சினிமா, தமிழ் சினிமா: ஒரு தொடரோட்டம்
சினிமாவைப்பற்றிய தன் எண்ணங்களை அருமையாக எழுதிய நாகார்ஜுனனுக்கும் அதைத் தொடர் விளையாட்டாக்கிய பிரகாஷுக்கும், என்னையும் இதில் இழுத்துவிட்ட பரத்துக்கும் நன்றி!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்பது தெரியாது. மிகவும் சிறிய வயதில் கொழும்பில் திரையரங்கில் படம் பார்க்கப்போவோம் என்று வீட்டில் சொல்லித்தெரியும். கூடவே, பிறகு பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் பாடற்காட்சிகள் ஏதேனும் முன்பு பார்த்ததுபோல இருக்கும். அந்த வகையில் ‘மூன்று முடிச்சு’ - அதன் ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாடல் வழியாக.
பிறகு ரூபவாஹினியினூடாகப் பார்த்த புதன்கிழமைத் தமிழ்சினிமாவில் அம்மம்மாவின் ‘சிவாசி’யும் எனக்குப்பிடித்துப்போன பாலையாவும் எம்.ஆர்.ராதாவும். அதே தொலைக்காட்சியில் எல்லோரும் படுத்தபிறகு சத்தத்தைக் குறைத்துவைத்துக் கொலைநடுக்கத்துடன் பார்த்த ‘Omen’.
கண்ணைத் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று நினைக்க வைத்த ‘ராஜபார்வை’.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
தமிழில்: தசாவதாரம், குசேலன்
ஆங்கிலத்தில்” Body of Lies
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்தக்கோடையில் வகைதொகையில்லாமல் தமிழ்த்திரைப்படங்கள் வரவரப் பார்க்கக்கூடியதாக இருந்தது. சேர்க்கை அப்படி. கடைசியாகப் பார்த்தது ‘ராமன் தேடிய சீதை’. பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி இருந்தது. பசுபதியின் பாத்திரப்படைப்பு உத்வேகமாக இருந்தது. கண்ணாடி போட்டிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு நடித்தேன் என்று சொன்னதற்கு அப்புறம் இன்னொரு தடவை பார்க்கலாமென்றிருக்கிறேன்.
அலிபாபா - ஹ்ம்ம். பார்க்கலாம்.
தாம்தூம் - ஏதோ முயற்சித்திருக்கிறார்கள்.
சரோஜா - ஏ.மு. ஒரு முறை சுவாரசியமா பார்க்கலாம். ஆனா, சென்னை-28 இதைவிட நல்லாயிருந்தது.
பந்தயம் - நிதின் சத்யாவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமாக – . ஆனால் இவர்கள் இருவரின் மேலதிகமான ஆர்ப்பாட்ட நடிப்பையும் தாண்டி குமட்டல் ஏற்படுத்தியது விஜயின் புகழ்பரப்ப அவருடைய அப்பா எடுத்துக்கொண்ட முயற்சி. என்னதான்யா நினைச்சுக்கிறாங்க இந்த சினிமாக்காரங்களும் அரசியல்வாதிகளும். ஆ ஊன்னா விரல சுழட்டுறது, தலைவாங்கிறது, அட்வைஸ் மழை பொழியிறது, ரசிகக்குஞ்சுகளை சேர்த்துக்கிட்டு மன்றம் அதுயிதுன்னு தொடங்கி ரசிகர்கள் கேட்டாங்கன்னு சால்ஜாப்பு சொல்லிக்கிட்டே கொடின்னு ஒரு கறுமாந்திரத்தக் கொண்டுவர்ரது. ஏதோ அவங்கப்பன் வீட்டு சொத்துமாதிரி அரசியலுக்கு வருவோமா இல்லையான்னு தெரியாதுன்னு பேட்டி குடுக்கிறது. ரஜனிய சொல்லல. ரஜனியாவது நடிக்க வந்து இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இந்த ஆடுபுலியாட்டம் ஆடிட்டிருக்காரு. நேத்திக்கு முளைச்ச காளானெல்லாம் டான்ஸாடுது. கடுப்பாயிருக்குது. ஆமா.
நடிகர்களை அரசியலுக்குப் போகவேணாம்னு சொல்லல. அவங்களும் மத்த எல்லாரையும்போல ஏதோ ஒரு வேலை செய்யிறாங்கன்னு இருந்தா பரவாயில்லை. இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்திக்கிட்டு ஒரு நாயக துதி பண்றமாதிரி படத்தை அமைச்சுக்க வேண்டியது. அதுக்கு ஒரு அஞ்சாறு அல்லக்கை டைரக்டருங்க. அப்புறம், இப்பவும் மாயத்திரையில் பாக்கிறதை நிஜம்னே நம்புற மக்கள். இப்போ தமிழ்நாட்டில கருணாநிதி தொட்டு ஜெயலலிதா வரை நடத்திற ‘ஈழத்தமிழர் ஆதரவு’ நாடகத்தைப் பார்த்து உச்சிகுளிர்கிற எங்கட ஆக்கள்மாதிரி.. ஒரு மாற்றமும் இல்லை.
கதை திசைமாறுது. ‘பந்தயம்’ பாருங்கள். கடுப்பாகுங்கள்.
4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மூன்றாம் பிறை, மகாநதி, சேது, நந்தா, வீடு, காதல், பிதாமகன். அன்பே சிவம் கடைசிக்காட்சி.
இந்தியா வந்த முதல்வாரம் தொலைக்காட்சியில் பார்த்த மனதில் சில காட்சிகள் மட்டும் தங்கியிருக்கும் ‘ஒரு இந்தியக் கனவு’. இன்றுவரைக்கும் தேடிக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று. இப்போது பார்த்தால் பிடிக்காமற்கூடப் போகலாம். அந்த வயதில் மிகவும் பாதித்தது.
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ‘அவள் அப்படித்தான்’னும் தாக்கிற்று என்றாலும் அதைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதால் அப்படியே விட்டுச்செல்கிறேன்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்டீன்னு பெருசா ஒண்ணுமில்லைன்னாலும் தமிழ்நாட்டு அரசியலுக்கு நுழையிறதுக்கு சினிமா ஒண்ணுதான் வழின்னு இருக்கிறமாதிரியான சூழல் பிடிக்கலை. பிடிக்கலை. பிடிக்கலை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மிகவும் தாக்கியன்னு சொல்லமுடியாது. ஆனா, அந்த வயதில் ஆச்சரியப்படுத்திய ‘அபூர்வ சகோதரர்கள்’ குள்ள கமல். அதேபோல வசனமழை கொட்டும் இந்திய சினிமாவில் ‘பேசும் படம்’ வெளியானது.
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தமிழ்சினிமா பற்றி என்பதை திரைப்படங்களைப்பற்றி என்பதாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் பொதுவாக தமிழ்சினிமாவைப்பற்றி என்று சொல்லிவிட்டு நடிகர்களைப்பற்றியோ ஏதேனும் சூடான செய்திகளோ மட்டுமே பரவலாகக் கிடைக்கின்றன. அவற்றையும் போகிற போக்கில் மேய்பவள்தானெனினும், விரும்பி வாசிப்பது சினிமாவைப்பற்றிய ஆழமான கட்டுரைகளை, அக்குவேறு ஆணிவேறு என்று ஆராயும் கட்டுரைகளை.
பள்ளிப்பருவத்தில் தினமணிக்கதிரில் வரும் கட்டுரைத்தொகுதிகளை விரும்பி வாசித்ததுண்டு. தமிழ்சினிமாவின் வரலாறு கொஞ்சம் கொஞ்சம் அங்கேதான் வாசிக்கக்கிடைத்தது. இப்போதும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்களின் எழுத்துகளை வாசிப்பதுண்டு. ஆனாலும் இதைவிட அருமையாக புத்தகம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். நிழல், கனவுப்பட்டறை போன்ற சினிமா இதழ்களை வாசிக்கப்பிடிக்கும். அதுபோக தமிழ் சிற்றிதழ்களில் வெளியாகும் சில கட்டுரைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.
இப்போதெல்லாம் எழுத்தாளனென்றால் தலையில் கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைப்பவர்களைத் தவிர்த்து தமிழ் வலைப்பதிவுகளில் அனுபவித்து எழுதுபவர்களுக்கு முன்னிடம் கொடுக்கிறேன். சில மாதங்களாக வலைப்பதிவுகளை நுனிப்புல் மேய்கிறேனென்றாலும் யாருக்கேனும் பயனாகும் என்று ஒரு சிறு பட்டியல். [சன்னாசி, பிரகாஷ், நாராயணன், சித்தார்த், சந்தோஷ்குரு, கதிர், அய்யனார், லக்குலூக், கானாபிரபா, கப்பி, பிரசன்னா, சுரேஷ்கண்ணன், நிர்மலா, தூள்.காம்]. இன்னும் இருக்கலாம். இப்போதைக்கு நினைவுக்கு வந்தவர்கள் இவர்கள்.
7.தமிழ்ச்சினிமா இசை?
தமிழர்களுக்கு இசையென்பதே தமிழ்த்திரைப்பட இசைதானே? இசையென்ற விசயம் எனக்கு அறிமுகமானதே தமிழ்த்திரையிசையினூடாகத்தான்.. வளர்ந்து வரும்போது நாட்டுப்பாடல்கள், கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கஸல் மற்றும் தாளவாத்தியங்கள் (நாதஸ்வரம் + மேளம் மட்டும் அறிமுகமானது புங்குடுதீவில், கோயிலில்) என்று இரசனை வெவ்வேறு திசைகளில் சென்றாலும் அவை அறிமுகமானது திரையிசைவாயிலாகத்தான்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய. பிடித்த படங்களைப்பற்றி இந்த வலைப்பதிவில்தான் எழுதி வருகிறேன். மிகவும் பிடித்துப்போன படங்களைப்பற்றி அவ்வளவாக எழுதியதில்லை. உணர்வுபூர்வமாக இருக்குமென்பதால் தவிர்த்து வந்திருக்கிறேன்.
இந்தியப் படங்களில் வங்காள, மலையாளத் திரைப்படங்கள் பிடிக்கும். இந்தி சினிமாவும். இப்போது மொன்ரியல்-டொராண்டோ பயணங்களின்போது தேடித்தேடி வாங்குவது பார்ப்பது இந்தப் படங்களை. விருது பெற்ற கன்னடத் திரைப்படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் கூறினால் நன்றாகவிருக்கும். அதேபோல நன்றாகவிருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் இந்திய மொழிப்படங்கள் பற்றிச் சொன்னாலும் உதவியாக இருக்கும் - எந்த மொழியென்றாலும் பரவாயில்லை.
உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்துகொண்டிருக்கும் திரைப்படங்களைப் பார்த்து அவற்றினூடாக அந்த நாட்டுக் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ள முற்படும்போது இந்தியப் படங்களின் தேடல் அதிகமாகிறது. இப்போதெல்லாம் இந்தியத் தொலைக்காட்சிகளில் நான் தேடிக்கொண்டிருக்கும் படங்களைப் பார்க்கும் பதிவர்களைப் பார்த்தால் பொறாமையாகவிருக்கிறது.
ஆச்சரியப்பட வைப்பது, சிங்கள மொழிப்படங்கள். ஒரு சில படங்களே பார்த்திருப்பதால், இன்னும் இவற்றைப்பற்றி எழுத நினைக்கவில்லை. ஆனால், திரைப்பட இரசிகர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படங்கள் சில, சிங்கள மொழியில் இருக்கின்றன.
அதேபோல ஆச்சரியமளிப்பவை, கியூபெக் மாகாண பிரெஞ்சுத் திரைப்படங்கள். சுற்றிலும் ஆங்கிலம் சூழ்ந்திருக்கும்போது சுவாரசியமான கதைகளை தங்கள் மொழியில் எடுத்து அவற்றை வெற்றிப்படங்களாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் கியூபெக் மாகாணத்தவர். கனேடியப் படங்கள் என்றால் 10க்கு எட்டு கியூபெக் மாகாணத்திலிருந்து வந்த பிரெஞ்சுப் படங்களாக இருக்கின்றன.
ஆங்கில துணையெழுத்துகளோடு திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மொழி ஒரு தடையில்லையென்பதால் எல்லாக் கண்டங்களிலிருந்தும் வரும் படங்களைப் பார்க்கப் பிடிக்கும். அதேபோல Horror வகையறா தவிர்த்து ஏனைய genre எல்லாமே பார்க்கப்பிடிக்கும்.
பாதித்த படங்களின் பட்டியல் பெரிது. முன்பு பிடித்த காதற்படங்களின் பட்டியலொன்று இட்டிருக்கிறேன். சுட்டி: http://mathy.kandasamy.net/movietalk/2007/04/18/my-fav-romantic-movies-a_list
இனி வரும் காலங்களில் பிற படங்களைப்பற்றியும் எழுத எண்ணம்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
-
10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகவிருக்கிறது. தொழில்நுட்பம் வளர வளர வெவ்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. புதிய புதிய ஆட்கள் வர வர களம் விரிவடைகிறது.
11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழர்களையும் சினிமாவையும் பிரிக்க முடியுமாவென்று தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் என்னைக்கேட்டால் இந்தியாவை விட்டு வந்து, தமிழ்த்திரைப்படங்கள் எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் எப்படியிருந்தேனோ அப்படியிருப்பேனென்று நினைக்கிறேன். தொடக்கத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது - காரணம் இணையம் வழிவரும் செய்திகள். ஆனால், எந்தவொரு ஊடகம் வழியாகவும் எந்தவொரு செய்தியும் வராது என்றபடியால் பெரிதாக ஒரு மாற்றமும் இருக்காது. ஆனால், தினமும் கொஞ்ச நேரமாவது பாட்டுக்கேட்டுவிடும் எனக்கு, போகுமிடமெல்லாம் பாட்டுக்கேட்டுக்கொண்டு சுற்றும் எனக்கு எப்படியிருக்குமென்று தெரியவில்லை. இதுவரை வந்த பாடல்களைத் திரும்பத்திரும்பக் கேட்டபடி இருப்பேனாக்கும். கூடவே, பிற மொழிப்பாடல்கள், தாளவாத்தியங்களை இரசிப்பது இப்போதிருப்பதைவிட அதிகமாகும்.
தமிழர்களுக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடித்துத்தான் போகுமென்று நினைக்கிறேன். யாரென்றால், தமிழ் சினிமாவை மட்டுமே பார்க்கும் தமிழர்களுக்கு. சினிமா இரசிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் பிற மொழிப்படங்களைப் பார்க்க முற்படுவார்கள். பிற மொழி இசைகளைக் கேட்க எத்தனிப்பார்கள்.
ஒரு வேளை, வாழ்வில் சினிமாவே இல்லையென்ற அர்த்தத்தில் கேள்வி இருக்குமென்றால்:
எனக்குத் தொடக்கத்தில் பாயை விறாண்டவேண்டும் போலிருக்கும். ஆனால், இதுவரை வந்த படங்களைப் பார்க்கமுடியுமென்பதால் பார்க்காத படங்களைத் தேடித்தேடிப் பார்ப்பேன். பார்த்ததில் பிடித்த படங்களைத் திரும்பப் பார்ப்பேன்.
என்னைப்போன்று பிறரும் செய்யலாம். அவர்கள் பார்ப்பது உலகப்படங்களாகவும் இருக்கலாம். இல்லை தமிழ்ப்படங்களாக மட்டுமேகூட இருக்கலாம்.
சினிமாவே இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது வேறு பொழுதுபோக்குகள்.
ஆனால், ஒட்டுமொத்த சமுதாயமாக நம்முடைய தமிழ்சமுதாயம் எங்கேயாவது வீங்கி உடையும். நம்முடைய உணர்வுகளை நாம் சினிமாவில் channelize செய்கிறோம். கோபம், தாபம், அழுகை, சிரிப்பு - முக்கியமாக காதல்/அல்லது அதுபோன்ற ஏதோவொன்று செக்ஸ்- எல்லாமே திரைப்படங்களில் இருந்து பெறுகிறோம். உணர்கிறோம்.
இந்தவொரு ஊடகம் இருப்பதாலேயே மனம் பிறளாமல் இருக்கும் சூழலும் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த்திரைப்படங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஓராண்டுக்கு வராதென்றால், நிலமை விபரீதமாகலாம்.
நான் அழைக்கும் ஐவர்:
1.மோகன்தாஸ்
2.ஜெகத்
3.அருள்செல்வன் கந்தசுவாமி
4.ஆடுமாடு
5.பராக்கா







A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (