால் பாராட்டப்பெற்ற ஜோ பான்டோலியானோ இந்தப்படத்திலும் அருமையாக நடித்துள்ளார். மேலும் விளக்க ஆரம்பித்தால் புதிர்கள் அவிழ ஆரம்பித்துவிடும் என்ற காரணத்தால் இவரைப்பற்றி அதிகம் சொல்லாமல் விடுகிறேன். யாருப்பா இந்தாளுன்னு கேட்பவர்களுக்கு - மேட்ரிக்ஸ் (Matrix) படத்தில் காட்டிக்கொடுப்பவனாக நடித்திருக்கிறார்.
நாங்களே படம் பார்த்துத்தெரிந்து கொள்கிறோம் என்பவர்கள் இத்துடன் நிறுத்திக்கொண்டுவிடுங்கள்.
மற்றவர்களுக்கு…….
சாதாரணமாக ஒரு படம் கடந்த காலத்தில் தொடங்கி நிகழ்காலத்திற்கு வரும் அல்லது நிகழ்காலத்தில் தொடங்கி கடந்த காலத்தில் சஞ்சரித்து தொடங்கிய நிலைக்கு வரும். மெமென்டோ இவ்வமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இப்போது சொன்னமாதிரி ஒரு படத்தை எடுத்து அதை அப்படியே மாற்றி எடிட் பண்ணினால் என்ன நடக்கும்? ஆரம்பக்காட்சியாக வருவது முடிவுக்காட்சியாக வரும். அதேதான் இந்தப்படத்தில் நடந்திருக்கிறது. ie The movie goes backwards in terms of plot. இது புரியாமல்தான் நான் தலைமுடியை பிய்த்துக்கொண்டேன். இப்படி குழப்பியடிக்கும் கதையில் பலப்பல புதிர்கள். நாம் சாதாரணமாக தமிழ் சினிமா பார்ப்பதுபோல 10% மூளையை பயன்படுத்தி பார்க்கிற கதையெல்லாம் நடக்காது. (10 சதவீதமே அதிகம் என்கிறீர்களா? அதுவும் சரிதான் :)) ).
மொத்தத்தில் பார்க்கத்தவறாதீர்கள்.




A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (